Fade In முதல் Fade Out வரை – 20 | Syd Field Vs Blake Snyder – 1
தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க –Fade in முதல் Fade Out வரை
சென்ற கட்டுரையோடு ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை விதிகளைப் பார்த்தாயிற்று. இதுவரை நமது தளத்தில் நாம் ஸிட் ஃபீல்டையும் விபரமாகப் பார்த்திருக்கிறோம். இப்போது யாரைப் பின்பற்றுவது? ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை விதிகள் ஸிட் ஃபீல்டின் புத்தகத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டவைதான். ஸிட் ஃபீல்டைப் படித்தபின்னர்தான் திரைக்கதை அமைப்பைப் புரிந்துகொள்ளமுடிந்ததாக ஸ்னைடர் சொல்லியிருக்கிறார். அதன்பின்னர்தான் தனக்கே உரிய ஒரு பிரத்யேகமான திரைக்கதைப் பயிற்சிப் புத்தகம் எழுத ப்ளேக் ஸ்னைடர் முடிவு செய்தார். இருந்தாலும், இப்போது நாம் இரண்டு பேரையும் விரிவாகப் பார்த்திருப்பதால் இந்த இரண்டு வழிமுறைகளில் யாரைப் பின்பற்றினால் திரைக்கதை எழுத வசதியாக இருக்கும்?
முதலில் ஸிட் ஃபீல்டின் திரைக்கதை வழிமுறையை ஒருமுறை எளிமையாகப் பார்க்கலாம்.
இந்தப் படத்தில் இருப்பதுதான் Syd Field Paradigm (என்பது நமது தளத்தைப் படிக்கும் எவருக்கும் தெரிந்திருக்கும்). இந்தப் படம்தான் ஸிட் ஃபீல்டின் திரைக்கதை வழிமுறைக்கே ஆதாரம். இதைவைத்துதான் அவரது புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
திரைக்கதையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ‘அறிமுகம்’, ‘எதிர்கொள்ளல்’ மற்றும் ‘தெளிவான முடிவு’. ‘அறிமுகம்’ என்ற முதல் பகுதி – தோராயமாக முப்பது பக்கங்கள் இருக்கலாம். இதில்தான் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுக்குள்ளிருக்கும் உறவுமுறைகள் விளக்கப்படுகின்றன. கதை துவங்கும் சம்பவம் – ப்ளாட் பாயிண்ட் 1 என்பதால் விளக்கப்படுகிறது (first X mark). இதன்பின்னர் முதல் பகுதி முடிந்து இரண்டாம் பகுதியான ‘எதிர்கொள்ளல்’ துவங்குகிறது. இந்தப் பகுதி 60 பக்கங்கள் இருக்கலாம். இதில் பிரதான கதாபாத்திரம் தனது லட்சியத்தை நிறைவேற்ற எப்படியெல்லாம் பிரச்னைகளை எதிர்கொள்கிறது என்பதே முக்கியமாக விவரிக்கப்படுகிறது. அந்த இரண்டாம் பகுதியின் முடிவில், க்ளைமேக்ஸை நோக்கிக் கதையைத் திருப்பும் சம்பவம்தான் ப்ளாட் பாயிண்ட் 2 (second X mark). இதன்பின்னர் இரண்டாம் பகுதி முடிந்து மூன்றாவது பகுதியான ‘தெளிவான முடிவு’ என்பது துவங்குகிறது. இதில் முப்பது பக்கங்களில் நமது கதை இயல்பாக, சிக்கலில்லாமல் முடித்து வைக்கப்படுகிறது. இதில் மூன்று பகுதிகளும் 30+60+30 என்பதற்கு மிகாமல் இருக்கலாம் என்பது ஸிட் ஃபீல்டின் கருத்து. 14+28+14 = 56 பாயிண்ட்களில் நமது மொத்தத் திரைக்கதைக்கான எளிமையான பாயிண்ட்களைத் தயார் செய்துகொண்டுவிட்டு, அதன்பின்னர் ஒவ்வொரு பாயிண்ட்டாக விரிவுபடுத்திக் காட்சிகளை எழுதத் துவங்கலாம்.
இதில் சுவாரஸ்யமான முதல் காட்சி என்பது இன்ஸைட்டிங் இன்ஸிடெண்ட் என்றும், இதன்பின் கதை ஆரம்பிக்கும் காட்சி கீ இன்ஸிடெண்ட் என்றும், பின்னர் கதை முதல் பகுதியில் இருந்து இரண்டாம் பகுதிக்குச் செல்லும் காட்சி ப்ளாட் பாயிண்ட் என்றும் விளக்கப்படும். ஒவ்வொரு விஷயமாகத் துவங்கி எப்படித் திரைக்கதையை எழுதி முடிப்பது என்பதெல்லாம் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க‘ புத்தகத்தில் விளக்கப்பட்டிருப்பதையும் நண்பர்கள் அறிவார்கள். சுருக்கமாக இதுதான் ஸிட் ஃபீல்டின் திரைக்கதை அமைப்பு.
ப்ளேக் ஸ்னைடருக்கு வந்தால், ஸிட் ஃபீல்டின் திரைக்கதை அமைப்பையே இன்னும் விரிவுபடுத்தியிருப்பதுதான் அவரது அமைப்பு என்பது புரியும். இதோ இந்தப் படத்தை கவனிப்போம். இதுதான் ஸ்னைடரின் Beat Sheet.
ப்ளேக் ஸ்னைடரின் வழிமுறையுமே திரைக்கதையை மூன்று பிரிவுகளாகப் பிரிப்பதைக் கவனியுங்கள். ஒவ்வொரு பகுதிக்கும் என்னென்ன தேவை என்பதும் அந்தந்தப் பகுதியிலேயே இருக்கின்றன. இவைதான் Blake Snyder’s Beat Sheet என்று அழைக்கப்படுகின்றன. இவைகள் ஒவ்வொன்றையுமே விபரமாக இதற்கு முந்தைய அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம்.
இந்த இரண்டையுமே நாம் விரிவாகப் பார்த்திருப்பதால், இனிமேல் இந்த இரண்டின் சாதக பாதகங்களைப் பற்றிப் பேசலாம்.
சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு, திரைக்கதை ஒன்றை எழுதவேண்டும் என்று முயற்சிக்கும் ஒரு நபர் இந்த இருவரையும் படிக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். யாரை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம்? யாரின் கருத்துகள் மிகவும் உபயோகமாக இருக்கும்?
சந்தேகமில்லாமல் ஸிட் ஃபீல்ட்தான் இந்த இருவரில் அனைவருக்கும் உபயோகப்படக்கூடியவர் என்று சொல்வேன். அதற்காக ப்ளேக் ஸ்னைடர் ஒரு வெத்துவேட்டு என்று அர்த்தம் இல்லை. ப்ளேக் ஸ்னைடரும் உபயோகமானவர்தான். ஆனால், ப்ளேக் ஸ்னைடரின் கருத்துகளை யாரெல்லாம் எடுத்துக்கொண்டனர் என்று கவனித்தால், ஹாலிவுட்டின் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு ப்ளேக் ஸ்னைடரைப் படிப்பது எளிதாக இருந்தது. காரணம், ஸ்னைடரின் மொழி. ஒரு நண்பன் இன்னொரு நண்பனிடம் ‘ஹாய் மச்சி.. டாமினோஸ் போலாமா? முடிச்சிட்டு சாயங்காலம் பப் போயிட்டு நைட்டு லைட்டா ஒரு டோமரைப் போட்டுட்டு படம் பார்க்கலாம்’ என்று சொல்வதைப் போன்றதுதான் ப்ளேக் ஸ்னைடரின் புத்தகம். அவர் அதில் அப்படித்தான் மிக மிகக் கேஷுவலாகப் பேசுகிறார். இதனால் அவரது கருத்துகள் எளியமுறையில் அனைவருக்கும் புரிந்துவிடும். ஸிட் ஃபீல்டைப் பொறுத்தவரை அவரது பல வருட அனுபவத்தை அவரது புத்தகத்தில் இறக்கியிருப்பதால், அவரது புத்தகம் படிக்கையில் ஒரு அன்பான, கருணைமிக்க ஆசான் பேசுவதைக் கேட்பதைப் போலவே இருக்கும்.
என் தனிப்பட்ட கருத்து என்னவாக இருக்கும் என்றால், ஸிட் ஃபீல்டின் கருத்துகளைப் படித்துவிட்டு அதன்பின் இருக்கும் பல்வேறு திரைக்கதை ஆசான்களைப் படிக்கலாம். ஸிட்டின் புத்தகத்தில் இல்லாத விஷயமே இல்லை. எக்கச்சக்கமான திரைக்கதை பற்றிய விபரங்களைத் தெளிவாக, ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கற்றுக்கொடுப்பதே ஸிட் ஃபீல்டின் புத்தகம். எனவே அதைப் படித்ததுமே பிற புத்தகங்களில் விளக்கியிருப்பதெல்லாம் எளிதாகப் புரிந்துவிடும். ஆனால் முதன்முறையாக ஸிட்டைப் படிக்காமல் ஸ்னைடருக்குச் சென்றால், ஸ்னைடரின் புத்தகத்தில் இருக்கும் கருத்துகள் ஒருவித ஓவர் கான்ஃபிடன்ஸைக் கொடுத்துவிடும். காரணம் அவரது புத்தகம் சிறியது. அதில் இருக்கும் முக்கியமான விஷயங்களையும் மிகவும் கேஷுவலாக அவர் விளக்கியிருப்பார். இதனால் அவைகள் நிஜத்திலும் எளிதில் பழகிவிடும் என்ற எண்ணம் வந்துவிடும். ஆனால் நிஜத்தில் திரைக்கதை எழுதுவது அவ்வளவு சுலபம் அல்ல. நிஜவாழ்வில் ஒவ்வொரு பக்கமாகத் திரைக்கதை எழுதுவதை ஸிட் ஃபீல்டின் புத்தகமே உள்ளது உள்ளபடி விளக்குகிறது. அதில் உள்ள பிரச்னைகள் எல்லாமே ஸிட் ஃபீல்டால்தான் தெளிவாக, நிதர்சனமாக விளக்கப்படுகின்றன.
ப்ளேக் ஸ்னைடரைப் போன்ற ஒரு ஓவர் கான்ஃபிடன்ஸை ஸிட்டின் புத்தகம் தராது. திரைக்கதையை நோக்கி இன்னும் நம்மை ஒவ்வொரு படியாகக் கூர் செய்துகொள்ள ஸிட்டின் புத்தகமே சிறந்தது. எனவே, ஸிட்டைப் படித்தபின்னர் ப்ளேக் ஸ்னைடர் மற்றும் பிறரைத் தயங்காது படிக்கலாம்.
இனி, இரண்டு புத்தகங்களிலும் இருக்கும் முக்கியமான விபரங்களைக் கவனிக்கலாம்.
1. Inciting Incident = Opening Image + Theme Stated
ஸிட் ஃபீல்டின் இன்ஸைட்டிங் இன்ஸிடெண்ட் என்ற சுவாரஸ்யமான ஓப்பனிங் என்பதுதான் ப்ளேக் ஸ்னைடரால் Opening Image + Theme Stated என்ற விஷயங்களாக இருக்கிறது. திரைக்கதையைத் துவங்குகையில் ஆடியன்ஸை உள்ளே இழுக்கும்விதமான முதல் சில காட்சிகள் என்ற ஸிட்டின் வழிமுறையை ப்ளேக் ஸ்னைடரின் பாணியில் கவனித்தால், திரைக்கதையின் முதல் பக்கத்திலேயே ஓபனிங் இமேஜ் என்ற – படத்தின் திரைக்கதை எப்படிப்பட்டதாக இருக்கப்போகிறது என்பதை விளக்கும் காட்சியாகத் துவங்கவேண்டும் + திரைக்கதையில் சொல்லப்படும் களனைப் பற்றிய விவரிப்புகள் துவங்கிவிடவேண்டும் என்று விரிகின்றன. ஸிட்டின் இன்ஸைட்டிங் இன்ஸிடெண்ட் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று பல உதாரணங்களை நாம் நமது தொடரிலும் புத்தகத்திலும் பார்த்திருக்கிறோம். அதேபோல் ப்ளேக் ஸ்னைடரின் ஓப்பனிங் இமேஜ் + தீம் துவங்குவதைப் பற்றியும் பார்த்தாயிற்று. இருப்பினும் ஒரு சிறிய உதாரணம்.
‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தை எடுத்துக்கொண்டால், அதன் முதல் காட்சியே ஒரு சாலையில் வண்டி ஒன்று சென்றுகொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதுதான் ஓப்பனிங் இமேஜ். முதல் காட்சி. அதைப் பார்த்ததுமே நமது மனதில் அந்தப் படத்தைப் பற்றிய ஒரு எண்ணம் வந்து அமர்ந்துகொள்கிறதுதானே? இது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். சிலர் இதனை ஒரு Road Movie என்று நினைக்கலாம். சிலர் அடிதடி சாகஸம் என்று நினைக்கலாம். ஆனால் அது ஏற்படுத்தும் எண்ணம் எப்படிப்பட்டது என்பதைப் படம் செல்லசெல்ல அறியலாம். படம் முழுதும் கிட்டத்தட்ட ஓரிடத்திலிருந்து இன்னோரிடம் என்றுதான் கதை நகரப்போகிறது. அதை உணர்த்தும் காட்சியாகக்கூட அதனை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
அந்த ஷாட்டுக்குப் பின்னர் உடனடியாக செட்டியாரைச் சென்று பார்க்கிறார்கள் காந்திபாபுவும் அவனது சகாக்களும். மண்ணுளிப் பாம்பின் அத்தியாயம் துவக்கம். செட்டியாரை எப்படியெல்லாம் ஏமாற்றிப் பாம்பை அவரது தலையில் கட்டுகிறார்கள் என்ற முதல் பத்து நிமிடக் காட்சியே திரைக்கதையின் ஒட்டுமொத்தமான தீமின் துவக்கம் – ப்ளேக் ஸ்னைடர் பாணியில்.
இதே காட்சியை ஸிட் ஃபீல்டின் பாணியில் எடுத்துக்கொண்டால், இதுதான் திரைக்கதைக்கு ஒரு சுவாரஸ்யத்தை அளிக்கும் இன்ஸைட்டிங் இன்ஸிடெண்ட். இந்தச் சம்பவத்தைப் பார்த்ததுமே உடனடியாக ஒரு சுவாரஸ்யம் வந்து நமது மனதில் அமர்ந்துவிடுகிறது. இன்னும் நிறைய எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம். கூடவே, காந்திபாபுவைப் பற்றிய அறிமுகமும் நமக்குக் கிடைக்கிறது.
2. Key Incident (Or) Plot Point 1 = Catalyst + Debate + Break in to 2
கீ இன்ஸிடெண்ட் என்பது கதையைத் துவக்கும் காட்சி. அறிமுகங்கள் முடிந்தபின்னர் கதை ஆரம்பிக்கும் தருணத்தில் வருவது. சில சமயங்களில் இது ப்ளாட் பாயிண்ட் 1 ஆகவும் இருக்கலாம். சில திரைக்கதைகளில் கீ இன்ஸிடெண்ட் இல்லாமலும் போகலாம். உதாரணமாக, முதல்வனில் இன்ஸைட்டிங் இன்ஸிடெண்ட் என்பது ஷகலக பேபி பாடலும் அதனைத் தொடர்ந்த கதாபாத்திர அறிமுகங்களும். கீ இன்ஸிடெண்ட் என்பது ட்ராஃபிக் ஜாம் காட்சி. ப்லாட் பாயிண்ட் 1 என்பது முதல்வர் அர்ஜுனிடம் ‘ஒரு நாளு முதல்வரா இருந்து பாரு’ என்று சொல்லும் காட்சி. அதுவே, சதுரங்க வேட்டையில் இன்ஸைட்டிங் இன்ஸிடெண்ட் (மண்ணுளிப் பாம்பு எபிஸோட்) முடிந்ததும் சற்று நேரத்திலேயே ப்லாட் பாயிண்ட் 1 (காந்திபாபு கைதாவது) வந்துவிடுகிறது. அதில் கீ இன்ஸிடெண்ட் இல்லை. கீ இன்ஸிடெண்ட்டின் நோக்கம் கதை துவங்குவது. அதுதான் ஏற்கெனவே மண்ணுளிப் பாம்பிலேயே துவங்கிவிட்டதே? எனவே இதில் அது இல்லை.
Catalyst என்பது, கதையைத் துவக்க உதவும் காட்சி என்பது ப்ளேக் ஸ்னைடர் கருத்து. பல திரைப்படங்களில் சில சம்பவங்களின் மூலம் கதை துவங்குவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அந்த சம்பவங்கள் இயற்கையாக நடக்கும். கதாபாத்திரங்களின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் ஒரு சிறிய சம்பவம்தான் கதையைத் துவக்கி வைக்கும். அதுவரை தன் பாட்டுக்கு ஒருவித வாழ்க்கையை வாழ்ந்துவந்த ஹீரோ/ஹீரோயின், இந்த சம்பவத்தினால் தடாலென்று வேறு ஒரு வாழ்க்கையில் எறியப்படுவார்கள். அதிலிருந்து அவர்களின் வாழ்க்கையில் விறுவிறுப்பும் சோதனைகளும் அறிமுகமாகும். அப்படியே அந்தத் திரைப்படம் படிப்படியாகக் க்ளைமாக்ஸை நோக்கி நகரும்.
இந்தச் சிறிய சம்பவம்தான் கேடலிஸ்ட். இதன்படி முதல்வனில் வரும் ட்ராஃபிக் ஜாம் காட்சிதான் கேடலிஸ்ட் என்பது புரிகிறதுதானே? இதன்பின்னர் வரும் டிபேட் என்பது கதாபாத்திரத்தின் மனக்குழப்பம். கதை துவங்கியபின் வரும் புதிய வாய்ப்பை/சுற்றுப்புறத்தை/உலகத்தை/சூழ்நிலைகளை ஏற்கலாமா வேண்டாமா என்று யோசிக்கும் கட்டம். இதுதான் கதை துவங்கியதும் இயல்பாக சில நிமிடங்கள் நடக்கும் என்பது ப்ளேக் ஸ்னைடர் கருத்து. ட்ராஃபிக் ஜாம் முடிந்ததில் இருந்து பேட்டி வரை வரும் காட்சிகள் இவை. ஆனால் இந்த டிபேட் என்ற குறிப்பான கட்டம் பல தமிழ்ப்படங்களில் இருக்காது. ப்ளேக் ஸ்னைடர் குறிப்பாகப் பக்க எண் கொடுத்து திரைக்கதையைப் பிரித்திருப்பார். அதில் வரும் பிரச்னை இது. இதற்குப் பதில் ஸிட் ஃபீல்டின் இன்ஸைட்டிங் இன்ஸிடெண்ட் – கீ இன்ஸிடெண்ட் – ப்லாட் பாயிண்ட் 1 என்பதுதான் இயல்பான வழிமுறை. இங்கே டிபேட் என்ற – கதாபாத்திரம் குழம்புவது – இல்லை. கதைக்குத் தேவைப்பட்டால் அது இருக்கட்டும். இல்லாவிட்டால் வேண்டாம் என்பதுதான் ஸிட் ஃபீல்டின் வழி.
சுவாரஸ்யமான ஓப்பனிங் – கதை துவங்குவது – முதல் ப்லாட் பாயிண்ட் என்பது நம் கற்பனையையும் கட்டுப்படுத்தாமல் இருக்கிறதுதானே? ஸ்னைடரின் வழிமுறையின்படி பக்க எண்களையும் அதன் உட்பிரிவுகளையும் கையில் வைத்துக்கொண்டு அமர்ந்தால் அது கதைக்குத் தேவையில்லாமல் அவர் சொன்னதற்காகவே அந்த உட்பிரிவுகளை உள்ளே கொண்டுவந்துவைக்கத் தூண்டக்கூடும்.
Break in to 2 என்பது ஸிட் ஃபீல்டின் ப்லாட் பாயிண்ட் 1 தான். அதற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை. ஆனால், ஸிட் ஃபீல்டின் ப்லாட் பாயிண்ட் 1 நடக்க 5-6 பக்கங்கள் தேவை. அது ஒரு காட்சி. ப்ளேக் ஸ்னைடரின் Break in to 2 நடப்பது இருபத்தைந்தாம் பக்கம் என்று அவர் சொல்லியிருக்கிறார். முன்னே பின்னே இருந்தாலும் அது ஒரு பக்க அளவில் நடக்கும் ஒரு சம்பவம்தான். எனவே ப்ளேக் ஸ்னைடரைப் பொறுத்தவரையில் முந்தைய பிரிவான கேடலிஸ்ட் என்பதிலேயே ப்லாட் பாயிண்ட் காட்சி ஆரம்பித்துவிடுகிறது – Break in to 2வில் முடிகிறது என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
பாக்கி இருப்பவற்றை வரும் வாரத்தில் பார்க்கலாம். இந்தக் கட்டுரையில் இருப்பவற்றைத் டெஹ்ளிவாகச் சிலமுறைகள் படித்துக்கொள்வது நல்லது. குழப்பங்கள் இருந்தால் பின்னூட்டங்களில் கேட்கலாம். முடிந்தவரை இவற்றை விவாதிப்போம்.
தொடரலாம்…
Blake Snyder Beat sheet courtesy – http://cockeyedcaravan.blogspot.com/2011/10/great-guru-showdown-part-8-blake-snyder.html
பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்வி கேட்பதற்கு மன்னிக்கவும்
Under the skin என்று ஒரு படம் பார்த்தேன், படத்தை பல விமர்சனங்களில் புகழ்திருந்தார்கல் ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஒருவேளை நீங்கள் பார்திருந்தால் அதை பற்றி ஒரு பதிவு போட்டு விளக்கவும்
நீங்கள் ஒரு ஸ்கிரிப்டை 110 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஒரு பக்கத்துக்கு ஒரு சீன். ஆனால் JUDGEMENT DAY ஸ்கிரிப்டை பார்க்கும்போது அதில் அனைத்து காட்சிகளும் வரிசையாக உள்ளது. அதே சமயம் 110 பக்கங்களில் முடிந்து விடுகிறது. So ஒவ்வொரு காட்சியையும் வரிசையாக எழுதி 110 பக்கங்களுக்குள் முடித்துவிட வேண்டுமா ?