Fade In முதல் Fade Out வரை – 12

by Karundhel Rajesh July 17, 2014   Fade in to Fade out

முந்தைய அத்தியாயங்கள் இங்கே.

Fade In முதல் Fade Out வரை


 
இது வரை ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பைப் பார்த்துவிட்டோம். இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில டிப்ஸ்களும் ப்ளேக் ஸ்னைடரின் வசம் இருக்கின்றன. அவைகளை இனி பார்ப்போம். இவைகள், மேலோட்டமாக திரைக்கதை அமைப்பு பற்றி இல்லாமல் காட்சிகளை எப்படி உருவாக்குவது என்பது பற்றியவை.

1. Save the Cat

இதுதான் இந்தப் புத்தகத்தின் பெயர். இதன் பெயர்க்காரணத்தை முன்னர் ஒருமுறை பார்த்திருக்கிறோம். எளிமையாகச் சொன்னால், எல்லாப் படங்களிலும் ஹீரோவுக்கான ஒரு அறிமுகக்காட்சி இருக்கும். அது மக்களின் மனதைக் கவர்கிறதா, மக்களின் மனதில் ஹீரோ/ஹீரோயின் அறிமுகம் நன்றாகப் பதிகிறதா, அவர்களின் குணாதிசயங்கள் மக்களுக்கு விளங்குகிறதா போன்ற பல கேள்விகளுக்கு விடையாக விளங்குவது இந்தக் காட்சிதான். Save the Cat என்பது என்ன என்றால், Alien படத்தில் ஹீரோயின் ஸிகோர்னி வீவர் ஒரு பூனையை ஆரம்பத்தில் காப்பாற்றுவார். அதனால் அவரது கதாபாத்திரத்தின் தன்மை எளிதாக விளங்கிவிடும். அந்தக் காட்சியில் இருந்துதான் இந்தப் புத்தகத்தின் தலைப்பு ப்ளேக் ஸ்னைடருக்குப் புரிபட்டது.

எந்த எம்.ஜி.ஆர் படமாகவோ ரஜினி படமாகவோ அல்லது எந்த மாஸ் ஹீரோவின் படமாகவோ இருக்கட்டும். முதலில் அந்த ஹீரோ அறிமுகமாகும் காட்சி எப்படி இருக்கிறது? ஹீரோ எதாவது நல்ல விஷயத்தைச் செய்வார். சக ஆட்டோ ஓட்டுனரின் மகள்/தங்கை திருமணத்துக்குப் பணம் கொடுத்து அனுப்புவார். கல்யாண மண்டபத்தில் பைக்கில் புகுந்து அதிரடியாக மணப்பெண்ணைத் தூக்குவார் (அதற்கு ஒரு நல்ல காரணம் பின்னால் சொல்லப்படும்). ஊரே அவரைத் தேடிக்கொண்டிருக்கும். ஆனால் கோயிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருப்பார். இதுபோன்ற எதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்துகொண்டுதான் மாஸ் ஹீரோக்கள் அறிமுகமாவார்கள். உடனே உலகத்துக்கே புத்தி சொல்லும் தத்துவப் பாடல். இதுதான் தமிழ் சினிமா டெம்ப்ளேட். ஆனால் ஹாலிவுட்டில் இந்த அறிமுகம் கதையோடு சேர்ந்து ஆடியன்ஸுக்கு ஒரே நிமிடத்தில் அந்தக் கதாபாத்திரத்தைப் புரியவைத்துவிடும். அதுதான் Save the Cat scene.

டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மெண்ட் டே படத்தில் அர்நால்டின் அறிமுகம் எப்படி? திடீரென்று பூமியில் ஆடைகள் இல்லாமல் தோன்றும் அர்நால்ட், அப்படியே நடந்து ஒரு பப்புக்குள் போகிறார். அங்கே பிரச்னை வெடிக்கிறது. அதில் ஒருவனின் உடையைப் பிடுங்கிப் போட்டுக்கொள்கிறார். வெளியேறுகிறார். அந்தக் காட்சியிலேயே ‘இந்தாள் கிட்ட வெச்சிக்கக்கூடாது’ என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. அதன்பின் தோன்றும் ராபர்ட் பேட்ரிக்கின் அறிமுகம் இன்னும் கொடூரம். அப்போதுதான் யார் ஹீரோ, யார் வில்லன் என்பது நன்றாக விளங்குகிறது.

குருதிப்புனல் படத்தில் கமல் அறிமுகமாகும் காட்சியில்தான் குண்டு வெடித்து பஸ்ஸில் செல்லும் குழந்தைகள் பலியாகின்றனர். அவரது குணம் அந்தக் காட்சியில் புரிகிறது. இதுபோல் இன்னும் பல படங்களில் கதையோடு சேர்ந்த பல அறிமுகங்களைச் சொல்லலாம். அப்படிக் கதையோடு சேர்ந்த அறிமுகங்கள் இருந்தாலும், அங்கே ஹீரோவின் குணாதிசயம் புரியும் வகையில் ஒரு சிறிய சீன் இருந்தால் இன்னும் ஆடியன்ஸ் எளிதாக அந்த ஹீரோவுடன் ஒன்றிவிடுவார்கள் என்பதுதான் ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் ரூல்.

மேலே பார்த்த டெர்மினேட்டர் 2 உதாரணத்தில் இன்னொரு விஷயமும் விளங்கும். முதலில் அர்நால்டின் அறிமுகத்தின்போது அவர்தான் வில்லன் போல இருப்பார். ஆனால் அவருக்குப்பின்னர் அவரைவிட மோசமான ஒரு ஆளை அறிமுகம் செய்வதனால் முதலில் அறிமுகமான ஆள் நமக்குப் பிடித்துப் போய்விடுகிறான். அதுதான் உளவியல் உண்மை. ஒரு கோட்டின் அருகே இன்னொரு பெரிய கோட்டை வரைந்து இந்தக் கோட்டை சிறியதாக்குதல். நமது கதாபாத்திரம் ஒரு ஆண்ட்டி ஹீரோவாக இருந்தால் அவனை விடக் கொடூரமான ஆளை அறிமுகப்படுத்தி இந்த ஆண்ட்டி ஹீரோவை ஆடியன்ஸ் விரும்பவைக்கமுடியும். ஆரண்ய காண்டத்தில் ஹீரோ சம்பத், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோரைக் காட்டியபின் டீக்கடையில் விரல் துண்டான கதையைச் சொல்லி அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஆடியன்ஸுக்கு வெறுப்பு வரச் செய்வது இதுதான். அதேபோல் படத்தின் இடையே வரும் வில்லன்கள். முதலில் ஜாக்கி ஷ்ராஃபை அறிமுகப்படுத்தி, அவருடனேயே மோதும் கதாபாத்திரம் ஒன்றைக் காட்டினால் ஆடியன்ஸ் அவன் பின்னால் வந்துவிடுகிறார்கள்.

ஆனால் எல்லாப் படங்களிலும் இப்படி ஒரு ஹீரோவின் குணாதிசயத்தைக் காட்டும் காட்சியை வைத்தே ஆகவேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு செயல்படவும் கூடாது. இந்தக் காட்சிக்கு ‘ஹீரோவின் அறிமுகம் – ஹீரோவின் நல்ல குணத்தைக் காட்டியே ஆகவேண்டும்’ என்று அர்த்தம் இல்லை. மாறாக, ஹீரோவுடன் ஆடியன்ஸை சேர்த்து வைக்கும் காட்சி என்றே இதனைப் பொருள் கொள்ளவேண்டும். ஹீரோவும் ஆடியன்ஸும் ஒருவரோடொருவர் இணையவேண்டும். அதுதான் இந்தக் காட்சியின் பொருள். அந்தக் கதாபாத்திரம் வரும் காட்சியில் அதனுடன் நாம் மனதில் ஒத்துப்போய்விடவேண்டும். அதுதான் உண்மையில் Save the Cat. இந்தக் காட்சியின் முக்கியத்துவம் மிகப்பெரியது என்பது ப்ளேக் ஸ்னைடரின் கருத்து. பலரும் இந்த முக்கியத்துவம் தெரியாமல் இப்படிப்பட்ட காட்சியை வைக்காமல், படம் ஆரம்பித்துப் பல நிமிடங்கள் கழித்துதான் ஆடியன்ஸால் ஹீரோவுடன் ஒன்ற முடிகிறது. இதனால் ஆடியன்ஸுக்குப் படம் அலுக்கவும் வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லாமல், ஹீரோ அறிமுகமாகும் காட்சியிலேயே ஆடியன்ஸும் ஹீரோவும் ஒன்றிவிடவேண்டும்.

2. Pope in the Pool

போப்பாண்டவர் நீச்சல்குளத்தில் இருந்தால் நமக்கு என்ன? என்று இந்தத் தலைப்பைப் படித்ததும் தோன்றலாம். ஆனால் இதுவும் ஒரு ரசமான காட்சிதான். இப்படி யோசித்துப் பாருங்கள். உங்கள் படத்தில், அதுவரை நடந்ததையெல்லாம் விவரிக்கவேண்டிய காட்சி வருகிறது. பல படங்களில், என்ன நடக்கிறது என்பதே இப்படிப்பட்ட பழங்கதையை விளக்கியபின்னர்தான் ஆடியன்ஸுக்கு விளங்கும். உதாரணமாக ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் மிஷ்கின் ஒரே ஷாட்டில் விவரிக்கும் அந்த ஃப்ளாஷ்பேக். இப்படிப் பல படங்களில் கதாபாத்திரங்கள் வந்து படத்தில் இதுவரை நடந்த கதையை விவரிக்கும். அப்போதுதான் இனிமேல் என்ன நடக்கிறது என்பதே நமக்குப் புரியும். ஆனால் இந்தப் பழங்கதையை யார் கேட்பது? போர்தான் அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிஷ்கினே, ஜாலியாக சமாதியில் காலை நீட்டி அமர்ந்துகொண்டு கேஷுவலாக அந்தக் கதையை சொல்லி முடித்திருந்தால் படு அறுவையாகத்தான் இருந்திருக்கும் அல்லவா? மாறாக, தனது முகபாவத்தில் மாறுதல்களைச் செய்து அந்தக் காட்சியை ஒப்பேற்றிவிட்டார். எதையுமே ரொமாண்டிஸைஸ் செய்தே பழக்கப்பட்ட நமக்கும் அந்தக் காட்சியைப் பார்த்ததும் உள்ளே எதுவோ உருகி, பிடித்துவிட்டது.

இதுதான் Pope in the Pool.

போப்பாண்டவரைக் கொலைசெய்ய ஒரு திட்டம் போடுகிறார்கள் சில சமூகவிரோதிகள். அந்தத் தகவலை போப்பிடம் சொல்லியாக வேண்டும். போலீஸ் அதிகாரிகள் வாடிகனுக்கு செல்கிறார்கள். அப்போது போப் ஜாலியாக தனது நீச்சல்குளத்தில் நீந்திக்கொண்டிருக்கிறார். அங்கு செல்லும் அதிகாரிகள் அவரிடம் எல்லாக் கதையையும் சொல்கின்றனர். போப் தனது அலுவலகத்தில் நீண்ட அங்கியும் தொப்பியும் அணிந்துகொண்டு படு சீரியஸாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போது இது நடந்திருந்தால் அலுப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால் தனது நீச்சல்குளத்தில் போப் நீந்துகிறார் என்றால், அதைப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்? வாடிகனில் நீச்சல்குளம் உள்ளது என்பதே பலருக்கும் தெரியாது. போப் நீண்ட அங்கியில் இல்லாமல் நீச்சல் உடையில் நீந்துகிறார் என்பதும் பலருக்கும் அதிசயமாகத்தான் இருக்கும். எனவே காட்சியின் அமைப்பை இப்படி மாற்றி, பழைய கதையை சொல்லிமுடிக்கும்போது ஆடியன்ஸ் அலுப்படையாமல் இருக்க அந்தத் திரைக்கதையாசிரியரால் முடிந்தது (ஆனால் அது படமாக எடுக்கப்படவில்லை என்பது சோகம்). இதிலிருந்துதான் Pope in the Pool என்பது ப்ளேக் ஸ்னைடருக்கு உதித்தது.

பொதுவாக இப்படிப் பழைய கதையை விவரிப்பதற்கு Exposition என்று பெயர். நாம் சென்ற வாரத்தில் கூட ‘அரிமா நம்பி’ விமர்சனத்தில் இது ஜாஸ்தியாக உள்ளது என்று பார்த்தோம். கண்முன்னால் ஒரு நபரை அடியாட்கள் மிரட்டுகிறார்கள். அதை ஒளிந்திருந்து பார்க்கும் ஹீரோ, ‘அங்க பாருங்க அந்த ஆளை மிரட்டுறாங்க?’ என்று பக்கத்திலேயே ஒளிந்திருக்கும் நபரிடம் சொன்னால் எப்படி இருக்கும்? இதுதான் எக்ஸ்பொஸிஷன். இப்படி போரடிக்காமல் முடிந்தவரை அந்தக் காட்சியை சுவாரஸ்யப்படுத்தவேண்டும். ஜுராஸிக் பார்க்கில் டைனாஸார்களின் கதை ஒரு அனிமேஷன் படம் மூலம் சொல்லப்படுவது ஒரு உதாரணம். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களின் துவக்கத்தில் மோதிரத்தின் பின்கதை சொல்லப்படும்போது விஷுவல்கள் மூலமாக அந்தக் கதையை விளக்கியிருப்பது இன்னொரு உதாரணம். இதுதான் பழைய கதையை சுவாரஸ்யமாகச் சொல்வது.

தமிழில் பல படங்களில் ‘இதோ பாரு.. இந்த வரைபடத்துல இருக்குற வீட்டைத்தான் நாம கொள்ளையடிக்கப்போறோம்… அதுல இங்கதான் செக்யூரிடி நிப்பான்’ என்று விலாவாரியாக விவரிக்கும் காட்சி வரும். இதுதான் எக்ஸ்பொஸிஷன். இனிமேல் நடக்கப்போவதை மறுபடியும் இப்படி வசனங்களால் சொல்வது அவசியமற்றது. அலுக்கவும் செய்யும். அதற்குப் பதில், விவரிப்பு ஆரம்பிக்கும்போதே அடுத்த காட்சியைக் காட்டி, பின்னணியில் விவரிப்பு வந்தால் அலுக்காது. இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. ‘இப்புடித்தான் பாருங்க 1960ல நான் மிலிட்டிரில இருந்தப்ப’ என்று எதாவது படங்களில் கதாபாத்திரங்கள் வந்தால் எல்லோரும் தெறித்து ஓடி மறைகிறார்கள்தானே? ‘தலைநகரம்’ படத்தில் வடிவேலு கதை சொல்லும்போதெல்லாம் இதுதானே நடக்கிறது? கதை சொல்லல் என்பது வந்துவிட்டாலே அந்த இடத்தில் எதாவது சுவாரஸ்யமாக நடந்தால்தான் ஆடியன்ஸால் அதை முழுதும் கேட்க முடியும் என்பது உண்மை. இதனால்தான் ‘கதை கேளு கதை கேளு’ போன்ற பாடல்கள் பின்னணியில் ஒலிக்க, காட்சிகளாக அந்தக் குறிப்பிட்ட கதை விரிகிறது. நாட்டிய நாடகங்களில் இப்படித்தான் பாடலும் நடனமுமாகக் கதை சொல்லப்படுகிறது. வெறும் நடனம் அல்லது வெறும் கதை சொல்லிப் பாடல் என்றால் அலுப்புதான்.

எனவே, உங்கள் திரைக்கதையில் போப் நீச்சலுடையில் நீந்துகிறாரா? நீந்தினால் நல்லது. நீந்தாவிட்டால் போப்பை நீந்தவையுங்கள். அதுதான் இதுபோன்ற கதை சொல்லும் காட்சிகளின் அலுப்பைப் போக்கும் என்பது ஸ்னைடரின் கருத்து.

இதைப்போன்ற இன்னும் பல விஷயங்கள் வரும் வாரத்தில்….

பயிற்சி #12

உங்களுக்குப் பிடித்த படங்களில் இந்த இரண்டு காட்சிகளும் எப்படி விளக்கப்பட்டிருக்கின்றன? உங்களால் கதாநாயகனுடன் ஒன்ற முடிந்ததா? அல்லது அதற்கு நீண்ட நேரம் ஆனதா? போப்பாண்டவர் நீச்சல்குளத்தில் நீந்தும் காட்சிகள் இருந்ததா அல்லது அலுத்துப்போன கதையை நீண்டநேரம் காட்டி அறுத்தார்களா?

தொடரும்…

  Comments

3 Comments

  1. Koushik

    Waiting for it. Thanks..

    Pope in the Pool + Save the Cat + Good Exposition

    1. KIll Bill Vol 1 – ORen Ishii’s childhood flashback.
    2. Aamir Khan’s 7 std Physics experiment with Seniors and Voice Over by Madhavan.
    Also. now I think, in the idiots movie, the screenplay was written differently , Madhavan’s change of his normal/usual character (Starting few mins of Madhavan) was used to explain hero’s character.
    3. Indian Thatha Kamal Mr. Senathypathy
    4. Mouna Raagam Karthik Flash back.

    Boring Exposition:
    Myna movie flash back..
    Some flashback scenes in Viswaroopam.
    All in All Alaguraja ( Stopped watching in the middle).
    Aaarambam Movie flash back

    The above are just came out of my mind after reading your series. Please correct me if any of my understanding is incorrect.

    Reply
  2. eliyas

    Thank y thala.

    Reply
  3. Badshah Mohideen

    Is there any Hollywood or world movie made not as per the Screenplay format as defined in ‘Fade in fade out’ , which was both commercially & critically acclaimed and your favorite in those movies?

    Reply

Join the conversation