Fade In முதல் Fade Out வரை – 14

by Karundhel Rajesh July 31, 2014   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பைப் பார்த்துவிட்டோம். இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில டிப்ஸ்களும் ப்ளேக் ஸ்னைடரின் வசம் இருக்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம்.

Fade In முதல் Fade Out வரை


 

5. Black Vet A.K.A Too much Marzipan

ப்ளேக் ஸ்னைடர் இந்தத் தலைப்பில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை சொல்கிறார். ஆனால் எனக்கு அதிலேயே இன்னொன்றும் தோன்றியது. இரண்டையும் பார்த்துவிடலாம். முதலில் ப்ளேக் ஸ்னைடர் சொல்வது.

பொதுவாகவே திரைப்படங்கள் பார்க்கும்போது ஒரு விஷயத்தை நாம் கவனித்திருக்கலாம். பல திரைப்படங்களில், கதை என்பது மிகவும் சிறிய வஸ்துவாக இருக்கும். அந்தக் கருவை வைத்துக்கொண்டு ஒரு ஒரு மணி நேரப் படம் சாத்தியம். அதையே ஜவ்வாக இழுத்து, இரண்டரை மணி நேரப் படமாக வழங்கும்போது அந்தப் படம் படுத்துவிடுகிறது. இதற்குத் தமிழில் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் பார்த்ததில் ‘மரியான்’ அப்படிப்பட்ட படம். ’வேலையில்லா பட்டதாரி’யும் அதே வகைதான். இரண்டரை மணி நேரப் படமாக எடுக்கும்போது வலு குறைந்துவிடும் படங்கள் இவை. இதுதான் ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் Black Vet A.K.A Too much Marzipan. இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கே அந்தப் படத்தை எழுதும்போது இது நன்றாகத் தெரியும். ஆனாலும் பாடல்கள், நகைச்சுவை அல்லது கதைக்கு சம்மந்தமில்லாத சுவாரஸ்யமான காட்சிகள் போன்றவற்றை வைத்துக்கொண்டு அந்த ஒருமணி நேரக் கதையில் இருக்கும் பாக்கி ஒண்ணரை மணி நேரத்தை இட்டு நிரப்பலாம் என்றே மனதில் தோன்றும். இதற்கு நடிகரின் கால்ஷீட்; தயாரிப்பாளரின் பட்ஜெட்; நமக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பு போன்ற பல காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும், ‘இந்தக் கதை இரண்டரை மணி நேரத்துக்குத் தேறாது’ என்று நமக்கே தோன்றிவிட்டால், உடனடியாக அந்தக் கதையைத் தொலைத்துத் தலைமுழுகிவிட்டுப் புதிதாக ஒரு கதையை எடுத்துப் படமாக்கலாம். அப்படிச் செய்வதே நல்லது.

முதலில், நமது கதை, எந்த இலவச இணைப்பும் இல்லாமல் ஒரு முழுநீளப் படத்துக்குச் சரிவருமா என்று யோசிப்பது நல்லது. ஒருவேளை அப்படி அது வராது என்று தெரிந்துவிட்டால், ‘கதாநாயகன் இடது கைப்பழக்கம் உள்ளவன்’ என்று யோசித்து, அதற்கு இரண்டு காட்சிகள் வைப்பது; கதாநாயகிக்கு இரண்டு காட்சிகள்; ஒரு ரொமாண்டிக் பாடல்; படத்தில் வரும் குணச்சித்திர நடிகருக்கு இரண்டு காட்சிகள் என்றெல்லாம் யோசித்து அந்தக் காட்சிகளை வைத்தே படத்தை முழுமையாக்குவது தேவையில்லை. விட்டுவிடலாம். கதைக்கு சம்மந்தமற்ற இந்தக் காட்சிகளால் நமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை.

இப்போது இரண்டாவது விஷயம். இதை ப்ளேக் ஸ்னைடர் சொல்லவில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து.

பொதுவாக ஒரு இயக்குநரின் படம் என்றால் அந்த இயக்குநருக்குப் பிடித்த சில விஷயங்கள் அந்தப் படத்தில் வந்தே தீரும். அந்தக் காட்சிகளை வைத்தே அது குறிப்பிட்ட இயக்குநரின் படம் என்று எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இது தமிழுக்கு மட்டும் அல்ல; உலகம் முழுதும் உள்ள பல இயக்குநர்களின் பாணி. உதாரணமாக, ஸ்கார்ஸேஸியின் பல படங்களை ஒரே காட்சியைப் பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். இதேதான் டாரண்டினோவுக்கும் பொருந்தும். தமிழுக்கு வந்தால், மணி ரத்னம், ஷங்கர், கௌதம் போன்ற இயக்குநர்களும் இப்படியே. ஷங்கரின் பல படங்களில் கதாநாயகன் ஒரு சூப்பர்ஹீரோவாகத்தான் இருப்பான். மணி ரத்னம் படங்களின் லைட்டிங்கே போதும் – அவரது படங்களைக் கண்டுகொள்ள. அவரது எண்பதுகளின் பல படங்களில் backlighting மிகவும் தனியாகத் தெரியும். நாயகனில் ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ பாடலில் அந்த வீட்டில் எப்படி லைட்டிங் செய்யப்பட்டிருக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். இதுவேதான் அக்னி நட்சத்திரம், அஞ்சலி, மௌன ராகம், தளபதி, இதயத்தைத் திருடாதே ஆகிய படங்களிலும் இருக்கும். கௌதமின் ரொமாண்டிக் காட்சிகள் இப்படியே அவரது எல்லாப் படங்களிலும் தனியாகத் தெரியும்.

Auteur Theory

‘இயக்குநரே ஒரு படத்தின் கேப்டன்’ என்ற ஒரு கருத்து அறுபதுகளில் நிலவியது. ஃப்ரெஞ்ச் இயக்குநர் ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (François Truffaut), 1954ல் உருவாக்கிய ஒரு பதம் – Auteur theory. இதன்படி, திரைக்கதை ஒன்று படமாகும்போது அதன் இயக்குநர் அவரது பாணியில் அதனை உருவாக்குவார். திரைக்கதை படிக்கும்போது ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை வழங்கலாம். அது அந்த இயக்குநரிடம் படமாகும்போது அந்த இயக்குநரின் அனுபவங்கள் அந்தத் திரைக்கதையை அவரது குறிப்பிட்ட கலைப்படைப்பாக மாற்றிவிடும். ஸ்கார்ஸேஸியை இதற்குக் கச்சிதமான உதாரணமாகச் சொல்லலாம். அவருடைய கருத்துகள், ஸ்கார்ஸேஸியின் ஆரம்பகாலப் படங்களில் அட்டகாசமாகப் பிரதிபலிக்கும். டாக்ஸி ட்ரைவர், ரேஜிங் புல், Mean Streets, The last Temptation of Christ போன்றவை உதாரணங்கள். இவரது கதாபாத்திரங்கள் (ஏசு உட்பட) தனியானவர்கள். சமூகத்தில் இருந்து தனித்தே இருப்பவர்கள். சமூகத்தின் மீது ஒருவித கோபம் கொண்டிருப்பவர்கள் (கோபம் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாவிட்டாலும், சமூகத்தின் மீது அது பரிவாக இருக்கலாம். இரக்கமாக இருக்கலாம். கோபம், எரிச்சல் என்றும் இருக்கலாம்). அந்த எண்ணம் எப்படி வெளிப்படுகிறது என்று கவனித்தால், அது ட்ராவிஸ் பிக்கிள் போல சமுதாயத்தை அழிக்கவேண்டும் என்ற எண்ணமாக இருக்கலாம் (Taxi Driver); அல்லது கடவுளாக இல்லாமல் ஒரு மனிதனாக வாழும் ஏசுவின் மனதில் எழும் வருத்தம் கலந்த இரக்கமாகவும் இருக்கலாம் (last temptation of Christ). எப்படி இருந்தாலும், அவர் எப்படி சமுதாயத்தைப் பார்க்கிறாரோ அதே பார்வைகள்தான் அவரது கதாபாத்திரங்களுக்கும் இருக்கும்.

இப்படி, ஒரு இயக்குநராகத் தனது பாணியை அழுத்தமாக வெளிப்படுத்திய ஸ்கார்ஸேஸிதான் Auteur. அந்த வார்த்தைக்கு ‘எழுத்தாளர்’ என்று அர்த்தம். ஒரு படத்தை முற்றிலும் தனது படைப்பாக உருமாற்றி வெளியிடுபவரே ஆட்டெயர். திரைப்படங்களைப் பற்றிய ஸ்கார்ஸேஸியின் அறிவு அளப்பரியது.

ஆனால் இந்த ஆட்டெயர் தியரியில் ஒரு பிரச்னை உண்டு. எத்தகைய இலக்கியப் படைப்பாக இருந்தாலும் அதனை இந்த ஆட்டெயர்கள் உருமாற்றி, தங்களது பாணியில் வெளியிடுவார்கள். இது த்ரூஃபோ சொன்னது. ஆனால் பிந்நாட்களில் அது சர்ச்சைக்குள்ளானது. காரணம், திரைப்படத்தின் முதுகெலும்பு என்பது திரைக்கதை. அப்படியென்றால் அந்தத் திரைக்கதையை எழுதும் நபர்தானே ஒரு படத்துக்கு முக்கியம்? இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியது. ஆனால் என்ன யோசித்தாலும், இயக்குநர்களில் auteurகள் இருப்பதுபோல் திரைக்கதையில் இல்லை. காரணம், த்ரூஃபோ அப்போது இருந்த இயக்குநர்களை இரண்டாகப் பிரித்தார். ஒன்று – தங்களது கருத்துகளையும் பாணிகளையும் திரைப்படங்களில் இடம்பெற வைத்து ஒரு மோசமான கலைப்படைப்பையும் அட்டகாசமாகத் திரையில் காட்ட வல்ல Auteurகள். இன்னொன்று – auteur அல்லாதவர்கள். எத்தகைய திரைக்கதை எழுத்தாளரையும் மீறி இந்த auteurகளால் தனித்துத் தெரிய முடியும். அப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது. ஸ்கார்ஸேஸியிடம் விஷ்ணுபுரத்தைக் கொடுத்தால், அதையும் ‘ஒரு ஸ்கார்ஸேஸி படம்’ என்று நிரூபிக்கும் வகையில்தான் வெளியிடுவார். அதில் ஜெயமோகன் துளிக்கூட மிளிர முடியாது. ஒரே அடிதான் (ஆனால் ஸ்கார்ஸேஸி விஷ்ணுபுரத்தை எடுக்க விரும்பமாட்டார். நாளை மற்றுமொரு நாளேதான் அவரது விருப்பத்திற்குறிய படைப்பாக இருக்கும்).

இத்தகைய பாணி, ஸ்கார்ஸேஸிக்கு இயற்கையிலேயே இருந்தது. அவரைப் போன்றவர்கள் மிகவும் சொற்பம். பொதுவான இயக்குநர்கள், auteur அல்லாதவர்களே. எனவே, மணி ரத்னம் போல ஒரே போன்ற விஷயங்களைத் திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டிருப்பது ஆடியன்ஸுக்கு அலுக்கும். இதைத் தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு படத்தையும் புதிய பாணியில் எடுக்கவேண்டும். இதற்குத் தமிழில் மணிவண்ணன் ஒரு சிறந்த உதாரணம். மணிவண்ணன் கமர்ஷியல் படங்களை எப்படி எடுக்கவேண்டும் என்று புரிந்தவர். அவரது இரண்டு படங்களை எடுத்து ஒப்பிட்டால், எதுவுமே முந்தைய படம் போல இருக்காது. அதுதான் நல்ல இயக்குநருக்கு அடையாளம். (உடனே ’மணி ரத்னமும் மணிவண்ணனும் ஒண்ணாடா?’ என்று சாமியாடவேண்டாம். சொல்ல வந்தது இருவரையும் ஒப்பிடுவது அல்ல)

இதுதான் நான் சொல்ல வந்த இரண்டாவது விஷயம். நமது பாணி ஒரே போன்று இருப்பதை மாற்றவேண்டும். நம்மை நாமே நன்றாக அனலைஸ் செய்து, ஒரே போன்ற விஷயங்களை திரும்பத்திரும்ப இடம்பெற வைப்பதை நிறுத்தவேண்டும் (மிஷ்கினின் படங்களில் வரிசையாக வந்து அடிவாங்கிச் செல்லும் காட்சிகள்).

6. Watch Out for that Glacier

தமிழ்ப்படங்களில் ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். என்னவென்றால், கதாநாயகனை வில்லன்கள் துரத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களால் கதாநாயகனுக்கு உயிராபத்தே நேரப்போகிறது. ஆனால் அவர்கள் எங்கே என்று பார்த்தால், கதாநாயகன் டூயட் பாடி முடித்து, அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து, அநாதைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்து எல்லாமே முடிந்தபின் ‘டாய்ய்ய்ய்ய்’ என்று வந்து சண்டையிட்டு அடிவாங்கிக்கொண்டு செல்வார்கள். வேகமோ விறுவிறுப்போ எதுவும் அதில் இருக்காது. கடனுக்காகப் படைக்கப்பட்ட பாத்திரங்கள் என்பது நன்றாகத் தெரியும்.

இதுதான் Watch Out for that Glacier.

தசாவதாரம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். படத்தில், உலகுக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு vial – ஒரு குப்பி – அமெரிக்காவிலிருந்து தப்பித்து இந்தியா வருகிறது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அது என்ன செய்கிறது என்று பார்த்தால், டொயிங் டொயிங் என்று மிக மிக மெதுவாக ஆமை வேகத்தில் ட்ராவல் செய்துகொண்டே இருக்கிறது. அந்த வயலினால் எந்தப் பரபரப்பும் கதையில் உண்டாவதில்லை. ஆனால் கதையின் முக்கியமான விஷயமே அந்த வயல்தான்!! இது எத்தனை முரண்பாடான விஷயம்!! மாறாக ஏலியன்கள் போல் கர்ணகொடூர மேக்கப்பில் வந்து எல்லாரையும் பயமுறுத்த வேறு செய்தார் கமல். எனவே தசாவதாரம் ஒரு travel movie என்றுதான் கமல் விளம்பரம் செய்திருக்கவேண்டும். அல்லது ஹாரர் படம் என்று சொல்லியிருக்கலாம். மாறாக ஆக்‌ஷன் அது இது என்று விளம்பரம் செய்ததால் தியேட்டருக்குப் போய் தலைவலி வந்ததே மிச்சம்.

இது ஒரு உதாரணம். நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் என்னவென்றால், கதையில் வரும் ஆபத்துகள் நிஜமாக இருக்கவேண்டும். அவை கதாபாத்திரங்களைப் பாதிக்கவேண்டும். அவை பரபரப்பாகவும் இருக்கவேண்டும். கதாபாத்திரங்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்றால் அந்த ஆபத்து எத்தகையது என்பது தெளிவாகக் காண்பிக்கப்படவேண்டும். வில்லன்கள் நிஜமானவர்களாக இருக்கவேண்டும். ’புதுப்பேட்டை’ போல.

யோசித்துப் பாருங்கள். உங்கள் படத்தில் வில்லன் ஒரு 90 வயதுத் தாத்தா என்றால் ஆடியன்ஸ் எரிச்சலைடைவார்களா இல்லையா? அந்தத் தாத்தா எழுந்து செங்குத்தாக நிற்பதற்கே அரைமணி நேரம் ஆகுமல்லவா?

பயிற்சி #14

உங்கள் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளோ கதாபாத்திரங்களோ இருக்கின்றனவா? கதையில் ஆபத்துகள் குறைவாக உள்ளனவா? உடனடியாக அதை மாற்றுங்கள். கூடவே, ஒரே போன்ற காட்சிகள் வைக்கும் இயக்குநர்களையும் பற்றி யோசித்துப் பாருங்கள்.

  Comments

9 Comments

  1. ஒருவேளை தசாவதாரத்தை நீங்க பாக்குற மாதிரி கொண்டு போயிருந்த இங்கிலீஷ் Movie ய தமிழ்ல ரீமேக் பண்ண மாதிரி இருந்துருக்கும்….. so athuvum screenplay lacking than. ஒருவேளை கமல் பாயிண்ட் of view la ஸ்டோரி கான்செப்ட் வேற ஏதாவது இருக்குமோ?

    Reply
    • Rajesh Da Scorp

      இருக்கலாம் பாஸ். அதுக்கும் வாய்ப்பு உண்டு 🙂

      Reply
  2. Kalees

    இந்தத் தொடரில் தமிழ்ப்பட உதாரணங்களைச் சொல்லும்போது நெகட்டிவான விசயங்களுக்கு இங்கே வெற்றிப் பெற்றப் படங்களையும், பாசிட்டிவ் விசயங்களுக்கு இங்கே தோல்வியடைந்த படங்களையும் உதாரணமாகக் கூறுவதைத் தவிர்க்கலாம். (ஆரண்யகாண்டம் விதிவிலக்கு 🙂 )

    அது வாசகர்களைக் குழப்பும் என்பது என் கருத்து. இந்தக் கட்டுரையில் வே.இ.பட்டதாரி,தசாவதாரம் – இரண்டும் பெரும் வெற்றிப் பெற்றவை. அதாவது பெரும்பான்மை ஆடியன்ஸ்க்குப் பிடித்த படங்கள்… (எனக்கு வே.இ.ப பிடிக்கல. தசாவதாரம் பிடிக்கும்)

    நீங்கள் இங்கே குறிப்பிட்டது போலில்லாமல் எனக்கு தசாவதார திரைக்கதை விறுவிறுப்பாகவே இருந்தது. (ஓ ஓ சனம் பாடல் வரும் இடம் மட்டும் தொய்வு). பெரும்பான்மையானவர்களுக்கு அப்டிதான் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

    கட்டுரை வாசிப்பவர்கள் “அட ஆமால்ல. நானும் இப்டிதான் நினைச்சேன்” என யோசிக்கும்படி இருந்தால் நல்லாருக்கும். “நல்லாதானே இருந்தது. இந்தாளு என்ன இப்டி சொல்றாரு”ந்னு யோசிக்க ஆரம்பிச்சா குழம்ப வாய்ப்பிருக்கு 🙂 .

    அதனால் எந்திரன்,மங்காத்தா (எனக்கும் பிடிக்காது) போன்ற பெரிய வெற்றிப் பெற்றப் படங்களை உதாரணமாகச் சொல்வதைத் தவிருங்களேன்…

    இல்லை இந்தத் தொடரின் ஆடியன்ஸ் வேறு. அவர்களுக்கு வேறுபாடு புரியும் என்றால் ok 🙂 no issues

    Reply
    • Rajesh Da Scorp

      புரியுது Kalees. ஆனா என்ன பிரச்னைன்னா:

      1. தமிழில் இன்னமும் ஸ்டார் என்றால் அவருக்கு என்று ஒரு fanatic gang உள்ளது. இதனாலேயே அவர்களது பெரும்பாலான படங்கள் ஓடிவிடுகின்றன. ஆனால் அந்தப் படங்களில் கதை இருக்கிறதா, திரைக்கதை இருக்கிறதா என்று யோசித்தால் அது இருப்பதில்லை. ஆனால், இது எப்படி வருகிறது என்றால், நீங்கள் சொன்னமாதிரிதான்.

      //நல்லாதானே இருந்தது. இந்தாளு என்ன இப்டி சொல்றாரு//. காரணம் என்ன என்று நான் நினைக்கிறேன் என்றால் Hero Worship. இதை இரண்டாவது பாயிண்ட்டில் பார்க்கலாம்.

      2. தமிழில் உதாரணம் கொடுப்பது ஒரு பேஜாரான வேலை. காரணம் முதல் பாயிண்ட்டில் சொன்னதுதான். நல்ல படம் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும். செல்வராகவனின் இரண்டாம் உலகம் ஆஸ்கருக்குத் தகுதியான படம்தான் என்று அவரது அடிப்பொடி ஒருவர் சத்தியமே செய்தார் என்றால் நம்புவீர்களா?

      இதுதான் பிரச்னை..:-).. மிகப்பெரிய வெற்றி அடைந்த படங்கள் பெரும்பாலும் நல்ல கதையையும் திரைக்கதையையும் கொண்டிருப்பதில்லை. உதாரணம் நீங்களே சொன்ன படங்கள்தான் 🙂

      எனவே, தமிழ்நாட்டில் ஒரு படம் ஓடுகிறது என்றால் உலக அளவில் அதற்கு என்ன காரணமோ அதற்கு நேர் எதிரான காரணங்கள்தான் அதிகம். இன்னும் இங்கே Hero worship இருப்பதுதான் பிரதானமான காரணம்.

      இருந்தாலும், இந்தத் தொடரின் ஆடியன்ஸ், நல்ல திரைப்படங்களுக்கும் மோசமான திரைப்படங்களுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் என்று நான் நம்புகிறேன் (அல்லது நம்பிக்கொண்டிருக்கிறேன்). எனவே, பொறுத்திருந்து பார்க்கலாம்.

      Reply
      • kalees

        ஓக்கே 🙂

        Reply
  3. யூசுப்

    பதிவிற்குச் சற்றும் சம்பந்தமில்லாத விஷயம் ஒன்று. இருந்தாலும் என்னால் குறிப்பிடாமல் இருக்க இயலவில்லை.

    நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில், Francois என்னும் ஃபிரெஞ்சு நாட்டுக்காரரிடம், அலுவல் விஷயமாக Communicator மூலமாக மட்டுமே தொடர்புகொள்ளுவோம். தொலைபேசியில் பேசியதும் கிடையாது. புகைப்படத்திலும் பார்த்ததில்லை. பல ஆண்டுகளாக நல்ல பழக்கம்.

    சமீபத்தில் இங்கிருந்து நண்பர் ஒருவர் பாரீஸ் அலுவலகம் சென்றார். அங்கு சென்றதும், அங்கிருந்தவர்களிடம், உங்களில் யார் ஃப்ராங்காயிஸ் என்று ஆர்வமாகக் கேட்டிருக்கிறார். பல நாள் நண்பரை நேரில் சந்திக்கப் போகின்றோம் என்ற ஆவலுடன். ஆனால், அப்படி யாரும் இங்கு இல்லையே எனப் பதில் வரப் பெரிதும் குழம்பியுள்ளார் நண்பர். சில சங்கடமான நிமிடங்களுக்குப் பிறகே அவருக்கு நிலைமை புரிந்துள்ளது. ஆம், இதுதான் பிரச்சினை.

    Francois – ஃப்ரான்ஸ்வா

    நாங்கள் அனைவருமே அன்று வரை, ஃப்ராங்காயிஸ் என்றுதான் பேசி வந்துள்ளோம் 🙂

    Reply
    • Rajesh Da Scorp

      நல்ல real life experience யூசுப் :-).. It was entertaining 🙂

      Reply
  4. Puduvai Kamalraj

    // நமது பாணி ஒரே போன்று இருப்பதை மாற்றவேண்டும். நம்மை நாமே நன்றாக அனலைஸ் செய்து, ஒரே போன்ற விஷயங்களை திரும்பத்திரும்ப இடம்பெற வைப்பதை நிறுத்தவேண்டும் (மிஷ்கினின் படங்களில் வரிசையாக வந்து அடிவாங்கிச் செல்லும் காட்சிகள்) //

    I accept your view. But the fact is Drama is actors medium, Fictions and Non-Fictions are writers medium and Cinema is Director’s medium. So, the film is Director’s perception of a subject, particularly if the screenplay was also written by himself/herself. Usually in Kollywood atmosphere almost all the screenplays are written by the Directors of the film itself, that’s why they repeat themselves, expect few. But they have to come out from the run-of-the-mill kind of templates.

    Reply
  5. “இரண்டரை மணி நேரப் படமாக வழங்கும்போது அந்தப் படம் படுத்துவிடுகிறது. இதற்குத் தமிழில் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் பார்த்ததில் ‘மரியான்’ அப்படிப்பட்ட படம். ’வேலையில்லா பட்டதாரி’யும் அதே வகைதான்” வேலை இல்லா பட்டதாரி படுத்துவிட்டதா? இல்லையே.. மெகா ஹிட் படமாச்சே

    Reply

Join the conversation