Conversations with Mani Ratnam (2013 – Penguin) – Baradwaj Rangan – Part 4

by Karundhel Rajesh February 9, 2014   Book Reviews

முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்[divider]

தளபதியை முடித்தபின்னர் ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், தில்ஸே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், யுவா, ஆய்த எழுத்து, குரு, ராவண், ராவணன், கடல் என்று மணி ரத்னத்தின் படங்கள் வெளியாகின. ரஹ்மானுடன் மணி ரத்னத்தின் கூட்டு ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான். அவற்றைப் பற்றி மணி ரத்னம் சொல்வதையெல்லாம் பார்க்கவேண்டும் என்றால், விளக்கமாக இன்னும் 4-5 கட்டுரைகள் தேவைப்படும். எனவே, அதற்குப் பதில், புத்தகத்தைப் பற்றிய என் கருத்தை இனி பார்க்கலாம்.

பொதுவாக ஆரம்பத்தில் இருந்து மணி ரத்னத்தின் படங்களைப் பார்ப்பவர்கள், அவரது படங்களில் காதல் என்பது அழகாக, குறும்பாக, இயல்பாக சொல்லப்பட்டிருப்பதை உணரமுடியும். இதற்கு ஆரம்ப விதை – மௌனராகம் (அவரது முந்தைய படங்களான பல்லவி அனுபல்லவி, பகல் நிலவு  ஆகியவற்றில் ஒருசில காட்சிகள் அப்படி இருந்தாலும்). இதற்குக் காரணத்தை மணி ரத்னம் சொல்லியிருப்பதை நமது முந்தைய கட்டுரையில் பார்த்தோம்.

80களில், பெண்களிடம் பழக வாய்ப்புகள் இல்லாத ஆண்களே அதிகம். இருந்தபோதிலும், நகர வாழ்க்கையில் பெண்களிடம் தயக்கமே இல்லாமல் பழகக்கூடிய ஒரு பகுதியினரும் இருந்தனர். இவர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை உருவாக்கியதாக மணி ரத்னம் சொல்கிறார். இவர்கள் The Doors, The Beatles போன்ற ரசனை உடையவர்கள்.

மௌனராகத்தில் தொடங்கிய இந்த aspect, இதன்பின் அக்னி நட்சத்திரம், இதயத்தைத் திருடாதே, அஞ்சலி, ரோஜா, பம்பாய், தில்ஸே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, குரு போன்ற படங்களிலும் இடம்பெற்றதை நம்மால் உணர முடியும். அவர் தயாரித்த படங்களான ஆசை, இந்திரா, நேருக்கு நேர், டும் டும் டும், ஃபைவ் ஸ்டார் ஆகிய படங்களிலும் குறும்பான காதல் அவசியம் இருக்கும். அவர் திரைக்கதை எழுதிய சத்ரியன் படமுமே அப்படித்தான். கூடவே, அந்த அழகான தருணங்களுக்கான இசையும் எப்படி இருக்கவேண்டும் என்பதில் மணி ரத்னத்துக்கு ஒரு தெளிவு உண்டு. இளையராஜா, அதன் பின் ரஹ்மான் என்று இரண்டு விதமான இசையமைப்பாளர்களிடமிருந்தும் அவருக்குத் தேவையான அருமையான இசையை அவரால் வாங்க முடிந்திருக்கிறது. தளபதி ரஜினி, திருடா திருடா, இருவர், ஆய்த எழுத்தில் மாதவன் போன்ற ஓரிரு விதிவிலக்குகள் இருந்தாலும், அவரது பல படங்களிலும், மௌன ராகம் கார்த்திக் போன்ற அதே வகையான கதாநாயகர்கள்தான்.

அதேபோல், சமூகப் பிரச்னைகளைப் பேசும் படங்களாக அவர் உருவாக்கிய படங்களிலும் முதல் பாதியில் இந்த இனிமையான காதல் இருந்தே தீரும். அதைப் பல படங்களில் அவர் உபயோகித்திருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் அந்தக் கதாபாத்திரங்களுக்குத் தேவையான இயல்பான ரொமான்ஸே இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் அவர் சொதப்பியதில்லை. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் காதல் என்பது மணி ரத்னம் படங்களின் வாயிலாகவே சினிமாவில் அழகாகப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், எண்பதுகளிலும் சரி, தொண்ணூறுகளிலும் சரி, பாடல்களின் வாயிலாக அத்தனை சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் மணி ரத்னம். அவரளவு consistent சூப்பர்ஹிட் பாடல்களைத் தொடர்ந்து வெளியிடும் வேறொரு இயக்குநர் யாரையும் எத்தனை யோசித்தாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை (ஷங்கர், கௌதம் என்று பட்டியலைத் தொடங்கும் நண்பர்கள், மணி ரத்னத்தின் 31 வருட திரை அனுபவத்தையும் கொஞ்சம் கணக்கில் எடுத்துக்கொண்டால் நல்லது).

எல்லோருக்கும் தெரிந்த பிரபல காட்சிகளைப் போலவே, சிறிய காட்சிகளும் உண்டு. உதாரணமாக கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சைக்கிளில் மாதவனைத் துரத்திக் காதலிக்கும் சிம்ரனை நினைவிருக்கிறதா? அப்போது பின்னணியில் வரும் பாடல், சிடியில் இல்லை. மின்மினி பாடிய ‘சட்டென நனைந்தது நெஞ்சம்’ என்ற பாடல் அது. அதை இங்கே காணலாம்.

இதைப்போலவே, பிரம்மாண்டமான கூட்டங்களை கச்சிதமாக choreograph செய்வதிலும் மணி ரத்னத்துக்குத் தனித்திறமை உண்டு. எல்லோருமே ஒரே போன்று ரியாக்ட் செய்வதை அவரது ‘இருவர்’ படத்தில் காணலாம்.

இருந்தாலும், அவரது படங்களில் இடம்பெற்றிருக்கும் வேறு சில விஷயங்கள் உண்டு. உதாரணமாக இன்ஸ்பிரேஷன்கள் (நாயகன் & Godfather. அஞ்சலி & ET). ஆய்த எழுத்து, Amores Perros படத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களைப் பார்த்தாலேயே அது தெரிந்துவிடும். ஆனால், அதைப்பற்றி ரங்கன் எந்தக் கேள்வியையும் இந்தப் புத்தகத்தில் கேட்டிருக்கவில்லை. போலவே, புத்தகத்தின் ஆரம்பத்தில் இருந்தே, ஒரு விசிறியாகத்தான் ரங்கன் கேள்விகளைக் கேட்கிறார் என்பது எளிதாகவே புரிகிறது. ரோஜா வரை அப்படித்தான் என்று ரங்கனும் ஒத்துக்கொள்கிறார். இருந்தாலும், ரோஜாவுக்குப் பிறகும் அப்படித்தான் கேள்விகள் இருக்கின்றன என்பது என் கருத்து. ரங்கனால் பல கேள்விகளைக் கேட்க முடிகிறது. அது இந்தப் புத்தகத்தின் நல்ல விஷயம். அந்தக் கேள்விகளின் மூலமாகத்தான் நமக்கும் பல்வேறு புதிய கருத்துகள் தெரியவருகின்றன. இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் மூன்று அத்தியாயங்களைப் படித்தால் அதில் அப்படிப்பட்ட பல கருத்துகளை எழுதியிருக்கிறேன். இப்படிப் பலவிதமான கேள்விகளை ரங்கன் கேட்டிருந்தாலும், கேட்காத சில கேள்விகளில் இன்ஸ்பிரேஷன்களைப் பற்றிய கேள்விகள் முக்கியமானவை. காரணம், மணி ரத்னத்தை accuse செய்வது அல்ல. மாறாக, ஒரு படத்தில் இருந்து இன்ஸ்பையர் ஆவதற்கு எது தூண்டுகிறது? ஒரு இயக்குநராக அது எப்படி சாத்தியமாகிறது? அமோரெஸ் பெரோஸிலிருந்து இன்ஸ்பையர் ஆன ஆய்த எழுத்தின் காட்சிகள் ஒரிஜினல் அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லையே? அதைப்பற்றி அவரது கருத்து என்ன? போன்ற சில விஷயங்கள் நமக்குப் படிக்கக் கிடைப்பதில்லை.

ஆய்த எழுத்தைப் பற்றியே இன்னும் சில கேள்விகள் ஒரு திரை விமர்சகனாக எனக்கு உண்டு. கதாபாத்திரங்களின் consistency. அண்ணனைக் கொல்லும் மாதவன், அவனைக் கொல்லச்சொன்ன வில்லனிடமே திரும்புவது நம்பும்படியாக இல்லை (என்னதான் இன்பா குறிக்கோள், உயிர்வாழ்தல் போன்றவற்றில் extreme ரியாக்‌ஷன்களைக் கொண்டவன் என்று மணி ரத்னம் சொன்னாலும்). அதேபோல் மாணவர்களின் பிரதிநிதியாக வரும் மைக்கேல், ஒரு அரசியல்வாதிக்கு சவால் விடுவது ஓகேதான். ஆனால் தொடர்ந்து அவன் வென்றுகொண்டே வருவது – இந்திய அரசியல் சூழலில் எப்படி சாத்தியம்? மறுநாளே மைக்கேல் கொல்லப்படமாட்டானா? (அப்படி அவனை அடிக்க இன்பா அனுப்பப்பட்டாலும் அது திரைக்கதையில் பொருந்தவில்லை). இந்த சறுக்கல் ஏன் நிகழ்ந்தது? மணி ரத்னம் அவற்றை எழுதியபோது இவை எடுபடும் என்று நினைத்தன் பின்னணி என்ன? இவற்றுக்கெல்லாம் எனக்கு பதில் கிடைக்கவில்லை.

இதைப்போலவே ராவணனில் கதாநாயகி கடத்தப்படும் இடம். அந்தப் படத்தின் மிக மிக செயற்கையான, சிரிப்பை வழவழைக்கும் இடம் அது. காரணம், பாரதியார் பாடலைப் பாடிக்கொண்டிருக்கும் கதாநாயகிக்கு அதே பாணியில் எசப்பாட்டு பாடும் வீரையா. இதைப்போலவே எதிரியின் மனைவியைக் கொல்ல நினைத்து, பின் வீரைய்யா மனம் மாறுவதற்கான காரணமும் எவ்வளவு செயற்கையாக இருக்க முடியுமோ அவ்வளவு செயற்கை. இதைப்பற்றியெல்லாம் ஒரு விமர்சகராக ரங்கன் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை. மாறாக, நாம் சென்ற கட்டுரைகளில் பார்த்த ‘குறியீடுகள்’ பற்றித்தான் கேள்விகள் கேட்கிறார். ராவணன் போன்ற ஒரு படத்தில், மணி ரத்னம் ஏன் சொதப்பினார் என்பதற்கான கேள்விகள் புத்தகத்தில் இல்லை. அவை இருந்திருந்தால், அவற்றில் இருந்து படிக்கும் நமக்கும் பல கருத்துகள் கிடைத்திருக்கும்.

அதேபோல், சமூகப் பிரச்னைகளைப் படமாக்கும் மணி ரத்னம், அவைகளுக்கு எல்லாப் படங்களிலும் தன் பாணியில் ஒரு solution கொடுக்கிறார். ஆனால் அந்த முடிவோ, நிதர்சனத்தில் நடக்க இயலாத முடிவாகவே இருக்கிறது. ஏன்? சமூகப் பிரச்னைகளை மணி ரத்னம் எந்த நோக்கத்தில் கவனிக்கிறார்? இவையெல்லாம் திரைக்கதையாக எழுதப்படும்போது அவரது எண்ணம் என்னவாக இருக்கிறது? இவைகளும் புத்தகத்தில் இல்லை.

நான் மேலே சொல்லியிருப்பவை எல்லாம், அத்தனை திரை ரசிகர்களுக்கும் தெரிந்த கேள்விகள்தான். புதிதாக என் மனதில் மட்டும் உதித்தவை அல்ல. எனவே அவசியம் ரங்கனுக்கும் இதெல்லாம் தெரியாமல் இருந்திருக்காது. இருந்தாலும், அவை புத்தகத்தில் இடம்பெறவில்லை. இதுதான், ஒரு ரசிகராகவே அத்தனை கேள்விகளையும் ரங்கன் கேட்டிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

என் கருத்து – இன்ஸ்பிரேஷன் என்பது குற்றம் அல்ல. அப்பட்டமான காப்பி என்பதுதான் பிரச்னை. உலகின் பல இயக்குநர்கள், பிறரிடமிருந்து இன்ஸ்பையர் ஆனவர்களே. ஆனால் இன்ஸ்பையர் ஆன விஷயங்களை உள்வாங்கிக்கொண்டு தங்கள் பாணியில் எப்படிக் கொடுக்கிறார்கள் என்பதே அவர்களின் முத்திரையைப் பறைசாற்றுகிறது. எனவே, மணி ரத்னம் இந்த இன்ஸ்பிரேஷன்களைப் பற்றிக் கேட்டிருந்தால் பதில் சொல்லியிருப்பாரோ என்று தோன்றுகிறது.

இன்னொன்று – எனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் கேள்வி ஒன்று. இது கொஞ்சம் ஜாலியானது. இதுவரை இளையராஜா & ரஹ்மான் ஆகிய இருவருடன் மட்டுமே மணி ரத்னம் பணிபுரிந்திருக்கிறார். வேறொரு இசையமைப்பாளருடன் பணிபுரியவேண்டும் என்று இந்த இருவருடன் பணிபுரிந்த நாட்களில் அவருக்குத் தோன்றவே இல்லையா என்பதே கேள்வி. இனிமேல் அப்படிப் பணிபுரிய முடியுமா?

ஒவ்வொருவருக்கும் பல கேள்விகள் மனதில் இருக்கலாம். அவை எல்லாவற்றையும் கேட்க முடியுமா என்று தோன்றலாம்தான். இருந்தாலும், நான் சொல்ல வருவது, மணி ரத்னத்தின் பாஸிடிவ் விஷயங்கள் குறித்து மட்டுமே கேள்விகள் இருக்கின்றன என்பதுதான்.

இவை அத்தனையும் தாண்டி, மணி ரத்னம் இவ்வளவு விரிவாகப் பேசியிருப்பது இதுதான் முதல் முறை என்பதால், overall இந்தக் குறைகள் இருந்தாலும் புத்தகம் மிகவும் சுவாரஸ்யமாகச் செல்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அவசியம் ஒவ்வொரு எதிர்கால சினிமா இயக்குநரும் படிக்கவேண்டிய புத்தகம் இது. நான் படித்தது இங்லீஷில். மொழிபெயர்ப்பில் தமிழில் எப்படி வந்திருக்கிறது என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும், இங்லீஷில் படிப்பது நல்லது என்று தோன்றுகிறது. கேள்விகளும் பதில்களும் இயல்பாக இருப்பது ஒரு காரணம்.

  Comments

2 Comments

  1. முதலில் இப்படி ஒரு புத்தகம் வரவே அல்லது பேட்டிகே மணிரத்னம் உடனே ஒப்புக்கொள்ளவில்லை என்று கேள்விபட்டேன்.அதன் பின் ஒப்புக்கொண்டபோதும் அவரை சங்கடபடுத்தும் கேள்விகள் வேண்டாம் என்று ரங்கன் நினைத்திருப்பார்.அதனால் தான் மொன்னையாக கேள்விகள்.அது சரி கலைஞரை கேட்கும் கேள்விகள் எல்லாம் ஜெயலலிதாவிடம் கேட்க்க முடியுமா என்ன? ஒன்று செய்திருக்கலாம் மொத்த பெட்டியும் முடிந்த பின் சில ஸ்பெஷல் கேள்விகள் என்று சொல்லி இந்த inspiration மற்றும் இதர கேள்விகள் கேட்டிருக்கலாம்.நடுவில் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்டால் எங்கே இதோடு முடித்து கொள்வோம் என்று சொல்லிவிடுவாரோ என்று தயங்கி இருக்கலாம்.

    Reply
  2. siva

    sir அவரோட இமேஜ் இப்ப செமைய கீழ எரங்கிருசு. அத சரிகட்ட தான் தலைவரு புஸ்தகத்த ரிலீஸ் பண்ணிட்டாரு. இப்ப எல்லாரும் அவர பத்தி பேசுவோமா…. சீக்கிரமா அடுத்த படத்த ஆரம்பிச்ருவாறு பாருங்க….. இதுலாம் வியாபார ட்ரிக்ஸ் ……

    Reply

Join the conversation