Eat Pray Love (2010) – English
நாம் வாழும் வாழ்க்கை அலுத்துப்போனால், என்ன செய்யலாம்? வேலையை மாற்றிப் பார்க்கலாம்; வீட்டை மாற்றிப் பார்க்கலாம்; கொஞ்ச நாள் சும்மா இருந்து பார்க்கலாம். ஆனால், வாழ்வில் அர்த்தம் வடிந்து போனதால், உலகையே சுற்றிய ஒரு பெண்மணியின் கதை, சற்றே புதிதாக இருக்கிறதல்லவா? அதுதான் ‘Eat Pray Love ‘. எலிஸபெத் கில்பர்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர், 2006 ல் எழுதிய ஒரு புத்தகமே இது. கிட்டத்தட்ட இருநூறு வாரங்கள், ந்யூயார்க் டைம்ஸின் ‘பெஸ்ட் செல்லர்’ லிஸ்ட்டில் அங்கம் வகித்த பெருமை இப்புத்தகத்துக்கு உண்டு. இந்தப் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தைத்தான் இன்று பார்க்கப்போகிறோம்.
எலிஸபெத் கில்பர்ட், ஒரு வெற்றிகரமான எழுத்தாளர். எட்டு வருடத் திருமண வாழ்க்கை. ஒருமுறை, பாலியில், யோகா பயிற்சியளிக்கும் இடங்களைப் பற்றிக் கட்டுரையொன்றை எழுத, அங்கு சென்று தங்குகையில், கெடூட் என்ற, மிகவும் வயதான மூலிகை மருத்துவரைச் சந்திக்கிறாள். இன்னும் சரியாக ஒரு வருடம் கழித்து அவள் மறுபடி அங்கே வருவாள் எனவும், இந்த இடைப்பட்ட காலத்தில், தனது பணம் முழுவதையும் அவள் இழக்க நேரும் என்றும், அந்தப் பணம் மறுபடி அவளுக்குக் கிடைக்கும் என்றும், அவளது வாழ்க்கையில் இரண்டு திருமணங்கள் இருக்கும் – அவற்றில் ஒன்று சீக்கிரம் முறிந்துவிடும் என்றும், மற்றொன்று, மிக நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும் என்றும் கெடூட் கூறுகிறார்.
ந்யூயார்க்குக்கே திரும்பும் எலிஸபெத், அவளது வாழ்க்கை, மெல்ல மெல்ல ஒரு இயந்திரத்தின் வாழ்க்கையாக மாறுவதை உணர்கிறாள். எந்தப் பிடிமானமும் இல்லாத வெறுமை, அவளது கண்களில் அறைகிறது. கணவனோடு இருக்கையில்கூட, சந்தோஷம் எதுவும் இன்றி, எதிர்காலத்தைப் பற்றி வருந்துபவளாகவே இருக்கிறாள். அந்த நேரத்தில், தனது புத்தகம் ஒன்றின் நாடகமாக்கத்துக்குச் செல்கிறாள். அங்கே, கதாநாயகனாக நடிக்கும் இளைஞன், அவளைக் கவர்கிறான். அவளது நண்பனாகவும் மாறுகிறான். கணவனிடம், வாழ்க்கையின் வெறுமையைப் பற்றிச் சொல்லும் எலிஸபெத், விவாகரத்து செய்ய முடிவுசெய்திருப்பதாகச் சொல்ல, கணவனால் இதனைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. தனது நடவடிக்கையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், திடீரென்று வாழ்க்கையை விட்டு ஓடும் இந்த முடிவை எடுத்தது, அவளது கோழைத்தனம் என்றும் அலறுகிறான் கணவன். விவாகரத்து கொடுக்கவும் மறுத்துவிடுகிறான்.
எலிஸபெத்தின் முயற்சியால், முடிவில் விவாகரத்து கிடைத்துவிடுகிறது. அதன்பின், தனக்கு நண்பனாக மாறிய அந்த நாடகத்தின் கதாநாயகனான டேவிட்டுடன் வாழத் துவங்குகிறாள் எலிஸபெத். சில நாட்கள் இனிமையாகக் கழிந்தபின், பிரச்னை தலைதூக்குகிறது. இருவருக்கும் இடையே பல ஈகோ பிரச்னைகள் இருப்பது இருவருக்கும் புரிகிறது. தினமும் இரவு இருவருக்கும் சண்டை மூள்கிறது. விவாகரத்துக்கு முன்னிருந்த அதே மனநிலையை எலிஸபெத் மறுபடி அடைகிறாள். ஆனால், அவளுக்கு ஒரே ஆறுதலாக இருப்பது, டேவிட்டின் குருவான, இந்திய சாமியாரிணி ஒருவரின் தியான வகுப்புகள். டேவிட்டால் எலிஸபெத்துக்கு அறிமுகம் செய்து வைக்கப்படும் இவ்வகுப்புகள், அவளது வாழ்வில் அமைதி தவழும் என்ற நம்பிக்கையை அவளுக்குள் விதைக்கின்றன. இருந்தும், இருவருக்குமிடையில், இடைவெளி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த நேரத்தில்தான், அந்த முடிவை எடுக்கிறாள் எலிஸபெத்.
ஒரு வருடத்துக்கு, உலகைச் சுற்றுவதே அவளது முடிவு. முதலில் இத்தாலிக்குச் சென்று நான்கு மாதங்கள் தங்கிவிட்டு, பின் இந்தியா சென்று, குருஜியின் ஆசிரமத்தில் சில காலம் தங்கிவிட்டு, பாலிக்கு மறுபடி சென்று கெடூட்டை சந்தித்துவிட்டு, பின் ந்யூயார்க் வருவதே அவளது முடிவு. இதைப்பற்றி டேவிட்டிடம் அவள் சொல்லும்போதும், டேவிட், அவளை அவனுடனே இருக்கச் சொல்வதில்லை. வெறுமனே அவள் சொல்வதைக் கேட்டுக் கொள்கிறான். இவ்வாறாக, எலிஸபெத்தின் உலகப்பயணம் துவங்குகிறது.
எலிஸபெத்தின் வாயிலாக, இத்தாலியின் அழகிய தெருக்களை நாமும் பார்க்கிறோம். எங்கு பார்த்தாலும் ஸ்கூட்டர்கள், பழைய கட்டிடங்கள், காஃபி கடைகள், அருமையான ரெஸ்தாரந்த்கள், இத்தாலியின் பெருமையைப் பேசும் முதியவர்கள், தெருவில் நடக்கும் இளம்பெண்களின் பின்புறத்தைத் தட்டும் இளைஞர்கள் . . இவ்வளவையும் அனுபவிக்கிறாள் எலிஸபெத். அது, அவளுக்குள் ஒரு புதிய சந்தோஷத்தை உருவாக்குகிறது. தனது எடை அதிகரிப்பதைப் பற்றிய ப்ரக்ஞையே சிறிதுமின்றி, பீட்ஸாக்களை உள்ளே தள்ளுகிறாள். அங்கே, ஸ்வீடனைச் சேர்ந்த பா(வ்)லா என்ற பெண்ணின் அறிமுகமும் எலிஸபெத்துக்குக் கிடைக்கிறது. பாலாவுக்கு இத்தாலிய மொழியைச் சொல்லித்தரும் ஆசிரியராக, ஜியோவான்னி என்ற இளைஞன் இருக்கிறான். இந்த மூவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிடுகின்றனர். மூவரும் சேர்ந்து, இத்தாலியைச் சுற்றிப்பார்க்கத் துவங்குகின்றனர். இவர்கள் இத்தாலியில் கழிக்கும் காட்சிகள், நமக்கும் இத்தாலிக்குச் செல்லவேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் வண்ணம் உள்ளன. இத்தாலியில் நான்கு மாதங்களைக் கழித்தபின், தனது குருநாதரைத் தேடி, இந்தியா செல்கிறாள் எலிஸபெத்.
மேல்நாட்டவர்கள், இந்தியாவில் ஒரு ஆசிரமத்துக்கு வந்தால், என்னென்ன கஷ்டங்கள் அனுபவிப்பார்களோ, அவையத்தனையும் அப்படியே அவளுக்கும் நடக்கிறது. புதிதாகப் படிக்க ஆரம்பித்திருக்கும் ‘குருகீதை’ என்ற புத்தகம், அவளைப் பாடாய்ப்படுத்துகிறது. ஒரு எழுத்தும் புரிவதில்லை. அதனை மற்றவர்களுடன் சேர்ந்து படிக்கவும் முடிவதில்லை. தியானம் செய்தால், தூக்கம் வந்துவிடுகிறது. ஆசிரமத்தில், ஒரு வேற்றுக்கிரக ஜீவியைப் போல் எண்ண ஆரம்பிக்கிறாள் எலிஸபெத். கோபம் அவளுக்குள் ஏற ஆரம்பிக்கிறது. இந்தத் தருணத்தில்தான், அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் ரிச்சர்டின் அறிமுகம் எலிஸபெத்துக்குக் கிடைக்கிறது. எதையுமே எடக்குமடக்காகவே பேசும் ரிச்சர்ட், எலிஸபெத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார். மெல்ல மெல்ல, உள்ளமைதி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை எலிஸபெத்த்துக்குக் கற்றுக் கொடுக்கிறார். இதற்கிடையில், ஆசிரமத்தில், மேலும் பலரோடு நட்பாகிறாள் எலிஸபெத். குறிப்பாக, துல்சி என்ற பத்தொன்பது வயதுப்பெண். இவளுக்கு, கூடிய விரைவில் திருமணம். ஆனால், துல்சிக்கோ மேற்படிப்பு படிக்கவே ஆசை. தனக்காக நிச்சயம் செய்திருக்கும் பையன், கட்டாயம் ஒரு தத்தி என்பது, அவளது மனதில் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பம். அதைப்போலவே, எப்பொழுதும் மௌனவிரதத்தில் இருக்கும் கொரெல்லா என்ற அமெரிக்கப்பெண். சைகையிலேயே உரையாடும் கொரெல்லா சொல்ல நினைப்பது எதுவுமே எலிஸபெத்துக்குப் புரிவதில்லை. இறுதியாக, கொரெல்லா தனது மௌன விரதத்தைக் கைவிடும் நாளும் வருகிறது. ஆனால், அப்போது என்ன நடக்கிறது என்பதைப் படத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஆசிரமத்தில் இருந்து ரிச்சர்ட் கிளம்பும் நாளும் வருகிறது. தனது ஒரே நண்பனான ரிச்சர்ட் கிளம்புவதால், வருத்தமடையும் எலிஸபெத்தை ரிச்சர்ட் சமாதானம் செய்கிறார். ஆசிரமத்துக்குத் தான் வந்த காரணத்தை, எலிஸபெத்திடம் சொல்கிறார். அது, எலிஸபெத்தின் மனதை மாற்றி, அவளைச் சமன்படுத்துகிறது.
இந்தியாவில் இருந்து பாலி செல்கிறாள் எலிஸபெத். இயற்கை அழகின் உச்சமாக இருக்கும் அந்தத் தீவில் சுற்றித் திரிகிறாள். ஒரு வருடத்துக்குமுன், இவளைச் சந்தித்த கெடூட்டை மறுபடி சந்திக்கிறாள். இவளைப் பார்த்ததில், கெடூட்டுக்கும் மகிழ்ச்சி. தான் பாதுகாத்து வந்திருக்கும் பழமையான மருத்துவ நூல்களைப் பிரதிஎடுத்துத் தரும்படி எலிஸபெத்திடம் கேட்டுக்கொள்கிறார். அந்த நேரத்தில், பெலிபே என்ற மனிதனைச் சந்திக்கிறாள். இதன்பின் என்ன நடந்தது? நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த மனநிம்மதி எலிஸபெத்துக்குக் கிடைத்ததா? படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டியதுதான்.
இந்தப் படம் எங்களுக்குப் பிடித்த காரணம், இப்படத்தின் இயல்புத்தன்மை. ஜூலியா ராபர்ட்ஸின் படு இயல்பான நடிப்பு. மட்டுமல்லாது, ஒவ்வொரு நாடாக எலிஸபெத் பயணிக்கும்போது, அந்தந்த நாட்டின் முக்கிய அம்சங்கள், எலிஸபெத்தின் மூலமாக நமக்குக் காணக்கிடைக்கின்றன. உதாரணமாக, இத்தாலியில், பழமையான வீதிகள், காப்பி விடுதிகள், பீட்ஸா கடைகள், இத்தாலியை விரும்பும் மனிதர்கள் ஆகிய விஷயங்கள், படத்தோடு நம்மை ஒன்றவைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எலிஸபெத்தோடு சேர்ந்து, நாமும் இத்தாலியைச் சுற்றிப் பார்க்கும் நிறைவு கிடைக்கிறது. அதேபோல், இந்தியாவிலும், பாலியிலும் நடக்கிறது.
படத்தின் ஒரே குறைபாடு என்று நான் கருதுவது, மற்ற படங்களைப்போல், இந்தியாவைக் காட்டியவுடன் வரும் ஏழ்மை, பிச்சைக்காரர்கள், குரங்குகள், கூட்டம் ஆகிய விஷயங்களைக் காட்டாமல், வேறு பல விஷயங்களைக் காட்டியிருக்கலாம் என்பதே. இந்தியாவில் இவை இருப்பதால்தான் காட்டுகிறோம் என்று இயக்குநர் சொல்லக்கூடும். இருப்பினும், இவை, ஒரு அசூயையை நமது மனதில் ஏற்படுத்துகின்றன. சட்டென்று, ‘ஆரம்பிச்சிட்டாங்கையா’ என்ற சலிப்பே எழுகிறது. அதேபோல், ஜூலியா ராபர்ட்ஸை எனக்குப் பிடிக்காது. இதற்குமுன் எனக்கு அவரைப் பிடித்த ஒரே திரைப்படம், ‘நாட்டிங் ஹில்’. அந்தப் படத்துக்குப் பின், இந்தப் படத்தில்தான், மனதுக்கு மிகவும் நெருக்கமாக அவரது கதாபாத்திரத்தை உணரமுடிந்தது. அந்த வகையில், இப்படம், ஒரு க்ளாஸிக்.
நிஜவாழ்க்கையில், எலிஸபெத் கில்பர்ட் என்ற எழுத்தாளர், இத்தாலி, இந்தியா, பாலி ஆகிய நாடுகளுக்குப் பயணிக்கையில் எழுதிய குறிப்புகளே, புத்தகமாக்கப்பட்டு, அதன்பின் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு, ஐ.எம்.டி.பியில் கொடுக்கப்பட்டுள்ள ரேட்டிங், ஐந்து. ஆனால், என்னைப்பொறுத்தவரை, கட்டாயம் ஏழரை கொடுக்கலாம். ஒரு மழைநாளில், மதிய வேளையில் காணவேண்டிய திரைப்படம் இது.
Eat Pray Love படத்தின் ட்ரெய்லர் இங்கே.
மீ தி first….
மொத வட எனக்கு…..
சுடு சோறு எனக்குத்தான்…..
சூப்பர் பதிவு…..
கண்டிப்பாக படத்தை பார்க்கத் தூண்டிகிறது உங்கள் எழுத்து….
டவுன்லோட் போட்டாச்சு…பாத்திர வேண்டியதுதான்…..
Very nice review…..
//நாம் வாழும் வாழ்க்கை அலுத்துப்போனால், என்ன செய்யலாம்?//
வாழ்க்கைய வாழுகிறேனானே எனக்கு அடிக்கடி தோணும்..
எங்கப்பா சொல்லுவார் We are not living. we are merely exisitng…
குருஜிலாம் வராரா…அப்ப கண்டிப்பா பாத்திர வேண்டியதுதான்..
This comment has been removed by the author.
நண்பா,
மிக்க மகிழ்ச்சி, நீண்ட நாளுக்கு பிறகு ஒரு நல்ல படத்தை அறிமுகம் செய்தமைக்கு,நன்றி
நண்பரே!இபபடத்தை இன்னும் நான் பார்க்கவில்லை.ஜூ.ரா. பீரிட்டி வுமன் பாருங்கள்.
This comment has been removed by the author.
boss padam sema mokka padam idhukku imdb la 71/2 tharuveengaLA?????? rombha nalla vimarsagar neenga…padam konjam slow vah iruntha udane ulaga padamaa?
neenga paathathukkaga mathavangalayum yen pakka vakureenga….
RR – இது உலகப் படம்னு நான் எங்கியாவது சொல்லிருக்கேனா? எனக்கு இந்தப் படம் புடிச்சது. அதுனால் அதைப்பத்தி என்னோட ப்ளாக்ல எழுதினேன். எனக்குப் புடிச்ச படங்களை எழுதுறதுக்குத்தான் நான் ப்ளாக் நடத்திக்கிட்டு இருக்கேன். அதேபோல, ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் டேஸ்ட் கட்டாயம் மாறுபடும். உங்களுக்குப் புடிச்ச படம், நாளைக்கி எனக்குப் புடிக்காம இருக்கலாம் இல்லையா? ஸோ, நோ டென்ஷன். ப்ரீயா உடுங்க பாஸ். அப்புறம், நான் பார்த்ததுக்காக மத்தவங்களையும் நான் பார்க்க வெக்கலை. பார்ப்பதும் பார்க்காததும் அவங்கவங்க இஷ்டம். நன்றி