Fade In முதல் Fade Out வரை – 5

by Karundhel Rajesh May 23, 2014   Fade in to Fade out

இதுவரை எழுதப்பட்ட நான்கு அத்தியாயங்களை இதோ இந்த லிங்க்கில் சென்று படிக்கலாம்.

Fade In முதல் Fade Out வரை – திரைக்கதைத் தொடர்


 

சென்ற வாரம் நான் கொடுத்திருந்த பயிற்சியை உங்களால் முடிக்க முடிந்ததா? அந்தப் பயிற்சியை முடிக்கப் பலமணிநேரங்கள் தேவையில்லை. மிகச்சில நிமிடங்களிலேயே அதனை முடித்துவிடலாம். ப்ளேக் ஸ்னைடர் அவரது Save the Cat புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் பல பயிற்சிகளைக் கொடுத்திருப்பார். அவை கொஞ்சம் கடினமான பயிற்சிகள். ஹாலிவுட்டில் அவை அவசியம் தேவை. ஆனால் நமது தமிழ்ப்படங்களுக்கு அவை தேவை இல்லை. எனவேதான் எளிமையான பயிற்சி ஒன்றைக் கொடுத்திருந்தேன். பயிற்சியை இன்னும் முடிக்கவில்லை என்றால், படிப்பதை நிறுத்திவிட்டு சென்ற அத்தியாயத்துக்குச் சென்று அதன் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் பயிற்சியை அவசியம் முடித்துவிட்டு இங்கே வரவும். காரணம், இந்தத் தொடரில் படிப்பவர்களின் பங்களிப்பும் அவசியம் தேவை. படிப்பவர்களின் பக்கத்தில் சில முயற்சிகள் எடுக்காமல் இதில் சொல்லப்படும் விஷயங்களை ப்ராக்டிகலாகப் புரிந்துகொள்ளமுடியாது. எனவே – சென்ற அத்தியாயப் பயிற்சியை முடிக்காதவர்கள் உடனடியாக அங்கே செல்லவும். பயிற்சியை முடிக்கவும். அதன்பின் இங்கு வரவும்.

இதோ இங்கே க்ளிக் செய்து அந்த அத்தியாயத்தைப் படிக்கலாம். அதன் இறுதியில் பயிற்சி இருக்கிறது.


 

இப்போது, ஒன்லைனை உருவாக்கியபின் நமது திரைக்கதையில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

நம் கையில் ஒரு அழகான ஒன்லைன் இருக்கிறது. அதிலேயே படத்தின் கதை, படத்தின் ஜானர், அந்தக் கதையில் இருக்கும் நகைமுரண் (irony) ஆகியவை வெளிப்பட்டுவிடுகின்றன. அதனைக் கேட்பவர்கள் எல்லாருக்கும் அந்த ஒன்லைன் பிடித்திருக்கிறது. அவசியம் இந்தக் கதை வெற்றிபெறும் என்பது இதனால் நமக்கும் புரிகிறது. ஒன்லைனை வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதுவது எப்படி?

ஒன்லைனை டெவலப் செய்வதன்மூலம்தான் நல்ல திரைக்கதை எழுதமுடியும். ஒன்லைனை டெவலப் செய்வதன் முதல் படி – அந்த ஒன்லைன் யாரைப்பற்றியது என்பதைத் தெளிவாக விளக்கிக்கொள்வது.

எல்லாத் திரைக்கதைகளுமே ஏதோ ஒரு ஜீவராசி/வஸ்துவைப் பற்றியும் (அவர் ஆண், பெண், திருநங்கை, இயந்திர மனிதன், புலி, கரடி, சிங்கம், டைனோஸார், எறும்பு, கிளி, ஓணான் ஆகிய எதுவாகவும் இருக்கலாம். இந்த ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியுமே இங்லீஷில் படங்கள் இருக்கின்றன), அந்த நபருக்கு நிகழும் சம்பவங்களைப் பற்றியுமேதான் இருக்கும். இருக்கவேண்டும். சும்மா தேமே என்று ஏதோ ஒரு மரத்தையோ, வானத்தையோ, அல்லது இதைப்போன்று எதுவுமே நடக்காத விஷயங்களைப் பற்றியோ எப்போதாவது இருந்திருக்கிறதா? (கலைப்படங்களை விட்டுவிடலாம். அவை வேறு வகை). இல்லையல்லவா?

இந்த விஷயத்தைத்தான் நாம் ஏற்கெனவே நமது வலைத்தளத்திலும் தினகரன் வெள்ளிமலரிலும் சிட் ஃபீல்ட் சொன்னதாகப் பார்த்திருக்கிறோம். அவர் இதனை Subject என்ற ஒரே வார்த்தையால் விளக்கியிருப்பார். ’சப்ஜெக்ட்’ என்றால், ஆக்‌ஷன் (action) மற்றும் கேரக்டர் (Character) என்பதன் கலவை.

Action என்பது, கதையில் நிகழக்கூடிய சம்பவங்கள். கதை எதைப்பற்றி என்று விளக்குவது. Character என்பது, கதையின் பிரதான பாத்திரம். கதை யாரைப்பற்றி என்று விளக்குவது.

Action – எதைப்பற்றி ; Character – யாரைப்பற்றி.

இதைப்பற்றி மேலும் விபரமாகப் படிக்க, இதோ சிட் ஃபீல்ட் தொடரின் இந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தைப் படிக்கலாம்.

இப்போது சிட் ஃபீல்டை விட்டுவிட்டு நமது தொடருக்கு வருவோம். சிட் ஃபீல்டின் லிங்க் கொடுத்ததன் காரணம், இந்தக் குறிப்பிட்ட டாபிக் இன்னும் தெளிவாகப் புரியும் என்பதால்தான். சரி. ஏன் நமது ஒன்லைன் எதைப்பற்றி (அல்லது) யாரைப்பற்றி என்பதை நாம் கவனிக்க வேண்டும்? ஒன்லைன் தெளிவாக வந்தபின் ஏன் உட்கார்ந்து திரைக்கதையை ஆரம்பித்துவிடக்கூடாது?

காரணம், இன்னுமே நமது திரைக்கதையில் வரப்போகும் சீன்களை வரிசையாக நாம் உருவாக்கவில்லை என்பதால்தான். சீன் வரிசை இல்லாமல் எழுத அமர்ந்தால் சில பக்கங்கள் தாண்டியபின்னர் மனம் அலைபாய ஆரம்பித்து, திரைக்கதை எதுவோ ஒரு பக்கத்தில் முழுதாக ப்ரேக் போட்டு நின்றுவிடும். ‘திரைக்கதை எழுதுதல்’ என்ற வேலையை நாம் ஆரம்பிக்க இன்னும் எக்கச்சக்க விஷயங்களைத் தாண்டவேண்டும். அதில் ஒன்லைன் முதலாவது. அதன்பின் அடுத்த விஷயம் இப்போது பார்க்க இருப்பது.

எதைப்பற்றி (அல்லது) யாரைப்பற்றி.

எந்தக் கதையாக இருந்தாலும், எந்தச் சம்பவமாக இருந்தாலும் அதில் இடம்பெறும் நபரைப் பொறுத்துதானே அந்தச் சம்பவம் சுவாரஸ்யம் ஆகிறது? நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் உங்களிடம் எதாவது அவர்களுக்கு நடந்த சம்பவத்தையோ அல்லது அவர்களின் நண்பர்களுக்கு நடந்த சம்பவத்தையோ சொல்லும்போது அந்தச் சம்பவம் எப்போது சுவாரஸ்யம் ஆகிறது? குறிப்பிட்ட சம்பவத்தில் வரும் நபர் அபத்தமாகவோ சாமர்த்தியமாகவோ புத்திசாலித்தனமாகவோ விரைவாகவோ மெதுவாகவோ கோபமாகவோ எதாவது சம்பவத்தை செய்யும்போதுதானே? அந்த நபர் அந்த நேரத்தில் என்ன செய்கிறார்? அதை எப்படிச் செய்கிறார்? இதுதான் அந்தச் சம்பவத்தின் சுவாரஸ்யத்தைத் தீர்மானிக்கிறது.

இதேபோல்தான் திரைக்கதையும். அதிலும் சம்பவங்கள் வருகின்றன. ஆசாமிகள் வருகின்றனர். அவர்களில் ஒரு பிரதான கதாபாத்திரம் வருகிறது. அது ஆணாகவோ பெண்ணாகவோ திருநங்கையாகவோ இன்னும் மேலே சொன்ன எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். அதை வைத்து அந்தத் திரைக்கதை எழுதப்பட்டிருந்தால் அதுதான் ஹீரோ. அந்த ஹீரோவுக்கு நிகழும் சம்பவங்கள் – சோதனைகள் – சிக்கல்கள் – எப்படியெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன என்பதே திரைக்கதை. இதெல்லாம் சிட் ஃபீல்ட் தொடரைப் படித்த நண்பர்களுக்கு அவசியம் தெரியும் என்றாலும், அவ்வப்போது ரிபீட் செய்யப்படுவதன் நன்மையையும் சென்ற கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

இதனால், அந்த ஹீரோ என்னும் கதாபாத்திரத்தின் குணம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஹீரோ கோபக்காரனா, ரொமாண்டிக் நபரா, அமைதியானவனா, குறும்புத்தனமானவனா? இத்தகைய குணம் மிகவும் அவசியம். அந்த குணத்தைப் பொறுத்துதான் திரைக்கதையில் முக்கியமான சம்பவங்களூக்கு அந்தக் கதாபாத்திரத்தின் ரியாக்‌ஷன் இருக்கும். அதேபோல், படம் பார்க்கும் ஆடியன்ஸ், ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அந்தக் கதாபாத்திரத்தின் கூடவே இருக்கவேண்டும்.

‘கஜினி’ படத்தில் (மொமெண்ட்டோ காப்பியை விட்டுவிடுவோம்) ஹீரோ சஞ்சய் ராமசாமியை எப்படிப் பலருக்கும் பிடித்தது? அந்தக் கதாபாத்திரம் அப்படி வடிவமைக்கப்பட்டிருந்ததே காரணம். அந்தக் கதாபாத்திரத்துக்கு வலுவான நோக்கம் ஒன்று இருந்தது (காதலியின் கொலைக்குப் பழிவாங்குவது). ஆரம்பத்தில் இருந்து அந்த நோக்கத்தை நோக்கியே அந்தக் கதாபாத்திரம் பயணித்துக்கொண்டிருக்கிறது. சஞ்சய் ராமசாமியின் குணம் என்ன? அமைதியான நபர். நல்லவர். இத்தகைய கதாபாத்திரம், காதலி இறந்தபின் அதற்கு நேர் எதிரான குணத்துக்கு மாறிவிடுகிறது. இருந்தாலும் ஆடியன்ஸுக்கு அந்தப் பாத்திரத்தை இன்னுமே பிடிக்கவே செய்தது. காரணம் சஞ்சய் ராமசாமி பழிவாங்குவதற்கு உறூதியான காரணம் இருந்ததால் ஆடியன்ஸ் சஞ்சய் ராமசாமியைக் கடைசிவரை விரும்பினர். பரிதாபப்பட்டனர்.

இதேதான் ‘ஜெண்டில்மேன்’ அர்ஜுன், ‘அலைபாயுதே’ மாதவன், ‘எங்கேயும் எப்போதும்’ ஜெய், ’வாலி’ அஜீத், ‘வேட்டையாடு விளையாடு’ கமல், ‘காக்க காக்க’ சூர்யா, ’முந்தானை முடிச்சு’ பாக்யராஜ், ‘முள்ளும் மலரும்’ ரஜினி என்று எத்தனையோ கதாபாத்திரங்களை ஆடியன்ஸ் விரும்பக் காரணம். உங்களுக்கு மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள் என்னென்ன என்று யோசித்துப் பாருங்கள். அவற்றை உங்களுக்கு ஏன் பிடித்தது? அந்தப் பாத்திரங்களின் குணங்களை ஓரிரு வரியில் சொல்ல முடியுமா? (கோபக்காரன், நல்லவன், சூது பிடித்தவன் இப்படி)..

எனவே, ஆடியன்ஸுக்கு நமது ஹீரோவைப் பிடிக்கவேண்டும். படம் ஓடும்போது ‘அடப்போங்கய்யா @&*%$!&@’ என்று சொல்லிவிட்டு ஆடியன்ஸ் எழூந்து வெளியே சென்றுவிடக்கூடாது. மாறாகக் கடைசி வரை நம் ஹீரோவோடு அவர்களும் பயணப்படவேண்டும். இப்படிப்பட்ட ஹீரோவை உருவாக்குவதே மிகவும் முக்கியம். அதற்குத்தான் ‘கதை யாரைப்பற்றி?’ என்ற கேள்விக்குத் தெளிவான விடை இருக்கவேண்டும். ஆனால் அதேசமயம், இப்படிப்பட்ட அல்லோரும் விரும்பும் ஹீரோவை மட்டும் உருவாக்கிவிட்டு, அவனுக்கேற்ற சம்பவங்களை உருவாக்காமல் இருந்தால் அது எடுபடாது. ஹீரோவின் குணநலன்கள் சம்பவங்களின் தீவிரத்தோடு நேராகத் தொடர்புடையவை. ஒரு போலீஸின் மண்டையில் துப்பாக்கியை வைத்து ஓங்கி அடித்துவிட்டு ‘துப்பாக்கி வெச்சிருக்கேன்.. சிரிக்குற??’ என்று பேசுவதன்மூலம் அந்தக் கதாபாத்திரத்தின் குணம் எளிதில் புரிந்துவிடுகிறது அல்லவா? எனவே, சென்ற அத்தியாயத்தில் பார்த்த ஒன்லைனில் வரும் சம்பவமும் முக்கியம். அதுதான் அந்தப் படத்தில் ஹீரோவின் வேலை. எனவே திரைக்கதை அந்தச் சம்பவத்தைத்தான் விரிவாகக் கையாளப்போகிறது.

என் கருத்தை pause செய்துவிட்டு ப்ளேக் ஸ்னைடருக்கு வருவோம்.

எந்த ஒன்லைனாக இருந்தாலும் சரி – முதன்முதலில் இப்படிப்பட்ட ஒரு ஐடியா நமது மனதில் தோன்றியபோது அது மிகவும் லேசான ஒரு ஐடியாவாகத்தான் இருக்கும். அதுவும் துண்டுதுண்டாகத்தான் தோன்றியிருக்கும். முதலில் தோன்றும்போதே பக்காவாக இருக்கவே இருக்காது. அதாவது ‘வேலையில்லாத ஹீரோ’ என்பது திடீரென்று தோன்றியிருக்கும். அல்லது ஹீரோவின் குணம் தோன்றியிருக்கும். அல்லது ‘ஊர்லயே பயங்கரமான வில்லன்’ என்று வில்லனின் குணம் தோன்றியிருக்கும். இல்லாவிட்டால் ‘ஹீரோ பஸ்ல போகும்போது ஒரு அடிதடி நடக்குது. டக்குனு அதைத் தடுக்குறான்’ என்று ஒரு சம்பவம் தோன்றும். இப்படிப்பட்ட துண்டுகளை ஒன்றிணைத்துதான் ஒரு திரைக்கதை உருவாகிறது. இந்தத் துண்டுகள் மட்டுமே திரைக்கதை எழுதப் போதுமானவை அல்ல. இப்படிச் சில எண்ணங்கள் தோன்றியபின்னர் உட்கார்ந்து யோசித்தே திரைக்கதை செதுக்கப்படுகிறது.

இப்படித் தோன்றிய எண்ணங்களில் இருந்து ஒரு ஒன்லைனை எப்படி உருவாக்குவது என்று இப்போது நமக்குத் தெரியும். ஆனால் உருவாக்கிய ஒன்லைனை எப்படி இன்னும் பிரமாதமாக ஆக்குவது?

1. ஹீரோ ஆடியன்ஸால் விரும்பப்படவேண்டும்
2. ஹீரோவின் பயணம் பல சிக்கல்களால் நிறைந்திருக்கவேண்டும்
3. ஹீரோவின் லட்சியம், மிக மிக அடிப்படையானதாக (Primal) இருக்கவேண்டும்

இந்த மூன்றுதான் ப்ளேக் ஸ்னைடரால் முக்கியமாகக் கூறப்படுகின்றன. இப்படிப்பட்ட அம்சங்களும் முடிந்தவரை ஒன்லைனில் சேர்க்கப்பட்டால் அந்த ஒன்லைன் மிகவும் பலம் பெறுகிறது.

எப்படி?

சென்ற அத்தியாயத்தில் நாம் கவனித்த ஒன்லைனையே எடுத்துக்கொள்வோம். அப்போதுதான் இது இன்னும் எளிதாக இருக்கும்.

’நான்கு வேலையில்லாத மொக்கைகள் அமைச்சர் பையனைக் கடத்திப் பணம் கேட்கும் நோக்கில் கிட்நாப் செய்யும்போது பையன் பணத்துடன் தப்பித்து, இந்த நால்வரையும் உலகின் நம்பர் ஒன் சைக்கோ போலீஸ் வெறித்தனமாகத் துரத்தினால் என்ன ஆகும்?’

இதில் உள்ள சில வார்த்தைகளைக் கவனியுங்கள். ‘மொக்கை’, ‘வேலையில்லாத’, உலகின் நம்பர் ஒன் சைக்கோ’, ‘வெறித்தனமாக’ போன்ற வார்த்தைகள். இவை எப்படிப்பட்ட எஃபக்ட்களைக் கொடுக்கின்றன? இந்த வார்த்தைகள் இல்லாமல் இந்த ஒன்லைனை எழுதினால் அது இப்படி இருக்கும்.

நான்கு ஆட்கள் அமைச்சர் பையனைக் கடத்திப் பணம் கேட்கும் நோக்கில் கிட்நாப் செய்யும்போது பையன் பணத்துடன் தப்பித்து, இந்த நால்வரையும் போலீஸ் துரத்தினால் என்ன ஆகும்?’

எப்படி இருக்கிறது? எந்த ஒன்லைன் அட்டகாசமாகவும் குறும்புத்தனமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது?

நாம் மேலே பார்த்த மூன்றுமே இந்த ஒன்லைனில் இருக்கின்றன. எப்படி என்று பார்ப்போம்.

1. ஹீரோவை மக்கள் விரும்பவேண்டும் – ’வேலையில்லாத மொக்கைகள்’ என்னும்போதே அவர்களைப் பற்றிய குணங்கள் படிப்பவர்களுக்கு ஓரளவு தெரிகின்றன. உடனடியாக ‘தாடி’, ‘அழுக்கு உடை’, ‘ரூம்’, பணத்துக்கு சிங்கியடித்தல்’ போன்ற விஷயங்களை மூளை தானாக நமது மனதில் உருவாக்குகிறது. இத்தோடு சேர்ந்து அதே ஒன்லைனில் ’பணத்துக்காக அமைச்சர் பையனைக் கடத்துகிறார்கள்’ என்பதும் கன்வே ஆகிறது. அமைச்சர் பையன் தப்பித்துவிட்டான் என்ற செய்தியும் இருக்கிறது. கூடவே இவர்களை உலகின் நம்பர் ஒன் சைக்கோ போலீஸ் துரத்துகிறது என்னும் செய்தியும் இருக்கிறது. இதனால் இவர்கள்மேல் பரிதாப உணர்ச்சி வருகிறது. ‘சைக்கோ போலீஸ்’ என்றதும் அந்தப் போலீஸைப் பற்றியும் மனதில் ஒரு பிம்பம் தன்னிச்சையாக உருவாகிறது. இதுதான் முதல் பாயிண்ட். ஒன்லைனில் நாம் சேர்க்கும் adjectives – உரிச்சொல்கள் (அதாவது ‘சூப்பர்’, அட்டகாசமான’, ‘படுமொக்கையான’ போன்ற – ஒரு விஷயத்தை ஏற்றவோ இறக்கவோ பயன்படுத்தப்படும் சொற்கள்) கச்சிதமாக அதைப் படிப்பவர்களின் மனதில் அந்தக் கதாபாத்திரங்களைப் பற்றிய பிம்பங்களை உருவாக்கவேண்டும். இந்தப் பிம்பங்கள் தன்னிச்சையாகவே அவர்கள் அந்தக் கதாபாத்திரங்களை ஓரளவு புரிந்துகொள்ளவைத்துவிடும். அது நமக்கு நல்லது. நமது ஒன்லைன் எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும்.

2. ஹீரோவின் பயணம் பல சிக்கல்களால் நிறைந்திருப்பது – இந்த ஒன்லைனில் சென்ற பேராவில் நாம் பார்த்த விஷயங்கள் ஹீரோக்களின் பயணங்கள் சிக்கலாக இருப்பதைத்தானே உணர்த்துகின்றன? கடத்தலில் சொதப்பி அதனால் சைக்கோ போலீஸ் துரத்த இவர்கள் ஓடுகிறார்கள் என்பது சிக்கலான பயணம்தானே? ’பயணம்’ என்றதும் ஆட்டோக்ராஃப் சேரன் போல ஹீரோ நிஜமாகவே ஊர் ஊராகப் பயணிக்கவேண்டும் என்று எண்ணக்கூடாது. பயணம் என்பது ஹீரோ அடைய நினைக்கும் லட்சியம் நடக்கிறதா இல்லையா என்பதுதான்.

3. ஹீரோவின் லட்சியம் மிக அடிப்படையானதாக (primal) இருப்பது – வேலையில்லாமல் சுற்றும் மொக்கைகள், கடத்தலின் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது எதனை உணர்த்துகிறது? இதன்மூலம் வரும் பணத்தில் வசதியாக வழ்வார்கள் என்பதுதானே? நல்ல வாழ்க்கை தேவை. Primal என்பது இதுபோன்ற அடிப்படையான உணர்ச்சிகள்தான். உயிர்வாழ்தல், காதல், காமம், பொறாமை, பசி போன்றவையெல்லாம் அடிப்படை உணர்ச்சிகள். நமது கதையில் இப்படிப்பட்ட அடிப்படை உணர்ச்சிகள் வரவேண்டும். உதாரணமாக, ஹீரோ வில்லன் விரோதம் என்றால், சும்மா ஒரு மொக்கையான சம்பவமாக அது இல்லாமல், மிக உறுதியான காரணமாக (ஹீரோ வில்லனால் தனது பெற்றோரை இழந்திருக்கிறான்) இருக்கவேண்டும். அடிப்படையான ஒரு உணர்ச்சி நமது கதையில் இருக்கவேண்டும். பல படங்களில் ஹீரோ பாத்திரம் மெல்ல மெல்ல ஒரு மாறுதலுக்கு உட்படும். இந்த மாறுதல் எதை நோக்கிப் போகிறது என்று கவனித்தால், எதாவது ஒரு அடிப்படை உணர்ச்சியாகத்தான் அது இருக்கும். காதலில் வெல்வது, மனிதனாக மாறுவது போன்றவை. இந்த அடிப்படை உணர்ச்சிகள், படம் பார்ப்பவர்களின் வாழ்விலும் நடந்திருக்கும். அவைதான் அவர்களை அந்தப் படத்தை விரும்பவைக்கும்.

மேலே சொல்லப்பட்ட மூன்று பாயிண்ட்களும் இந்த ஒன்லைனால் நிறைவேறுகின்றன அல்லவா?


 

பயிற்சி #2

இப்போது அடுத்த பயிற்சி. சென்ற வாரம் கொடுத்த பயிற்சியை முடித்திருப்பீர்கள். உங்கள் ஒன்லைனை உருவாக்கியிருப்பீர்கள். இப்போது அந்த ஒன்லைனில் இப்படிப்பட்ட adjectives (பில்டப் வார்த்தைகள்) இருக்கின்றனவா என்று கவனியுங்கள். இல்லை என்றால் அவைகளை உருவாக்குங்கள். அவற்றின்மூலம் கதாபாத்திரங்களின் குணங்கள் எளிதாகப் புரியவேண்டும். கூடவே அந்த ஒன்லைனில் ஹீரோ/ஹீரோக்களின் பயணம் விளக்கப்பட்டிருக்கிறதா? அந்தப் பயணம் சிக்கலாக இருக்கிறதா? அந்த ஒன்லைனைப் படித்தால் அதில் ஏதாவது அடிப்படையான உணர்ச்சி பிரதிபலிக்கிறதா?

இந்த விஷயங்களைக் கவனியுங்கள்.

எடுத்ததுமே இது வந்துவிடாது. பல வார்த்தைகளைப் போட்டு மாற்றிப் பார்த்தால்தான் கச்சிதமான ஃபீலிங் செட்டாகும். அப்படி செட்டானால்தான் நமது ஒன்லைன் முழுமை அடைந்திருக்கிறது என்பது அர்த்தம். இது எல்லாமே ஏன் என்றால், நமது ஒன்லைனைக் கேட்பவர்கள்/படிப்பவர்கள் மனதில் நன்றாகப் பதிந்து அவர்கள் இதனை விரும்பவேண்டும் என்பதற்காகத்தான்.

அடுத்த வாரம், இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களைக் கவனிப்போம்.

தொடரும்…

  Comments

1 Comment;

  1. Intha vaara episode a takkunu muduchitinga….

    Reply

Join the conversation