The Fountain (2006) – English

by Karundhel Rajesh January 4, 2010   English films

இதோ இந்தப் புத்தாண்டின் முதல் விமர்சனம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.

நாம் கவனித்திருக்கிறோம்: பல இயக்குநர்கள், ஒரே வகையான படங்களை எடுப்பார்கள். அவர்களது படங்களில், ஓரிரு காட்சிகளைப் பார்த்தாலே, அப்படங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து விடும் (உதா: ரோலண்ட் எம்மரிச், ஷங்கர்). இவர்கள் ஒரு வகை. ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு வகையாக எடுத்து, நம்மைக் கதற அடிக்கும் இயக்குநர்கள் இன்னொரு வகை. இரண்டுவகை இயக்குநர்களின் படங்களும் நன்றாகவே இருந்தாலும், இந்த இரண்டாம் வகை இயக்குநர்களின் படங்கள், சற்று அழகாகவும், ரசிக்கும்படியும் இருக்கும் (என்பது என் தாழ்மையான கருத்து).

இந்த வகையைச் சேர்ந்த ஒரு முக்கியமான இயக்குநரின் படம் தான் இந்த ‘த ஃபௌண்டன்’.

டேரன் ஆர்னாவ்ஸ்கி. பெயர் வாயிலேயே நுழையாவிட்டாலும், ஆள் சமர்த்தர். இதுவரை, மொத்தமாக ஏழே ஏழு படங்களே எடுத்திருந்தாலும், ஒவ்வொன்றும் சும்மா மிரட்டும். அதிபயங்கர க்ரியேட்டிவிட்டி உள்ளவர். சமீபத்தில் இவர் எடுத்து வெளியிட்ட படம் தான் ‘த ரெஸ்லர்’. இவர், இப்படத்துக்கு முன்னால் எடுத்து வெளியிட்ட படமான ‘த ஃபௌண்டன்’ படத்தைப் பற்றித் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

இந்த உலகில், தொன்மையான காலம்தொட்டே, காதல் (பாலா – எஸ்கேப் ஆயிராதீங்க) ஒரு மிக முக்கியமான உணர்வாகப் பரிமளித்துள்ளது. எந்த நூற்றாண்டைச் சேர்ந்த மனிதனாக இருந்தாலும், காதல் உணர்வு என்பது ஒன்றுதான். காதலுக்காக, தான் காதலிக்கும் பெண்ணுக்காக, மனிதன் எந்த அளவு செல்கிறான் என்பதே இப்படத்தின் மையக்கரு.

இப்படத்தில் மூன்று கதைகள் காண்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கதையும், ஒரே கருவையே கொண்டுள்ளது. தான் காதலிக்கும் பெண் மரணிப்பதைத் தடுப்பதற்காக, அந்தக் காதலன் என்ன செய்ய முயல்கிறான் என்பதே அது. படம் தொடங்கும் காலம், 2500. ஒரு விண்வெளி ஓடம், செங்குத்தாக, நெபுலா எனப்படும் ஒரு நட்சத்திரக் குவியலுக்குள் சென்றுகொண்டிருக்கிறது (நெபுலாவைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தால், அது ஒரு தனி பதிவாக ஆகிவிடும் என்பதால் வாசகர்கள் தப்பித்தனர்). அந்த ஓடம், ஒரு குமிழியின் வடிவத்தில் உள்ளது. அதற்குள் ஒரு மனிதனும், ஒரு மரமும் உள்ளனர். அந்த மனிதன், மரத்தின் அருகே அடிக்கடி சென்று, “நம் பயணத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம்; இன்னும் சற்று நேரம் தான்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். மரத்தை, ஆதுரத்துடன் தடவிக் கொடுக்கவும் செய்கிறான்.

அப்போது அவன் முன் ஒரு பெண்ணின் உருவெளித்தோற்றம் தோன்றுகிறது. அப்பெண், அவனை, எதையோ முடித்து வைக்கச் சொல்கிறாள். அவன் அப்பெண்ணிடம் பேசப்பேச, நாம் வேறு ஒரு காலத்துக்குச் செல்கிறோம். காலம் 2005. நாம், டாக்டர் டாம்மியைப் பார்க்கிறோம். அவர், மருத்துவமனையில், ஒரு குரங்குக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்தக்குரங்கு மூலமாக, ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறார். அந்தக்குரங்கு இறக்கும் தறுவாயில் உள்ளது. ஒரு மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மூலக்கூறை அந்தக்குரங்குக்குள் செலுத்தச் செய்கிறார் டாம்மி.

அவரது மனைவியான Izzi, ப்ரெய்ன் ட்யூமரினால் மெல்ல மெல்ல இறந்துகொண்டிருக்கிறாள்; ஆனால், அது அவளுக்குத் தெரிந்தே இருக்கிறது. அவளுக்கு அதைக்குறித்து எந்த விசனமும் இல்லை. மரணத்தை வரவேற்கத் தயாராக இருக்கிறாள். டாம்மி, அவளை உயிரினும் மேலாக நேசிக்கிறார். அவளுக்காகத் தான் அந்தக் குரங்கிற்கு சிகிச்சை அளித்து, ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க இரவுபகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார். Izzi, தான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு நாவலை அவரிடம் அளிக்கிறாள். அதன் கடைசி அத்தியாயம் மட்டும் முடிக்கப்படாமல் இருக்கிறது. அதை, டாம்மியை முடித்துவைக்கச் சொல்கிறாள். அவள் தூங்கும் நேரத்தில், டாம்மி அந்த நாவலைப் படிக்கத் தொடங்குகிறார்.

அந்த நாவலில், பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஸ்பானிய தளபதியான தாமஸ் என்பவர், ‘The Tree of Life’ என்ற உயிப்பிக்கக்கூடிய மரத்தைத் தேடுகிறார். அம்மரம், மாயன்களின் பகுதியில் இருக்கிறது. அம்மரத்தை, தனது அரசியின் ஆணையின் பேரில் தேடிச்செல்லும் தாமஸ், அம்மரத்தைக் கண்டுபிடித்து, அது இருக்குமிடம் செல்வதோடு அந்த நாவல் முடிந்து விடுகிறது. அதன்பின், அதன் கடைசி அத்தியாயம் எழுதும் பொறுப்பு, டாம்மியினுடையது என்று அவர் மனைவி கூறுகிறாள்.

இடையில், நாம் அந்த விண்வெளி ஓடத்தையும் காண்கிறோம். அந்த நட்சத்திரக் குவியலின் உள்ளே அது சென்றுகொண்டிருக்கிறது. அந்த மனிதன், அந்த மரத்திடம் பேசிக்கொண்டே இருக்கிறான்.

திடீரென Izzi இறந்துவிடுகிறாள். அதே நேரத்தில், அந்தக்குரங்கு பிழைத்துக்கொள்கிறது. அது மீண்டும் இளமை அடைகிறது. மருந்தைக் கண்டுபிடித்த வேளையில், மனைவி இறந்தது டம்மியைப் பாதிக்கிறது. அதே போல், அந்த விண்வெளி ஓடத்தில் இருக்கும் மரமும், அதன் இயக்கத்தை நிறுத்திக்கொள்கிறது.

அதன்பின் என்ன ஆயிற்று? நாம் கண்ட இந்த மூன்று பேரும் ஒருவர் தானா? உயிப்பிக்கும் மரத்தைத் தாமஸ் அடைந்தாரா? டாம்மி என்ன ஆனார்? இந்தக் கேள்விகளுக்கு, நெஞ்சைத் தொடும் விதத்தில் பதிலளிக்கிறது இப்படம்.

இந்தப்படம் எடுக்கப்பட்ட விதத்தை, வார்த்தைகளால் பாராட்ட இயலாது. அருமையான ஒளிப்பதிவும் இசையும் நடிப்பும், இப்படத்தை ஒரு புதிய தளத்துக்குக் கொண்டுசெல்கின்றன. இந்தப்படத்தை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம் என்று ஆர்னாவ்ஸ்கி சொல்கிறார்.

இப்படத்தின் அத்தனை காட்சிகளும், இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும் ஒரு பயணத்தை ஒத்திருக்கின்றன. இதன் பெரும்பாலான காட்சிகள், செட்டுகளில் படமாக்கப்பட்டவையே. அவை எப்படி நிர்மாணிக்கப்பட்டன என்று விளக்கும் இப்படத்தின் டி வி டியிலுள்ள காட்சிகளைக் காணத்தவறாதீர்கள்.

இப்படம் என்னைக் கவர்ந்ததன் காரணம், இவை எதுவும் அல்ல. படத்தின் நாயகி ராச்சல் வெய்ஸ் வெளிப்படுத்தும் அன்பே என்னைக் கவர்ந்தது. இறக்கும் தறுவாயிலும், இவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும் ஒரு பெண், தனது கணவன் மீது வெளிப்படுத்தும் அன்பு, நம்மை ஒரு இதமான போர்வையைப்போல் வந்து மூடிக்கொள்கிறது. என்னால், நான் காதலிக்கும் பெண்ணை அதே அன்புடன் நினைத்துப் பார்க்க முடிந்தது. இந்தப்படம் முழுவதிலும் இந்த அன்பு நிரம்பித் ததும்புகிறது. இந்த அன்பின் உணர்ச்சியை ஆர்னாவ்ஸ்கி மிகவும் அருமையாக வெளிக்காட்டியுள்ளார்.

படத்தின் நாயகனாக, ஹ்யூ ஜாக்மன். படம் முழுவதும் அண்டர்ப்ளே செய்து, தனது மனைவியை நேசித்துக்கோண்டே இருக்கிறார். இவருக்கும் ராச்சல் வெய்ஸுக்கும் உள்ள அந்த உறவின் அழகை, இருவரும் அற்புதமாக வெளிக்காட்டியுள்ளனர்.

அழகான படங்கள் பிடிக்கும் என்றால், இப்படமும் உங்களுக்குப் பிடிக்கும்.

டிஸ்கி – இப்படமும், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். பொறுத்தருள்க.

இப்படத்தின் ட்ரைலர் இங்கே.

  Comments

16 Comments

  1. இந்தப் படம் பார்த்தப்போ எனக்கு கொஞ்சம் விளங்கவில்லை. ஏதோ புரியல. இன்னுமொரு தடவை பார்க்கனும் போல.

    Reply
  2. இதுல, அந்த மூணு காரக்டரும் ஒண்ணுதான்னு காட்டுற மாதிரி கடைசில ஒண்ணு ரெண்டு சீன் வரும் . .அதுதான் கொஞ்சம் குழப்பும்னு நினைக்குறேன் . . அந்த பகுதிய நம்ம முடிவுக்கே உட்டுட்டாரு டைரக்டரு . . . சோ, நம்ம இஷ்டம் தான் படம் . . . ப்ரீயா இருக்கும்போது, இன்னொருமுறை பாருங்க பப்பு . . [நானே இன்னொரு முறை பாக்கணும்னு நினைச்சிகினு இருக்கேன் 🙂 ]

    Reply
  3. நண்பரே,

    உண்மையான அன்பிற்கான தேடலிற்கு காலங்களோ, அண்டசராசரங்களோ தடையாக இருப்பதில்லை. மனிதனின் விசித்திரமான மனம் அதை இடைவிடாது தேடிக் கொண்டே இருக்கிறது. அதனைக் கண்டடைவது சுலபமல்ல. கண்டடைந்தால் நீங்களும் ஒரு கற்பகதரு ஆவீர்கள். இயற்கை, பிரபஞ்சம் , நீங்கள், காதல் என ஒன்றாகி விடுவீர்கள். நான் ரசித்துப் பார்த்த படம். கிராபிக் நாவல் வடிவிலும் வந்திருக்கிறது. சிறப்பான விமர்சனம்.

    Reply
  4. இப்படியே.. படத்தை எழுதிகிட்டு இருந்தீங்கன்னா.. செய்யற அஞ்சு நிமிஷ ஆஃபீஸ் வேலையும்… கந்தல்தான்! 🙂 🙂

    ஆனாலும்.. இந்த லவ்வு.. மேட்டர்தான்..! 🙂 🙂

    Reply
  5. @ காதலரே- நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. உண்மையான காதல், அத்தனை எல்லைகளையும் கடந்தது. உங்களுக்கும் இந்தப்படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி. கிராபிக் நாவலாக வந்திருப்பது புதிய செய்தி. ஆனால், இங்கெல்லாம் அது கிடைக்காது. அந்தப்பக்கம் வரும்போது படிக்க வேண்டியது தான். .

    @ பாலா – எனக்குமே அப்புடித்தான் ஆயிட்டு வருது . . ஆபிஸ்ல . . 🙂 என்ன பண்ணுறது? நம்ம கடமையைத்தானே நாம செய்யுறோம்? 🙂 🙂
    காதல்னு எழுதும்போதே நான் உங்களைதான் நெனைச்சேன் . .:-) இத கட்டாயம் பார்க்கலாம். . 🙂

    Reply
  6. தினசரி 10 விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் Trekpay PTC இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

    Reply
  7. அருமையான விமர்சனம்… நான் முன்னாடியே பார்த்துவிட்டேன். மறுபடியும் பார்க்கணும்… 🙂

    Reply
  8. //(நெபுலாவைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தால், அது ஒரு தனி பதிவாக ஆகிவிடும் என்பதால் வாசகர்கள் தப்பித்தனர்). //

    பாலா அண்ணன் கிட்ட சொல்லிட்டா ஒரு சீரிஸ் பதிவு போட்டுட மாட்டாரா என்ன?

    Reply
  9. @ mahee – கண்டிப்பாப் பாருங்க . .என்னோட தோழி, இத ஏற்கெனெவே ரெண்டு தடவ பாத்திருந்தாலும், நேத்து மூணாவது தடவ பார்த்தாங்க. . :-). . அவங்களுக்கு அவ்ளோ புடிச்சது . .:)

    @ கார்த்திகேயன் – உங்க கருத்துக்கு நன்றி நண்பா . . ரெஸ்லர் படம் எனக்கும் புடிச்சது . . 🙂

    @ தமிழினியன் – 🙂 சொல்லிரலாம் . . . தல ஒரு பெர்ரிய பதிவு போட்டு கலக்கிரும் . . . 🙂

    Reply
  10. ஏன் யா இந்த மாதிரி படத்தஎல்லாம் எடுத்து, அதபத்தி பேசி மனுஷன அழவைகுரிங்க… இன்னைக்கு நைட் தூக்கம் போச்சு… அன்பு அந்த வார்த்தைய கேட்டாலே காதுல கோழி ஏறகால கொடயர மாதிரி சுகம்மா இருக்கும்(என் கற்பனை அவ்ளோதான்)…
    //நான் காதலிக்கும் பெண்ணை அதே அன்புடன் நினைத்துப் பார்க்க முடிந்தது.//… இதுதான் விஷயமே… போட்டு தள்ளிரிங்க… நீங்க “காதலிக்கும்”னு போட்டிருக்கிங்க நான் “காதலித்த”னு சொல்லலாம்(இப்போது இன்னொருவன் மனைவி)… என்னால அவ்ளோதான் செய்ய முடிஞ்சது… ஆனா இன்னமும் அந்த பொண்ண அதே அளவு அன்போட என்னால நெனைச்சி பாக்க முடியுது(நெனச்சதுக்கபுரம் தூங்கதான் முடியாது)… அவளாலதான் என்ன ஒரு நண்பனாகுட நெனச்சி பாக்க முடியல… அது போய் தொலையாட்டும் கழுத… ஆனா அவளுக்கான அன்பு மட்டும் இன்னும் அப்படியே இருக்கு… என் இதயம் முழுக்க நெறஞ்சி இருக்கு…. பல சமயம் பாரம் தான் தாங்க முடியாது…!!

    Reply
    • //ஆனா அவளுக்கான அன்பு மட்டும் இன்னும் அப்படியே இருக்கு… என் இதயம் முழுக்க நெறஞ்சி இருக்கு…. பல சமயம் பாரம் தான் தாங்க முடியாது/ – அதான் விஷயம் பாஸ் :-). அது இருக்கும்வரை நம்மள யாராலயும் அசைச்சிக்க முடியாது அசைச்சிக்க முடியாது 🙂

      Reply
  11. நீங்க எந்த தைரியத்துல இந்த படத்த இரண்டாம் உலகம் ரிலீஸ் அன்னிக்கு ஷேர் பண்றிங்க?
    இந்த 2 படத்தையும் compare பண்ணவே முடியாது…
    (இரண்டாம் உலகம் பார்த்தவங்களுக்கு புரியும்)

    Reply
    • Rajesh Da Scorp

      பாஸ்.. ரெண்டுக்கும் தொடர்பு இருக்கு. காப்பி கிடையாது. மேபி இன்ஸ்பிரேஷனா இருக்கலாம்.

      Reply
      • இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தாலும் அதை நல்லா எடுக்கணும் பாஸ் 😉
        fountain நல்ல படம்,அதைபோய் ஏன் இதோட compare பண்றீங்க?? 😛

        Reply
  12. நான் நேற்று தான் இப்படத்தை பார்த்தேன். நன்றாகவே இருந்தது. ஒரு ஆழமான காதல் கதை தான் இது.
    நீங்கள் குறிப்பிட்டது போல் மூன்று காலங்களில் நடக்கும் கதைகள் அல்ல என்றே நினைக்கிறேன். இப்படம் மிகவும் எளிமையாக அழகாக எடுக்கப்பட்ட காதல் படமே இது.

    நான் இப்படத்தை இப்படி பார்க்கிறேன்:
    ————————————————————-
    மூளையில் கட்டி ஏற்பட்டதினால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் மனைவி. அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் காதல் கணவன். கணவன் ஒரு ஆராய்ச்சி மருத்துவன். தன் மனைவியை எப்பாடு பட்டாவது ப்ரைன் டூமரிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்று முயற்சிக்கிறான். பல வகையான புதிய மருந்துகளையும் (தாவர மருந்துகளையும்) கொடுத்து ப்ரைன் டூமர் உள்ள ஒரு குரங்கிற்கிற்கு அறுவை சிகிச்சை செய்து பார்க்கிறான். அதில் வெற்றி பெற்றால் தன் மனைவியை காத்துவிடலாம் என்று துடிக்கிறான். மனைவியோ தன் கணவன் தனக்காக, தன் உயிரை காக்க அல்லும் பகலும் ஆராய்ச்சியிலேயே இருப்பதை அறிந்து அவன் கஷ்டப்படுவதை கண்டு கலங்குகிறாள். அவள் கொஞ்சம் கொஞ்சமாக மரணிப்பதை பற்றி தத்துவார்த்தமாக யோசித்து ”மரணம்” என்பது வாழ்வின் இறுதியல்ல நிரந்தரத்தின் தொடக்கமே என்று முடிவெடுக்கிறாள். அதை தன் கணவனிடமும் தனக்கு மரணம் பற்றி பயமில்லை என்று கூறிக் கொண்டே இருக்கிறாள். கணவனோ மனைவியை இழந்து விடுவோமோ என்ற பதட்டத்தில் அவ்வாறு அவள் பேசுவதை கண்டு பதைத்து விலக்குகிறான்.

    மனைவி ஃபேண்டசியாக ஒரு நாவலை எழுதுகிறாள். அந்த கதையின் வாயிலாக கணவனிடம் புரிதல் ஏற்பட முயற்சிக்கிறாள். அதில் கடைசி அத்தியாயம் மட்டும் முடிக்கப் படாமலேயே உள்ளது. நாவல் இப்படி செல்கிறது முன்னொரு காலத்தில் ஸ்பெயினில் மதகுருவின் ஆதிக்கம் வலுக்கிறது எதிராக உள்ள அனைவரையும் அழிக்கிறான். இறுதியில் ராணியையே நெருங்கும் சூழலில் தளபதி அந்த மதகுருவையே ஒழித்து நாட்டை காக்க துணிகிறான். ராணி அவனை தடுத்து இதற்கு தீர்வு நிரந்தர வாழ்வே அதுவே நம்மை அழிக்காமல் காக்கும் அதற்கு கடவுளின் Tree of Life மரத்தை கண்டுபிடித்து அதன் சாற்றை உண்பதே என்கிறாள். தளபதி அது கதை என்று அதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறான். அதற்கு ராணி ஆதாம் ஏவாள் அறிவு மரத்தின் கனியையே புசித்தார்கள் வாழ்வு மரத்தின் சாறை அருந்தவில்லை ஆனாலும் அவர்களின் வழித்தோன்றல்கள் அம்மரம் உள்ள இடத்தை அறிந்தே வந்திருக்கிறார்கள். மாயன்களே அவர்களின் வழித்தோன்றல்கள் அம்மரம் மாயன்களின் அடர்காட்டுக்குள்ளேயே இன்னும் இருக்கிறது. அதை கண்டுபிடிக்க ஒரு மேப்பும் உள்ளது என்று கூறுகிறாள். பின் அதை நம்பி தளபதி சிறு படைகளுடன் மரத்தை தேடி செல்கிறான். அம்மரத்தை நெருங்கும் வேளையில் அதை காக்கும் மாயன்களால் சூழப்பட்டு அவனுடன் வந்தவர்கள் மரணிக்கிறார்கள். தளபதி மட்டும் அவ்வழியே முன்னேறி செல்லும் போது மாயன் தலைவனால் கத்தியால் குத்தப்படுகிறான். இத்துடன் நாவல் நிற்கிறது. கடைசி அத்தியாயத்தை டாக்டர் கணவனையே முடிக்க சொல்லி வற்புறுத்துகிறாள்.

    அவள் இருக்கும் போது படிக்க ஆரம்பித்த கணவன் அந்த ஃபேண்டஸியில் தானும் தன் உந்துதலுடன் திளைக்கும் போதுதான் குமிழியில் இருப்பது போன்ற கற்பனையில் வாழ்கிறான். இறப்பை நீக்கும் மருந்து கண்டுபிடித்தலிலும் காதல் மனைவியின் நினைப்புக்கும் இடையே தன்னை முழுமையாக மூழ்கடித்து கொண்டிருக்கும் நாயகனை ஒரு குமிழிக்குள் அடைபட்டு தனி உலகில் மிதந்து கொண்டிருப்பது போல் காட்டுவது சிறந்த படிம உத்தி.

    மரணம் இயல்பானது என்றுணர்ந்து தானும் மட்கி மரமாவது போல் காட்டி இதுவே நிரந்தர வாழ்வு என்று கூறுவது போல் காட்டுவது நிதர்சனம். இந்த தரிசனமே அவனுள் எழுகிறது. உடனே அவன் அந்த நாவலின் கடைசி அத்தியாயத்தை அந்த ஸ்பெயின் நாட்டு தளபதியையே First fatherஆக மாற்றி பிறப்பு இறப்பு என்பது ஒரு மாபெரும் சுழற்சி என்று சொல்லி முடிக்கிறார். டாக்டரும் இயல்பை நிதர்சனத்தை உணர்ந்து தன் மனைவியின் கல்லறையில் சென்று ஒரு விதையை விதைக்கிறான். அதில் வளரும் மரத்தில் பரவி தன் காதல் மனைவி நிரந்தரத்தில் நிலை கொள்வாள் என்று நம்புகிறான்.

    மனைவி இறந்தபின் திருமண மோதிரம் போட்டிருந்த விரலில் நிரந்தரமாக பச்சை குத்திக் கொள்ள ஆரம்பிக்கிறான் நாயகன். அது தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தன் கை முழுக்க குத்தியிருப்பதாக காட்டுவது அருமை. அவ்வளவு காலமும் அவள் நினைப்பிலேயே இருக்கிறான் நாயகன். ஆம் நீ கூறிக்கொண்டிருந்தது உண்மைதான் இவ்வளவு காலமும் நீ என்னுடனேயே இருந்திருக்கிறாய் என்று தன் பச்சை குத்தப்பட்ட கைகளை தடவி நாயகன் ஓரிடத்தில் உணர்கிறான்.

    Reply

Join the conversation