Conversations with Mani Ratnam (2013 – Penguin) – Baradwaj Rangan – Part 3

by Karundhel Rajesh February 3, 2014   Book Reviews

முதல் இரண்டு கட்டுரைகள் இங்கே.

பாகம் ஒன்று

பாகம் இரண்டு[divider]

’பல்லவி அனுபல்லவி’, ‘உணரு’, பகல் நிலவு’ & ‘இதயகோயில்’ ஆகிய படங்களை முடித்த மணி ரத்னம், ஐந்தாவது படமாக, அவரது பழைய திரைக்கதையான ‘திவ்யா’வைப் படமாக்கும் சுதந்திரம் அவருக்குக் கிடைக்கிறது. முதல்முறையாக, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எந்தப் பிரச்னையும் இல்லாமல், மணி ரத்னம் நினைத்தபடியே படமாக்கும் சந்தோஷம் ஒரு கூடுதல் போனஸ். ’நான் பாடும் மௌன ராகம்’ பாடலிலிருந்து, படத்துக்குத் தேவையான டைட்டில் உருவாகிறது. தொடங்குகிறது மௌன ராகத்தின் படப்பிடிப்பு.

சில வருடங்களுக்கு முன்னரே முடித்திருந்த ’திவ்யா’ திரைக்கதைக்கும் ’மௌன ராகம்’ திரைப்படத்துக்கும் இருந்த ஒரே வித்தியாசம் – திரைக்கதையில் கார்த்திக்கின் பகுதி இல்லை. திரைக்கதை எழுதியபின்னர் சில படங்களை இயக்கி முடித்திருந்த மணி ரத்னத்துக்கு, திரைப்படம் எல்லாப் பக்கங்களும் செல்லவேண்டும் என்றால், திருமணம் வேண்டாம் என்று சொல்லும் ஒரு பெண்ணின் கதை மட்டுமே போதாது என்று தோன்றுகிறது. இதனால், அவளது கதாபாத்திரத்தைப் பற்றிய கேள்விகள் ஆடியன்ஸுக்கு எழக்கூடாது என்று முடிவெடுத்து, அவளது இறந்த காலத்தைக் காட்டவேண்டும் என்று முடிவு செய்கிறார் மணி ரத்னம். எனவே கார்த்திக்கின் பகுதி எழுதப்படுகிறது.

அந்த ஃப்ளாஷ்பேக் மிகவும் உயிர்ப்புடன் இருந்த பகுதி என்றும், பாடல் ஒன்று அங்கு இருந்திருக்கவேண்டும் என்பதுதான் மிகவும் இயற்கையான ஒரு எண்ணம் என்றும் ரங்கன் கேட்கிறார். அதற்கு, காட்சிகள் நன்றாக இருந்தால், அவற்றை இன்னும் அழகாக்கும் பாடல்கள் தேவையில்லை என்று மணி ரத்னம் சொல்கிறார். அதேபோல், படம் வெளிவந்த 1986ல், பெண்களிடம் பழக வாய்ப்புகள் இல்லாத ஆண்களே அதிகம். இருந்தபோதிலும், நகர வாழ்க்கையில் பெண்களிடம் தயக்கமே இல்லாமல் பழகக்கூடிய ஒரு பகுதியினரும் இருந்தனர். இவர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை உருவாக்கியதாக மணி ரத்னம் சொல்கிறார். இவர்கள் The Doors, The Beatles போன்ற ரசனை உடையவர்கள். இந்த இடத்தில், பேச்சு சற்றே திசைமாறி, மணி ரத்னத்தின் படங்களின் பொதுவான அம்சம் ஒன்றைப்பற்றிய – தமிழ்க் கதாபாத்திரங்கள், வேற்று மொழிகள் பேசப்படும் இடங்களில் வாழ்வது – கேள்விகளுக்குப் பதில் சொல்வதாக அமைகிறது. இதுபோன்ற கதைகளை அமைக்க அவசியம் லாஜிக் தேவை என்றும், இப்படிப்பட்ட களன்களை அமைப்பதில் மெல்ல மெல்ல சில வழிகளை உருவாக்கியே ஆகவேண்டும் என்றும், அப்படி முடியாத பட்சத்தில்தான் ஹிந்தியிலேயே நேரடியாகப் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டதாகவும் மணி ரத்னம் குறும்பாகப் பேசுகிறார்.

இதன்பின்னர் மௌனராகத்தின் ட்ரேட் மார்க் அம்சங்களான அதன் பிரத்யேக ஒளியமைப்பு, அழகான உட்புற செட்கள் போன்றவை வருகின்றன. வீட்டுக்குள் ஸ்ரீராம் அமைத்த பிரத்யேகமான லைட்டிங்கைப் பற்றிச் சொல்கிறார் மணி ரத்னம். போலவே மோகனின் தில்லி வீடு, சென்னையிலேயே தேர்வு செய்யப்பட்ட ஒரு வீடு என்று தெரிந்துகொள்கிறோம். பின்னர் மணி ரத்னத்தின் பிரத்யேக ஓரிருவரி வசனங்களைப் பற்றிச் சொல்கிறார். வசனம் என்று – அதாவது, யோசித்து எழுதப்பட்டது என்று – தெரியாமல், அந்தந்த சூழ்நிலைகளில் நகரத்துக் கதாபாத்திரங்கள் எப்படிப் பேசுவார்களோ அப்படி அமைந்தவைதான் அந்த வசனங்கள் என்றும், பல்லவி அனுபல்லவியுமே அப்படி எழுதப்பட்டதுதான் எனவும், அது கன்னடம் என்பதால் அது கவனிக்கப்படாமல் போய்விட்டதாகவும் மணி ரத்னம் சொல்கிறார். விஷுவல்கள், moodகள், நடிப்பு ஆகியவற்றில் சொல்லப்பட்ட எக்கச்சக்கமான விஷயங்களைத் தாண்டி, வசனம் என்று வரும்போது குறைவாக அவைகள் இருந்தாலே போதும் என்பது அவரது கருத்து.

மௌனராகத்தில் பரத்வாஜ் ரங்கனுக்குப் பிடித்தமான காட்சி ஒன்றைப் பற்றி ரங்கன் இதன்பின் கேட்கிறார். துளசிச்செடியின் அருகே ரேவதி, தனது முதலிரவின்போது அமர்ந்திருக்கும் காட்சி. யாரென்றே தெரியாத மனிதன் ஒருவனுடன் எப்படி இரவைச் செலவிடுவது என்று அந்தக் கதாபாத்திரம் கேட்கிறது. இதைப்பற்றிச் சொல்லும் மணி ரத்னம், அந்தக் காட்சியிலிருந்துதான் அந்தப் படமே உருவானதாகச் சொல்கிறார். முதலில் கொச்சையான பிராமணத் தமிழில் எழுதப்பட்ட ஒரு சிறுகதை அது என்று அறிகிறோம். நமது சமுதாயத்தில், பெண்களை கட்டுப்பாடுகளோடு வளர்த்துவிட்டு, திடீரென்று ஒரு நாள் இரவில் யாரென்றே தெரியாத ஆடவனுடன் படுக்கச் சொல்லும் விசித்திரம் நிலவுகிறது. பெரும்பாலான சமயங்களில் அந்தப் பெண்ணுக்கு அது ஒரு துன்பம்தான். படத்தில் திவ்யா சொல்வதுபோலான (’கம்பளிப்பூச்சி ஊர்ரமாதிரி இருக்கு’) உணர்வு அது. அந்த இரவைப் பற்றிய கதைதான் மௌனராகம் என்று சொல்கிறார் மணி ரத்னம். கீழே இருக்கும் லிங்க்கில், 24:20ல் ஆரம்பிக்கும் காட்சி அது.

இதன்பிறகு மௌன ராகத்தைப் பற்றிய பல விஷயங்கள் வருகின்றன. இங்குதான் நாம் இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் பார்த்த இளையராஜா இசையமைப்பதைப் பற்றிய மணி ரத்னத்தின் அவதானிப்பு வருகிறது. இங்கே க்ளிக் செய்தால் அதனை ஃபேஸ்புக்கில் படிக்கலாம். கூடவே, ரஹ்மானிடம் மணி ரத்னத்தின் collaboration எப்படி இருந்தது, திவ்யாவின் கடவுள் பக்தி, கார்த்திக்கின் ஓபனிங் எண்ட்ரி எப்படிப் படமாக்கப்பட்டது போன்ற பல விஷயங்களும் பேட்டியில் இருக்கின்றன.

21smNayakan1_jpg_1241294g

மௌன ராகம் முடிந்ததும் மணி ரத்னம் உருவாக்க விரும்பிய படம்தான் ‘அக்னி நட்சத்திரம்’. ஆனால், அதன் திரைக்கதையை மணி ரத்னம் எழுதிக்கொண்டிருந்தபோது, கமல் ஹாஸன் அனுப்பிய முக்தா ஸ்ரீனிவாசனிடம் மணி ரத்னம் பேச நேர்ந்தது. ‘கிழக்கு எந்தப் பக்கம்?’ என்றூ விசாரித்த முக்தா ஸ்ரீனிவாஸன், அந்தப் பக்கமாக மணி ரத்னத்தை நிற்கவைத்துவிட்டு, கமல் அனுப்பிய வீடியோ காஸெட்டைத் தருகிறார். அது ஒரு ஷம்மி கபூர் படம். படத்தின் பெயர் – Pagla Kahin Ka. படம் மணி ரத்னத்துக்குத் துளிக்கூட பிடிக்காமல் போனதால், முக்தா ஸ்ரீனிவாஸனிடம் அப்படியே சொல்லிவிடுகிறார். ஆனால் இதற்கெல்லாம் மசியாத முக்தா, ‘நீங்களே கமலிடம் அதைச் சொல்லிவிடுங்கள்’ என்று சொல்லி, கூடவே அழைத்துச் செல்கிறார். அப்போதுதான், தனக்கு அந்த ஹிந்திப்படம் பிடிக்காமல் போனதுபோல், முக்தாவுக்கும் தன்னை அவரது படத்துக்கு ஒப்பந்தம் செய்யப் பிடிக்கவில்லை என்பதை மணி ரத்னம் உணர்கிறார். இதன்பின்னர் கமலைச் சந்தித்து, அந்த ஹிந்திப்படம் பிடிக்கவில்லை என்று சொல்கிறார் மணி ரத்னம். அப்போது, அந்தக் காஸெட்டை அனுப்பியது ஒரு conversatioனை ஆரம்பிப்பதற்கே என்று சொல்லும் கமல், எப்படிப்பட்ட படத்தை இயக்க விருப்பம் என்று மணி ரத்னத்தைக் கேட்கிறார். அப்போது மணி ரத்னம் சொல்லியது – ஜேம்ஸ் பாண்ட் அல்லது Dirty Harry வகையான stylish தமிழ்ப்படம் ஒன்று – அல்லது வரதராஜ முதலியாரின் கதையை வைத்து ஒரு படம்.

மணி ரத்னம் 1975லிருந்து 1977 வரை பம்பாயில் படித்துக்கொண்டிருந்தபோது, மாதுங்காவில் கடவுளைப் போன்ற புகழுடன் இருந்தவர் வரதராஜ முதலியார். அவரது கதை மணி ரத்னத்தை ஆச்ச்சரியப்படவைத்திருக்கிறது. அந்தக் கதையின் அவுட்லைனை அன்று மணி ரத்னம் கமல் ஹாஸனிடம் சொல்கிறார். கமல் ஒப்புக்கொள்கிறார். மௌன ராகம் படமாக்கப்பட ஐந்து வருடங்கள் பிடித்தன என்றும், நாயகனுக்கு வெறும் பத்தே நிமிடங்கள்தான் தேவைப்பட்டன என்றும் மணி ரத்னம் இந்த இடத்தில் சொல்கிறார். அது செப்டம்பர். டிஸம்பரில் முக்தாவிடம் தேதிகள் கொடுத்திருப்பதாகவும், அப்போது படப்பிடிப்பை ஆரம்பித்துவிடலாம் என்றும் கமல் ஹாஸன் சொல்கிறார். அந்தக் காலகட்டத்தில், அக்னி நட்சத்திரத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட இருந்தது. எனவே இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்.

டிஸம்பரில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நாயகனுக்கு நடந்தது. அப்போது திரைக்கதை முழுமையாகத் தயாராகியிருக்கவில்லை. இதை மணி ரத்னம் கமலிடம் சொல்கிறார். அப்போது கமல், அந்த மூன்று நாட்களையும் வேலு நாயக்கரின் மூன்றுவித கெட்டப்களுக்கான டெஸ்ட் ஷூட்டாக வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அப்படியே நடக்கிறது. அந்த மூன்று நாட்கள் சோதனைப் படப்பிடிப்பு, கமலின் கெட்டப்களை மெருகேற்ற உதவுகிறது. இதன்பின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்குகிறது. பதினைந்து நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு, ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடலின் படப்பிடிப்பை மணி ரத்னம் துவக்குகிறார். அந்தப் பாடலும் ஒரு சில காட்சிகளும் முடிந்தபின்னர்தான், ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் வேலை செய்ய இயலாது என்பது அவருக்குப் புரிகிறது. தயாரிப்பாளர் அவரது அண்ணன் என்பதால், ஒரு வருட காலத்துக்குப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, நாயகன் வெளிவந்ததும்தான் மறுபடி துவங்குகிறது.

நாயகன் படப்பிடிப்பில் கமலின் பங்கு எத்தகையது? ஒரு நல்ல நடிகன் படத்தில் இருந்தால், இயக்குநரின் பாரம் குறைகிறது என்கிறார் மணி ரத்னம். நடிப்பைத் தவிர, சில காட்சிகளில் பிற கதாபாத்திரங்களுக்கான ஒப்பனையிலும் கமலின் பங்கு இருந்திருக்கிறது. கூடவே, தனது சொந்தத் துப்பாக்கியையும் கமல் கொண்டுவந்து,  டம்மித் துப்பாக்கி உபயோகிக்கவேண்டிய சோதனையிலிருந்து மணி ரத்னத்தைத் தப்புவித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் கேல்கரின் தலையில் வேலு அடித்து உடைக்கும் பாட்டில் நினைவிருக்கிறதா? அது, கமல் அமெரிக்கா சென்றிருந்தபோது வாங்கிவந்த பாட்டில். சர்க்கரையினால் ஆனது. இதைப்போல் நாயகன் படப்பிடிப்பில் கமலின் பலவிதமான inputகள் இருந்திருக்கின்றன.

கமலின் வயதான மேக்கப் பற்றியும் மணி ரத்னம் சொல்கிறார். அந்தச் சமயத்தில் ‘பேசும் படம்’ முடித்துவிட்டு, ஒரு சமயத்தில் ஒரே படம்தான் என்று கமல் செய்ய ஆரம்பித்திருந்த காலம் என்றும், அதனால், தனது பின்மண்டையில் முடிகளை வெட்டி, வேலு நாயக்கரின் தலையில் லேசான சொட்டையைக் கொண்டுவந்தார் என்று சொல்கிறார் மணி ரத்னம். இந்தப் படத்தை முடித்ததும் முழுதாக முடியை எடுத்துவிட்டு அடுத்த படத்தில் (சத்யா) முடி வளர வளர நடித்தார் கமல் என்றும் தெரிந்து கொள்கிறோம். இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்கள் கமலைப் பற்றி இந்தப் பேட்டியில் இருக்கின்றன. கூடவே, ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலில் ஒரு குறிப்பிட்ட காட்சியில், ஜனகராஜ் செய்யும் கோமாளித்தனத்துக்கான கமலின் ரியாக்‌ஷனை எப்படி மணி ரத்னம் திருத்தினார் என்பதும், அதிலிருந்து மணி ரத்னத்தின்மேல் கமலுக்கு முழுமையான நம்பிக்கை துளிர்த்ததையும் அறியலாம்.

கமலிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார் மணி ரத்னம். காரணம், இயக்குநர் விரும்பியதை மீறி, கமலின் பலப்பல நடிப்பு வெளிப்பாடுகளிலும், அவரது மனதில் அந்த ஷாட்டைப் பற்றிய ஐடியாக்களை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார் என்பதிலும் ஒரு இயக்குநர் எளிதில் கவரப்பட்டு, மனதில் நினைத்த ஒரிஜினல் விஷயத்தை மறந்துவிடநேரலாம் என்பதுதான். இதற்கெல்லாம் பல உதாரணங்களை நாயகனிலிருந்து மணி ரத்னம் தருகிறார். உதாரணத்துக்கு, தனது மகனின் உடல் கிடத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி வேலு நாயக்கர் நடந்துவரும் காட்சி. இதில், வேலு நாயக்கர் தனது வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டே கீழிறங்கி வரும் காட்சியை டாப் ஆங்கிளில் முதலில் படமாக்கியிருக்கிறார் மணி ரத்னம். அந்தக் காட்சி, முழுக்க முழுக்கக் கமலின் கடுப்பாட்டில் இருந்ததை மணி ரத்னம் உணர்கிறார். ஆனால், கதைப்படி வேலு நாயக்கர் மாடியிலிருந்து, கீழே ஒரு பிணம் கிடத்தப்பட்டதைப் பார்த்துவிடுகிறார். அவரது மனதில் சந்தேகம். இந்த இடத்தில் அந்தக் கதாபாத்திரத்தின் முழுக் கட்டுப்பாட்டில் அந்தக் காட்சி இருக்கக்கூடாது என்று மணி ரத்னம் உணர்கிறார். காரணம், வேலு நாயக்கரின் மனதில் ஒரு தளர்வு வந்துவிட்டது. அது அவரது மகனாகவும் இருக்கலாம். எனவே இதனைக் கமலிடம் சொல்கிறார் மணி ரத்னம். உடனடியாக அதனை உள்வாங்கிக்கொண்டு அப்படியே நடித்துக்கொடுக்கிறார் கமல். எனவே, எத்தனைவகையான நடிப்பைக் கமல் வெளிப்படுத்தினாலும், நினைத்ததை அவரிடம் சொல்லிவிட்டால் வேலை இன்னும் சுலபம் என்பது மணி ரத்னத்தின் கருத்து.

இதைப்போல் கமலாக இம்ப்ரவைஸ் செய்து நடித்த பல காட்சிகளைப் பற்றி ரங்கனும் மணி ரத்னமும் விவாதிக்கின்றனர்.

நாயகனைப் பற்றிய பரத்வாஜ் ரங்கனின் கேள்விகளும் அவற்றுக்கு மணி ரத்னத்தின் பதில்களும், அவசியம் அனைவரும் படித்துப் பார்க்கவேண்டியவை. குறிப்பாக இயக்குநர் ஆகும் கனவில் இருப்பவர்கள். காரணம், மணி ரத்னம் மிகத் தெளிவாக, தான் விரும்பியவற்றைத்தான் எடுத்திருக்கிறார். கூடவே, படப்பிடிப்பில் என்ன செய்ய வேண்டும், ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரை (கமல்) வேலைவாங்குவது எப்படி, இசையமைப்பில் இயக்குநரின் பங்கு, minor கதாபாத்திரங்கள் போன்ற பல விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்படுகின்றன.

agni-natchathiram

நாயகனுக்குப் பிறகு அக்னி நட்சத்திரம் துவங்குகிறது.

நாயகனுக்காக காலைவேளைகளில் ரெகார்டிங். மதியம் அக்னி நட்சத்திரம். காலையில் பழங்கால இசைக்கருவிகள். மதியத்தில் எலெக்ட்ரானிக் கருவிகள். இப்படித்தான் இளையராஜாவுடன் வேலை செய்ததாக மணி ரத்னம் சொல்கிறார். இந்த இடத்தில், ஒரு ஆக்‌ஷன் படத்தை எப்படி எழுதுவது என்று மணி ரத்னத்தின் கருத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில், என்னதான் வேகமாகத் திரைக்கதை நகர்ந்தாலும், படத்தின் ஒரே ஒரு major ஆக்‌ஷன் காட்சி, க்ளைமாக்ஸில் மட்டும்தான் வருகிறது. இதைப்பற்றிச் சொல்லும் மணி ரத்னம், Jaws படத்தில் நம்மை பயமுறுத்தியது சுறா அல்ல என்றும், சுறாவின் வால் மட்டுமே என்றும் சொல்கிறார். தண்ணீரைக் கிழித்துக்கொண்டுவரும் அந்த வால்தான் படத்தின் பெரும்பாலான நிமிடங்களில் திகிலைக் கிளப்பியது என்று சொல்லி, படத்தின் எல்லாக் காட்சிகளிலும் இரண்டு கதாபாத்திரங்களும் அடித்துக்கொள்வது அலுப்பைத்தான் கொடுக்கும் என்றும், மாறாக இந்த இருவரும் வரும் காட்சிகளில் எல்லாம் ஒரு ஆக்‌ஷனுக்கான promise இருக்கும்படி வைத்துக்கொள்வதுதான் இன்னும் விறுவிறுப்பைக் கிளப்பும் என்றும் சொல்கிறார். நாயகனிலும் இப்படித்தான். இன்ஸ்பெக்டரைக் கொல்லும் காட்சி மட்டும்தான் அந்தப் படத்தின் ஒரே ஒரு ஆக்‌ஷன் காட்சி.

இதன்பின் அக்னி நட்சத்திரத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் மணி ரத்னம். அதன் ஒளிப்பதிவு (P.C ஸ்ரீராம்), நிரோஷாவின் கதாபாத்திரத்தின் பெயரே படத்தில் வராதது, ஆக்‌ஷன் படங்களில் மணி ரத்னத்தின் விருப்பம், இளைஞர்களின் ரசனை, அபூர்வ ராகங்கள் என்று நிறையப் பேசுகிறார்.

geethanjalicl

பின்னர் துவங்குகிறது கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே). கீதாஞ்சலி என்பது, கான்ஸரில் இறந்துபோன Geethanjali Ghei என்ற பதினாறு வயதுப் பெண் கவிஞரின் பெயர் என்று அறிகிறோம். அக்னி நட்சத்திரம் திரைக்கதையை முடித்தபின்னர் மணி ரத்னம் எழுதி வைத்த ஒரு கதைச்சுருக்கமே கீதாஞ்சலி. கதாநாயகன் இறப்பதைப் போன்ற எண்ணம் கொண்டிருப்பது ஒரு க்ளிஷே என்றால், கதாநாயகியும் அப்படியே என்பது டபிள் க்ளிஷே. அதைத்தான் இதில் பாஸிடிவாக எழுதியதாக மணி ரத்னம் சொல்கிறார். இப்படத்தைப் பற்றிப் பேசும்போது மறுபடியும் இளையராஜா வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர், பகல் நிலவின் பாடல் கம்போஸிங்கின்போது இளையராஜா இசையமைத்த மற்றொரு பாடலைக் கேட்டதாகவும், அது தமிழில் எடுக்கப்படும் தேவதாஸ் படம் ஒன்றுக்கான ட்யூன் என்று இளையராஜா சொன்னதாகவும், அதனைத் தனக்குக் கொடுக்கச்சொல்லி மணி ரத்னம் கேட்டதாகவும், ‘நீ ஒரு தேவதாஸ் படம் எடு. அப்போது கொடுக்கிறேன்’ என்று இளையராஜா சொன்னதாகவும் மணி ரத்னம் நினைவுகூர்கிறார். அதன்பின் கீதாஞ்சலி சமயத்தில் அந்த நிகழ்ச்சியை மணி ரத்னம் சொல்ல, டக்கென்று பல ஆண்டுகள் முன்னர் தான் போட்ட அந்த ட்யூனை நினைவிலிருந்து எடுத்த இளையராஜா அதை வாசித்துக் காட்டியதாகவும், அதுதான் கீதாஞ்சலியின் முதல் பாடலாக அமைந்தது என்றும் மணி ரத்னம் சொல்கிறார்.

அந்தப் பாடல் – ஓ பாப்பா லாலி.

இதோ அதன் ஒரிஜினல் தெலுங்கு வடிவம். SPBயின் குரலில். அடுத்ததாக மனோவின் குரலில் தமிழ் வடிவம்.

முதல் பாடலே இந்தத் தரத்தில் அமைந்ததால், இதிலிருந்து எல்லாமே இன்னும் சிறந்ததாகவே அமைந்தன என்பது மணி ரத்னத்தின் கருத்து. இதன்பின் திரைக்கதை பற்றி (ஃப்ளாஷ்பேக் ஒன்றில் ஆரம்பித்து கதைக்கு வரும் உத்தி), ஓ ப்ரியா ப்ரியா பாடல் பற்றி, பாடலை எடுக்கும் விதம் பற்றி, தனக்கே உரிய stylish மசாலாக்கள் எடுப்பது பற்றி, மணி ரத்னத்தின் படங்களில் ரயில்களைப் பற்றி, கண்னாடிகள் இடம்பெறுவதைப் பற்றி, மழையைப் பற்றி, அவரது படங்களின் நீளம் பற்றி… நிறையப் பேசுகிறார் மணி ரத்னம்.

anjali131212.121213150653

தனது படங்களில் குழந்தைகளைப் பற்றி மணி ரத்னம் சொல்கிறார். கூட்டுக்குடும்பங்களில் குழந்தைகள் என்பவை அத்தியாவசியம் என்பதையும், தங்களுக்கே உரிய வழிகளில் அவர்கள் செயல்படும் விதங்களையும் பற்றிப் பேசுகிறார். தனது படங்களில் குழந்தைகள் அதிகப்பிரசங்கித்தனமாகச் செயல்படுவதைப் பற்றிய குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையில், அப்படிச் சொல்பவர்கள் குழந்தைகளுக்குச் செவிமடுப்பதில்லை என்றும், தங்களது உலகத்திலேயே தங்கிவிட்டவர்கள் அவர்கள் என்றும், குழந்தைகள் என்ன சொல்லவேண்டும் என்பதுபற்றிய முன்முடிவுகள் இருப்பவர்கள்தான் அப்படிச் சொல்கிறார்கள் என்றும் சொல்கிறார். இன்னும், குழந்தைகளுடன் எப்படி வேலை செய்யமுடிகிறது என்பதைப் போன்ற, குழந்தைகளைப் பற்றிய மணி ரத்னத்தின் கருத்துகள் நிறைய உள்ளன.

’அஞ்சலி’ படத்துக்காக எப்படியெல்லாம் பல மருத்துவமனைகளுக்கு மணி ரத்னமும் பாணி சாரும் (இவர் யார் என்பதை புத்தகத்தைப் படித்து அறிக) சென்றனர் என்பதையும், அப்படி ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில்தான் (ஆஷீர்வாத்) அஞ்சலியின் கதை பிறந்தது என்பதையும் மணி ரத்னம் மிகவும் விபரமாகச் சொல்கிறார். பின்னர் அஞ்சலியில் உபயோகப்படுத்தப்பட்ட குழந்தைகள், குழந்தைகள் மட்டுமே பாடிய அஞ்சலியின் பாடல்கள், மது அம்பாட்டுடனான collaboration, பிரபு, அஞ்சலிக்கான லைட்டிங், ஷாம்லியின் நடிப்பு போன்ற பல கோணங்களில் மணி ரத்னத்தின் பேட்டி செல்கிறது.

thalapathi

ஷ்யாம் பெனகல் 1981ல் எடுத்த Kalyug படத்தைப் பற்றியும், அதன் மகாபாரதத் தொடர்புகளையும் பற்றி மணி ரத்னம் நிறையப் பேசுகிறார். பின்னர், மகாபாரதத்தின் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரமான கர்ணன் பற்றி. கர்ணனின் கதையே மிகவும் உணர்ச்சிபூர்வமானது என்றும், ‘தளபதி’யின் திரைக்கதையை எழுதியபோது, கர்ணனோடு சம்மந்தப்பட்ட எந்தக் காட்சியை எழுதினாலும் அது உணர்வுபூர்வமான காட்சியாக இருந்தது என்றும் சொல்கிறார். மகாபாரதத்தில், கர்ணனின் தந்தை, சூரியன். தளபதியில், சூர்யாவின் தந்தை யாரென்பது இறுதிவரையிலும் தெரியாது. இதற்கான காரணத்தை மணி ரத்னம் விரிவாகப் பேசுகிறார்.

ரஜினிகாந்த், தனது அண்னன் ஜி.வியின் நண்பர் என்றும், அவர்கள் இருவரும் சிலமுறை, ஒரு படம் செய்வது குறித்துப் பேசியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார் மணி ரத்னம். ரஜினியுடன் வழக்கமான பாணியில் படம் செய்வதில் தனக்கு இஷ்டம் இருந்ததில்லை என்றும், ரஜினியின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்குக் குறைவில்லாமல்- அதேசமயம் அது ஒரு மணி ரத்னம் படமாகவும் இருக்கவேண்டும் என்பதே தனது எண்ணமாக இருந்ததாகவும், ரஜினியும் இல்லை என்று சொல்லாமல், தனக்கும் அதைச்செய்யவேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் படமாகவும் இறுதியாக முடிவு செய்ததே தளபதி என்றும் சொல்கிறார்.

பொதுவாக ரஜினிகாந்த்,  பிரம்மாண்டமான ஒரு நட்சத்திரமாக ஆனபின் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து (தமிழில்) தளபதி அளவுக்கு நடித்ததில்லை. இருந்தாலும், தளபதியில் மம்மூட்டியுடன் இணைந்ததில் ரஜினிக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவும் இல்லை என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது என்கிறார் ரங்கன். இதற்குப் பதிலாக, கர்ணனைப் பற்றிய படத்தில் அவசியம் துரியோதனனுக்கும் பெரும் பங்கு இருக்க்கவேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே ரஜினி தெளிவாக இருந்ததாக மணி ரத்னம் சொல்கிறார். கூடவே, தன்னைப் பற்றிய நம்பிக்கை ரஜினிக்கு எப்போதுமே உண்டு என்பதாலும், ரஜினிக்கு இப்படத்தில் பிரச்னைகள் இருந்ததில்லை என்பது மணி ரத்னம் கருத்து.

படத்தை எழுதும்போது, ‘முள்ளும் மலரும்’ படம்தான் தனது மனதில் இருந்ததாக மணி ரத்னம் சொல்கிறார். காரணம், மணி ரத்னத்தைப் பொறுத்தவரையில் ரஜினியின் நடிப்புக்கான உதாரணம் அது. மற்றபடி, ரஜினிக்கான படம் என்ற எந்த எண்ணமும் தளபதியை எழுதும்போது அவருக்கு இல்லை. முள்ளும் மலரும் படத்துக்குக் கொஞ்சமாவது அருகில் வரும்படி ரஜினியின் நடிப்பு இந்தப் படத்தில் வெளிப்படுமாறு எழுதவேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே அவருக்கு இருந்திருக்கிறது. இந்த இடத்தில் ரஜினி, ஸ்டைல் என்ற பொறியில் சிக்கிக்கொண்டதாகக் குறிப்பிடுகிறார் மணி ரத்னம். இருந்தாலும், ஒரு கதாபாத்திரத்தை முழுதுமாகத் தனது தோளில் சுமக்கக்கூடிய திறமை அவருக்கு உண்டு என்பது மணி ரத்னத்தின் கருத்து.

இதன்பின் ரஜினியின் இண்ட்ரோ சீக்வென்ஸ். அதுவரை அதுதான் மணி ரத்னத்தின் மிகவும் மசாலாத்தனமான காட்சி என்பது ரங்கனின் கருத்து. இதற்குப் பதில் சொல்லும் மணி ரத்னம், மகாபாரதத்தில் கர்ணனின் இண்ட்ரோ என்பது திடீரென்று பாண்டவர்களும் கௌரவர்களும் தங்களது ஆயுதப் பிரயோகங்களைப் பரிசோதனை செய்துபார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் வருகிறது என்பதை நினைவுறுத்துகிறார். அதேபோல், ரஜினியின் இண்ட்ரோ என்பதும் திடீரெனெ, அந்த ஆக்‌ஷனின் மத்தியில்தான் படத்தில் துவங்குகிறது. யார், என்ன, எங்கே என்பதுபோன்ற எதுவுமே அதில் இல்லை.

இதன்பின்னர் கொதார் (Godard) பற்றிக் கொஞ்சம் சொல்கிறார். சினிமாவில் படிப்படியான விவரிப்பை நொறுக்கியவர் கொதார் (இவரது பெயரும் போர்ஹேஸின் பெயரும்தான் தமிழில் இதுவரை தப்பாக உச்சரிக்கப்பட்டதில் முதலிரண்டு இடங்கள் வகிக்கின்றன. Jorge Luis Borges என்பது ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ். பலரால் சொல்லப்படுவதுபோல் ‘போர்ஹே’ அல்ல. அதேபோல் Jean-Luc Godard என்பது ஸான் லுக் கொதார். ‘கொடார்ட்’ அல்ல). பின்னர் தளபதியின் பல்வேறு காட்சிகள், நடிகர்கள், பின்னணி போன்றவற்றைப் பற்றிப் பேட்டி தொடர்கிறது. ஸ்டீரியோஃபோனிக் ஒலி, சந்தோஷ் சிவன், ‘சுந்தரி’ பாடலின் குரஸவா பாதிப்பு, சின்னத்தாயவள் என்று செல்லும் தளபதியைப் பற்றிய பேட்டி, மணி ரத்னத்தின் அக்னி நட்சத்திரம் & நாயகன் ஹிந்தி ரீமேக்குகளில் முடிகிறது.

  Comments

5 Comments

  1. sarvaan ace

    excellent review scorpy. vilo thamila elutharathu romba kastam. chinna vayasula siruvarmalar comics book evlo veri kondu padipeno mukkiama antha interest ah thoondiyathu antha eluthu nadai. you are excellent in that. nowadays with these outdated reviewers in vikadan and other (so called leading publishers ) lack this type. i wish those books are made to stop by time and only online publication can do the things. keep up the good work.
    my one doubt is which software you are using to type in tamil, i tried to put my comment for u in tamil using yahoo transliterate but horrible experience.

    Reply
    • Rajesh Da Scorp

      Thank you Sarvaan. நமக்கு எதுலயாவது இண்ட்ரஸ்ட் இருந்தா அதைப்பத்தி எழுதுறது ஜாலியா போகும்ல. அப்புடித்தான் போகுது. அப்புறம், தமிழ்ல எழுத NHM writer ட்ரை பண்ணி பாருங்க.. கொஞ்ச நாளுக்கப்புறம் நல்லா செட் ஆயிரும்.

      Reply
  2. செம சுவாரஸ்யமா இருக்கு. முடிந்தால் புத்தகத்தை தமிழில் கொண்டுவாருங்களேன். 🙂

    Reply
  3. Harry

    Scorp ,
    In my opinion , This whole book is not at all written in a balanced point of view. While reading , It felt as if a devotee interviewing his Guru rather than Journalist or Movie buff interviewing a creator. Also This book was not at all mentioning the references/inspirations(u know what i mean :-)) taken from various movies(Godfather , E.T… etc) . Could have shown bit of integrity/honesty.

    Reply
  4. “என்னாச்சு?உச்சா போனேன் கக்கா போனேன்
    பேண்டை போட்டேன்
    வெளிய வந்துட்டேன்
    ஏன் கப்படிக்குது?
    ஓ கால் கழுவ மறந்துட்டனா!!அதான் கப்படிக்குதுதா?”
    ************************************************************************************
    ஒலக சினிமா விமர்சக காக்கா கூட்டம்: கொய்யால இதாண்டா ஒலக சினிமா…
    *********************************************
    செந்தேள் திரைக்கதை ஆய்வு: முதல் வசனமாக “என்னாச்சு” அப்படின்னு சொல்லும் போதே அடுத்து என்ன நடக்கும் என்பது அந்த நடிகனுக்கே தெரியாது என்பதை பார்வையாளன் உணர்ந்து கொள்வான் என்று காலின்காவிஸ்கி சொன்ன தத்துவத்தை இங்கே இயக்குனர் புழிஞ்சி ரசிகன் வாயில் ஊற்றுகிறார்.
    >அடுத்து உச்சா போனேன் என்ற வசனம் மூலம் ஹீரோவுக்கு சுகர் கம்ப்ளைன்ட் இருக்க வாய்ப்பதிகம் என்று உணர்த்தி அவர் மீது அனுதாபத்தை வர வைக்கிறார்.இது 1656 இல் கொசுமாயோ கொசக்சியா என்ற எஸ்பன்யோல் நாடக அறிஞன் சொன்ன தத்த்துவம்.
    >கக்கா போனேன் என்ற வசனம் மூலம் ஹீரோவுக்கு கல்லடைப்பு இல்லை என்று உணர்த்துகிறார் இயக்குனர்.ரசிகன் சந்தோஷ படுகிறான்.ரசிகனை இப்படி குஷிபடுத்துங்கள் என்று கீ பார்ஸ்பெட் 1134 இல் சொன்னதை இயக்குனர் பின்பற்றுகிறார்.இப்படியாக ஒட்டுமொத்த ஒலக சினிமா திரைக்கதை தத்துவத்தை பிழிந்து கொடுக்கிறார்.மீதி வரிகள் பற்றிய ஆய்வை அடுத்த வாரம் சொல்கிறேன்.

    Reply

Join the conversation