Firefly (2002) – TV Series

by Karundhel Rajesh January 7, 2013   TV

உங்களுக்கு ஜாஸ் வீடனைத் தெரியுமா?

தமிழில் இப்படி திடீரென்று கேட்டால் குழப்பம்தான். ஆங்கிலத்தில் Joss Whedon என்று எழுதினால்? அப்படியும் குழப்பமாக இருந்தால், The Avengers படத்தின் இயக்குநர் என்று சொன்னால் டக்கென்று தெரிந்துவிடும். அவெஞ்சர்ஸ் படம் வருவதற்கு முன்னரே ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான நபர் இவர். எனது அவெஞ்சர்ஸ் கட்டுரையில் இவரைப்பற்றிய ஒரு இண்ட்ரோ இருக்கிறது. சுருக்கமாக: காமிக்ஸ் க்ரியேட்டர், தொலைக்காட்சி சீரீஸ்களை உருவாக்கியவர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநர்.

வீடனைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மனிதர் தொட்டதெல்லாம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் விஷயங்களாக இருக்கின்றன. அவெஞ்சர்ஸ் படம் இந்தியாவில் சக்கைப்போடு போட்டதை நண்பர்கள் மறந்திருக்க இயலாது. அதற்கு முன்னரே, இவரது தொலைக்காட்சி சீரீஸ்கள் சூப்பர் ஹிட்கள் ஆகியிருக்கின்றன. Buffy the vampire slayer னினைவிருக்கிறதா? இந்தியாவில் மிகப்பிரபலமான ஆங்கில ஸீரீஸ்களில் ஒன்று. அதன்பின்னர் Angel. Buffy ஸீரீஸ் முடியும் தருவாயில் வீடன் உருவாக்கிய ஒரு ஸீரீஸ் பற்றிதான் இந்தக் கட்டுரை.

இந்த ஸீரீஸ் துரதிருஷ்டவசமாக ஒரே ஒரு சீஸன் தான் ஒளிபரப்பப்பட்டது. அதில் பதினைந்து எபிஸோட்கள் உள்ளன. அதன்பின் ஃபாக்ஸ் தொலைக்காட்சியால் இந்த ஷோ ரத்து செய்யப்பட்டது. 2002 மற்றும் 2003ல் ஒளிபரப்பப்பட்டு இந்த சீரீஸ் முடிந்தபின், விசிறிகளிடையே மாபெரும் எழுச்சி கண்ட சீரீஸ் இது. இன்றுவரை இந்த சீரீஸுக்கு வெறிபிடித்த ரசிகர்கள் பலர் உள்ளனர். இதன் fanbase – பெயர் ‘Browncoats’ – இன்னமும் படு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது இதன் ரசிகர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பணம் போட்டு ஒரு நிறுவனம் தொடங்கும் முயற்சியில் இருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் மூலம் மறுபடி இந்த சீரீஸை எடுக்கலாம் என்பது அவர்களின் திட்டம்.

ஒரு சீஸனில் இந்த சீரீஸ் முடிந்ததும் வீடன் சும்மா இருக்கவில்லை. ஒரு திரைப்படமும் எடுத்தார். படத்தின் பெயர் – Serenity. சீரீஸ் முடிந்த இடத்திலிருந்து படம் தொடங்குகிறது. இந்த சீரீஸும் படமும் இன்றுவரை பல்வேறு பத்திரிக்கை/இண்டர்நெட் pollகளில் சிறந்த சைன்ஸ் ஃபிக்‌ஷன் சீரீஸாகவும் படமாகவும் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுவருகிறது. படத்தை எடுத்தபின்னரும் கூட வீடன் சும்மா இருக்காமல் இந்தப் பெயரில் காமிக்ஸையும் கொண்டுவந்துவிட்டார்.

இந்த சீரீஸின் வீச்சைப்பற்றி அறிய ஒரு துணுக்குச் செய்தி இதோ.

வருடா வருடம் அமெரிக்காவில் comic con festival என்பது நடக்கும். இந்த முறை 2012ல், Firefly சீரீஸின் நடிகர்களும் ஜாஸ் வீடனும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது. முந்தைய தின இரவிலிருந்தே ரசிகர்கள் அங்கேயே தங்கி, அடுத்த நாள் இந்த சந்திப்பு நடைபெற்ற அரங்கத்தையே முற்றுகையிட்டனர். மொத்தம் 10,000 பேர். நிகழ்ச்சி முடிந்ததும் அத்தனை பேரும் எழுந்து நின்று standing ovation மூலம் தங்களது பிரியமான கதாபாத்திரங்களுக்குப் பிரியா விடை கொடுத்தனர் என்று இந்த லிங்க் சொல்கிறது.

இந்த முழு நிகழ்ச்சியையும் இதோ இந்த வீடியோவில் பார்க்கலாம். கரகோஷங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

 

அப்படி இந்த சீரீஸில் என்னதான் விசேஷம்?

அவெஞ்சர்ஸ் பார்த்தவர்களுக்கு வீடனின் கும்பல் சேர்க்கும் திறமை பற்றித் தெரிந்திருக்கும். ஒரு பெரிய கும்பலைக் கட்டி மேய்க்கும் ஒரு கேப்டனின் கதைதான் ஃபையர்ஃப்ளை. இந்தக் கேப்டன், அப்படியே Iron Man டோனி ஸ்டார்க்கின் பெரிய அண்ணன். கோபத்திலும், ஈகோவிலும், sarcastic பேச்சிலும். கேப்டனின் பெயர் மால்கம் ரேய்னால்ட்ஸ். இந்தக் கதை நடப்பது 2517ல். இந்தக் காலகட்டத்தில் பூமியில் இருந்து பல்வேறு கிரகங்களுக்கும் பால்வீதிகளுக்கும் மனிதர்கள் குடிபெயர்ந்தாயிற்று. இந்தப் புதிய அண்டெவெளியில் பல்வேறு கிரகங்களுக்கும் பல்வேறு நிலாக்கள் இருக்கின்றன. இதில் என்ன விஷயம் என்றால், இப்படி குடிபெயர்ந்த மனிதர்கள், அந்த அண்டவெளியின் சூரியக்குடும்பத்தின் மத்திய கிரகங்களை மட்டும் தங்களுக்கேற்றவாறு மாற்றிக்கொண்டு வாழ்ந்தனர். இவர்களில் சிலர் அந்த சூரியக்குடும்பத்தின் எல்லையில், மிக மிக வெளியே இருக்கும் சில கிரகங்களுக்குச் செல்ல, அவர்களுக்கு இந்த அரசாங்கத்திலிருந்து எந்த உதவியும் கிடைக்காமல், பிணந்தின்னிகளாக மாறிவிட்ட மனிதர்களும் உள்ளனர். இப்படி கிரகம் பெயர்ந்த காலகட்டத்தில் உலகில் இரண்டே நாடுகள்தான் இருந்தன. ஒன்று சைனா; மற்றொன்று அமெரிக்கா. சைனாவின் ஆதிக்கத்தில் ஆசியாவும் ஐரோப்பாவில் ஒரு பகுதியும் இருக்க, அமெரிக்காவின் ஆதிக்கத்தில் பிற கண்டங்கள். இதனால் உலகின் பிரதான மொழிகள் மாண்டரினும் இங்லீஷும்.

இப்படி ஒன்றுசேர்ந்த நாடுகளின் கூட்டணியின் பெயர் – The Alliance. இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இந்த சூரியக்குடும்பம் முழுதும் இருக்கிறது என்றாலும், ஏற்கெனவே பார்த்ததுபோல், எல்லையோர கிரகங்களின்மீது இவர்களது கட்டுப்பாடு மிகக்குறைவு. இதனால் மக்களின் வாழ்க்கை முறை எப்படி அமைந்தது என்றால், மத்திய கிரகங்களில் இருப்பவர்கள் செல்வச்செழிப்புடனும் தொழில் நுணுக்கங்களுடனும் புதிய உலகின் அத்தனை நன்மைகளையும் அனுபவிப்பவர்களாக இருக்க, எல்லையோர கிரகங்களில் இருப்பவர்கள் ஏழைகளாக, சமூக விரோதிகளாக, இரண்டு நூற்றாண்டுகள் முந்தைய கௌபாய் ஸ்டைலில் வாழ்பவர்களாக மாறினர். பல கிரகங்களில் இன்னமும் குதிரைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய உலகில், Firefly என்ற குறிப்பிட்ட வகை விண்கலங்களில் ஒன்றை (அந்த அண்டவெளியில் மொத்தம் 40,000 Firefly ரக விண்கலங்கள் பறந்துகொண்டிருக்கின்றன என்பது இந்த சீரீஸில் சொல்லப்படும் செய்தி) வாங்கி, அதனை கள்ளக்கடத்தல் வேலைகளுக்காகப் பயன்படுத்தும் நபர்தான் கேப்டன் மால்கம் ரேய்னால்ட்ஸ். இவரது விண்கலத்தின் பெயர், Serenity. இவருடன் அந்த விண்கலத்தில் பைலட்டாக ஹோபான் வாஷ்பர்ன், மெக்கானிக்காக கேய்லீ என்ற பெண், கேப்டனின் தளபதியாக, ஸோயி என்ற பெண், விண்கலத்தின் பாதுகாவலனாக, ஜேய்ன் காப் என்ற அடியாள். இந்த ஐவர்தான் முதல் எபிஸோடில் காட்டப்படுபவர்கள். இவர்களோடு முதலாம் எபிஸோடில் இணையும் பெண்தான் இனாரா. இந்தப் பெண், ஒரு செக்ஸ் ஒர்க்கர். ஆனால் அந்தக் காலகட்டத்தில் இவர்களின் பெயர் – ‘Companion’ என்பது. இந்தக் கதை நடக்கும் காலத்தில் இந்த கம்பானியன்கள் என்ற பெண்கள், மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படுகின்றனர். அதாவது, பதினேழாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் இருந்த விலைமாதுக்களைப்போல. இந்த Serenity விண்கலத்தின் இரண்டு துணைக்கலன்களில் ஒன்றை வாடகைக்குப் பயன்படுத்துபவளாக இந்த இனாரா இருக்கிறாள். இவள் இந்தக் கலத்தில் இருப்பதால் கேப்டன் மால்கமின் கடத்தல் வேலைகள் சுமுகமாக நடக்கின்றன. காரணம், ஒரு companion இருக்கும் விண்கலத்துக்கு மரியாதை ஜாஸ்தி. ஆதலால் பரிசோதனைகள் கம்மி.

baccarin

அழகி இனாரா

இவர்கள் ஆறு பேர். இவர்களுடன் முதல் எபிஸோடில் இணைபவர்கள் மூவர். இந்த மூவரில், பாதிரியார் ஒருவரும் அடங்குவார். ஆனால் இந்தப் பாதிரியாருக்கு நன்றாக துப்பாக்கி சுடத்தெரியும். மட்டுமல்லாமல் இவரின் அடையாளம் பற்றிய மர்மம் ஒன்று இருக்கிறது. அரசாங்கத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபராக இவர் இருக்கிறார். இவர் யார்?

இதுதான் இந்த சீரீஸின் பின்னணி. இந்த உலகத்தைத்தான் இந்த சீரீஸ் முழுதும் பார்க்கப்போகிறோம்.

ஒவ்வொரு எபிஸோடிலும் இந்த ஒன்பது பேர் அடங்கிய குழு சந்திக்கும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது மிகவும் நகைச்சுவையாகவும், ஆக்‌ஷனுடனும் சொல்லப்படுகிறது. இந்த சீரீஸை சுருக்கமாக வர்ணிக்கவேண்டும் என்றால், Westerns meet star trek என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், விண்வெளி, விண்கலம் என்றவுடனேயே நமக்கெல்லாம் நினைவுவரும் ஏலியன்கள் நல்லவேளையாக இந்த சீரீஸில் இல்லை. எல்லாருமே மனிதர்கள்தான். சீரீஸும் ஒருவித வெஸ்டர்ன் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரே வித்தியாசம் – இந்த வெஸ்டர்ன்கள் நடப்பது விண்வெளியின் ஒரு பால்வீதியில்.

அவெஞ்சர்ஸ் படத்தைப் போலவே இதிலும் இந்த ஒன்பது பேருக்குமே ஒருவருடன் மற்றவர்கள் பழகுவதில் பல பிரச்னைகள். கேப்டன் மால்கம் ஒரு தலைக்கனம் பிடித்த ஆள் (டோனி ஸ்டார்க் போல). இருந்தாலும், தனது குழுவில் அனைவரையும் அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் நபரும் கூட. இவருடன் இருக்கும் அடியாள் ஜேய்ன், மூளை கம்மியான ஆள். அவனுக்கு இந்தக் குழுவில் இருக்கும் பலரையும் பிடிக்காது (ஹல்க் போல). மெக்கானிக்காக இருக்கும் கேய்லீ, அனைவரின் மீதும் பாசத்துடன் இருப்பவள். எப்போதும் புன்னகையுடன் நடமாடும் பெண். பைலட் வாஷ்பர்னோ ஒரு தமாஷ் பேர்வழி. கேப்டனுக்கு அடுத்தபடியாக இருக்கும் ஸோயி, இவரது மனைவி. விலைமாது இனாரா, மிகவும் இனிமையான பெண். கேப்டன் மால்கமை இவளுக்குப் பிடிக்கும். கேப்டனுக்கும் இவளைப் பிடிக்கும். ஆனால் இருவரும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

கேய்லீ - Serenityயின் அழகிய மெக்கானிக்

கேய்லீ – Serenityயின் அழகிய மெக்கானிக்

இது பற்றாது என்று மேலும் மூவரின் வருகை. இதில் நாம் ஏற்கெனவே பார்த்த பாதிரியார்தான் அனைவருக்கும் மூத்தவர். கூடவே ஒரு அண்ணன் தங்கை. இதில் தங்கை ஒரு பரிசோதனைக்கூடத்திலிருந்து தப்பி வந்தவள். அவளை அலையன்ஸின் படை துரத்துகிறது. அண்ணன் ஒரு கைதேர்ந்த மருத்துவன்.

இப்படியாக கேப்டன் மால்கமையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர். இந்தப் பெரிய குழுவை ஒவ்வொரு எபிஸோடிலும் தனது sarcastic பேச்சாலும் கோபத்தாலும் கட்டுப்படுத்தும் மால்கம், கிட்டத்தட்ட நிக் ஃப்யூரி+டோனி ஸ்டார்க்+கேப்டன் அமெரிக்காக்களை ஒரே உடலில் அடைத்ததுபோல் இருக்கிறார்.

இந்த சீரீஸில் சில வில்லன்களும் உண்டு. குறிப்பாக நாம் ஏற்கெனவே பார்த்த பிணந்தின்னிகள். இவர்களின் பெயர், Reavers என்பது. இதைத்தவிர கேப்டன் மால்கமிடம் மூக்குடைபட்ட சில வில்லன்களும்.

இந்த சீரீஸின் ப்ளஸ் பாயிண்ட் – ஆக்‌ஷனோ, கௌபாய் genreரோ அல்ல. மாறாக, விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் வசனங்களே இந்த சீரீஸின் பிரதான அம்சம். குறிப்பாக கேப்டன் மால்கமுக்கு எழுதப்பட்டிருக்கும் வசனங்கள். சாவின் விளிம்பிலும் பயங்கர நக்கல் தெறிக்கப் பேசக்கூடிய ஆள் இவர். ஆச்சரியமாக, அத்தனை எபிஸோட்களிலும் வசனம் ஒரே சீராக இருக்கிறது. அதேபோல், அத்தனை எபிஸோட்களிலும் ஒரே போன்ற சுவாரஸ்யம் இருக்கிறது. அதுதான் ஜாஸ் வீடனின் வெற்றி.

இந்த சீரீஸின் முடிவுதான் Serenity படத்தின் துவக்கம். முடிந்தால் அப்படத்தைப் பற்றியும் எழுதி மொக்கையைப் போடுவேன்.

எனக்கு இந்த சீரீஸ் பிடித்தது. எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு படு சீரியஸ் தொடர்கள்தான் பிடிக்கும். சிலருக்கு ஜாலியான தொடர்கள். மூளைக்கு வேலையில்லாமல், ஜாலியாக சிரித்துக்கொண்டே எஞ்சாய் செய்யவேண்டும் என்று தோன்றினால் இந்த சீரீஸை முயற்சித்துப் பார்க்கலாம்.

இதோ Firefly சீரீஸின் ட்ரய்லர்.

  Comments

9 Comments

  1. ரொம்ப நாளைக்கு முன்ன டி.டி ல ‘Captain Vyom’னு ஒரு தொடர் வந்துச்சு.. சக்திமானுக்கு முன்னாடி ஒளிபரப்பாகும்… கிட்டத்தட்ட இதே மாதிரியான கதை…ஒரு விண்கலம்..அதனுடைய கேப்டன்… அப்புறம் பல்வகை திறமை கொண்ட மற்ற வீரர்கள்… இவங்க எதிர்கொள்ளும் பிரச்சனைகள்னு போகும் கதை…!! 🙂 இந்த சீரிஸ் பத்தி படிச்சதும் அந்த ஞாபகம் வந்துருச்சு… 🙂 🙂

    Reply
    • Rajesh Da Scorp

      Yes. அது ஸ்டார் ட்ரெக்ல இருந்து சுட்டது. மிலிந்த் சோமன் தானே ஹீரோ? எனக்கும் நினைவிருக்கு 😉

      Reply
  2. Abarajithan

    சமீபத்துல எங்கேயோ படிச்சேன்.. நம்ம ஹாபிட் படத்துல பில்போவா Martin Freeman (Sherlock தொடரில் Dr. Watson)உம், Sauron (Necromancer) (குரல்) ஆ, Benedict (Sherlock தொடரில் Sherlock) உம் நடிச்சிருக்காங்களாம்.. என்ன ஒரு காம்பினேஷன்!!

    Reply
    • அடப்பாவி. வார் ஆஃப் த ரிங் ஈபுக்ல ஹாபிட் அத்தியாயத்துல நாந்தான் அப்புடி எழுதிருக்கேன்யா..டிராகனா நடிச்சிருப்பதும் அதே பெனடிக்ட் கம்பர்பேட்ச் தான். அதை எழுதிருப்பேன் 🙂

      Reply
      • Abarajithan

        நீங்க முன்னமே எழுதிட்டீங்களா? நான் படிச்சது இங்க: http://screenrant.com/sherlock-season-3-premiere-spoilers-fall-2013/

        சொல்றதுக்கு ஒரு மாதிரி இருந்தாலும் சொல்றேன், Ebook Readerல சில ரெண்டரிங் பிரச்சனைகளால War of Ring இன்னும் ஒழுங்கா படிக்கல… 🙁 சீக்கிரம் படிக்க ட்ரை பண்றேன்..

        Reply
  3. Rajesh,

    Yet another awesome post from you. I was wondering whether any tamil blogger will ever attempt writing about Firefly ( & Serenity) . I am not surprised that you did this. This is a true fan boy post ,again. I started reading your blog after your LOTR series and I am still amazed at the depth in your writing . Looking forward to buy the book of yours, when you release it.

    thank you for writing regularly , nowadays 🙂 Looking forward for more . One more tip for you- try reading the Graphic Novel Series Locke and Key by Joe Hill . You might like it

    Regards
    Sathish

    Reply
  4. Sorry for posting in English. Still figuring out ,what is the best way to write in Tamil

    Reply
    • Rajesh Da Scorp

      Thank you Sathish. I liked the series a lot, and that might be the reason the article is kinda okay to read. Will try to post about Serenity as well. And, the War of the Ring ebook will never be published. Reason? The details have been taken from the net, and we think it’ll be forgery if we try to make money from the book. But in case if you have not read the ebook, here is the link – http://karundhel.com/2012/06/war-of-ring-2.html (although I know you hv downloaded it) 🙂

      And, do not mind about posting in english. In case if you want to, then please use NHM writer to write in tamil. Thanks again.

      Reply
      • Rajesh Da Scorp

        One more. Thanx for suggesting Locke and Key. I’m now researching about it 😉

        Reply

Join the conversation