Fade in முதல் Fade Out வரை – 2
‘இன்றைய இயக்குநர்களுக்கு ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் யாராக இருந்தாலும் சரி, கோடம்பாக்கத்து நிர்பந்தங்கள் உங்கள் படங்களைச் சூழ்ந்துவிட அனுமதிக்காதீர்கள். இந்தக் கோடம்பாக்கத்தில் இருந்துதான் ஒரு ‘பராசக்தி’ வந்தது, ஒரு ‘ரத்தக் கண்ணீர்’ வந்தது, ஒரு ‘மூன்றாம் பிறை’ வந்தது. தமிழ் சினிமாவின் உன்னதங்கள் என்று நீங்கள் நினைக்கக்கூடிய சகல விஷயங்களையும் உங்கள் முன்னோடிகள் இந்த நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் இருந்துதான் கொண்டுவந்தார்கள். இதை நினைவில் வைத்துச் செயல்படுங்கள். பணம் பண்ண வேண்டும்தான். ஆனால், தேவைக்கு அது போதுமானது. நாம் எல்லோருமே சாதாரணப் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள்தான். ஏன் நம்முடைய பிள்ளைகளைப் பணக்காரர்கள் ஆக்க அருவருக்கத்தக்க வகையில் நம் வாழ்நாளைச் செலவிட வேண்டும்?’ – பாலு மகேந்திரா – ஆனந்த விகடன் – ஜூலை 2012.
எக்கச்சக்கமான படங்கள் வெளியாகும் தமிழ்நாட்டில் ஏன் மிகச்சில படங்களே வெற்றிபெறுகின்றன? எதனால் பிற படங்கள் தோல்வியடைகின்றன?
இதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்துவிட்டால், அவசியம் நம்மால் வெற்றிப்படங்களை எடுத்துக் குவிக்க முடியும். ஆனால் இந்தக் கேள்விக்குப் பதில் காண்பது அவ்வளவு சுலபம் இல்லை. இருந்தாலும், ஓரளவு இதற்கான பதிலுக்கு அருகே சென்று பார்க்க முடியும்.
இந்தக் கேள்விக்குப் பதில் தேடும் முயற்சியில், எல்லாவற்றுக்கும் முதலில் நாம் பார்க்கவேண்டியது – தமிழ் மக்களின் திரைப்பட ரசனை. 1916ல் ஆர். நடராஜ முதலியாரால் முதல் தமிழ் மௌனப்படமான ‘கீசக வதம்’ உருவான காலத்தில் இருந்து இன்றுவரை தமிழ்ப்படங்கள் எந்த வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன? இதற்கான பதிலில்தான் நம்முடைய முதல் கேள்வியின் விடை இருக்கிறது.
ஆரம்பகாலத்தில் புராணப்படங்களே தமிழ்ப்படங்களின் பெரும்பான்மையான படங்களாக இருந்தன. அதன்பின்னர் மெதுவாக சமூகப்படங்கள் வெளியாக ஆரம்பித்தன. இப்படி முப்பதுகளில் ஆரம்பித்த தமிழ் பேசும் படங்களின் இயக்குநர்களில் ராஜா சாண்டோ குறிப்பிடத்தக்கவர். ’மேனகா’ என்ற சமூகப்படத்தை 1935விலேயே இயக்கியவர். இதுதான் தமிழின் முதல் சமூகப்படம் என்று சொல்லப்படுகிறது (இணையம்). வடுவூர் துரைஸ்வாமி ஐயங்காரின் துப்பறியும் நாவலான ‘மேனகா’வைத் தழுவி டி.கே.ஏஸ் சகோதரர்கள் எழுதிய நாடகம் இது. அந்த நாடகமே ராஜா சாண்டோவால் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதன்பின் பல இயக்குநர்களின் வருகையால் பலப்பல படங்கள் வெளியிடப்பட்டன. எல்லிஸ் .ஆர். டங்கன், டி.ஆர். சுந்தரம் (மாடர்ன் தியேட்டர்ஸ்), கே.சுப்ரமண்யம், Y.V. ராவ், சி.வி. ராமன் போன்ற இயக்குநர்கள் முப்பதுகளில் ஏராளமான ஹிட்களைக் கொடுத்தனர். நாற்பதுகளின் துவக்கத்தில் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் ‘சபாபதி’ வெளியானது. இதன் பிறகு பி.யூ.சின்னப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதர் போன்றவர்களின் காலம். பின்னர் ஐம்பதுகளில் ‘பராசக்தி’ வெளியானது. கிருஷ்ணன் பஞ்சு, ஸ்ரீதர், பீம்சிங், பி.ஆர். பந்துலு, யோகானந்த் (இவரும் டி.ஆர், சுந்தரமும் முப்பதுகளில் இருந்தே கிட்டத்தட்ட 30 வருடங்களாக இயக்குநர்களாக இருந்தவர்கள்), M.A திருமுகம், ஏ.பி. நாகராஜன், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் பிரபலம் அடைந்தனர். அதன்பின்னர் பாலசந்தரில் இருந்து பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன், மணி ரத்னம் என்ற வரிசை, இன்றைய கௌதம், செல்வராகவன் என்று தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இத்தனை படங்களையும் ஒருமுறை எடுத்துப் பார்த்தால் (நான் இவற்றில் பெரும்பாலான படங்களைப் பார்த்திருக்கிறேன்), ஒரு உண்மை புரியும். ஆரம்பகாலத்தில் இருந்தே தமிழ்ப்படங்கள் ஒரு குறிப்பிட்ட டெம்ப்ளேட்டையே பின்பற்றி வருகின்றன. தமிழில் மொத்தம் ஒருசில வகையான படங்களே இருக்கின்றன. துவக்கத்தில் இருந்து இன்றுவரையான அதே வகையான படங்களை எளிதாக வகைப்படுத்திவிடலாம்.
புரியும்படி சொல்கிறேன். இதோ சில வகைகள்.
புராணப்படங்கள் – முதல் பேசும் படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’வில் இருந்து சம்பூர்ண ராமாயணம், மாயாபஜார், பார்த்திபன் கனவு, கர்ணன், தசாவதாரம் (பழைய படம்), இம்சை அரசன் 23ம் புலிகேசி என்று இவைகளை வகைப்படுத்தலாம். ஒருகாலத்தில் தமிழில் மிகப்பெரிய ஆடியன்ஸைக் கொண்டிருந்த வகை இது. இந்த வகையில் சில உட்பிரிவுகளும் உண்டு. புராண செண்ட்டிமெண்ட் (ஹரிச்சந்திரா, கண்ணகி, மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம்), புராண சாகஸம் (பார்த்திபன் கனவு, வஞ்சிக்கோட்டை வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், விக்கிரமாதித்யன்), புராண ஹாரர் (வேதாள உலகம், ஜெகன்மோகினி), புராணப் பொழுதுபோக்கு (மாயாபஜார், உத்தம புத்திரன், கொஞ்சும் சலங்கை, காஞ்சித் தலைவன், இம்சை அரசன் 23ம் புலிகேசி), புராண பக்தி (சிவகவி, நந்தனார், குமண குசேலா, திருவிளையாடல், திருவருட்செல்வர்) ஆகியவை.
தமிழ்ப் புராணப்படங்களின் விதிகள் என்னென்ன?
எடுத்துக்கொண்ட வகைகளுக்கு ஏற்பக் கதை அமையவேண்டும். புராண செண்ட்டிமெண்ட் என்றால், பிரதான கதாபாத்திரத்துக்கு ஏதேனும் மிகப்பெரிய சோதனை நிகழவேண்டும். அந்தச் சோதனையில் இருந்து மீண்டு வருவதற்கு அந்தப் பாத்திரம் எக்கச்சக்கமான கஷ்டங்களைச் சந்திக்கவேண்டும். மிகப்பெரிய இழப்புகளையும் அந்தப் பாத்திரம் சந்திக்கும். இறுதியில், கடவுள்/முனிவர்/சத்தியம்/நேர்மை ஆகிய விஷயங்களில் ஏதேனும் ஒன்றோ பலவோ அந்தப் பாத்திரத்துக்கு உதவிபுரிந்து இழந்த வாழ்க்கையை அந்தப் பாத்திரம் மறுபடி கைக்கொள்ளவேண்டும் (இதில் மிக rare விதி ஒன்றும் உண்டு. அது – கண்ணகி போல, இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறாமல் போய்விடுவது). எந்தப் புராணப்படமாக இருந்தாலும் இந்த விதியைப் பார்க்கலாம். இப்படிக் காட்டப்படும் கதாபாத்திரம், ஒருவித மாற்றத்தையும் அடையும். துவக்கத்தில் ஈகோ பிடித்த நபராக இருந்து, முடிவில் வாழ்க்கையில் பக்குவத்தை அடைந்திருக்கும். உதாரணம் – உத்தமபுத்திரன், திருவருட்செல்வர்.
குணச்சித்திரம் – சிவாஜியின் ஃபேவரைட் ஏரியா. பெரும்பாலும் சோகம் கலந்த ஜானர். இதற்கு உதாரணங்களே தேவையில்லை என்னும் அளவுக்கு எக்கச்சக்கமான படங்கள் தமிழில் உள்ளன.
நகைச்சுவை – சபாபதியில் இருந்து இன்றைய தெனாலிராமன் வரை நகைச்சுவைப் படங்கள் ஏராளம். சில படங்களில் அப்போது உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களும் நடித்திருக்கலாம். ஆனால் நகைச்சுவை நட்சத்திரங்களின் மார்க்கெட்டை உறுதிப்படுத்தும் வகையிலான படங்களே இதில் பெரும்பாலானவை.
நகைச்சுவைப் படங்களின் விதிகள் என்னென்ன?
ஒவ்வொரு நகைச்சுவைப் படத்திலும் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையின் சாதாரண கதாபாத்திரங்கள் இடம்பெறும். இந்தப் பாத்திரங்களுக்கு ஏதேனும் பிரச்னை நடக்கும். அந்தப் பிரச்னையை அந்தப் பாத்திரம் எப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுகிறது என்பதே இப்படங்களின் கதையாக இருக்கும். கூடவே பெரும்பாலான படங்களில் யாராவது ஒரு ஆசாமி, முரண்டு பிடிக்கும் கதாபாத்திரமாக இருப்பார். அவரை எப்படி இந்தக் கதாபாத்திரங்கள் திருத்துகின்றன என்பதுதான் கதையாகவும் இருக்கும். சில படங்களில் ஹீரோவேகூட இப்படிப்பட்ட முசுடாக இருக்கலாம். ‘பலே பாண்டியா’வில் எம்.ஆர். ராதா முசுடு கேரக்டர். ’காதலிக்க நேரமில்லை’ – ரவிச்சந்திரன் கதாபாத்திரத்துக்கு வேலையில் பிரச்னை நேர்ந்து, தனது தந்தையாக நடிக்கச்சொல்லி முத்துராமனை அணுக, இருவரும் அடிக்கும் லூட்டிகள்தான் கதை. பாலையாதான் இதில் முசுடு. மணல் கயிறு – ஹீரோ கிட்டுமணி (எஸ்.வி.சேகர்) போடும் எட்டுவித கட்டளைகளை நாரதர் நாயுடு எப்படி சமாளித்து அவனைத் திருத்துகிறார் என்பதுதான் படம். (விசுவின் இந்த மிடில் க்ளாஸ் நடுத்தர வயது ஹீரோ பாத்திரம் பிரச்னைகளைத் தீர்க்கும் டெம்ப்ளேட் தமிழில் 80களில் புகழ்பெற்று விளங்கியது). வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் – முசுடான பிரகாஷ் ராஜ்ஜை எப்படி கமலின் பாத்திரம் திருத்துகிறது என்பது கதை. இதேதான் தெனாலியிலும் (அது What about Bob படத்தின் காப்பி என்றாலும்) இருக்கும். இறுதியில் ஜெயராம் திருந்துவார். ’சிங்காரவேலன்’ மனோரமா, ஜெய்ஷங்கர் & குஷ்பு கூட்டணியும் இப்படிப்பட்டதே. இப்படிப்பட்ட நகைச்சுவைகளில் பொதுவாக யாரும் சாவதில்லை. திருந்துதல்தான் க்ளைமேக்ஸ்.
இந்த நகைச்சுவையிலேயே ஒருவித த்ரில்லர் ஜானரும் அவ்வப்போது இடம்பெறுவதுண்டு. ‘சிதம்பர ரகசியம்’ ஒரு உதாரணம். கொலை – மர்மம் – அப்பாவி ஹீரோ அகப்படுதல் – அதனை சிஐடி விசு சைக்கிளில் வந்து விடுவித்தல் என்ற கதை. ஹாலிவுட்டின் பழையகாலப் படங்களில் சிஐடி சைக்கிளில் வருவார். இதே ஃபார்முலாதான் விசு மற்றும் பாக்யராஜால் (நான் சிகப்பு மனிதன்) பின்பற்றப்பட்டது. அதேபோல் பாக்யராஜ் இந்த வகைப்படங்களில் கில்லி.
ஆக்ஷன் – இதுதான் தமிழின் அதிகபட்சப் படங்களின் ஜானர். இதில் கதைக்காக கஷ்டப்படவே தேவையில்லை. அநியாயத்தைக் கண்டு பொங்கும் ஹீரோவுக்கு என்னென்ன பிரச்னைகள் என்பதுதான் பெரும்பாலான ஆக்ஷன் படங்களின் கதை. இதன் உட்பிரிவாக ஆக்ஷன் காமெடி, ஆக்ஷன் – உளவாளி, ஆக்ஷன் – மார்ஷியல் ஆர்ட்ஸ், ஆக்ஷன் த்ரில்லர் போன்றவைகளைச் சொல்லலாம். ஆக்ஷன் காமெடி வகைப்படங்கள் தமிழில் கொஞ்சம் கம்மி. எண்பதுகளில் இவை ஏராளமாக வெளிவந்தன. ரஜினியின் ஃபார்முலா இது. சிவாஜியில் சில காட்சிகளில் இதனைக் காணலாம். அண்ணாமலை, வீரா, முத்து போன்றவை சில உதாரணங்கள். ஆக்ஷன் – உளவாளி (Spy thriller) படங்களாக கமலின் விக்ரம், ஆரம்பம், சிஐடி சங்கர், தாய்நாடு போன்றவைகளைச் சொல்லலாம். இதுவும் அறுபதுகள் மற்றும் எண்பதுகளின் இன்றியமையாத ஜானர். ஆக்ஷன் – மார்ஷியல் ஆர்ட்ஸ் ஜானரில் பாயும் புலி, எனக்குள் ஒருவன், மான் கராத்தே, இந்தியன், எம்.குமரன் போன்றவை உதாரணம். ஆக்ஷன் த்ரில்லர் என்ற வகையில் நீயா?, மூன்றெழுத்து, நான், துணிவே துணை, துப்பாக்கி, மங்காத்தா, சூரியன், காக்க காக்க, அந்நியன் என்று எக்கச்சக்கமான உதாரணங்கள் இருக்கின்றன.
ஹாரர் – இந்த ஜானர் எண்பதுகள் வரையிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து, பின்னர் தேய்ந்துவிட்டது. அதே கண்கள், பதிமூன்றாம் நம்பர் வீடு, மைடியர் லிஸா, சந்திரமுகி, யாவரும் நலம், பீட்ஸா, முனி, காஞ்சனா, நாளைய மனிதன், 48 மணி நேரம், 24 மணி நேரம், நூறாவது நாள், பிள்ளை நிலா, சிவப்பு ரோஜாக்கள் போன்றவை மிகச்சில உதாரணங்கள். ஹாரரில் இரண்டு வகைகள் இருக்கின்றன. பேய்ப்படங்கள் என்பன ஒரு வகை. பேய் இல்லாமல் ஆடியன்ஸின் மன உணர்ச்சிகளுடன் விளையாடும் படங்கள் இன்னொரு வகை. இந்த இரண்டு வகைப் படங்களுமே மேலே இருக்கின்றன.
ஹாரர் படங்களில் பெரும்பாலும் ஒரு வீடு சம்மந்தப்பட்டிருப்பதைக் காணலாம். உலகெங்குமே அப்படித்தான். இந்த வகையான வீட்டைச் சம்மந்தப்படுத்தி எடுக்கும் படங்களுக்குச் சில விதிகள் உள்ளன.
வீடு என்பது ஒரு கட்டுப்பட்ட, சிறிய இடமாக இருக்கவேண்டும். சில படங்களில் வீடாக இல்லாமல் ஒரு அபார்ட்மெண்ட் (யாவரும் நலம்), ஒரு சிறிய காலனி, ஒரு நாடகக்கூடம் (48 மணி நேரம்) என்றும் இருக்கலாம். இங்கு எதேனும் ஒருவிதமான பாவச்செயல் நடைபெறும். கொலை, கற்பழிப்பு, தற்கொலை போன்றவை. இதனால் ஏதேனும் ஒரு தீயசக்தி கிளம்பி, அந்த இடத்தில் இருக்கும். அந்தச் செயல்களுக்குக் காரணமானவர்களை அது பழிவாங்கத் துவங்கும். இதன்பிறகு என்ன? அந்த சக்தியிடமிருந்து தப்பிப்பதே கதை.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஆடியன்ஸை பயமுறுத்துவதில் வெற்றி காணவேண்டும் என்பதே. அப்படி இல்லாமல் ஏனோதானோ என்று எடுத்தால் படம் டப்பா ஆகிவிடும். புதிய திருப்பங்கள், மர்மங்கள், ஆடியன்ஸை டகாலென்று அலற வைப்பது ஆகியவை இங்கே அவசியம். உலகின் எந்த மொழியைச் சேர்ந்த மனிதனாக இருந்தாலும் அவனால் இப்படிப்பட்ட படங்களைப் பார்த்து அலறமுடியும் என்பது ஹாரர் படங்களின் அட்வாண்டேஜ்.
காதல் – இதுவும் தமிழில் எக்கச்சக்கமாக வந்த ஜானர்தான். இதற்கு உதாரணமே தேவையில்லை. மேலே சொல்லப்பட்ட அத்தனை ஜானர்களுடனும் காதலைச் சேர்த்துப் படமாக அளிக்கமுடியும்.
இந்த அடிப்படை ஜானர்களோடு இவைகளில் ஒன்றையோ பலவற்றையோ கலந்து வெளிவந்தவைதான் இதுவரை வந்திருக்கும் தமிழ்ப்படங்கள். உதாரணமாக, எம்.ஜி.ஆர் நடித்து 1963ல் வெளிவந்த ‘கலைஅரசி’ திரைப்படம், தமிழில் வெகு அரிதான ஜானரான சைன்ஸ் ஃபிக்ஷனைச் சேர்ந்தது. ஆனால் அடிப்படையில் இது ஒரு ஆக்ஷன் படம்தான். அதேபோல் ‘பையா’ ஒரு Road Movie. ஆனால் அதுவுமே ஒரு ஆக்ஷன் படம்தான். அன்பே சிவத்தை நன்றாகக் கவனித்தால் அது ஒரு road movie. ஆனால் குணச்சித்திரத் தன்மையுடையது. அடிப்படை ஜானர்கள் என்பன இவைதான்.
நாம் ஒரு திரைக்கதையை எழுத விரும்புகிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். முதலில் அது எந்த ஜனரைச் சேர்ந்தது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். ‘படத்துல ஒரு பாட்டுல பறக்கும் தட்டு வருது. அதனால இது சைன்ஸ் ஃபிக்ஷன் தான்’ என்றெல்லாம் விதண்டாவாதம் செய்யாமல், ஒழுங்காக நமது ஜானரைத் தெரிந்துகொள்வது நல்லது.
அதன்பின், இதற்கு முன்னால் தமிழில் அந்த ஜானரில் வெளிவந்துள்ள படங்கள் என்னென்ன என்பதிலும் தெளிவாக இருக்கவேண்டும். காரணம், நாம் மனதில் வைத்திருக்கும் அதே கதையை அந்தப் படத்தில் யாராவது ஏற்கெனவே வைத்திருக்கலாம். தமிழில் அப்படிப்பட்ட படங்களை அடையாளம் கண்டபின்னர், உலக அளவிலும் அப்படிப்பட்ட படங்கள் என்னென்ன வந்திருக்கின்றன என்பதில் ஒரு ஹோம்வொர்க் செய்தல் நலம். காரணம், காட்சிகள் அதேபோன்று இருக்கக்கூடாது என்பதால்தான். அப்படி தற்செயலாக அமைந்தால்கூட, வெகு எளிதில் அது ‘காப்பி’ என்று சமுதாயம் சொல்லி, அப்படத்தை ஒதுக்கிவிடலாம்.
இப்படி ஹோம்வொர்க் செய்வதன் இன்னொரு பயன், புதிய காட்சிகளுக்கு ஏராளமான ஐடியாக்கள் அப்படிப்பட்ட படங்களில் இருந்து கிடைக்கும். ஐடியா என்றால் அது காப்பி அல்ல. நமது மனதில் இருக்கும் கதையை எப்படி வித்தியாசமாக வெளிப்படுத்துவது என்பது அதே ஜானரில் அமைந்த படங்களைப் பார்த்தால் தெரிந்துவிடும். அவற்றில் இல்லாத காட்சிகளை அமைத்தால் போதும். கூடவே கதாபாத்திரங்கள் எப்படிக் கையாளப்படுகின்றன, இசை, கேமரா, எடிட்டிங் ஆகியவை எப்படி இருக்கின்றன போன்ற நல்ல ஐடியாக்கள் எளிதில் நமக்குக் கிடைக்கும். இதனால்தான் ‘இதற்குமுன் வந்துள்ள ஒவ்வொரு படத்திலிருந்துமே நான் திருடுகிறேன்’ என்று க்வெண்டின் டாரண்டினோ சொல்லியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் திரைப்பட ரசனையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நான் ஆரம்பித்ததன் நோக்கம் இதுதான். இப்படிப்பட்ட ஜானர்களில் நமது கதை எந்த ஜானர், அதன் முன்னோடிகள் எவை என்பது திரைக்கதை எழுதுவதற்கு மிகவும் அவசியம்.
அதேபோல், தமிழில் வந்துள்ள படங்கள் 99% மசாலாக்களே. ‘கமர்ஷியல் படம்’ என்று பொதுவாக அழைக்கப்படும் வகை இவை. ரித்விக் கடக், சத்யஜித் ரே போன்றவர்கள் இந்திய சினிமா அரங்கை (உலக சினிமா அரங்கையும்தான்) கலக்கிக்கொண்டிருந்த அறுபதுகளிலும்கூட தமிழில் அப்படிப்பட்ட முயற்சிகள் எதுவுமே வரவில்லை. டாப் ஸ்டார்களான எம்.ஜி. ஆர், சிவாஜி கணேசன் போன்றவர்கள்கூட தங்களது படங்கள் கமர்ஷியல் மசாலாக்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். தமிழில் வெகு அரிதாக வந்திருக்கும் கலைப்படங்களாக ‘வீடு’, ‘சந்தியாராகம்’ போன்றவை இருக்கின்றன. (கலைப்படங்கள் என்ற பெயர் எனக்குப் பிடிக்காது. உலக சினிமாக்கள் என்பதும்தான். ஆனால் இந்த வகைப் படங்களுக்குப் பெயரே இல்லாததால் அப்படி அழைக்கவேண்டியிருக்கிறது). ஆனால் அப்படிப்பட்ட படங்களை பாலுமகேந்திரா முதன்முதலில் எடுக்கவில்லை. சினிமாவில் தனது பெயர் நன்றாக எஸ்டாப்ளிஷ் ஆனபின்னர்தான் துணிந்து இறங்கினார். இருந்துமே வணிக ரீதியில் அவை தோல்விகள்தான். காரணம், தமிழ் சினிமா ஆடியன்ஸை ஆதியில் இருந்து மசாலாக்களுக்குத்தான் எல்லா இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தயார் செய்து வந்திருக்கின்றனர்.
ஆடியன்ஸுக்குத் தேவையெல்லாம் சில காமெடிகள், சில பாடல்கள், சில சண்டைகள், கவர்ச்சிகரமான உடையில் கதாநாயகி என்பதுபோன்ற ஒரு ஃபார்முலாவாகவே தமிழ்ப்படங்கள் எழுபதுகள் வரையில் ஆகிவிட்டிருந்தன. இதற்கு முழுமுதல் காரணம் நடிகர்களும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்தான். எப்போதாவதுதான் இந்த நிலை மாறியது. இதனால் என்ன ஆகிவிட்டது என்றால், இன்றுவரை ஆடியன்ஸான நமது மனம் இப்படிப்பட்ட விஷயங்களைத்தான் ஒரு படத்தில் எதிர்பார்க்கிறது. நன்றாக மனதைத் தொட்டு யோசித்துப் பாருங்கள். ஒரு படம் வெளியாகியிருக்கிறது என்றால் அதைப் பார்க்கவேண்டும் என்று நாம் எப்படி முடிவு செய்கிறோம்? பெரும்பான்மையான மக்கள், ஒரு படம் ஜாலியாகப் போகிறதா என்று யோசித்துத்தான் அந்தப் படத்தைப் பார்க்க முடிவு செய்கின்றனர். மிகச்சிலர்தான் படம் தரமாக இருக்கிறதா என்று யோசிக்கின்றனர்.
எனவே, தமிழ் சினிமா ஆடியன்ஸான நாம் பிறப்பில் இருந்தே மாசாலாவை நோக்கி மூளைச்சலவை செய்யப்பட்டுத்தான் சினிமா பார்க்க வருகிறோம். இதில் எனக்கு சந்தேகமே இல்லை. இந்த மூளைச்சலவையால், வீடு போன்ற படங்கள் தியேட்டரில் ஓடியபோது காட்டு மிருகங்கள் போல ஆடியன்ஸ் ஊளையிட்டு அந்தப் படங்களை ஓடவிடாமல் செய்தனர். காரணம், அவர்களது மனதில் பதிந்துபோயிருக்கும் கவர்ச்சி, காமெடி, சண்டை எதுவுமே அதில் இல்லை. எனவே அவர்களுக்கு அது ஒரு படமே இல்லை. இதற்கு மீடியாவும் இன்னொரு காரணம். தரமான விஷயங்கள் என்று உலக அரங்கில் இருக்கும் எதுவுமே தமிழ் மக்களுக்குச் சுட்டிக்காட்டப்படுவதில்லை. காரணம் – அவைகள் போணியாகாதவை. நன்றாக யோசித்துப் பார்த்தால், தமிழில் இருந்து உலக சினிமா அரங்கில் கம்பீரமாகத் திரையிட்டுக் காட்டக்கூடிய படமாக இதுவரை நாயகன், ஆரண்ய காண்டம் போன்ற மிகச்சில படங்களே உள்ளன. நேற்று எடுக்கப்பட்ட கொரியன் படங்கள் கூட Cannes திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் வேளையில் (கொரியன் படங்கள் சாதாரணமானவை அல்ல. அங்கு கில்லிகள் ஜாஸ்தி), தமிழ் மட்டும் ஏன் இப்படி?
இன்னொரு விஷயம் – உலக அரங்கில் தரமான படங்கள் எவை என்பது நமக்குத் தெரிவதில்லை. அட –ஆரண்ய காண்டத்தையே ignore செய்த கும்பல் தானே நாமெல்லாம்? காரணம், தமிழ்நாட்டில் எல்லா அம்சங்களிலும் மசாலாதான் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. எதுவாக இருந்தாலும் அதனோடு Pesudo (போலி) என்ற அடைமொழியைச் சேர்த்துக்கொண்டால் அதுதான் இன்றைய தமிழகத்தின் ரசனை. தற்போது இது மாறிவருவது தெரிகிறது. காரணம், மக்களுக்குத் தரமான விஷயங்கள் பற்றித் தெரிய ஆரம்பித்துவிட்டது. இணையத்தின் உதவியால். எனவே இந்த pseudo நிலை சீக்கிரம் மாறும் என்று எதிர்பார்க்கிறேன்.
நான் சொல்லவந்த விஷயம் என்னவென்றால், இப்படிப்பட்ட நிலையில் முதல் படமே ஒரு ’உலகப்படமாக’ இருந்தால், டப்பா டான்ஸாடுவது உறுதி. எனவே முடிந்தவரை தரமாக, வித்தியாசமாக, க்ளிஷேவாக இல்லாமல் ஒரு திரைக்கதையை எழுதவேண்டும் என்று நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். அப்படி யோசிக்கும்போதுதான் அது எந்த ஜானர் என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும். ஜானர் முடிவானபின்னர் ஹோம்வொர்க் செய்யவேண்டும். அதில் எக்கச்சக்கமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
இதன்பின்னர் என்ன செய்வது? தொடருவோம்.
நீங்கள் சொல்வதெல்லாம் சரி. ஆனால் இப்பொழுதெல்லாம் தயாரிப்பாளரை அணுகும்போதே அவர்கள் என்ன ஜானர் வேண்டும் என்றும் தீர்மானித்து கதை எழுத சொல்கிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்ச உத்திரவாதம் (MG மினிமம் கியாரண்டி) என்ற வியாபார நோக்கில் பார்க்கிறார்கள். புதிய களத்தை தொட தயங்குகிறார்கள். கடந்த மாதம் ஒரு தயாரிப்பாளர் தனக்கு பேய்க்கதை தான் வேண்டும். அதுதான் அதிக செலவு இருக்காது. ஒருவாரம் ஓடினாலும் போட்ட பணத்துக்கு மேல் பார்த்துவிடலாம். என்று எவ்வளவோ விளக்கம் தருகிறார்.இன்னும் ஒருபடி மேலே போய் சில ஹாலீவுட் படங்களின் காட்சிகளை சொல்லி அதுபோல் வைக்கலாம் என்றார். கதை சொல்ல போனால் கதை கேட்க வேண்டியுள்ளது. இப்போது தமிழ் சினிமாவில் ஹாரர் காய்ச்சல்… எனக்குத் தெரிந்தவரையில் 2014-15 இல் 18 திரைப்படங்கள் வெள்ளை சேலை கட்டி புகை நடுவே உலவத் தயாராக இருக்கிறது.
அப்படி சில தயாரிப்பாளர்கள் இருக்கலாம். ஆனா நான் சொல்ல வர்ரது – நல்ல திரைக்கதை இருந்தா அதற்கு ரெகக்னிஷன் கிடைச்சே தீரும். சமீபத்திய உதாரணம் – சூது கவ்வும். ஒரு தயாரிப்பாளர் இல்லாட்டி இன்னொரு தயாரிப்பாளர்.. நம்புங்க பாஸ், அதுக்கான சூழல் தமிழ்ல இப்போ கொஞ்சம் ஜாஸ்தி.
unmaithaaan thala
நன்றி கருந்தேள் … நீங்களே நல்ல திரைக்கதை ஆசிரியர்தான்; சந்தேகமே இல்லாமல்…
Thanks Dany 🙂
Pattasu… Sub gernes pathi konjam eluthunga…
Appuram man karathevai Martial arts padam endru kooriyathu kandanathukku uriyathu…
சப் ஜானர்ஸ் பத்தி எழுத முடியுமான்னு பார்க்கிறேன். அப்பால, நான் இன்னும் மான் கராத்தே பார்க்கல சுஜித் :P.. அந்த தைரியத்துல எழுதிட்டேன் 🙂
கட்டுரை பிரமாதம் தல.
சொல்ல வந்த விஷயத்த நச்சுனு சொல்லிருக்கீங்க. அதுக்கு குடுத்துருக்குற எடுத்துக்காட்டை எல்லாம் பார்க்கும் போது நீங்க எவ்ளோ Study பண்ணிருப்பீங்கனு நினைச்சு பாக்குறேன், பிரம்மிப்பா இருக்கு. நாம் ஒரு சிறந்த blogன் வாசகர் என்று பெருமையா இருக்கு தல… வாழ்த்துககள் 🙂
Thanks a lot Arun, for the kind words. அப்புறம், எடுத்துக்காட்டெல்லாம் ஆல்ரெடி பார்த்த படமா இருந்ததால ரொம்பக் கஷ்டப்படல. ஆனா இந்த சீரீஸுக்காக எக்கசக்கமான கஷ்டங்கள் படவேண்டியிருக்கும்னு நினைக்கிறேன். பரவால்ல. அப்போதான் நிறைய தகவல்கள் ஷேர் பண்ணிய திருப்தி கிடைக்கும் 🙂
திரைப்படங்களின் Genre குறித்த நீண்ட பட்டியல் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி…
Cheers and Thanks boss
அருமையான கட்டுரை. எனக்கு ஓரளவு திரைகதை எழுத வருகிறது( உங்களுடைய திரைகதை எழுதுவது இப்படி கட்டுரையை படித்த பின்புதான்). அப்படி நான் ஒரு திரைகதை எழுதி உங்களுக்கு அனுப்பினால் உங்களால் அதை செம்மை படுத்த உதவ முடியுமா.
அவசியம் முடியும். ஆனா நல்லா எழுதி முடிச்சி ரெண்டு மூணு ட்ராஃப்ட் முடிச்சிட்டு அனுப்புங்க.. எனகு நேரம் கிடைக்கும்போது பார்த்துத்தரேன். ஆல் த பெஸ்ட் சிவகுமார்
\ஆரண்ய காண்டத்தையே ignore செய்த கும்பல் தானே நாமெல்லாம்?\ – ம்ம்….., பெருமூச்சுதான் வருகிறது………..!
Oh yea Raymond 🙁
உங்க பக்கத்த படிக்கறது ஒரு நல்ல புத்தகத்த படிக்கறது மாறி feel தருது. waiting for week Thursday night.
Thank you Sakthi. Cheers. வர்ர வியாழன் அவசியம் இதைவிட இன்னும் இண்ட்ரஸ்டிங்கான ஆர்டிகிள் ரெடியா இருக்கும்
//தமிழ் சினிமா ஆடியன்ஸான நாம் பிறப்பில் இருந்தே மாசாலாவை நோக்கி மூளைச்சலவை செய்யப்பட்டுத்தான் சினிமா பார்க்க வருகிறோம்//
உப்பு ஒரப்போட சாப்டுறதது எப்படி? ஒண்ணுமே இல்லாம சப்புனு பத்திய சாப்பாடு சாப்டுறது? எப்படி.
நம்ம மசாலாவை ஃபாரின்காரன் சாப்புட்டா மூச்சு முட்டி செத்துர்ரானே சேக்காளி.. அதேமாதிரி, உப்பு உறப்பு இல்லாத சாப்பாடு பத்திய சாப்பாடு ஆயிறாது. எக்கச்சக்கமான செம்ம டேஸ்ட்டி சாப்பாடு ஏஷியன், யூரோப்பியன், அமெரிக்கன் சாப்பாட்டுல கீதே பங்காளி
Very intresting super rajesh
தாங்க்யூ பாஸ்
நன்றி. ஒரு சிறு உதவி http://www.imdb.com/title/tt2316411/
Enemy (2013).
இந்த திரை படத்தை பார்த்து விமர்சனம் எழுத முடியுமா?? இதை பார்த்ததில் இறுதி என்ன சொல்ல வருகிறார்கள் என்ற குழப்பமே மிஞ்சியது.
Super……. Good ., இனி ஒரு வாரம் இருக்கு ……………….
ஆமா. ஆனா அடுத்த வாரம் இன்னும் நல்லா இருக்கும் 🙂
Vanakkam anna i want to write a script based on a novel…have u read ‘oru puliya marathin kathai’? If so,whats the genre for this novel while converting into script?
Very sorry Raja. I have not read it as yet.