Exile – A Charu Nivedita Novel
‘எக்ஸைல்’ நாவலின் முதல் விமர்சனமாக என்னுடைய விமர்சனத்தைத் தன்னுடைய ப்ளாக்கில் வெளியிட்ட நமது சாருவுக்கு நன்றிகள். இன்று வெளியிடப்படும் இந்நாவல் விழா, கட்டாயம் பெருவெற்றியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
சாருவின் ப்ளாக்கில் உள்ள விமர்சன சுட்டி இங்கே.
எக்ஸைலுக்கு முதல் விமர்சனம்: கருந்தேள்
இந்த விமர்சனத்தை இனி இங்கேயும் படிக்கலாம். நன்றி.
Autobiography? No, that is a privilege reserved for the important people of this world, at the end of their lives, in a refined style. Fiction, of events and facts strictly real; autofiction, if you will, to have entrusted the language of an adventure to the adventure of language, outside of the wisdom and the syntax of the novel, traditional or new. Interactions, threads of words, alliterations, assonances, dissonances, writing before or after literature, concrete, as we say, music.
‘சுயசரிதை என்பது, உலகின் முக்கியமான நபர்களுக்கு, அவர்களது வாழ்க்கையின் முடிவில், நாகரிகமான நடையில் எழுதப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. உண்மையான சம்பவங்களையும் தகவல்களையும் வைத்து எழுதப்படும் நாவலை, Autofiction என்றே சொல்லலாம். அது, சுயசரிதை அல்ல. சாகஸத்தின் மொழியை, மொழியின் சாகஸத்தைக் கொண்டு, மரபு சார்ந்ததாகவோ அல்லது புதியதாகவோ உள்ள அந்த நாவலின் வடிவத்துக்கும் நுட்பத்துக்கும் வெளியே வைத்து எழுதுவது. சம்பாஷணைகள், வார்த்தைகளின் கோர்ப்புகள், வார்த்தை விளையாட்டுகள், முரண்பாடுகள் ஆகியவற்றை உறுதியான வகையில், இசையைப்போல், இலக்கியத்துக்கு முன்பும் பின்பும் எழுதுவது‘
– Serge Doubrovsky
சாரு நிவேதிதாவின் ’எக்ஸைல்’ நாவலை, வெளிவரும் முன்னரே படிக்கக் கிடைத்த ஒருசில நபர்களில் ஒருவனாக இருப்பது பற்றி, சந்தோஷம் அடைகிறேன். இரவு ஒன்பது மணிக்குப் படிக்க ஆரம்பித்து, அதிகாலை இரண்டு மணிக்குப் படித்து முடித்து விட்டேன். மொத்தம் ஐந்து மணி நேரம். எங்கும் செல்லவில்லை. படிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. சாருவின் நண்பன் – அவரது எழுத்தின் தீவிர ரசிகன் என்ற நோக்கில் பார்த்தால், நாவல் அற்புதம் என்று தாராளமாகச் சொல்லிவிடலாம். ஆனால் – சாரு யாரென்றே தெரியாத ஒரு இலக்கிய ரசிகன், இந்த நாவலைப் படிக்கத் துவங்கினால், அந்த அனுபவம் அவனுக்கு எப்படி இருக்கும்?
பொதுவாக, நமக்குத் தனிப்பட்ட முறையில் பல நாவலாசிரியர்களைத் தெரிய வாய்ப்பு இல்லை. ஒரு புதிய நாவல் வந்துள்ளது என்றால், அதனை வாங்கிப் படிக்கும் தருணங்களிலும் கூட, அந்த நாவலாசிரியரைப் பற்றிப் பொதுவில் புழங்கும் செய்திகளின் வாயிலாகவே அவரை அறிய நேர்கிறது. ஆகவே, நாவலாசிரியரைப் பற்றிய எண்ணங்கள், அந்த நாவலைப் படிக்கத் தடையாக இருப்பதில்லை. தடை என்று சொல்வதை விட, அந்த எண்ணங்கள், நம்மை biased ஆகச் செய்வதில்லை. ஆகவே, அந்த நாவலில் முழுமையாக மூழ்கிவிட முடிகிறது. அப்படி ஒரு பொதுவான இலக்கிய ரசிகன் – சாரு என்றால் யாரென்றே தெரியாத மனிதன் – நாம் எப்படி ஒரு ஓரான் பாமுக்கையோ அல்லது லோசாவையோ அல்லது ஆதவனையோ படிக்க நேர்கிறதோ, அப்படிச் சாருவின் இந்த நாவலைப் படிக்கும் ஒரு இலக்கிய ரசிகனின் பார்வையில் இந்த நாவலை அலசலாம். கட்டுரையின் முடிவில், அல்லது தனிப்பட்ட கட்டுரை ஒன்றில், சாருவின் நண்பனாக இந்த நாவலைப் பற்றிய கருத்தை எழுத முயல்கிறேன்.
சேர்ஜ் துப்ரோவ்ஸ்கியின் ‘Fils’ என்ற ஃப்ரெஞ்ச் நாவலில் இருந்து கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோளை கவனித்தீர்களா? அதுதான் ‘எக்ஸைல்’ நாவலின் அடிநாதம். Autofiction என்றால் என்ன? இதனைப் புரிந்துகொண்டால், எக்ஸைல் நாவல் ஒரு குறிப்பிட்ட விதமான அனுபவத்தைக் கொடுக்கும். Autofiction என்றால் என்ன என்றே தெரியாமல் இந்நாவலைப் படித்தால், அது இன்னொரு விதமான அனுபவத்தைக் கொடுக்கும்.
தமிழ்நாட்டில் கொள்கைப் பிடிப்புள்ள இலக்கியவாதியாக வாழ்வது ஒரு அவலம். எந்தக் கொள்கையும் இல்லாமல், காக்காய் பிடித்து, ஜால்ரா தட்டி சுகமான வாழ்வை வாழ்ந்து விடலாம். ஆனால், உறுதியானதொரு கொள்கையுடன், சமரசம் செய்யாத வாழ்க்கையை வாழ முனையும் ஒரு இலக்கியவாதியின் கதறலே எக்ஸைல். உதயா என்று ஒரு எழுத்தாளன். அவனுக்கு, இங்கே தன்னுடைய உயிரைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்வதே ஒரு பிரச்னையாக உள்ளது. இதற்கும் மேல் அவனுக்கு, அவனது சமூகத்தின் மீதும், சுற்றுப்புறத்தின் மீதும் சில விமர்சனங்கள் உள்ளன. ஆனாலும், அவனால் வேறு எங்கும் போய் வாழ்ந்து விடவும் இயலாது. ஆகவே, நாடு கடத்தப்பட்டு, புகலிட வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் போல் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் உதயா. அப்படிப்பட்ட வாழ்வை வாழ்வதற்கான காரணங்களை, நாவலைப் படிக்கும் வாசகனின் முன் எடுத்து வைக்கிறான். அவனைப் பல்வேறு திசைகளிளிருந்தும் போட்டு அழுத்திக் கொண்டிருக்கும் சுமைகளைத் தாங்கிக் கொண்டு அவன் எப்படி வாழ்கிறான் என்பது, நாவலின் முன்பாதியின் ஆரம்பப் பக்கங்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. எக்ஸைலின் ஒரு பகுதி அது.
எழுத்தாளனின் வாக்குமூலம் என்றதும், நாவல் ஒரேயடியாக இருண்ட தன்மை உடையதாக இருந்துவிடப் போகிறது என்ற முன்முடிவை அவசரமாக எடுப்பவர்களுக்கு – நாவலில் இந்த gloominess அறவே இல்லை என்று சொல்லி விடலாம். பொதுவாகவே, இலக்கியம் என்ற வார்த்தை உச்சரிக்கப்பட்டவுடன், gloominess என்ற வார்த்தையும் சேர்த்தே உச்சரிக்கப்படுவதுபோலவே ஒரு கருத்து நிலவிக் கொண்டிருக்கிறது. சாருவின் ‘ராஸலீலா’ நாவலை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், அந்நாவலின் முதல் பகுதியான ‘கண்ணாயிரம் பெருமாளும் நாற்பது கதைகளும்’ என்ற பகுதியில், கண்ணாயிரம் பெருமாள் என்ற கதாபாத்திரம் அனுபவித்த கொடும் வாழ்க்கை மிகத் தீவிரமாகவும், விரிவாகவும் விளக்கப்பட்டிருக்கும். ஆனால், அது எந்த வகையிலும் gloomyயாக இருக்கவே இருக்காது. ‘Pleasure of the text’ என்ற பதத்துக்கு மிகச் சரியான உதாரணம் ராஸலீலா. அதேபோல, சாருவின் அடுத்த நாவலான ‘காமரூபக் கதைகள்’, இன்னொரு சந்தோஷமான அனுபவம். இதேபோல்தான் எக்ஸைல் நாவலும். நாவலின் முதல் பாதியில், உதயா என்ற எழுத்தாளனின் அவலம் விரிவாகவே எழுதப்பட்டிருந்தாலும், அதில் gloominess அறவே இல்லை.
உதயாவுக்கு, குஷால்தாஸ் என்ற கார்ப்பரேட் சாமியாரால் ஏற்பட்ட துன்பியல் சம்பவங்களும் – குஷால்தாஸின் தியான வகுப்புகளில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் அடுத்து வருகின்றன. இவையுமே அவனது சமூகம், அவனுக்கு அளித்த ‘பரிசுகள்’ தான்.
இதன்பின் – இல்லையில்லை – மேலே சொன்ன சம்பவங்களுடனே சேர்த்து ஆரம்பிக்கிறது அஞ்சலி என்ற பெண்ணை உதயா சந்தித்த கதையும், இருவரும் ஒருவர்மேல் ஒருவர் கொண்ட மூர்க்கமான காதல் பற்றிய விவரணைகளும். இதன்பின் அஞ்சலியின் கதை வருகிறது. மிக மிக விரிவாக – ஒரு துயரமான கவிதையைப் போலவே, அஞ்சலியின் கதை நம்மைத் தாக்குகிறது. ஸீரோ டிகிரியில் அவந்திகாவின் கதை நினைவிருக்கிறதா? அதை விடவும் இந்தக் கதை தீவிரமான ஒன்றாக எனக்குத் தோன்றியது.
இந்த இடத்தில்தான் ஆரம்பிக்கிறது கொக்கரக்கோவின் தலையீடு.
உண்மையில் நாவலின் தொடக்கத்தில் இருந்தே கொக்கரக்கோ என்ற கதாபாத்திரம் தனது கருத்துக்களை ஆங்காங்கே பதிந்து வந்தாலும், அஞ்சலியின் கதையில் அந்தத் தலையீடு, மிகவும் அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது. ஏனெனில், அஞ்சலியின் கதையைப் படிக்கும் வாசகர்களுக்கு, உலகின் அத்தனை பெண்களின் கதையுமே இதைப் போலவேதான் துயரமாக இருக்குமா? அது ஏன் உதயா சந்திக்கும் அத்தனை பெண்களுக்கும் இப்படிப்பட்ட பின்னணிக் கதை இருக்கிறது? போன்ற கேள்விகள் எழக்கூடும். இந்தக் கேள்விகளை, அந்தந்த இடங்களில் கனகச்சிதமாக எழுப்புகிறான் கொக்கரக்கோ. கதையின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி, இந்தக் கேள்விகளைக் கேட்டு விட்டே கதையைத் தொடரச் செய்கிறான் அவன். இந்தக் கேள்விகளில் என்ன விசேஷம் என்றால், இந்நாவலை எழுதிய சாரு என்ற எழுத்தாளர், ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம், கதையை ஒரு குறிப்பிட்ட விதமான போக்கில் எடுத்துச் செல்ல வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒரு Point of view உள்ளது. கதையும் அந்த வகையிலேயே பயணிக்கிறது. ஆனால், அதே சமயம், அந்தப் பாயின்ட் ஆஃப் வ்யூவுக்கு நேர் எதிர்த்திசையில் இன்னொரு கதாபாத்திரம் பயணிக்கிறது. முந்தைய கதாபாத்திரத்தைப் பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. இந்தச் சூழ்நிலையில், இரண்டு கதாபாத்திரங்களுமே நியாயமானவையாக நமக்குத் தோன்றும் அளவு, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கூடு விட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் சாரு என்கிற நாவலாசிரியர். அது, நான் படித்த வரையில், கொஞ்சம் அரிதான விஷயம். எப்போதுமே நாவலை எழுதும் நபருக்கு இருக்கும் முன்முடிவையும் அவரது சமுதாயக் கருத்துக்களையும் வைத்தே அதில் உள்ள கதாபாத்திரங்கள் பேசும். ஆகவே, ஆசிரியரின் கருத்துக்கு ஒவ்வாத கதாபாத்திரம் இறுதியில் ‘நல்ல’ கதாபாத்திரம் ஒன்றினால் தோற்கடிக்கப்படும். ஆனால், எக்ஸைல் நாவலில், அஞ்சலியும் கொக்கரக்கொவும் முற்றிலும் எதிரான கதாபாத்திரங்களாக இருந்தாலும், ஒவ்வொருவரும் எடுத்து வைக்கும் வாதங்கள் யாராலும் முறியடிக்கப்படுவதில்லை. இந்த இரண்டு கதாபாத்திரங்களின் அவதானமுமே சரியானதாக இருக்கிறது – அவரவர்களின் கோணத்தில்.
இது, இந்நாவலின் மற்றொரு ப்ளஸ் பாயின்ட்.
நாவலின் இறுதிப் பக்கம் வரையிலும் இந்த யுத்தம் – அஞ்சலிக்கும் கொக்கரக்கோவுக்கும் உள்ள கருத்துகள் சார்ந்த யுத்தம் – தொடர்கிறது.
இதைத் தவிர, நாவலின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையிலும் பல கதாபாத்திரங்களைக் காண்கிறோம். அந்தக் கதாபாத்திரங்கள் ஏன் நாவலில் நுழைந்தனர் என்பதற்கும் தக்க பதில், அவர்களின் பின்புலம் வாயிலாக நமக்குப் படிக்கக் கிடைக்கிறது. கூடவே, நாவலில், இந்திய மரபின் பாரம்பரியத்தை விளக்கும் பல விஷயங்கள் உள்ளன. சித்தர் கதைகள், அவர்களது பாடல்கள், அவர்கள் அருளிய எந்திரங்கள், ஐயப்பன், குருவாயூர் கேசவன் என்ற யானை, கருவூரார், உதயாவின் நண்பன் சிவாவின் பித்தநிலை போன்ற பல சுவாரஸ்யமான உபகதைகள் இதில் உண்டு.
இந்தக் கதாபாத்திரங்களைக் கவனிக்கையில், மனித வாழ்வின் அபத்தங்கள் பற்றிய எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியாது. ப்ரான்ஸில் குணரத்னம் என்ற மனிதரைப் பார்க்கிறான் உதயா. அவர் எப்படிப்பட்டவர் என்றால், இருபது வருடங்களாக அங்கே இருந்துகொண்டு, வேலையில் இருந்தபோது உடல்நலம் குன்றியதால் தற்போது அரசாங்க உதவித் தொகையால் வாழ்பவர். எப்போது பார்த்தாலும் குடித்துக் கொண்டே இருப்பவர். குடிப்பது ஏனெனில், தான் வாழ்ந்த மண்ணை மறப்பதற்காக. அந்த மண்ணின் துயர எண்ணங்கள் மனதில் எழும்போதெல்லாம் குடிப்பார். அதேபோல் எப்போதுபார்த்தாலும் பழைய நினைவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார். ஒரு புகைப்படத்தைப் பார்த்தால், அதிலுள்ளவர்களைப் பற்றி ஒரு மணி நேரம் பேசக்கூடிய அவருடன் மூன்று நாட்கள் வாழ்ந்ததைப் பற்றி எழுதுகிறான் உதயா. குணரத்னத்தின் வாழ்வின் வெறுமையை நம் கண்முன் நிறுத்தும் அந்த விவரிப்பைப் படித்தால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.
செல்லப் பிராணிகளைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவரின் உதவியாளர் ஒருவரைப் பற்றிய மிகச் சிறிய விவரிப்பு இந்நாவலில் வருகிறது. அரைப்பக்கம்- மிஞ்சினால் ஒரு பக்கம் இருக்கும். ஆனால், அந்த மனிதனின் வாழ்வை அதில் சாரமாக்கி உதயா எழுதியிருக்கிறான். அதன் தீவிரத்தை எழுதுவது அரிது. படித்தால் மட்டுமே அது விளங்கும்.
இதைப் போல இந்நாவலில் பல மிகச் சிறிய விவரிப்புகள் உள்ளன. அந்த விவரிப்புகளை ஒருமுறை படித்தாலும், எப்போதும் மறக்கமுடியாத தாக்கம் உடையவை. அவைகளைப் படித்தாலே, வாழ்வின் அபத்த நிலைகளைப் பற்றிய உதயாவின் கேள்விகளை நாம் அறிய முடியும்.
கூடவே, இந்நாவலில் ஆன்மீகவாதிகளைப் பற்றிய அவதானிப்பும் உள்ளது. அன்பையும் அஹிம்ஸையையும் மக்களுக்கு எடுத்தியம்ப வேண்டிய இந்த ஆன்மீகவாதிகள், தங்களளவில் எப்படி வன்முறையாளர்களாகவும், அடுத்தவர்களது வாழ்வினைக் கெடுக்கக் கூடியவர்களாகவும் உள்ளார்கள் என்று உதயா எழுதுகிறான். இந்த மாதிரி ஆசாமிகளிடம் எங்கேயிருக்கிறது அன்பும் அஹிம்ஸையும்? மாறாக, லௌகீக வாழ்வில் எவருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்கக்கூடாது என்பதை வாழ்வு நெறியாகவே கொண்ட உதயா, இந்த சாமியார்களை விடவும் எத்தனையோ நல்லவன் என்பதை நாவலில் வரும் சம்பவங்களிலிருந்து அறிகிறோம். இது எவ்வளவு பெரிய நகைமுரண்?
சபரிமலையில், ஒரு சமயம் விபத்து ஒன்று நேர்ந்து, அதில் பலபேர் பலியானபோது, தொலைந்துபோன தனது பேரனைத் தேடிய குருசாமி ஒருவர் இந்நாவலில் உண்டு. நூற்றுக்கணக்கான மனிதர்களின் பிணங்களை இழுத்துப்போட்டுக்கொண்டே தனது பேரனைத் தேடியதாக அவர் சொல்கிறார். சபரிமலையில் ஏன் அப்படி நடக்கவேண்டும்? உதயாவின் மனதில் இருக்கும் இந்தக் கேள்வியைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.
எனக்கு இந்நாவலிலேயே மிகப்பிடித்த இடம் – என் பெயர் பக்கிரிசாமி என்று தொடங்கும் ஒரு கதை. அதைப்பற்றி நான் இங்கே சொல்லப்போவதில்லை. படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
நான் மேலே சொன்ன விஷயங்களைத் தவிர, நாவலில் முதல் சில பக்கங்களிலேயே ஒரு க்ளைமேக்ஸ் வருகிறது. இதுதவிர, நாவலின் இறுதியில் ஐந்து க்ளைமேக்ஸ்கள். உதயா முதன்முதலில் எழுதிய ஃப்ரெஞ்ச் கவிதை ஒன்றும் இதில் உண்டு. Afrodisiac செய்வது எப்படி? உடலை இளமையாக வைத்துக்கொள்வது எப்படி? சாரு ஏற்கெனவே சொல்லிய ‘பணம் சம்பாதிப்பது எப்படி?’ போன்ற பல விஷயங்களும் இந்நாவலில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
இது ஒரு பிந்நவீனத்துவ நாவலும் கூட. எப்படி?
பிந்நவீனத்துவம் என்பது ஒரு படைப்பில் எப்படி வெளிப்படுகிறது என்று சுருக்கமாகப் பார்ப்போம். அதன்பின், தானாகவே இந்நாவல் பற்றியும் புரிந்துவிடும்.
Irony என்ற முரண்நகை, பின்நவீனத்துவத்தின் பிரதான அம்சம். அதேபோல் black humor. கூடவே, பிந்நவீனத்துவத்தின் இன்னொரு முக்கியமான அம்சம், Metafiction. அதாவது, எழுத்தைப் பற்றிய எழுத்து. கூடவே, Fabulation. அதாவது, fantasyயைப் புனைவில் கொண்டு வருதல். அதேபோல், புனைவை உருவாக்க முயலும் விஷயத்தைப் பற்றியே எழுதுதல் – இதற்கு Poioumena என்று பெயர். இதனுடனே, fragmentation என்ற, எழுத்தைத் துண்டுகளாக உருவாக்குதல் என்பதும், பிந்நவீனத்துவமே. அதேபோல், படிக்கும் வாசகன், கதையில் நேரடியாகப் பங்கெடுத்துக்கொள்ளுதல். இவையெல்லாமே பிந்நவீனத்துவத்தின் கூறுகள்.
எக்ஸைலில், முரண்நகைக்குக் குறைவே இல்லை. உதயா தன்னைப் பற்றியும் தனது வாழ்வைப்பற்றியும் விவரித்துக்கொண்டு செல்கையில், முரண்நகை தாராளமாக வெளிப்படுகிறது. முரண்நகையினூடாகவே, black humorம் உண்டு. சித்தர்கள், ஐயப்பன், உதயாவின் நண்பன் சிவாவின் கதை ஆகியவற்றில், fantasy உண்டு. மனித வாழ்வின் அவலங்களும், கடவுளின் இருப்பைக் கேள்விகேட்கும் பல தருணங்களும், மனிதர்களின் மனதில் படர்ந்திருக்கும் கொடூரமும், இன்னும் பல விஷயங்களும் இவற்றில் உண்டு. கூடவே, எக்ஸைல் என்ற இந்நாவலை உதயா எப்படி எழுத முயல்கிறான் என்கிற விஷயமும் நாவல் நெடுகவே வருகிறது. இது – Poioumena. அதேபோல், நாவல் முழுதுமே, fragmentகளாகவே இருக்கிறது. கதை நெடுக, வாசகன் நாவலில் நேரடியாகப் பங்குபெறும் விஷயமும் நடக்கிறது.
சரி. இதெல்லாம் நாவலின் ப்ளஸ்கள் என்று வைத்துக்கொண்டால், மைனஸ்கள் என்ன?
மைனஸ்கள் என்று எனக்குத் தோன்றுவது – நாவலில் உள்ள க்ளைமேக்ஸ்களை வாசகனுக்கு விளக்கும் வாசகங்கள். அவை, கதையின் flowவை சற்றே மட்டுப்படுத்துகின்றன என்று தோன்றியது. அந்த வாசகங்கள் இல்லாமல் இருந்தாலுமே அவை க்ளைமேக்ஸ்கள் என்று புரிகிறது.
இந்த விஷயத்தைத் தவிர, நாவலின் போக்கிலோ, மொழியிலோ, சுவாரஸ்யத்திலோ, கதாபாத்திர விளக்கங்களிலோ, எழுதப்பட்டிருக்கும் விஷயங்களின் தீவிரத்திலோ எந்தத் தங்கு தடையும் இன்றி, pleasure of the text என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது இந்நாவல்.
முடிந்தவரை ஒரு வாசகனாக இந்த விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். நாவலைப் படித்துப்பாருங்கள். கட்டாயம் மிக வித்தியாசமான அனுபவமாக அது இருப்பதை உணர்வீர்கள்.
அருமை
இன்று
விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.
superb… waitin to read it…
sir,neenga function ku poringla…antha experience unga stylea eluthunga…
நல்ல trailer பார்த்த திருப்தி. படித்து விட்டு உங்களுக்கு விரிவான மெயில் அனுப்புகிறேன்!
பாஸ்,
இது தமிழ் நாவல்லா இல்லை ஆங்கில நாவல்லா ????
உங்க விமர்சனம் படிக்கிறதுக்குள்ள நான் டையர்ட் ஆகிட்டேன்….
Forget Charu – exile…………..இவற்றையெல்லாம் தவிர்த்து பாத்தாலும் கூட மிக intenseசான கட்டுரைகளில் ஒன்று…
ஆனா, இந்த பின் நவீனத்துவம் – பற்றிய பத்தி கொஞ்சம் விரிவா தனியாவே எழுதலாமே………..அதான் இந்த பதிவின் அடிநாதம்…….அத கொஞ்சம் தெளிவா இன்னொரு பதிவா எழுதுணீங்கனா என்னைய மாதிரி பல பேருக்கு மிகுவும் உதவிகரமா இருக்கும்……..
// Autobiography? No, that is a privilege reserved for the important people of this world, at the end of their lives, in a refined style.
Fiction, of events and facts strictly real;
autofiction, if you will, to have entrusted the language of an adventure to the adventure of language, outside of the wisdom and the syntax of the novel, traditional or new. //
இது மூணும் வெவ்வேறு தானா….அப்ப….
// உண்மையான சம்பவங்களையும் தகவல்களையும் வைத்து எழுதப்படும் நாவலை, Autofiction என்றே சொல்லலாம். //
அர்த்தம் மாறுனாப்புல தெரியுதே……
அப்பறம், நெறைய கேள்விகள்…….யோசித்து பாருங்கள் – தெரிகிறதா..போன்ற வார்த்தை பிரயோகங்கள் இருப்பதால ஒரு commanding tone தெரியுதுன்னு சொல்றாங்களோ……
எனக்கெல்லாம் ஒண்ணும் தெர்ல……..(விஷயம் தெரிஞ்சா தான தெரியுதா..இல்லையான்னு…சொல்ல முடியும்..ஹி..ஹி..)
சாரு கையெழுத்திட்ட பிரதி ஆறாம் தேதியே கிடைத்தது!ஏன்.ஹெச்.எம் நல்லா செய்யுறாங்க!இன்னும் படிக்க தொடங்கவில்லை!அது ஒரு வித சூன்ய மனநிலையில்தான் படிக்க தொடங்குவேன்!உங்களை மாதிரி அஞ்சு மணி நேரத்தில் என்னால் படிக்க இயலாது!15-20 நாள் ஆகும்!போன மாதம்தான் ராச லீலா முடித்தேன்!உங்களின் இந்த பதிவே படிக்க தூண்டுகிறது!நல்ல மொழி நடை!
*
ஒரு வேண்டுகோள் : பின்னவீனத்துவம் குறித்த ஒரு விளக்கமாக இல்லாமல் ஒரு புரிதல் போல ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்!நன்றி
நானும் பின் நவீனத்துவம் பற்றிய விரிவான உங்கள் கட்டுரைக்காக காத்திருக்கிறேன்!
Got the book through courier. NHM is excellent in delivering the book.Very carefully packed. I forgot to ask for charu’s signature while ordering. But later send a mail to NHM. While opening the book, I am very happy, surprised to see his signature. Have finished around 150 pages. Exile is easily understood-able.I tried 0 degree twice, but couldn’t understand it fully 🙁 . Pakirisamy character is like the corpse character of Orhan pamuk.
good review about the novel. I also felt the same feelings in most of the places when I read the novel for the first time. Need to read it many times to understanding fully.
Have you attended teh function sir? I attended it.
முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் தமிழக மக்கள் எழுச்சி.தேனி காங்கிரஸ் M.P ஆருண் எங்கே?, ஆதரிப்பீர் மக்கள் எழுச்சியை
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். பின்நவீனத்துவம் பற்றிய கட்டுரை – முயல்கிறேன். என்னை விட குழந்தை நன்றாக எழுதுவார் என்று நினைக்கிறேன்.
Where do I buy this book in Singapore ?