Edgar Allan Poe – இருள்மையின் துன்பியல்
Deep into that darkness peering, long I stood there, wondering, fearing, doubting, dreaming dreams no mortal ever dared to dream before.
இருட்டின் அடியாழத்தினுள் உற்றுநோக்கிக்கொண்டே, நீண்ட நேரம், பயந்துகொண்டும், சந்தேகப்பட்டுக்கொண்டும், இதுவரை எந்த மனிதனும் எண்ணத்துணியாத கனவுகளைக் கண்டுகொண்டும் இருந்தேன்.
இதுவரை நான் எழுதியவைகளிலேயே எனக்கு மிகப்பிடித்தமான கட்டுரை ஒன்றை எழுதத்தொடங்கியிருப்பதில் மனமார்ந்த சந்தோஷம் அடைகிறேன். சிறுவயதிலிருந்து என்னைக் கவர்ந்த எழுத்தாளர். மனித வாழ்வின் கொடூரங்களை எழுத்தில் வடித்த மனிதர். இவரது கதைகளில் கவிந்திருக்கும் இருள்மை, நம்மீது படிந்து நம்மை அழுத்தத்தின் எல்லைக்கே கொண்டுசெல்லக்கூடியது. துப்பறியும் கதைகளை முதன்முதலில் தனது எழுத்தால் அறிமுகப்படுத்தியவர். பல கவிதைகளையும் எழுதிய மனிதர். எழுத்தின் மூலமே வாழ்க்கை என்ற கோட்பாட்டுடனே வாழ்ந்தவர். நாற்பதாவது வயதில், இதுவரை எப்படி இறந்தார் என்றே தெரியாமல், மர்மமான முறையில் இறந்தவர்.
மிக வயதான மனிதர் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கிறார். அவரைச்சுற்றிலும் கும்மிருட்டு. எங்கும் நிசப்தம். அறைக்கதவு மெதுவாக, மிக மெதுவாகத் திறக்கிறது. இல்லையில்லை. திறக்கிறது என்பதே தவறு. அறைக்கதவில் ஒரு மிகச்சிறிய அசைவு என்பதே சரி. ஒவ்வொரு துணுக்காக அக்கதவு மெதுவாகத் திறக்கப்படுகிறது. ஒரு ஆள் நுழையும் அளவு பிளவு அக்கதவில் ஏற்பட ஒருமணி நேரம் ஆகிறது. கதவு திறந்தவுடன் ஒரு மனிதன் உள்ளே நுழைகிறான். இவையெல்லாமே இருட்டில் நடக்கிறது. மேலே சொன்ன சம்பவம், ஏழு நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு இரவிலும் அரங்கேறுகிறது. எட்டாம் நாள். கதவு திறக்கப்படும்போது, அந்த முதியவர், ஏதோ சத்தம் கேட்டு, படுக்கையில் எழுந்து அமர்ந்துவிடுகிறார். கும்மிருட்டு. ஆனால், கதவைத் திறந்தவன் இம்முறை வெளியேறிவிடுவதில்லை. நீண்டநேரம் சிலை போல நின்றுகொண்டிருக்கிறான். பின், தனது கையில் இருக்கும் விளக்கைச் சுற்றியுள்ள துணியை லேசாக விலக்குகிறான். அதிலிருந்து ஒரு ஒளிக்கற்றை, அந்த முதியவரின் கண்ணின்மேல் விழுகிறது.
கண்கள். வல்லூறு ஒன்றின் துளைக்கும் கண்கள். எந்தக் கண்களைப் பார்த்து பயந்து, அம்முதியவரைக் கொல்ல நினைத்தானோ, அதே கண்கள். மிகக்கூரிய கத்தி போன்ற அம்முதியவரது பார்வை, தன்னை நோக்க முயல்வதைப் புரிந்துகொண்ட அவனுள் ஒரு பரபரப்பு ஏற்படுகிறது. ‘தடால் தடால்’ என்று அந்த முதியவரின் இதயம் அடித்துக்கொள்ளும் ஒலி இவனது செவிகளில் அறைகிறது. ஒரே பாய்ச்சலில் முதியவரின் படுக்கையை அடைந்த அவன், அவரது கழுத்தை நெரித்து, அவரைக் கொல்கிறான். கொன்ற பின்னர், உடலைத் துண்டுதுண்டாக வெட்டி,அவரது அறையின் தரையில் புதைக்கிறான். அலறல் சத்தம் கேட்டு போலீஸ் வருகிறது. உடலின் துண்டுகள் புதைக்கப்பட்ட இடத்தின் மீதே நாற்காலியைப் போட்டு அமர்கிறான் அவன். சிரித்துக்கொண்டே போலீஸுக்குப் பதில் சொல்கிறான். ஆனால், சிறுகச்சிறுக ஒலிக்கும் அந்த சத்தம்….. தடால் தடால் என்று அவனது காதில் அறைகிறது. அது, அந்தக் கிழவரின் இதயத்துடிப்பு. சற்றுநேரத்தில் சத்தத்தின் தாக்கம் தாங்காமல், போலீஸிடம் வேதனையில் உண்மையைச் சொல்லிவிடுகிறான்.
‘The Tell – Tale Heart‘. இக்கதை எழுதப்பட்ட வருடம், 1843 .
இன்னொரு கதையைப் பார்க்கலாம்.
‘ரூ தெரு’ என்பது அந்தத்தெருவின் பெயர். அங்கு ஒரு அபார்ட்மென்ட்டில் ஒரு பெண்மணியும் அவளது மகளும் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிறார்கள். அந்தப் பெண்மணியின் கழுத்து அறுபட்டு,லேசாகக உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அப்பெண்மணியின் மகளோ, அந்த வீட்டின் சிம்னியில் திணிக்கப்பட்டு இறந்திருக்கிறாள். நான்காவது மாடியில், எவரும் புக முடியாததொரு உயரத்தில், உட்புறம் தாளிடப்பட்ட அறையில் இக்கொலைகள் நடந்திருக்கின்றன.ஒரு அப்பாவியை போலீஸ் கைது செய்கிறது. டுபின் என்ற மனிதன், இக்கொலைகளைத் துப்பறியத் தீர்மானிக்கிறான். கொலை நடந்த இடத்துக்குச் சென்று, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை விசாரிக்கிறான். கொலை நடந்த இரவில், இறந்தவர்களின் வீட்டில் சத்தம் கேட்டதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால்,அந்த மொழியை அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இக்கொலைகளைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கிறார்கள்.
கொலை நடந்த அறையில், ஒரு முடி கிடைக்கிறது. அந்த முடி, சாதாரண மனிதனின் முடி அல்ல என்பது டுபினுக்குத் தெரிகிறது. அதைவைத்து, அசாதாரணமான அந்தக் கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்.
‘Murders in Rue Morgue‘. கதை எழுதப்பட்டது 1841ல்.
இன்னொரு கதை.
கும்மிருட்டில் ஒரு மனிதன் கண்விழிக்கிறான். ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். அறையை அளக்க முயலும் அவன், மயக்கமடைகிறான். மறுபடியும் கண்விழிக்கும் அவன்முன் உணவு இருக்கிறது. இப்போது அறையை அவன் அளந்துவிட்டிருக்கிறான். அப்போதுதான், அறையின் நடுவே ஒரு பெரிய குழி இருப்பதைக் கண்டுபிடிக்கிறான். மறுபடியும் மயக்கமடைகிறான்.
திரும்பவும் கண்விழிக்கும் அவன், ஒரு மரப்பலகையில் கட்டப்பட்டிருப்பதை உணர்கிறான். கூரையில் இருந்து ஒரு பெரிய இரும்புப் பெண்டுலம் அவனை நோக்கி மெதுவே நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு அசைவின்போதும் அவனை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக அது முன்னேறிக்கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அவனது இருதயத்தை அது துளைத்துவிடும் என்பதும் அவனுக்குத் தெரிகிறது. பரபரப்பாகத் தன்னை விடுவித்துக்கொள்ள முயல்கிறான். எலிகளை, உணவின் மூலமாகக் கவர்ந்து, கட்டுகளை விடுவித்துக்கொண்டு, பெண்டுலத்தின் வீச்சிலிருந்து கடைசி நிமிடத்தில் தப்புகிறான். ஆனால், அவனைச்சுற்றியுள்ள சுவர்கள் அவனை நெருங்கத் துவங்குகின்றன. கால் வைக்கவே இடமில்லாமல், வேறு வழியே இல்லாமல், அந்தக் குழிக்குள் குதிக்கிறான் அவன். ஆனால், குதித்தவுடன், காப்பாற்றப்படுகிறான்.
The Pit and the Pendulum – கதை வெளியான வருடம் 1842.
1809ல் பிறந்து, நாற்பதே வருடங்கள் வாழ்ந்து மறைந்த மனிதர். சிறுகதை எழுத்தாளர். கவிஞர். வறுமையில் வாடியவர். இவைகளைத் தவிர, இவரைப்பற்றி எழுதப் பல விஷயங்கள் உள்ளன. முடிந்தவரை பார்த்துவிடுவோம்.
எட்கர் ஆலன் போ எனக்கு அறிமுகமானது பற்றி இதற்கு முன்னரும் மிகச்சுருக்கமாக எழுதியிருக்கிறேன். லயன் காமிக்ஸில் ஒருமுறை மேலே சொன்ன ‘Murders in Rue Morgue‘ கதையைத் தமிழில் விஜயன் மொழிபெயர்த்திருந்தார். அப்போது அக்கதை படு வித்தியாசமாகத் தோன்றியது. இப்போதும்தான். கதை எழுதப்பட்ட வருடம், அக்காலத்திய சூழ்நிலை ஆகியவற்றை மனதில் கொண்டால், கட்டாயம் இக்கதையின் முக்கியத்துவம் தெரியவரும். அப்படிப் படித்த கதையால் கவரப்பட்டு, பள்ளியின் நூலகத்தில் இவரைப்பற்றித் தேடினேன். இவரது Tell-Tale Heart படிக்கக்கிடைத்தது. அதன்பின் கோவையின் அரசு மைய நூலகத்தில் நான் உறுப்பினராக இருந்ததால், அங்கே சென்று துழாவியதில் இவரது சிறுகதைத்தொகுப்பு படிக்கக்கிடைத்தது. இவரைப் பற்றிய வாழ்க்கைக்குறிப்பும் அதில் கண்டிருந்தது. அப்போதிலிருந்து எனது பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவராக மாறினார் Poe.
மேலே நான் சொல்லியிருக்கும் சிறுகதைகளைப் படித்தால், எத்தகைய schizophrenic மனநிலையில் இக்கதைகளை எழுதியிருக்கிறார் என்பது தெரியும்.
’போ’ ஒரு செல்வந்தரின் மகனாகப் பிறந்தவர். ஆனால், வாழ்வு முழுதும், தோல்வியுற்ற மனிதனின் வாழ்வை வாழ்ந்தவர். அவரது வாழ்வை சற்றேனும் சுவாரஸ்யமாக ஆக்கியவர்கள், அவரது வாழ்வில் குறுக்கிட்ட சில பெண்கள்.
‘போ’வின் தாய் எலைஸா, ஒரு நடிகை. 1800ன் துவக்கத்தில், மேடைகளில் தோன்றி, பாடல்களையும் நடனங்களையும் சில வேடங்களையும் ஏற்று நடித்த அழகி. ‘போ’வின் தந்தை, குடும்பத்தையே விட்டுவிட்டு அவரது ஒன்றாவது வயதில் ஓடிவிட்டவர். ‘போ’வின் மூன்றாவது வயதில், அவரது தாயாரை, கடுமையான ட்யூபர்க்ளோஸிஸ் தாக்கியது. வறுமையில் வாடிய எலைஸா, மரணப்படுக்கையில் இருந்தபோது, Richmond Enquirer என்ற செய்தித்தாளில், படிக்கும் வாசகர்களிடம் பணம் கேட்டு, ஒரு சிறிய விளம்பரம் வந்திருந்தது. ’எலைஸா, நோயின் கொடுமையில் வீழ்ந்து, உங்களது உதவியை, கடைசி முறையாகக் கேட்கிறார்; அவருக்கு உதவுங்கள்’ என்ற அந்த விளம்பரம், எப்பயனையும் தரவில்லை. தனது இருபத்துநான்காவது வயதில், எட்கரின் இரண்டரையாவது வயதில், இறந்தார் எலைஸா.
குழந்தை எட்கரின் மனதைத் தாக்கிய கொடுந்துயரம் இது. அதன்பின், இறக்கும்வரை, தனது தாயாரின் சிறு புகைப்படம் ஒன்றைத் தன்னுடனே வைத்திருந்தார் அவர். ஒரு பெண்ணிடமிருந்து மரணத்தால் பிரியும் அனுபவம், வாழ்வில் முதன்முறையாக அவருக்கு நேர்ந்தது.
இதன்பின், குடும்ப நண்பரான ஆலன் என்பவரின் கவனிப்பில் வளர்ந்தார் எட்கர். பதினைந்து வயதில், ‘ஜேம்ஸ்’ என்ற ஆற்றில் ஆறு மைல்கள் நீந்தும் அளவு துடிப்புடன் விளங்கினார். அப்போது, தனது நண்பன் ஒருவனின் தாயான ஜேன் ஸ்டானர்ட் (Jane Stanard) என்ற பெண்மணி, ட்யூபர்க்ளோஸிஸால் இறந்த நிகழ்ச்சி நடந்தது. அவர்மேல் மிகுந்த அன்பை – காதலையும் வைத்திருந்த எட்கர், துயரத்தில் மூழ்கினார். விபரம் தெரிந்த வயதில் அவருக்கு நடந்த முக்கியமான சம்பவம் இது. அதேபோல் எட்கர், தன்னை விட வயதுமிகுந்த ஒரு பெண்ணின்மேல் காதல் வைத்து, அவர் இறந்த பல சம்பவங்களில் இதுவும் ஒன்று.
இதன்பின் எட்கரை வளர்த்த தாயான ஃப்ரான்ஸெஸ் ஆலன், ட்யூபர்க்ளோஸிஸால் பாதிக்கப்பட்டார் (இந்த நோய் எட்கரின் வாழ்வில் சம்மந்தப்பட்ட பல பெண்களைக் காவு வாங்கியது, அவரது கொடும் நேரம் என்றே சொல்லவேண்டும்). இதே காலகட்டத்தில், Elmira Royster என்ற பெண்ணின்மேல் காதல்வயப்பட்ட எட்கருக்கு, அப்பெண்ணுடன் நிச்சயமும் ஆகிறது.
பள்ளிப்படிப்பை முடித்த எட்கர், விர்ஜீனியா பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார் -அப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு இரண்டே வருடங்கள்தான் ஆகியிருந்தன. அங்கே, தனது அறையின் சுவர்களில் பல ஓவியங்களை வரைந்து, நண்பர்களை மகிழ்வித்தார். அக்காலகட்டத்தில் அவர் ஒரு ஓவியராக வருவாரா அல்லது எழுத்தாளராக வருவாரா என்று அவர் நண்பர்களிடையே விவாதங்கள் நடந்தன என்று அறிகிறோம். அங்கு பயில்கையில், படிப்புக்கும் வாழ்க்கைக்குமான பணத்தேவை அவரது கழுத்தை நெறித்தது. தனது வளர்ப்புத்தந்தையான ஆலனைத் தொடர்புகொண்டார். ஆலனோ, நோய்வாய்ப்பட்டிருந்த தனது மனைவியை வீட்டில் வைத்துக்கொண்டே, மற்ற பெண்களை வீட்டுக்கு அழைத்துவந்து அவர்களுடன் இன்பம் துய்த்துக்கொண்டிருந்தார். ஆகவே, எட்கரைத் துரத்தியடிப்பதே அவரது நோக்கமாக இருந்தது. பணம் எதையும் அனுப்ப மறுத்தார் ஆலன்.
தனது அறையில் இருந்த நாற்காலி, மேஜை ஆகிய அத்தனை மரச்சாமான்களையும் கணப்பில் ஒவ்வொன்றாக உடைத்துப்போட்டுக் குளிர்காயும் நிலைக்குத் தள்ளப்பட்டார் எட்கர். அப்போதுதான் குடியில் மெதுவே மூழ்க ஆரம்பித்தார்.கூடவே,சூதாடியாவது பணம் சம்பாதிக்கமுடியுமா என்று சீட்டாடியதில், இரண்டாயிடம் டாலர்கள் கடனில் மூழ்கினார். பெருங்கடனில், தன்னைத் துரத்தும் கடன்காரர்களுடன், விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே வந்தார்.
பாஸ்டனுக்குச் சென்ற எட்கர், கடன்காரர்களிடமிருந்து தப்பிக்க, எட்கர் ஜே பெர்ரி என்ற பெயரில், தனது பத்தொன்பதாவது வயதில், ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்கள் ராணுவத்தில் இருந்த எட்கரை, தனது வளர்ப்புத்தாய் ஃப்ரான்ஸெஸ் இறந்த செய்தி எட்டியது. இரண்டு தாயார்கள் மற்றும் ஒரு பெண்மணி ஆகிய மூவர், அவரது பத்தொன்பது வயதிற்குள் இறந்தது, அவரது மனதில் தீராத வடுவை ஏற்படுத்தியிருந்தது. ராணுவத்தில் இருந்து வெளியேறினார். தனது அத்தையான மரியா க்ளெம்மின் வீட்டில் வாழத்துவங்கினார். அவரது பனிரண்டு வயது மகள் விர்ஜீனியாவின் மேல் காதல் வயப்பட்டார். ராணுவத்தில் இருந்த இரண்டு வருடங்களில், இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருந்தார் எட்கர் (Tamerlane and Other Poems, Al Aaraaf). எட்கரின் வளர்ப்புத்தந்தை ஆலன் , இத்தருணத்தில் இறக்கிறார். Southern Literary Messenger என்ற பத்திரிகையின் எடிட்டராகப் பொறுப்பேற்கிறார் எட்கர். இந்தப் பத்திரிகையில் எட்கர் எழுதிய புத்தக விமர்சனங்கள், பெரும்புயலைக் கிளப்பின. சராசரி எழுத்தாளர்கள் ஒருவரையும் அவர் மன்னிக்கவில்லை. விளாசித் தள்ளினார். கிழிகிழியென்று கிழித்தார். இதே சமயத்தில், விர்ஜீனியாவுடன் எட்கரின் திருமணம் நடக்கிறது. எட்கருக்கு 26 வயது. விர்ஜீனியாவுக்கோ 13 வயது.சட்டப்பிரச்னைகளைச் சமாளிக்க, விர்ஜீனியாவுக்கு 21 வயது என்று சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டு இத்திருமணம் நடக்கிறது.
சில வருடங்கள், தனது வாழ்வின் முதல் சந்தோஷத்தை, விர்ஜீனியாவுடன் வாழ்ந்ததால் அனுபவித்தார் எட்கர்.
ஆண்டு – 1842. தனது பத்தொன்பதாம் வயதில், இருமும்போது விர்ஜீனியாவின் வாயிலிருந்து ஒருதுளி ரத்தம் வெளிவருகிறது. உடனடியாகவே அது ட்யூபர்ளோஸிஸ் என்று கண்டுகொள்கிறார் எட்கர். மரணம் விர்ஜீனியாவைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ என்று அஞ்ச ஆரம்பித்து, மறுபடியும் பெருங்குடியில் மூழ்கினார். இந்தத் தருணத்தில்தான், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் டைலரைச் சந்திக்க முனைந்தார் எட்கர். முதல் சந்திப்பில், நன்றாகக் குடித்துவிட்டு வெள்ளைமாளிகைக்குச் சென்றதால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, சில நாட்களில் மறுபடி ஜனாதிபதியைச் சந்தித்த எட்கர், அவரிடம் ஒரு வேலை கேட்பதற்குப் பதில், எட்கரின் பத்திரிகைக்குச் சந்தா கேட்டு, அது பலனில்லாமல் அங்கிருந்து வெளியேறுகிறார்.
விர்ஜீனியாவுடன் வாழ்ந்த காலங்களில்தான் எட்கரின் புகழ்பெற்ற படைப்புகள் ஒவ்வொன்றாக வெளியாயின. வாழ்க்கையின் இருண்ட தருணங்களில் அவர் எப்போதும் மூழ்கியிருந்ததால், தனது மனதின் அடியாழத்தில் ஒளிந்திருந்த வாழ்க்கையைக் குறித்த பயத்தை, அவரது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தத் துவங்கினார் எட்கர். மரணங்களைப் பற்றியும், மரணபயத்தைப் பற்றியும் அவரது படைப்புகள் பேசத்துவங்கின. ‘Murders in the Rue Morgue’ வெளிவருகிறது. இக்கதையே ஆர்தர் கானன் டாயலை, ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்க ஒரு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது. அவ்வகையில், உலகின் முதல் துப்பறியும் கதையை எழுதுகிறார் எட்கர்.
இந்தத் தருணத்தில், மேலே நான் குறிப்பிட்டிருக்கும் மூன்று சிறுகதைகளைப்பற்றிய சுருக்கத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு அறையில் விர்ஜீனியா, கொடும் நோயில் படுத்திருக்க, பக்கத்து அறையில் அமர்ந்துகொண்டு,மரணத்தையும் மரண பயத்தையும் அவைகளைப் பற்றிய எண்ணங்களையும் எண்ணிக்கொண்டு, ஒருவித மனப்பிறழ்வு நிலையில் அமர்ந்திருக்கும் எட்கர், எழுதிக்கொண்டிருப்பார். அப்போதைய கொடுமையான மனநிலையில் அவர் எழுதிய ஒரு படைப்பு, புகழின் உச்சத்திற்கு அவரைக் கொண்டுசென்றது.
அதுதான் The Raven என்ற கவிதை. எழுதிய ஆண்டு ஜனவரி 1845.
தனது காதலியின் பிரிவை எண்ணி வருந்திக்கொண்டிருக்கும் ஒரு கவிஞனின் கதையே இக்கவிதை. அவனது அறைக்கதவு தட்டப்படுகிறது. ஆனால் வெளியே யாருமில்லை. அதன்பின் ஜன்னலில் ஒரு ஒலி. ஒரு காகம், உள்ளே பறந்துவந்து அமர்கிறது. இரவு. இருட்டு. அமானுஷ்யமான சூழ்நிலை. காகம், ‘nevermore’ என்ற ஒரே சொல்லைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறது. அக்கவிஞனின் வாழ்விலிருந்து மற்றவர்கள் கரைந்துசென்றுவிட்டதைப்போல்,இக்காகமும் இப்போது மறைந்துவிடப்போகிறது என்று சொல்கிறான் கவிஞன். பதிலாக, அது ‘nevermore’ என்கிறது. காகம் தற்போது அவனது அறையில் உள்ள ‘Athena’ என்ற கிரேக்கக் கடவுளின் சிலையின்மேல் அமர்ந்துகொண்டிருக்கிறது. காக்கையின் அருகில் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொள்ளும் கவிஞன், மெல்லமெல்லக் கற்பனையில் மூழ்கத் துவங்குகிறான். தேவதைகள் நடமாடத் துவங்குகின்றனர். தேவதைகளின் மத்தியில் காகமா? அது ஏதேனும் பிசாசாக இருக்குமா? இப்படிப் பல கேள்விகள். இறுதியில், தொலைந்த தனது காதலி தன்னிடம் வருவாளா? அவளுடன் சேர்ந்து வாழ இயலுமா? என்று காகத்திடம் இறைஞ்சுகிறான் கவிஞன். பதிலாக, ‘nevermore’ (நடக்காது) என்று சொல்கிறது காகம். கோபம் அடையும் கவிஞன். அதனை அதன் இருப்பிடத்துக்கே திரும்பிச்செல்லும்படி சாபமிடுகிறான். ஆனால், காகம் இன்னும் ஏத்னாவின் சிலையின் மேலேயே அமர்ந்துகொண்டிருக்கிறது. இறுதியாக, அந்தக் காகத்தின் நிழலினடியில் தனது ஆன்மா அடைபட்டுக்கிடக்கிறது என்றும், அந்த ஆன்மா எழுச்சியடைவது ஒருபோதும் நடக்காது (nevermore) என்றும் சொல்லிக் கவிதையை முடிக்கிறான் கவிஞன்.
எட்கரின் வாழ்வின் இருள்மையை முழுதாக வெளிக்கொணர்ந்த அந்தக் கவிதையை, பல இடங்களில் படிக்கச்சொல்லி அவருக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. எட்கரிடம் இருந்தது ஒரே கோட்டு. கூடவே, கிழிந்த சட்டை ஒன்று. ஆகவே, சட்டை அணியாமல், கோட்டை கழுத்து வரை இறுக்கமாகப் போட்டுக்கொண்டே இக்கவிதையைப் பல மேடைகளில் படித்திருக்கிறார் எட்கர். பரிசாக அவருக்குக் கிடைத்ததோ, வெறும் 14 டாலர்கள். தனது வாழ்வையே கவிதையாக உருமாற்றிய அந்தக் கவிஞனின் மனம், படாதபாடுபட்டது.
குளிர்காலத்தில், தனது ஒரே கோட்டையும் மனைவி விர்ஜீனியாவுக்கு அணிவித்துவந்தார் எட்கர். பணம் சம்பாதிப்பது மட்டும் அவரால் முடியவில்லை. எழுத்தால் மட்டுமே பணம் என்றே வாழ்ந்ததால், சமுதாயம் அந்த இலக்கியவாதியைப் புறக்கணித்தது. அவனது படைப்புகளை மட்டும் படித்து, அவனது வாழ்வை வாழ அவனுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் அளிக்க மறுத்தது சமுதாயம்.
ஆண்டு 1847. விர்ஜீனியா இறந்தார். கடுமையான மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டார் எட்கர். இக்காலகட்டத்தில், பிற எழுத்தாளர்களோடு சண்டையிட்டும் வந்தார். அப்படி எட்கரால் அடிவாங்கிய எழுத்தாளர் ஒருவர் – பெயர் தாமஸ் டன் இங்க்லீஷ் (Thomas Dunn English), எட்கரைக் கிண்டலடித்து ஒரு கட்டுரை எழுதி, முடிந்தால் தன்மேல் வழக்குத் தொடருமாறு சொல்ல, வழக்குத் தொடர்ந்து, நஷ்ட ஈட்டையும் பெற்றார் எட்கர். ஆனால், அந்தப் பணத்தைக் கொண்டும் தனது காதல் மனைவி விர்ஜீனியாவைக் காப்பாற்ற முடியவில்லை எட்கரால்.
குடி தொடர்ந்தது. குடித்துவிட்டு தனது Raven கவிதையைப் பற்றிப் பேசியதால், மக்களின் கிண்டலுக்கும் ஆளானார் எட்கர். இக்காலத்தில், வேறு சில பெண்களுடனும் தொடர்பு கொள்ள முயற்சித்தார் எட்கர். அதில் ஒருவர்தான், கல்லூரிக் காலத்தில் எட்கருடன் நிச்சயமான எல்மைரா. இக்காலகட்டத்திலேயே, அத்தனை பெண்களுக்கும் ஒரே போன்ற வார்த்தைகளை -சில சமயங்களில் ஒரே கடிதத்தையும் கூட அனுப்பிக்கொண்டிருந்தார் எட்கர். எல்மைராவும் எட்கரும் மறுபடி நிச்சயம் செய்துகொண்டனர்.
ஆண்டு, 1849. திடீரென ஒரு நாள் காணாமல் போனார் எட்கர். என்ன நடந்தது என்றே இன்றுவரை எவருக்கும் தெரியவில்லை. சில நாட்கள் கழித்து, ஒரு தெருவில், அளவில் பொருந்தாத உடைகள் அணிந்து, மயக்கமுற்றுக் கிடந்த எட்கரை, மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் அக்கம்பக்கத்தினர்.
அக்டோபர் 7 – 1849. அதிகாலையில் திடீரென விழிப்பு அடைகிறார் எட்கர். ‘கடவுளே.. எனது பரிதாபத்திற்குறிய ஆன்மாவைக் காப்பாயாக’ என்ற வார்த்தைகளை மிகத்தெளிவாக உச்சரிக்கிறார்.
மரணமடைகிறார் எட்கர் ஆலன் போ. அது அவரது நாற்பதாவது வயது.
வாழ்க்கை முழுதும் தோல்வியுற்ற மனிதனாகவே விளங்கிய எட்கர், காதல் மனைவி விர்ஜீனியாவுடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு சில வருடங்களைத் தவிர, எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை. தனது வாழ்வின் சோகங்களையும் இருட்டையும் தனது படைப்புகளில் இலக்கியமாக மாற்றிய மனிதர் அவர். அவரது படைப்புகளில் கொடுந்துயரம் பொங்கிவழிவதை இன்றும் காண முடியும். அதேசமயம், இனம்புரியாத ஒருவித பயமும் அவற்றில் இருக்கும். வாழ்வில் தனது அன்பிற்குறிய மனிதர்கள் அனைவரும் அவரது கண் முன்னர் இறந்ததனால், மரணத்தைப் பற்றி எட்கர் கொண்டிருந்த பயம் அது.
இப்படிப்பட்ட எட்கர் அலன் போவைப் பற்றிய அற்புதமான டாக்குமெண்ட்ரி இங்கே கிடைக்கிறது. தவறாமல் நண்பர்கள் அனைவரும் இதனைப் பார்க்க வேண்டுகிறேன். இந்த டாக்குமெண்ட்ரியை அனுப்பிய நண்பர் கொழந்தைக்கு எனது நன்றிகள்.
இத்தகையதொரு ஆளுமையாக விளங்கிய எட்கர் அலன் போவைப் பற்றிய திரைப்படம் ஒன்று, 2012 மார்ச்சில் வெளியாகிறது. எட்கர் அலன் போ ஒரு கொலைவழக்கில் துப்பறிவதைப் பற்றிய படம் அது. படத்தின் பெயர் – The Raven.
படத்தின் ட்ரெய்லரை இங்கே காணலாம். படத்தில் எட்கர் அலன் போவாக நடித்திருப்பவர், John Cusack. எட்கர் வேடத்துக்கு இவர் பொருத்தமாக இல்லாவிட்டாலும், இப்படத்தைப் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறேன்.
பல நல்ல தகவலை பகிர்தமைக்கு நன்றிகள்.
நீங்கள் எழுதியதில் மிக முக்கியமானதும் – அற்புதமான பதிவுகளில் இது(வும்) ஒன்று……..
நா காலேஜ் சேர்ந்த புதிதில், NSS மாதிரியான ஒரு விஷயம் இருக்கும்….பக்கத்தில் இருந்த கிராமங்களுக்கு போவோம்…..அதுமாதிரியான ஒரு ட்ரிப்ல், செம மழைன்னு, அந்த கிராமத்து லைப்ரரில ஒதுங்கினோம்…….நா வழக்கம் போல பீட்டர் வுடும் நோக்கில், புக் எதாவது கெடைக்குமா பாத்தப்ப, The Tales of Edgar Allan Poe என்ற புக்கை பார்க்க நேர்ந்தது………அதுவரை அந்த பேரை கேள்விப்பட்டது கூட இல்லை….ஆனாலும், அந்த புக்கின் அட்டைப்படம் வெகுவாக ஈர்த்தது………ஒரு மாளிகை எரிந்துகொண்டிருக்கும்………… குதிரை(அடர் கருப்பு)ரொம்ப கோபமா காலை தூக்கியமாதிரி இருக்கும்…….அன்னைலயிருந்து, போ வின் பெரிய ரசிகனாக மாறிவிட்டேன்…
அப்பறம், The Raven – From the very beginning, நமக்கும் தெரியாம ஒரு அடர்ந்த mystic மூட்டத்துல மாட்டின மாதிரி இருக்கும்..(அவர் எல்லா கதைகளும் அப்புடித்தான)..
Saw படத்தில் – Pit & the Pendulum சாயல் நெறைய இருந்த மாதிரி தெரிஞ்சது…………
ரொம்ப மேலோட்டமா அவர் கதைகள படிச்சா – வெறுமனே ஹாரர் கதைகள் மாதிரி தெரியலாம்….ஆனா, ஆழ்ந்து படிக்கும் போது பல லேயர்கள் இருப்பது தெரிய வரும்…….அந்த லேயர்கள segregate பண்ணி புரிஞ்சுக்க, இது போன்ற பதிவுகள் மிக அவசியம்……
இன்னொரு பகீர் தகவல் சொல்றேன், போ-பத்தி நானும் எழுதலாம்ன்னு இருந்தேன்………நல்லவேல………..நா எழுதியிருந்தேனா – 1880:Aug:23: 11:23 மணி,,,கட்டிலில் புரண்டவாறு ஒரு உருவம் கிடந்ததுன்னு ஆரம்பிச்சு மொக்கையாக்கி – போ வ யாருமே படிக்க தோணாதபடி செஞ்சிருப்பேன்……
டின்டின் ஆகட்டும் -ஷெர்லாக் ஆகட்டும், ஒவ்வொனுக்கும் நீங்க எழுதியிருகுற பதிவுகள், நெஜமாவே ஒரு complete package.யாரு இந்த கதைகளை படிக்க தொடங்கினாலும் இந்த பதிவுகளை படிச்சிட்டு ஆரம்பிச்சா, இன்னும் நெறைய ரசிக்க – புரிஞ்சுக்க முடியும்….நானே ஒரு சிறந்த உதாரணம்……
இவைகள் தவிர, வர்கிஸ் யோசாவோ -ரோசாவோ, அந்த மாதிரி தற்கால எழுத்தாளர்கள் பத்தியும் எழுதுணீங்கனா, ரொம்ப நல்லாவும் – உபயோகமாகவும் இருக்கும்….
உலக வரைபடத்தில் சோமாலியாவை தேடுவதை விட, இதுமாதிரி செமத்தியான பதிவுகளா எழுதி தள்ளனும் என்று வேண்டி விரும்பி கேட்டுக கொள்கிறேன்……..
வேல்யாதும் காப்பி – பதிவுகெல்லாம், வரிஞ்சு கட்டி சண்டைக்கு வந்தாங்க………..இந்த மாதிரி எழுதுனா உருப்படியா ஒண்ணும் பங்களிக்கிறது இல்ல…….என்னமோ போங்க….
@ Mahan.Thamesh – மிக்க நன்றி பாஸ் 🙂
@ கொழந்த – இந்த மாதிரி வருங்காலத்தில் நமக்குப் புடிக்கப்போற விஷயங்கள், மிக எதேச்சையா மக்களுக்கு அறிமுகமாவது தவிர்க்க முடியாது. அதை அடையாளம் கண்டுபுடிச்சி எடுத்துக்குறதும், இக்னோர் பண்ணுறதும் நம்ம இஷ்டம். ஆனா எப்புடியோ, அது நம்ம கிட்ட வந்திரும்னு தோணுது. இதுனால நான் ரசிகன்னும் மத்தவங்க இடியட்ஸ்னும் நான் சொல்ல மாட்டேன் (அந்த மாதிரி ஒரு மீனிங் கனவே ஆகுறமாதிரி தோணிச்சி. அதான்). ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு டேஸ்ட் மச்சி.
அதேமாதிரி, இதை எழுதும்போது, ஒருவேளை நீங்க ஆல்ரெடி எழுதிட்டீங்களோன்னு எனக்கு ஒரு டவுட்டு இருந்துட்டே இருந்தது 🙂 . என்னோட நினைவாற்றல் அப்படிப்பட்டது :-).
இந்த மாதிரி கட்டுரைகள் நல்லா இருக்குறதுக்குக் காரணம், நமக்குப் புடிச்ச விஷயங்களை எழுதும்போது ஒரு ஈடுபாடு வரும். அதான்னு தோணுது. மரியோ பர்கஸ் யோசா பத்தி ஆல்ரெடி எழுதியாச்சே. இதைப் படிங்க – Death in the Andes
அப்புறம், பொதுவா ஜனங்க மனநிலை என்னன்னா, இந்த மாதிரி சீரியஸ் விஷயம் படிக்க கொஞ்சம் கஷ்டப்படுவாங்க. ஜனங்களுக்குத் தேவை ஜனரஞ்சகம். இந்த மாதிரி சீரியஸ் மேட்டரெல்லாம் ரொம்பப் பேரு படிக்க மாட்டாங்க. அதான் இதுக்கு கருத்துகள் வர்றதில்லை. பட், அதைப்பத்தி கவலையில்லை. இதை மக்கள் படிக்கணும்; அது இதுன்னு எனக்கு ஆர்வமும் இல்லை. எனக்குப் புடிச்ச விஷயங்களை எழுதுறேன். அம்புட்டுதேன் .
intha book fair varumpothu vangi padichu poppom….for information chennai book fair january 5-17…
நண்பா,
நலம் தானே?
மிக அபூர்வமானதொரு பதிவு.போவை படிக்கும் ஆவலை உண்டு பண்ணிவிட்டீர்கள்.நல்ல ஒரு சூழ்நிலையில் இவரை படிக்க ஆரம்பிக்கிறேன்.அறிமுகத்துக்கு நன்றி நண்பா,
பிரிச்சி மேஞ்சிட்டீங்க தலைவா! எனக்கு எட்கர் பத்தி எதுவுமே தெரியாது. இந்த கட்டுரைய படிச்சதுக்கு அப்புறமும் எத்தன நாளக்கி அவர ஞாபகம் வச்சிருப்பேன்னு தெரியாது,. ஆனா இந்த கட்டுரைய மட்டும் என்னால மறக்க முடியாது. நன்றி தலைவா!
நீங்க எங்கயோ போயிட்டீங்க தல!!
எட்கர் ஆலன் போ இந்த பெயர முன்னாடி கேள்வி பட்டது கூட கிடையாது.. ஆனா இத படிக்கும்போது ஒரு ஆர்வம் வருது … dark fantasy இத படிக்கும்போதே ஈர்ப்பா இருக்கு.. கண்டிப்பா படிக்க முயல்கிறேன்…
///Saw படத்தில் – Pit & the Pendulum சாயல் நெறைய இருந்த மாதிரி தெரிஞ்சது..//
சத்தியமா இந்த கதைய மேல படிக்கும்போது எனக்கும் saw முதல் பார்ட் கதை நியாபகம் வந்துச்சு…
உங்கள பாதிச்ச (அ) மிக பிடித்த ஒரு விஷயத்த எழுதும்போது, அத படிக்கரவங்களுக்கும் அந்த உணர்ச்சிய உணர வைக்கிற ஒரு அற்புதமான எழுத்து நடை உங்களுக்கு இருக்கு… வாழ்த்துக்கள் ராஜேஷ்…
@ Elamparuthi – சென்னை புக் ஃபேர்ல மறக்காம இதை வாங்குங்க. நல்ல எழுத்தாளர். தேதியை நினைவுபடுத்தியமைக்கு நன்றி
@ கீதப்ரியன் – நண்பா… நான் மிக்க நலம். இன்னிக்கி நைட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணுறேன்.
@ கணேசன் – மிக்க நன்றி. உங்களுக்குப் பிடித்தமை குறித்து சந்தோஷம் 🙂
@ மைந்தன் சிவா – அவ்வ்வ்வவ்வ்வ்வ் . . .
@ முரளி – //உங்கள பாதிச்ச (அ) மிக பிடித்த ஒரு விஷயத்த எழுதும்போது, அத படிக்கரவங்களுக்கும் அந்த உணர்ச்சிய உணர வைக்கிற ஒரு அற்புதமான எழுத்து நடை உங்களுக்கு இருக்கு…// – இது யாருக்கு வேணாலும் பொருந்தும். அதான் நமக்குப் பிடித்த உணர்வின் வெளிப்பாடு. அப்புறம், எட்கர் ஒரு நல்ல எழுத்தாளர். சமூகத்தால, வாழும்போது மறக்கடிக்கப்பட்டு, இறந்தபின் கொண்டாடப்பட்டவர்களில் ஒருவர் 🙁
நமக்கு ஆங்கிலத்தில் அவ்வளவு வேகமாக படிக்க இயலாது!ஒரு புத்தகம் படிக்க ஒரு மாசமாகவேனும் ஆகும்!(The motorcycle Diaries நாப்பது நாள் ஆனது)(தமிழ் புத்தகம்னா இருபது நாள் ஆகும்!).இருந்தாலும் இந்த அறிமுகம் ஒரு நல்ல வாசிப்பை ஊக்குவிப்பதாக உள்ளது!இதை போல நிறைய எழுதவும்!
@கொழந்த இது தெரியாதா?சினிமா பத்தி பேசுறதை விட எழுத்து,புத்தகம் பற்றி பேசுவது மிக மிக குறைவு!Study மற்றும் Read இரண்டுக்கும் வித்யாசம் தெரியாத ஆசாமிகள் 90% உள்ளனர்!
i like this article
தயவு செய்து கொசு தனுஸ் நடித்த மயக்கம் என்ன ஒலக சினிமான்னு விமர்சனம் எழுதிடாதீங்க!புண்ணியமா போகும்!மெண்டல் ஒன்றை கண்ணன் செல்வா ராகவன் படம் பார்த்து செம தல வலி!
உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்
http://www.tamil10.com/
ஒட்டுப்பட்டை பெற
நன்றி
என்னது ஆடுகளம் ஒலக சினிமா ஆயிரத்தில் இருக்கு?அடங்கப்பா!!தனுசும் விடலை பசங்களும் சமூக சீரழிவும் ஞாநி கட்டுரை படிக்க தவறாதீர்கள்.அப்புறம் ஆடுகளத்தை குப்பையில் போடுவதுதான் சரி என்று தோன்றும்!
http://vadakkupatti.blogspot.com/2011/11/blog-post.html
dear rajesh hats off to your article on poe with authentic passion….i understand and share your admiration for poe…in fact matthew pearl has written an excellent novel on the death of poe.My translation of The tell-tale heart was published in Pavalakodi literary magazine.Thank you very much.