Fade In முதல் Fade Out வரை – 11
முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம்
ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை உத்திகளைப் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதோ அவரது திரைக்கதை முறை.
The Blake Snyder Beat Sheet
PROJECT TITLE:
GENRE:
DATE:
1. Opening Image (1);
2. Theme Started (5);
3. Set-up (1-10);
4. Catalyst (12);
5. Debate (12-25);
6. Break into Two (25);
7. B Story (30);
8. Fun and Games (30-55);
9. Midpoint (55);
10. Bad Guys Close In (55-75);
11. All is Lost (75);
12. Dark Night of the Soul (75-85);
13. Break into Three (85);
14. Finale (85-110);
15. Final Image (110);
9. Midpoint (55)
தலைப்பிலிருந்தே, ஹாலிவுட் திரைக்கதைகளில் ‘மிட்பாயிண்ட்’ என்று அழைக்கக்கூடிய பகுதி வரவேண்டியது ஐம்பத்தைந்தாவது பக்கம் என்பது புரிந்திருக்கும். ‘மிட் பாயிண்ட்’ என்பது அங்கே ஒரு திரைக்கதையை சரிபாதியாகப் பிரிக்கும் பகுதி. பொதுவாக ஹாலிவுட் திரைக்கதைகளில் இந்த இடத்தில்தான் பிரதான பாத்திரம் ஏதேனும் ஒரு மிகப்பெரிய பிரச்னையை சந்திக்கும். ‘பெரிய பிரச்னை’ என்றால், அது இதுவரை வந்த ஐம்பத்தைந்து நிமிடங்களில் அது சந்தித்த எல்லாச் சிக்கல்களையும் விடப் பெரிய சிக்கல். இத்தகைய இடத்தில், என்ன செய்வது என்பதே தெரியாமல் அந்தப் பாத்திரம் உடைந்துபோய்விடும். இல்லாவிட்டால் ஏதேனும் வெற்றி அந்தப் பாத்திரத்துக்குக் கிடைக்கும். இந்த வெற்றி என்பதும் சரி, சிக்கல் என்பதும் சரி – தற்காலிகமானவையே. அந்த வெற்றிக்குப் பின்னர் வரும் காட்சியில் அந்தப் பாத்திரத்துக்கு விரிக்கப்பட்ட வலை அது என்பது புரியலாம். அந்தத் தோல்விக்குப் பின் வரும் காட்சிகளில் மெல்ல மெல்ல அதிலிருந்து அந்தப் பாத்திரம் மீளலாம்.
இது ஹாலிவுட்டில். இதை அப்படியே தமிழ் மற்றும் இந்தியத் திரைக்கதைகளில் பொருத்தினால் என்ன ஆகும்? அப்போது இந்த ’மிட் பாயிண்ட்’ என்பது இண்டர்வெல் என்று ஆகிறது. தமிழ்ப்படங்களில் இண்டர்வெல் என்பது இன்றியமையாத ஒரு அம்சமாகப் பலகாலமாக செயல்பட்டு வருகிறது. காரணம், நமது படங்களின் நீளம். குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணிநேரம் வரை அவை இருப்பதால் இண்டர்வெல் வைத்தே ஆகவேண்டிய சூழல். குத்துமதிப்பாக தமிழ்ப்படங்களில் 70-80 நிமிடங்களில் இண்டர்வெல் வருகிறது. இந்த இண்டர்வெல்லில் எதாவது ஒரு ட்விஸ்ட்/திடுக் சம்பவம்/சண்டை போன்ற ஒன்று இருப்பதை நாம் கவனித்து வருகிறோம். அப்போதுதான் வெளியே போன ஆடியன்ஸ் உள்ளே வர வாய்ப்புகள் அதிகம் என்பதால்.
‘ரோஜா’ படத்தில் அர்விந்த்ஸ்வாமி கடத்தப்படுவது இந்த இண்டர்வெல்லில்தான். அப்போதுதான் கதை அந்தப்படத்தில் விறுவிறுப்பு அடைகிறது. ‘அரிமா நம்பி’ படத்தில், மத்திய அமைச்சர் தனது அடியாளிடம் ‘அந்தப் பொண்ணு, அந்தப் பையன் ரெண்டுபேரையும் நான் சென்னை வர்ரதுக்குள்ள கொன்னுடு’ என்று சொல்லும் இடத்தில் வருகிறது. அதற்கு முன்னர்தான் அந்தப் பெண்ணை ஹீரோ காப்பாற்றியிருக்கிறான். மெமரி கார்ட் அவனிடம்தான் உள்ளது. எனவே, அடுத்து என்ன ஆகப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுகிறது (படத்துக்கு விமர்சனம் விரைவில்). ’அரிமா நம்பியை’ எடுத்துக்கொண்டால், ஹீரோ அடையும் தற்காலிக வெற்றிதான் இடைவேளை. அதன்பின் இன்னும் பல துன்பங்களை அனுபவிக்கப் போகிறான்.
இந்த ‘மிட் பாயிண்ட்’ என்ற அமைப்பைப் பற்றி இது போதும்.
10. Bad Guys Close in (55-75)
’அரிமா நம்பி’யையே எடுத்துக்கொள்வோம். இண்டர்வெல் முடிந்ததுமே என்ன ஆகிறது? ஹீரோயின் ஹீரோவிடம் அவளது கதையைச் சுருக்கமாகச் சொல்கிறாள். மெமரி கார்டின் பாஸ்வேர்ட் தெரியவேண்டும் என்றால் அவளது தந்தையின் ஆஃபீஸுக்குச் சென்று அவரது டைரியை எடுக்கவேண்டும். எனவே அங்கே செல்கிறான் ஹீரோ. டைரி கிடைக்கிறது. அப்போதுதான் அந்த மெமரி கார்டில் என்ன இருக்கிறது என்பது இவர்களுக்குப் புரிகிறது. அது ஒரு பயங்கரமான விஷயம். உடனடியாக அங்கிருந்து ஒரு ஹோட்டல் ரூமை புக் செய்யும் இருவரும், யூட்யூபில் அதனை அப்லோட் செய்ய முய்ற்சிக்கின்றனர். அப்போதுதான் ஆபத்து வெடிக்கிறது. இருவரும் துரத்தப்படுகின்றனர். இதுதான் Bad Guys Close in. ஹாலிவுட்டில் மிட் பாயிண்ட் முடிந்ததுமே கெட்டவர்கள் நல்லவர்களைத் துரத்துவது தொடங்கிவிடும். நம்மூரில் படங்களின் நீளம் அதிகம் என்பதால் அது கொஞ்சம் தள்ளி நடக்கும். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு இது இருக்கும்.
சுப்ரமண்யபுரத்திலும் இதேதானே? படத்தின் இடைவேளையில்தான் கதை துவங்குகிறது. கொலை. இதன்பின்னர்தான் நம்பிக்கைத் துரோகம் என்றால் என்ன என்று நண்பர்களுக்குப் புரிகிறது. தலைமறைவு. துரத்தல்.
எந்தப் படமாக இருந்தாலும் பிரதான பாத்திரத்துக்கு நிகழும் சோதனைகள் என்பது இந்தப் பகுதியில்தான் உச்சக்கட்டம் அடையும். அவனது லட்சியத்துக்கு எக்கச்சக்க இடர்கள் வரும்.
11. All is Lost (75)
கதாநாயகன் தனது வாழ்க்கையின் உச்சபட்ச சோதனைகளைச் சந்திக்கும்போது என்ன நடக்கும்? ’சூது கவ்வும்’ – பென்ட்ரைவ் ஆட்டோவில் மாட்டி சிதறுகிறது. ‘அரிமா நம்பி’யில் மெமரிகார்ட் உடைகிறது. ’சுப்ரமண்யபுரம்’ அழகர் கொல்லப்படுகிறான். தனது மகள் விபசார விடுதியில் இருக்கிறாள் என்பது ’மகாநதி’ கமலுக்குத் தெரிகிறது. ’ஆடுகளம்’ படத்தில் நாயகன் கருப்பின் பணம் தன்னிடம் இல்லை என்று மறுத்துவிடுகிறார் பேட்டைக்காரர்.
இப்படி, பிரதான பாத்திரத்திற்கு எல்லாமே இழந்த நிலை வருகிறது அல்லவா? அதுதான் All is Lost. கைவசம் இருந்த எல்லாமே போய்விட்டபின் அந்தப் பிரதான பாத்திரம் என்ன செய்யப்போகிறது? எப்படி தனது லட்சியத்தை அடையப்போகிறது?
பொதுவாக ஹாலிவுட் படங்களில் இந்தத் தருணத்தில்தான் கதாநாயகனுக்கு உறுதுணையாக இருக்கும் எதாவது ஒரு பாத்திரம் இறக்கும். ’ஸ்பைடர்மேன்’ படத்தில் பீட்டர் பார்க்கரை வளர்த்த பாட்டி ஹாஸ்பிடலைஸ் செய்யப்படுவது இந்தத் தருணம்தான். ‘The Dark Knight’ படத்தில் கதாநாயகி ரேச்சல் ஹார்வி டெண்ட்டுடன் ஜோக்கரால் கட்டிப்போடப்பட்டு இறப்பது இந்தத் தருணம்தான். இதே நேரத்தில்தான் உறூதியான, தூய்மையான ஹார்வி டெண்ட், வில்லன் டூ ஃபேஸாகவும் மாறுகிறார். Lord of the Rings: Return of the King படத்தில் மன்னர் தியோடன் இறப்பது இன்னொரு உதாரணம். தமிழில் ‘ஹேராம்’ படத்தில் ஷா ருக் கான் இறப்பது இன்னொரு உதாரணம். இப்படி கதாநாயகனின் பயணத்துக்கு உறுதுணையாக இருக்கும் பாத்திரம் இறப்பதால் கதாநாயகன் ஆத்திரம் அடைகிறான் (அல்லது மனம் திருந்துகிறான்). அவனது மனதில் இருக்கும் லட்சியம் இப்போது உச்சத்துக்கு சென்று கொழுந்து விட்டு எரிகிறது. இறந்த அந்த நல்லவரின் மரணம் பயனில்லாமல் போய்விடக்கூடாது என்பதுதான் அவன் மனம் முழுதும் பரவி நிற்கிறது.
12. Dark Night of the Soul (75-85)
அழகரின் மரணம் பரமனை எப்படியெல்லாம் பாதிக்கிறது? ரேச்சல் இறந்ததும் ப்ரூஸ் வேய்ன் என்ன ஆகிறார்? ஷா ருக் கான் இறந்ததும் நாயகன் சாகேத்ராமுக்கு என்ன நடக்கிறது?
தனது பயணத்தின் பாதாளத்துக்குக் கதாநாயகன் விழுந்துவிடும் தருணம் இது. இனிமேல் விடிவே இல்லை என்று அவன் தனக்குள் ஆழ்ந்து துயரத்தில் மிதக்கும் தருணம். கதாநாயகனிடம் இருந்து எல்லாமே பிடுங்கப்பட்டுவிட்ட தருணம். அடுத்து வருவது க்ளைமேக்ஸ். ஆனால் அந்தக் க்ளைமேக்ஸில் என்ன செய்து எதிரியை வெல்வது என்பது நாயகனுக்கு இன்னும் தெரிந்திருக்காது. அந்தக் கடைசி யோசனை, இந்தத் தருணத்தில்தான் நாயகனின் மனதில் மின்னலடிக்கப்போகிறது. அப்படிப்பட்ட தருணமே Dark Night of the Soul. எல்லாமே முடிந்துவிட்டது என்று கதாநாயகனுக்கு ஒரு நெகட்டிவ் எண்ணம் தோன்றும் தருணம். ஆனால் இந்த நெகட்டிவ் எண்ணத்தாலேயேதான் ஒரு பாஸிடிவ் எண்ணமும் இதன்பின் அவனுக்குத் தோன்றப்போகிறது. அந்தக் கடைசி எண்ணம்தான் அவனது வெற்றிக்கோ (அல்லது வீரமரணத்துக்கோ) காரணமாகவும் இருக்கப்போகிறது.
13. Break in to Three (85)
இதுதான் அந்த பாஸிடிவ் எண்ணம் உதிக்கும் தருணம். கடைசி பிரம்மாஸ்திரம் ஹீரோவின் மனதில் தோன்றும் நேரம். ‘அரிமா நம்பி’யில் வில்லன் மத்திய அமைச்சரை வெல்லும் யோசனை ஹீரோவின் மனதில் தோன்றிய தருணம். அழகரின் மரணத்துக்குப் பழிவாங்க என்ன செய்யவேண்டும் என்று பரமன் முடிவெடுக்கும் தருணம். சில படங்களில் இது ஹீரோவின் மனதில் தோன்றாமல் ஒரு விபத்து போல சந்தர்ப்ப சூழல்களாலும் நடப்பது உண்டு. உதாரணம்: சூது கவ்வும்.
14. Finale (85-110)
அப்படி வில்லனை வெல்லும் எண்ணம் தோன்றியதும் என்ன நடக்கிறது? க்ளைமேக்ஸ். அதுதான் இந்தப் பகுதி. க்ளைமாக்ஸின் ஆரம்பத்தில் இருந்து வில்லன் சாவதோடு முடிகிறது. இதை விரிவாக விளக்கத் தேவையில்லைதானே? ஆனால் இதில் நாம் எல்லோரும் கவனித்த விஷயம் – முதலில் அடியாளில் இருந்து தொடங்கி கடைசியில் வில்லன் சாவதாகப் படிப்படியாக இது இருக்கும்.
15. Final Image (110)
நாம் முதல் பகுதியாகப் பார்த்த ஓப்பனிங் இமேஜில் கதை நிகழ்வதற்கு முன்னர் கதாநாயகன் எப்படிப்பட்ட உலகில் இருந்தான் என்று கவனித்தோம். கதை நடந்து முடிந்ததும் கதாநாயகன் முற்றிலும் மாறிவிட்ட சூழலுக்கு வந்துவிடுகிறான். உள்ளும் புறமும் அவன் பழைய நபர் இல்லை. மாறியிருக்கிறான். அப்படிப்பட்ட புதிய மாற்றத்தை உணர்த்தும் ஒரு காட்சியோடு திரைக்கதையை முடிப்பதுதான் ஃபைனல் இமேஜ்.
பயிற்சி #11
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை பகுதிகளையும் உங்களுக்குப் பிடித்த படத்தில் இனம் காணமுடிகிறதா? அப்படிக் காணமுடிந்தால், அப்படிப்பட்ட தருணங்கள் உங்கள் திரைக்கதையில் வைக்க வசதியாக இருக்கும். ‘யாராவது சாவது’ என்று சொன்னால் அப்படியே அதைப் பின்பற்றவேண்டும் என்பது இல்லை. அந்தப் பகுதியின் நோக்கம் நிறைவேறவேண்டும். அவ்வளவே.
தொடரும்…
நல்லவேளை…நான் ‘அரிமா நம்பி’ பார்த்து விட்டதால் அந்தப் படத்துடனான ஒப்பீடுகள் எளிதில் புரிந்தன ! ப்ளேக் ஸ்னைடர் பற்றிய அத்தியாயம் முடியும் தருவாயில் இருப்பது போலத் தெரிகிறதே ?! சூது கவ்வும்-ல்Break in to Three எது என்று சரியான முடிவுக்கு வர இயலவில்லை…உதவுங்கள் !
சூது கவ்வும்ல கோர்ட்ல சரணடையும் மொமெண்ட் தான் ப்ரேக் இண்டு த்ரீ வசந்த்.
தமிழ் சினிமாவில் நான் ரசித்த சிறந்த midpoint (இடைவேளை) பாட்ஷா
அதை பார்த்த பிறகு அதற்கு மேல் பார்க்காமல் இருக்கவே முடியாது
You forget to say the relationship between Mid point and All is lost …Anna.