Fade In முதல் Fade Out வரை – 30 : Robert Mckee – 9
இதுவரை எழுதப்பட்ட அத்தியாயங்கள்:
1. முழுத்தொடரையும் காண – Fade in முதல் Fade Out வரை
2. Blake Snyder தொடர்பான அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Blake Snyder
3. Robert Mckee பற்றிய அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Robert Mckee
Part 2 – The Elements of Story
2 – The Structure Spectrum
இதுவரை ராபர்ட் மெக்கீயின் புத்தகத்தில், திரைக்கதையில் உபயோகப்படுத்தப்படும் பல்வேறு விஷயங்களின் விளக்கங்கள் அறிந்துகொண்டோம். இனி, தொடர்ந்து திரைக்கதை நுணுக்கங்களைக் கவனிப்போம்.
The Story Triangle
ஒரு திரைக்கதை என்பது, பல்வேறு சம்பவங்கள் வழியாக ஒரு முடிவை நோக்கிப் பயணிப்பதுதானே? இதில், என்னென்ன சம்பவங்களை உபயோகப்படுத்தலாம் என்பது திரைக்கதை எழுத்தாளரின் சுதந்திரம். அவை எடுபடுகிறதா இல்லையா என்பதே முக்கியம். எனவே, எடுத்துக்கொண்ட கதையின் பல்வேறு இடங்களில் புகுந்து புறப்பட்டு, அந்த நிகழ்வுகள் அளிக்கும் பல்வேறு சம்பவங்களில் எதையெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று திரைக்கதையாசிரியர் முடிவெடுக்கிறாரோ, அந்த ஒட்டுமொத்த வழிமுறையுமே Plot என்று அழைக்கப்படுகிறது. எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், கதை என்ன? அந்தக் கதை ஆரம்பித்து நகரும்போது என்னென்ன சம்பவங்களை உபயோகிக்கலாம்? இந்த சம்பவங்களின் வாயிலாக எப்படியெல்லாம் கதையை முடிவு நோக்கி நகர்த்தலாம்? இதுதான் ப்லாட்.
இந்த ப்லாட் (plot) என்ற வார்த்தைக்கு, கதையமைப்பு, கதையின் நிகழ்வுகளின் தொகுப்பு, கதையைப் பின்னுதல், கதையை யோசித்தல் என்றெல்லாம் பல அர்த்தங்கள் உண்டு. கதை என்ன என்பதை முடிவுசெய்துவிட்டு, ஒவ்வொரு சம்பவமாக எழுதிச்சென்று நிறைவுசெய்தலே ப்லாட் என்பதை மேலே உள்ள விளக்கத்தில் கவனித்தோம். சுருக்கமாக, கதை இதுதான் என்று முடிவுசெய்துகொள்வதே ப்லாட்.
திரைக்கதையின் இத்தகைய ப்லாட் என்பது மொத்தம் மூன்று வகைப்படும். Archplot, Miniplot, Antiplot. இவையெல்லாம் என்னென்ன என்பதை பயந்து ஓடிவிடாமல் எளிமையாகக் கவனிப்போம். உலகம் முழுக்கவே, இதுவரை ஆரம்பத்தில் இருந்து சொல்லப்பட்டுவரும் கதைகள் எல்லாவற்றையும் இந்த மூன்று அமைப்புகளுக்குள் பிரித்துவிடலாம் என்பதே இவற்றின் விசேடம்.
முதலில் Archplot.
இதை எப்படி உச்சரிப்பது? ஆர்க்ப்லாட். இது என்ன என்றால், பண்டையகாலம் தொட்டே நமது கதைகள் எப்படி சொல்லப்பட்டு வந்திருக்கின்றனவோ அதுதான். அதாவது, ‘ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தான்’ என்று துவங்கி, அவனுக்கு என்னென்ன பிரச்னைகள் நிகழ்ந்தன என்று சொலி, முடிவில் அவன் ஜெயித்தானா தோற்றானா என்று முடிப்பது. பல நாவல்கள் இப்படித்தான் இருக்கும். ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பித்து இறுதிப்புள்ளி வரை வரிசையாகப் போவதுதான் ஆர்க்ப்லாட். மஹாபாரதம், ராமாயணம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்பவையெல்லாம் இப்படித் துவங்கி முடிபவையே. இப்படித்தான் இன்றுமே பல படங்கள், நாவல்கள் ஆகியன எழுதப்படுகின்றன. ஆதிகாலத்தில் இருந்தே மனிதன் இப்படிப்பட்ட கதைகளையே குழப்பமில்லாமல் சொல்லிவந்திருக்கிறான். எனவே இதை Classical Design என்றும் சொல்வதுண்டு. க்ளாஸிகல் என்றால், பண்டையகாலம் தொட்டு வந்திருப்பது என்பது பொருள். தூய இலக்கியத்தில் ‘செவ்வியல்’ என்று சொல்லப்படுவதுதான் இது (செவ்வியல் என்ற வார்த்தையைக் கேட்டதும் காத தூரம் ஓடவேண்டும் என்று தோன்றுகிறதா?)
எத்தகைய நாடாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும், இந்த வகையில் ஒரு கதையைச் சொன்னால் அவர்களுக்கு எளிதாகப் புரியும். டைட்டானிக், அவதார், டெர்மினேட்டர் 2, ஜுராஸிக் பார்க் ஆகிய படங்கள் இந்தியாவில் சக்கைப்போடு போட்டன அல்லவா? ஏன்? குழப்பமே இல்லாத கதைசொல்லல்தானே? இந்த எல்லாப்படங்களிலும் முதலில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வது, அடுத்து அவர்களுக்கு நிகழும் பிரச்னைகள், இறுதியில் தெளிவாகக் கதையை முடித்து வைப்பது என்பன இருந்தனதானே? தமிழிலும் வெளிவந்திருக்கும் பெரும்பாலான படங்கள் இந்த வகையைச் சேர்ந்தவையே. வேதாள உலகம் படத்தில் இருந்து இப்போதைய இன்று நேற்று நாளை வரை இந்த வகையில் எளிமையாக எழுதப்படுபவையே அதிகம்.
காலம், இடம், பொருள் போன்றவற்றால் இந்த ஆர்க்ப்லாட் கதைகள் பாதிக்கப்படாது. இன்னுமே கண்ணகியின் கதை எல்லாருக்கும் தெரிந்துதானே உள்ளது? ராமாயணம், மஹாபாரதம் போன்றவை அலுக்கின்றனவா? காரணம், ஹீரோ, பிரச்னை, வில்லனை அழிப்பது என்ற எளிமையான கதைசொல்லல்தானே? இவையோடு சேர்த்து ஆங்காங்கே சுவாரஸ்யமான காட்சிகளும் படிப்பவர்களை உள்ளிழுக்க இவற்றில் இருக்கும்.
இப்போது ஆர்க்ப்லாட் என்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.
ஆர்க்ப்லாட் (அல்லது) க்ளாஸிகல் டிஸைன் என்பது, ஒரு துடிப்பான கதைநாயகனை வைத்து உருவாக்கப்படும் கதை. இந்தக் கதை நாயகன், தனது லட்சியத்தை நிறைவேற்றும் பாதையில் வில்லன் அலல்து தீயசக்திகளின் பிடியில் சிக்கிக்கொண்டு துன்பப்படுவான். அவன் அனுபவிக்கும் பிரச்னைகள், நேர்க்கோட்டில், முரண்பாடில்லாத யதார்த்தமான நிகழ்வுகள் மூலமாக சொல்லப்படும். இந்த இயல்பான, யதார்த்தமான நிகழ்வுகள் என்பன இறுதியில் மாற்றவே முடியாத ஒரு க்ளைமேக்ஸில் சென்று முடியும். இத்தகைய க்ளைமேக்ஸில், கதை நாயகன் மேற்கொண்ட பயணம் வெற்றியா தோல்வியா என்பது தெளிவாக விளக்கப்பட்டுவிடும். இதுதான் ஆர்க்ப்லாட்.
இந்த ஆர்க்ப்லாட் என்பதை மேலே உள்ள படத்தில் காணலாம். முக்கோணத்தின் உச்சியில் இருப்பதே ஆர்க்ப்லாட். அதனுள் ஆர்க்ப்லாட் என்பதன் தன்மைகள் உள்ளன. அவை:
Casuality: கதாபாத்திரங்களுக்கு ஆபத்து நிகழ்தல். அது, சில சமயங்களில் மரணமாகவும் இருக்கலாம்
Closed Ending: திரைக்கதையின் முடிவு தெளிவாக இருக்கும். எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் சொல்லப்பட்டுவிடும். குழப்பமாக முடியாது.
Linear time: நேரான, மாற்றமில்லாத காலம். நேர்க்கோட்டில் செல்லும் கதை. நான் லீனியராக இருக்காது.
External Conflict: கதாபாத்திரங்களுக்குள்ளே நிகழும் முரண்பாடுகள் வெளிப்படையானவை. சண்டைகள், பிரச்னைகள் ஆகியவை அனைவருக்கும் தெரிந்த வகையில், கதாபாத்திரங்களுக்குள் நிகழும். உள்ளுக்குள் நிகழும் மனம் சார்ந்த பிரச்னைகள் இருக்காது.
Single Protagonist: கதையில் ஒரே நாயகன். பல்வேறு நாயகர்கள் இல்லை.
Consistent reality: முரண்பாடில்லாத, நம்பத்தகுந்த யதார்த்தமான நிகழ்வுகள்.
Active Protagonist: கதையின் ஹீரோ, நிகழும் காரியங்களுக்கான எதிர்வினைகள் மட்டுமே புரிந்துகொண்டிருக்காமல், அவனாக/அவளாக முன்வந்து காரியங்கள் செய்தல். துடிப்பாக இருத்தல்.
ஆர்க்ப்லாட்டின் உதாரணங்களாக, தமிழில் வந்த எல்லா மசாலாப்படங்களையும் சொல்லலாம்.
அடுத்ததாக மினிப்லாட் (Miniplot).
ஆர்க்ப்லாட்டின் அம்சங்களையே எடுத்துக்கொண்டு துவங்கும் ஒரு கதையோ திரைக்கதையோ, ஒவ்வொன்றாக அவற்றின் பல்வேறு அம்சங்களைக் குறைத்துக்கொண்டு சுருக்கி, திருத்தி, வெட்டி மாற்றப்பட்டு எழுதப்பட்டால் அதுதான் மினிப்லாட். அதாவது, ஆர்க்ப்லாட்டின் உள்ளே இருக்கும் ஒரு சிறிய subsetதான் மினிப்லாட். இதை ‘மினிமலிஸம்’ என்று சொல்கிறார் மெக்கீ. எளிமையாக இந்த மினிப்லாட்டைப் பார்த்தோம் என்றால், இலக்கியத்தரமான கதைகள், தனக்குள்ளேயே தேடுதலை நிகழ்த்தும் கதைகள், ஒரு மிகப்பெரிய விஷயத்தின் உள்ளே இருக்கும் சின்னஞ்சிறிய அம்சங்களைப் பற்றி நமக்குக் காட்டவிரும்பும் கதைகள் போன்றவையே மினிப்லாட்.
தமிழில் இதற்கு உதாரணங்கள் சொல்லவேண்டும் என்றால், 7ஜி ரெய்ன்போ காலனி, காதல் கொண்டேன் போன்ற படங்களைச் சொல்லலாம். இதில் கதாபாத்திரம், வில்லன்களால் உண்டாகும் வெளிப்புறப் பிரச்னை, முடிவு என்பது இருக்காது. மாறாக, கதாபாத்திரங்களின் மனதுக்குள்ளேயே நிகழும் முரண்பாடுகள்தான் கதைக்கான காரணமாக இருக்கும். கூடவே, இதில் கதாபாத்திரங்கள் எப்போதும் செயல்களைப் புரிந்துகொண்டே இருக்காது. பெரும்பாலும் உள்ளுக்குள் முடங்கிய நிலையில்தான் இருக்கும். ஆனால் அந்த நிலையிலும்கூட அவற்றின் உயிர்வாழ்தல் பிரச்னைகளை நோக்கியே போராடும். அது யாருக்கும் தெரியாது என்பதே இங்கே முரண்.
போலவே, மினிப்லாட் கதைகளில் தெளிவாக முடித்துவைக்கப்படும் முடிவுகள் இருப்பது சந்தேகம். மாறாக, ஆடியன்ஸே தங்களுக்குள் உணரும்படியான ஓப்பன் முடிவுகள்தான் இருக்கும். ‘எல்லாமே நல்லபடியாக முடிந்தது’ என்றெல்லாம் மினிப்லாட்கள் முடியாது. மாறாக, சட்டென்ரு, ஒரு உணர்வு நிலையோடு முடிவதே மினிப்லாட்களின் அடையாளம். ‘சேது’ படத்தின் இறுதியில் என்ன நடந்தது? சேது எங்கே செல்கிறான்? அவனது நிலை என்ன? இதற்கான விடை நமக்குத் தெரிந்ததா? நாமாகவே கற்பனை செய்துகொண்டு புரிந்துகொள்ளும்படியான ஓப்பன் முடிவுதானே சேது? இதெல்லாம் மினிப்லாட் என்பதன்கீழ் வருவன.
மினிப்லாட் என்பது இப்படியாக, மனம், சைக்கலாஜிகல் அம்சங்கள், ஆடியன்ஸின் முடிவுக்கே விடப்படும் க்ளைமேக்ஸ்கள், ஒரே ஹீரோ என்றில்லாமல் பல்வேறு பிரதான கதாபாத்திரங்கள், மனதுக்குள்ளே நிகழும் பிரச்னைகள் என்று வழக்கமான கதை சொல்லும் பாணியில் இருந்து விலகி, சற்றே இலக்கியத்தரமாக, சற்றே உளவியல் ரீதியாக வாழ்க்கையைப் பார்க்கும் வடிவம். சுதந்திரமாக, எந்த ஸ்டுடியோவின் தயாரிப்பாகவும் இல்லாத குறைந்த பட்ஜெட் படங்கள் எல்லாம் இந்த வகையில்தான் வரும்.
மினிப்லாட்டின் குணாதிசயங்கள்:
Open Ending:திரைக்கதையின் முடிவில் சில கேள்விகள் விடையளிக்கப்படாமல் இருக்கும். ஆடியன்ஸே புரிந்துகொண்டு அவர்களுக்குள்ளாகவே முடிவெடுத்துக்கொள்ளும்படியான முடிவுகள்.
Internal Conflict: பிரதான கதாபாத்திரங்களின் உணர்வுகள், புரிதல்கள், மனம் இவை ரீதியான பிரச்னைகளே பெரும்பாலும் இடம்பெறும். தனியாக ஒரு வில்லன் கையில் கத்தியை வைத்துக்கொண்டு இவர்களைத் துரத்தும் வாய்ப்பு குறைவு. அப்படி இருந்தாலும் அதற்கு இவையே காரணமாக இருக்கும்.
Multi-Protagonists: ஒரே பிரதான கதாபாத்திரம் இல்லாமல், பல பிரதான கதாபாத்திரங்கள் இருப்பார்கள்.
Passive Protagonist: பிரதான கதாபாத்திரம் எப்போதும் சுறுசுறுப்பாக, செயல்கள் புரிந்துகொண்டே இருக்கத் தேவையில்லை. தனக்குள்ளேயே முடங்கிய நிலையிலும் அது இருக்கலாம்.
மினிப்லாட்டுக்கு உதாரணங்களாக பாலா, செல்வராகவன், ராம் போன்றவர்களின் படங்களைச் சொல்லலாம். கூடவே வீடு, சந்தியாராகம் அவள் அப்படித்தான் ஆகிய படங்களும் மினிப்லாட்தான்.
மூன்றாவதாகவும் கடைசியாகவும், ஆண்ட்டிப்லாட் (Antiplot).
இது என்ன என்றால், பரம்பரை பரம்பரையாக சொல்லப்படும் கதைசொல்லல்முறையைக் கேள்விகேட்கும் வடிவம். ‘கதையை நேர்க்கோட்டில்தான் சொல்லவேண்டுமா? அதெல்லாம் முடியாது.. என் கதையை இஷ்டத்துக்கு நான்-லீனியராகத்தான் சொல்வேன்’ என்பது ஆண்ட்டிப்லாட். போலவே, ‘என் கதையில் ஹீரோவே இல்லை. வில்லனும் இல்லை. சுவாரஸ்யமான காட்சிகளும் இல்லை. ஆடியன்ஸ் விரும்புவதை என்னால் கொடுக்க முடியாது. நான் எடுப்பதை ஆடியன்ஸ் பார்க்கட்டும்’ என்று சொல்லிவிட்டு The Turin Horse போன்ற படங்களை எடுத்தால் அது ஆண்ட்டிப்லாட். நேர்க்கோட்டில் செல்லும் கதை இதில் இருக்காது. கதையை ஒவ்வொரு சீனாக நகர்த்திச்செல்லும் சம்பவங்கள் இதில் இருக்காது. கண்டபடி, பல காலங்களில் தொடர்பே இல்லாமல் கதை நகரலாம். கதாபாத்திரங்களுக்கு நோக்கமே இல்லாமல் ஜஸ்ட் லைக் தட் நடமாடிக்கொண்டிருக்கலாம். கமர்ஷியல் படங்களுக்கு இருக்கும் எந்த நிர்ப்பந்தங்களும் இல்லாமலும் இருக்கலாம். பக்காவான ஆர்ட் படங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
சுருக்கமாக, எல்லா விதிகளையும் உடைக்கும் திரைக்கதைதான் ஆண்ட்டிப்லாட்.
பின்நவீனத்துவம் போன்ற இலக்கியக் கோட்பாடுகளெல்லாம் இந்த வகையையே சார்ந்தவை. இப்படிப்பட்ட ஒரு வடிவத்தை எழுத, அவசியம் ஆர்க்ப்லாட் மற்றும் மினிப்லாட் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். அதாவது, உலகம் முழுதும் பின்பற்றப்படும் எளிமையான கதைசொல்லல், அதிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு சிறிய subset ஆகிய இரண்டையும் தெரிந்துகொண்டால்தானே அவை எதுவும் இல்லாத ஒரு வடிவத்தில் முயற்சி செய்யமுடியும்?
ஆர்க்ப்லாட், மினிப்லாட் மற்றும் ஆண்ட்டிப்லாட்டுக்கான முக்கியமான வேறுபாடு, உலகெங்கும் எளிதில் புரிந்துகொள்ளப்படும் வடிவம், சற்றே யோசித்துப் புரிந்துகொள்ளப்படும் வடிவம் & ஒரு குறிப்பிட்ட சாராருக்காகவே எடுக்கப்படும் வடிவம் என்று சொல்லப்படலாம்.
உலகம் முழுக்கவே எப்படிப்பட்ட படமாக எடுத்தாலும் அது இந்த மூன்றில் ஏதோ ஒரு வடிவத்தின்கீழ் வந்துவிடும் என்று ராபர்ட் மெக்கீ சொல்வதன் காரணம் இப்போது புரிகிறதுதானே?
தொடரும்…
PS:- The Story Triangle image taken from http://24.media.tumblr.com/tumblr_lj174oBjTv1qg2g55o1_500.jpg
Waiting for next pages of the book.
Thanks.
Sir, I am waiting for your next blog so long.
Sir, I am waiting for your next blog so long.