Fade In முதல் Fade Out வரை – 6
இதுவரை வந்த அத்தியாயங்களைப் படிக்காமல் புதிதாக இந்த அத்தியாயத்தைப் படிப்பவர்களா நீங்கள்? இதோ சென்ற அத்தியாயங்களை இங்கே படிக்கலாம். பொறுமையாகப் படித்துவிட்டு இங்கே வரவும்.
Fade In முதல் Fade Out வரை – திரைக்கதைத் தொடர்
இத்தனை அத்தியாயங்களிலும் ஒன்லைனையேதான் பார்த்துவருகிறோம். காரணம், அதுதான் ஒரு திரைக்கதை உருவாவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஒன்லைன் கச்சிதமாக உருவானால்தான் அதைத்தொடர்ந்து திரைக்கதையும் உருவாகும். ஒருசிலர் இப்படி இல்லாமல் நேராகவே திரைக்கதையை உருவாக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படிப்பட்ட ஸ்டெப்கள்தான் படிப்படியாக நல்ல திரைக்கதையை உருவாக்க உதவும் என்பதால் இப்படி வரிசையாகப் பார்த்து வருகிறோம்.
ரைட்.
தமிழில் திரைப்படங்கள் வந்த காலத்திலிருந்து கவனித்தால், சில கதைகள் ஒரேபோன்று இருப்பதைக் கவனித்திருக்கலாம். உதாரணமாக சில கதைகளை கவனிப்போம். தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் M.K தியாகராஜ பாகவதரில் இருந்து தொடங்கலாம். தியாகராஜ பாகவதரைத் தமிழின் பிரபல நடிகராக மாற்றிய படம் – சிந்தாமணி (1937). இதன் கதையை கவனித்தால், ’ஒரு கடவுள் பக்தர், பெண் பித்துப் பிடித்து அந்தப் பெண்ணின் பின்னால் அலையும்போது சோதனைகள் ஏற்படுதல்; பின்னர் கடவுள் இந்த நபருக்கு அந்தச் சோதனைகள் மூலம் தக்க பாடம் புகட்டுதல்; அதன்பின் அவர் கடவுள் பக்தராகி ஞாநியாக ஆகிவிடுதல்’ என்பதுதான். அக்காலத்தில் இந்த வேடத்துக்கு பாகவதரை விட்டால் யாருமில்லை. இதே கதையில் ‘பெண் பித்து’ என்பதைக் காதல் என்று மாற்றி, சோதனைகளின்போது கடவுள் கைகொடுக்காமல் அந்த நபர் இறந்துபோவது என்று மாற்றினால், பாகவதரின் அடுத்த சூப்பர்ஹிட்டான ‘அம்பிகாபதி’ (1937) ரெடி. இந்த இரண்டு படங்கள்தான் பாகவதரைத் தமிழகத்தின் சூப்பர்ஸ்டாராக்கிய முதல் படங்கள்.
பாகவதரின் அடுத்த படமாகிய ’திருநீலகண்டர்’ என்பது நாம் பார்த்த முதல்வகைக் கதை. பக்தன், சோதனை, கடவுள் அருள் என்ற டெம்ப்ளேட். அதற்கு அடுத்த படமாகிய அசோக்குமாரும் அச்சுப்பிசகாமல் இதே கதை. இந்தக் கதையில் கடவுள் மட்டும் மாறுவார் (புத்தர்). இதற்கடுத்த படமாகிய ‘சிவகவி’ – டிட்டோ இதே கதை. அதன் பின வந்த ‘ஹரிதாஸ்’ படமுமே அப்படியே இதே கதையைக் கொண்டிருந்தது. இந்தக் கதைகளில் ஆங்காங்கே சில கதாபாத்திரங்கள் மட்டும் மாறுவார்கள். அதேபோல் தியாகராஜ பாகவதரின் கதாபாத்திரமும் ஒரு படத்தில் நல்லவன், இன்னொரு படத்தில் அப்பாவி, இன்னொரு படத்தில் மைனர் என்று மாறும். கதாநாயகிகள் டி.ஆர். ராஜகுமாரி, கண்ணாம்பா, N.C வசந்தகோகிலம், T.A மதுரம், பானுமதி என்று மாறுவார்கள். அதேபோல், அவரது ஒவ்வொரு படத்திலும் பாடல்கள் அட்டகாசமாக இருக்கும். தியாகராஜ பாகவதரே அவைகளை அவரது பிரமாதமான குரலில் பாடுவார். இதுதான் பாகவதரின் சக்ஸஸ் ஃபார்முலா. (பாகவதரின் பாடல்களை இப்போதும் ரசித்துக் கேட்கலாம். எனது இசைத்தட்டு நூலக நாட்களில் இருந்தே அவரது பாடல்களைப் பலமுறை கேட்டிருக்கிறேன். சலிக்கவே சலிக்காது. அவரது குரல் அப்படிப்பட்டது).
அடுத்து எம்.ஜி.ஆரை எடுத்துக்கொள்ளலாம். 1936ல் ’சதி லீலாவதி’யில் அறிமுகமாகி (எம்.ஜி.ஆருகு வயது 19), 1949ல் பி.யூ. சின்னப்பாவின் ‘ரத்னகுமார்’ திரைப்படம் வரை (32 வயது வரை) குணச்சித்திர வேடங்களிலேயே நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி ராமச்சந்திரன், 1950ல் வெளியான ’மந்திரிகுமாரி’யில்தான் பரவலான கவனத்தைப் பெற்றார். அதுவரை தியாகராஜ பாகவதர், சின்னப்பா போன்றவர்களின் நிழலிலேயேதான் அவரால் இருக்க முடிந்தது. 1950ல் அந்தக் காலகட்டம் முடிந்து, அடுத்த தலைமுறை துவங்கியபோது எம்.ஜி.ஆரின் சகாப்தமும் துவங்கியது. இதன்பின் வரிசையாக ’மருதநாட்டு இளவரசி’, ‘மர்மயோகி’, ‘சர்வாதிகாரி’ என்று சரித்திரப் படங்கள். பின்னர் ‘அந்தமான் கைதி’, ‘என் தங்கை’ என்று சில சமூகப்படங்கள், பின்னர் மறுபடியும் எக்கச்சக்கமான சரித்திரப் படங்கள் (1954ல் இருந்து 1963 வரை ஏராளமான சரித்திரப் படங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார்), பின்னர்தான் எம்.ஜி.ஆரின் சூப்பர்ஹிட் சமூகப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகின.
இந்தப் படங்கள் எல்லாவற்றிலும் ஒரேபோன்ற கதைதான் இருக்கும் என்பது எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்தவர்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். ஏழைகள், தாய், தங்கை, தொழிலாளிகள் ஆகியவர்களின் ஆதரவாளராக, பண்ணையார்கள், ஜமீந்தார்கள், தொழிலதிபர்கள், கடத்தல்காரர்கள் ஆகியவர்களின் எதிரியாக, அழகிய பெண்களின் காதலனாக, சில சண்டைக்காட்சிகள் மற்றும் புரட்சிப் பாடல்கள் வழியாக, கூடவே வரும் நகைச்சுவை நடிகர்களுடன் அவ்வப்போது காமெடியாகப் பேசி நடிக்கும் ஃபார்முலா எம்.ஜி.ஆரின் டெம்ப்ளேட். அக்காலத்தின் அசைக்கமுடியாத கதையமைப்பு இது. ’எம்.ஜி.ஆர்’ என்றதும் தோன்றும் ஏழைப்பங்காளன் இமேஜ்தான் அவரது பெரும்பாலான படங்களின் டெம்ப்ளேட்.
இதற்கு நேர் ஆப்போஸிட்டாக இருந்தது சிவாஜியின் டெம்ப்ளேட். கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் பிரபலமாகிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே ‘பராசக்தி’ (1952) மூலம் அறிமுகமாகி, சரமாரியாக எக்கச்சக்கமான படங்களில் நடித்துத் தள்ளியவர் சிவாஜி. அவரது ஆரம்பகாலப் படங்கள் ஆக்ஷன் படங்களே. அறிமுகமான புதிதிலேயே வில்லனாகவும் (’திரும்பிப்பார்’) நடித்தவர். பின்னர் ‘மனோஹரா’ வெளிவந்தது. உடனேயே மறுபடியும் ‘அந்தநாள்’ படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம். சில நகைச்சுவைப் படங்களிலும் நடித்திருக்கிறார் (’கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’, ’சபாஷ் மீனா’). ஆரம்பச் சில வருடங்கள் எம்.ஜி.ஆரைப் போலவே இவருக்கும் தனிப்பாணி அமையாமல், நகைச்சுவை, ஆக்ஷன், சமூகப்படங்கள், சரித்திரப் படங்கள், வில்லன் என்று கலந்துகட்டி அடித்து, 1959ல் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில்தான் இவரது தனிப்பாணி இவருக்கு அமைந்தது என்பது என் கருத்து. அதன்பின் வரிசையாக சிவாஜியின் நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரங்கள் அமைந்தன.
சிவாஜியின் முத்திரைக் கதாபாத்திரங்கள், பல சோதனைகளை சந்திப்பார்கள். வாழ்க்கையின் பல பாடங்கள் இவர்களுக்குக் கிடைக்கும். நாட்டுக்காகவோ, விடுதலைக்காகவோ, நண்பனுக்காகவோ தியாகம் செய்வார்கள்/உயிரை விடுவார்கள். மகளை, இழந்த காதலியை நினைத்து ஏங்குவார்கள். இவரது பாத்திரங்கள் பெரும்பாலும் தியாகிகளாகவோ, பல சோதனைகளைத் தாங்குபவர்களாகவோ இருப்பது வழக்கம். இடையிடையே ஒரு நகைச்சுவைப் படம், ஒரு சரித்திரப் படம், ஒரு ஆக்ஷன் படம் என்று அவ்வப்போது வெளிவரும். ’சிவாஜி’ என்றதும் நம் மனதில் என்ன தோன்றுகிறது? இப்படிப்பட்ட தியாக சிகரமான பாத்திரங்கள்தானே?
இந்தக் காலகட்டத்தில் ஜெமினி கணேசனும் மிகவும் பிரபலம். இவரது படங்கள் ஜாலியாக இருப்பது வழக்கம். ‘கல்யாணப் பரிசு’ (இறுதியில் சோகம்), ‘தேனிலவு’, ’மிஸ்ஸியம்மா’, ‘மாயாபஜார்’ போன்றவை இவரது ஆரம்பகால ஹிட்கள். ’மிஸ்ஸியம்மா’ இன்றுமே மிகவும் ஜாலியான ரொமாண்டிக் படம். அக்காலத்தில் படு வித்தியாசமான கதையாக இருக்கும். இதன்பின்னர் ஜிமினிக்கு அவரது ரொமாண்டிக் ஃபார்முலா அமைந்தது. இடையிடையே சரித்திர ஆக்ஷன்கள் (’வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்த்திபன் கனவு’, ‘கொஞ்சும் சலங்கை’) நடித்திருந்தாலும், பெரும்பாலும் ஜெமினி கணேசனின் படங்கள் பார்த்தவர்களுக்கு உடனடியாக நினைவு வருவது அவரது ரொமாண்டிக் கலந்த ஜாலியான நடிப்புதான்.
இதற்கு அடுத்த தலைமுறையை எடுத்துக்கொண்டால், மேலோட்டமாகவே பார்த்தால்கூட, எம்.ஜி.ஆரை அப்படியே ரஜினிக்குப் பொருத்தலாம். எந்த எம்.ஜி.ஆர் படத்திலும் கச்சிதமாகப் பொருந்தி நடிக்க ரஜினியால் முடியும். அதேபோல் எந்த ரஜினி படத்திலும் பிரமாதமாகப் பொருந்த எம்.ஜி.ஆரால் முடியும். அதுவேதான் சிவாஜி கணேசனுக்கும் கமல்ஹாஸனுக்கும் பொருந்தும். இந்த இருவரும் மற்றவரின் எந்தப் படத்திலும் பொருந்திவிடுவார்கள். அப்படியென்றால் ஜெமினி கணேசன்? அவருக்குத்தான் மறுபிறவி போலவே கார்த்திக் இருக்கிறாரே? கார்த்திக்கின் எந்தப் படத்திலும் தூள் பறத்த ஜெமினியால் முடியும். ஜெமினியின் படங்களிலும் கார்த்திக் அசால்ட்டாக நடித்துப் பேர் வாங்கிவிடுவார்.
உலகத்தில் எந்த நாட்டின் சினிமாக்களை எடுத்துக்கொண்டாலும் இதுதான் வழக்கம். ஒவ்வொரு தலைமுறையிலும் இருக்கும் எந்த நடிகரையும், அவருக்கு முந்தைய தலைமுறையில் இருந்த ஒரு நடிகருடன் பொருத்திப் பார்க்க முடியும். ஹிந்தியை எடுத்துக்கொண்டால் தர்மேந்திராவுக்கும் சல்மான் கானுக்கும் நூறு மடங்கு பொருந்திப் போவதைக் காணலாம். ராஜ் கபூர் – ஷா ருக் கான், திலீப் குமார் – அமீர்கான், தேவ் ஆனந்த் – அனில் கபூர் என்று இந்தப் பட்டியல் போகும். மிகச்சில விதிவிலக்குகளாக அமிதாப் பச்சன் போன்றவர்கள் இருந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் அமிதாப்புடன் பொருத்திப் பார்ப்பதற்கு வேறு ஒரு ஹீரோ தோன்றலாம்.
இதுவேதான் ஹீரோயின்களுக்கும் பொருந்தும். கண்ணாம்பா – சுஜாதா/கமலா காமேஷ், டி.ஆர். ராஜகுமாரி – சில்க் ஸ்மிதா, சரோஜாதேவி – அமலா/குஷ்பு/சிம்ரன்/சமந்தா, பத்மினி – அம்பிகா/ராதா/ஷோபனா, தேவிகா – ஸ்னேஹா/நதியா என்று ஒப்பிட முடியும்.
ஹாலிவுட்டில் ராபர்ட் டி நீரோ – டேனியல் டே லூயிஸ், மார்லன் ப்ராண்டோ – டாம் ஹாங்க்ஸ், க்ளார்க் கேபிள் – டாம் க்ரூஸ்/ப்ராட் பிட் போன்று ஒப்பீட்டை நிகழ்த்தலாம்.
அதாவது, ஒரு கதாபாத்திரத்தை நமது மனதில் நினைத்தவுடன் ‘இதற்கு இந்த நடிகர்தான் சரி’ என்று தோன்றுகிறதல்லவா? அந்த எண்ணம்தான் இத்தகைய ஒப்பீடுகளை நமது மனதில் நிகழ்த்துகிறது. எனவே, நமது ஒன்லைன் உருவானதும் பலமுறை அதற்கான நடிகர்களும் நமது மனதில் தோன்றிவிடுவார்கள். உடனேயே அதன்பின் எப்போது கதையை யோசித்தாலும் அவர்களை வைத்தேதான் மனதில் எண்ணங்கள் ஓடும். நாம் மேலே பார்த்த வகைகளில் அந்தந்தக் காலகட்டத்தில் எந்தெந்த நடிகர்கள் சரியாக வருவார்கள் என்பது இதனால் எளிதில் நமக்குத் தானாகவே புரிந்துவிடும். அத்தகைய பாத்திரங்களுக்கு அவர்களைப் போட்டால், முதலில் அறிமுகமாகும்போதே ஆடியன்ஸ் அவர்களைப் பார்த்ததும் கதையைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். இதனால் கதையை எஸ்டாப்ளிஷ் செய்ய நாம் மெனக்கெட வேண்டியதும் இல்லை. முதல் காட்சியில் ரஜினியின் அறிமுகம் அதிரடியாக ஆரம்பித்து, அதன்பின் அவர் ஒவ்வொரு காட்சியிலும் அழுதுகொண்டு, தங்கைக்காக வருத்தப்பட்டு, வாழ்க்கையில் அடிபட்டு, சோகப்பாடல்கள் இரண்டைப் பாடி, இறுதியில் இறந்துவிட்டால் நமக்கு எப்படி இருக்கும்? அதை ஆடியன்ஸ் எதிர்பார்க்கமாட்டார்கள் என்பதால் அப்படிப்பட்ட படம் ஓடும் வாய்ப்பு குறைவு. இந்தக் கதாபாத்திரம் கமலுக்கே/சிவாஜிக்கே மிகவும் பொருந்தும். இந்த இருவரும்தான் இப்படிப்பட்ட பல பாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள். ’நடிப்பு’ என்றாலே கமலையோ அல்லது சிவாஜியையோதானே நாம் நினைத்துப் பார்க்கிறோம்? (ஆரம்பத்தில் கமல் பல ஆக்ஷன் படங்களை மிகச்சிறப்பாகச் செய்திருந்தாலும் இப்போது அதுவா நமக்கு நினைவு வருகிறது?).
ஆடியன்ஸின் இந்தப் பொதுவான மனநிலையை எப்போதாவது அசைத்துப் பார்க்கலாம். ரவிச்சந்திரன் ‘ஊமை விழிகள்’ படத்தில் வில்லனாக வந்ததைப்போல்.
எனவே, ஆதியில் இருந்து இப்போதுவரை எல்லாமே ஏற்கெனவே வந்ததுதான். அந்தந்தக் காலகட்டங்களுக்கு ஏற்ப நடிகர்கள்/நடிகைகள் மட்டுமே மாறுவதுதான் 90% படங்களுக்கு நடக்கிறது. கூடவே, திரைக்கதையை எப்படியெல்லாம் மாற்றிக்கொடுத்து இந்தப் படங்கள் நினைவு வராமல் சமாளிக்கிறோம் என்பதிலும் நமது சாமர்த்தியம் இருக்கிறது. அதேபோல், இந்த ஒரேபோன்ற கதைகளைப் பற்றித் தெரிந்திருந்தாலும், ஆடியன்ஸ் இவைகளை மறுபடி மறுபடி பார்க்கவே விரும்புகிறார்கள் என்பதும் உளவியல் உண்மைதான். இதுபோன்ற பாத்திர அமைப்புகளை ‘Archetypes’ – ’ஆர்கிடைப்’ என்று இங்லீஷில் சொல்வார்கள். ப்ளேக் ஸ்னைடர் இதுபோன்ற ஹாலிவுட் ஆர்கிடைப்களை உதாரணமாகக் கொடுக்கிறார்.
இத்தனை கதையையும் இந்த அத்தியாயத்தில் சொன்னதன் காரணம், ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் சில பாயிண்ட்களில் உள்ளது. நமது கதை எதுவாக இருந்தாலும் சரி- எப்போது ஆடியன்ஸ் அந்தக் கதையில் சுவாரஸ்யம் காட்டுவார்கள் என்றால், கீழ்க்கண்ட இந்த விஷயங்கள் அதில் இருந்தால்தான்:
1. நமது கதையின் பிரதான பாத்திரத்துடன் ஆடியன்ஸ் தங்களை எளிதில் சம்மந்தப்படுத்திக்கொள்ளவேண்டும்
2. அந்தப் பாத்திரத்திடமிருந்து ஆடியன்ஸ் கற்றுக்கொள்ளவேண்டும்
3. அந்தப் பாத்திரத்தின் பின்னால் ஆடியன்ஸ் செல்ல உறுதியான காரணங்கள் இருக்கவேண்டும்
4. அந்தப் பாத்திரம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று ஆடியன்ஸ் நினைக்கவேண்டும்
5. கடைசியாக, அந்தப் பாத்திரத்தின் தேவைகள் மிக மிக அடிப்படையாக (primal) இருக்கவேண்டும்
இந்தப் பாயிண்ட்களை விளக்கவே தேவையில்லை. நமது பிரதான பாத்திரம் இப்படி இருந்தால்தான் ஆடியன்ஸால் அந்தப் படத்தைத் திரும்பத் திரும்ப வந்து பார்க்கமுடியும் என்பது ப்ளேக் ஸ்னைடரின் கூற்று.
பயிற்சி # 3
இப்போது, இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட நடிகர்களைப் பற்றிய விபரங்களை யோசித்துப் பாருங்கள். அவர்களது பல படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்தப் படங்கள் பார்கக் ஆரம்பிக்கும்போதே அந்த நடிகரின் டெம்ப்ளேட்படிதான் பார்க்க ஆரம்பித்தீர்களா? அதாவது, நீங்கள் எதிர்பார்த்த டெம்ப்ளேட் அந்த நடிகர்களின் படங்களில் இருந்ததா? ஒருவேளை அப்படி இருக்கவில்லை என்றால், அது ஏன் என்றும் யோசியுங்கள்.
அடுத்ததாக, உங்கள் மனதில் இருக்கும் ஒன்லைனை யோசிக்கும்போது எந்த நடிகர் உங்கள் மனதில் நினைவு வருகிறார்? ஏன்? இதையும் விபரமாக யோசித்துப் பாருங்கள்.
இதன்பின்னர், மேலே பார்த்த ஐந்து பாயிண்ட்களும் நீங்கள் பார்த்த படங்களில் உங்களுக்குக் கிடைத்ததா? சில படங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, இவைகள் அவற்றில் இருக்கின்றனவா இல்லையா என்று யோசித்துப் பார்க்கலாம்.
அடுத்த வாரம் சந்திப்போம்..
தொடரும்…
எனக்கு சில சந்தேகம் ராஜேஷ்,
நமது கதையின் பிரதான பாத்திரத்துடன் ஆடியன்ஸ் தங்களை எளிதில் சம்மந்தப்படுத்திக்கொள்ளவேண்டும்
அந்தப் பாத்திரத்தின் பின்னால் ஆடியன்ஸ் செல்ல உறுதியான காரணங்கள் இருக்கவேண்டும்
அந்தப் பாத்திரம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று ஆடியன்ஸ் நினைக்கவேண்டும்
மேல் சொன்ன பாயிண்டுகள் சா¢ தான். ஆனால் x-men, avatar போன்ற படங்களில் நாம் மனிதர்களுடன் சம்மந்தப்படுத்திக்கொள்ளாமல் ஏன் வேற்று மனிதர்களுக்கு support செய்கிறோம்? மற்ற ஏலியன் படங்களில் அப்படி அல்லவே? இப்படங்களில் நம் மனநிலை என்ன?
நரேன், உங்களுடைய சந்தேகம் சரிதான்..
ராஜேஷ் அண்ணா சொன்ன விதிகள் அதில் இருக்கிறது..
பிரதான பாத்திரம் ஆடியன்ஸ்க்கு பிடிக்க வேண்டும்.. அது நம்மைப்போன்ற மனிதனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே…நமக்கு பிடித்த , நம்மை எளிதில் ஈர்க்கக்கூடிய குணாதிசயங்கள் அந்த பாத்திரத்திற்கு இருந்தாலே போதுமானது… நம் மனம் அந்த பாத்திரத்திற்கு support செய்ய ஆரம்பித்துவிடும்..
உதாரணமாக ஒரு சிட்டுக்குருவி உங்கள் வீட்டில் கூடு கட்டி இருக்கிறது.. நீங்கள் சாப்பிடும்போது, அல்லது உங்களின் மகிழ்ச்சியான தருணங்களில் உங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அழகாய் தலையை இடம் வலமாக சாய்த்துப் பார்த்து கீச் கீச் என்று உங்களை சுற்றிவருகிறது… உங்களைத்தவிர வேறு எவரைக் கண்டாலும் பறந்து விடுகிறது.. இது உங்கள் மனதிற்கு மிக நெருங்கி விட்டதல்லவா ?
இப்போது நீங்கள் வீட்டை காலி செய்கிறீர்கள்.. வேறு ஒரு வக்கிர புத்தி கொண்ட ஒருவன் அங்கு குடி வருகிறான்.. வந்த தினத்திலேயே பக்கத்து வீட்டு நாய்க்குட்டியை கல்லால் அடித்து காயப்படுத்தி அவர்களுடன் சண்டையும் போட்டு விடுகிறான்.. இதை நீங்கள் பார்த்துவிட்டு வரும்போது என்ன தோன்றும்? அந்த அழகான சிட்டுக்குருவிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனம் ஏங்கும் அல்லவா?… அவ்வளவு தான்
அவத்தார் படத்தின் போக்கும் இப்படியே… இயற்கையை கடவுளாக நேசிக்கும் வேற்றுகிரக வாசிகள் .. (இங்கு அவர்கள் வசிக்கும் இடம் கூட முக்கியமானது, ஒருவேளை அந்த அழகான கிரகத்திற்கு பதில் ஒரு இருண்ட கொடுரமான இடத்தில் வசிக்கும் மனிதர்களை உண்ணும் வேற்றுகிரக வாசிகள் இருந்திருந்தால் நாம் அவர்களுக்கு support செய்வோமா ??/ ஆத்தாடீ) வெறும் வில் அம்பை வைத்துக்கொண்டு , அதிபயங்கர நவீன ஆயுதங்களோடு இருக்கும் மனிதர்களுடன் சண்டையிட வேண்டும்.. நமக்கு இங்கு மனிதர்களைப் பிடிக்காமல் போன காரணம் எளியது.. அந்த வேற்றுகிரக வாசிகளைப் பிடித்ததும் ஆச்சர்யமில்லை (அந்த அழகான சிட்டுக்குருவி ‘வேற்றுகிரகவாசிகள்’.. வக்கிரபுத்திக்காரன் அவர்களுடன் சண்டை போடும் நம் மனித இனம்) சரியா… ??????
மற்ற விதிகளும் எளிதாக பொருந்துகிறதா ?///
நன்றி
யெஸ். நமக்குப் பிடித்த குணங்கள் ஒரு மிருகத்துக்குக் கூட இருக்கலாம். ஜுராஸிக் பார்க்கின் இறுதியில் நல்லவர்களைக் கொல்லவரும் டைனசார்களை டிரெக்ஸ் கவ்விக்கொண்டு கர்ஜிக்கும்போது நமக்குப் பிடித்ததுதானே? அதுபோல். மஹேஷின் ரிப்ளை விரிவாக, விளக்கமாக உள்ளது நரேன். தாங்க்யூ மஹேஷ் 🙂