‘ஜெண்டில்மேன்’ முதல் ‘ஐ’ வரை
’என் ஆசையெல்லாம் தி.நகரில் ஒரு டபுள் பெட்ரூம் ஃப்ளாட், ஒரு மாருதி 800, 25 லட்ச ரூபா பேங்க் பேலன்ஸ், அவ்வளவுதான் ஆரம்பத்தில் என் லட்சியமா இருந்தது. அந்தப் பொருளாதாரக் கனவுகள் எப்பவோ நிறைவேறிடுச்சு. ஆனா, சினிமாவில்… மைல்ஸ் டு கோ!. மனசைத் தொடுற படங்கள், சயின்ஸ் ஃபிக்ஷன் மாதிரியான முயற்சிகள் செய்யணும்னு என் கனவுகள் எக்கச்சக்கமா இருக்கு. ‘அழகிய குயிலே’ போல சாஃப்ட்டான கதையில் என் சினிமா வாழ்க்கை ஆரம்பிச்சிருந்தா, என் பாதை, பயணமே வேற மாதிரி அமைஞ்சிருக்கும். ‘முதல்வன்’ முடிஞ்சதும் கமலுடன் நான் ஆரம்பிக்க இருந்த ‘ரோபோ’ அப்போ சாத்தியப்பட்டிருந்ததுன்னா, வேற சில புதுக் கதவுகள் திறந்திருக்கும். ஹாலிவுட் போல வேர்ல்டு மார்க்கெட்டுக்கு, உலக சினிமானு கொண்டாடப்படற நல்ல முயற்சிகளுக்கு இன்னும் இன்னும் உழைக்க வேண்டிய விஷயங்கள், தேட வேண்டிய திசைகள்னு சாத்தியங்கள் இருக்கு. நான் என் வேலைகளை சின்ஸியரா செய்துட்டே இருக்கேன். எதிர்காலம் எனக்காக என்ன வெச்சுட்டிருக்கோ, பார்க்கலாம்!’ – இயக்குநர் ஷங்கர் – ஆனந்த விகடன் பேட்டி – 22nd October 2006 (சிவாஜி வெளியீட்டுக்குச் சில மாதங்கள் முன்னர்)
எனக்கு ஒரு சிறிய கர்வம் உண்டு. தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடந்த காலகட்டத்தில் அப்படி நடந்த ஒவ்வொரு மாற்றத்தையும் பார்த்தேதான் வளர்ந்திருக்கிறேன் என்பது. இப்போதைய காலகட்டத்தில் வளரும் யாரும் அப்படிச் சொல்லிக்கொள்ளமுடியாது. அப்படி ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தைப் பற்றிய என் கருத்துதான் இந்தக் கட்டுரை.
நான் பள்ளியில் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது ‘ஜெண்டில்மேன்’ வெளியாகியது (1993). அந்தக் காலகட்டத்தில் ஜெண்டில்மேன் என்மீது உருவாக்கிய தாக்கம் எக்கச்சக்கம். அந்தச் சமயத்தில் என் மாமாவின் இசைத்தட்டு நூலகத்தில் பல வருடங்கள் இருந்ததால் (ஆரம்பிச்சிட்டாண்டா) தமிழ்ப்படங்களைப் பற்றி நன்றாக எனக்குத் தெரியும். ஜெண்டில்மேனைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், அந்தக் காலகட்டத்தைப் பற்றி நன்றாகக் கவனித்துவிடுவோம். 1993யில் வெளிவந்த குறிப்பிடத்தகுந்த படங்களில் சில: எஜமான், மவராசன், கோயில்காளை, வால்டர் வெற்றிவேல், கலைஞன், உழைப்பாளி, அரண்மனைக்கிளி, ஆத்மா, வள்ளி, ஐ லவ் இண்டியா, கிழக்குச் சீமையிலே, ஏர்போர்ட் முதலியன (இன்னும் சில படங்கள் விட்டுப்போயிருக்கலாம்). அந்த வருடம்தான் விஜய் என்ற இளம் நடிகர் நடித்து செந்தூரபாண்டி வேறு வெளிவந்தது.
இத்தனை படங்களையும் நான் திரையரங்கில் பார்த்தேன். சில படங்களைத் தனியாக. சில படங்களை உறவினர்களுடன். எல்லாமே கோவையின் கேஜி காம்ப்ளக்ஸ், பாபா காம்ப்ளக்ஸ், கற்பகம் காம்ப்ளக்ஸ் போன்ற திரையரங்குகளில்தான். இந்த அத்தனை படங்களிலும் நான் மூன்று முறை திரையரங்கு சென்று பார்த்தது ஒரே ஒரு படம்தான். ஜெண்டில்மேன். காரணம் என்னவென்றால், அந்தப் படத்தின் உருவாக்கம் அத்தனை அட்டகாசமாக இருந்தது. அதைப்போன்ற ஒரு படத்தைத் தமிழில் இதற்கு முன்னர் நான் பார்த்து மலைத்துப்போயிருந்தது இணைந்த கைகள் படத்தில்தான் (அதற்கும் முன்னர் சத்யா. அதற்கு முன்னர் விக்ரம்). எட்டாவது படிக்கும் ஒரு மாணவனுக்கு ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்த அனுபவத்தைக் கொடுத்தார் ஷங்கர். (இங்கே சொல்லவேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், அந்தச் சமயத்தில் தமிழ்ப்படங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருந்ததைப் போல் ஹாலிவுட் படங்களும் எனக்கு அத்துப்படி. அவற்றையும் எக்கச்சக்கமாகத் தியேட்டரிலும் வீசீஆரிலும் பார்த்திருக்கிறேன். எனவே, எட்டாவது படிக்கும் ஒரு தற்குறி மாணவன், வாழ்க்கையில் அதுவரை 10-20 படங்களைப் பார்த்துவிட்டு இம்ப்ரஸ் ஆவதைப்போல் நான் ஆகியிருக்கவில்லை. தமிழ் நடிகர்களின் ஒவ்வொரு படமும், அந்தப் படத்தின் பாடல்களும், இசையமைப்பாளர்களையும் பற்றி இசைத்தட்டு நூலகம் மற்றும் பத்திரிக்கைகள் தயவால் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தேன்).
ஜெண்டில்மேனில் அப்போது (இப்போதும்) என்னைக் கவர்ந்தவைகளில் முதலிடம் அதன் பாடல்கள். ஒரே வருடம் முன்னர்தான் ரோஜா மூலமாக ஏ.ஆர். ரஹ்மான் என்ற இளைஞர் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தடாலடியாக அறிமுகம் ஆகியிருந்த காலகட்டம் அது. ரோஜாவுக்குப்பின்னர் மலையாள ‘யோதா’, அதன்பின்னர் சுரேஷ்மேனனின் ‘புதிய முகம்’ (திரையரங்கில் பார்த்திருந்தேன். பிடித்தது), ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழில் ரஹ்மானின் அடுத்த படமாக ஜெண்டில்மேன் வந்திருந்தது. அதற்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்னர்தான் இசைத்தட்டுகள் வாங்குவதிலிருந்து நாங்கள் காஸெட்கள் வாங்குவதற்கு மாறியிருந்தோம். அப்போது புதிய முகம், ஜெண்டில்மேன் ஆகியவையெல்லாம் அப்போதைய இங்லீஷ் ட்ரெண்ட்டான உப்பிய காஸெட் கவர்களில் வரத்துவங்கியிருந்தன. Magnasound அல்லது பிராமிட் நிறுவனங்களில்தான் பெரும்பாலான காஸெட்கள் வெளிவரும். ஜெண்டில்மேன் காஸெட் பிராமிட் நிறுவன வெளியீடு. ஜெண்டில்மேனின் பாடல்கள் எங்கள் இசைத்தட்டு நூலகத்தில் பிய்த்துக்கொண்டு ஓடின. பலரும் கேட்டது ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’ பாடல்தான் (’சிக்குபுக்கு ரயிலே’, இளைஞர்களின் விருப்பமாக இருந்தது). படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு முன்னரே பாடல்கள் நன்றாக அறிமுகம் ஆகியிருந்ததால் படமும் மிகவும் பிடித்துப்போனது. அப்போதே விகடன், குமுதம், கல்கி ஆகிய மூன்று பத்திரிக்கைகளையும் நாங்கள் வாங்கிக்கொண்டிருந்ததால் அவற்றில் வந்த பேட்டிகள், விமர்சனங்கள் ஆகியவையும் நன்றாகப் படித்திருந்தேன்.
ஜெண்டில்மேனைப் பற்றித் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ தினகரன் வெள்ளிமலர் தொடரில் நிறைய எழுதியிருக்கிறேன். விரைவில் புத்தகம் வெளிவரும்போது படிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், அது ஸிட் ஃபீல்ட் உதாரணமாகச் சொல்லும் திரைக்கதை வடிவத்தின் தமிழ் வடிவம். ஒரே கணம் கூட அலுக்காமல் முதலிலிருந்து இறுதிவரை படுவேகமாகச் செல்லும் படம். அப்போது மட்டுமல்ல – இப்போதும்தான். அக்காலகட்டத்தில் ஒரு revelation போல, ஒரு புதிய phenomenon என்றே ஜெண்டில்மேனைச் சொல்லலாம்.
அதற்கு அடுத்த வருடம் ‘காதலன்’ வெளிவந்தது (1994). வழக்கப்படி பாடல்கள் சூப்பர்ஹிட். இந்தப் படத்தைத் தனியாகச் சென்று பார்த்தது நினைவிருக்கிறது. படம் எனக்குப் பிடிக்கவில்லை. இந்தச் சமயத்தில் குமுதம் அரசு பதில்களில் ‘ஓவர் பில்டப் என்றால் என்ன?’ என்று ஒரு கேள்வியும், ‘சத்தமாகக் கேட்காதீர்கள். மீசைக்காரர் கோபித்துக்கொள்ளப் போகிறார்’ என்ற பதிலும் வந்திருந்தன. படத்தைத் தயாரித்திருந்தது கே.டி. குஞ்சுமோன்.
இதன்பிறகு எனது 11ம் வகுப்பில் வெளிவந்த ‘இந்தியன்’ படத்தைத் தியேட்டரில் நான் பார்க்கவில்லை. காரணம் படம் வந்ததுமே லோக்கல் கேபிள் டிவியில் வெளியாகிவிட்டது. அப்போதெல்லாம் மாலை நேரத்தில் டக்கென்று கேபிள் டிவியில் ‘இன்று இரவு ‘இந்தியன்’ பார்க்கலாம்’ என்று அறிவிப்பு வரும். ஆனால் இதுவரை நான் தமிழில் பார்த்த படங்களில் மறக்கமுடியாத இடம் இந்தியனுக்கு உண்டு. ஜெண்டில்மேனைப் போலவே படுவேகமான திரைக்கதை.
பின்னர் எனது கல்லூரி முதலாண்டின் இறுதியில் ‘ஜீன்ஸ்’. கல்லூரியில் அனைவரும் சென்று பார்த்த படம். எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத படம். இதன்பின்னர்தான் ‘முதல்வன்’ வெளியானது. இன்றுவரை ஷங்கரின் படங்களில் எனக்குப் பிடித்த மூன்றாவது மற்றும் இறுதிப்படம் இது (ஜெண்டில்மேன், இந்தியன் & முதல்வன்). பெரிய ஸ்டார்கள் இல்லாமல் கதையையும் திரைக்கதையையும் மட்டுமே நம்பி வெளிவந்த படம். திரையரங்கை விட்டு வெளியேறும்போது அன்று இருந்த சந்தோஷமும் நிம்மதியும் நன்றாக நினைவிருக்கிறது (ஜெண்டில்மேனில் இருந்து அந்தப் படம் வரையில் நான் கவனித்திருந்த இன்னொரு விஷயம் – ரோஜா படத்திலிருந்து மணி ரத்னமும் ஷங்கரும் ஒரே கதாநாயகியை மாற்றி மாற்றித்தான் தங்கள் படத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை. நக்மா & ஹீரா தவிர).
இதன்பின் வெளிவந்த எந்த ஷங்கர் படமும் அந்த உணர்வைத் துளிக்கூட எனது மனதில் அதன்பின் எழுப்பவில்லை. பாய்ஸில் இருந்து எந்திரன் வரை. நான் ஏற்கெனவே சொன்னதுபோல், கல்லூரி படிக்கும்போதுதான் பல படங்களைப் பார்க்க ஆரம்பித்து அதனால் விளைந்த தமிழ்ஃபோபியா இல்லை இது. பள்ளியில் படிக்கும்போதே பல்வேறு இங்லீஷ் மற்றும் தமிழ்ப்படங்களைப் பார்த்திருந்தவன் நான். அப்போதே படங்களைப் பற்றிச் சுருக்கமாக எழுதி அந்த டிக்கெட்டுடன் சேர்த்து ஒட்டிவைப்பது என் வழக்கம். எனவே என் ஏமாற்றத்துக்குக் காரணம் ஷங்கரின் படங்களின் predictable தன்மையும், மெல்ல மெல்லத் திரைக்கதையின் மேல் இருக்கும் நம்பிக்கை ஷங்கரை விட்டு விலகி அவர் ஒரு brandஆக மாறிவிட்டதும்தான் காரணம்.
கொஞ்சம் விபரமாகப் பார்க்கலாம்.
ஜெண்டில்மேன் பார்த்தவர்கள் யோசித்துப் பாருங்கள். படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த ரயில் துரத்தல் எப்படி இருந்தது? சீரான இடைவெளியில் படத்தில் action காட்சிகள் உண்டு. அவற்றின் நடுவே நிஜமாகவே வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் நகைச்சுவை உண்டு. கூடவே, ஒவ்வொரு காட்சியிலும் மெல்ல மெல்ல விறுவிறுப்பைக் கூட்டும் சஸ்பென்ஸும் உண்டு. போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர்நம்பி (சரண்ராஜின் அட்டகாசமான கதாபாத்திரங்களில் ஒன்று) ஒவ்வொரு படியாகத் தாண்டி ஹீரோவைப் பற்றிக் கண்டுபிடிக்கும் க்ளூக்கள், மிகவும் விறுவிறுப்பான இடைவேளை, அதன்பின் தொடரும் actionகள், போலீஸுக்கும் அர்ஜுனுக்கும் நடக்கும் விளையாட்டு (பழனி சீக்வென்ஸ்) என்று போகும் கதையின் கச்சிதமான இடத்தில் ஃப்ளாஷ்பேக் வரும். பின்னர் முடிவு. இது உண்மையில் மிகவும் பரபரப்பான கட்டமைப்பு. ஜெண்டில்மேனை அவசியம் திரைக்கதைக்கான உதாரணமாகக் கொள்ளமுடியும். அதைத்தான் விபரமாக எனது தினகரன் தொடரில் எழுதியிருக்கிறேன்.
அடுத்த action படமான ‘இந்தியன்’ படத்தை எடுத்துக்கொண்டால், அதிலும் திரையரங்கில் நுழைந்ததும் நம்மைப் பரபரப்புக்குள்ளாக்கும் ஆரம்பம் உண்டு. இந்தியன் தாத்தாவின் அறிமுகத்தோடு முடியும் காட்சி அது. பின்னர் போலீஸ் அதிகாரிகள் (நாசரின் குரலுடன் நெடுமுடி வேணு) இந்தியன் தாத்தாவின் கையெழுத்தையும் வர்ம அடிகளையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு படியாக அவரைக் கண்டுபிடிக்கும் காட்சிகள். ஜெண்டில்மேனைப்போலவே இதிலும் சரியான இடத்தில் வரும் ஃப்ளாஷ்பேக், அந்த ஃப்ளாஷ்பேக்கில் படுவேகமாக நகரும் காட்சிகள், இடையிடையே வரும் நகைச்சுவை மற்றும் பாடல்கள் என்று இந்தியன் ஷங்கரின் கச்சிதமான – 100% வெற்றியடையும் action பட ஃபார்முலாவை அழுத்தமாக நிரூபித்தது. கதாநாயகன் கமல்ஹாஸனின் குறுக்கீடுகள் இதில் இருக்காது. முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை இது ஒரு ஷங்கர் படம் மட்டுமே. இப்போது பார்த்தாலும் நன்றாக இது புரியும்.
இதன்பின் வந்த அடுத்த action படம் – முதல்வன். என்னைப் பொறுத்தவரை ஜெண்டில்மேன் மற்றும் இந்தியனைவிடவும் கச்சிதமான, விறுவிறுப்பான படம் இது. இதன் ட்ராஃபிக்ஜாம் காட்சியைத்தான் எனது திரைக்கதை வகுப்புகளில் (பிற படங்களின் காட்சிகளோடு) உதாரணமாக நான் சொல்வது வழக்கம். படமே திரைக்கதை அமைப்புக்கு ஒரு சிறந்த உதாரணம்தான். ஷங்கரின் படங்களில் எத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் ஆடியன்ஸை உள்ளே இழுத்துக்கொள்ளும் படம் இதுதான் என்பது என் கருத்து. எந்தப் படைப்பாளிக்கும் வரும் க்ரியேட்டிவிடியின் உச்சம் ஷங்கருக்கு இந்தப் படத்தில் இருந்தது என்றே சொல்வேன்.
இதற்குப்பின் வெளிவந்த படங்களில் ஷங்கரின் திரைக்கதைகள் ஏன் மிகவும் predictableஆக மாறிவிட்டன?
’அந்நியன்’ மற்றும் ‘சிவாஜி’ ஆகிய action படங்களில் ஜெண்டில்மேன் மற்றும் இந்தியனின் அதே டெம்ப்ளேட்டையே ஷங்கர் பின்பற்றியதுதான் பெரிய காரணமாக எனக்குப் படுகிறது. அதேபோல், அந்நியன் வெளிவந்தது, ஜெண்டில்மேன் வந்து பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்னர். இதற்குள் ஷங்கரின் ’விறுவிறுப்பான திரைக்கதை’ என்ற பிரம்மாஸ்திரம் வலுவிழந்துவிட்டது. இருந்தாலும்கூட ஓரளவு ‘முதல்வன்’ ஷங்கரின் வீச்சு அந்நியனில் இருந்தது. ஆனால் அதேவகையிலான சோக ஃப்ளாஷ்பேக் (அதிலும் அதே ‘லாலி லாலிலோ’ பின்னணி இசை), அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் ஹீரோ, அதைத் தொலைக்கட்சியில் பார்த்துவிட்டு ஹீரோவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் மக்கள், ஹீரோவைப் பார்த்ததுமே தடாலடியாகத் திருந்திவிடும் சமுதாயம் (’இந்தியன் தாத்தா வெச்சாரில்ல ஆப்பு’ என்ற வசனம் இந்தக் காட்சியில் உங்கள் காதில் ஒலித்தால் நீயும் என் நண்பனே) ஆகியவையெல்லாம் சேர்ந்து அந்நியனை என் நினைவில் இருந்தே அழிந்துவிடும்படி செய்துவிட்டன. அந்நியனில் தேறியவை நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் பாடல்கள் என்றே சொல்வேன். இன்னொரு விஷயம் – ஜெண்டில்மேன், இந்தியன் மற்றும் முதல்வன் என்ற மூன்று மிகப்பெரிய சாதனைகளைச் செய்த ஷங்கர், அவற்றைவிடவும் தரத்தில் குறைந்த அந்நியன் படத்தை வெளியிட்டபோது நானும் எனது நண்பனும் ‘ஷங்கரின் சரக்கு காலியா?’ என்று நீண்டநேரம் விவாதித்தோம். அப்போது நாங்கள் ஒருசேர எடுத்த முடிவு – அடுத்த படத்தைப் பார்த்துவிட்டு முடிவெடுப்போம் என்பது. அப்போதுதான் ‘சிவாஜி’ வந்தது. எங்கள் கருத்தை உறுதி செய்தது.
சிவாஜி படம் வரும் சமயத்தில் ஷங்கர் ஒரு மிகப்பிரபலமான Brand nameஆக மாறியாயிற்று. ஷங்கர் படங்கள் என்றால் விற்கும் என்ற நிலை வந்தாயிற்று. இதனாலேயே தானே உருவாக்கிய ஒரு வலைக்குள் ஷங்கர் விழுந்துவிட்டார் என்று தோன்றியது. ஜெண்டில்மேன், இந்தியன் & முதல்வன் பார்த்தவர்கள் வெளிப்படையாக யோசித்துப் பாருங்கள். சிவாஜி ஒரு ஷங்கர் படமா? இதனால் ஷங்கர் அப்படிப்பட்ட படங்கள்தான் எடுத்தாகவேண்டும் என்றெல்லாம் நான் நிபந்தனைகள் விதிக்கவில்லை. ஆனால், அப்படிப்பட்ட படங்கள் – நட்சத்திரங்களை நம்பாமல் திரைக்கதையை மட்டும் நம்பி ஆடியன்ஸைத் தியேட்டரில் கட்டிப்போட்ட படங்கள் – எடுத்த ஷங்கர் சிவாஜியை எப்படி எடுத்தார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. ஜெண்டில்மேன், இந்தியன் மற்றும் முதல்வன் ஆகிய படங்கள் எந்த நடிகர் நடித்திருந்தாலும் நன்றாக ஓடியிருக்கும் என்பதில் எனக்குக் கொஞ்சம்கூட சந்தேகமே இல்லை. ஆனால் சிவாஜி அப்படியா? சிவாஜியில் வேறு யாரைப் போட்டிருந்தாலும் அது ஓடியிருப்பது சந்தேகம்தானே? யோசித்துப் பாருங்கள். அதுவேதான் எந்திரனுக்கும் பொருந்தும். சிவாஜியும் எந்திரனும் ரஜினி படங்கள். அவை ஷங்கரின் படங்கள் அல்ல.
இப்போதைய காலகட்டத்தில் ஷங்கர் ஒரு படம் எடுக்கிறார் என்ற செய்தி வந்தாலே அவசியம் கோடிகளில் அவருக்கு முதலீடுகள் கிடைக்கும் என்பதில் யாருக்கும் கேள்விகள் இருக்கமுடியாது. அந்தக் கோடிகளை வைத்துக்கொண்டு ஷங்கர் எப்படிப்பட்ட திரைக்கதைகள் எழுதுகிறார் என்பதை அந்நியனும் சிவாஜியும் எந்திரனும் எளிதில் புரியவைக்கின்றன (’நண்பன்’ ரீமேக் படம் என்பதால் கணக்கில் இல்லை). தொண்ணூறுகளில் அதிரடியாகத் தனது திரைக்கதைகளை மட்டுமே நம்பிக் களத்தில் இறங்கி சிக்ஸர்கள் அடித்துத் தள்ளிய ஷங்கரைக் கடந்த பத்து வருடங்களாகக் காணவில்லை. எங்கேயோ தொலைந்துபோய்விட்டார். மறுபடி வருவாரா என்பதும் புரியவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘ஐ’ டீஸரைப் பார்த்தால் இனிமேல் ஷங்கர் தொலைந்துபோன இடத்தில் இருந்து திரும்பி வரவே மாட்டார் என்றே தோன்றுகிறது. டீஸரை மட்டும் பார்த்துவிட்டு விமர்சிப்பது தவறுதான். ஆனாலும், டீஸரில் எங்கு பார்த்தாலும் பிரம்மாண்டம், மேக்கப், கோடிகளில் உருவாக்கப்பட்ட செட்கள் ஆகியவை மட்டும்தான் தெரிகின்றன. பழைய ஷங்கரின் ஒரே ஒரு அடையாளம் கூட எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. ஒருவேளை படம் அப்படி இல்லாமல் போகலாம். நன்றாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதைத்தான் ஷங்கரின் track record காட்டுகிறது.
இதில் இன்னொரு விஷயம் – சமீபகாலமாகப் பிரபல படங்களைப் பற்றி ஏதேனும் சொன்னால், ‘முடிந்தால் படம் எடுத்துக் காட்டு. அப்புறம் பேசலாம்’ என்ற புளித்துப்போன கூப்பாடு அதிகமாகக் கேட்கிறது. காரணம் அந்தக் கதாநாயகர்களின் வெறியர்கள். இவர்கள் யார் என்று கவனித்தால், மேலோட்டமாக ஏதேனும் சில படங்கள் மட்டுமே பார்த்துவிட்டு, சினிமாவில் என்னென்ன நடந்திருக்கிறது என்பதிலெல்லாம் எந்த அறிவும் இல்லாமல் வெறியேறிக் கத்தும் நபர்கள். இந்தக் கட்டுரையைப் பார்த்துவிட்டு அப்படி யாராவது கத்தினால், அவர்களுக்கு என் பதில் – ‘போய் ஜெண்டில்மேனில் இருந்து எந்திரன் வரை ஷங்கரின் படங்கள் அத்தனையையும் அட்லீஸ்ட் இரண்டு முறையாவது பார்த்துவிட்டு வா’ என்பதாகத்தான் இருக்கும். இந்தப் படத்துக்கும் அப்படி விக்ரமின் இரண்டுவருடகால உழைப்பைப் பற்றி அப்படிப்பட்ட கருத்துகள் கேட்கின்றன. எனது கருத்து – விக்ரமின் dedication பற்றி இங்கே பேச்சே இல்லை. அவரது உழைப்பை நான் குறையே சொல்லவில்லை. ஆனால் ஒருவேளை படம் ஷங்கரின் track recordபடி இசை, ஒளிப்பதிவு, செட்கள், பிரம்மாண்டம் ஆகியவற்றிலேயே நம்பிக்கை வைத்து, திரைக்கதையில் கோட்டைவிடுமானால்- சிவாஜி, எந்திரன் மற்றும் அந்நியன் போல மிகவும் predictableஆன படமாக இருக்குமானால் – அதில் இரண்டு வருட விக்ரமின் கடின உழைப்புக்கு மரியாதை இல்லை என்றுதான் நான் சொல்வேன்.
இந்தக் கட்டுரையின் நோக்கம், மூன்று அட்டகாசமான படங்களைக் கொடுத்த ஷங்கரைப் பற்றிப் பார்ப்பதுதான். அவற்றின்பின் தான் உருவாக்கிய பொறிக்குள் சென்று மாட்டிக்கொண்டுவிட்ட ஷங்கர் மறுபடி பழைய நபராக வெளியே வரவேண்டும் என்ற ஒரு ரசிகனின் ஆதங்கமாக(வும்) இதை எடுத்துக்கொள்ளலாம். தமிழில் மிக அரிய இயக்குநர்களே ஒரு குறிப்பிட்ட பாணியை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படித் தனக்கென்று ஒரு பிரத்யேகமான பாணியை உருவாக்கியவர் ஷங்கர். ஆரம்ப காலத்தில் இருந்து அவரது எதேனும் ஒரு பாடலில் ஸிஜி இருக்கும். (ஜெண்டில்மேன் – சிக்குபுக்கு ரயிலே, காதலன் – முக்காலா முக்காபுலா, இந்தியன் – மாயா மச்சிந்திரா, ஜீன்ஸ்- கண்ணோடு காண்பதெல்லாம், முதல்வன் – முதல்வனே, பாய்ஸ் – எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேணுமடா). அதேபோல் ஒரு ஜாலியான பாடல், ஒரு மெலடியான டூயட், ஒரு சரித்திர டூயட், ஒரு மாடர்ன் டூயட், ஒரு குத்துப்பாட்டு என்றே இதே வரிசையில் ஐந்தே பாடல்கள்தான் அவரது படங்களில் ஆரம்பத்தில் இருந்தே இடம்பெறும். அவரது அந்தப் பாணியை அவரே நண்பன் படத்தில் ‘அஸ்க் லஸ்க்’ பாடலில் கிண்டலடித்திருப்பார். அதில் கெட்டப்கள் மாறும்போது வரும் டைட்டில்கார்டுகளில் இதைக் காணலாம். இதெல்லாமே முதல்வனோடு முற்றிலும் காணாமல் போய்விட்டன. அவரது ஒரு ஸிஜி பாணி போய், படமே ஸிஜியில் மூழ்கி அவரது திரைக்கதைகளின் தனித்துவம் பறிபோய்விட்டது என்பது என் கருத்து.
ஆனால் உலகில் உள்ள கமர்ஷியல் இயக்குநர்களில் பலரை ஆராய்ந்து பார்த்தாலும், இதே பிரச்னை அவர்களுக்கும் இருந்தது தெரிகிறது. பழைய நபராக அவர்களின் திரைப்பட வரலாற்றில் மீண்டு அவர்கள் வந்ததே இல்லை. தமிழில் மிகவும் சமீபமாக அப்படி ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. பார்த்திபன் தன்னை முற்றிலும் மாற்றியமைத்துக்கொண்டு மறுபடியும் முதலிலிருந்து ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் மூலமாக இரண்டாம் இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறார். அப்படி ஷங்கரின் இரண்டாம் இன்னிங்ஸாக எந்தப் படம் அமையும் என்று காத்துக்கொண்டிருக்கிறேன். உலக அளவிலேயே அப்படி நடந்திருப்பது மிகமிகமிக அரிய சில இயக்குநர்களுக்குத்தான் என்றாலும், தன்னைத்தானே ஒருமுறை சோதித்துக்கொண்டு ஷங்கர் அப்படி மீண்டு வந்தால் தமிழ்ப்படங்களுக்கு நல்லது. அப்படி இல்லாமல் அந்நியன், சிவாஜி, எந்திரன் போன்ற படங்களையே கொடுத்துக்கொண்டிருந்தால் ஷங்கரின் மீது இருக்கும் மரியாதையை ரசிகர்கள் குறைத்துக்கொள்வதற்கு ஷங்கரே காரணமாகிவிடக்கூடும்.
உங்களுக்குப் பிடித்த ஒரு நபர் திடீரென்று வரிசையாக சொதப்பிக்கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பேசாமல் இருப்பீர்களா அல்லது அவர் மீண்டு வரவேண்டும் என்று நினைப்பீர்களா? தன்னைச் சுற்றியும் உள்ள போலியான ஒளிவட்டத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு மறுபடியும் முதலிலிருந்து ஷங்கர் தனது இரண்டாம் இன்னிங்ஸைத் துவங்கவேண்டும் என்பது என் ஆசை. அப்போது பழைய ஷங்கரின் ஸீட் நுனி action படங்கள் ரசிகர்களுக்கு மறுபடி கிட்டைக்கலாம். கிடைக்கும் என்றே நம்புகிறேன்.
இத்தகைய எண்ணத்தோடு ‘ஐ’ படத்துக்காகக் காத்திருக்கிறேன். படம் எனக்குப் பிடித்திருந்தால் மிகவும் மகிழ்வேன்.
பி.கு
1. ஷங்கரின் வளர்ச்சிக்குக் காரணம் சுஜாதாதான். அவர் இல்லாததால்தான் ஷங்கர் இப்போதெல்லாம் டல்லடிக்கிறார் என்ற கருத்துகளெல்லாம் செல்லாது. அது உண்மை என்றால் ஜெண்டில்மேன் படத்தைப் போய் இன்னொருமுறை பார்க்கவும்.
2. சிவாஜி பாக்ஸ் ஆஃபீஸில் எக்கச்சக்கமாக சம்பாதிக்கவில்லையா? எந்திரன் சம்பாதிக்கவில்லையா? என்றெல்லாம் கேள்வி எழுப்பும் நபராக நீங்கள் இருந்தால், ‘Twilight Saga’ போன்ற படங்களைப் பார்த்து உய்யப் பரிந்துரைக்கிறேன்.
முதல்வன் படத்திலேயே பாடல்களில் தேவையில்லாத பிரமாண்டம் இருந்ததாக உணர்ந்தேன். அந்நியன் பார்த்தப்பிறகு நான் நண்நண்பர்களிடம் கூறியது ஷங்கர் பிரமாண்டம் என்ற மாயைக்குள் சிக்கிக்கொண்டார்.
Yes boss. you are right
ரஜினியின் தீவிர ரசிகனாக இருந்தாலும் சிவாஜி எனக்கு பிடிக்கவில்லை காரணம் திரைகதை தான். உங்களைப் போல் அலசி ஆராயும் திரைகதை உத்தி எனக்கு தெரியாது என்றாலும் அதில் ஷங்கர் கோட்டை விட்டுள்ளார் என்பது மட்டும் புரிந்தது. இருந்தும் அந்த எம்.ஜி.ஆர் போர்சன் அட்டகாசம்.. முழுக்க முழுக்க ரஜினியின் தாண்டவம்.. எந்திரம் கேட்கவே வேண்டாம் இரண்டாம் பாதி கிட்டத்தட்ட பொம்மைப் படம்.. ஷங்கர் என்ற பிராண்ட்-காக பார்த்துத் தொலைய வேண்டியது தான் 🙂
//இரண்டாம் பாதி கிட்டத்தட்ட பொம்மைப் படம்// – எனக்குப் படமே அப்படித்தான் இருந்திச்சி 🙂
மேக்கப்பில் ஐ மிரட்டும் என்கிறார்கள். பார்வையாளர்களின் நுண்ணறிவை அல்லது நுண்ணறிவே இல்லாத பார்வையாளர்களை அழித்துவிடும் நோக்கம்… ஹாலிவுட்டில் துக்கடா படத்தைப் பார்த்தாலே தெரியும் மேக்கப் அங்கே பெரிய விஷயமில்லை. ஆனால் ஒரு துக்கடா ஹாலிவுட் படத்தில் மிகக் கச்சிதமாக திரைக்கதை, வழ்க்கப்படியோ, வழக்கத்தை மீறியோ இருக்கும்… ஒரு உதாரணத்திற்கு ஹன்ஸல் அண்ட் கீரிட்டல் என்ற படம் சென்ற வருடம் வந்திருந்தது. அந்த திரைப்படத்தை கவனித்தால், பெரிய கதை எதுவும் கிடையாது, மிக சாதாரணமான பல நூறு படங்களில் நாம் பார்த்த சூனிய வேட்டைக் காரர்களின் கதை, மேக்கப் (தமிழ்நாட்டு அளவுகோளின் படி) மிரட்டலாக இருக்கும். சிஜி அட்டகாசமாக இருக்கும்.. கதாநாயகி அழகியாக இருப்பாள். நூறு அடியிலிருந்து கீழே விழுந்தாலும் ரப்பர் எலும்பைக் கொண்டிருப்பான் கதாநாயகன்… ஆனால்.. திரைக்கதை அமர்த்திவிடும்… திரைக்கதையை நம்பித்தான் பல ஹாலிவுட் சூனியக்காரர்கள் துடைப்பத்தால் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். (படம் குப்பை என்பது வேறு விஷயம்)
தமிழ் நாட்டில் முதலில் யாருக்குமே நல்ல திரைக்கதையை உருவாக்கும் வழக்கம் கிடையாது. அல்லது தெரியாது. ஐ விவகாரமும் இப்படி இருக்கலாம். விக்ரமின் புற்றுக்கட்டி முக மேக்கப்பும், ஒரு பாடலுக்கு மட்டும் (என்று நினைக்கிறேன்) வரும் ஊல்ஃப் மேக்கப்பும் மட்டுமே பேசிக் கொண்டு படத்தை ஓட்டிவிடுவார்கள்… எனக்கென்னவோ இந்த குறும்பட இயக்குனர்கள் வந்து மக்களை கொஞ்ஞ்சம் மாற்றியிருப்பார்கள் என்று நம்புகிறேன். ஐ வந்தபிறகு பார்க்கலாம்…
அதே சமயம், ஐ ட்ரைலரை முன்னிட்டு பலரும், இந்த ஃப்லையிலிருந்து எடுத்தது, அது ஊல்ஃப் படத்தில்ரிந்து சுட்டது என்று ஆளாளுக்கு ஜல்லியடிக்கிறார்கள். புத்தகத்தின் தலைப்பிலேயே மொத்த சாரமும் தெரிந்து கொள்ள முடியுமா என்ன? ஐ வந்தபிறகு சுட்டதை கண்டுபிடிக்கலாம்…
எனக்கும் முதல்வன் வரை பிடிக்கும், தலைவருக்காக எந்திரன் பிடிக்கும். தலைவர் இல்லையென்றால் எந்திரன் இல்லைதான்… நீங்களே முன்பு சொன்னது போல, ஷங்கர் சிஜியை தமிழில் உபயோகித்த விதத்தை நம்மால் ஒதுக்க முடியாது. எந்திரன் சிஜி தமிழலளவில் எனக்குப் பிடித்திருந்தது. ஐ டீசரில், மோட்டார் சைக்கிள் ட்ரான்ஸ்ஃபார்மர் பெண்ணாக மாறுவதும், பார்பெல்கள் இணைந்து பெண்ணாவதும் வரண்ட கற்பனை… வேறு யோசிக்கலாம்…
super ji.. same feeling enakku.. am a big time fan of hari.. avar content ‘vel’ oda poachu.. 🙁
yes boss. in a way, your point about Hari too is true
காதலன், ஜீன்ஸ், பாய்ஸ் ஒருவித படங்கள். ஜென்டிர்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் ஒருவித படங்கள். சிவாஜி, எந்திரன் முற்றிலும் ரஜினிக்கான படங்களே. சமுகத்தில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தொடர்ந்து ஷங்கர் படங்கள் எடுத்ததேயில்லை. அந்த பாணியில் பார்த்தால் இது சமுகம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கலாம் என்றால் அவரே இது என் முந்தைய படங்களை போல் இருக்கவே இருக்காது என்கிறார். பிரம்மாண்டம் என்ற ஒன்றைக் கூறி அவரை அந்த வட்டத்துக்குள் இருந்து வெளிவரவிடாமல் தடுக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது. பிரம்மாண்டமில்லாத ஷங்கர் படத்தை மக்கள் ஏற்பார்களா என்ற சந்தேகம் கூட வருகிறது. அந்த அளவிற்கு ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்று பறைசாற்றிவிட்டனர். ஐ(ஷங்கர்)-யில் உண்மையான அந்த பழைய ஷங்கர் வெளிப்படுவார் என்று நம்புவோம். இல்லையேல் இந்த வியாபார உலகில் அவரும் வழுக்கி விழுந்துவிட்டார் என்று நினைத்துக்கொண்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டியது தான்
யெஸ் பாஸ். எனக்கும் அதே கருத்துதான். ஆனா ஐ வித்தியாசமா இருக்குமான்னு நேரைய டவுட்டா இருக்கு. படம் வரட்டும். நல்லா இருந்தா நல்லதுதான்.
அருண் ஜெ
நல்ல அலசல் ! சேம் பீலிங் !
Cheers 🙂
1993 – நான் பிறந்த ஆண்டு. கிட்டத்தட்ட என் வயது ஷங்கரின் அனுபவம். விகடனின் பொக்கிஷம் தொடரில் வெளிவந்த ஜென்டில்மேன் படத்தின் விமர்சனத்தை கட் செய்து வைத்து ஒவ்வொரு முறை அதை படிக்கும்போதும் இதை வேறு யாராவது டீடைல்டாக எழுத மாட்டார்களா என்று ஏங்கியதுண்டு. என் ஏக்கத்தை போக்கியதற்கு மிக்க நன்றி.
90-களின் தமிழ் சினிமாவில் மணிரத்னம், ரஹ்மான், ஷங்கர் ஆகியோர் ஏற்படுத்திய தாக்கத்தை ஒரு தொடராக நீங்கள் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
அவசியம் ராகேஷ். அவங்களைப் பத்தி எழுத எனக்கு ஒரு ப்ளான் இருக்கு. விரிவா நேரம் கிடைக்கும்போது எழுதுவேன் .
‘ஐ’ படத்தோட இசையை பற்றி வேற கட்டுரை எழுத திட்டம் உள்ளதா? நீங்க இசை தொடர்பான கட்டுரை எழுதி ரொம்ப நாள் ஆனதா ஒரு உணர்வு. அதை அப்படியே இக்கட்டுரை மாதிரி ரஹ்மான் முன்பு vs இப்பொழுது என்று எழுதுங்களேன்.
இப்படிக்கு,
உங்கள் analysis-இன் ரசிகன்.
தமிழ் சினிமால தனியா இசை விமர்சனம் எழுதமுடியாதே தலைவா.. படத்துல அதை எப்படி எடுத்துருக்காங்கன்னு பார்த்துதானே எழுத முடியும்? அதுனால, பட விமர்சனத்துலயே இசையையும் கவனிச்சிருவோம்.
http://shilppakumar.blogspot.com/2014/09/ai.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+blogspot%2FRAdkl+%28ஸ்டார்ட்+மியூசிக்%21%29
என் இன்பாக்ஸ்-ல உங்க கட்டுரை மெயில்-க்கு அடுத்த மெயில் இந்த விமர்சனம்….
செம timing…
பிரம்மாண்ட விமர்சனம்.. படிச்சி பாருங்க..
ஆனா ஒண்ணு, விக்ரம் பாவம்..
🙂 🙂
சிவாஜி ஒரு முழு ரஜினி படம் என்பது உண்மையே படத்தில் ஏகப்பட்ட சறுக்கல்கள் இருந்தாலும் அது ரஜினியால் பலருக்கு படம் பார்க்கும்போது தெரியவில்லை. ஆனால் எந்திரன் ஒரு ரஜினி படம் என்று சொல்ல இயலாது அதில் வரும் அத்தனை காட்சிகளும் ரஜினி தேர்வாவதற்கு முன்னமே முடிவு செய்யப்பட்டது ( அதில் ரஜினியின் மாஸ் காட்சி போல வருவது “Black Sheep வசி மே” என்ற ஒன்று மட்டுமே அதுவும் முன்பே முடிவு செய்யப்பட்டதே) ஒரு ரஜினி ரசிகனாக அதில் நான் திருப்தி அடையவில்லை. அந்நியன் படம் எனக்கு வித்தியாசமாகவே பட்டது ( அந்த நேரு ஸ்டேடியம் காட்சி தவிர) மற்றபடி உங்கள் விமர்சனத்தை ஒத்துகொள்கிறேன். மணிரத்தினம் – ஷங்கர் பட நாயகிகள் ஒற்றுமை இதுவரை கவனித்தே இல்லை இதில் ராவணன் எந்திரனயும் சேர்த்துகொள்ளலாம். இன்னும் ஒன்றரை மாதத்தில் Interstellar வெளியாக இருக்கிறது அந்த தொடரில் ஏதேனும் பதிவு எழுதபோகிறீரா Waiting for that….
கரெக்ட்தான் பாஸ். அது ரஜினிக்காக எடுத்த படம் இல்லைதான். ஆனா, அதுல ஸ்ட்ராங்கான திரைக்கதை இல்லைன்னு சொல்றேன். முதல்வன் மாதிரி ஒரு படத்தையும் எந்திரனையும் கம்பேர் பண்ணா எந்திரன்ல ஒண்ணுமே இல்லைன்னுதானே தெரியுது? கதை உறுதியா இல்லாததுனால, அது ரஜினிக்காகவே எடுத்த படம் மாதிரிதான் இருந்தது.
இண்டர்ஸ்டெல்லார் பத்தி அவசியம் கட்டுரைகள் வரும். ஒண்ணொண்ணா 🙂
வைட்டிங் ஃபார் தட் மொமன்ட்!!
லீக்கான ‘ஐ’ கதையை நீங்கள் படித்தீர்களா??
யெஸ் பாஸ். படிச்சேன். ஆனா அது உண்மையா இருக்குமான்னு தெரியல. ஒருவேளை உண்மைன்னா, ரொம்பவுமே வீக்கான கதை
கதை திரைக்கதை வசனம் இயக்கம் மூலம் பார்த்திபனின் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்திருப்பவர் பார்த்திபனின் வாரிசு கீர்த்தனா.இவரின் பங்கே பார்த்திபனை மீண்டும் போட வைத்திருக்கிறது.
இருக்கலாம். ஆனா எதுவா இருந்தாலும் மறுபடி வந்தாருல்ல. அதான் முக்கியம் 🙂
Super view thala I admire each and every word
சியர்ஸ் அர்ஜித்
it’s just a perception, to my POV Mr.Shankar is trying to make a space (name) like Mr.James Cameroon in tamil industry, just believing techniques rather than the content.
It might be true. He might be trying to do that. But I believe that James Cameron was a director who put his screenplay before the effects and stuff. Have written about Cameron in detail here. Please do take a read and lemme know your comments Vinusuthan. Cheers.
http://karundhel.com/2012/07/blog-post-2.html
இந்தப்பதிவு என்னுடைய பழைய ஞாபகம் ஒன்றைக் கிளறி விட்டது. ‘ஜென்டில்மேன் வந்தபோது எனக்கு 7 வயது. அப்போது யாழ்ப்பாணத்தில் யுத்தம் என்பதால் திரையரங்குகள் மூடப்பட்டு திரைப்படங்கள் எல்லாம் காலம் தாழ்த்தி வீடியோ கேஸட்டில் வந்துகொண்டிருந்தது. ஒருமுறை என்னுடைய அம்மாவின் ஆப்பரேஷனுக்காக கொழும்புக்கு போய் வந்து கொண்டிருந்தபோது வவுனியா (அந்த இடம் வவுனியாவா இல்லை வேறு இடமா என்று சரியாக ஞாபகம் இல்லை) என்ற இடத்தில் உள்ள பெரிய சோதனைச்சாவடியை கடந்து தான் நாங்கள் வரவேண்டி இருந்தது. அங்கு சோதனைக்காக அமைக்கப்பட்ட நீண்ட கொட்டிலில் வரிசையில் நின்றபோது அந்தக் கொட்டிலின் கூரையில் அனைவருக்கும் தெரியக்கூடிய மாதிரி ஒரு டி.வி வைத்து படம் போட்டுக் காட்டிகொண்டிருப்பர்கள். அப்போது அந்த வரிசையில் கால்கடுக்க என் அம்மாவோடும் அப்பாவோடும் நின்றுகொண்டு அந்த அறியாத வயதில் நான் பார்த்த படம்தான் ‘ஜென்டில்மேன்’. அப்போது சிறுபிள்ளை என்பதால் எனக்கு படம் புரியவில்லை ஆனால் ‘சிக்கு புக்கு ரயிலே’ & ‘பார்க்கதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்கதே’ பாட்டுக்கள் ரெண்டும் எனக்கு நன்றாகவே பிடித்துப் போனது. மீண்டும் அந்த பழைய அனுபவத்தை ஞாபகப் படுத்தி விட்டீர்கள்.. நன்றி.
ஷங்கரின் ‘முதல்வன்’ ‘பாய்ஸ்’ ‘நண்பன்’ எனக்குப் பிடித்த படங்கள். அதிலும் ‘பாய்ஸ்’ படம் இலங்கையில் சக்கைப் போடு போட்டது. அத்துடன் கொழும்பில் இந்தப்படத்துக்கு வெற்றிவிழக் கொண்டாட்டம் (2003-இல்) வேறு நடாத்தியிருந்தார்கள். அதற்கு இயக்குநர் ஷங்கர், விவேக் உட்பட படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் வந்திருந்தார்கள். இதில் ‘நண்பன்’ ரீமேக் என்பதால் விட்டுவிட்டீர்கள் சரி ஆனால் பிடிக்காத படங்களைப்பற்றி விவாதித்தபோது கூட ‘பாய்ஸ்’ படத்தைப்பற்றி விவாதிக்கவே இல்லையே..???
‘எந்திரன்’ படத்தை நான் கொழும்பில் முதல்நாள் முதல் ஷோ அடித்துப்பிடித்து போய்ப் பார்த்துவிட்டு நொந்து போய் வெளியே வந்து என் நண்பனுக்கு ” ‘எந்திரன்’ ஹாலிவூட் படங்களை சாம்பாராக கலக்கி எடுக்கப்பட்ட படம். இது கட்டாயம் தோல்விப்படமாக இருக்கும்” என்று எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். ஆனால் படம் வெற்றிப்படம் என்று கேள்விப்பட்டதில் இருந்து தோல்விப்படமாகும் என்று சொன்ன நான் முட்டாளா? இல்லை அதை வெற்றிப்படம் ஆக்கிய ஜனங்க முட்டளா? என்ற யோசனை இப்போதும் உள்ளது…
விரிவான அனுபவத்துக்கு மிகவும் நன்றி அன்புடன் வர்மா. பாய்ஸ் இலங்கையில் ஓடியது என்ற தகவல் அதிசயமாக இருந்தது. அதேபோல், ஜெண்டில்மேன், இந்தியன் & முதல்வன் ஆகிய படங்களைப் பற்றித்தான் விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் பிற படங்களைப் பற்றி எழுதவில்லை. காரணம் இவைதான் எனக்கு மிகவும் பிடித்த ஷங்கர் படங்கள்.
//ஆனால் படம் வெற்றிப்படம் என்று கேள்விப்பட்டதில் இருந்து தோல்விப்படமாகும் என்று சொன்ன நான் முட்டாளா? இல்லை அதை வெற்றிப்படம் ஆக்கிய ஜனங்க முட்டளா? என்ற யோசனை இப்போதும் உள்ளது…//
இதற்குத்தானே கட்டுரையின் இறுதியில் Twilight Saga பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்? அவை உலகம் முழுதும் சக்கைப்போடு போட்டன. ஆனால் கடும் மொக்கைப்படங்கள் 🙂
Nice article. I agree with you totally. Somehow I felt, Indian and Thanga Pathakkam has lot of similarities.
That’s a different view :-). yes. they both have certain similarities, but it all goes down to மனுநீதிச் சோழன் then, isn’t it ?
True 🙂
நண்பா சரியான நேரத்தில் எழுதபட்ட கட்டுரை நேற்று ‘ஐ’ ப்ட டீஸர் பார்த்ததில் இருந்து எணுக்கும் ஷங்கர் இந்த முறையும் ஏமாற்றி விடுவார் என்ற எண்ணம் தான் தோன்றுக்கிருது…எனக்கு பிடித்த ஷங்கர் படங்கள் நீங்கள் சொன்னவைய, ஆனால் அந்நியன் திரைப்படம் எனுக்கு பிடிக்கும் ….முதல்வன் படத்தை இப்பொழுது கூட எதாவது ஒரு சேனலில் பார்த்தல் மீண்டும் பார்க்க அமர்ந்துவிடுவேன்….ஷங்கர் படதில் பாடல்கள் எனுக்கு பிடிப்பதில்லை….என்னதான் கம்மேர்சியால் படம் என்றாலும் ஒரு இயக்குனர் ஒரு டேம்ப்லடில் படம் எடுப்பதும் பாடல்களை வைப்பது ஒரு சலிப்பை உண்டாக்குகிறது …..நல்ல திரைப்படங்களை கொடுத்த ஒரு புத்திசாலி இயக்குனர் தன்னை ஒரு முறை சுயபரிசோதனை செய்துகொண்டு பிரமாண்டம் எனும் மாயை தண்டி வெளி வந்தால் நமக்கு மீண்டும் நல்ல படங்கள் கெடைக்கும் ….ஷங்கர் ரசிகனாய் i படத்தை எதிபர்கிறேன்…..
ஆமாம் பாஸ். ஆனா சுயபரிசோதனை தான் இருப்பதிலேயே கடினமானது அல்லவா?
Good article.
Cheeers
//ஷங்க்கரின் ரொமான்ஸ் பத்தி எழுதணும்னு நினைச்சி மறந்துட்டேன். பாய்ஸ்லயே ரொமான்ஸ் எதுவுமே இருக்காது. காதலுக்காக மௌண்ட் ரோட்டுல அம்மணமா ஒடுரது செம்ம காமெடியாத்தான் இருந்தது. காதலன்லயும் காதலே இருக்காது. ஷங்கருக்குக் காதல் அனுபவம் எதுவுமே இருந்திருக்காதுன்னு கெஸ் பண்றேன் 🙂 .. //
பாய்ஸ் படத்தில ஒவ்வொரு பையனா ஷங்கர் அவர் குரலில் அறிமுகப்படுத்துவார். தமனின் கேரக்டரை அறிமுகப்படுத்தும்போது வரும் குரலை கவனியுங்கள். அதில் வெளிப்படும் நக்கல்….தான் real ஷங்கரோ?
ஜென்டில்மென் திரைக்கதை அப்போதைய காலக் கட்டத்தில் புதிதாக தோன்றியது என்னோவோ வாஸ்தவம். ஆனால் கதை ஒரு குறுகிய மனப்பான்பயோடு இட ஒதுக்கீட்டிற்கு எதிரான நிலையை உயர்த்திப் பிடிக்கும் ஒன்று. ஆனால் அதை நிறுவுவதற்கு சோகத்தை வலியக்க திணித்திருப்பார். மேலும் ஷங்கர் ஆபாசம் விற்பனையாகும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். . தராசு முனைக்கும் சுபஸ்ரீ மார்பகத்தையும் திரை முழுக்கக் காட்டி வக்கிரத்திற்கு தீனி. ரஹ்மான் பாடல்களை நம்பியும், முழுக்க முழுக்க பதினென் வயது மற்றும் கல்லூரி மாணாக்கர்களை நம்பியே படம் எடுத்திருந்தார். காதலன்.. இதே போக்கின் நீட்சியாகத்தான் இருந்தது. அதரப் பழசான கதை. மறுபடியும்.. ரஹ்மான் பாடல்களை தோளில் போட்டுக்கொண்டு படப்பிடிப்புக்கு செல்லும் மணிரத்னம் போல. காதலனில் தடுக்கி விழுந்தால் பாட்டு. இந்தியன் – ஜென்டில்மேன் போலவே இரு கதாநாயகிகள். இருவருமே நாயகன் மீது காதல் கொள்வர். கடைசியில் நாயகர் ஒருவரையே கைபிடிப்பார். ஜென்டில்மேனில் இரண்டாவது நாயகிக்கு நாயகனே அறிவுரை செய்துவைப்பார். இந்தியனில் அப்படி இல்லை. அதுதான் வித்யாசம். இரண்டாவது கதாநாயகிக்கு தனிப் பாடல் உண்டு. வழக்கமாக வலது கையினால் பௌலிங் போட்டு விக்கட் எடுப்பவன் திடிரென இடது கையினாலும் பௌலிங் போட்டு விக்கட் எடுப்பது போல.. கமல் .. சும்மாவே வந்து போய் நடித்துக் கொடுத்தாலும் படத்தை தூக்கி நிறுத்தும் பிரதான தூணாக ஜொலித்தார். முக்கியமாக அப்பா வேடத்தில். திரைக்கதை சூப்பர் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஒருவிதத்தில் நகரத்தில் நடக்கிற, ஊழலை ஒழித்துக் கட்டுகிற … சட்டகத்தில் முதல்வனை ரமணா பலமடங்கில் தூக்கி எறிந்துவிடும். அந்தவொரு முழுமை ஷங்கரின் கைவண்ணத்தில் பார்க்கவே முடியாது. நான்காவது படம்..ஜீன்ஸ். இதில்தான் ஷங்கர் ஜெயிக்கிறார்.. கவர்ச்சி கிடையாது. கதாநாயகன் -நாயகி இருவருமே இரட்டை வேடம். போதாதற்கு கதாயகனின் அப்பாவாக நாசரும் இரட்டை வேடம்.. லக்ஷ்மி, ராதிகா, கீதா என தேர்ந்த நட்சத்திரக் கூட்டங்கள். ஆள் மாறாட்ட கதை என்றாலும் சிறப்பாக ஒரளவு சமாளித்திருந்தார். முதல்வன்.. ஐந்தாவது படைப்பு. திரைக்கதையின் விறுவிறுப்பு – நாயகன் ஈடுபடும் வேலை, அரசியலில் இருந்தாலும் நாயகியின் காட்சிகள் கதையோடு ஒட்டாமல் வெளியெ தொங்கிக் கொண்டு இருந்தது. குப்பையாக இருக்கும் இன்று பார்த்தாலும். வழக்கம்போல இதிலேயும் போராடும் நாயகன் எதிரியால் அப்பா – அப்பாவை இழந்திருப்பார். சோகத்தை வலியக்க திணித்தலில் இதுவும் ஒரு வகை. இரண்டாவது இந்தியனாக அந்நியன். அம்பி கதாப்பாத்திரம் மட்டுமே தமிழ்த் திரையுலகிற்கு புதிது. நன்றாகவே கையாண்டிருந்தார். ரமணாவை இந்தப் படத்தோடு ஒப்பிட்டலாம். ஆனால் ஜெயிப்பது என்னவோ ரமணாதான். பாய்ஸ் பத்தி பேசவேண்டியதில்லை. அதில் பேசக்கூடிய விஷயங்களாக எதுவுமே இல்லை. பக்குவமில்லாத பாத்திரப் படைப்பு, கதை நகர்வு. சிவாஜியையும் இக்னோர் செய்துவிடலாம். ஆனால் இந்திரன் மாறுபட்டது. சிட்டி ரோபாட் ரஜினி வில்லனாக மாறி நடத்தும் கடைசி 30 நிமிட காட்சிகள் எல்லாமே சரவெடி. ஒரே படத்தில் இரு அத்தியாயங்களா என பிரமிப்பூட்டியது. ஷங்கர் திறமை அதில்தான் நன்றாகவே வெளிப்பட்டது. கவர்ச்சி, சோகத் திணிப்பு இல்லாமல் எந்திரனில் கதை, திரைக்கதையை சிறப்பாக கையாண்டிருந்தார் ஷங்கர். ஆக.. இதுவரை இரண்டே படங்கள்.. ஜீன்ஸ் மற்றும் எந்திரன். ஒரு விஷயத்தில் ஷங்கரின் படைப்புகள் தமிழ் சினிமாவில் மிக முக்கியமானவை. அது கதாநாயகனுக்கு அமைக்கப்படும் மேடை. பாய்ஸ் சித்தார்த் தவிர மற்ற எல்லோருமே கொடுத்துவைத்தவர்கள்.
Sorry for asking question like this…. Why Jeans movie have that title???If u know the answer please telll….romba naalaa theriyamalay iruku..!!!
that’s coz he wanted it to be correlated with genes, the center point of the story boss
Omg!! Spelling mistake actually it should be genes.not jeans
..
The last line, “Go-Watch-Twilight” Super Boss!! 😀 Sema Punch. And by the way, ‘I’ Teaser definitely looks quite weak, solely relying on the CG. It looks like a simple Hunch back movies from the 80s Hollywood! As you say, i seriously wish Shankar directs a beautiful, low profile tight screenplay movie, just like some of the movies that he produced!
Sorry for asking question like this…. Why Jeans movie have that title???If u know the answer please telll….romba naalaa theriyamalay iruku..!!!
// அவரது ஒரு ஸிஜி பாணி போய், படமே ஸிஜியில் மூழ்கி அவரது திரைக்கதைகளின் தனித்துவம் பறிபோய்விட்டது என்பது என் கருத்து.
முற்றிலும் சரி, ஆடியன்ஸ் வெளிப்படுத்திய ஆஹா ஓஹோ சிஜி விமர்சனங்கள் இவரது தனித்துவத்தை மழுங்கடித்து விட்டது..
இதேதான் சசிக்குமார் விஷயத்திலும்.. சுப்ரமணியபுரம் பிறகு வந்த படங்களில் (ஈசன் தவிர), திரைக்கதையை விட்டுவிட்டு கதைகளில் சங்கருப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்போனார்
Shankar gives so much joy to the audience…that’s enough…
As you said i have seen Gentleman and Kadhalan but i can’t remember very well, But i can still remember Mudhalvan it a nice movie. But after that i can say Anniyan is bit okay (“when i saw it first time but now its like nothing). When i saw the teaser of “I” i thought for a second that its a remake of “worng turn”kinda movie ? Then my friend who have no knowledge about movie (even me) said action scenes looks like “Final destination” sequences and chat goes on and even bike transforming all kind of amateur CG works (as his movie always have worst CG). The conclusion i got from watching Shankar’s movies (from Shivaji to Endhiran) is he wants to portray him self as Kollywood’s “JAMES CAMERON” or “STEVEN SPILL-BERG” or even “PETER JACKSON”. (Alot of director trying for this fame) so he wants to create movies that no one has done before in Indian cinema (i can say rather he is selfish or something going wrong in Industry). Any have Arnold has told shankar he want to act in his movies let see……………. 🙂 “Arnold ki jai”
இதில் இன்னொரு விஷயம் – சமீபகாலமாகப் பிரபல படங்களைப் பற்றி ஏதேனும் சொன்னால், ‘முடிந்தால் படம் எடுத்துக் காட்டு. அப்புறம் பேசலாம்’ என்ற புளித்துப்போன கூப்பாடு அதிகமாகக் கேட்கிறது. காரணம் அந்தக் கதாநாயகர்களின் வெறியர்கள். இவர்கள் யார் என்று கவனித்தால், மேலோட்டமாக ஏதேனும் சில படங்கள் மட்டுமே பார்த்துவிட்டு, சினிமாவில் என்னென்ன நடந்திருக்கிறது என்பதிலெல்லாம் எந்த அறிவும் இல்லாமல் வெறியேறிக் கத்தும் நபர்கள்.
நீங்கள் எழுதியிருப்பது போல் ஜென்டில்மேன் திரைக்கதையில் விளையாடிய ஒரு பக்கா கமர்ஷியல் திரைப்படம். சற்றே கொசுவர்த்தியை சுத்த விட்டீங்கனா 1980-ல கமல் நடிச்சு ஐ.வி.சசி இயக்கிய “குரு” படத்தோட updated version தான் ஜென்டில்மேன்னு புரியும்.
பணக்காரங்க கிட்ட கொள்ளையடிக்கிற ராபின் ஹூட் ஹீரோ….
கொள்ளையடிச்ச காசுல பள்ளிக்கூடம் கட்டுறது….
துணைக் கொள்ளையனா அதுல YGM , இதுல கவுண்டர்….
ஒவ்வொரு கொள்ளைக்கும் ஒவ்வொரு வேஷம்….
அதுல ஸ்ரீதேவி அப்பா மேஜர் சுந்தர்ராஜன் ஹீரோவைத் தேடுவார், இதுல சுபஸ்ரீ புருஷன் சரண்ராஜ் ஹீரோவைத் தேடுவார்…..
அதுல குண்டடி பட்ட கமலை முத்துராமன் காப்பாத்துவார், இதுல குண்டடி பட்ட அர்ஜுனை நம்பியார் காப்பாத்துவார்….
எதுக்கும் ஒரு விஸ்கா “குரு”வைப் பாத்துட்டு நீங்க இதை எழுதியிருக்கலாமோ?!