Fade In முதல் Fade Out வரை – 24 : Robert Mckee – 3
இதுவரை எழுதப்பட்ட அத்தியாயங்கள்:
1. முழுத்தொடரையும் காண – Fade in முதல் Fade Out வரை
2. Blake Snyder தொடர்பான அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Blake Snyder
3. Robert Mckee பற்றிய அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Robert Mckee
ராபர்ட் மெக்கீயின் புத்தகத்தைப் பார்க்கத் துவங்கியிருக்கிறோம். சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி இது. தனது புத்தகத்தின் முதல் அத்தியாயமான Introduction என்பதை இங்கே மெக்கீ சொல்லிக்கொண்டிருக்கிறார்.
கதை என்பது முழுமையான அனுபவத்தைத் தரவேண்டியது; குறுக்குவழிகளில் எழுதி முடிக்கக்கூடிய விஷயம் அல்ல அது
திரைக்கதையை எழுத நம்மைத் தூண்டும் அந்தப் புள்ளியில் இருந்து திரைக்கதையின் முடிவுவரை, திரைக்கதை எழுத்தாளர்களும் சரி – நாவலாசிரியர்களும் சரி – ஒரே போன்ற அனுபவத்தைத்தான் கடக்கிறார்கள். திரைக்கதையில் வரிகளுக்கிடையே எக்கச்சக்கமான இடைவெளி இருக்கும். நல்ல திரைக்கதை ஒன்றை எடுத்துப் பார்த்தால், மிகக்குறைந்த வரிகளில்தான் மிகக்கனமான, உணர்வுபூர்வமான காட்சிகளும் உணர்வுகளும் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் ஒரு நாவலில் அப்படி இருக்காது. அதில் ஏராளமான பக்கங்களிலேயேதான் இவையெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் திரைக்கதை எழுதுவது எளிது – முக்கியமில்லாத விஷயம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் அது தவறு. இரண்டுக்கும் ஒரேபோன்ற உழைப்பே தேவைப்படுகிறது. நாவலாசிரியர்கள் எக்கச்சக்கமான பக்கங்கள் எழுதினாலும், திரைக்கதையாசிரியர்கள் தங்களது திரைக்கதையை ஒவ்வொருமுறையும் நன்றாகப் படித்துப் பார்த்து, முடிந்தவரை இரக்கமே இல்லாமல் வரிகளைக் குறைத்து, எத்தனைக்கெத்தனை குறைவான வரிகளில் மிகப்பெரிய உணர்வுகளைச் சொல்லமுடியும் என்றே இறுதிவடிவத்தை வடிவமைக்கிறார்கள். அதுதான் நல்ல திரைக்கதையாசிரியனுக்கு அடையாளம்.
இப்படிப்பட்ட குறைவான வரிகளில் நிறைவான-முழுமையான அனுபவத்தைக் கொடுப்பதே திரைக்கதை. இதனைக் குறுக்குவழிகளில் அடைய இயலாது.
கதை என்பது நிஜத்தை நோக்கிய பயணம்; எழுதும் அனுபவத்தின் ரகசியங்களையோ மர்மங்களையோ ஒளித்து வைப்பது அல்ல
அரிஸ்டாட்டில் தனது ’Poetics’ நூலை எழுதிய காலத்தில் இருந்தே, எழுதும் கலையின் ரகசியங்கள் பலமுறை பலரால் உடைக்கப்பட்டுவிட்டன. இதில் எந்தவிதமான ரகசியங்களும் இப்போது இல்லை. எழுதும் கலை பொதுவுடைமை ஆக்கப்பட்டுப் பலகாலம் ஆகிறது. எனவே, திரைக்கதையில் இடம்பெறும் சம்பவங்களை எப்படியெல்லாம் சுவாரஸ்யப்படுத்தலாம் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். அப்படிப்பட்ட திரைக்கதையை எழுதவேண்டும் என்ற எண்ணம் எளிதாக எல்லாருக்கும் தோன்றலாம். ‘இதில் என்ன கஷ்டம் இருக்கிறது?’ என்பதுதான் திரைக்கதை எழுத அமரும் அனைவரின் முதல் எண்ணமாகவும் இருக்கும். ஆனால், எழுத எழுதத்தான் அது அத்தனைக்கத்தனை கடினமானது என்பது புரியும்.
ஒரு திரைக்கதை எழுத்தாளரின் திரைக்கதை வரிகள், படிப்பவர்களின்/படம் பார்ப்பவர்களின் மனதைத் தொடவில்லை என்றால், அந்த சாதாரணமான வரிகளின் பின்னால் ஒளிந்துகொள்ள அவனால்/அவளால் முடியாது. நாவலில் இது நடக்கலாம். ஒரு இடம் நன்றாக இல்லை என்று அதை எழுதுபவருக்குத் தெரிந்தால், உடனேயே அலங்காரமான வார்த்தைகளை அங்கே போட்டு நிரப்ப அவரால் முடியும். அது திரைக்கதையில் சாத்தியமில்லை. ஏனெனில், படமாக்கப்படும்போது அந்த வார்த்தைகளால் எந்தப் பயனும் இருக்கப்போவது இல்லை. கேமரா, அந்த வார்த்தைகளின் வெற்று அர்த்தத்தை ஒரு நொடியில் புரியவைத்துவிடும். எழுதிய எழுத்தாளரின் ஆடைகளை அவிழ்த்து அவரை அவமானப்படுத்திவிடும். அப்படி ஒரு அனுபவத்தை ஓரிருமுறைகள் அடையும் திரைக்கதை எழுத்தாளர், விரைவில் திரைப்படங்களை விட்டே ஓடவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.
எனவே, எழுத்தின் ஜாலங்களைத் திரைக்கதையில் காட்ட முடியாது. இருந்தாலும், எழுதும் கதைக்கு உண்மையாக இருந்தால் அந்த அனுபவமே திரைக்கதை எழுதுவதன் சுவாரஸ்யத்தை அதனை எழுதுபவருக்குக் காட்டிக்கொடுக்கும். அந்த அதிசய உலகம் அருமையானது. எனவே, திரைக்கதை எழுதுவதில் எந்தவிதமான ரகசியங்களோ மர்மங்களோ இல்லை என்று நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.
கதை என்பது எழுதும் கலையை நன்றாகத் தெரிந்துகொண்டு சிறப்பது; வெளியே மார்க்கெட்டில் எப்படிப்பட்ட கதைகள் எடுபடுகின்றன என்று தெரிந்துகொண்டு அப்படியே நகலெடுத்து எழுதுவது இல்லை
ஹாலிவுட்டைப் பொறுத்தவரை, ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், ஷஷாங்க் ரெடெம்ப்ஷன், அமெரிக்கன் ப்யூட்டி போன்ற அருமையான படங்களும் சரி; ட்வைலைட் ஸாகா, ஜான் கார்ட்டர் போன்ற அரத மொக்கைகளும் சரி – ஒரே போன்ற உழைப்பாலேயே எடுக்கப்படுகின்றன. இரண்டு வகையான படங்களுக்கும் ஒரே திரைக்கதை உழைப்புதான். அவற்றில் இருப்பவர்கள் அனைவரும் தங்களின் இறுதிச்சொட்டு வரையான உழைப்பை நல்கியே அவற்றை எடுக்கின்றனர். ஆனால் பல படங்கள் அங்கே தோல்வியடைகின்றன. எனவே, மார்க்கெட்டில் எப்படிப்பட்ட படங்கள் ஓடுகின்றன என்பது ஹாலிவுட்டில் யாராலும் கணிக்கப்படமுடியாத விஷயம். இதுதான் உலகம் முழுமைக்கும் பொருந்தும்.
எனவே, எப்படிப்பட்ட படங்களை மக்கள் விரும்புகிறார்கள் என்று யோசித்து அப்படிப்பட்ட க்ளிஷே நிரம்பிய சராசரித் திரைக்கதைகளை எழுதாமல், படித்ததும் மனதில் நிற்கும் நல்ல திரைக்கதைகளை எழுதுங்கள். உலகின் எந்தத் திரைப்படத் துறையாக இருந்தாலும், அதில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் இப்படிப்பட்ட நல்ல கதைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எப்போதும் மறக்கவேண்டாம். அவை கிடைக்காததாலேயேதான் அவற்றுக்கு அடுத்த சராசரிக் கதைகள் எடுக்கப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலும் ஆடியன்ஸ் எதை ரசிக்கிறார்கள் என்று யோசித்து உருவாக்கப்பட்ட அரைவேக்காட்டுக் கதைகளே அதிகம். கதைகளுக்கான தட்டுப்பாட்டால்தான் ஹாலிவுட்டில் எப்போதும் அரைகுறைக் கதைகள் எடுக்கப்படுகின்றன. அவற்றை மீறியும் அவ்வப்போது நல்ல படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன என்பது ஒரு நல்ல விஷயம்.
உங்கள் ஊரிலும்/நாட்டிலும் இதேதான் நடக்கிறது. எனவே, கதையை உணர்வுபூர்வமாக, உண்மையாக எப்படி எழுதுவது என்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அதன்பின் அதனைத் திரும்பத்திரும்பச் செதுக்கி அவசரமே இல்லாமல் முழுமையாக்கவேண்டும். ‘தயாரிப்பாளர் கேட்கிறார்; நடிகரின் கால்ஷீட் விரயமாகிறது’ என்பதுபோன்ற அற்பமான காரணங்களுக்காக உங்கள் கதையை முழுமையாக்குவதற்கு முன்னரே கொடுத்தால் உங்கள் கதையும் அரைகுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு மறக்கப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.
கதை என்பது ஆடியன்ஸின் மரியாதையைப் பெறவேண்டும்; அவர்களின் இகழ்ச்சியை அல்ல
திறமைவாய்ந்தவர்கள் மோசமான திரைக்கதை ஒன்றை எழுதினால், அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்கமுடியும். மனதில் இருக்கும் எதுவோ ஒரு ஐடியாவினால் கண்மூடித்தனமாகக் கவரப்பட்டு அதை நிரூபிப்பதற்காக எழுதியே தீருவது; அல்லது ஒருவித உணர்ச்சியால் உந்தப்பட்டு அதை வெளிப்படுத்துவதற்காக எழுதுவது. அதுவே, அவர்கள் அருமையான திரைக்கதை ஒன்றை எழுதினால், அதற்கு எப்போதும் ஒரே காரணம்தான். அவர்களின் மனதின் அடியாழத்திலிருந்து எழும் உணர்வு ஒன்றால் முற்றிலும் தன்னளவில் மாறிப்போய், பிறரும் அதனாலேயே மாற்றம் அடைவார்கள் என்று உறுதியாகப் புரிந்துகொண்டு எழுதுவது (இந்த வார்த்தைகளின் அர்த்தம் மெக்கீயால் இப்படிச் சொல்லப்படுகிறது – They are moved by a desire to touch the audience. ஆனால் சொல்லவந்த விஷயத்தை அது முழுமையாகச் சொல்லவில்லை. எனவே, அவற்றையே நான் இப்படிப் புரிந்துகொண்டு அதை விரிவாக இங்கே எழுதியிருக்கிறேன் – It’s all about transformation and transforming – Rajesh).
எப்போது நாம் திரைப்படத்துக்குச் சென்று அமர்ந்தாலும், பெரும்பாலும் அடுத்து வரப்போவது நமக்குத் தெரிந்துவிடுகிறது. அந்த வகையில், பெரும்பாலும் திரைப்படத்தை விடவும் நாம்தான் புத்திசாலிகள். இதுதான் ஆடியன்ஸைப் புரிந்துகொண்டதாக நினைத்துப் படமெடுப்பவர்களின் பிரச்னை. ஆடியன்ஸை அவர்கள் தங்களது அடிமைகளாகக் கருதுகின்றனர். ‘என்ன எடுத்தாலும் பார்ப்பார்கள்’ என்பதே ஆடியன்ஸைப் பற்றிய இவர்கள் கணிப்பு. அது வெற்றிகரமாகப் பலமுறைகள் பொய்த்தும் விடுகிறது. காரணம், ஒரு மனிதன் அடிமுட்டாளாக இருந்தாலும், பலருடன் சேர்ந்து அவன் திரையரங்கில் அமரும்போது அவனது புரிதல் அதற்கேற்றவாறு உயர்கிறது. இதனால் ஆடியன்ஸை எப்போதும் குறைந்து மதிப்பிடவே கூடாது. நமது திரைக்கதை அவர்களின் மரியாதையைப் பெறவேண்டும். அப்படி ஆகவேண்டும் என்றால் மனதுக்கு உண்மையாக, வெளிப்படையாக எழுதினால்தான் சாத்தியம். மாறாக, அரைகுறையான புரிதலோடு எழுதினால் அவர்கள் அந்தக் கதையை தூசுக்குச் சமமாக நினைத்து இகழ்ந்துவிட்டுப் போவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். இதனால், நமது மனதில் எழும் அந்தத் தீவிரமான உணர்ச்சியால் நாம் எப்படி பாதிக்கப்பட்டு இந்தத் திரைக்கதையை எழுதினோமோ, அப்படிப்பட்ட உணர்வை ஆடியன்ஸின் மனதிலும் எழுப்பவேண்டும். செயற்கையாக அல்ல- உண்மையாக எழுதினால் அது தானாகவே நடக்கும் (இப்படிப்பட்ட அர்த்தத்தைத்தான் மெக்கீ சொல்ல விரும்புகிறார். ஆனால் புத்தகத்தில் அது தெளிவாக வரவில்லை என்பதால், முடிந்தவரை அவரது கருத்தை விரிவாக்கி இங்கே கொடுத்திருக்கிறேன். இன்னும் சில இடங்களிலும் என் கருத்துகள் இடம்பெறும்).
இறுதியாக, கதை என்பது முற்றிலும் அசலானது (Original); அது நகலான, போலியான படைப்பு அல்ல (duplicate)
உலகின் எந்தக் கலைஞனாக இருந்தாலும் சரி, அவனது படைப்புகளைக் கவனித்தாலேயே அது அவனது/அவளது பெயரை உரக்கச் சொல்லிவிடும். அவர்களின் முத்திரை அந்தப் படைப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி இடம்பெறும். வூடி ஆலன், டேவிட் மேமெட், க்வெண்டின் டாரண்டினோ, ஆலிவர் ஸ்டோன், வில்லியம் கோல்ட்மேன், ஸ்பைக் லீ, ஸ்டான்லி க்யுப்ரிக், ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ, இங்க்மார் பெர்க்மேன், ராபர்ட் ஆல்ட்மேன் ஆகியோர்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டால், இவர்களின் கதையை வெறும் மூன்றே பக்கங்களில் எழுதிக்கொடுத்தாலுமே அதைப் படித்ததும் அவர்களை அடையாளம் கண்டுகொண்டுவிடலாம். இதுதான் கலைஞனுக்கும் நகலெடுப்பவனுக்கும் வித்தியாசம். இவர்களின் திரைக்கதைகளில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், இடங்கள், வசனங்கள், வில்லன்கள், நாயகர்கள், நாயகிகள் ஆகிய அனைவருமே தெளிவாக – அதை எழுதியவர்களின் அசலான படைப்புகள். எழுதியவர்களது நோக்கத்தை – அவர்களது தொலைநோக்கை எளிதில் வெளிப்படுத்தும் கருவிகளே அவை.
இவர்களின் படங்களின் கதை, வசனம், பாத்திரங்கள் ஆகியவற்றை முற்றிலும் நீக்கிவிட்டு, இவர்களின் கதைசொல்லல் பாணியையும், சம்பவங்களை இவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதையும் மட்டுமே கவனித்தாலுமே, அவர்களின் vision – கதைசொல்லலின் மூலம் தங்களது கருத்துகளையும் உலகின் மீதான புரிதலையும் வெளிப்படுத்தும் திறமை – நன்றாகத் தெரியும். இவர்களையும், இவர்களைப் போன்றவர்களையும் நமக்குப் பிடிப்பதற்கான காரணம் இதுதான். ஒவ்வொருவருக்கும் ஒரு தெளிவான பார்வை இருக்கிறது. ஒவ்வொருவரும் தனிப்பட்டுத் தெரிபவர்கள். கும்பலில் கரைந்து மறைபவர்கள் அல்ல. ஒவ்வொருவரும் அவர்களது கதைகளையும் சம்பவங்களையும் மற்றொருவர்களிடமிருந்தோ/மற்றவர்களைப் போலவோ உருவாக்குபவர்கள் அல்ல. ஒவ்வொருவரும் அசலான படைப்பாளிகள். இதுதான் ஒரு திரைக்கதை எழுத்தாளரின் அடிப்படையாக இருக்கவேண்டும்.
இனி, என் தனிப்பட்ட கருத்து. நீங்கள் இதுவரை பார்த்த நகல்களை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்களை உங்களால் நினைவு வைத்துக்கொள்ளமுடியுமா? எத்தனை எளிதாக அவர்கள் நமது நினைவில் இருந்து மறைகிறார்கள்? அவர்களை நினைக்கும்போதெல்லாம் எத்தனை அசிங்கமாக அவர்களை நினைக்கிறோம்? எத்தனை முறை அவர்களையெல்லாம் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் எள்ளி நகையாடியிருக்கிறோம்?
நீங்கள் அசலாக ஆகவேண்டுமா அல்லது நகலாக மாறிப்போகவேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்துகொள்ளவேண்டும்.
இத்துடன், ராபர்ட் மெக்கீயின் புத்தகத்தில் Introduction என்ற அத்தியாயம் முடிகிறது. இந்த அத்தியாயத்தின்மூலம், திரைக்கதை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று மெக்கீ தெளிவாக வறையறுக்கிறார். இவைதான் இந்தப் புத்தகம் முழுதுமே அடிக்கடி சொல்லப்படப்போகின்றன. எனவே, இந்தப் புத்தகத்தை நிறுவும் முதல் அத்தியாயமாக இந்த Introduction இருக்கிறது.
வரும் வாரத்தில் இருந்து அவரது புத்தகத்துக்குள் முழுமையாக இறங்குவோம்.
தொடரலாம்.
நீங்கள் அடிக்கடி உதாரணம் காட்டும் ஆரண்யகாண்டம் படத்தை இப்போதுதான் சமீபத்தில் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. I was mesmerized. அதை மிகுந்த எதிர்ப்பார்ப்போடு என் நண்பர்களிடம் காட்டினேன். ஆனால் அவர்கள் என்னை வசைகிரார்கள். ‘மொக்கைப் படம்’ என்கிறார்கள். அவர்களுக்கு ஜில்லாவும் வீரமும்தான் பிடித்திருக்கிறது. இதில் ஒருவன் அந்த படத்தின் பல சீன்கள் ஹாலிவுட்டில் இருந்து திருடப்பட்டவை என்று வேறு சவால் விடுகிறான். நம்ம ஊர்க்காரர்களின் ரசனைதான் சரி இல்லையோ? இதனால்தான் இங்கே எல்லாம் மொக்கைப் படங்களாக வருகின்றதோ? நமக்கெல்லாம் ‘oscar’ கிடைக்கவே கிடைக்காதா?