Fade in முதல் Fade Out வரை – 1

by Karundhel Rajesh April 25, 2014   Fade in to Fade out

Prologue

’I steal from every movie ever made’ – Quentin Tarantino

’Writing a screenplay, for me, is like juggling. It’s like, how many balls can you get in the air at once? All those ideas have to float out there to a certain point, and then they’ll crystallize into a pattern’ – James Cameron

’You’re torn between wanting to fill in all the spaces and knowing that’s really going to screw up the screenplay. And yet, how are you going to communicate it to people who really don’t understand the process?’ – Robert Towne

‘திரைக்கதை’ என்பதுதான் தற்போதைய சினிமா உலகில் மிக அதிகமாகப் பேசப்படும் வார்த்தை. தூய தமிழில் ‘திரைக்கதை’ என்று சொல்லாவிட்டாலும், ‘ஸ்க்ரிப்ட்’, ‘ட்ரீட்மென்ட்’ போன்ற பல வார்த்தைகள் இன்றைய தமிழ் சினிமா உலகில் திரைக்கதையையே குறிக்கின்றன. ஒரு சினிமாவை வெற்றிகரமாக ஓடவைக்கவோ அல்லது டப்பாவுக்குள் சுருண்டு படுத்துக்கொள்ளவோ வைப்பது இந்த ஒரு வஸ்துதான் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். தமிழ் சினிமாக்களுக்கு ஒரு தாயகமாகக் கருதப்படும் ஹாலிவுட்டில் திரைக்கதை என்பதே ஒரு சினிமாவின் மிகமிகப் பிரதானமான விஷயமாகக் கருதப்படுகிறது. யாருக்குமே தெரியாமல் மிகவும் ஏழையாக வாழ்ந்து, ஒரே ஒரு திரைக்கதை எழுதியதால் மில்லியன்கள் சம்பாதித்த பிரபலங்கள் அங்கே உண்டு. இதனால்தான் அங்கே திரைக்கதை எழுதுதல் என்பது நம்மூரில் சமையல் கலை, வேற்றுமொழிகள் படிப்பது, யோகா போன்ற மிகப்பிரபலமான விஷயமாகக் கருதப்படுகிறது. அமேரிக்கா முழுதும் திரைக்கதை சொல்லித்தரும் ஆசான்கள் மிக அதிகம். அவர்களில், திரைக்கதை எழுதாமல் அதனைப் பற்றிப் பேசியே வருடா வருடம் எக்கச்சக்கமாகப் பணத்தைக் குவிக்கும் சில முக்கியஸ்தர்களும் உண்டு.

அப்படிப்பட்டவர்களில் தலையாய நபராக இருந்தவர்தான் ஸிட் ஃபீல்ட் (Syd Field). இவரைப் பற்றியும், இவரது மிகப் பிரபலமான திரைக்கதைப் புத்தகம் பற்றியும் இந்தத் தளத்தில் ஏற்கெனவே 23 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அந்தத் தொடர்தான் தற்போது தினகரன் வெள்ளிமலரிலும் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ என்ற பெயரில் வந்துகொண்டிருக்கிறது.

தற்போது ஸிட் ஃபீல்ட் நம்மிடையே இல்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இறந்துவிட்டார். இவரைப் போலவே பிரபலமான இன்னும் சில திரைக்கதை ஆசான்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் பிரத்யேகமாக தங்களுக்கென்ற உரிய திரைக்கதை எழுதும் வழிமுறைகளைப் பற்றிய பல புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர்.

திரைக்கதை என்றால் என்ன? ஒரு திரைப்படத்தில் அதன் முக்கியத்துவம் எப்படிப்பட்டது? திரைக்கதை எழுதுவதில் ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? வழிமுறைகள் உபயோகித்துத் திரைக்கதை எழுதினால், கற்பனைத்தன்மை குறைந்து அந்த வழிமுறைகளே பிரதானமாக நிற்குமா? தமிழ் சினிமாவில் திரைக்கதை எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது? – இப்படிப்பட்ட பல கேள்விகள் என்னிடம் இதற்கு முன்னர் கேட்கப்பட்டிருக்கின்றன. நான் ஒன்றும் பெரிய திரைக்கதை ஜாம்பவான் இல்லை என்றாலும், திரைக்கதைகள் பற்றித் தொடர்ந்து படித்து வருவதாலும், திரைக்கதை நுணுக்கங்கள் பற்றித் தொடர்ந்து எழுதி வருவதாலும் இந்தக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. கூடவே, தமிழ் சினிமாவில் இனிமேல் எடுக்கப்படப்போகும் பல திரைக்கதைகளைப் படித்து, அவற்றைப் பற்றிய கருத்துகளும் உரியவர்களிடம் விபரமாகச் சொல்லியும் வருகிறேன். அதாவது, திரைக்கதையை அனலைஸ் செய்து, அவற்றின் ப்ளஸ் மைனஸ்களைப் பற்றிய விரிவான இன்புட்கள் அளிப்பது (Screenplay Consultant). கூடவே திரைப்படக் கல்லூரிகளிலும் திரைக்கதை பற்றிய விபரமான வகுப்புகளும் எடுத்து வருகிறேன். இதனால், ஓரளவு திரைக்கதையைப் பற்றிய ஒரு புரிதல் என்னிடம் உள்ளது என்று நினைக்கிறேன்.

இருந்தாலும், ‘நான் ஒரு சிறுவன். கடற்கரையில் விளையாடும்போது ஆங்காங்கே உள்ள கூழாங்கற்களைப் பார்த்தாலே சந்தோஷம் அடைந்துவிடுகிறேன். ஆனால் என் முன்னே ஒரு மிகப்பெரிய கொந்தளிக்கும் சமுத்திரம் ஆர்ப்பரித்துக்கொண்டு இன்னும் பல ரகசியங்களை அதனுள் அடக்கி வைத்திருக்கிறது’ என்ற ந்யூட்டனின் கருத்தை மறப்பதில்லை. எத்தனை படித்தாலும் தெரிந்துகொண்டாலும் இன்னும் ஆயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்தால் மட்டுமே முழுதாகத் தெரிந்துகொள்ளக்கூடிய விஷயங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.

எனவே, முடிந்தவரை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் திரைக்கதை பற்றி நான் தெரிந்துகொண்ட விஷயங்களையும் படித்த தகவல்களையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம். தமிழ், ஹாலிவுட், உலக சினிமா ஆகிய எல்லா சினிமாக்களையும், அவற்றின் திரைக்கதை முறைகளையும், பல சுவாரஸ்யமான படங்களையும் இந்தத் தொடரில் பார்ப்போம். அவர்களின் திரைக்கதை மேதைகள் வழிமுறைகளைப் பின்பற்றினார்கள் என்பதையும் கவனிப்போம். திரைக்கதை அமைப்பு எப்படி உருவானது, அதன் தற்போதைய நிலை என்ன என்பதையெல்லாமும் விபரமாகப் பார்ப்போம். மொத்தத்தில், ‘திரைக்கதை’ என்ற ஒரே வார்த்தை உலகில் என்னவெல்லாம் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது என்பதை விரிவாக, சுவாரஸ்யமாக, ஜாலியாகப் பார்க்கப்போகிறோம். ஆங்காங்கே சில பயிற்சிகள், உதாரணங்கள், ஒளிப்படங்கள், பேட்டிகள் போன்ற எல்லாவற்றையும் கலந்துகட்டி அடித்து இந்தத் தொடரை உபயோகமானதாக்குவது என் நோக்கம். இதனைப் படிக்கும் நண்பர்கள் திரைக்கதை என்பதைப்பற்றிய முக்கியமான தகவல்கள் அத்தனையும் தெரிந்துகொண்டால் (திரைக்கதை எழுதவும் துவங்கிவிட்டால்) அதுதான் இந்தத் தொடரின் வெற்றி.

சரி. இந்தத் தொடர் எத்தனை நாட்கள் வரப்போகிறது?

சத்தியமாகத் தெரியாது. எப்போது இந்தத் தொடரை முடிக்கலாம் என்ற எண்ணம் என் மனதில் தோன்றுகிறதோ அப்போதுதான் தொடர் முடியும். அதுவரை கடனே என்று இந்தத் தொடரைப் படிக்கவேண்டியது நண்பர்களின் தலைவிதி.

அப்படியென்றால், ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் தான் தொடரின் அத்தியாயங்கள் எழுதி வெளியிடப்போகிறாய். ரைட்டா?

அங்குதான் ஒரு சிறிய கட்டுப்பாட்டை எனக்கு வகுத்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவில் (11 PM – 1 AMக்குள்) ஒவ்வொரு கட்டுரை நமது தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதில் ஒரு நாள் கூடத் தாமதம் இருக்காது. எனவே வாரம் ஒரு கட்டுரை. இது தவிர்த்து வழக்கமான விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். இது எனக்கு நானே வைத்துக்கொண்டிருக்கும் goal. ஏன் வியாழன் என்றால், இதை இப்போது எழுதிக்கொண்டிருப்பது ஒரு வியாழன் என்பதால்.

ஸிட் ஃபீல்டைப் பற்றியும் அவரது திரைக்கதைப் புத்தகம் பற்றியும் எழுதியபோது, ஒரே நோக்கத்தில் – அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதில் – மட்டுமே என் கவனம் இருந்தது. ஆனால் இப்போது மொத்தமாகத் திரைக்கதை என்ற விஷயத்தைப் பார்க்கப்போவதால் அவரது கருத்துக்கு நேர் எதிரான கருத்துகளையும் நாம் விவாதிக்கவேண்டி வரும். ஆனால் அதனால் அவரது கருத்துகள் பொய் என்று ஆகிவிடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து என்பதால் அவருக்குப் பின்னர் வந்த திரைக்கதை ஜாம்பவான்களில் சிலர் அவரை மறுத்திருப்பார்கள். அது சகஜம்தான். அதேபோல் இதுபோன்ற பல்வேறு மாறுபட்ட கருத்துகளையும் பார்க்கப்போகிறோம். ஒட்டுமொத்தமாக ’திரைக்கதை அமைப்பு’ என்பதைப் பற்றிப் பார்க்கப்போவதால், இதில் ஆங்காங்கே ஸிட் ஃபீல்டும் வருவார். மற்றவர்களும் வருவார்கள்.

இத்துடன் Prologue முடித்துக்கொண்டு முதல் அத்தியாயத்தை கவனிப்போம்.

Chapter 1 – திரைக்கதையின் கதை

ஃப்ளாஷ்பேக். காலம்- 1896. சினிமாவின் மிக ஆரம்பக் கட்டம். இந்தக் காலகட்டத்தில் மிகச்சிறிய படங்கள்தான் ஒளிபரப்பப்பட்டு வந்தன. உதாரணமாக இதோ இந்தப் படத்தைப் பாருங்கள்.

இந்தப் படம் எடுக்கப்பட்ட காலத்தில், இது ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனை. இந்தப் படத்தின் நீளம் – 48 நொடிகள். இப்படி ஒரு படத்துக்கு எப்படித் திரைக்கதை எழுதியிருப்பார்கள்?

‘பனி படர்ந்த ஒரு இடத்தில் குழுமியிருக்கும் சில மனிதர்கள், பனியைப் பந்துபோல உருட்டி ஒருவரையொருவர் அடித்துக்கொள்கின்றனர். அதில் சிலர் ஆண்கள் மற்றும் சிலர் பெண்கள். அந்த வழியில் ஒருவர் சைக்கிளில் வருகிறார். நடுவே மாட்டிக்கொள்கிறார். விழுகிறார். வந்தவழியே வேகமாகச் செல்கிறார்’.

இதுதான் இப்படிப்பட்ட படங்களுக்குத் திரைக்கதை. இந்தக் காலகட்டத்தில் இவைகள் தியேட்டரில் ஒளிபரப்பப்பட்டு வந்தபோது இத்தகைய கதைச்சுருக்கங்கள் ப்ரிண்ட் செய்யப்பட்டன. யாராவது மெத்தப் படித்த நபர் ஒருவரை ஒவ்வொரு திரையரங்கிலும் வேலைக்கு அமர்த்தி (பெரும்பாலும் கல்லூரி விரிவுரையாளர்கள் அல்லது நன்றாக அந்த ஊரின் மொழியைப் பேசத் தெரிந்தவர்கள்), திரைப்படம் தொடங்கும்போது உரத்த குரலில் ‘இதோ பாருங்கப்பா… இப்போ சில பேரு பனியால அடிச்சிக்கப்போறாங்க.. அப்போ தூரமா வர்ர சைக்கிளை கவனிக்க மறந்துடாதீங்க.. அந்தாள் படுற பாட்டைப் பார்த்து ரசியுங்கோள் அம்மாமாரே’ என்றெல்லாம் கத்த வைத்தனர். இதனால் திரைப்படத்தின் ட்விஸ்ட்கள் (???!!!) நன்றாக ஆடியன்ஸுக்குப் புரியத் துவங்கின.

(யோசித்துப் பார்த்தால், தற்போது அப்படி யாரையாவது அமர்த்தினால், ஆடியன்ஸுக்குப் போர் அடிக்கும்போதெல்லாம் உரத்த குரலில் கதையில் இனிமேல் வரப்போகும் ட்விஸ்ட்களை அந்த ஆள் சொல்ல ஆரம்பித்தால் படங்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் ஓடலாம் என்று தோன்றுகிறது. அட்லீஸ்ட் அந்த நபரின் வாய்ஜாலத்துக்காகவேகூட திரைப்படங்கள் சில நாட்கள் ஜாஸ்தியாக ஓடலாம். அப்படியே அந்த நபர் பெண்ணாக இருந்தால் நளினமாக நடனம் ஆடியபடியே சுருக்கத்தை சொல்லலாம்.. கூடவே… ஓகே.. கட்டுரையைத் தொடரலாம்).

திரைக்கதையின் ஆரம்பகால உபயோகம் இதுதான். கூடவே, திரைப்படம் திரையிடும் இடத்தில் இந்தச் சுருக்கத்தை விற்கவும் ஆரம்பித்தனர். உள்ளே கத்தும் ஆளின் குரல் நமக்குப் பிடிக்காவிட்டால், ‘யோவ். பேசாம இருய்யா.. என் கையிலயே கதை இருக்கு’ என்று நாமும் பதிலுக்குக் கத்தலாம்.

இதை அறிமுகப்படுத்தியது – தாமஸ் ஆல்வா எடிசன்.

இப்படித் துவங்கிய துணுக்குத் திரைக்கதையின் சரித்திரம், 1901ல் ஒரு ட்விஸ்ட் எடுக்கிறது. அந்தக் காலத்தில் அதற்கு முந்தைய மிகச்சிறிய படங்களுடன் ஒப்பிட்டால், சற்றே பெரிய படங்கள் வர ஆரம்பித்திருந்த காலகட்டம் இது. ஜோர்ஜ் மெலியஸ் நினைவிருக்கிறதா? Hugo படத்தில் பென் கிங்ஸ்லி ஏற்ற கதாபாத்திரம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் புகழின் உச்சத்தில் இருந்த இயக்குநர். இவரது A Trip to the Moon படமும் ஹ்யூகோவில் வரும். அந்தப் படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தில், வரிசையாக ஷாட்கள் அமைக்கவேண்டிய கட்டாயத்தால் கதைக்கு ஒரு கண்டின்யூட்டி தேவைப்பட்டது. எனவே பாயிண்ட் பாயிண்டாகத் திரைக்கதையை எழுதிக்கொள்ளத் துவங்கினர்.

1. கதாநாயகி சைக்கிளில் வருகிறாள்
2. சைக்கிள் பஞ்ச்சர் ஆகிறது
3. அப்போது எதிரே தியாகராஜ பாகவதர் குதிரையில் பாடிக்கொண்டே வருகிறார்
4. அவரது அன்றலர்ந்த முகத்தைப் பார்த்துக் கள்வெறி கொள்கிறாள் நாயகி
5. வசந்தருது மன மோகனமே என்று பாகவதர் அடுத்த பாடலை ஆரம்பிக்கிறார்

இப்படி.. (இது ஒரு ஜாலிக்கு எழுதியது. மெலியஸ் படமாக்கிய காலத்தில் வசனம் இல்லை என்பதை நினைவில் கொள்க).

இவைகளில் என்னென்ன காட்சிகள் எந்த வரிசையில் வரவேண்டும் என்பது மட்டுமே இருந்தன. அந்தக் காட்சிகளில் யார் யார் எப்படியெல்லாம் நடிக்கவேண்டும் என்பது இல்லை. ஸ்பாட்டில் இயக்குநர் இந்த லிஸ்ட்டைப் பார்த்து அங்கேயே அவசரமாக யோசித்து, பாத்திரங்களிடம் நடிக்கச்சொல்ல, அவர்களும் அதேபோன்று நடித்தனர்.

இதற்கு ஓரிரு வருடங்களுக்குப் பின், இந்த ஒன்லைன் ஆர்டர் கொஞ்சம் விரிவாகியது. ‘கதாநாயகி சைக்கிளில் வருகிறாள்’ என்பதை

1 மதராஸ் மாநகரின் சாலை

‘கதாநாயகிக்கு பதினைந்து வயது. ஒல்லியான திரேகம். இரட்டை ஜடை. பளபளப்பான உடை. மீன் போன்ற கண்கள். கடல்தாண்டிய தேசத்தில் இருந்து கப்பலில் இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள் என்ற வாகனத்தில் ஏறி அமர்ந்து தனது கால்களால் பெடல் என்று சொல்லப்படும் சாதனத்தை மிதிக்கிறாள். இதனால் அந்த ஒட்டுமொத்த சைக்கிள் என்ற சாதனமே முன்னால் நகர்கிறது. கைப்பிடியில் அமுக்கினால் ‘கிணுகிணு’ என்று இனிய சத்தத்தை எழுப்பும் ’பெல்’ என்ற சாதனமும் இந்த சைக்கிளில் உண்டு. அதையும் அவ்வப்போது அமுக்கி, சாலையில் செல்லும் இளைஞர்களின் இதயத்துடிப்பை ஏற்றிக்கொண்டே இப்படியாக சைக்கிளை வேகமாக மிதித்துக்கொண்டே சாலையில் வருகிறாள் சந்திரகாந்தா’.

என்று எழுதத் துவங்கினர். இதுதான் நவீனத் திரைக்கதையமைப்பின் ஒரிஜினல் பிறப்பிடம். ஒவ்வொரு காட்சியை எழுதும்போதும் அது எங்கே நடக்கிறது என்பது வரிசையான நம்பர்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. இப்படி வசனங்கள் இல்லாமல் வரிசையான விவரிப்புகள் மூலம் அப்போதைய படங்களுக்குத் திரைக்கதை எழுதப்பட்டது.

அக்காலத்தில் ஒரே சீனுக்குள் பல்வேறு ஷாட்களாகக் கட் செய்யும் உத்தி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்த ஒட்டுமொத்த சீனும் ஒரே முறையில் (டேக்கில்) படமாக்கப்பட்டது. அக்காலத்தில் The Great Train Robbery என்று ஒரு படம் வந்தது. மொத்தம் 14 சீன்களால் ஆன படம் இது. ஒவ்வொரு சீனும் காமெராவை அப்படியே வைத்துப் படமாக்கியது. இதில் கடைசி சீனாக, ’ரவுடிகளின் தலைவன் பார்ன்ஸ் என்பவனின் லைஃப் சைஸ் உருவம் (க்ளோஸ் அப் என்ற வார்த்தை அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை) தெரிகிறது. அந்த உருவம் திடீரென்று ஆடியன்ஸைப் பார்த்து சுடுகிறது. இதனால் ஆடியன்ஸுக்கு எழும் பயமும் பீதியும் அவசியம் படத்தின் வெற்றிக்குத் தேவை. இந்தக் காட்சியை முதலாவதாகவோ கடைசியாகவோ வைக்கலாம்’ என்ற குறிப்பு இடம்பெறுகிறது. இந்த வீடியோவை யூட்யூப்பில் பார்த்தால் அதன் அடியே இருக்கும் ‘About’ மீது க்ளிக் செய்து சீன் பை சீனாக விரியும் திரைக்கதையைப் படிக்கலாம்.

இது திரையரங்கில் ஓடியபோது இந்த ஒவ்வொரு காட்சியையும் உரக்கப் படித்தே விவரித்தனர்.

(கோவையில் செண்ட்ரல் தியேட்டரில் என் சிறுவயதில் படம் பார்க்கையில் வெளியே பெரிய கரும்பலகையில் முழுப்படத்தின் சுருக்கமும் எழுதப்பட்டிருக்கும். அதுகூட இப்படிப்பட்ட உத்திதான்).

இதன்பின் சில வருடங்களில் திரைப்படங்களில் வசனங்கள் இடம்பெற்ற ஸ்லைட்கள் உள்ளே நுழைக்கப்பட்டன. எனவே மேலே பார்த்த திரைக்கதை வடிவத்தில் ஆங்காங்கே ‘Insert Title’ என்று போடப்பட்டு வசனங்கள் எழுதப்பட்டன. இப்படி உருவான திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியும் கச்சிதமாக நம்பர் போடப்பட்டு, அதில் வரும் வசனங்களுமே சரியாக வரிசைப்படுத்தப்பட்டன. அதன்பின் லொகேஷன் விபரங்கள் ப்ரிண்ட் செய்யப்பட்டன. இதில் வெளிப்புற, உட்புற லொகேஷன்கள் பட்டியலிடப்பட்டு, ஒவ்வொரு லொகேஷனிலும் எந்தெந்த சீன்கள் படமாக்கப்படப்போகின்றன என்பது குறிக்கப்பட்டது. இதன்பின் நடிக நடிகையர் விபரங்கள். பின்னர் ஒரு பக்கத்தில் கதைச்சுருக்கம். இப்படியாக எல்லா விபரங்களும் இந்தக் காலகட்டத்தில் திரைக்கதையில் இடம்பெற்றன. இதுதான் இப்போது உபயோகிக்கப்பட்டுவரும் திரைக்கதையின் துவக்க வடிவம்.

தமிழ்த் திரைப்படங்களில் ஒரு காலத்தில் பின்பற்றப்பட்டுவந்த திரைக்கதை வடிவம் – இடதுபக்கத்தில் சீனின் விபரங்கள் & வலதுபக்கத்தில் சீனின் நிகழ்வுகள் என்பது – ஒரிஜினலாக ஹாலிவுட்டில் இக்காலகட்டத்தில்தான் உருவானது. இது இன்னொரு வகையான திரைக்கதை வடிவம்.

இதன்பின்னர் CUT TO என்ற வார்த்தை ஹாலிவுட்டில் உருவானது (1930க்கள்). இந்த வார்த்தையால் எக்கச்சக்க நேரம் மிச்சமானது. இதற்கு முன்பெல்லாம் எங்காவது கட் செய்யவேண்டும் என்றால் ‘இதனால் இயக்குநருக்குச் சொல்லிக்கொள்ளப்படுவது என்னவென்றால், இந்த இடத்தில் இருந்து கதாநாயகனும் கதாநாயகியும் கனவில் கானங்கள் இசைக்கும் கந்தர்வலோகத்துக்குச் செல்லும் இடத்துக்கு நேரே சென்றுவிடலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்பது போலத்தான் பெரும்பாலும் எழுதப்பட்டுவந்தது. மிகவும் மரியாதையாகத்தான் திரைக்கதையில் திருத்தங்களும் செய்துவந்தனர். அதெல்லாம் CUT TO என்பதால் சுருங்கியது. நேரடியான கட்டளைகள் பிறப்பிக்கப்படத் துவங்கின.

இதன்பின்னர் வேகமாக வளர்ந்த ஹாலிவுட் திரைக்கதையமைப்பு, ஐம்பதுகளிலேயே கிட்டத்தட்ட இன்று பின்பற்றப்படும் அமைப்பைத் தொட்டுவிட்டது. அவ்வப்போது மிகச்சிறிய மாறுதல்கள் நிகழ்ந்து, இப்போது ஹாலிவுட் திரைக்கதையின் Structure அங்கு எல்லோராலும் இம்மி பிசகாமல் பின்பற்றப்பட்டும் வருகிறது.

இதுதான் ஹாலிவுட் திரைக்கதையமைப்பின் சரித்திரம். ‘திரைக்கதை’ அன்பதைப் பார்க்கத்துவங்கும் முன்னர் அதன் சரித்திரம் முக்கியம் என்பதால் இதையெல்லாம் கவனித்தோம்.

அடுத்ததாக என்ன பார்க்கப்போகிறோம்? அடுத்த வியாழன் இரவு தெரிந்துவிடும்.

தொடரும் . . .

  Comments

16 Comments

  1. வணக்கம்,

    நிகண்டு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    நிகண்டு.காம்

    Reply
  2. இந்த தொடரை நான் தொடரபோவது உறுதி நண்பரே தங்களின் முந்தைய தொடரை அவ்வப்போது தான் வாசித்தேன் நண்பர்களின் வழிகாட்டுதலில்….

    Reply
    • Rajesh Da Scorp

      ஷ்யூர் அர்ஜித். thanks 🙂

      Reply
  3. மிக்க நன்றி சகோ.. பழைய பதிவுகளை தொகுத்தப்படித்தவன் இம்முறை உடனுக்குடன் தொடர இலகுவாக இருக்கும்

    Reply
    • Rajesh Da Scorp

      Yes Boss. Cheers

      Reply
  4. S Arun Prasath

    hai thalaiva antha 23 articles naan padikala ana intha series-i padikama vidamaten dhool kilapunga….

    Reply
    • Rajesh Da Scorp

      ஏன் அதையும் அப்புடியே படிச்சிதான் பார்க்குறது 😛

      Reply
  5. raymond

    \கோவையில் செண்ட்ரல் தியேட்டரில் என் சிறுவயதில் படம் பார்க்கையில் வெளியே பெரிய கரும்பலகையில் முழுப்படத்தின் சுருக்கமும் எழுதப்பட்டிருக்கும்\ – அது ஒரு கனாக்காலம்…>!

    Reply
    • Rajesh Da Scorp

      ஓ யா.. மறக்கவே முடியாது

      Reply
  6. loganathan

    super …i always follow this article ..ji ,,,keep rocking ji..

    Reply
    • Rajesh Da Scorp

      thank you Loganathan. Cheers.

      Reply
  7. Supper.. நன்றி அடுத்த வியாழன்னுக்கக் காத்து இருக்கிறேன் ..

    Reply
    • Rajesh Da Scorp

      Thank you boss

      Reply
  8. தல.. முதல் அத்தியாயமே நாங்கள் வாசிக்க போவது அருமையான, உபயோகமான தொடர் என்பதை நிருபித்துவிட்டது… கலக்குங்க…

    Reply
    • Rajesh Da Scorp

      நன்றி இளையராஜா.. முடிஞ்சவரை இண்ட்ரஸ்டிங்காத்தான் போவும்(னு நினைக்கிறேன்) 🙂

      Reply
  9. Manoj Kumar

    பத்திகளை செறிவுடன் இன்னும் அதிக தகவல்களோடு இருந்தால் இன்னும் படிக்க சுவாரஸ்யமாக இருக்குமே!

    Reply

Join the conversation