Fade In முதல் Fade Out வரை – 13

by Karundhel Rajesh July 24, 2014   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பைப் பார்த்துவிட்டோம். இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில டிப்ஸ்களும் ப்ளேக் ஸ்னைடரின் வசம் இருக்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம்.

Fade In முதல் Fade Out வரை


 

3. Double Mambo Jumbo

திரைக்கதை எழுதுவதில் உடைக்கவே கூடாது என்ற சில விதிகள் உள்ளன. திரைக்கதையில் எல்லா விதிகளுமே உடைப்பதற்காகத்தான். ஆனாலும் இவற்றின் மீது கைவைத்தால் டப்பா டான்ஸாடி விடும். படத்தில் கொலை நடந்திருக்கும். கிட்டத்தட்ட எல்லா கதாபாத்திரங்களின் மீதும் சந்தேகம் இருக்கும். கடைசி ஸீனின் கடைசி ஷாட்டில் ஜிங் என்று யாரோ இதுவரை வரவே வராத அன்நியமான நபர் வந்து கொலைகாரன் ஆகிவிடுவார். இது பழைய தமிழ்ப்படங்களின் லாஜிக். இது போல இப்போது எடுத்தால் ஆடியன்ஸ் ஸ்க்ரீனைக் கிழித்துவிடுவார்கள். காரணம் இது ஆடியன்ஸை அவமதிக்கும் பாணி.

இதேபோல்தான் இந்த டபிள் மாம்போ ஜம்போ என்பதும் ஒரு முக்கியமான விதி. இதனை உடைத்த படங்கள் திரைக்கதையில் அடிவாங்கியே இருக்கின்றன. இப்படித் திரைக்கதையில் அடிவாங்காமல் இதனை இதுவரை யாரும் உடைத்ததில்லை.

ஆடியன்ஸால் எந்த ஒரு திரைக்கதையிலும் ஒரு தற்செயல் நிகழ்வுக்குமேல் ஒப்புக்கொள்ளமுடியாது. இதுதான் டபிள் மாம்போ ஜம்போ. ‘தற்செயல் நிகழ்வு’ என்பதை ஃபாண்டஸி படங்களில் ‘மாஜிக்’ என்று வைத்துக்கொள்ளலாம். ‘மாஜிக்’ என்றுதான் ப்ளேக் ஸ்னைடர் எழுதியிருக்கிறார். ஆனால் அதன் நீட்சியாக, தற்செயல் நிகழ்வு என்பது என் அவதானிப்பு.
தமிழில் ஃபாண்டஸி படங்கள் மிகக்குறைவு. இங்லீஷில் எக்கச்சக்கம். எனவே இது அங்கே மிக முக்கியம்.

பொதுவாகத் திரைக்கதையில் சில திருப்பங்கள் வரும். அந்தத் திருப்பங்கள் தற்செயல்களாக இருப்பதைத்தான் பல படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தத் தற்செயல்கள் ஒன்றுக்கு மேல் போய்விட்டால் ஆடியன்ஸுக்கு அலுக்க ஆரம்பித்துவிடும் என்பதே இந்த விதியின் விளக்கம்.

ஹேராம் படத்தை எடுத்துக்கொள்ளலாம். அதில் கதாநாயகன் சாகேத்ராமின் நண்பன் ஒரு படான் – முஸ்லிம். வாழ்க்கை முழுதும் கிழக்கிலும் வடக்கிலுமே கழித்தவன். ஆனால் அவன் பட ஆரம்பத்தில் சாகேத்ராமுடன் ஜாலியாக ‘ராமரானாலும் பாபரானாலும்’ என்று நாக்கை சுழற்றி சுழற்றிப் பாடிக்கொண்டிருப்பான். தமிழில். இது ஒரு கமர்ஷியல் மசாலா என்றால் பிரச்னையில்லை. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கமலின் கருத்து – இது ஒரு உலகப்படம் என்பது (வெளிப்படையாக அதை சொல்லாவிட்டாலும்). அவன் எப்படித் தமிழில் பேசினான் என்று கேட்டால் லாஜிகலாக அதற்குப் பதிலே சொல்ல முடியாது. அது ஒரு ‘தற்செயல்’. இது படத்தின் ஆரம்பத்தில் வருகிறது.

இதற்குப்பின் என்ன நடக்கிறது என்று கவனித்தால், வரிசையான பல ‘தற்செயல்கள்’ அதில் நடக்கின்றன. அப்யங்கர் தமிழில் பேசுகிறார். தில்லியில் ஹிந்துத் தீவிரவாத கும்பலின் தலைவராக தமிழ் பேசும் டெல்லி கணேஷ் இருக்கிறார். தில்லியில் இருக்கும் ஒரு புரோக்கர் கூடத் தமிழ் பேசுகிறார். மறுபடியும் அதே தமிழ் பேசும் படான் வருகிறான். சாகேத் ராமுடன் கண்டபடி தமிழிலேயே ‘சம்வாதம்’ புரிந்து இறந்து போகிறான்.

எத்தனை தற்செயல்கள்?

இப்படி வரிசையாக வரும் தற்செயல்கள் ஆடியன்ஸை இயல்பிலேயே அலுத்துப்போக வைத்துவிடும். இதுதான் டபிள் மாம்போ ஜம்போ. ஒரு தற்செயல் நிகழ்வைப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் எல்லாமே தற்செயலாக இருந்தால் எரிச்சல்தானே வரும்?

இந்த டபிள் மாம்போ ஜம்போ ரஜினி படங்களில் வேறு மாதிரி கையாளப்பட்டிருக்கும். எங்கு ஹீரோயினிடம் யார் வம்பு செய்தாலும் அங்கே கரெக்டாக ரஜினி ‘தற்செயலாக’ வந்து நிற்பார். இது அவரது எல்லாப் படங்களிலும் நடக்கும்.

இதுவே ஃபாண்டஸியாக இருந்தால், அதில் ‘மேஜிக்’ என்பதை வைத்து யோசித்தால், ஒரு படத்துக்கு ஒரு மேஜிக்தான். அதற்குமேல் வந்தால் படம் தலைவேதனையைக் கொடுக்கும் என்று புரிந்துகொள்ளலாம். மேஜிக்’ என்றால் கதையின் நாயகனோ நாயகியோ மேஜிக்கை உபயோகித்து செய்யும் சாகஸங்களைச் சொல்லவில்லை. ப்ளேக் ஸ்னைடரே கச்சிதமான ஒரு உதாரணத்தைக் கொடுக்கிறார். ஸ்பைடர்மேன் படத்தின் முதல்பாகத்தில் (அமேஸிங் ஸ்பைடர்மேன் அல்ல. அதற்கும் முன்னால் வந்த ஸாம் ரெய்மியின் ஸ்பைடர்மேன் முதல் பாகம்), சிலந்தி கடித்ததால் பீட்டர் பார்க்கர் என்ற கல்லூரி மாணவன் ஸ்பைடர்மேன் ஆகிவிடுவான். இது முதல் மேஜிக். அதே சமயத்தில் வில்லன் க்ரீன் காப்ளினும் அப்படித்தான். ஒரு பரிசோதனையின்போது பிரச்னை நேர்ந்து விசேட சக்திகள் உடைய வில்லன் ஆகிவிடுவான். இரண்டுமே ஒரே போன்ற ‘தற்செயல்கள்’. ‘மேஜிக்குகள்’. ஆனால் ஸ்பைடர்மேன் தப்பித்ததன் காரணம் அது ஒரு வெற்றிகரமான காமிக்ஸ். பொதுவான படமாக இருந்திருந்தால் அடி வாங்கியிருக்கும் என்பது ப்ளேக் ஸ்னைடரின் கூற்று. இதே போல் மனோஜ் நைட் ஷ்யாமளனை ஓட ஓட விரட்டி நக்கலடிக்கும் இன்னொரு உதாரணமும் புத்தகத்தில் உண்டு. Signs பற்றி.

எனவே, நீங்கள் மிகப்பெரிய இயக்குநராக இல்லையென்றால் இந்த ஒரே படத்தில் ஒன்றுக்கு மீறிய தற்செயல்கள் வேண்டாம்.

4. Laying Pipe

பொதுவாக ஒரு படம் எப்போது ஆரம்பிக்க வேண்டும்? ஸிட் ஃபீல்டில் இருந்து அனைத்து திரைக்கதையாசிரியர்களும் காட்டுக்கத்தல் கத்திச் சொல்லும் பொதுவான விஷயம் – திரைக்கதையின் 25ல் இருந்து 30 பக்கங்களுக்குள் ஆரம்பித்துவிடவேண்டும். அதுவே அதிகம். 20ம் பக்கத்தில் லேசாக கதைக்கு ஒரு முக்கியமான சம்பவம் வைத்துவிட்டு முதல் ப்லாட் பாயிண்ட் வரும் 30ம் பக்கத்தில் இருந்து கதையை டகாலென்று துவங்கிவிடவேண்டும் என்பதே உலகம் முழுதும் உள்ள திரைக்கதை எழுத்தாளர்களின் நோக்கம். அதில் கொஞ்சம் கூட மாற்றமோ வேறுபாடோ இல்லை. உலகமே (இந்தியாவைத் தவிர) இந்த விதியை ஒப்புக்கொண்டாகிவிட்டது. ஆனால் இந்தியாவில் (குறிப்பாகத் தமிழ் நாட்டில்) பெரும்பாலான இயக்குநர்கள் இப்போதுதான் ஹாலிவுட் எழுபதுகளின் துவக்கத்தில் பின்பற்றிய திரைப்பட விதிகளைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். ‘வேலையில்லா பட்டதாரி‘ ஒரு சமீபத்திய உதாரணம். கதையே இல்லாமல் ஒரு படத்தை ஒப்பேற்றுவது. அஜீத், விஜய் படங்கள் எல்லாம் இதில் டாக்டரேட் வாங்கியவை. ஹாலிவுட்டில் எழுபதுகளிலும் எண்பதுகளின் துவக்கத்திலும் இது சர்வசாதாரணம். இப்போதும் மைக்கேல் பே, ரோலாண்ட் எம்மரிச் போன்ற, முன்ஜென்மத்தில் தமிழ்நாட்டில் பிறந்த இயக்குநர்கள் இதையேதான் ஹாலிவுட்டிலும் செய்துவருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் இப்படிப்பட்ட படங்கள் ஓடுவதன் காரணம் மிகவும் எளிது. இங்கேதான் நட்சத்திரங்கள் கடவுள்களாகப் பார்க்கப்பட்டு வருகின்றனர் என்பது ஒன்று. இன்னொன்று – திரைப்படங்கள் வேண்டுமென்றே ஆடியன்ஸை நல்ல படங்களின் பக்கம் அழைத்துச் செல்லாமல் இதேபோன்ற மொக்கைப் படங்களையே தொடர்ந்து கொடுத்து ஆடியன்ஸை இதுதான் நல்ல படம் என்று நம்ப வைக்கின்றன. இது இரண்டு. மூன்றாவதாக, தமிழ் நாட்டில் பொதுஜனங்களாக இருக்கும் 90% மக்களுக்கு மீடியாக்களின் மூலம் திணிக்கப்படும் விஷயங்கள் என்ன என்று கவனித்தால் இதே படங்கள்தான். இவர்கள் பேட்டிகள், பாடல்கள் என்று வரிசையாகப் போட்டுப்போட்டு ‘இதுதான் காவியம்… இதுதான் உலகசினிமா’ என்ற பிம்பம் அவர்களின் மனதில் திணிக்கப்படுவதால் நல்ல சினிமா எது, நல்ல புத்தகங்கள் எவை என்பதெல்லாம் தெரியாமலேயே நான்கைந்து தலைமுறைகள் வளர்ந்துவிட்டோம். இதுதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன்.

எனவே, உலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுவான விதி – திரைக்கதையில் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் கதையை ஆரம்பித்துவிடவேண்டும் என்பதே. இதுதான் Laying Pipe.

ஆனால், சிலசமயங்களில் நேரடியாகக் கதையினுள் நுழையவும் முடியாது. முன்கதையைக் காட்டியாகவேண்டும். உதாரணம்: சுப்ரமண்யபுரம். கிட்டத்தட்ட இடைவேளையின்போதுதான் அதில் கதையின் முக்கியமான கட்டம் ஆரம்பிக்கிறது. ஆனால் அதுவரை அதில் வரும் நாயகர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்; அவர்கள் எப்படி சூழ்ச்சிக்கு இரையானார்கள் என்றெல்லாம் விபரமாகக் காட்டவேண்டிய தேவை இருந்தது. அதனால்தான் படத்தின் முன்பாதி முழுதும் அதையே காட்டியிருப்பார்கள். ஆனால் சுப்ரமண்யபுரத்தில் அழுத்தமான கதை இருந்ததால் அந்தப் படம் நம் எல்லோருக்கும் பிடித்தது. படத்தின் முன்பாதியிலேயேகூட நண்பர்களைப் பற்றிய காட்சிகள் வருவது, அரசியல்வாதியைக் காட்டுவது எல்லாமே கதையின் ஒரு பகுதிதான். அதை ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் கதையே இல்லாமல் கதாநாயகனை ஒரு சூப்பர்ஹீரோவாகக் காட்டும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் இதனை ஏற்றுக்கொள்வது இயலாது.

எனவே, திரைக்கதை எழுதும்போது இது ஒரு முக்கியமான அம்சமாக இருக்கவேண்டும். ‘கதை எப்போது ஆரம்பிக்கிறது? கதையைத் துவங்கும் முன்னர் கதையை நோக்கி இட்டுச்செல்லும் காட்சிகள் எக்கச்சக்கமாக இருக்கின்றனவா? ஆடியன்ஸுக்கு அவை அலுப்பை வரவழைக்குமா?’ என்பதெல்லாம் மிகவும் முக்கியம்.

பயிற்சி #13

நீங்கள் பார்த்த படங்களில் எத்தனை படங்கள் இவை இரண்டையும் கொண்டிருந்தன? யோசித்துப் பாருங்கள்.

  Comments

2 Comments

  1. sathyanpro

    மைக்கேல் பே, ரோலாண்ட் எம்மரிச் போன்ற, முன்ஜென்மத்தில் தமிழ்நாட்டில் பிறந்த இயக்குநர்கள் இதையேதான் ஹாலிவுட்டிலும் செய்துவருகின்றனர்.// ROFL semaa xD

    Reply
  2. Ramji Subramanian

    Though I am with you in most of your observations regarding Kamal Hassan, your take on Hey Ram is wrong. In Hey Ram, there is an explanation why Amjad Ali Khan (Shah Rukh) and Lalwani (Saurab Shukla) can talk in Tamil. Just before the song, there is a drunken Brit asks Amjad how he and Lalwani can speak the Dravidian Language. Amjad replies, “Alma mater. We studied together at the Madras Christian College. And my father used to sell carpets in the south. Also my wife is a Tamil Muslim”. This is also emphasized in the scene where Amjad’s wife has arranged for a South Indian thaali (mangal sutra) for Saketh Ram’s wedding with Aparna.

    And the logic for Abyankar talking Tamil is also established in the scene where he meets Saketh Ram for the second time. He tells Saketh Ram that he does not look like a Bengali and asks him where he is from. Saketh Ram replies that he is from Madras. Abyankar replies “Tamil-a? Entha ooru? Nan Tanjore Maratha”.

    Similar explanation was not given for Chari (Delhi Ganesh’s character), which I felt would’ve been out of place in that situation (Delhi Ganesh appears in that one scene only).

    I feel Hey Ram was a well researched film and it missed because not many of us were aware of the complete history during 1946-48.

    Reply

Join the conversation