Fade In முதல் Fade Out வரை – 19
தொடரின் முந்தைய பாகங்களைப் படிக்க –> Fade In முதல் Fade Out வரை
கிட்டத்தட்ட ப்ளேக் ஸ்னைடரின் புத்தகத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம். ப்ளேக் ஸ்னைடரின் புத்தகம், ஸிட் ஃபீல்டைப் போல் ஆழமானதோ அல்லது மிகவும் உபயோகமானதோ அல்ல. திரைக்கதையைப் பற்றிய அடிப்படையான அறிவை வளர்த்துக்கொள்வதே இந்தப் புத்தகத்தின் பயன் என்பதால் இந்தப் புத்தகத்தை மட்டும் படித்துவிட்டுத் திரைக்கதையின் பக்கம் ஒதுங்க முடியாது. ஏற்கெனவே ஸிட் ஃபீல்ட் சொல்லியிருக்கும் கருத்துகளை அடிப்படையாக வைத்துத்தான் ப்ளேக் ஸ்னைடரின் புத்தகம் உருவாகியிருப்பதால், ஸிட் ஃபீல்டே ப்ளேக் ஸ்னைடரைவிடவும் சிறந்தவர் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும், திரைக்கதையைப் பற்றி எந்தவிதமான புரிதலும் இல்லாமல் இருக்கும் ஒருவர் படிக்க ப்ளேக் ஸ்னைடரின் Save the Cat ஒரு நல்ல புத்தகம். ஏனெனில் இதில் ஸிட் ஃபீல்டைவிடவும் எளிமையாக சில அடிப்படை விஷயங்கள் விளக்கப்பட்டிருக்கும். சுருக்கமாகவும்.
நமது தளத்தைப் படிக்கும் நண்பர்களுக்கு ஏற்கெனவே ஸிட் ஃபீல்டைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் இப்போது ப்ளேக் ஸ்னைடர் சொல்லியுள்ள விஷயங்களை ஏற்கெனவே படித்ததுபோலத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது நல்லதுதான். ஒரு விஷயத்தை இரண்டாவது முறையும் நன்றாகப் படித்தால் மனதில் நிற்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.
சரி. ப்ளேக் ஸ்னைடரின் புத்தகத்தின் இறுதிப்பகுதிக்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் இன்னும் அவரிடமிருந்து தெரிந்துகொள்ள வேறு ஏதேனும் இருக்கிறதா?
திரைக்கதை எழுதுவதைப் பற்றிய ப்ளேக் ஸ்னைடரின் கருத்துகளைப் பார்த்தோம். அவற்றை வைத்துக்கொண்டு திரைக்கதையை எப்படி எழுதுவது என்று பார்க்கவில்லையல்லவா? அதை இனி கவனிப்போம்.
நம்மிடம் இப்போது அத்தனை திரைக்கதை நுணுக்கங்களும் உள்ளன. இதை வைத்து எப்படித் திரைக்கதையை எழுத ஆரம்பிப்பது? ஒரு மிகப்பெரிய போர்டை வாங்கி சுவற்றில் மாட்டி அதில் கார்டுகளை வரிசையாக ஒட்டிவைக்கும் ப்ளேக் ஸ்னைடரின் முறை நமக்கு மிகவும் அந்நியமானது என்பதால் அவர் சொல்லியிருப்பதை மட்டும் நமக்குச் சுலபமான முறையில் கவனிக்கலாம்.ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஸிட் ஃபீல்டின் புத்தகத்தில் அவர் தெளிவாக ஒவ்வொரு அத்தியாயமாகத் திரைக்கதையை எழுதிச்செல்வதை விளக்கியிருப்பதைப் போல் ப்ளேக் ஸ்னைடர் விளக்கவில்லை. மாறாக, நாம் இத்தனை அத்தியாயங்களில் பார்த்ததைப் போல், திரைக்கதைக்கான சில முக்கியமான விஷயங்களைத்தான் விளக்கியிருக்கிறார். ஒரு அத்தியாயத்தில் மிகவும் சுருக்கமாக அவரது பீட் ஷீட் என்பதை விளக்கிவிட்டு, ஒவ்வொரு பக்கத்தில் என்னென்ன இருக்கவேண்டும் என்று சொல்லியிருப்பார்.
நாம் ஏற்கெனவே பார்த்த ப்ளேக் ஸ்னைடரின் பீட் ஷீட் என்பதை நினைவு வைத்துக்கொள்வோம். ஒருமுறை Beat Sheetடை நன்றாகப் படித்துக்கொள்ளலாம்.
The Blake Snyder Beat Sheet
PROJECT TITLE:
GENRE:
DATE:
1. Opening Image (1);
2. Theme Started (5);
3. Set-up (1-10);
4. Catalyst (12);
5. Debate (12-25);
6. Break into Two (25);
7. B Story (30);
8. Fun and Games (30-55);
9. Midpoint (55);
10. Bad Guys Close In (55-75);
11. All is Lost (75);
12. Dark Night of the Soul (75-85);
13. Break into Three (85);
14. Finale (85-110);
15. Final Image (110);
திரைக்கதையின் குத்துமதிப்பான எந்தப் பக்கத்தில் எது வரவேண்டும் என்று அவர் எழுதியிருப்பது எளிமையாகப் புரிகிறதுதானே? இவை எல்லாவற்றையுமே முந்தைய அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்தும் இருக்கிறோம்.
இதன்பின், நமது திரைக்கதையை நான்கு பாகங்களாகப் பிரித்துக்கொள்ளலாம் (ஸிட் ஃபீல்ட் சொன்ன மூன்று பாகங்களேதான் இவை. ஆனால் ஒரு சிறிய மாற்றத்தை ப்ளேக் ஸ்னைடர் இதில் நுழைத்திருக்கிறார்).
முதல் பகுதி (பக்கங்கள் 1-25)
இரண்டாம் பகுதி (பக்கங்கள் 25-55)
மூன்றாவது பகுதி (பக்கங்கள் 55-85)
நான்காவது பகுதி (பக்கங்கள் 85-110)
இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதியை மொத்தமாகச் சேர்த்து ஸிட் ஃபீல்ட் ‘இரண்டாம் பகுதி’ என்று சொல்லியிருப்பார். அதனை லேசாக ப்ளேக் ஸ்னைடர் மாற்றிக்கொண்டார். அவ்வளவே.
இனி என்ன செய்யவேண்டும்? ஸிட் ஃபீல்ட் சொல்லிய 14+28+14 வழிமுறை நினைவிருக்கிறதல்லவா? முதல் பகுதிக்குப் பதினான்கு பாயிண்ட்கள்; இரண்டாம் பகுதிக்கு 14+14=28 பாயிண்ட்கள்; மூன்றாம் பகுதிக்குப் பதினான்கு பாயிண்ட்கள். ஆக மொத்தம் 56 பாயிண்ட்கள் என்பது ஸிட் ஃபீல்டின் வழிமுறை. அதேபோல் ப்ளேக் ஸ்னைடரும் ஒரு எண்ணிக்கை வைத்திருக்கிறார். அந்த எண்ணிக்கை இப்போது முக்கியமில்லை. அதைக் கடைசியில் பார்க்கலாம். முதலில், ஒவ்வொரு காட்சியாக சுருக்கமாக ஓரிரு வரிகளில் எழுதிக்கொள்ளவேண்டும். அதுதான் முதல் படி. இப்படிப் படிப்படியாக நமது கதையை ஒவ்வொரு பாயிண்ட்டாக எழுதிக்கொண்டால் கதை முழுதும் சுருக்கமாகத் தயார்.
இதன்பின்னர், ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அடுத்த பகுதிக்கு எப்படிப் போவது? ஸிட் ஃபீல்டின் ப்ளாட் பாயிண்ட்கள் நினைவிருக்கின்றனதானே? அதேபோல் ப்ளேக் ஸ்னைடரின் பீட் ஷீட்டில் நாம் ஏற்கெனவே பார்த்த சில விஷயங்கள் (Break in to two, Midpoint, Break in to Three) இங்கே முக்கியம். இந்த மூன்றும்தான் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் அடுத்த பகுதிக்கு நம்மைக் கொண்டுசெல்லும் விஷயங்கள். இவை எந்தப் பக்கங்களில் தோராயமாக வரலாம்?
Break in to Two – பக்கம் 25
Midpoint – பக்கம் 55
Break in to Three – பக்கம் 85
இதனை ஏற்கென்வே நமது ப்ளேக் ஸ்னைடர் பீட் ஷீட்டைப் பற்றிப் பார்க்கும்போது படித்திருக்கிறோம். எனவே, இவைகளை முடிவு செய்துகொள்ளவேண்டும். இங்கே Break in to Two தான் ஸிட் ஃபீல்டின் ப்ளாட் பாயிண்ட் 1. Break in to Three தான் ஸிட் ஃபீல்டின் ப்ளாட் பாயிண்ட் 2. இதனை நினைவு வைத்துக்கொண்டாலே எளிதில் இவற்றைப் பற்றி யோசிக்கமுடியும்.
அதிகபட்சம் நாற்பது பாயிண்ட்களில் இந்த அத்தனை பாகங்களையும் முடிக்கவேண்டும் என்பது ப்ளேக் ஸ்னைடரின் கருத்து. ஒவ்வொரு பாகத்துக்கும் பத்து கார்டுகள். ஒருவேளை அது மிகவும் கடினமாக இருந்தால், எளிதாக ஸிட் ஃபீல்டின் 56 பாயிண்ட்களைப் பின்பற்றலாம். என்னைக்கேட்டால் ஸிட் ஃபீல்டின் பாயிண்ட்கள்தான் ப்ளேக் ஸ்னைடரைவிடவும் தெளிவானவை. இருந்தாலும், ஒருவேளை நாற்பதே பாயிண்ட்களில் உங்களால் முடிக்கமுடியும் என்று நம்பிக்கை இருந்தால் அப்படியே ஒரு சவால் போலச் செய்து பார்க்கலாம். இல்லையேல் ஸிட் ஃபீல்டைப் பின்பற்றலாம்.
இதுதான் ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை எழுதும் வழிமுறை. இதில் சில முக்கியமான விஷயங்கள் உண்டு.
1. நாற்பது பாயிண்ட்களை எழுதிச்செல்லும்போது சில சமயங்களில் காட்சிகளை எழுதுவதற்குப் பதில் காட்சியில் நடக்கும் சில உள்விஷயங்களை எழுத நேரலாம். உதாரணமாக, வில்லனை அறிமுகப்படுத்தும் காட்சியில், ‘வில்லனின் வீட்டுக்குள் வருகிறோம். உள்ளே வில்லன் இருக்கிறான். அவன் அருகே பல அடியாட்கள் நிற்கிறார்கள். அவர்களின் முகத்தில் டென்ஷன்’ என்றெல்லாம் வரிசையாக எழுதத் தோன்றும். அப்படி ஒருவேளை தோன்றினால் அவற்றையும் வரிசையாக எழுதிக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் மேலே பார்த்ததுபோல், இறுதி வடிவத்தில் மொத்தம் 40 பாயிண்ட்களில் எல்லாமே அடங்கிவிடவேண்டும் என்பது ப்ளேக் ஸ்னைடரின் கருத்து. எனவே, இறுதியாகத் தயார் செய்யும்போது ‘வில்லனின் அறிமுகம். வீட்டுக்குள் பிரச்னை’ என்ற ஒரே கார்டில் இவை எல்லாவற்றையும் அடக்கிவிடலாம். இதிலேயே கதாபாத்திரங்களின் பின்கதைகள், உணர்வுகள் ஆகியவையும் அடக்கம்.
2. ஒவ்வொரு பாகத்துக்கும் பத்து பாயிண்ட்கள் அவசியம். ஆனால் முதல் தடவை எழுதும்போது எத்தனை பாயிண்ட்கள் வேண்டுமானாலும் எழுதலாம். இறூதி வடிவத்தில் அவற்றைச் சுருக்கி, பத்து பாயிண்ட்டுக்குள் கொண்டுவரலாம்.
3. சிலசமயங்களில் திரைக்கதைகளில் பல கதைகள் வரலாம். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒவ்வொரு கதை இருக்கலாம். அப்படி வரும்போது, அந்தக் கதைகள் வரும் பாயிண்ட் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வண்ணமான பேனாவால் எழுதலாம். அல்லது கணினியில் தட்டச்சு செய்யும்போது அவற்றுக்கு வெவ்வேறு வண்ணங்களைக் கொடுக்கலாம். இறுதியில் தெளிவாக இந்தக் கதைகளைப் புரிந்துகொள்ள இவை உதவும்.
4. ஸிட் ஃபீல்ட் திரைக்கதைகளைப் பற்றிச் சொல்கையில், ஒவ்வொரு காட்சிக்குமே ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் முடிவு ஆகியவை உண்டு என்று சொல்லியிருப்பார். அதை இப்போது நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். நாம் எழுதும் ஒவ்வொரு பாயிண்ட்டும் ஒவ்வொரு காட்சியாகத் திரைக்கதையில் வரப்போகிறது. அல்லது அவை பல காட்சிகளாகவும் பின்னால் மாறலாம். எனவே, ஒவ்வொரு பாயிண்ட்டிலும் உள்ள உணர்வுகள் எப்படிக் கையாளப்படுகின்றன என்பது முக்கியம். அதாவது, ஒவ்வொரு காட்சியும் எந்த உணர்வுடன் ஆரம்பிக்கிறது? எந்த உணர்வுடன் முடிகிறது? ஆகிய இரண்டு கேள்விகளும் முக்கியம். கதாபாத்திரம் இதற்கு முந்தைய காட்சியில் சோகமாக வெளியேறுகிறது என்றால் இந்தக் காட்சியிலும் அது சோகமாகத்தான் உள்ளே வரும் அல்லவா? அதேபோல் இந்தக் காட்சி முடியும்போது ஒருவேளை அது சோகத்தை ஒழித்துவிட்டுச் சந்தோஷமாக மாறக்கூடும். இதனால், ஆரம்பிக்கும் உணர்வு மற்றும் முடியும் உணர்வு ஆகியவை ஒவ்வொரு காட்சிக்கும் தனியே எழுதிக்கொள்ளப்படவேண்டும்.
இப்படிப்பட்ட உணர்வு மாற்றங்கள் ஒவ்வொரு காட்சிக்கும் இருந்தே ஆகவேண்டும் என்பது ப்ளேக் ஸ்னைடரின் கருத்து.
5. ஸிட் ஃபீல்ட், முரண்கள் என்ற Conflicts பற்றிச் சொல்லியிருப்பது நினைவிருக்கிறதா? முரண்கள்தான் திரைக்கதையைச் சுவாரஸ்யமாக்குகின்றன என்பது அவரது முடிவு. இப்படிப்பட்ட முரண்களை நாம் எழுதும் ஒவ்வொரு பாயிண்டிலும் குறித்துக்கொள்ளவேண்டும் என்பது ப்ளேக் ஸ்னைடர் கருத்து. உதாரணமாக, ஒரு காட்சியில் வில்லன் ஹீரோயினைக் கடத்தலாம். அவளிடம் இருந்து ஏதேனும் ரகசியத்தை வாங்கவேண்டும் என்பது அவன் நோக்கம். ஆனால் ஹீரோயின் அதைச் சொல்லமாட்டேன் என்று ஹீரோவிடம் சத்தியம் செய்திருக்கிறாள் என்று வைத்துக்கொள்ளலாம். எனவே அவளால் சொல்லமுடியாது. இதுதான் முரண். வில்லனுக்கு ரகசியத்தை வாங்கவேண்டும்; ஆனால் ஹீரோயினுக்கு அதைச் சொல்ல இயலாத சூழல். என்ன மிரட்டினாலும் பணியமாட்டாள்.
இவைதான் முரண்கள். இவற்றை எளிதாக ப்ளேக் ஸ்னைடர் ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார். என்னவெனில், ஒரு அறையில் இருக்கும் இரண்டு எதிரான கதவுகளின் மூலம் இருவர் உள்ளே நுழைகிறார்கள். அறையின் நடுவே எதிரெதிரே நடந்து வருகிறார்கள். அவர்களின் நோக்கம், அவர்களுக்கு எதிரே இருக்கும் கதவுகளின்மூலம் வெளியேறுவது. ஆனால் ஒவ்வொருவருக்கும் எதிரே மற்றொருவர் இருப்பதால் அவர்களைத் தாண்டிக்கொண்டு எதிரில் இருக்கும் கதவுகளில் நுழைவதில் சிக்கல். ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொருவரின் எதிரேயும் ஒரு பெரிய தடையும் இருக்கிறது. இதுதான் முரண். இருவருக்கும் ஒரே நோக்கம் இருக்கலாம். அல்லது அதில் ஒருவருக்கு மட்டும் எதிரே கதவின்வழியாக வெளியே செல்லும் அவசியமான நோக்கம் இருக்கலாம். அவரது தாய் மருத்துவமனையில் இருக்கலாம். அடுத்த அரைமணி நேரத்தில் அவருக்கு விவாகரத்து நடக்கலாம். அல்லது அவருக்கு ஒன்றுக்குக் கூட அவரசமாக வரலாம். ஒருவரும் பேசிக்கொண்டால்தான் இருவரும் எதிரே இருக்கும் கதவுகளுக்குச் செல்லமுடியலாம். அல்லது அது சண்டையில் கூட முடியலாம். ஒருவன் வீம்பாகவே இன்னொருவருக்கு வழி விட மறுக்கலாம்.
இப்படி எண்ணற்ற முரண்கள் இருக்கலாம்.
எனவே< ஒவ்வொரு காட்சி ஆரம்பிக்கும்போதும், அதன் கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு சேர்த்து, அந்தக் காட்சியின் பிரதானமான முரண் என்ன என்றும், யார் யாரோடு இப்படி முரண்படுகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியவேண்டும். ஆனால் இதில் கவனிக்கவேண்டிய விஷயம், ஒரு காட்சியில் ஒரு முரண் மட்டும்தான் இருக்கவேண்டும். ஒருசில காட்சிகளில் ஓரிரு முரண்கள் இருக்கலாம். தவறில்லை. ஆனால் பெரும்பாலும் ஒரு காட்சிக்கு ஒரு முரண் தான். இல்லையேல் குழப்பிவிடும்.
இப்படியாக நமது நாற்பது பாயிண்ட்களையும் எழுதிக்கொள்ளவேண்டும். அவற்றை பலமுறைகள் படித்துப்பார்த்து, சரியான வரிசைக்கு வரவேண்டும். இதன்பின் திரைக்கதை எழுதத் துவங்கலாம். ஒவ்வொரு பாயிண்ட்டையும் விபரமாக விரித்து எழுதினால் திரைக்கதை ரெடி.
அடுத்தவாரத்தில், ஸீட் ஃபீல்டையும் ப்ளேக் ஸ்னைடரையும் விபரமாக ஒப்பிடப்போகிறோம். எது சிறந்தது? எதில் அனுகூலங்கள் அதிகம்? எதில் நன்றாகத் திரைக்கதை சம்மந்தப்பட்ட விபரங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன?
எல்லாவற்றையும் விரிவாகக் கவனிக்கலாம்.
தொடருவோம்…
நன்றி sir.
இதில் பக்கங்கள் என்னை குழப்புகிறது. ஒரு பக்கத்துக்கு ஒரு சீனா அல்லது எத்தனை சீன்கள் ஒரு பக்கத்தில் வந்தாலும் 120 பக்கங்களுக்குள் முடித்து விட வேண்டுமா?
என்னப்பா தேளுத்தம்பி நலமா?ரொம்ப நாள் ஆச்சு
அண்ணே நான் பிரிண்ட் போட்டு படிப்பதால் தனித் தனியே கருத்திட முடியவில்லை சந்தேகங்கள் வரும் போது அவ்வப் போது கேட்கிறேன்
Sure boss
ஹலோ சார் நான் உங்களோட சமீபத்திய வாசகன் ….உங்களை தொடர்ந்து படித்து வரேன் …நீங்கள் ஏன் மூடர்கூடம் படத்தை பற்றி விமர்சனமே பதிவு செய்யவில்லை …நீங்கள் பதிவு செய்தால் சந்தோஷப்படுவேன்…..இப்படிக்கு கத்துகுட்டி.