The Dark Knight – Epilogue

by Karundhel Rajesh July 4, 2012   English films

ஆக, சென்ற கட்டுரையில் சொல்லியிருந்தபடி Dark Knight Rises படத்தை முடித்தார் நோலன். Post – Production முடிந்து, தற்போது இறுதி பூச்சு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. படம் இந்த மாதம் இருபதாம் தேதி வெளியிடப்படுகிறது.

இனி?

நோலனின் பேட்மேன் ஸீரீஸ் முடிவடைந்துவிட்டதாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு திரைப்பட சீரீஸை இஷ்டப்படி வளைக்க முடியாது என்பது அவரது எண்ணம். மொத்தமே மூன்று படங்கள்தான். “இதன்பின்னாலெல்லாம் இந்தப் படங்களை வளர்க்க முடியாது. திரையில், காமிக்ஸைப் போலல்லாது, எந்தக் கதையுமே முடிந்தே ஆகவேண்டும். ஆகவே, இதுவரை சொல்லப்பட்ட கதைக்கு இந்த மூன்றாவது படம் ஒரு தெளிவான, இயல்பான முடிவாக அமையும்” என்பது நோலனின் கூற்று.

ஒருவேளை நோலனின் மனம் மாறுமா? தெரியாது. மாறலாம். மாறக்கூடும். ஆனால், அவரது இயல்பை வைத்துக் கணித்தால், இந்த சீரிஸில் நோலனின் பங்களிப்பு முடிந்துவிட்டதாகவே தோன்றுகிறது. இனிமேல் வருங்காலத்தில் ‘டெர்மினேட்டர்’ படங்களுக்கு நேர்ந்த அவலத்தைப் போல் வேறு யாராவது டண்டணக்கா இயக்குநர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த ஸீரீஸ் சொதப்பலாகத் தொடரலாம். ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் பணம் ஈட்ட இதைத்தவிர வேறு வழி ஏது?

இப்படங்களுக்குப் பிறகு நோலனின் எதிர்காலம்?

அது அட்டகாசமாகவே இருக்கிறது. அடுத்த நோலனின் ப்ராஜெக்ட் – ஹோவார்ட் ஹ்யூஸ் (Howard Hughes). நாமெல்லாம் ஸ்கார்ஸஸியின் இயக்கத்தில் 2004ல் ‘The Aviator‘ படத்தில் லியனார்டோ டி காப்ரியோவின் நடிப்பில் பார்த்தோமே – அதே கிறுக்குப் பிடித்த மில்லியனரின் கதை. ஆனால், நோலன் இக்கதையைப் பற்றிச் சொல்லியிருப்பது, இந்தப் படத்தைப் பற்றிய நமது எதிர்பார்ப்பை அதிகமாக்குகிறது – “ஹோவார்ட் ஹ்யூஸின் இளவயதில் நடந்த சம்பவங்களை மட்டுமே 2004ல் நீங்கள் பார்த்தீர்கள். அதன்பின் என்ன ஆனது என்பது உங்களுக்குத் தெரியவேண்டாமா? தனது பங்களாவில் ஒரே ஒரு சிறிய நாப்கினை மட்டும் தனது பிறப்புறுப்புக்களை மறைக்க உபயோகித்துக்கொண்டு, பல திரைப்படங்களை திரையிட்ட ஹ்யூஸ்; உணவின்மேல் மிகவும் எச்சரிக்கையாக இருந்ததால், ஒருமுறை பல ரெஸ்டாரன்ட்களை விலைக்கு வாங்கி, அவற்றில் இருந்து உணவு உண்ட ஹ்யூஸ்; தனது தலைமுடியையும் நகங்களையும் வருடத்தில் ஒரே முறை மட்டுமே வெட்டிக்கொண்ட ஹ்யூஸ்; இப்படிப்பட்ட பல விஷயங்களை நீங்கள் எனது இப்படத்தில் காணப்போகிறீர்கள்”.

அதற்கும் முன்பு, அமெரிக்காவின் மற்றொரு சூப்பர் ஹீரோவை ஆல்ரெடி தோண்டியெடுத்துவிட்டார் நோலன்.

சூப்பர்மேன்.

ஏற்கெனவே 2006ல் ப்ரையன் ஸிங்கரால்  இயக்கப்பட்டு, ‘Superman Returns‘ என்ற படம் வெளிவந்திருந்தது. முதலுக்கு மோசமில்லாத படம் அது. இப்படத்துக்குப் பின்னர், 2008ல் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், பல்வேறு காமிக்ஸ் எழுத்தாளர்களிடமிருந்து, இந்த சூப்பர்மேன் சீரீஸை மறுபடியும் முதலிலிருந்து துவக்குவதற்காக ஐடியாக்கள் கேட்டது. அப்போது ஒரு கோர்ட் தீர்ப்பு வெளிவந்து, வார்னர் பிரதர்ஸின் தலையில் இடியைப் போட்டது. என்னவெனில், 2011 வரை சூப்பர்மேன் படம் தொடங்கவில்லை என்றால், சூப்பர்மேனை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜெர்ரி ஸீகலின் குடும்பம், படத்தை உருவாக்கி, அதன்மூலம் அவர்களுக்கு இந்த உரிமைக்கான பணத்தை அளிக்காமல் காலம் தாழ்த்திக்கொண்டு இருப்பதாக வார்னர் ப்ரதர்ஸின் மேல் வழக்கு போடுவதற்கான அனுமதியே அது.

டார்க் நைட் ரைஸஸ் படத்தின் கதை விவாதத்தின்போது, கதையை எழுதியவர்களில் ஒருவரான டேவிட் கோயர், நோலனிடம் சூப்பர்மேனின் உருவாக்கத்தைப் பற்றிய ஒரு கான்ஸெப்ட் சொல்ல, அது நோலனுக்குப் பிடித்துப்போய், அதிலிருந்து அவரே ஒரு கதையை உருவாக்கிவிட்டார். இந்தக் கதையை வார்னர் ப்ரதர்ஸிடம் நோலன் அளிக்க, குஷியான அந்நிறுவனம் உடனடியாக சூப்பர்மேனின் சீரீஸை மறுபடியும் தூசிதட்டுவதாக அறிவித்தது.

இப்படி உருவான படம்தான் ‘Man of Steel‘. 2013 ஜூனில்  வெளிவர இருக்கிறது.

எனவே, நோலன் எப்பொழுதும் போல இப்பொழுதும் பிஸிதான்.

இந்தச் செய்தியோடு, இருபத்தொராம் நூற்றாண்டின் இணையற்ற இயக்குநர்களில் ஒருவரான க்ரிஸ்டோஃபர் நோலனைப் பிரிவோம். அவரது மூளை இன்னமும் பல்வேறு திரைப்படங்களுக்காக உழைக்க இருக்கிறது.

Adios, Friends. க்ரிஸ்டோஃபர் நோலன் பற்றியும், அவரது படங்கள் பற்றியும், பேட்மேன் கதாபாத்திரம் பற்றியும், அதன் உளவியல் பற்றியும் நான் எழுதிய (இண்டர்நெட்டிலிருந்து திரட்டிய) இந்த ‘Dark Knight‘ தொடரைப் படித்துமுடித்திருக்கும் உங்களுக்கும் எனது நன்றிகள். இந்த மினி தொடரை எழுதுவதற்காக மறுபடியும் அமர்ந்து ஒரே மூச்சில் Batman Begins, Batman: Gotham Knight மற்றும் The Dark Knight ஆகிய மூன்று படங்களையும் பார்த்த அனுபவம் அட்டகாசம். அதேபோல் பேட்மேனின் அத்தனை முக்கியமான காமிக்ஸ்களையும் படித்தேன். ஒரு இருண்ட உலகில் அடைபட்டுக் கிடக்கும் மனநோயாளியைப் போல் சில நாட்கள் மாறினேன். இத்தகைய அனுபவத்தின் சில துளிகளைத்தான் இந்தத் தொடரில் அவ்வப்போது எழுதி வந்தேன்.

மீண்டும் இதைப்போன்ற வேறொரு தொடரில் சந்திப்போம். படத்தை மறக்காமல் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று தெரிவியுங்கள்.

The End

  Comments

7 Comments

  1. Where is the link to previous posts regarding Dark Knight??

    Reply
  2. I really searched for the previous posts 🙂 and I realized this is a Non-linear post after reading the FB comments 🙂 Really good one and nice thinking 🙂

    Reply
  3. ஆகா நோலன் சூப்பர்மேன் தூசு தட்டி உள்ளாரா அப்போ அடுத்த சூப்பர் ஹீரோ படமும் ரெடி ஆனா அடுத்த வருஷம் தான் வரும்மா…பேட்மேன் படம் ரொம்ப எதிர்பார்ப்பில் உள்ளேன் உங்க விமர்சனம் அன்றே வர வேண்டும்…

    Reply
  4. என்னடாது… நான் படிக்காம ஒரு சீரிசே எழுதி முடிச்சுட்டாரா ராஜேஷ்-னு ஷாக்காயிட்டேன்… என்ன ஒரு கொலைவெறி….

    Reply
  5. இது ஒரு நான் லீனியர் தொடர் என்பதை முளையிலேயே கண்டுபிடித்த நண்பர்களுக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நல்லவேளை என்னை திட்டல 🙂

    Reply
  6. Man of Steel is directed by Snyder – not Nolan. Nolan is one of the three writers though.

    I loved the way you narrate and the details behind. Real Good work. Thank you very much for all the effort.

    Reply

Join the conversation