Fade In முதல் Fade Out வரை – 10
முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம்
ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை உத்திகளைப் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதோ அவரது திரைக்கதை முறை.
The Blake Snyder Beat Sheet
PROJECT TITLE:
GENRE:
DATE:
1. Opening Image (1);
2. Theme Started (5);
3. Set-up (1-10);
4. Catalyst (12);
5. Debate (12-25);
6. Break into Two (25);
7. B Story (30);
8. Fun and Games (30-55);
9. Midpoint (55);
10. Bad Guys Close In (55-75);
11. All is Lost (75);
12. Dark Night of the Soul (75-85);
13. Break into Three (85);
14. Finale (85-110);
15. Final Image (110);
இதுவரை Opening Image, Theme Started & Set-up ஆகியவற்றைப் பார்த்திருக்கிறோம். நான்காவது பாயிண்ட்டான Catalyst என்பதிலிருந்து இனி தொடருவோம்.
ஆனால் இங்கே நினைவு கொள்ளவேண்டிய விஷயம் – இந்த எல்லா பாயிண்ட்களும் வந்தே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றுகொண்டு திரைக்கதை எழுதக்கூடாது. இவைகளில் என்னென்ன பாயிண்ட்கள் நம் கதைக்கு ஒத்துவருகின்றன என்பதைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.
4. Catalyst (12)
கேடலிஸ்ட் என்பதற்குத் தமிழில் ‘கிரியா ஊக்கி’ என்பது பொருள் என்பது எல்லாருக்கும் தெரியும். வேதியியலில்(கெமிஸ்ட்ரி), ஒரு குறிப்பிட்ட கெமிகல் ரியாக்ஷனில் வேறு ஒரு பொருளைச் சேர்ப்பதன் மூலம் அதன் வேகத்தை அதிகரிப்பதற்குப் பெயர்தான் கெடாலிஸிஸ் (Catalysis). அந்த ரியாக்ஷன் சீக்கிரம் நடந்து முடியும். ஆனால் அந்த அன்னியப் பொருள் அந்த ரியாக்ஷனின் உள்ளே புகுந்து பங்கேற்காது. அதன் இருப்பே போதுமானது.
பல திரைப்படங்களில் சில சம்பவங்களின் மூலம் கதை துவங்குவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அந்த சம்பவங்கள் இயற்கையாக நடக்கும். கதாபாத்திரங்களின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் ஒரு சிறிய சம்பவம்தான் கதையைத் துவக்கி வைக்கும். அதுவரை தன் பாட்டுக்கு ஒருவித வாழ்க்கையை வாழ்ந்துவந்த ஹீரோ/ஹீரோயின், இந்த சம்பவத்தினால் தடாலென்று வேறு ஒரு வாழ்க்கையில் எறியப்படுவார்கள். அதிலிருந்து அவர்களின் வழ்க்கையில் விறுவிறுப்பும் சோதனைகளும் அறிமுகமாகும். அப்படியே அந்தத் திரைப்படம் படிப்படியாகக் க்ளைமாக்ஸை நோக்கி நகரும்.
இந்தச் சிறிய சம்பவம்தான் கேடலிஸ்ட்.
முதல் மரியாதையில் ராதாவை சிவாஜி உணரும் தருணம்தான் கேடலிஸ்ட். எங்க வீட்டுப் பிள்ளையில் வீட்டை விட்டு அப்பாவி எம்.ஜி.ஆர் கதாபாத்திரம் ஓட நினைக்கும் தருணம்தான் கேடலிஸ்ட். இந்த இரண்டு சம்பவங்களில்தானே அந்தந்தப் படங்களில் கதை ஆரம்பிக்கிறது? இதுபோல யோசித்தால் எந்தப் படத்துக்கும் ஒரு கேடலிஸ்ட் காட்சி இருப்பதை உணரலாம்.
தினந்தோறும் அலுவலகம் சென்று சோர்வாகத் திரும்பிவரும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்போது ஒரு நாள் காலையில் அலுவலகம் செல்லப் பேருந்து/மெட்ரோ/பைக்/கார்/சைக்கிள் கிளம்பும் நேரத்தில் வேகமாக நடந்து வரும் ஒரு பெண்ணை/தாத்தாவை/பாட்டியை/திருநங்கையை/சிறுமியைப் பார்க்கிறோம். அந்தக் கதாபாத்திரத்தின் முகத்தில் மிகவும் தீவிரமான ஒரு உணர்வு தெரிகிறது. நம்மைக் கடக்கையில் பொத்தென்று அந்தக் கதாபாத்திரம் விழுகிறது. பரபரப்பாக அதன் அருகே சென்று அதனை எழுப்புகிறோம். அப்போது பின்னாலேயே வரும் இரண்டு ஆட்கள், கையில் இருக்கும் துப்பாக்கியால் அந்தக் கதாபாத்திரத்தின் தலையில் சுட்டு அதனைக் கொன்றுவிடுகிறார்கள். நமக்கு அதிர்ச்சி.
மெல்ல நம்மருகே மண்டியிட்டு அமரும் ஒருவன், ‘எங்கடா அந்தப் பென்ட்ரைவ்?’ என்று கேட்கிறான். நமக்கோ ஒன்றும் புரிவதில்லை. அடுத்த நொடி நமது மண்டையில் இன்னொருவனிடம் இருக்கும் சைலன்ஸர் மாட்டிய துப்பாக்கியின் குழல் பதிகிறது. அவனது இன்னொரு கையில் ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டி, ஒவ்வொன்றாக மடக்குகிறான். அவகாசம் மிகவும் கம்மி. ஆனால் நமக்கோ ஒன்றும் தெரியாது.
பரபரப்பில் ‘எனக்குத் தெரியாது’ என்று சொல்கிறோம். குழல் இன்னும் அழுத்தமாகப் பதிகிறது. அவனது கையில் இன்னும் இரண்டு விரல்கள்தான் பாக்கி.
அந்த நேரத்தில், நமது ஹீரோ எப்படிப்பட்ட ஆள் என்பதைப் பொறுத்து அந்தக் கதாபாத்திரம் ரியாக்ட் செய்யலாம். இருவரையும் டக்கென்று தள்ளிவிட்டுவிட்டு ஓடலாம்/படக்கென்று அவனது துப்பாக்கியைப் பறித்து இருவரையும் சுடலாம்/மயங்கி விழுவது போல் நடித்து, கிடைக்கும் அவகாசத்தில் தப்பிக்கத் திட்டமிடலாம்/அந்தப்பக்கம் வரும் யாரையாவது அலர்ட் செய்து பரபரப்பை உண்டாக்கலாம்/டகாலென்று நமது வண்டிக்குள் பாய்ந்து அதை இருவரின் மீதும் விடலாம். எதையாவது செய்யாவிட்டால் நாம் காலி.
அப்படித் தப்பித்தபின்னர் வேறு ஒரு இடத்தில் பதுங்கிக்கொண்டே எதேச்சையாக நமது பாக்கெட்டில் கையை விட்டால், அங்கே இருக்கிறது அந்தப் பென்ட்ரைவ். நாம் தாங்கிப் பிடித்த தருணத்தில் நமது பாக்கெட்டில் அது கொலையுண்ட நபரால் நுழைக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தருணத்தில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. அந்தப் பென்ட்ரைவில் என்ன இருக்கிறது? நம்மைத் துரத்தியவர்கள் யார்? அங்கிருந்து இனி வெளியே போகமுடியுமா? அலுவலகம் செல்லும் நேரத்தில் யாரையோ தாங்கிப்பிடித்து உதவப்போக, நமது வாழ்க்கை மொத்தமாக மாறிவிடுகிறது. எனவே, அந்தத் தருணம்தான் கேடலிஸ்ட்.
கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியபின்னர், நமது கதையில் முதன்முறையாக எதாவது நடக்குமே – அந்தத் தருணம்தான் கேடலிஸ்ட். இந்தக் காட்சி, ப்ளேக் ஸ்னைடரைப் பொறுத்தவரை திரைக்கதையின் பன்னிரண்டாவது பக்கத்தில் வரவேண்டும் என்பது அவரது கருத்து. அது ஹாலிவுட்டில். தமிழில் இதற்கு எந்தப் பக்க எண்ணும் இல்லை. அறிமுகம் முடிந்து கதை ஆரம்பிக்கும் தருணம் இது. ஆனால் இது இண்டர்வெல் காட்சியாக இருந்தால் கதையில் எக்கச்சக்கப் பிரச்னை என்று அர்த்தம். ஆரம்பத்தில் இருந்து இண்டர்வெல் வரை வெறும் ஜாலி காட்சிகளே இருந்தால், ஆடியன்ஸ் எரிச்சல்தான் அடைவார்கள் இல்லையா? அதனால். ஆரம்பத்தில் எல்லாரையும் அறிமுகப்படுத்தியபின்னர் கதை ஆரம்பிக்கும் இந்தக் காட்சி, குத்துமதிப்பாக நமது திரைக்கதையில் இருபதிலிருந்து முப்பது பக்கங்களுக்குள் வருவது நல்லது. சூது கவ்வும் படத்தின் வேலை போகும் காட்சியைப் போல. வேலை போனதால்தானே டாஸ்மாக் செல்கிறார்கள்? அங்கு சென்றதால்தானே தாஸின் அறிமுகம் கிடைக்கிறது?
இதே காட்சியைத்தான் ஸிட் ஃபீல்ட், Key Incident என்று சொல்வது வழக்கம். கதை துவங்கும் தருணம். அந்த வார்த்தையின் மீது க்ளிக் செய்து எனது ‘திரைக்கதை எழுதுவது இப்படி’ தொடரில் ஸிட் சொல்லியிருப்பதை விபரமாகப் படிக்கலாம்.
இந்தத் தொடரில் அவ்வப்போது ப்ளேக் ஸ்னைடர் சொல்வதையும் ஸிட் ஃபீல்ட் சொன்னதையும் சேர்த்துக் கொடுப்பதன் காரணம், ஒரே விஷயத்தை இருவரும் எப்படியெல்லாம் தங்கள் பாணியில் சொல்லியிருக்கிறார்கள் என்பதைக் காட்டத்தான். இந்தத் தருணத்தில் ஸிட் சொன்னதையும் நீங்கள் படித்துவிட்டால் உங்க்களுக்கு அவசியம் இதில் தெளிவு பிறக்கும்.
5. Debate (12-25)
கதை துவங்கிவிட்டது. இனி என்ன? அப்படியே கதைக்குள் சென்றுவிடவேண்டியதுதானே?
செல்லத்தான் வேண்டும். ஆனால் அதற்குமுன்னர் மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு பிரச்னையை சந்தித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளதே?
பொதுவாக நமக்கு ஒரு புதிய வாய்ப்பு கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். புதிய வேலை/இடப்பெயற்சி/சொந்த வீடு வாங்கும் தருணம்/புதிய வாகனம்/குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்வது – இப்படி. அந்த எண்ணம் தோன்றியவுடனேயே அதனைச் செய்துவிடுகிறோமா? சில நாட்கள் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டு, அந்த விஷயத்தைச் செய்தால் வரும் நல்லது கெட்டதுகளை மனதிலேயே அசைபோட்டுப் பார்க்கிறோம்தானே? இந்த அசை போட்டுப் பார்க்கும் காலகட்டம் மிகக் கடினமானது. காரணம், பழைய வாழ்க்கையில் இருந்து இந்தப் புதிய பொருளால் நமக்கு நல்லது நடக்கப்போகிறது என்ற எண்ணத்தால்தான் அதனைச் செய்ய முடிவு செய்தோம். ஆனால் மனதின் ஒரு ஓரத்தில் ‘இனி வாழ்க்கை நல்லதாக இருக்குமா? ஒருவேளை இன்னும் மோசமாகிவிட்டால்?’ என்ற எண்ணம் எட்டிப்பார்த்தபடிதான் இருக்கும். இது எல்லார் வாழ்விலும் நடப்பதுதான். பழக்கப்பட்ட வட்டத்தில் வாழ்ந்தபின் ஒரு புதிய விஷயத்தைச் செய்ய மனம் முதலில் இடம் தராது. அதன்பின் வலுக்கட்டாயமாக அந்த எண்ணத்தை ஒழித்துவிட்டு அந்தப் புதிய விஷயத்தைச் செய்வோம் (அல்லது) அதைச் செய்யாமல் பழைய வாழ்க்கைக்கே திரும்பவும் சென்று விடுவோம்.
இதுதான் Debate. மனப்போராட்டம்.
கதை துவங்கிவிட்டது. உடனே தடதடவென்று ஓடாமல், அந்தக் கதாபாத்திரம் இந்த மாற்றத்தைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்க்கும். எங்க வீட்டுப் பிள்ளையில் அப்பாவி எம்.ஜி.ஆரின் அக்காவும் குழந்தையும் அவரிடம் மன்றாடும் காட்சி இதுதான். முதல் மரியாதையில் ராதாவின் குரலை மட்டும் உணரும் சிவாஜி, அது யார் என்று அறிந்துகொள்ள முயற்சி செய்வது இதுதான். சூது கவ்வும் படத்தில் வேலை போய்விட்டபின் மூவரும் பேசிக்கொண்டு அது அடிதடியாக முடியும் தருணம் இதுதான். ஒருவேளை எம்.ஜி.ஆர் வீட்டை விட்டு ஓடாமல் திரும்பிப் போய்ப் படுத்திருந்தால் அந்தப் படமே இல்லை. போலவே வேலை போனதுமே ‘சரி விடு மச்சி’ என்று மூவரும் அறையில் இருக்கும் சரக்கையே அடித்துவிட்டுக் குப்புறக் கவிழ்ந்திருந்தால் அந்தப் படமே இல்லை. பிரச்னையைப் புரிந்துகொண்டு அதன்பின் அடுத்த கட்டத்துக்கு இவர்கள் சென்றதுதான் கதையை வளர்த்தியது.
இதுபோன்ற தருணங்கள், ஆடியன்ஸின் மனதில் அவர்களை அறியாமல் அந்தக் கதாபாத்திரங்களோடு அவர்களைத் தொடர்புபடுத்தும். அப்படித் தொடர்புபடுத்தும்போது அவர்கள் அந்தப் பாத்திரங்களை விரும்பத் துவங்குவார்கள். காரணம், அவர்களுமே இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களைக் கடந்து வந்திருப்பதால்தான்.
இந்தக் காட்சிகள் திரைக்கதையின் 12ல் இருந்து 25ம் பக்கம் வரை இருக்கவேண்டும் என்பது ப்ளேக் ஸ்னைடரின் கருத்து. அது ஹாலிவுட்டுக்கு. தமிழில் இது சென்ற பகுதியோடு சேர்க்கப்பட்டு, 25 முதல் முப்பது பக்கங்களுக்குள் வரலாம். அல்லது ஒரு பத்து பக்கங்கள் முன்னே பின்னே இருக்கலாம். தவறில்லை.
6. Break in to Two (25)
கதாபாத்திரம் மனக்குழப்பங்களுக்கு ஆளாகி, செய்வதா வேண்டாமா என்று மன உளைச்சல் அடைந்து, இறுதியில் ‘செய்தே விடுவது’ என்று முடிவு செய்யும் அந்தத் தருணம்தான் ப்ரேக் இன் டு டூ. எம்.ஜி.ஆர் வீட்டை விட்டு ஓடுகிறார். சிவாஜி ராதாவைப் பார்த்துவிடுகிறார் (அடி நீதானா அந்தக் குயில்?). சூது கவ்வும் டாஸ்மாக்கில் பிரச்னை நேர்கிறது.
இதைப் படித்ததும் எனது ஸிட் ஃபீல்ட் தொடரைப் படித்த நண்பர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். ‘இது என்ன ஸிட் ஃபீல்ட் சொல்லும் ப்ளாட் பாயிண்ட் 1 போல இருக்கிறதே?’ என்று. சந்தேகமே இல்லாமல், ப்ளேக் ஸ்னைடரின் Break in to Two தான் ஸிட் பீல்டின் Plot Point 1. இந்த இரண்டுக்கும் கொஞ்சம் கூட வேற்றுமை இல்லை. இது ஹாலிவுட்டில் 25ம் பக்கத்தில் இருக்கவேண்டும் என்பது ப்ளேக் ஸ்னைடர் கருத்து. தமிழில், சென்ற பகுதியில் பார்த்த குழப்பங்கள் முடிந்தபின்னர், கிட்டத்தட்ட 35-40 நிமிடங்களில் நடக்கும் சம்பவம்.
7. B Story (30)
ஆரம்பத்தில் இருந்து பழைய வாழ்க்கை வாழ்ந்த கதாபாத்திரம், தான் செய்ய விரும்பியதைச் செய்யும் முதல் சம்பவம் முடிந்ததும் என்ன ஆகும்? அந்தப் புதிய உலகில் நடக்க இருக்கும் சம்பவங்கள் துவங்கும். முதல் மரியாதையில் ராதாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் சிவாஜி. அவரது வாழ்க்கையில் திடீரென வசந்தம் வருகிறது. எங்க வீட்டுப் பிள்ளையில் ஹோட்டலில் சாப்பிட்டுக் காசில்லாமல் பயந்தாங்கொள்ளி எம்.ஜி.ஆர் நழுவ, இன்னொரு எம்.ஜி.ஆர் மாட்டிக்கொள்கிறார். ஆள்மாறாட்டம் துவங்கிவிட்டது என்பது புரிகிறது. புதிய எம்.ஜி.ஆரின் கதை இனி துவக்கம். சூது கவ்வுமில் தாஸின் கதையைக் கேட்கிறார்கள் மூன்று நண்பர்களும். தாஸின் உலகத்துக்குள் இவர்கள் வந்துவிட்டார்கள் என்று புரிகிறது. இனி தாஸின் கதைதான் ஆரம்பிக்கப்போகிறது.
இதுதான் B Story. இந்தப் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கும் தருணம் (அல்லது) காட்சி. சென்ற பாயிண்ட் முடிந்ததும் வரும் காட்சி.
8. Fun and Games (30-55)
புதிய வாழ்க்கை ஆரம்பித்ததும் என்ன நடக்கும்? அந்த வாழ்க்கையில் ஜாலியான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கும். ஆள் மாறாட்டத்தினால் பயந்தாங்கொள்ளி எம்.ஜி.ஆர் வீர எம்.ஜி.ஆரின் வீட்டுக்குப் போய்விட, வீர எம்.ஜி.ஆர் ரங்காராவையும் சரோஜாதேவியையும் சந்திக்கிறார். சரோஜாதேவியின் பர்ஸைப் பிடுங்கிக்கொண்டு ஓடும் திருடனைப் பிடித்துக்கொடுத்து சரோஜாதேவியின் அன்பைச் சம்பாதிக்கிறார். சூது கவ்வுமில் கிட்னாப்பிங் காட்சிகள் துவங்குகின்றன. ‘கம்ன்னா கம்’ பாடலில் படு ஜாலியாக தெருவில் வருவோர் போவோரையெல்லாம் கிட்னாப்பிங் செய்கின்றனர்.
இதுபோன்ற ஒரு இருபது நிமிட ஜாலி காட்சிகள்தான் Fun and Games. எந்தப் படத்திலும் கதாபாத்திரம் ஒரு முடிவு எடுத்தபின்னர் இது இருக்கும். ஒருவேளை சோகமான படம் என்றால், இவையே ஜாலியாக இல்லாமல் படு சோகமாக இருக்கும். ‘மகாநதி’யில் சிட்ஃபண்ட் இழுத்து மூடப்படும் காட்சிகள் இவை. ஆனால் அதிலுமே ‘பேய்களை நம்பாதே’ என்று ஒரு ஜாலி பாடல் இந்தத் தருணத்தில் வருகிறது.
பாக்கி இருப்பவற்றை வரும் வாரம் பார்க்கலாம்.
பயிற்சி # 7
Catalystஆக நீங்கள் பார்க்கும் படங்களில் வரும் காட்சிகள் என்னென்ன? அதாவது, சாதாரணமாக இருக்கும் நாயகனின் வாழ்க்கை எப்போது அசாதாரணமாக மாறப்போகிறது? அதற்குக் காரணமான சம்பவம் அல்லது ஸீன் என்ன? உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடிகிறதா? தாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியபின்னர், நமது கதையில் முதன்முறையாக எதாவது நடக்குமே – அந்தத் தருணம்தான் கேடலிஸ்ட் என்பதை மறக்க வேண்டாம்.
உங்கள் கதையில் இப்படிப்பட்ட காட்சி இருக்கிறதா? இல்லை என்றாலும் கதை முன்னே சென்றால் பரவாயில்லைதான். வலுக்கட்டாயமாக இவைகளைத் திணித்தே ஆகவேண்டும் என்பது அவசியமில்லை.
பயிற்சி # 8
உங்களுக்குப் பிடித்த படங்களில் ஒருவேளை Catalyst காட்சி இருந்தால், அதற்குப் பின்னர் என்ன ஆகிறது? அறிமுகத்துக்குப்பின் தேமே என்று இருக்கும் ஹீரோவைத் தூண்டி விடும் கேடலிஸ்ட் காட்சிக்குப் பின் ஹீரோ தடால் என்று அந்த மாற்றத்தை உணர்ந்து அடுத்த பக்கம் செல்கிறானா? அல்லது அந்த மாற்றத்தைப் பற்றி யோசிக்கிறானா? யாருடனாவது ஆலோசிக்கிறானா? அதாவது, Debate என்ற மனப்போராட்டம் நடக்கிறதா?
உங்கள் கதையில் கேடலிஸ்ட் இருந்தால், அதன்பின் ஒரு டிபேட் வைக்க முயற்சி செய்யுங்கள். அதுதான் இயல்பு. இது அந்தக் கதாபாத்திரத்திடம் மக்களின் நெருக்கத்தை அதிகரிக்கும்.
பயிற்சி # 9
உங்களுக்குப் பிடித்த படங்களில் Break in to Two என்ற காட்சி இருக்கிறதா? அவசியம் எல்லாப் படங்களிலும் 100% இடம்பெறும் காட்சி இது. இதைத்தான் ஸிட் ஃபீல்ட் ப்ளாட் பாயிண்ட் 1 என்று சொல்கிறார். கதையில் மாற்றம் நிகழ்ந்து, ஹீரோ டக்கென்று கதைக்குள் போய்விடும் ஸீன். ராணி முகர்ஜியின் மரணம் (ஹேராம்), விருமாண்டி முதுகில் வெட்டப்படுதல் (விருமாண்டி), நாயகர்கள் முண்டாசுப்பட்டிக்குச் செல்ல முடிவெடுப்பது (முண்டாசுப்பட்டி) ஆகியவை சில உதாரணங்கள்.
உங்கள் கதையில் இந்தத் தருணம் என்ன? அதை நன்றாக எழுதியிருக்கிறீர்களா?
பயிற்சி # 10
நீங்கள் பார்க்கும் படத்தில் கதைக்குள் ஹீரோ புகும் காட்சி நடந்தபின் என்ன ஆகிறது? அந்தப் புதிய களத்தில் ஹீரோ சந்திக்கும் சாகஸங்கள் விறுவிறுப்பாகவும் ஜாலியாகவும் சொல்லப்பட்டிருக்கிறதா? எத்தனை நேரம் அப்படிப்பட்ட காட்சிகள் வருகின்றன? ஒருவேளை சோகப் படம் என்றால் இவை சோகமாக இருக்கும். Adventureகள். சாகஸங்கள். ஜாலியான தருணங்கள்.
உங்கள் கதையில் இப்படி எதுவாவது இருக்கிறதா? இல்லை என்றால் இயல்பான சில காட்சிகளை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்.
தொடரும் . . .
நீங்கள் சொல்லும் catalyst காட்சிக்கு சிறந்த உதாரணம் pulp fiction அந்த random shooting scene அப்புறம் restaurantல் நடக்கும் discussion.
whats your opinion?
Any idea of writing a review for Agents of Sheild.
போன வாரம் விட்டுப் போன அத்தியாயத்துக்கு பிராயச்சித்தமாக, இந்த வாரக் கட்டுரையை சற்று நீண்டதாக வெளியிட்டிருக்கிறீர்கள். இதை எதிர்பார்த்துதான் போன வாரம் உங்களிடம் காரணம் எதுவும் கேட்கவில்லை. நன்றி..!
தமிழ் திரைக்கதை அமைப்பிலும் ஒரு பக்கம் என்பது திரையின் ஒரு நிமிடத்திற்கு ஈடாக அமையுமா?