Fade In முதல் Fade Out வரை – 28 : Robert Mckee – 7
இதுவரை எழுதப்பட்ட அத்தியாயங்கள்:
1. முழுத்தொடரையும் காண – Fade in முதல் Fade Out வரை
2. Blake Snyder தொடர்பான அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Blake Snyder
3. Robert Mckee பற்றிய அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Robert Mckee
Part 2 – The Elements of Story
2 – The Structure Spectrum
The Terminology of Story Design
நமது மனதில் ஒரு கதாபாத்திரம் உருவாகிவிட்டது என்று வைத்துக்கொண்டால், எத்தனை விதமான வெவ்வேறு கதைகளையும் சம்பவங்களையும் அந்தக் கதாபாத்திரம் உருவாக்குகிறது? அந்தக் கதாபாத்திரம் பிறப்பதற்கு முன்பே கூட நமது கதையை நாம் உருவாக்கலாம். அதன்பின் ஒவ்வொரு நாளாக அந்தப் பாத்திரத்தைப் பின்தொடர்ந்து, அது இறந்தபின்னர் கூட நமது கதையை இன்னும் தொடர்ந்து முடிக்கமுடியும் அல்லவா? எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி – அதில் ஆயிரக்கணக்கான நிமிடங்களும் நொடிகளும் நாட்களும் உள்ளன. ஒவ்வொன்றுமே ஒவ்வொருவிதமானவை. பலப்பல அர்த்தங்களினால் உருவானவை.
ஒவ்வொரு கணத்தில் இருந்து ஒரு முடிவிலாத அந்தம் வரை – உடலின் ஒரு செல்லில் இருந்து விண்வெளியின் முடிவில்லாத எல்லைகள் வரை – கதாபாத்திரம் ஒவ்வொன்றுக்குமே ஒவ்வொரு மிகப்பெரிய கதை இருக்கிறது. அந்தக் கதை எண்ணற்ற தருணங்களையும் வாய்ப்புகளையும் நமக்கு அளிக்கிறது. அவற்றில் இருந்து மிகச்சில துளிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, ஒரு வாழ்நாளையே முழுதாக நமக்கு அளிக்கக்கூடிய திறமையே ஒரு கலைஞனின் முத்திரையாக இருக்கிறது.
அந்தக் கதாபாத்திரத்தின் அடியாழத்தில் துவங்கி, அதன் எண்னங்களின் வாயிலாகவே கூட ஒரு முழுக்கதையையும் சொல்லலாம். இல்லையெனில் அந்தக் கதாபாத்திரத்தின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பிறருடன் அந்தக் கதாபாத்திரம் எப்படி வாழ்க்கையை நடத்துகிறது என்றும் சொல்லலாம். இல்லையென்றால் இன்னும் ஒரு சுற்று வெளியே வந்து, படிக்கும் கல்லூரி, பள்ளி, அலுவலகம் ஆகிய இடங்களில் என்னவெல்லாம் நடக்கிறது என்று நம்மால் சொல்லமுடியலாம். இன்னும் பெரிதாக யோசித்தால், சுற்றுப்புறத்தைக் கவனித்து, அங்கே இருக்கும் பிற விஷயங்களோடு (கார், பைக், இருக்கும் இடத்தின் வீதிகள், பிறரை பாதிக்கும் கொடிய வியாதி இத்யாதி) இந்தக் கதாபாத்திரத்தின் வாழ்க்கை எப்படி மோதுகிறது என்பதையும் காண்பிக்கலாம்.
ஆனால், எதை யோசித்தாலும், அவையெல்லாமே இரண்டு மணி நேரங்களுக்குள் அடங்கிவிடும் கதை ஒன்றை உருவாக்குவதில்தான் எல்லாமே இருக்கிறது. இந்தக் கதையிலும்கூட, நாம் சொல்ல நினைத்தவைகளோடு, சொல்லாமல் விட்டவையுமே திறமையாக ஆடியன்ஸுக்குப் போய்ச்சேர வேண்டும்.
ஒரு உதாரணம்: நாம் சமீபத்தில் பார்த்த படம் ஒன்றை நண்பர்களிடம் சொல்ல நேர்ந்தால் எப்படி அந்தக் கதையைச் சொல்கிறோம்? படத்தின் கதையை மட்டுமே சொல்லாமல், அந்தப் பாத்திரத்தின் நிலை, குணம் ஆகிய எல்லாவறையும் சேர்த்துத்தானே சொல்கிறோம்? இவையெல்லாம் படத்தில் காண்பிக்கப்படாமலே போயிருக்கலாம். ‘நாயகன்’ படத்தைப் பற்றி எண்பதுகளில் ஒருவர் இன்னொருவரிடம் சொல்ல நேர்ந்திருந்தால், ‘ஹீரோ சின்னப்பையண்டா.. ஊர்ல இர்ந்து ஓடி பாம்பே போயிடுறான்.. அவன் அப்பாவை கொன்னுட்டானுங்க.. பையன் பாவம்.. யாரும் இல்ல. தனியாவே பாம்பேயை சுத்துறான்.. தைரியமான பையன்.. ஆனா இன்னசண்ட்டு.. யோசிச்சிப் பாரு.. அத்தா பெரிய ஊருல தனியா ஒரு பையன் சுத்துனா எப்புடி இருக்கும்? அத்தனை சின்ன வயசுல அம்மா அப்பா வேற இல்ல பாவம்.. அப்பதான் சில பசங்க இந்தப் பையன பாக்குறானுங்க.. எல்லாரும் சேர்ந்துக்குறானுங்க’ என்று துவங்கி எல்லாவற்றையும் சொல்லியிருப்பார். படத்தில் பையன் வருவது ஒன்றிரண்டு நிமிடங்கள்தான் என்றாலும் அந்தப் பையனின்மீது நமக்கு எழும் பரிதாப உணர்வுதான் இப்படியெல்லாம் நம்மைப் பேச வைக்கிறது.
நமக்குப் பிடித்த படம் ஒன்றைப் பற்றிப் பேசும்போது இந்த ரீதியில்தான் நாம் பேசுவோம். இதில் பல அம்சங்கள் படத்தில் வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்காது. நாமாக அவற்றைப் புரிந்துகொண்டு, அவை நமது மனதில் தைத்தபின்னர் மறக்காமல் அங்கேயே இருந்துகொண்டிருக்கும். அதுதான் அப்படத்தைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம் வெளிவருகிறது. இதுதான் நல்ல படங்களின் அடையாளம். உணர்வுகளை எழுப்புவது. இப்படி எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைப்பற்றிப் பேசவைப்பதாகச் சில தருணங்களைக் காட்டி, அவற்றைப் பார்த்தாலே அந்தப் பாத்திரத்தின் வாழ்க்கை முழுதையும் பார்த்து அனுபவித்த பாதிப்பையும், அக்காட்சிகளின் மூலமாகவே அந்தக் கதாபாத்திரத்தின் எல்லா குணங்களையும் காட்டுவதுதான் நல்ல திரைக்கதை என்பது மெக்கீயின் கருத்து.
இனி, ஒரு திரைக்கதைக்கான பல்வேறு அம்சங்களை ராபர்ட் மெக்கீயின் வாய்மொழியாகக் கவனிக்கலாம்.
Structure
ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் இருந்து திரைக்கதைக்குத் தேவையான விஷயங்களாக எவற்றையெல்லாம் எடுக்கலாம்? சிலர் ‘பல்வேறு பண்புகள்’ எனலாம். சிலர் ‘வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்’ எனலாம். சிலர் ‘கதாபாத்திரத்தின் குணங்கள்’ என்பார்கள். சைன்னும் சிலரோ ‘கதாபாத்திரம் பேசும் வசனங்கள், அவ்வப்போது வந்துசெல்லும் எண்ணங்கள், பிம்பங்கள், உருவங்கள், படிமங்கள்’ என்றெல்லாம் சொல்லக்கூடும். ஆனால், இவைகளில் ஒன்றுகூட தனியாக எடுத்துக்கொள்ளப்படும்போது அந்தக் கதாபாத்திரத்தின் கதையை அப்படியே நமக்குக் காட்டிவிடுவதில்லை. ஒரு சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்குச் சம்பவங்கள் – நிகழ்வுகள் தேவை. இவையெல்லாமுமே இடம்பெறுவதுதான் ஒரு நிகழ்வு. இவைகளில் இல்லாத பலவும்கூட அதில் இருக்கலாம்.
ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்வுகளின் தொகுப்பே கட்டமைப்பு எனப்படும். இந்த நிகழ்வுகளுக்குள் அவசியம் தொடர்புகள் இருக்கவேண்டும். வரிசையான – ஒன்றுக்கொன்று சம்மந்தப்பட்ட சம்பவங்களாக இவை இருந்து, குறிப்பிட்ட சில உணர்வுகளையும், வாழ்க்கையைப் பற்றிய குறிப்பிட்ட கோணத்தையும் நம்முள் எழுப்பவேண்டும்.
சம்பவம் அல்லது நிகழ்வு என்றால் என்ன? மனிதர்களால் நிகழ்த்தப்படுவனதானே?குறிப்பிட்ட இடத்தில், காலத்தில், குறிப்பிட்ட சில மனிதர்களின் கருத்தில் இருக்கும் ஒற்றுமை காரணமாகவோ வேற்றுமமி காரணமாகவோ நிகழ்வனதானே சம்பவங்கள்? உதாரணமாக, எனக்கு அரசியல் பிடிக்காமல் இருக்கலாம். என் பக்கத்து வீட்டுக்காரரோ அரசியல்வாதியாக இருக்கலாம். அவரிடம் நான் சென்று ‘இந்த அரசியல்ல இருக்கானுங்களே… எல்லாமே தடிமாடுங்க’ என்று சொன்னால் என்ன ஆகும்? உடனடி மரணம் அல்லது கால் கை முறிவு அல்லது சில பல திட்டுக்கள் என்று அன்னாரின் மூடுக்குத் தகுந்தவாறு ஏதேனும் கிடைக்கும்தானே? இதுதான் நிகழ்வு. ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் மனம் போன போக்கில் திரைக்கதையில் வந்துவிடக்கூடாது. எல்லா நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கவேண்டும். எப்படி என்றால், இசையில் என்ன நடக்கிறது? ஒவ்வொரு வரியாகக் கம்போஸ் செய்யப்படுகிறதுதானே? அப்படி இவையும் ஒவ்வொன்றாகக் கம்போஸ் செய்யப்படவேண்டும். இவற்றுக்கு முன்னும் பின்னும் இடம்பெறும் சம்பவங்கள் எப்படியெல்லாம் அந்தந்த நிகழ்வோடு தொடர்புடையனவாக உள்ளன என்பது நன்றாக யோசிக்கப்படவேண்டும்.
ஒரு நிகழ்வின் நோக்கத்தை முதலில் அறிவதில்தான் எல்லாமே துவங்குகிறது. இந்த நிகழ்வுகளை நாம் இணைப்பதன் நோக்கம் என்ன? ‘என்னுடைய உணர்வுகளை ஆடியன்ஸூக்குச் சொல்ல விரும்புகிறேன்.. அதுதான் காரணம்’ என்று நாம் சொல்லக்கூடும். ஆனால், நம் உணர்வுகளை ஆடியன்ஸ் ரசிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒருவேளை ‘சில விஷயங்களை சொலல் விரும்புகிறேன்’ என்பதாகக்கூட நமது பதில் இருக்கலாம். ஆனால் அவை ஆடியன்ஸுக்குப் புரியாமல் போய்விடக்கூடிய ஆபத்தும் அதில் உள்ளது. எனவே நிகழ்வுகளை இணைத்தல் என்பது முக்கியமான ஒன்று. நன்றாக யோசித்தே இதைச் செய்யவேண்டும்.
Event
இந்த வார்த்தைக்கு இங்லீஷில் ‘மாற்றம்’ என்பது பொருள். நம் ஜன்னலுக்கு வெளியே சாலை முழுக்க வெயில் அடித்து, ஒரு குட்டித்தூக்கம் போட்டதும் சாலை முழுக்க ஈரமாக இருந்தால், ‘மழை’ என்ற ஒரு மாற்றம் நடந்திருக்கிறது என்று புரிந்துகொள்கிறோம். ஆனால் இதில் அர்த்தம் என்பது இருக்கிறதா? நமக்கு இது ஒரு தற்செயல் நிகழ்வுதானே? கதையில் இப்படிப்பட்ட நிகழ்வு வந்தால் அதில் அவசியம் அர்த்தம் இருக்கவேண்டும். எனவே, நம் கதையில் வரும் சம்பவம், குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு நடப்பதாக இருக்கவேண்டும். அப்போது தானாகவே ‘அர்த்தம்’ என்ற ஒன்று நிகழ்ந்துவிடும். வெறுமனே ஈரமான சாலையைக் காட்டுவதற்குப் பதில் அதில் நடந்துவருபவர்கள் நனைந்துள்ளதாகக் காட்டினால் அதில் அர்த்தம் அதிகம்தானே? அப்படி.
கதையில் வரும் நிகழ்வு என்பது, ஒருசில குணாதிசயங்களின் (values) வாயிலாக, கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நிகழும் அர்த்தமுள்ள மாற்றங்களைக் காட்டுகிறது. இந்த குணாதிசயங்கள் என்பன நல்லது, கெட்டது என்று எதுவாகவும் இருக்கலாம்.
இதேபோல், இந்த குணங்கள் என்பன, மனித வாழ்க்கையில் கிடைக்கும் பலப்பல அனுபவங்களில் இருந்து பெறப்படும் சாரம். இது சந்தோஷம், துக்கம், காதல், பாசம், பரிவு போன்ற எதுவாகவும் இருக்கலாம்.
இப்படிப்பட்ட குணாதிசயங்களின் வாயிலாகக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றங்கள் நிகழ்கையில் அதைப் பார்க்கும் ஆடியன்ஸின் மனங்களும் பாதிக்கப்படுகின்றன. அது அவர்களின் நெஞ்சைத் தொடுகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவமாக அந்தப் படம் மாறுகிறது. இதுதான் இப்படிப்பட்ட சம்பவங்களின் நோக்கம்.
உதாரணமாக, வாழ்வு/சாவு, அன்பு/வெறுப்பு, விடுதலை/அடிமைத்தளை, உண்மை/பொய், வீரம்/பயம், நேர்மை/துரோகம், அறிவு/முட்டாள்தனம், பலம்/பலவீனம், உற்சாகம்/அலுப்பு போன்றவையெல்லாமே குணாதிசயங்கள்தான். மனித வாழ்க்கையில் ஆதியில் இருந்து இன்றுவரை கிடைத்திருக்கும் பல்வேறு குணாதிசயங்கள். இதுபோல் இரட்டை நிலைகளில் இருக்கும் குணங்கள் எல்லாமே எந்த நிமிடத்திலும் முற்றிலும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறிவிடலாம். இவை சில நேரங்களில் அறம் சார்ந்தவையாகவும் (நன்மை/தீமை), சில சமயங்களில் ஒழுக்கம் சார்ந்தவையாகவும் (சரி/தவறு), சில சமயங்களில் எந்தப் பக்கமும் இல்லாமல் வெறும் குணாதிசயங்களாகவும்கூட இருக்கலாம். நம்பிக்கை/நம்பிக்கையிழப்பு என்பது அப்படிப்பட்டதுதான். இதை அறம் சார்ந்ததாகவோ ஒழுக்கம் சார்ந்ததாகவோ மதிப்பிட முடியாதுதானே? இப்படி, எந்தவிதமான குணாதிசயமாகவும் அது இருக்கலாம்.
உங்கள் ஊரில் கடுமையான பஞ்சம் நிலவுவதாக வைத்துக்கொள்வோம். எங்கும் சூடு. வெயில். தரை பாளம் பாளமாக வெடித்துப்போய் இருக்கிறது. மக்களும் மிருகங்களும் செத்துப்போய்க்கொண்டிருக்கின்றன. இது, வாழ்வு/சாவு என்ற குணாதிசயம். இதில் சாவு என்ற நெகட்டிவ் அம்சமே நிறைந்திருக்கிறது. திடீரெனப் பெருமழை ஒன்று பெய்தால் எங்கும் பச்சைப்பசேல் என்று ஆகி, வாழ்வு என்ற குணாதிசயம் தழைக்கும். ஏற்கெனவே இருந்த ‘சாவு’ என்ற அம்சத்துக்கு இது நேர் எதிர்தானே?
ஆனால், இங்கே மழை என்பது தற்செயல். எனவே இது நமது திரைக்கதையில் இடம்பெறத் தகுதியில்லாதது. கதையில் எங்காவது எப்போதாவது தற்செயல் நிகழ்வு இடம்பெறலாம்தான். ஆனால் முக்கியமான திருப்பங்களில் தற்செயல் சம்பவம் என்ற ஒன்று வந்தால் அந்தக் கதை நம்ப முடியாததாகிவிடும். எனவே, Event என்பதற்கு முதலில் நாம் பார்த்த விளக்கத்தை எடுத்துக்கொண்டு அதை இன்னும் கொஞ்சம் சரி செய்யலாம்.
கதையில் வரும் நிகழ்வு என்பது, ஒருசில குணாதிசயங்களின் (values) வாயிலாக, கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நிகழும் அர்த்தமுள்ள மாற்றங்களைக் காட்டுகிறது. இந்த குணாதிசயங்கள் என்பன நல்லது, கெட்டது என்று எதுவாகவும் இருக்கலாம். அதேசமயம், முரண்களின் (conflict) வாயிலாகவே இந்த குணாதிசயங்கள் நடைபெறவேண்டும்.
இதை விளக்கமாகப் பார்க்கலாம். அதே பஞ்சம். பட்டினி. இந்த நேரத்தில், அந்த கிராமத்துக்குள் புதியவன் ஒருவன் வருகிறான். புராண கால ரிஷ்யஸ்ருங்கர் போல, ‘என்னால் மழையை வரவைக்கமுடியும்’ என்று உறுதியாக நம்புகிறான். ஊரின் தலைவரிடம் பேசுகிறான். தலைவருக்கு இவனைப் பிடிக்கவில்லை. ஆனால் இத்தனை வருடம் மழை வராமல் இருக்கும்போது, இவனால் மழையை வரவழைக்க முடிந்துவிட்டால்? ஊரே பிழைத்துக்கொள்ளுமே? இதனால் இவனுக்கு ஒரு வீட்டை ஒதுக்கித்தருகிறார். ஊரில் இருக்கும் மந்திரவாதிக்கு இது பிடிப்பதில்லை. இவனை ஊரைவிட்டே துரத்த சதி செய்கிறான்.ஊர்மக்கள் இவனை வெறுக்கும்படி சில சம்பவங்களை அரங்கேற்றுகிறான். அப்போது அவர்களுக்கு நடுவே இருக்கும் ஒரு பெண் மட்டும் இவனை நம்புகிறாள். இவன்மேள் காதல் வசப்படுகிறாள். ஊரில் நடக்கும் சதிச்செயல்களை இவனிடம் சொல்கிறாள். அவற்றை அவன் முறியடிக்கிறான். இறுதியில், ஊரின் அவநம்பிக்கைக்கு மத்தியில் போராடி வென்று மழையை வரவைக்கிறான். ஊர் தழைக்கிறது. இது, Rainmaker படத்தின் (சற்றே டிங்கரிங் செய்யப்பட்ட) கதைதான்.
இங்கே சொல்லப்பட்டவைகளே முரண்கள். முரண்களின் வாயிலாகத்தான் வாழ்க்கையே நிஜத்திலும் நடக்கிறது. இப்படிப்பட்ட முரண்களே திரைக்கதையிலும் சுவாரஸ்யத்தை வரவழைக்கின்றன. இதைப்பற்றி ஸிட் ஃபீல்டுமே எக்கச்சக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
இப்போது மெக்கீ சொல்லும் ஒரு முக்கியமான அறிவுரை.
தொடரும் . . .
விமர்சனம் நல்லா இருக்கிறது…உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி…
மலர்