Dances with Wolves (1990) – English

by Karundhel Rajesh December 7, 2009   English films

இம்முறை, சற்றே சீரியஸான ஒரு படத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இந்தப்படம், நம்ம ஊர் ‘மகாநதி’ போல் ஒரு பாதிப்பை அளிக்கக்கூடியது. எனவே, இந்த விமரிசனமும், கொஞ்சம் சீரியஸாகவே போகும் வாய்ப்புகள் நிறைய உண்டு. சீரியஸ் படம் பிடிக்காத நண்பர்கள், பொறுத்தருள வேண்டுகிறேன். அடுத்தது ஒரு டமால் டுமீல் படத்தைப் பற்றிப் பார்த்து விடுவோம்.

அமெரிக்காவின் முதல் குடிமக்களான செவ்விந்தியர்களை, நமக்கு டெக்ஸ் வில்லர் மற்றும் கேப்டன் டைகர் காமிக்ஸின் மூலமாகத்தான் பழக்கம். அதுவும், பெரும்பாலும் அவர்கள் காட்டுமிராண்டிகள் என்றும், அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில், அவர்கள் அமைதி விரும்பிகள். வாழ்வை ஒரு கொண்டாட்டமாகக் கருதுபவர்கள். அமெரிக்காவை ஆக்கிரமித்த வெள்ளையர்கள் மூலமாக, இந்த இனம் அருகிக்கொண்டே வந்து, இப்பொழுது மியூசியத்தில் வைக்கப்பட வேண்டியவர்களாக மாறி விட்டனர். வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கிய ஒரு காலகட்டத்தில், மெதுவாக அவர்கள் அழிக்கப்படத் துவங்கிய காலகட்டத்தில், அவர்களை மையமாக வைத்து நடக்கும் ஒரு கதை தான் ‘டான்ஸெஸ் வித் வுல்ஃப்ஸ்’.

இந்தப்படம், சில காரணங்களால், சற்று விசேஷமான ஒன்று. கெவின் காஸ்ட்னர் முதன்முதலில் இயக்கிய ஒரு படம். அதே போல், காஸ்ட்னர், வருடக்கணக்கில் இப்படத்தைத் தயாரிக்க முயன்று, கிட்டத்தட்ட அம்முயற்சியில் தோல்வியுறும் அயனான நிமிடத்தில், உதவி வந்து சேர்ந்து, எடுக்கப்பட்ட ஒரு படமும் ஆகும் இது. நாவலாசிரியர் மைக்கேல் பிளேக், பல காலம் உழைத்து, இந்நாவலை எழுதி முடித்தார். அவர் சோர்வுறும்போதெல்லாம் அவருக்கு நம்பிக்கையூட்டியவர், காஸ்ட்னரே தான்! பொறுமையாகக் காத்திருந்து, இப்படத்தை எடுத்தார். இதே பிளேக்கின் ‘Stacy’s Knights’ என்ற நாவல்தான் வெகு காலம் முன்னர், படமாக எடுக்கப்பட்டது. அப்போது, இதே காஸ்ட்னர் அப்படத்தில், தனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்பகாலத்தைத் தொடங்கினார்.

படம், அமெரிக்க சிவில் யுத்தத்தில் துவங்குகிறது. அமெரிக்கா, இரு துருவங்களாகப் பிரிந்து, சண்டையிட்டுக் கொண்டிருந்த காலம். லெஃப்டினண்ட் ஜான் டன்பார், ஒரு மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருக்கிறார். அவரது கால், வெட்டியெடுக்கப்படவேண்டிய நிலையில் இருக்கிறது. தனக்கு முன், சிலபேரின் உடல் உறுப்புகளை, மருத்துவர்கள் வெட்டியெடுப்பதைப் பார்த்துக்கொண்டே படுத்திருக்கிறார். சட்டென்று எழுந்து, எப்படியோ ஒரு குதிரையைத் திருடி, முகாமிலிருந்து தப்பி விடுகிறார். ஆனால், அவர் நோக்கம், சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரு படைகளுக்கும் இடையே சென்று, அவர்களால் சுடப்பட்டு, இறந்து விடவேண்டும் என்பதாக இருக்கிறது. இம்முயற்சியின்போது, எதிரிகளை நோக்கித் தான் இவர் முன்னேறுகிறார் என்று எண்ணி, இவர் சார்ந்துள்ள படை, வீறுகொண்டு எழுந்து, எதிரிகளைத் துரத்திவிடுகிறது. சாக நினைத்த டன்பார், ஒரு ஹீரோ ஆகிவிடுகிறார். இதனால், டன்பாருக்கு அந்தக் குதிரையையே பரிசாக அளிக்கும் யூனியன் ஜெனரல், அவர் விரும்பும் இடத்துக்கே அவரை நியமிப்பதாகக் கூறுகிறார்.

டன்பார், மேற்குப் பிராந்தியத்தில் பணிபுரியவேண்டும் என்ற தனது ஆசையைத் தெரிவிக்கிறார். அதற்குக் காரணம், அந்தப் பகுதிதான் இன்னும் பழைய அமெரிக்காவைப் போல், மண்ணின் மணம் மாறாமல் இருக்கிறது என்பதே. அந்த இடத்தில்தான் இன்னமும் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அங்கும் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்த, சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் டன்பார் அங்கு செல்கிறார். அந்த இடத்தின் பெயர், ஃபோர்ட் செட்ஜ்விக் என்பது. அங்குள்ள முகாம் காலியாக இருக்கிறது. ஆனால், டன்பாரிடம் போதிய உணவுப்பொருட்கள் இருக்கின்றன. எனவே, தன்னந்தனியாக, அந்த முகாமைச் சீரமைக்கிறார். அங்கு ஒரு ஓநாயையும் பார்க்கிறார். அது அவரையே சுற்றிச்சுற்றி வருவதால், அதன் வெண்ணிறக் கால்களைப் பார்த்து, அதற்கு ‘டூ ஸாக்ஸ்’ என்ற பெயர் வைக்கிறார். ஒருநாள், அவர் ஒரு செவ்விந்தியனைப் பார்க்க நேரிடுகிறது. பக்கத்தில் உள்ள செவ்விந்தியக் குடியிருப்பு பற்றி அப்போதுதான் டன்பார் அறிந்துகொள்கிறார்.

அந்தச் செவ்விந்தியர்களுக்கு, ‘சியோக்ஸ்’ என்று பெயர். அவர்களின் எதிரிகள், ‘பாநீ (pawnee)’ என்ற இன்னொரு பிரிவினர். சியோக்ஸ் பிரிவின் தலைவர், கிக்கிங் பேர்ட். அவருக்கு ஒரு வளர்ப்பு மகள் – ஒரு அமெரிக்கப் பெண் – பெயர், ‘ஸ்டாண்ட்ஸ் வித் எ ஃபிஸ்ட் (stands with a fist)’. மெதுவாக அந்த சியோக்ஸ் பிரிவினரிடம் நண்பராக மாறுகிறார் டன்பார். அவர்களுக்கு, ஒரு பிரம்மாண்டமான காட்டெருமை மந்தையைப் பற்றித் தகவல் சொல்லி, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக ஆகிறார்.

இந்த இடத்தில் வரும் காட்டெருமை வேட்டை, இப்படத்தின் ஒரு முக்கியமான அம்சம். நூற்றுக்கணக்கில் காட்டெருமைகள். அவற்றை வேட்டையாடும் செவ்விந்தியர்கள். கூடவே தனது துப்பாக்கியுடன் டன்பார். மிகவும் கலைநேர்த்தியுடன் படமாக்கப்பட்டிருக்கும் இந்த காட்டெருமை வேட்டை, ஒரு பிரசித்திபெற்ற விஷயமாகும். இப்படம் ஒளிப்பதிவிற்காக ஆஸ்கார் வாங்கியற்கு, இந்தக் காட்சிகளைப் பார்த்தாலே போதும்.

டன்பாருக்கும், கிக்கிங் பேர்டின் மகளுக்கும் காதல் மலர்கிறது. முதலில் தயங்கும் கிக்கிங் பேர்ட், பின்னர் சம்மதிக்கிறார்.

இந்த நேரத்தில்தான், கிக்கிங் பேர்ட் தன்னிடம் பல நாட்களாகக் கேட்டு வந்த கேள்விக்கு, டன்பார் உண்மையான பதிலைச் சொல்கிறார். வெள்ளையர்கள் தங்களைத் தாக்க வருவார்களா என்ற அவரது கேள்விக்கு, அவர்கள் சீக்கிரமே வருவார்கள் என்று பதிலிறுக்கிறார் டன்பார். இதனால், தங்கள் முகாமை, வேறு இடத்துக்கு மாற்றுகிறார் கிக்கிங் பேர்ட். தனது டைரியை எடுப்பதற்கு ஃபோர்ட் செட்ஜ்விக் வரும் டன்பாரை, அதற்குள் அங்கு வந்திருக்கும் அமெரிக்கப்படையினர் பிடித்துவிடுகிறார்கள்.

திரும்பிச் செல்ல விரும்பும் டன்பாரை, துரோகி என்ற முத்திரை குத்தி, தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். அப்போது, அவரை கிக்கிங் பேர்டின் படையினர் தப்புவிக்கின்றனர். மறுபடி முகாம் செல்லும் டன்பார், கிக்கிங் பேர்டிடம், தான் அவர்களுடன் உள்ள வரை, வெள்ளையர்களின் தொந்தரவு இருந்துகொண்டே தான் இருக்கும் என்று சொல்லி, அவர்களிடம் இருந்து தனது மனைவியோடு பிரிகிறார்.

பின்னணியில் ஒலிக்கும் குரல் மூலம், அதற்குச் சில வருடங்கள் கழித்து, அங்கு வெள்ளையர்கள் வந்தனர் என்றும், அந்தச் செவ்விந்தியர்கள் பூண்டோடு அழிக்கப்பட்டனர் என்றும் நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் படம் முடிகிறது.

ஒரு சில படங்கள், அவற்றைப் பார்த்தபின்னரும், பல நாட்கள் நம் மனதை விட்டு நீங்குவதில்லை. அவற்றைப் பற்றிய சிந்தனை உள்ளே ஓடிக்கொண்டுதான் இருக்கும். இப்படம் அந்த வகையைச் சேர்ந்தது. கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் ஓடும் இந்தப்படம், ஒரு நிமிடம் கூட சலிக்கவே இல்லை. ஒரு கவிதை போன்ற இப்படம், வாழ்வின் உறவுகளைப் பற்றி, மனதைத்தொடும் முறையில் சொல்கிறது. இறக்க விரும்பிய ஒரு மனிதன் – வாழ்வில் எந்தப் பற்றுதலும் இல்லாத ஒரு மனிதன், தனக்கு முற்றிலும் வேறான ஒரு சூழ்நிலையில், வாழ்க்கையைக் கண்டுகொண்டான் என்ற கருத்தை, அவன் வாயிலாகவே நமக்குச் சொல்கிறது.

கெவின் காஸ்ட்னர் ஒரு அருமையான படைப்பாளி என்பதை, இப்படம் நிரூபித்தது. அவர் முதன்முதலில் இயக்கிய இப்படம், ஏழு ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இவற்றில், சிறந்த படம், இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை ஆகியன அடக்கம். காஸ்ட்னருக்கு, சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் கிடைத்தது.

இப்படத்தின் சிறப்பம்சம் என்னவெனில், படம் முழுக்கவே, செவ்விந்தியர்களின் சியோக்ஸ் மொழியை அனைவரும் கற்றுக்கொண்டு, அதிலேயே பேசி நடித்ததுதான். இன்னொரு முக்கியமான அம்சம், டன்பாருக்கும் அந்த ஓநாய்க்கும் உள்ள உறவு. யாருமற்ற அந்தப் பிராந்தியத்தில், இந்த இருவருக்குமே, அவர்கள் மட்டுமே நண்பர்கள். அந்த ஓநாய், கடைசிவரையில் டன்பாரை விட்டுப் பிரிவதே இல்லை. அவரை ராணுவம் கைதுசெய்து இழுத்துக்கொண்டு போகும்போது, அவர் பின்னாலேயே ஓடி வரும் அளவு, அது அவருடன் நெருங்கிப் பழகுகிறது.

இப்படத்தை, பார்த்துப் புரிந்துகொள்வதைவிட, உணர்ந்துதான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. ஹாலிவுட்டில் வெளிவந்த படங்களில், இது ஒரு அருமையான ஒன்று.

பி.கு:- படு சீரியஸாகப் போய்விட்ட நமது விமர்சனங்களை, ஜாலியாக ஆக்குவதற்கென்றே வருகிறார், ஒரு கேரக்டர். விரைவில். உஷார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு . . . . ?

இப்படத்தின் டிரைலருக்கு..

  Comments

10 Comments

  1. படு சீரியஸா ஒரு பதிவு போட்டா எப்படி இருக்கும்னு இப்போ புரிஞ்சிகிட்டேன் 🙂 . . . இனி கொஞ்சநாளுக்கு நோ சீரியஸ் படம் . . 🙂

    Reply
  2. On my way...

    Serious-a irukungradhukaaga nalla padam pathi reviews ezhudhaama vitradheenga.

    Nice revue.

    Reply
  3. @ on my way – உங்க கருத்துக்கு நன்றி.. நல்ல படம் பத்தி போடாம விடமாட்டேன் . .ஆனா, ஒரேஅடியா சீரியஸ் படம் பத்தி போடாம, அதா அப்பப்போ பண்ணுறேன் . . உங்க ஊக்கத்துக்கு நன்றி . .

    Reply
  4. ஹாலிவுட் பாலா சொல்லி கருந்தேள் ரொம்ப நாளா கண்ணை உறுத்திகிட்டே இருந்தது.உங்கள் இன்னொரு இடுகையான UNTOUCHABLE பார்த்ததுக்கப்புறம் கெவின் கோஸ்ட்னரை தேட ஆரம்பித்தேன்.

    Dancing with wolf க்கு ரசனையும்,பொறுமையும் தேவை என நினைக்கிறேன்.

    படங்கள் மொக்கைன்னு ஏக விமர்சனம் செய்யும் நண்பர்கள் நல்ல படங்களை அடையாளம் காட்டும் போதும் மவுனிப்பது ஏன் என்ற தெரியவில்லை.

    தொடர்கிறேன் உங்களை.

    Reply
  5. @ ராஜ நடராஜன் – நன்றி. இந்த வகைப் படங்கள், தனிமையில் அமர்ந்து ரசிக்கப்பட வேண்டியவை. இப்படம் நன்றாகவே இருக்கும். பொறுமை, ரசனை போன்ற விஷயங்கள் தேவைப்படும் சில படங்களை விடவே இப்படம் நன்றாகப் புரியக் கூடியது. இப்பதிவு ஆரம்ப கட்டத்தில் வந்ததால் மக்கள் எதிர்வினை செய்யவில்லை என்று நினைக்கிறேன். 🙂 . . இப்பொழுது நான் எழுதும் சீரியஸ் படங்களுக்கு எதிர்வினைகள் வருகின்றன. உங்கள் கருத்துக்கு நன்றி. இன்னமும் நிறையப் படங்களைக் கட்டாயமாக எழுதுவேன் . .:-)

    Reply
  6. நேற்று இரவு இந்தப் படத்தை ரொம்ப பொறுமையா பார்க்க ஆரம்பிச்சு மன வலியோடு டிவியை அணைச்சேன். மிகவும் சிறந்த திரைப்படங்களுள் ஒன்று. நீங்க மாத்திரம்தான் இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்கீங்கன்னு நெனைக்கறேன்.

    பகிர்விற்கு நன்றி..

    Reply
  7. நேத்திதான் ஆனந்த விகடன் web link மூலமா உங்க website அறிமுகம் ஆச்சு. நான் ஏற்கனவே பார்த்த படங்களோட விமர்சனம் படிச்சேன். ரெண்டு மூணு விமர்சனத்துக்கு அப்பறமா comment post பண்ணனும்னு தோனுச்சு, இதோ…
    நான் பார்க்காத பல படத்தோட விமர்சினம் இருக்கு. நேரம் கிடைக்கும் போது நிச்சயமா பார்க்கணும்.
    இந்த படம் பார்த்து ரெண்டு வருஷம் இருக்கும்னு நினைகிறேன். அப்ப படம் பார்க்க நேரமும் வாய்ப்பும் இருந்தது. நல்ல படம். எனக்கு இந்த மாதிரி period படம் பிடிக்கும். அந்த வருசையில இதுவும் ஒன்னு. நான் படம் பார்த்ததும் அந்த படத்துக்கு rating குடுக்கறது வழக்கம். அப்படி நான் குடுத்த rating 4 (Scale 1 – 10 , 1 – best , 10 – worst )

    கிட்டத்தட்ட ஒன்றை வருஷத்துக்கு முன்னாடி எழுதின விமர்சனத்துக்கு இப்ப நான் comment post பண்றேன். படிச்சிங்கன்ன reply பண்ணுங்க

    Reply
  8. This comment has been removed by the author.

    Reply
  9. பரவால்லையே . . விகடன்ல நம்ம சைட் லின்க்கெல்லாம் கூட குடுக்குறாங்களா . . ஆச்சரியம் தான் 🙂 . . இந்தப் படம் பத்தி.. வெல் . .எனக்கு ரொம்பப் புடிச்ச ஆங்கிலப் படங்கள்ல இது ஒரு முக்கியமான படம். கூடவே, காஸ்ட்னர். எனக்கு இதுவரை ரொம்பப் புடிச்ச ஹீரோக்கள்ல, காஸ்ட்னர்க்கே முதலிடம். 🙂 .. எவ்வளவு நாள் கழிச்சி கமெண்டு போட்டாலும் நான் பார்ப்பேன் 🙂 . . நன்றி

    Reply

Join the conversation