The Dark Knight – Bane

by Karundhel Rajesh July 5, 2012   English films

The Dark Knight Rises படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வரிசையில் தவிர்க்க முடியாத கதாபாத்திரமே Bane.

The Batman is Gotham City. I will watch him. Study him. And when I know him and why he does not kill, I will know this city. And then Gotham will be mine!
– Bane

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஸாண்டா ப்ரிஸ்கா தீவு. பீன்யா டுரோ (Peña Duro)சிறைச்சாலை. ஆறு வயது சிறுவன் ஒருவன், தனது இறந்துபோன தாயின் உடலை, சிறைக்காவலாளிகள் மலையுச்சியிலிருந்து கடலுக்குள் வீசுவதைப் பார்க்கிறான். அவனுக்கு அதன்பின் அங்கே துணை யாருமில்லை. அந்தச் சிறையிலேயே பிறந்து வளர்ந்தவன் அச்சிறுவன்.

முன்னதாக, ஒரு சில புரட்சியாளர்கள் ஸாண்டா ப்ரிஸ்கா அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, அந்த முயற்சி பலிக்காமல் முறியடிக்கப்பட்டதால் அரசினால் கைது செய்யப்பட்டு இந்தச் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். ஆனால், அதில் ‘எட்மண்ட் டாரன்ஸ்’ (Edmund Dorrance) என்ற புரட்சியாளர் மட்டும் தப்பியோடி விடுகிறார். அதனால் அந்தப் புரட்சியாளரின் கர்ப்பிணி மனைவியைக் கைதுசெய்து, தந்தையின் தண்டனையை அந்தப் பெண்ணுக்குப் பிறக்கப்போகும் குழந்தை அனுபவிக்கவேண்டும் என்று முடிவுசெய்து இந்தச் சிறையில் அடைத்துவிடுகிறார்கள். இதன்பின்னரே மேலே சொன்ன சம்பவம் நிகழ்கிறது.

இதன்பின்னர் அந்தச் சிறுவன், தனியாகவே வளர்கிறான். அவனால் முடிந்த அளவு புத்தகங்களை அந்த சிறைச்சாலைக்குள்ளேயே வெறித்தனமாகப் படிக்க ஆரம்பிக்கிறான். அந்த சிறைச்சாலையின் உடற்பயிற்சி சாலையில் ஒரு மிருகத்தைப் போல் பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறான். தனக்குத்தானே Bane என்ற பெயரையும் சூட்டிக்கொள்கிறான். Bane என்ற ஆங்கில வார்த்தைக்கு, ‘மரணம் விளைவிக்கக்கூடிய ஒன்று’ என்று பொருள். அவனது மனம் கெட்டிப்பட ஆரம்பிக்கிறது. பயம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறான் Bane. சிறுவயதிலேயே பேனின் உற்ற நண்பனாக விளங்குவது, அவனுடனே இருக்கும் ஒரு சிறிய கரடி பொம்மை. இந்த பொம்மையின் பின்னால், பேனின் கத்தியை ஒளித்துவைக்க ஒரு இடம் இருக்கும். இந்தக் கத்தியே அவனது ஆயுதம். சிறையின் சிம்மசொப்பனமாக ஆகிப்போகிறான். சிறையிலேயே Zombie , Bird மற்றும் Trogg என்ற மூவர் அவனுடைய நண்பர்களாகின்றனர்.

தன்னைவிடவும் இந்த Bane என்ற கைதிக்கு பிற கைதிகள் பயப்படுவதை வார்டன் கவனிக்கிறார். ஆகவே சிறைக்குள் உருவெடுக்கும் இந்தப் புதிய சக்தியை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்று முடிவுசெய்து, தனிமைச்சிறையில் பத்து வருடங்கள் பேனை அடைத்துவைக்கிறார். ஆனால், பத்து வருடங்கள் கழித்து வெளியே வரும் Bane, இன்னமும் மிகப்பெரிய அஞ்சும் சக்தியாக வெளிவருகிறான்.

இந்தச் சமயத்தில், பீன்யா டுரோ சிறைச்சாலையில் சில விஞ்ஞானிகள் வந்து இருந்துகொண்டு, சில பரிசோதனைகளை இந்தக் கைதிகளின் மீது நடத்துகின்றனர். கைதிகள் இறந்தாலும் கவலையில்லை என்பதால், அப்படி அவர்களால் கண்டுபிடிக்கப்படும் மருந்தே Venom என்பது. ஹார்மோன்களைத் தூண்டிவிட்டு, பலத்தை அதிகப்படுத்தும் ஒரு ஸ்டீராய்ட் இது. ஆனால் இதன் வீரியம் தாங்காமல் சில கைதிகள் இறந்துபோக, சிறையின் கொடூரமான மனிதனான பேனை இந்தப் பரிசோதனைக்கு செலக்ட் செய்கிறார் வார்டன். பேனின் உடலில் இந்த மருந்து செலுத்தப்படுகிறது.

சிறுவயதிலிருந்தே உடலையும் மனத்தையும் கெட்டிப்படுத்திக்கொண்ட பேனை இந்த மருந்தால் கொல்ல முடிவதில்லை. வெநூம் என்ற இந்த மருந்து, அவனது பலத்தை பலமடங்கு அதிகரிக்கிறது. ஆனால், மிகக்கடுமையான பக்க விளைவுகள் அவனது உடலில் நேர்கின்றன. இந்த மருந்தை ஒவ்வொரு பனிரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை இவனது மூளையில் ஏற்றிக்கொள்ளாவிட்டால், உடலெங்கும் வலி அவனைக் கொன்றே விடும். அந்த வலியாலேயே இன்னமும் வெறியனாக அவன் ஆகிவிடுவான். பேனின் தலையில் ட்யூப்கள் சொருகப்படுகின்றன.

இதன்பின், தானே மரணமடைந்ததாக நடித்து, இதனால் காவலாளிகள் இவனது உடலைக் கடலில் வீசும்போது தப்பித்து, தனது சகாக்களான Zombie, Bird மற்றும் Troggகுடன் வார்டனைக் கொன்றுவிட்டு அந்தச் சிறையில் இருந்து தப்பிக்கிறான் Bane. சிறையிலிருந்து தப்பித்தபின் எங்கு செல்வது? தனது சகாவான Birdடின் நகரமான கோதம் என்ற நகருக்குச் செல்ல முடிவெடுக்கிறான் பேன். இந்த நகரத்தைப் பற்றியும், நகரின் பேட்மேன் என்ற ஜந்துவைப் பற்றியும் சிறையில் இருக்கும்போதே பலவாறாக பேனிடம் இவன் சொல்லியிருக்கிறான். பேட்மேனைக் கொன்றால்தான் தன்னை அனைவரும் பணிவார்கள்; பயப்படுவார்கள் என்ற முடிவை எடுக்கிறான். ஆனால், அவசரப்படுவதில்லை. முதலில் பேட்மேன் யார் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் எதிரியுடன் சரியாகப் பொருத முடியும். இது Baneன்  முடிவு. ஆகவே, வெகுவிரைவில் திரும்பிவரப்போவதாக பேட்மேனிடம் சவால் விட்டுவிட்டு மறைகிறான் Bane. அதற்கு முன்னரே பேட்மேன் யாரையும் கொல்வதில்லை என்பதையும் அறிந்துகொண்டு பேட்மேனிடம் அதைப்பற்றிச் சொல்கிறான்.

இந்தக் கட்டுரையின் முதல் வரியில் கொடுத்துள்ள வசனமே பேன் பேசும் இறுதி வசனம். இத்துடன் அந்தக் கதை முடிகிறது.

இதுதான் பேன் அறிமுகமான Vengeance of Bane என்ற காமிக்ஸின் கதை.


இதன்பின் என்ன நடக்கிறது?

Knight Saga  துவங்குகிறது.

ஹார்வி டெண்ட் என்ற டூஃபேஸின் கதையை பேட்மேனின் அட்டகாசமான காமிக்ஸான The Long Halloween என்பதில் படிக்கலாம். அதைப்போலவே, பேனின் விரிவான சாகஸங்களை இந்த நைட்ஃஸாகாவில் படிக்கலாம்.

ஆர்க்ஹாம் அஸைலம். பேன் அதன் சுவர்களைத் தகர்ப்பது மூலம் அதனுள் அடைபட்டுக் கிடக்கும் வில்லன்களைத் தப்புவிக்கிறான். காரணம்? இந்த ஒவ்வொரு வில்லனையும் பிடிப்பதில் பேட்மேன் களைப்படையும்போது பேட்மேனை வீழ்த்தலாம் என்பதே. அதேபோல், ஜோக்கர், ஸ்கேர்க்ரோ, பாய்ஸன் ஐவி போன்ற பெரிய வில்லன்களும், Mad Hatter, Victor Zsasz போன்ற குட்டி வில்லன்களும் தப்பிக்கிறார்கள். ஒவ்வொருவராகப் பிடிக்கிறார் பேட்மேன். பேன் நினைத்ததுபோலவே அவரது எனர்ஜி வடிகிறது. மெதுவாக, மிக மெதுவாக பேட்மேனின் பின்னுள்ள உண்மைகளை ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்கிறான் பேன்.

Knigtsaga ஸீரீஸ், மொத்தம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. Knightfall – இரண்டு பாகங்கள் – Broken Bat (14 Stories), Who Rules the Night (11 Stories)
  2. Knightquest – இரண்டு பாகங்கள் – The Crusade (28 Stories), The Search (9 Stories)
  3. Knightsend (10 Stories)

இப்படி.

Knightfall ஸீரீஸின் Broken Bat கதைகளின் கடைசிக் கதையில்தான் இதுவரை பேட்மேன் கதைகளின் சரித்திரத்தில் நிகழ்ந்த முக்கியமான விஷயம் – ஒரு திருப்புமுனை – நிகழ்கிறது. பேட்மேன் யார் என்பதை அறிந்துகொள்ளும் பேன், மிகவும் களைப்போடு வீட்டுக்கு வரும் ப்ரூஸ் வேய்னை அடி துவம்சம் செய்துவிடுகிறான். Wayne Manor வீட்டின் அடியில் உள்ள குகையில், பேட்மேன் உடையணிந்திருக்கும் ப்ரூஸ் வேய்னை மயக்கமுறும்படி அடித்துவிட்டு, பேட்மேனின் முதுகெலும்பை உடைக்கிறான் பேன்! அதன்பின் Who Rules the Night ஸீரீஸின் முதல் கதையில், ஒரு மாடியிலிருந்து பேட்மேனை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கி எறியும் பேன், இனிமேல் கோதம் நகரின் தலையாய குற்றவியல் சக்கரவர்த்தி தான்தான் என்று கொக்கரிக்கிறான். அதன்பின் அப்படியே கோதமின் மிக பயங்கரமான வில்லனாக உருவெடுக்கிறான்.

அடிபட்டுக் கிடக்கும் பேட்மேன், தனக்கு அவ்வப்போது உதவும் ஸான் பால் வேலி என்ற அஸ்ரேல் (Jean-Paul Valley) என்பவனிடம் சிறிதுகாலம் பேட்மேனாக இருக்கச் சொல்லி சம்மதம் வாங்குகிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் முழுமையாக சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். ஆனால், இந்தப் புதிய பேட்மேனான அஸ்ரேல், தனது unpredictable மனநிலையால் பேட்மேனின் பெயரையே குலைக்கிறான். அதே சமயம், Knightfall ஸீரீஸ் முடியும் கடைசிக் கதையில் பேனை குற்றுயிராக அடித்துப்போட்டு விடுகிறான். அதே நேரத்தில், ப்ரூஸ் வேய்னுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் கின்ஸால்விங் மற்றும் தற்போதைய ராபினின் தந்தை ஜாக் ட்ரேக் ஆகிய இருவரும் கடத்தப்பட்டுவிட, கோதமை விட்டே இந்த இருவரையும் தேடி ப்ரூஸ் வேய்ன், ஆல்பர்ட்டை அழைத்துக்கொண்டு செல்கிறார்.

ஆக, இந்த முதல் பாக முடிவில், பேட்மேனாக அஸ்ரேல் வேடமிட, ப்ரூஸ் வேய்னோ கோதம் நகருக்கு வெளியே, ஐரோப்பாவில் கடத்தப்பட்டவர்களைத் தேடி அலைகிறார்.

இதன்பின் நடக்கும் நிகழ்ச்சிகளே Knightquest மற்றும் Knightsend ஆகிய இரண்டு பாகங்களில் விளக்கப்பட்டுள்ளன.

Bane என்ற இந்த வில்லனின் முழுமையான சித்தரிப்பு இந்த மூன்று பாகங்களில் விளக்கப்பட்டுள்ளது என்பதனாலேயே இவைகளைப் படித்தேன். அதனால்தான் இந்தக் கட்டுரை.


சரி. Bane என்பவன் The Dark Knight Rises படத்தில் எப்படிச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்?

பேட்மேன் கதைகளின் ஸ்பெஷல் விஷயம் பேட்மேன் அல்ல. அக்கதையில் வரும் வில்லன்களே. ஒவ்வொரு வில்லனுக்கும், படிப்பவர்களின் இதயத்தைப் பிளக்கக்கூடிய வகையில் ஒரு பின்னணிக் கதை உண்டு. அதைப் படித்தால், அந்த வில்லன் செய்யும் செயல்கள் மிகவும் நியாயம் என்றே தோன்றும். அப்படித்தான் பேனின் கதையும்.

Bane தான் இப்படத்தின் வில்லன் என்று முடிவு செய்யும்போது நோலனுக்கு பேனின் கதை தெரியாது. பேனின் உடல்வலுவுக்காக மட்டுமேதான் அந்தக் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்ததாக அவர் சொல்லியிருக்கிறார். ’பேட்மேனை  உடலளவிலும் மனதளவிலும் மிகக்கடுமையாகப் பாதிப்பவனாக பேன் இருப்பான்’ என்பது நோலனின் கூற்று. இரண்டாம் பாகத்தின் வில்லனான ஜோக்கருக்கும், மூன்றாம் பாகத்தின் வில்லனான பேனுக்கும் என்ன வித்தியாசம்? ‘ஜோக்கர், எப்போதும் அழிவை சிந்திக்கக்கூடியவனாகவும், மக்களை ஒரு விளையாட்டுப்பொருள் போல உபயோகிப்பவனாகவும் இருந்தான். ஆனால் Bane – பேனிடம் மிகத்தெளிவான ஒரு திட்டம் உண்டு. மிகக் கூர்மையான மூளை படைத்த ஒரு பூதம் அது’ என்பது நோலனின் கூற்று.

பேனாக நடிக்கும் டாம் ஹார்டி, இந்தக் கதாபாத்திரத்துக்காக 14 கிலோ எடையை ஏற்றியிருக்கிறார்.

The Dark Knight Rises படத்தில் பேனின் பங்கு என்ன?

படத்தின் கதைச்சுருக்கம், ஸெலினா கேய்ல் என்று அழைக்கப்படும் கேட்வுமனின் வருகையில் துவங்குகிறது. ஹார்வி டெண்ட் என்ற டூ ஃபேஸின் மரணத்துக்கான காரணத்தை தனது தலையில் போட்டுக்கொண்ட பேட்மேன், தலைமறைவாகி எட்டு வருடங்கள் ஆகின்றன. அப்போது கோதம் நகரத்தினுள் வரும் கேட் வுமன் செய்யும் சில செயல்களால் பேன் அந்த நகரத்துக்கு வருகிறான். அதனால் பேட்மேன் தனது தலைமறைவு வாழ்க்கையை விட்டுவிட்டு வெளியே வர நேர்கிறது. ஆனால்…………?

பேனின் காமிக்ஸ் கதையை மறந்துவிடாதீர்கள் நண்பர்களே. பேட்மேனின் முதுகை உடைத்த ஒரே வில்லன் அவன்தான்.

கூடவே, நோலனைப் பற்றியும் மறந்துவிடாதீர்கள். எத்தகையதொரு முடிவையும் எடுக்கக்கூடிய திறமை அவருக்கு உண்டு. ஆகவே படத்தில் ‘என்ன’ வேண்டுமானாலும் நடக்கலாம்.

  Comments

10 Comments

  1. அறிமுகம் செய்தார்க்கு நன்றி…

    Reply
  2. //பேட்மேனின் முதுகை உடைத்த ஒரே வில்லன் அவன்தான்.//

    இந்தப் பதிவிலேயே எனக்கு தெரிந்திருந்த ஒரே விஷயம் இது தான். படத்திலும் நோலன் இதை கட்டாயம் புகுத்தியிருப்பார். பேன் பற்றி தெரிந்து கொண்டதால் இனி டார்க் நைட் பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். 🙂 🙂

    Reply
  3. ஆகா பேட்மேனின் முதுகையே உடைத்து எறிந்து விட்டானா…//பேட்மேன் ENERGY குறைந்தால் தான் பேட்மேன் தாக்கமுடியும்//உண்மையில் ரொம்ப புத்திசாலியா இருப்பார் போல ட்ரைலர் பார்த்த உடனே உடம்பு தான் மண்டையில் ஒண்ணும் இருக்காது என நினைத்தேன் இருப்பதிலேயே இவன் தான் ரொம்ப அறிவாளி போல….எதுக்கு மண்டையில் ஏதையோ கட்டிகொண்டு அலைகிறான் என பார்த்தேன் இப்ப தான் தெரிது பயபுள்ள WICKNESS அது தான் என்று…பேட்மேன் எலும்பு உடையும் அளவிற்கு நோலன் படத்தில் வைக்க மாட்டார் என நம்புறேன்….

    Reply
  4. அர்னால்ட் டாக்டர் ப்ரீசாக நடித்த பேட்மேன் அண்ட் ராபின் தான் நான் பார்த்த முதல் பேட்மேன் படம். அதுவும் அர்னால்டுக்காக.. அதன் பின் கொஞ்சம் வளர்ந்ததும் பேட்மேன் படங்களில் பெரிதும் ஆர்வமில்லாமலேயே இருந்தேன்… நோலனின் டார்க் நைட் பார்க்கும் வரை…அப்புறம் இணையத்தில் தேடி தேடி காமிக்சிலும், அனிமேட்டட் சீரிசிலும் பார்த்து/படித்ததில் ரொம்பவும் பிடித்து போனது.. இப்போது LOTR போல பேட்மேன் சீரிஸின் அத்தனை Trivia க்களையும் தங்கள் கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளப்போவதில் மிகுந்த மகிழ்ச்சி. நோலன் நிச்சயம் Dark Knight Rises ல் பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்க்கின்றேன்.. 🙂 🙂 🙂

    குறிப்பு:War of The Rings மின்புத்தகம் பற்றி ஒரு தனிப்பதிவு எழுதிக்கொண்டு இருக்கின்றேன்..முடித்தவுடன் பகிர்கிறேன்… 🙂 🙂

    Reply
  5. ///பேட்மேன் எலும்பு உடையும் அளவிற்கு நோலன் படத்தில் வைக்க மாட்டார் என நம்புறேன்….//

    எனக்கு தெரிந்து நோலன் பேட்மேன் முதுகு எலும்பை உடைக்க வைக்க தான் சான்ஸ் இருக்கு … ஏன்னா ஜோக்கர்ர விட பேன்-ன பெரிய வில்லனா கட்டியாகனும்…

    Reply
  6. படம் வர்றதுக்குள்ள பேனைப்பத்தி எங்கேயோவது தேடிப் படிச்சுக்கனும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.. அதுக்கு தேவையே இல்லாம பண்ணிட்டீங்க.. தொடர் பிரமாதமாக போய்க்கொண்டிருக்கிறது!!

    Reply
  7. @ Vijayakumar Ramdoss, @செங்கதிரோன், @இரவுக்கழுகு,@ஹாலிவுட் ரசிகன், @dinesh, @JZ – மிக்க நன்றி. இன்னமும் பல விஷயங்கள் இந்தத் தொடரில் வர இருக்கின்றன.

    @Chinna malai – பானாறு முரடன் அல்ல. அவனது மூளையினால் பல காரியங்களை சாதித்துக்கொள்ளும் வில்லன் அவன். இதையும் நோலன் சிறப்பாகக் காட்டியிருப்பார் என்றே நம்புகிறேன்

    @திருவாரூரிலிருந்து சுதர்சன் – அவசியம் இன்னமும் பல சுவையான தகவல்கள் வர இருக்கின்றன. அவைகளை படம் வெளிவருவதற்குள் எழுதி விடுவேன் என்றே நம்புகிறேன். Let’s see

    @ VELAN – அது ட்ரெய்லர்லயே இருக்கு பாஸ். விரைவில் அதைப்பத்தி எழுதுவேன்

    Reply

Join the conversation