இன்றைய தினகரன் வெள்ளிமலரில் நம் கட்டுரை – டிஜிடல் சினிமா ப்ரொஜக்‌ஷன்

by Karundhel Rajesh April 19, 2013   Cinema articles

Hi Friends,

இன்றைய தினகரன் வெள்ளிமலரில், Digital Cinema Projection பற்றிய நமது கட்டுரை வந்திருக்கிறது. பக்கம் எண் 4ல் இருந்து 7ம் பக்கம் வரை, நான்கு பக்கங்களில் இந்தக் கட்டுரை இருக்கிறது. கட்டுரையை பதிப்பித்த திரு. சிவராமனுக்கு நமது நன்றிகள். இதோ கட்டுரை. கட்டுரை எஃபக்டில் படிப்பதற்காக, கீழே முழுக்கட்டுரையும் இருக்கிறது.

டிஜிட்டல் சினிமா ப்ரொஜக்‌ஷன்

உங்களுக்குத் திரைப்படங்கள் பிடிக்குமா? யாருக்குத்தான் பிடிக்காது என்கிறீர்களா? திரைப்படங்களை, வீட்டில் ஹோம்தியேட்டரில் சுற்றிலும் பாப்கார்னை அடுக்கி வைத்துக்கொண்டு ப்ளூரே டிஸ்க்கில் ஹாயாக இரவில் பார்ப்பது ஒருவகை. திரையரங்குக்கே சென்று ஜாலியாக விசிலடித்துக்கொண்டே பார்ப்பது மற்றொருவகை. இதில் நீங்கள் திரையரங்கில் படம் பார்ப்பதையே விரும்பும் பார்ட்டியா? சிறுவயதில் உங்கள் தந்தையோ அல்லது உறவினர்களோ உங்களைத் திரையரங்குக்கு அழைத்துச்சென்று முதன்முறையாக சினிமாவைக் காட்டியபோது உங்கள் உணர்வு எப்படி இருந்தது? சீட்டில் அமர்ந்துகொண்டு, தலைக்கு மேலே பாயும் வண்ணமயமான ஒளியைக் கண்டுரசித்திருக்கிறீர்கள்தானே? அந்த ஒளி பாய்ச்சப்படும் கண்ணாடி சூழ்ந்த ப்ரொஜெக்டர் அறை, அந்த அறையின் கண்ணாடி மீது விழும் சிறிய பிம்பம், நமக்கு எதிரே இருக்கும் பெரிய படுதாவில் வண்ணக் கலவைகளாக மாறும் விந்தை, சில ரீல்கள் சென்றதும் கறுப்பு வண்ணப் பின்னணியில் வட்டத்துக்குள் எண்கள் 4, 3, 2 ,1 என்று தோன்றி, ஒரு கணம் திரை இருண்டு, மறுபடியும் படம் தொடர்வதைக் கண்டிருக்கிறீர்கள் அல்லவா? இவையெல்லாம் நமது திரையரங்க அனுபவங்களில் மறக்க இயலாதவை.

முன்பெல்லாம் சினிமா ப்ரொஜெக்டரில் ஃபிலிம் ரோல்களை நுழைத்து, அவைகளில் ஒளியைப் பாய்ச்சி, லென்ஸை வைத்து அந்த ஃபிலிமில் இருக்கும் இமேஜை பெரிதுபடுத்தித் திரையிட்டு வந்தனர். எளிய முறையில் சொல்வதென்றால், ப்ரொஜெக்‌ஷன். ஸெலுலாய்ட் என்ற பொருளால் செய்யப்பட்ட ஃபில்ம்களில், ஒவ்வொரு ஃபில்மிலும் ஒவ்வொரு படம் – அதாவது இமேஜ் பதிவாகியிருக்கும். இந்த ஃபில்ம் ரோலை ப்ரொஜெக்டரில் நுழைத்து வேகமாக சுற்றவைத்து, வரிசையான பல இமேஜ்கள் ஒன்றின்பின் ஒன்றாக திரையில் ஒரு நொடிக்கு 24 தனித்தனி இமேஜ்கள் என்ற விகிதாச்சாரத்தில் நகர்ந்தால், நமது கண்ணின் இயல்பினால், அப்படங்கள் நகர்வதாக நமக்குத் தெரியும். அப்படி வரிசையாக இரண்டு மைல் நீளத்துக்கு ஒரு பெரிய ஃபில்ம் ரோலை ப்ரொஜெக்டரில் நுழைத்து இயக்கப்பட்டால், அதுவே ஒரு முழுநீளத் திரைப்படமாகிறது. இந்த முழுநீளத் திரைப்படம் என்பது, ரீல்கள் என்று சொல்லப்படும் தனித்தனி ரோல்கள் இணைக்கப்பட்ட ஒரு பெரிய ரோல்.

இதுதான் சென்ற நூற்றாண்டு முழுதும் பயன்படுத்தப்பட்டுவந்த திரைப்பட ப்ரொஜெக்‌ஷன் முறை. அனலாக் ப்ரொஜெக்‌ஷன் என்பது இந்த முறையின் பெயர்.

ஆனால், சென்ற நூற்றாண்டின் இறுதியில் டிஜிடல் ப்ரொஜெக்‌ஷன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையினால் அட்டகாசமான படங்கள் திரையரங்குகளில் சாத்தியமாயின. அனலாக் ப்ரொஜக்‌ஷன் முறையில், ஃபில்ம் ரோல்கள் பழுதாக வாய்ப்பு உண்டு. ஆதலால் நாள்பட்ட பிரதிகளில் திரையில் கோடுகள், ஓட்டைகள் முதலியன தெரிய அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த டிஜிடல் ப்ரொஜெக்‌ஷனால் எத்தனை காலம் ஆனாலும் ஒரே துல்லியத்துடன் திரைப்படங்கள் திரையிட முடியும். கண்னில் ஒற்றிக்கொள்ளும் அளவு தெளிவாகவும். இப்போதெல்லாம் பல திரையரங்குகளில் இந்த முறை அமல்படுத்தப்பட்டு விட்டது. அதனால் 3டி படங்களை மிகத்தெளிவாக நம்மால் கண்டு களிக்க முடிகிறது.

டிஜிடல் ப்ரொஜெக்‌ஷனுக்கு உதாரணமாக, இந்தியாவில், தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் QUBE என்ற லோகோ திரைப்படங்களின் ஆரம்பத்தில் காண்பிக்கப்படுவதை இதைப் படிக்கும் வாசகர்கள் அறிந்திருக்கலாம். இந்த QUBE என்பது டிஜிடல் சினிமாதான்.

இந்த டிஜிடல் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது தொண்ணூறுகளில் என்றாலும், இதற்கென்று சரியான முறைமைகள் வரையறுக்கப்பட்டு, ஒரே தரத்தில் உலகெங்கும் டிஜிடல் சினிமாக்கள் திரையிடப்பட்டது, 2002வில்தான். ஸ்டார் வார்ஸ் புகழ் ஜார்ஜ் லூகாஸின் Star WarsEpisode II: Attack of the Clones படமே இப்படி டிஜிடல் முறையில் திரையிடப்பட்ட முதல் படம் என்ற பெருமையைப் பெறுகிறது. இந்தப் படத்தையே எடுத்துக்கொண்டால், டிஜிடல் கேமராவிலேயே முழுதும் படமாக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு (ஏன்? ’அண்டவெளியின்’ என்று தற்போதைய ஃபேஷன்படி சொல்லலாம் என்றால், நமக்குப் புலப்படாத வேறு கிரகம் எதுவோ ஒன்றில் ஏற்கெனவே இப்படி டிஜிடல் படம் எடுத்திருந்து, அவர்கள் கண்ணுக்கு இந்த வரிகள் சென்று, அதனால் கோபம் அடைந்து உலகின் மீது போர்தொடுத்துவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது).

சரி. இந்த டிஜிடல் சினிமா என்பது எப்படி சாத்தியமாகிறது? திரையரங்கில் நாம் சென்று அமர்ந்ததும், நமக்குப் பின்னால் ப்ரொஜெக்டர் அறையில் நடப்பது என்ன?

கணினியின் ஹார்ட் டிஸ்க் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். டேட்டா என்ற செய்திகளை சேமித்து வைக்கப் பயன்படும் கருவி இது. இந்த ஹார்ட் டிஸ்கின் மிகத்துல்லியமான, நேர்த்தியானதொரு வடிவம் ஒன்றைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்படி ஒரு ஹார்ட் டிஸ்கில் திரைப்படத்தை சேமித்து, அதனை திரையரங்குகளில் திரையிடுவதே இந்த டிஜிடல் ப்ரொஜக்‌ஷன். இந்த டிஜிடல் ப்ரொஜெக்‌ஷனின் மூலம், படச்சுருள்களை சைக்கிள்களில் வைத்துக்கொண்டு சினிமா தியேட்டரில் சென்று கொடுப்பது வழக்கொழிந்தே விட்டது எனலாம் (இதனால் எழுந்த பாதகம் என்னவெனில், அவ்வளவாக பணம் இல்லாமல் தியேட்டரை நடத்திவந்தவர்கள் நொடித்தனர். மல்ட்டிப்ளெக்ஸ்கள் பெருகின. இன்னமும் இப்படி அனலாக் சினிமா ப்ரொஜெக்‌ஷன் மூலம் படம் திரையிடுவது பல திரையரங்குகளில் இருந்தே வந்தாலும், டிஜிடல் திரையரங்குகளிலேயே கூட்டம் அலைமோதுவதைக் காணலாம்). சைக்கிளுக்குப் பதில் இண்டர்நெட். தொலைத்தொடர்பின் வழியாக ஸாடலைட்களைப் பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இந்த டிஜிடல் சினிமாவை அனுப்பமுடியும். இன்னமும் விபரமாகச் சொல்லவேண்டும் என்றால், இந்த டிஜிடல் சினிமா திரையிடலில் சில அறுதி செய்யப்பட்ட முறைமைகள் இருக்கின்றன. DLP – Digital Light Processing என்பது இந்த டிஜிடல் திரையிடலில் மிகப்பிரபலமாக விளங்கும் முறை. இது தவிர, LCoS – Liquid Crystal on Silicon மற்றும் LCD – Liquid Crystal Display ஆகியவையும் பிரபலமான டிஜிடல் திரையிடல் முறைகளே.

இந்த DLP என்பது எப்படி வேலை செய்கிறது என்பது அடுத்த கேள்வி. எப்படி இத்தனை துல்லியமான படத்தை இந்தத் தொழில்நுட்பத்தால் வழங்க முடிகிறது?

டிஜிட்டல் திரையரங்குகளில் இந்த DLP தொழில்நுட்பம் இருக்கும் தியேட்டர்களில், முதலில் ப்ரொஜெக்டர் டிஜிட்டல் படத்தை மூன்று ஆப்டிகல் செமிகண்டக்டர்களுக்கு அனுப்புகிறது. இந்த மூன்று செமிகண்டக்டர்கள் எனப்படும் சிப்களுக்கே ஒரு பெயர் இருக்கிறது. DMD – Digital Micrommirror Device. இந்த ஒவ்வொரு DMD சிப்பும், ஒவ்வொரு முக்கியமான நிறத்துக்காக நேர்ந்து விடப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த மூன்று நிறங்களாவன – சிவப்பு, பச்சை மற்றும் நீலம். இந்த ஒவ்வொரு DMD சிப்பிலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் (பத்து லட்சம்) மிகச்சிறிய (மைக்ராஸ்கோபிக்) கண்ணாடிகளும் உண்டு.

ப்ரொஜெக்டரின் விளக்கிலிருந்து வரும் ஒளி, இந்த லட்சக்கணக்கான தக்குனூண்டு கண்ணாடிகளில் பிரதிபலிக்கப்படுகிறது. வெறுமனே பிரதிபலிக்கப்படுவது மட்டுமல்லாமல், மூன்று நிறங்களின் வெவ்வேறு சாத்தியக்கூறுகளில் எண்ணற்ற முறைகளில் இந்த ஒளி, கண்ணாடிகளின் மூலமாக உருவாக்கப்படுகிறது. சும்மா இஷ்டத்துக்கு வெவ்வேறு வண்ணங்கள் உருவாகிவிடாமல், அந்த குறிப்பிட்ட நேரத்தில் (வினாடியை 24காகப் பிரித்தால், அதில் ஒரே ஒரு பாகம்) எந்தப் படம் டிஜிட்டலாக ப்ரொஜெக்டரினுள் வருகிறதோ அதே படத்தின் வண்ணங்களே உருவாகின்றன. இதன்பின் இந்தக் கண்ணாடிகளின் வாயிலாக உருவான வண்ணங்கள், லென்ஸினால் பெரிதாக்கப்பட்டு திரையரங்கின் படுதாவில் காண்பிக்கப்படுகின்றன.

இந்த DLP என்ற தொழில்நுட்பத்தில், மொத்தம் 35 ட்ரிலியன் வண்ணங்களை உருவாக்க முடியும் என்பது ஒரு துணுக்குச்செய்தி. சராசரி மனிதக் கண்ணால் மொத்தம் 16 ட்ரிலியன் வண்ணங்களையே பிரித்தறிய முடியும் என்பது இன்னொரு துணுக்கு.

முதலிலெல்லாம் ஒரே ஒரு செமிகண்டக்டரை வைத்துக்கொண்டே வண்ணங்களில் விளையாடிய தொழில்நுட்பமான இந்த DLP, இப்போது மூன்று செமிகண்டக்டர்களை வைத்துக்கொண்டு மேற்சொன்னவாறு இயங்குகிறது.
இந்த DLP தொழில்நுட்ப டிஜிடல் ப்ரொஜெக்‌ஷன், உலகெங்கும் 40 நாடுகளில் மொத்தம் 60,000 ப்ரொஜெக்டர்களின் மூலம் மக்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது.

இதுதவிர, ஏற்கெனவே நாம் பார்த்த பெயர்களான LCoS மற்றும் LCD ஆகியன. இவைகள் பெரும்பாலும் அலுவலகத் தேவைக்கான ப்ரொஜெக்டர்களிலேயே பயன்படுகின்றன.

அடுத்த கேள்வி – இந்த டிஜிடல் ப்ரொஜெக்‌ஷனில் எதாவது வகைகள் இருக்கின்றனவா?

கண்டிப்பாக இருக்கின்றன. 2K மற்றும் 4K.

2K என்பது, (2048 X 1080) என்ற விகிதாச்சாரத்தில் நமக்கு திரைப்படங்களை ஒளிபரப்பும் ப்ரொஜெக்டர். இன்னமும் எளிதாக சொல்லப்போனால், அந்த ப்ரொஜெக்டரில் ஒளிபரப்பப்படும் படங்கள், 2048 X 1080 என்ற விகிதத்தில் தெளிவான இமேஜ்களை வழங்கும். இது வழக்கமாக நமது கணினியின் திரை ரெஸல்யூஷனான 1366 X 768 அல்லது 1280 X 720 ஆகியனவோடு ஒப்பிடப்பட்டால், மிக மிகத் தெளிவு என்று அர்த்தம். இந்த 2048 X 1080 ரெஸல்யூஷனில் விநாடிக்கு 24 அல்லது 48 ஃப்ரேம்கள் ஒளிபரப்பும் ப்ரொஜக்டரின் வகையே 2K.

4K என்பது, 4096 X 2160 என்ற விகிதாச்சாரத்தில் அமைந்த ரெஸல்யூஷனைக் குறிக்கும். இதில், விநாடிக்கு 24 ஃப்ரேம்களே ஒளிபரப்ப முடியும்.

தற்போதைய நிலவரம் என்னவென்றால், டிஜிடல் ப்ரொஜெக்‌ஷனில் உலகெங்கும் அதிக அளவில் உபயோகப்படுவது DLP with 2K அல்லது 4K தொழில்நுட்பமே.

அடுத்த முறை இத்தகைய மல்ட்டிப்ளெக்ஸ்களில் அமர்ந்திருக்கும்போது, படம் ஓடிக்கொண்டிருக்கையில் மேலே சொல்லப்பட்ட விஷயங்களை ஒருமுறை உங்கள் மனதில் அலசிப் பார்த்தால், அதுவே இந்தக் கட்டுரையின் வெற்றி. கண்களில் ஒற்றிக்கொள்ளும்படியான தரத்தில் டிஜிட்டல் கேமராவிலேயே திரைப்படங்கள் எடுக்கப்படும் காலம் இது. அதேபோல் அத்தகைய தரத்தில் அமைந்த படங்களை ஒளிபரப்ப திரையரங்குகளும் தயாராகிவரும் நேரமும் இதுதான். ஆகவே, இத்தகையதொரு தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தும் சினிமா ரசிகர்களாகிய நாமும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி அப் டு டேட்டாக இருத்தல் அவசியம் ஆகிறது. எனவேதான் இந்தக் கட்டுரை.

–கருந்தேள் கண்ணாயிரம்

பி.கு – மேலே படத்தில் காணப்படுவது நான் அல்ல. அது யாரோ வினய் என்ற நடிகராம்.

  Comments

3 Comments

  1. பி. கு. தான் மிகப் பிரமாதமான விளக்கம்…

    Reply
  2. Viruchigam

    இதை விட எழுத எவளவோ சினிமா “கலை” தொடர்பாக இருக்கும் போது தாங்கள் இதை எழுதியது ஏன்?,இதை எழுத தாங்கள் தேவை இல்லை,உங்கள் உலக சினிமா அறிவும் ,சினிமா ரசனையும் இதில் தெரியவில்லை,ஏதோ 9ம் ஆண்டு science புத்தகம் வாசித்தது போல இருந்தது.

    ஆனால் ஒன்று தெரிகின்றது ,தங்களுக்கு தொழில் நுட்ப்ப அறிவு இருக்கின்றது என்று,அதனால் ஒரு சிறு உதாரணம் -“ஒரு cinematographerஇன் திறமை என்பது அவன் பயன் படுத்தும் cameraவிலும் தங்கி இருக்கின்றது”-இத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதில் அதில் தொழில்நுட்ப்ப அறிவு வெளிப்பாடும் இருக்கும்,அவற்றுக்குரிய கலை உதாரணங்களால் தங்கள் கலை அறிவும் வெளிப்படும்,anyway நீங்கள் போட்ட உழைப்புக்கு பாராட்டுக்கள்,நான் தெரிந்துகொண்ட தகவல்களுக்காக நன்றிகள்.

    Just wanted to say,நான் theatreஇல் பார்த்த முதல் படம் “ஆளவந்தான்”,ofcourse as you said,வி cannot forget that experience.

    Reply
  3. மிகத் தெளிவான விளக்கம்.. டிஜிட்டல் ப்ரொஜெக் சநில் இவ்வளவு மேட்டர் இருப்பது தொழில்நுட்ப புரட்சி தான்.
    ஏனென்றால் எங்கள் ஊர் திருவண்ணமலையில் அருணாசலம் என ஒரு காலத்தில் டப்பா தியேட்டர் இருந்தது. சமிபத்தில் அது புதுபிக்கபட்டு 3டி ப்ரொஜெக்டர் பொருத்தினார்கள். தொடர்ந்து 3டிபடங்களாக போட்டு எங்களை சந்தோஷ படுத்தினார்கள். கடந்த வாரம் முதல் தியேட்டர் நிர்வாகம் திடிரென்ரு 2k என போட குழப்பமா இருந்தது. நான் 2k யில் இன்னும் படம் பாக்கவில்லை. இன்று இரவு கட்சியே போக போகிறேன். தகவலுக்கு நன்றி கருந்தேள்.
    அப்புறம் இரு டவுட்டு ………… 3டி ப்ரொஜெக்டர் எப்படி செயல்படுதுன்னு சொன்னா இன்னும் நல்லா இருக்கும். மேலும் இந்தக் கட்டுரையில் ரேசிவர் சைடில் எப்படி படம் கன்வெர்ட் ஆகுது மட்டும் சொன்னிங்க படம் எங்கிருந்து எப்படி சென்ட் பண்றங்கன்னு சொல்லவே இல்லையே நான் அந்த தகவலை ரொம்ப எதிர்பார்த்து படித்து கொண்டே வந்தேன். திடிரென்ரு முடித்து விட்டீர்கள் ..

    Reply

Join the conversation