Fade In முதல் Fade Out வரை – 7

by Karundhel Rajesh June 6, 2014   Fade in to Fade out

பழைய அத்தியாயங்களைப் படிக்க —> Fade In முதல் Fade Out வரை[divider]

திரைக்கதை அமைப்பைப் பற்றிப் படிப்பவர்களுக்கு ஸிட் ஃபீல்டின் 3 Act Structure என்பது மிகவும் முக்கியம். திரைக்கதையின் அமைப்பு எப்படிப்பட்டது என்பதை முதன்முதலில் படம் வரைந்து பாகம் குறித்தவர் அவர். அவரது மூன்று பாகத் திரைக்கதை அமைப்புதான் இன்றுவரை ஹாலிவுட்டிலும் இந்தியாவிலும் பலராலும் பின்பற்றப்படுகிறது. மிகவும் எளிதில் இதனைக் கற்றுக்கொண்டுவிடலாம் என்பது இதன் இன்னொரு அட்வாண்டேஜ்.

ஸிட் ஃபீல்டின் மூன்று பாக திரைக்கதை அமைப்பு பற்றி எனது கட்டுரையை இதோ இங்கே படிக்கலாம். இதை ஒருமுறை படித்துவிட்டு வந்தால் இந்த அத்தியாயம் இன்னும் எளிதாகப் புரியும் வாய்ப்பு அதிகம்.

Syd Field அவரது Screenplay புத்தகத்தை எழுதியபின்னர், அவரைப் போலவே இன்னும் சில திரைக்கதை Gurus உருவாயினர். அவர்களில் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் Blake Snyder, Robert Mckee, Linda Seger, Michael Hauge, John Truby, Christopher Vogler போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரையும், இன்னும் சிலரையும் பற்றி விபரமாக இந்தத் தொடரில் பின்னால் கவனிக்கப்போகிறோம். இப்படி வளர்ந்த திரைக்கதை எக்ஸ்பர்ட்கள் அனைவருமே ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு திரைக்கதை அமைப்பை உருவாக்கினர். இவர்களின் வகுப்புகளுக்குப் போய் அமர்ந்தால், ஒவ்வொருவரும் தங்களுக்கென்றே தாங்கள் உருவாக்கிய இந்த அமைப்புகள் பற்றி அருமையாக விளக்குவதைக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரையில் திரைக்கதை என்பது இவர்களின் அமைப்புப்படியேதான் இனம் காணப்படுகிறது. இவர்களின் அனுபவத்தில் பல திரைப்படங்களைப் பார்த்து ஒவ்வொருவரும் தங்களுக்கென்றே உருவாக்கிய அமைப்பு இது.

இந்தப் பத்தி புரியவில்லை என்றால் எளிமையான ஒரு உதாரணத்தைக் கவனிப்போம். அதன்மூலம் இந்த ‘திரைக்கதை அமைப்பு’ என்னும் விஷயம் புரிந்துவிடும்.

பூமியில் இருந்து வானத்தை நோக்குகிறோம். ஒரு விஞ்ஞானி, அங்கு இருக்கும் கணக்கற்ற நட்சத்திரங்களைப் பார்த்து ஆய்வு செய்து அவற்றின் தோற்றத்தைப் பற்றி விபரமாக அவரது பார்வையில் எழுதுகிறார். ஒரு ஆன்மீகவாதியோ, இறைவன் என்னும் சக்தியின் ஆற்றலைக் கண்டு வியந்து அவற்றைப் பற்றி அந்தக் கண்ணோட்டத்தில் எழுதுகிறார். அவற்றைப் பார்க்கும் ஒரு தாய், தனது குழந்தைக்கு அங்கே கரடி, முயல் ஆகியவை தெரிகின்றன என்று சொல்லி உணவு ஊட்டுகிறாள். வானம் என்பது பொதுவாக இருந்தாலும், அதனை நோக்கும் கண்ணோட்டங்கள் வேறுபடுகின்றன. ஒவ்வொருவருக்குமே அவரவர் நோக்கு உண்மையாகத்தான் இருக்கும்.

இதுபோல்தான் திரைக்கதை அமைப்புகளும். முதல் பார்வைக்கு ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் அமைந்துள்ள அவரவர்களின் திரைக்கதை அமைப்புகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அவைகளை நன்றாகப் புரிந்துகொண்டால், ’நல்ல திரைக்கதை’ என்ற லட்சியத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்பவனவே இந்த வெவ்வேறு திரைக்கதை அமைப்புகள் என்பது புரிந்துவிடும். நமக்கு எந்தத் திரைக்கதை அமைப்பு நன்றாகப் புரிகிறதோ அதனைப் பின்பற்ற வேண்டியதுதான்.

இப்படித்தான் Blake Snydeரின் திரைக்கதை அமைப்பும். அதேசமயம் நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், பிற திரைக்கதை வல்லுநர்களுக்கும் ப்ளேக் ஸ்னைடருக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் என்னவெனில், பிறர் திரைக்கதைகளைப் பற்றிப் பேசியே சம்பாதிக்கையில் ஸ்னைடர் திரைக்கதைகளை எழுதி சம்பாதித்துக்கொண்டிருந்தார். எனவே, திரைக்கதை எழுதுவதில் எக்ஸ்பர்ட் ஒருவரின் திரைக்கதை அமைப்பு அவசியம் எல்லோருக்கும் பயன்படக்கூடியது என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம், ’திரைக்கதை அமைப்பு என்பது ஏன்? எந்தவித திரைக்கதை அமைப்பும் இல்லாமலேயே (எந்த டெம்ப்ளேட்டையும் பின்பற்றாமலேயே) ஏன் ஒரு திரைக்கதையை எழுதக்கூடாது? இந்தத் திரைக்கதை அமைப்புகள் அவசியம் நமது க்ரியேட்டிவிடியை மழுங்கடிக்கின்றன. செக்குமாடு போல குறிப்பிட்ட பாதையையே இந்த அமைப்புகளைப் பின்பற்றுவதன்மூலம் நாம் செய்கிறோம். இது தவறு’ என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணம்தான். திரைக்கதை அமைப்பு பற்றிய எதிர் கருத்துகள் இவை.

இதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும், உலகெங்கும் கமர்ஷியல் படங்களுக்கான ஃபார்முலா என்னவாக இருக்கிறது? ’ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்தவேண்டும்’ என்பதுதானே அந்த ஒரே ஃபார்முலா? அதுதானே உலகெங்கும் பல நாடுகளின் திரைப்படங்களையும் ஓட வைக்கிறது? அப்படி ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்த என்னென்ன செய்யவேண்டும் என்பதுதான் இந்தத் திரைக்கதை அமைப்புகளால் விளக்கப்படுகிறது. எந்தப் படமாக இருந்தாலும் ஹீரோ/ஹீரோக்கள், வில்லன்/வில்லன்கள், ஒரு லட்சியம், அதை நோக்கிய பயணம், இடையூறுகள், இறுதியில் சுபம் என்பதுதான் மனிதன் தோன்றிய நாட்களில் இருந்தே நாடகங்கள்/கதைகள்/புதினங்கள்/கவிதைகள்/திரைப்படங்கள் ஆகியவற்றின் கருக்களாக இருக்கின்றன. இதுதான் மனித குலத்தின் ஒரே டெம்ப்ளேட். ஒருவேளை ‘சுவாரஸ்யம்’ என்பதன் விளக்கத்தை இப்போதிலிருந்து உலகெங்கும் ஒரே சமயத்தில் நாம் மாற்ற ஆரம்பித்தால் இந்த நிலை இன்னும் 21343 வருடங்களில் மாறக்கூடும். உதாரணமாக, இனிமேல் விறுவிறுப்பான காட்சிகள் என்பவை சுவாரஸ்யம் இல்லை; அவற்றுக்குப்பதில் சோகக்காட்சிகள்தான் சுவாரஸ்யம்; அல்லது ஒரே இடத்தை காமெரா அரைமணிநேரம் காட்டுவதுதான் பரபரப்பு என்றெல்லாம் நாம் மாற்ற முயற்சிக்கலாம்.

Jokes Apart, ஐரோப்பியப் படங்கள் பெரும்பாலும் இந்தத் திரைக்கதை அமைப்புகளுக்குள் வருவதில்லை. அட்லீஸ்ட் அறுபதுகள், எழுபதுகளில் அப்படித்தான் இருந்தது. ஆனால் அதன்பின்னர் அங்கும் இந்த டெம்ப்ளேட் உருவாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது.

இதனால்தான் ‘திரைக்கதை அமைப்பு’ என்பது மிகவும் முக்கியம். அட்லீஸ்ட் தற்போதைய சமயத்திலாவது.

இதுவரை ஒன்லைன்களை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். அதன்பின் பிரதான கதாபாத்திரத்துக்குரிய சில முக்கியமான அம்சங்களைக் கவனித்தோம். இனி, ப்ளேக் ஸ்னைடர் வழங்கும் திரைக்கதை அமைப்பைப் பார்த்துவிட்டு அவற்றில் இருப்பவற்றை விளக்கமாகவும் நோக்குவோம்.

ஹாலிவுட்டில் தற்போது 110 நிமிடத் திரைப்படங்கள்தான் 95% எடுக்கப்படுகின்றன. எனவே அந்தத் திரைக்கதைகளும் 110 பக்கங்கள்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. அப்படி ஒரு 110 பக்க திரைக்கதை ஒன்றை எடுத்துக்கொண்டால், இதோ ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை அமைப்பு இவ்வாறுதான் இருக்கும்.

The Blake Snyder Beat Sheet

PROJECT TITLE:
GENRE:
DATE:

1. Opening Image (1);
2. Theme Started (5);
3. Set-up (1-10);
4. Catalyst (12);
5. Debate (12-25);
6. Break into Two (25);
7. B Story (30);
8. Fun and Games (30-55);
9. Midpoint (55);
10. Bad Guys Close In (55-75);
11. All is Lost (75);
12. Dark Night of the Soul (75-85);
13. Break into Three (85);
14. Finale (85-110);
15. Final Image (110);

இந்த ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் விபரமாகப் பார்க்கப்போகிறோம். எனவே இது புரியாவிட்டாலும் கவலைப்படவேண்டாம்.

ப்ளேக் ஸ்னைடர் அவரது ஒவ்வொரு திரைக்கதையையும் பற்றித் தயாரிப்பாளர்களிடம் விவாதிக்கச் செல்லும்போதெல்லாம் இந்த விஷயங்களை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து அவற்றில் ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் ஓரிரு வரிகளில் சுருக்கமாக அவரது கருத்தை எழுதிக்கொள்வது வழக்கம். இந்தப் பதினைந்து அம்சங்களை முழுதாக எழுதி முடிக்காமல் அவர் எந்த மீட்டிங்குக்கும் சென்றதில்லை. எனவே இவற்றின் முக்கியத்துவத்தை இதிலிருந்து அறியலாம்.

இதோ இனி ஒவ்வோன்றாகப் பார்க்கலாம். கூடவே ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே செல்லுபடியாகும் இந்த அமைப்பு எப்படித் தமிழ்ப் படங்களில் உபயோகப்படுத்தப்படலாம் என்பதையும் கவனிப்போம்.

 

  Comments

5 Comments

  1. Arun Selva

    Thala… super… neraya information… veetuu paadamdhan indha dhadava kudkkala… 🙂 yengal guru vaazhga….

    Reply
    • Rajesh Da Scorp

      வீடுப்பாடமா? இருங்க அடுத்தவாட்டி எக்கச்சக்கமா கொடுக்குறேன்

      Reply
  2. முன் பகுதிகளும் பொறுமையாக கைப்பேசியூடாகவே படித்ததால் அங்கு கருத்திட முடியவில்லை அண்ணா….

    பழைய தொடர்கள் அனைத்தும் அத்துப்படியாக கைவசம் வைத்திருப்பதாலும் திரைக்கதை தொடர்பான அதிகமான தேவைகள் இருப்பதாலும் சுவாரசியம் களைகட்டிச் செல்கிறது

    மிகுதி அடுத்த வாரம் இனி சந்தேகக் கணைகளால் துளைப்பேன் கோபிக்க வேண்டாம்

    Reply
    • Rajesh Da Scorp

      நோ கோபம் :-). கேள்விகள் வந்தா சந்தோஷம்தானே? அவசியம் மெதுவா வாங்க

      Reply
  3. mokka naveen

    Fine boss.. But Blake snyder ‘oda rendu padamume (Stop! or my mom will shoot you, Blank check) imdb la romba mosamana rating vangiyirukke..
    Will you explain your views/reasons on them..
    Note: I havent watched those movies….. eeeeeee

    Reply

Join the conversation