Fade In முதல் Fade Out வரை – 29 : Robert Mckee – 8

by Karundhel Rajesh July 1, 2015   Fade in to Fade out

இதுவரை எழுதப்பட்ட அத்தியாயங்கள்:

1. முழுத்தொடரையும் காண – Fade in முதல் Fade Out வரை

2. Blake Snyder தொடர்பான அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Blake Snyder

3. Robert Mckee பற்றிய அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Robert  Mckee


Part 2 – The Elements of Story

2 – The Structure Spectrum

 Scene

தமிழ்த்திரைப்படங்களில் இப்போதும் சரி முன்னரும் சரி, அறுபது சீன்கள் இருந்தால் ஒரு திரைக்கதை ‘தயார். அறுபது’ என்பது தமிழ் சினிமாவின் மேஜிக் நம்பர். ராபர்ட் மெக்கீயோ, மொத்தம் நாற்பதில் இருந்து அறுபது இருந்தால் போதுமானது என்கிறார்.

சீன் என்றால் என்ன?

எந்தக் காட்சியாக இருந்தாலும், அதில் ஒரு சம்பவம் நிகழும். இந்த சம்பவத்துக்குக் கதாபாத்திரங்கள் எதிர்வினை புரிகின்றன என்பது முக்கியம். அந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில், கதாபாத்திரத்தின் நோக்கத்தை முன்னிட்டு ஏதேனும் முரண்களின் மூலம் ஓரளவு முக்கியமான மாற்றங்கள் நடந்தால் அதுதான் சீன்.

இது புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தால், இதற்கு ஒரு உதாரணம் பார்க்கலாம்.

‘காக்காமுட்டை’ படத்தில், சிறுவர்கள் சிம்பு வந்து இறங்கும் இடத்தைப் பார்க்கின்றனர். அது, அவர்கள் முன்னர் விளையாடிக்கழித்த மரம். அதனை அழித்துவிட்டே இப்போது பீட்ஸாக்கடை கட்டப்பட்டுள்ளது. கடையில் வந்து இறங்கும் சிம்பு, உள்ளே சென்று பீட்ஸா சாப்பிடுகிறார். இது ஒரு மிகச்சாதாரணமான சம்பவம். ஆனால் இந்தச் சம்பவத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன?

சிறுவர்களின் மனதில் முதன்முறையாக ஆசை தூண்டப்படுகிறது. (‘பீட்ஸா ஒன்றை எப்படியாவது சாப்பிட்டுவிடவேண்டும்’). இங்கே உள்ள முரண் என்னவென்றால், சிம்புவுக்கு அது மிகவும் சாதாரணம். ஆனால் இந்தச் சிறுவர்களுக்கோ அது அசாதாரணம். அவர்களின் மனதில் நிகழும் மாற்றங்கள் இனிமேல் இந்தப் படத்துக்கு மிகவும் முக்கியம்தானே?

இதுதான் சீன் என்பதற்கு உதாரணம். இங்கே ஸிட் ஃபீல்ட் சொல்லியிருப்பதையும் நினைவில் கொள்க. ஒரு சீனில், ஒன்று – கதாபாத்திரங்களைப் பற்றிய செய்திகள் சொல்லப்படவேண்டும்; அல்லது கதை சற்றேனும் நகரவேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் வெறுமனே ஒரு சீன் வந்தால் அது கதையின் வேகத்தைப் பாதிக்கும். இதை வைத்து ராபர்ட் மெக்கீயைக் கவனிக்கையில், ஒரு காட்சி – அதில் ஒரு முரண்பாடு – அதனால் கதை நகர்வது – என்பது தெளிவாகப் புரிகிறதுதானே?

எந்த சீனை எழுதும்போதும் அந்த சீனில் என்ன வகையான உணர்வுகள் தூண்டப்படுகின்றன? அதில் வரும் முரண் எப்படிப்பட்டது? அதனால் யாரெல்லாம் பாதிக்கப்படுகின்றனர்? இந்த சீனின் முடிவில் பாஸிடிவாகவோ அல்லது நெகடிவாகவோ கதை எப்படி நகர்கிறது ஆகிய கேள்விகள் முக்கியம்.

எந்த சீனை எழுதுவதற்கு முன்னாலும், இதுபோன்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு, அந்த சீனை எழுதி முடித்ததும் இதே கேள்விகளை மறுபடி எழுப்பி, அந்த எழுதப்பட்ட சீன் அப்படி இருக்கிறதா என்று கவனித்தால் போதுமானது. அந்த சீன் நாம் நினைத்தபடி வந்ததா இல்லையா என்று புரிந்துவிடும்.

எந்த சீனிலுமே எதாவது நடக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம். வெறுமனே ‘போனான் வந்தான்’ என்றெல்லாம் சம்பவங்கள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் ஆடியன்ஸ் பொறுமை இழக்க ஆரம்பித்து, அது படமே மொக்கை என்று சொல்வதில் முடியலாம்.

Beat

‘பீட்’ என்பது ஒரு சீனில் இடம்பெறக்கூடிய மிகச்சிறிய reaction. அதாவது, கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் reactionகள்.

உதாரணமாக, ஒரு ரவுடி திடீரென்று கழிவறையை உடைத்துக்கொண்டு உள்ளே வருகிறான். அங்கே அமர்ந்திருக்கும் புலிவெட்டி ஆறுமுகம் கொழந்தையைப் பார்க்கிறான். அப்போது ஒருவருக்கொருவர் பறிமாறிக்கொள்ளும் reactionகளே பீட் எனப்படும். ஆனால் இதுமட்டும் பீட் அல்ல. ஒரு காட்சியில் எப்போதெல்லாம் உணர்வுகள் மாறுகின்றனவோ, எப்போதெல்லாம் வினைகளும் எதிர்வினைகளும் மாறுகின்றனவோ, அதெல்லாமே பீட்தான்.

இன்னொரு உதாரணம்: ஒரு காட்சியில், கணவன் மனைவிக்கிடையே சண்டை என்று வைத்துக்கொள்ளலாம். மனைவி ஹாலில் அமர்ந்து புத்தகம் படிக்கிறாள். உள்ளே இருந்து கணவன் வேகமாக வந்து, ‘என்னோட வண்டி சாவியைப் பார்த்தியா?’. ‘இல்லையே.. எங்க வெச்சீங்களோ அங்கயே பாருங்க’. ‘எல்லாம் எனக்குத் தெரியும்.. பார்த்தியா இல்லையான்னு மட்டும்தான் கேட்டேன்’.. ‘அதான் சொன்னேன்ல.. உங்களுக்கு எதை எங்க வெச்சோம்னே தெரியாது’.. “ஏய்.. நிறுத்துடி’.. ‘முடியாது. உண்மைய சொன்னா கோபம்தான் வரும்’. ‘இப்போ என்ன? ஆமா.. நான் அப்படித்தான்.. எதுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட?’ என்று ஆரம்பித்து இருவரும் அடித்துக்கொள்ளும் அளவு போகிறது. அப்போது திடீரென்று வாசலில் ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு கேட்கிறது.

‘அனைவரும் வீட்டினுள்ளேயே இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறார்கள். வெளியே ஒரு வேற்றுக்கிரக ஜந்து அட்டூழியம் புரிந்துகொண்டிருக்கிறது’. இருவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

இந்தக் காட்சியை எடுத்துக்கொண்டால், மனைவி புத்தகம் படிப்பது ஒரு பீட். கணவன் அங்கே வந்து சாவி பற்றிக் கேட்பது ஒரு பீட். அதன்பின்னர் இருவருக்கும் சண்டை மூள்வது ஒரு பீட். கடைசியாக, வெளியே அறிவிப்பு கேட்பது ஒரு பீட்.

இந்த பீட்களால் திரைக்கதைக்கு என்ன நன்மை? பீட் கீட்டெல்லாம் தெரிந்துகொள்ளாமலேயே திரைக்கதை எழுதமுடியாதா?

அவசியம் முடியும். இருந்தாலும், இவையெல்லாம் என்னென்ன என்று தெரிந்தால் எழுதுவது இன்னும் சுலபமாகிவிடும் என்பதாலேயே இவற்றைப் பார்க்கிறோம்.

Sequence

இதுபோன்ற பீட்களே சீன்களை உருவாக்குகின்றன. சென்ற பீட்களின் உதாரணத்தில் நான்கு பீட்கள் இருப்பதைப் பார்த்தோம். அவை நான்கும் சேர்ந்தால் ஒரு சீன். அதேபோல், இத்தகைய சீன்கள் சேர்ந்து சீக்வென்ஸ்கள் என்பவற்றை உருவாக்குகின்றன.

வரிசையான சீன்களின் தொகுப்பே ஒரு சீக்வென்ஸ். இந்த சீக்வென்ஸினால் உருவாக்கப்படும் தாக்கம், இதற்கு முன்னால் எழுதப்பட்ட தனித்தனி சீன்களை விடவும் பெரியது – முக்கியமானது.

இது ராபர்ட் மெக்கீ சொல்லும் விளக்கம். ஆனால் ஸிட் ஃபீல்டுமே சீக்வென்ஸ் என்பதற்கு ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். சீக்வென்ஸ் என்பதில் பல சீன்கள் அடக்கம். எந்த சீக்வென்ஸைக் கவனித்தாலும், அதில் ஒரு மையப்பொருள் இருக்கும். அந்த மையப்பொருளை ஓரிரு வார்த்தைகளில் அடக்கிவிடலாம். கார் சேஸிங், வங்கிக்கொள்ளை, திருமணம், திருவிழா இப்படி. எந்த சீக்வென்ஸாக இருந்தாலும் அதற்கு ஒரு ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு ஆகியன உண்டு. இதுதான் ஸிட் ஃபீல்டின் விளக்கம்.

உதாரணமாக, ஒரு கார் சேஸிங்கை எடுத்துக்கொள்ளலாம். துவக்கத்தில் ஹீரோ ஒரு இடத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறான் என்று காட்டுகிறோம். அவனது நோக்கம், வில்லன் கடத்திக்கொண்டு வைத்திருக்கும் ஹீரோவின் மகளைக் காப்பாற்றுவது. காரில் வேகமாக சென்றுகொண்டிருக்கும் ஹீரோவை திடீரென்று பலர் துரத்துகிறார்கள். ஹீரோ அவர்களுக்கெல்லம் டிமிக்கி கொடுத்துவிட்டு, வில்லனின் இருப்பிடத்தை அடைகிறான்.

இந்த சீக்வென்ஸின் ஆரம்பம் என்ன? ஹீரோ, தனது மகளைக் காப்பாற்ற முடிவெடுத்துக் காரில் செல்வது. இந்த சீக்வென்ஸின் நடுப்பகுதி, அவனை அடியாட்கள் துரத்துவது. இந்த சீக்வென்ஸின் இறுதி, அவன் எல்லாருக்கும் கடுக்காய் கொடுத்துவிட்டு வில்லனின் இடத்தை அடைவது.

இப்படித்தான் ஒரு சீக்வென்ஸ் எழுதப்படுகிறது. அதேசமயம், ராபர்ட் மெக்கீயின் உதாரணப்படி, இந்த சீக்வென்ஸின் தாக்கம் – அதன் வேகம், விறுவிறுப்பு, உணர்ச்சிகள் ஆகியன – அவசியம் சிறப்பாகத்தான் உள்ளன. இதற்கு முன் வந்த எந்த சீனையும் விட இதில் எக்கச்சக்கமான உணர்வுகள் சொல்லப்படுகின்றன. அவை ஆடியன்ஸின் மனதில் முக்கியமானவையாகவும் பதிகின்றன. மகளைக் காக்கவேண்டும் என்பது பெரிய உணர்வுதானே?

Act

‘ஆக்ட்’ என்பது என்ன என்று ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ புத்தகத்தைப் படித்த நண்பர்களுக்குப் புரியும். திரைக்கதையை மூன்று பாகங்களாக ஸிட் ஃபீல்ட் பிரித்துக்கொண்டார். அவையே ‘ஆக்ட்கள்’. இந்த ஆக்ட் என்பதற்கு ராபர்ட் மெக்கீ சொல்லும் விளக்கம் இதோ:

‘ஆக்ட்’ என்பது பல சீக்வென்ஸ்களின் தொகுப்பு. இந்த சீக்வென்ஸ்கள் ஒன்று சேர்ந்து, அவற்றின் முடிவில் ஒரு குறிப்பிட்ட சீன் மூலம் எதுவோ முக்கியமான நிகழ்வு நடந்து, ஒரு திருப்பம் நிகழ்கிறது. இந்த இறுதி சீனின் முக்கியத்துவம், இதற்கு முன்னர் வந்த எந்த சீன்/சீக்வென்ஸைவிடவும் முக்கியமாகும்.

இதை எளிதில் நினைவு வைக்கவேண்டும் என்றால், திரைப்படத்தின் ஆரம்ப அரை மணி நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆரம்பத்தில்தான் அத்தனை கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதன்முடிவில், கதை துவங்குகிறது. இந்தக் கதை துவங்கும் இடத்தை ஸிட் ஃபீல்ட், முதல் ப்லாட் பாயிண்ட் என்று சொல்வார். இந்த முதம் ப்லாட் பாயிண்ட் வரை ஆரம்பத்தில் இருந்து இருக்கும் எல்லாமே சேர்ந்து, திரைக்கதையின் முதல் பகுதி(ஆக்ட்)யாக மாறுகின்றன. இதேபோல் திரைக்கதையின் இரண்டாம் பகுதி (இதன் முடிவில் ப்லாட் பாயிண்ட் 2 வருகிறது), மற்றும் திரைக்கதையின் மூன்றாவது பகுதி ஆகியவற்றையும் ஆக்ட்கள் என்று சொல்லலாம்.

Story

இதற்கு முன்னர் பார்த்த எல்லாமே சேர்ந்ததுதான் கதை. திரைக்கதையின் பல ஆக்ட்களின் தொகுப்பு. இன்னும் உள்ளே சென்றால், ஆக்ட் என்பது சீக்வென்ஸ்களின் தொகுப்பு. சீக்வென்ஸ் என்பது சீன்களின் தொகுப்பு. சீன் என்பது பீட்களின் தொகுப்பு. இப்படி எல்லாமே சேர்வதுதான் கதை.

இந்தக் கதையின் துவக்கத்தில் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கின்றன என்பதையும், முடிவில் அவை எப்படி மாறியிருக்கின்றன என்பதையும் கவனித்தால், அதுதான் Arc of the Film எனப்படுகிறது. முதலில் இருந்த நிலையில் இருந்து இறுதியில் கதாபாத்திரங்கள் சற்றே தெளிந்து, அனுபவங்கள் பெற்று, வாழ்க்கையைப் புரிந்துகொண்டிருப்பது. இந்த இறுதிக்கட்டத்தின் நிலை, இதற்குமேல் மாற்றப்படாததாக இருக்கவேண்டும். இதுதான் இறுதி என்பதால்.

சீன்களின் முடிவு மாற்றப்படலாம். சீக்வென்ஸ்களின் முடிவுமே மாற்றப்படக்கூடும். அதேபோல் ஒவ்வொரு ஆக்ட்டின் முடிவும் மாற்றப்படலாம். ஆனால் திரைக்கதையின் இறுதியில் வரும் க்ளைமேக்ஸ் எப்போதுமே மாற்றப்படாதது. அதுதான் திரைக்கதையின் முடிவு.

பல ஆக்ட்கள் ஒன்றுசேர்ந்து திரைக்கதையின் க்ளைமேக்ஸில் முடிகின்றன. இந்த க்ளைமேக்ஸ் என்பது முழுமையான, இனிமேல் மாறவே மாறாத சங்கதி.

எனவே, திரைக்கதையின் இப்படிப்பட்ட சிறு சிறு பாகங்கள் ஒன்று சேர்வதே முழுமையான திரைக்கதை என்பது ராபர்ட் மெக்கீயின் கூற்று.

இப்படிப்பட்ட சிறிய பாகங்களான பீட், சீன், சீக்வென்ஸ், ஆக்ட் போன்றவைகளில் நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்; மாற்றலாம். அதில் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. ஆனால் நினைவில் வைக்கவேண்டிய ஒரே அம்சம், இவையெல்லாம் சேர்ந்து ஆடியன்ஸுக்கு ஒரு முழுமையான, சந்தோஷமான அனுபவத்தை அளிக்கவேண்டும்.

அடுத்த அத்தியாயத்தில், ராபர்ட் மெக்கீ சொல்லும் சில முக்கியமான விஷயங்களைக் கவனிப்போம்.

தொடரும் . . .

  Comments

5 Comments

  1. Ji.. short flim script எப்படி எழுதறதுணு டிப்ஸ் கொடுங்க ஜி ….பிளீஸ்

    Reply
  2. Kirty Parthiban

    Sir,I used to read English Screenplay from daily scripts and Some Tamil translated English screenplay Movies..ie Life is Beautiful, Bycycle thieves, Children of Heaven. As i had started to read your blogs, i have come to know lots of things that i wanted to know about Cinema so long. And i bought a book Syd Field’s Screenplay: The Foundations of Screenwriting from Amazon recently. Soon I ll buy one more that Save the Cat!: The Last Book on Screenwriting You’ll Ever Need by Blake Snyder. Really you have inspired me to go in deeper.

    Reply
  3. Kirty Parthiban

    Yesterday, I watched “Inside out” Animation Movie at Chandigarh. I feel that It should be added to the list of good movie ever.
    Please review it.
    Thanks,
    Parthiban.

    Reply
    • Parthiban V

      Sir, Waiting for Bahubali-Tamil, Review.
      Satisfied the expectation.

      Reply
  4. VARADHARAJ

    Anbudaiyeer…Vanakkam ! Thangal Vazhikaattuthal- Intha Thalaimuraiyin KALAI THIRANAI Virivaiya Seiyum. Nantri !

    Reply

Join the conversation