Edge of Tomorrow (2014) 3D – English

by Karundhel Rajesh June 11, 2014   English films

பாயிண்ட் 1: 1944ல் ப்ரிட்டன், அமெரிக்கா மற்றும் ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றுசேர்ந்து ஹிட்லரின் நாட்ஸிப் படைகளுக்கு (நாஜி அல்ல) எதிரான தாக்குதலை ஜூன் ஆறாந்தேதி ஃப்ரான்ஸில் உள்ள நார்மண்டி என்ற இடத்தில் துவக்கின. அந்த இடத்துக்கு இந்தப் படைகள் கடல்வழியே போய்ச்சேர்ந்த நாளான ஜூன் ஆறாந்தேதியை D – Day என்று அழைப்பார்கள். அந்த நாளின் எழுபதாவது ஆண்டு இந்த வருடம் ஜூன் ஆறு அன்று நிவைவுகூரப்பட்டது.

பாயிண்ட் 2: டிஸம்பர் 2004ல் ‘All you need is kill‘ என்ற ராணுவ ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் நாவல் ஜப்பானில் வெளியிடப்பட்டது. அதனை எழுதியவர் ஹிரோஷி சாகுரஸாகா (Hiroshi Sakurazaka). மிகவும் பிரபலம் அடைந்த இந்த நாவல் அமெரிக்காவில் க்ராஃபிக் நாவலாகவும், அதன் பின்னர் Edge of Tomorrow என்ற படமாகவும் எடுக்கப்பட்டது.

பாயிண்ட் 3: இதுவரை அமெரிக்காவில் ஆயிரத்தி நானூற்றி முப்பத்தி ஏழு ஏலியன் படங்கள் வெளிவந்துள்ளன. டைம் ட்ராவல் படங்களும் கிட்டத்தட்ட அதில் பாதியாவது இருக்கும். ஸைன்ச் ஃபிக்‌ஷன் என்று எடுத்துக்கொண்டால் அது ஆயிரக்கணக்கில் இருக்கும்.

பாயிண்ட் 4: க்ரிஸ்டோஃபர் மெக்வார்ரீ (Christopher McQuarrie) என்பவர் ஹாலிவுட்டின் டாப் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவர். தனது 27ம் வயதில் 1995ல் இவர் எழுதிய ஒரு திரைக்கதை அந்த ஆண்டின் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை அலேக்காகத் தட்டிச் சென்றது. போட்டியில் இடம்பெற்ற பிற படங்கள்: Toy Story, Nixon & Braveheart. அவர் எழுதிய அந்தப் படம்தான் The Usual Suspects. அதே மெக்வார்ரீதான் இந்தப் படத்துக்கும் திரைக்கதை எழுதியிருக்கிறார். உடன் எழுதியிருப்பவர்கள் பட்டர்வொர்த் சகோதரர்கள். Jack Reacher படத்தை இயக்கியிருப்பதும் இதே மெக்வார்ரீதான். அந்தப் படம் எனக்குப் பிடிக்கும். வெர்னர் ஹெர்ஸாக்தான் அதில் வில்லன்.


 

நார்மண்டி தாக்குதலின் எழுபதாவது வருட நினைவு நாளன்று உலகெங்கும் வெளியிடப்பட்டிருக்கும் Edge of Tomorrowவில் இம்முறை நாட்ஸிக்கள் வில்லன்கள் அல்ல. மாறாக ஏலியன்கள். திடீரென்று பூமிக்கு வரும் இவைகள், ஒரு சில வருடங்களிலேயே ஐரோப்பாவின் பெருமளவு நாடுகளை அழித்துவிடுகின்றன. இவைகளுக்கு ’மிமிக்ஸ்’ (Mimics) என்று பெயர். இதனால் இரண்டாம் உலகப்போரில் இணைந்த நேச நாடுகள் மறுபடியும் இணைந்து ஒரு பெரும் படையைத் தயார் செய்கின்றன. அந்தப் படையின் பெயர் U.D.F (United Defense Forces). இந்த மிமிக்ஸுக்கு எதிராக ஒரு பெரும் போரில் சில நாட்கள் முன்னர்தான் நேச நாடுகள் வெற்றியடைந்திருக்கின்றன. அந்தப் போரின் பெயர் – Battle of Verdun. இந்த வெர்தான் போரில் மிமிக்ஸ் பின்வாங்குவதற்குப் பெரிய காரணம் – நேச நாடுகள் கைவசம் இருந்த ஒரு விசேஷ ஆயுதம். அதன் பெயர் – Jacket. ரோபோ வடிவில் பெரிய துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் அடங்கிய உடை அது. இந்தப் போரில் நேச நாடுகளின் படையில் மிகப்பெரும் சாகஸங்கள் செய்திருப்பது ’ரீடா வ்ரடாஸ்கி’ என்ற பெண். அவள்தான் நேச நாடுகளெங்கும் அந்தப் போரின் Symbol. இதே வெர்தானில் முதல் உலகப்போரில் ஒரு பெரிய சண்டை நடந்திருப்பதும் இங்கே முக்கியம். அதில் ஜெர்மனி தோற்றது.

இந்தச் சூழலில் U.D.Fன் பணிபுரியும் மேஜர் வில்லியம் கேஜ், U.D.Fன் சார்பில் போரைத் தலைமைதாங்கி நடத்தும் ஜெனரல் ப்ரிஹாமைச் சந்திப்பதற்காக அனுப்பிவைக்கப்படுகிறார். வடமேற்கு ஃப்ரான்ஸில் இந்த மிமிக்ஸ் மீது ஒரு பெரும் ரகசியத் தாக்குதல் அடுத்த நாள் நடக்க இருப்பதால் இந்தப் போரை முன்னணியில் இருந்து பதிவு செய்வதுதான் வில்லியம் கேஜ்ஜின் வேலை என்று ப்ரிஹாம் சொல்ல, எந்தப் போர் அனுபவமும் இல்லாத முன்னாள் விளம்பர நிறுவன அதிபரான வில்லியம் கேஜ் சொல்கிறார். இயல்பிலேயே பிடிவாதம் உள்ள ஜெனரல், தனது வீரர்களிடம் கேஜ்ஜைக் கைதுசெய்யச் சொல்லி, மறுநாள் போரில் ஒரு வீரனாகப் பணியாற்றும்படி ஆணையிடுகிறார்.

இதுதான் Edge of Tomorrowவின் ஆரம்பம். இதன்பின் வேறு வழியே இல்லாமல் மறுநாள் கேஜ்ஜுக்குப் போர் உடை மாட்டப்படுகிறது. விமானத்தில் பிற வீரர்களுடன் வலுக்கட்டாயமாக ஏற்றப்படுகிறார் கேஜ். போர்க்களம் வருகிறது. அனைவரும் கீழே குதிக்கின்றனர். பயந்துகொண்டே கடைசியாகக் குதிக்கிறார் கேஜ். இவருடன் வந்த அனைவருமே போரில் இறந்துவிட, தனியாக ஏலியன்களிடம் மாட்டிக்கொள்ளும் கேஜ், தனது கையில் மாட்டப்பட்டிருக்கும் துப்பாக்கியைத் தவறுதலாக இயக்கி ஒரு அரிதான ஏலியனைக் கொன்றுவிடுகிறார். இந்த ஏலியன் ‘ஆல்ஃபா மிமிக்’ என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒண்ணரை மில்லியன் மிமிக்ஸ்களில் ஒரே ஒரு ஆல்ஃபா மிமிக்தான் இருக்கும் என்று பின்னால் அறிகிறார் கேஜ். அந்த ஆல்ஃபா மிமிக்கைக் கொன்றாலும், பிற மிமிக்ஸ் இவரைக் கொன்றுவிடுகின்றன. மறுபடியும் போருக்கு முந்தைய நாளில் திடுக்கென்று ஒரு அலறலுடன் கண்விழிக்கிறார் கேஜ். நடந்ததெல்லாம் கனவு என்று நினைக்கிறார். ஆனால் முந்தைய நாளில் நடந்த அதே சம்பவங்கள் மறுபடியும் அவருக்கு நடக்கின்றன. மறூபடியும் போருக்குப் போகிறார். மறுபடியும் உடன் வருபவர்கள் அதேபோல் சாகின்றனர். மறுபடியும் மிமிக்ஸ் இவரைத் தாக்குகின்றன. இறக்கிறார். மறுபடியும் போருக்கு முந்தைய நாளில் திடுக்கென்று ஒரு அலறலுடன் கண்விழிக்கிறார் கேஜ்.

அப்போதுதான் ஒரே நாளுக்கே அவர் மறுபடி மறுபடி சென்றுகொண்டிருப்பது புரிகிறது. இதனை உடனடியாக அங்கிருக்கும் ராணுவ அதிகாரியிடம் (பில் பேக்ஸ்டன்) சொல்ல, அவர் இதனை நம்ப மறுக்கிறார். மறுபடியும் போருக்குச் செல்கிறார் கேஜ். இந்த முறை, முதல் இரண்டு முறைகளில் நடந்த சம்பவங்களில் இருந்து சிலரைக் காக்கிறார். அப்போது அங்கே சண்டையிட்டுக்கொண்டிருக்கும் ரீடா வ்ரடாஸ்கியைப் பார்க்கிறார். அவளை ஒரு ஏலியனிடம் இருந்து காக்கும்போது இவரை ஏலியன்கள் கொன்றுவிட, சாகும் தறுவாயில் இவரிடம் ரீடா வந்து ‘நீ கண்விழித்ததும் என்னைத் தேடிக் கண்டுபிடித்துப் பேசு’ என்று சொல்கிறாள். இறக்கிறார் கேஜ். மறுபடியும் போருக்கு முந்தைய நாளில் திடுக்கென்று ஒரு அலறலுடன் கண்விழிக்கிறார்.

உடனடியாக ரீடாவைத் தேடிச் செல்கிறார். அவளுடன் பேசும்போதுதான் இதேபோல் ரீடாவுக்கும் சில நாட்கள் முன்னர் வெர்தான் போரில் நடந்திருப்பது அவருக்குத் தெரிகிறது. அங்கே இருக்கும் இன்னொரு நபர், இதன் பின்னணியில் இருக்கும் தகவல்களைக் கேஜ்ஜிடம் சொல்கிறார். கேஜ் கொன்ற மிகவும் அரிதான ஆல்ஃபா மிமிக்குக்கு ஒரு சக்தி உள்ளது. அந்த ஏலியனால் காலத்தை மாற்றியமைக்க முடியும். இது ஏன் என்றால், இப்படிச் செய்வதன்மூலம் நேச நாடுகளின் படைகளின் போர்த் தந்திரங்கள் எல்லாவற்றையும் அந்த மிமிக்ஸ் தெரிந்துகொண்டு, அவர்களை எளிதாக முறியடிக்கமுடியும். இதனால்தான் ரகசியமாக இவர்கள் திட்டமிட்ட போரில் இவர்கள் அனைவரையும் அந்த மிமிக்ஸ் கொன்றிருக்கின்றன. அந்த மிமிக்ஸுக்கெல்லாம் தலைவராக இருக்கும் பிரம்மாண்ட மிமிக்குக்குப் பெயர் ‘ஒமேகா’. அது ஏதோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் மிமிக்ஸைக் கண்ட்ரோல் செய்கிறது. எந்த ஒரு ஆல்ஃபா மிமிக்கும் கொல்லப்பட்டவுடன் இந்த ஒமேகாவுக்குத் தெரிந்துவிடும். ஆல்ஃபா மிமிக்ஸ்தான் ஒமேகாவின் முக்கியமான தளபதிகள் என்பதால் உடனடியாக அது காலத்தை reset செய்துவிடும். இதனால் மறுபடியும் எல்லாமே முதலிலிருந்து ஆரம்பிக்கும். ஆனால் சென்ற முறை போரில் நடந்ததெல்லாம் ஒமேகாவுக்குத் தெரியும் என்பதால் அடுத்தமுறை இன்னும் உக்கிரமாகவும் பயங்கரமாகவும் அவற்றின் தாக்குதல்கள் இருக்கும். அந்த ஆல்ஃபா மிமிக்கைக் கொன்றதால் அதன் ரத்தம் தனது உடலில் பரவியிருப்பதால் தனக்கும் ஆல்ஃபா மிமிக்கின் காலத்தை மாற்றும் சக்தி வந்துவிட்டதைக் கேஜ் அறிந்துகொள்கிறார்.

இனிமேல் கேஜின் வேலை என்ன? கொஞ்சம் கொஞ்சமாக இந்த சக்தியை வைத்து ஒமேகா மிமிக் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது. அதன்பின்னர் அதனை ரீடா வ்ரடாஸ்கி அழிப்பாள். இதுதான் அவர்களுக்கு இடையே நேரும் ஒப்பந்தம்.

All you need is kill manga

 

இதன்பின் கணக்கற்ற தடவைகள் போருக்கு மறுபடியும் மறுபடியும் செல்கிறார் கேஜ் (Trial and Errorக்குத் தமிழில் என்ன?). ஒவ்வொரு படியாக அந்த இடத்தை விட்டு ரீடாவையும் கன்வின்ஸ் செய்து வெளியே வருகிறார். அவருடைய மனதில் திடீரென்று தோன்றும் ஒரு காட்சியில் ஒமேகா இருக்கும் இடம் தெரிகிறது. ஜெர்மனி. அந்த இடத்தை நோக்கி இருவரும் பயணிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் படிப்படியாக, சிறுகச்சிறுக ஜெர்மனியை நோக்கிச் செல்கிறார்கள். கொல்லப்படுகிறார்கள். மறுபடியும் செல்கிறார்கள். இப்படி நடக்கும் பயணங்களில் ரீடாவின்மேல் கேஜ்ஜுக்கு அன்பு துளிர்க்கிறது. இதனால் ஒருமுறை அவளை அழைக்காமல் தானே ஜெர்மனி செல்கிறார். ஆனால் அந்த இடத்தில் ஒமேகா இல்லை.

இது ஏன் என்று ரீடாவுடன் யோசிக்கும்போதுதான் ஒமேகாவின் மாஸ்டர் ப்ளான் புரிகிறது. அது என்ன ப்ளான்?

இனிமேல் ஸ்பாய்லர்கள் ஆரம்பம். படத்தை ஸ்பாய்லர்கள் இல்லாமல் படிக்க விரும்புபவர்கள், ஒருசில பத்திகளுக்குப் பின்னால் ‘ஸ்பாய்லர்கள் முடிவடைகின்றன’ என்ற அறிவிப்புக்குப் போய்விடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒமேகாவின் மாஸ்டர் ப்ளான் இதுதான். வேண்டுமென்றே தவறாக ஒரு இடத்தை கேஜின் மனதில் காட்டிவிட்டால் அங்கே கேஜ்ஜை வரவைத்து அழிக்கலாம். கேஜ்ஜைப் போர்க்களத்தில் அழிக்க முடியாது. காரணம் எக்கச்சக்கமான தடவைகள் போருக்குச் சென்று அங்கே நடக்கும் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாகக் கேஜ் கவனித்து வைத்திருப்பதுதான். அதேபோல் அந்த ரகசிய இடத்துக்கு கேஜ் வரும்வரை நடக்கும் எல்லாமே கணக்கற்ற தடவைகள் கேஜ் அனுபவித்திருக்கிறான். ஜெர்மனியில் ஒமேகா இருப்பதாக இவனது மனதில் தோன்றிய அந்த ரகசிய இடத்துக்கு கேஜ்ஜால் ஒருமுறைதானே செல்ல முடியும்? காரணம், அந்த இடத்தில் ஒமேகா இல்லை என்று தெரிந்துவிட்டால் அங்கே அவன் செல்லமாட்டான்தானே? இதனால் அங்கே அவனைக் கொன்றுவிடலாம் என்று ஒமேகா ப்ளான் போடுகிறது. ஆனால் அது தோல்வியடைகிறது.

இதற்குப் பின்னர் கேஜ்ஜும் ரீடாவும் பேசிக்கொள்ளும்போது, ஏற்கெனவே ரீடாவுக்கு இப்படிப்பட்ட காலமாற்ற சக்தி கிடைத்தபோது அவளுடன் இருந்த விஞ்ஞானி ஒருவர் உருவாக்கிவைத்திருக்கும் கருவி ஒன்றைப் பற்றி ரீடா சொல்கிறாள். அந்தக் கருவியின் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும் மிமிக்ஸ்களின் நெட்வொர்க்குக்கு உள்ளே அதே காலமாற்ற சக்தியை ஆல்ஃபா மிமிக்கிடம் இருந்து பெற்றுள்ள கேஜ்ஜால் ஊடுரூவ முடியும். அப்படி மட்டும் கேஜ் ஊடுரூவிவிட்டால், ஒமேகா ஒளிந்திருக்கும் உண்மையான இடம் தெரிந்துவிடும். அதன்பின்னர் அதை அழித்துவிடலாம். ஆனால் சிக்கல் என்னவென்றால், அந்தக் கருவி இருப்பது ஆரம்பத்தில் கேஜ்ஜைப் போருக்கு அனுப்பிய கடுவன்பூனை ஜெனரலின் அலுவலகத்தில்தான்.

இருவரும் அங்கேயும் கணக்கற்ற முறைகள் செல்கிறார்கள். ஒவ்வொரு முறை செல்லும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக ஜெனரின் அறையருகே செல்கிறார்கள். கடைசியாக ஜெனரலிடம் பேசி அந்தக் கருவியையும் வாங்கிவிடுகிறார்கள். ஆனால் வெளியே வரும்போது ஜெனரலின் ஆட்களால் துரத்தப்படுகிறார்கள். காரில் தப்பிக்கும்போது கருவியின் உதவியால் ஒமேகா இருக்கும் இடம் பாரிஸின் லூவர் (Louvre) ம்யூஸியத்துக்கு அடியே என்பது தெரிகிறது. அந்த நேரத்தில் அடிபட்டு மயங்கும் கேஜ்ஜின் உடலில் புதிதாக ரத்தம் செலுத்தப்படுவதால் காலமாற்ற சக்தி அவனை விட்டுப் போய்விடுகிறது.

இதன்பின்னர் ஒமேகாவை இவர்கள் அழித்தார்களா இல்லையா என்பதே க்ளைமேக்ஸ்.

இங்கே ஸ்பாய்லர்கள் முடிகின்றன.

allyouneediskill-edge-of-tomorrow-08

இந்தப் படத்தின் கதை மிகவும் சிம்பிள்தான். ஏலியன்கள் – போர் – மனிதர்கள் என்ன செய்தார்கள் என்பது. ஆனால் இப்படிப்பட்ட கதைக்கு அட்டகாசமான திரைக்கதை எழுதியதால்தான் இந்தப் படம் இறுதிவரை சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது. ஒவ்வொருமுறை கேஜ் கால மாற்றத்துக்கு ஆளாகித் திரும்பவரும்போதும் அவன் செய்யும் காமெடிகள் நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. இது வழக்கமான மொக்கை டாம் க்ரூஸ் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் இல்லை. இந்த விதமான திரைக்கதையை ஏற்கெனவே Groundhog Day படத்தில் இதேபோல் அட்டகாசமாகக் காட்டியிருப்பார்கள். பில் மர்ரி (Bill Murray) பின்னியெடுத்திருக்கும் படம் அது. அதை இதுவரை பார்க்காதவர்கள் அவசியம் அந்தப் படத்தைப் பார்க்கலாம். இதுவரை வந்திருக்கும் டைம் ட்ராவல் படங்களில் டாப் படங்களில் ஒன்று இது.

அதேபோல் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான Source Code திரைப்படத்தையும் சொல்லலாம். இந்த இரண்டு படங்களையும் பார்த்தவர்களுக்கு Edge of Tomorrow இன்னமும் எளிதாகப் புரிந்துவிடும்.

டாம் க்ரூஸ் வழக்கமாக செய்யும் ஹீரோயிஸ ஸ்டண்ட்கள் இதில் இல்லை. மாறாக, நம்மூரில் ஏற்கெனவே ரஜினி பிரபலப்படுத்தியிருக்கும் காமெடி ஹீரோவாக நடித்திருக்கிறார் க்ரூஸ். ஏற்கெனவே ஏராளமான ஸைன்ஸ் ஃபிக்‌ஷன்களில் வரிசையாக ஒரேபோன்ற ரோல்களில் நடித்திருக்கும் டாம் க்ரூஸை இப்படிப் பார்ப்பது கொஞ்சம் refreshing அனுபவம்தான்.

படத்தின் ஹீரோயின் ரீடாவாக எமிலி ப்ளண்ட். இந்த ராணுவ வீராங்கனை ரோலுக்கு இவர் சரியாகப் பொருந்துகிறார். சில ஸ்டண்ட்களும் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தின் திரைக்கதை இதனை உலக ஹிட் ஆக்கப் போவதில் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் படத்தைப் பார்த்துமுடிக்கும்போது, ‘என்னதான் திரைக்கதை நன்றாக இருந்தாலும் இன்னும் சில இடங்களில் இம்ப்ரவைஸ் செய்திருக்கலாம்’ என்றுதான் தோன்றுகிறது. காரணம் படத்தில் சம்பவங்கள் ஏற்கெனவே நாம் பலமுறை பல படங்களில் பார்த்த அதே க்ளிஷேடான சம்பவங்களாகவே இருக்கின்றன. படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு அது புரிந்துவிடும். அவற்றையெல்லாம் கொஞ்சம் மாற்றியிருந்தாலே படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். அதேபோல் கதாபாத்திரங்களில் எந்தவித ஆழமும் இல்லாத படம் இது.  டாம் க்ரூஸ் கதாபாத்திரத்தோடு நம்மால் travel செய்ய முடிவதில்லை. காரணம் அவரைப் பற்றி ஒரே ஒரு தகவல் மட்டுமே நமக்குத் தெரிகிறது – ராணுவத்தில் சேரும் முன்னர் அவர் விளம்பர நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தார் என்பது. அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா? குழந்தைகள் உள்ளார்களா? அந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன பிடிக்கும்? பிடிக்காது? எந்தத் தகவலும் இல்லை. இதனால் அந்தக் கதாபாத்திரத்தோடு ஒன்றவும் முடிவதில்லை. எமிலி ப்ளண்ட்டின் ரீடா கதாபாத்திரம் அட்லீஸ்ட் கொஞ்சமாவது தன்னைப் பற்றிய விஷயங்களைச் சொல்கிறது. இதனால் அந்தப் பாத்திரத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அது போதவில்லை என்பதால் அந்தக் கதாபாத்திரத்தின் மீதும் எந்தப் பிடிப்பும் வருவதில்லை. படத்தில் பெரும்பாலான நேரங்கள் இவர்கள் மட்டுமே வருவதால் இவர்கள் இருவரின் மீதும் இண்ட்ரஸ்ட் துளியும் இல்லாமல் போகிறது. இதனால் காட்சிகள் ஆழமில்லாமல் உள்ளன. படத்தின் திரைக்கதை மட்டும் மொக்கையாக இருந்திருந்தால் இந்தப் படம் அவசியம் ஃப்ளாப்.

உலகெங்கும் இப்படிப்பட்ட கதையமைப்பு உள்ள படங்கள்தான் தற்போது வெற்றிபெற்றுக்கொண்டிருக்கின்றன. கதை என்பதில் துளிக்கூட கவனம் செலுத்தாமல், இரண்டு மூன்று ஸ்பெஷலிஸ்ட் திரைக்கதையாளர்களை அமர்த்தி, கதையின் காட்சிகளை நன்றாக எழுதி இவற்றை ஆடியன்ஸுக்குப் பிடிக்கும்படி வைத்துவிட்டால் தீர்ந்தது பிரச்னை என்பதுதான் ஹாலிவுட்டின் தற்போதைய நோக்கம். சில வருடங்களுக்கு முன்னராவது அவ்வப்போது நல்ல கதையுடன் உணர்வுபூர்வமான படங்கள் அங்கே வந்தன. ஆனால் இப்போதெல்லாம் அவற்றைப் பார்க்கவே முடிவதில்லை.

டாம் க்ரூஸ் இனிமேல் ஒரு ரொமண்டிக் படத்திலோ வேறு வகையான படத்திலோ நடித்தால்தான் நன்றாக இருக்கும். அவரது முகத்தைப் போஸ்டரில் பார்த்தால் இப்போதெல்லாம் எந்தப் படம் அது என்றே தெரிவதில்லை. Oblivion, Edge of Tomorrow, Minority Report, War of the Worlds என்று ஒரேபோன்ற படங்களில் நடிப்பதால் வந்த பிரச்னை இது.

கதையே இல்லாமல் திரைக்கதையாலேயே ஓடும் படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அந்தத் திரைக்கதை எப்படியெல்லாம் ஆடியன்ஸைக் கவர்கிறது என்பதை அவசியம் பார்த்துதான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் தவறாமல் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.  திரைக்கதை எழுதியிருக்கும் மூவருமே திறமைசாலிகள். காட்சிகள் எல்லாருக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதப்பட்டிருக்கின்றன. இதில் இருக்கும் டைம் ட்ராவல் கான்ஸெப்ட் அவசியம் குழந்தைகளுக்குக் கூடப் புரியும். திரைக்கதையின் மீது ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கையில் எந்தெந்த சம்பவங்கள் முக்கியமானவை என்று யோசித்துப் பார்க்கலாம். அதுவே ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும்.

  Comments

9 Comments

  1. Badshah

    I read a review, it says.. in recent times of Tom cruise movies this is the only movie where he is not an expert.. this really works for the movie

    Reply
    • Rajesh Da Scorp

      I too have written about it in my post. I completely agree

      Reply
    • Rajesh Da Scorp

      Thanks Ahamed

      Reply
  2. jackka

    blah , blah blah

    Reply
  3. Accust Here

    Which way it is better to watch 3D or 2D

    Reply
    • Rajesh Da Scorp

      2D and 3D – they do not make a difference in 95% new films. There are mostly no 3D effects, and hence you can see it in 2D itself.

      Reply
  4. உங்கள் சிறப்பான விமர்சனமே என்னை இந்த படம் பார்க்க தூண்டியது.

    அற்புதமான கதைக்கு அட்டகாசமான திரைக்கதை. டாம் க்ரூஸ் நடித்த படங்களில் War of World க்கு பிறகு அவரது நடிப்பு மிக அற்புதமாக இருந்த படம் இதுவே. செத்து செத்து பிழைப்பது என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன என்பது டாம் க்ரூஸின் நடிப்பை பார்க்கும் போதுதான் தெரிகிறது. தினமும் இறப்பது, நம் நண்பர்கள் நம் கண் முன்னால் சாவது என்று கொடுமையான வாழ்க்கை வாழ யாருக்குதான் பிடிக்கும். இந்த படத்திற்கு நிச்சயம் ஒரு அவார்ட் டாமின் நடிப்புக்கும் மற்றொன்று திரைகதைக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    Reply
  5. Parthiban

    Trial and Error- முயற்சியும் தவறுகளும் என்று வைத்துக்கொள்ளலாம்.
    Just i mentioned here, i am not an expert in translation in Tamil, like u boss.

    I used to come your site, karundhel.com, daily for checking your updates, and i spend most of the time for reading your reviews, articles, etc., . Thanks keep going.

    Reply

Join the conversation