From Hell – Part 1

by Karundhel Rajesh December 29, 2012   Comics Reviews

‎[quote]’murder, a human event located in both space and time, has an imaginary field completely unrestrained by either. It holds meaning, and shape, but no solution. Quantum uncertainty, unable to determine both a particle’s location and its nature, necessitates that we map every possible state of the particle: its super-position’ – Alan Moore.[/quote]

1888ம் ஆண்டில், ஜார்ஜ் லஸ்க் (George Lusk) என்ற இங்லாண்டைச் சேர்ந்த ஒரு தனியார் ரோந்து கமிட்டியின் (The Whitechapel Vigilance Committee) தலைவருக்கு ஒரு கடிதம் வந்தது. இந்த ரோந்து கமிட்டி ஆரம்பிக்கப்பட்டது அச்சமயம் நடந்துகொண்டிருந்த கொலைகளைச் செய்திருந்த கொலைகாரனைக் கண்டுபிடிப்பதற்காகவே. இரவுநேரங்களில் லண்டனைச் சேர்ந்த வைட்சேப்பல் பகுதியின் தெருக்களில் இந்தக் கமிட்டியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ரோந்து வருவது வழக்கம். அதுவரை கொல்லப்பட்டவர்கள் ஆறு பேரும் பெண்கள். விலைமாதுக்கள். இந்த சமயத்தில்தான் ஜார்ஜ் லஸ்க்குக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அவருக்கு இதுபோல் பல மொட்டைக் கடிதங்கள் வந்திருந்தாலும், இந்தக் கடிதத்தை மிக முக்கியமாக அவர் நினைக்கக் காரணம், அந்தக் கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பெட்டி. அந்தப் பெட்டிக்குள் இருந்தது – பதப்படுத்தப்பட்டிருந்த பாதி சிறுநீரகம்.

‘From Hell

மிஸ்டர் லஸ்க்.
இத்துடன்
ஒரு பெண்ணிடமிருந்து நான் எடுத்த
பாதி சிறுநீரகத்தை அனுப்பியிருக்கிறேன்
மீதி பாதியை வறுத்துத் தின்றுவிட்டேன். சுவையாக இருந்தது.
இந்த சிறுநீரகத்தை அறுத்து எடுத்த
ரத்தம் தோய்ந்த கத்தியை
விரைவில் நான் அனுப்ப நேரலாம்.
கொஞ்ச காலம் காத்திருக்கவும்.

இவண்ணம்
முடிந்தால் என்னைப் பிடியுங்கள் மிஷ்ட்டர் லஸ்க்’

From hell
Mr Lusk
Sor
I send you half the
Kidne I took from one women
prasarved it for you tother piece
I fried and ate it was very nice. I
may send you the bloody knif that
took it out if you only wate a whil
longer.
signed
Catch me when
you Can
Mishter Lusk.

FromHellLetter

இந்தக் கடிதத்தை கொலைகாரனேதான் அனுப்பியிருப்பதாக லஸ்க் நம்பினார். காரணம் அந்த சிறுநீரகம். இதன்பின்னர் ஐந்து கொலைகள் நடந்தன. இறந்தவர்கள் அனைவரும் விலைமாதர்கள். எப்படி இக்கொலைகள் ஆரம்பித்தனவோ அப்படியே ஒருநாள் தடக்கென்று நின்றும் விட்டன.

இன்றுவரை கொலைகாரன் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தக் கொலைகாரனுக்கு ஊடகங்கள் வைத்த பெயர்தான் – ஜாக் த ரிப்பர் (Jack The Ripper).[divider]

ஜாக் த ரிப்பர் என்னும் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு பணம் பண்ணிய எழுத்தாளர்கள் பலபேர். ஆனால் கூர்த்த கவனத்துடன் அக்காலத்திய இங்லாண்ட் அரசியலமைப்பை அவதானித்து, ஜாக் த ரிப்பரின் பின்னணியை ஆராய்ந்தவர்களும் உள்ளனர். ஆங்கில ஏலியன் படங்களைப் பார்த்திருந்தால் (குறிப்பாக மென் இன் ப்ளாக்), உலகில் நடமாடிக்கொண்டிருக்கும் ஏலியன்களைப் பற்றிக் காட்டும்போது தவறாமல் ஸ்டாலோன், மைக்கேல் ஜாக்ஸன் ஆகியவர்களையும் காட்டுவார்கள். அதேபோல் ஜாக் த ரிப்பர் பற்றி புத்தகம் எழுதியிருப்பவர்கள் பலரைக் காட்டியிருந்தாலும், ஸ்டீஃபன் நைட் என்பவரின் புத்தகம் – அவரது 25வது வயதில் எழுதப்பட்ட ஒன்று – பெயர்: ‘Jack The Ripper: The Final Solution’, பதிப்பிக்கப்பட்ட காலத்தில் (1976) பரபரப்பைக் கிளப்பியது. இந்தப் புத்தகத்தை வைத்து காமிக்ஸ் பிதாமகர் அலன் மூரால் எழுதப்பட்ட கதையே ‘From Hell’. இந்தக் கதைக்குப் படம் வரைந்தவர் எட்டி கேம்பெல். பத்து வால்யூம்களாக 1991லிருந்து 1996 வரை இந்த க்ராஃபிக் நாவல் வெளிவந்தது. இதன்பின் ஒரே புத்தகமாக.

ஸ்டீஃபன் நைட்டின் புத்தகம் என்ன சொல்கிறது என்பதை கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துவிட்டால் அதன்பின் காமிக்ஸைப் பற்றிப் பார்க்கலாம்.

1970ல், இங்லாண்டில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த தாமஸ் ஸ்டோவெல் என்பவர் சும்மா இருக்காமல் க்ரிமினாலஜிஸ்ட் என்ற பத்திரிக்கைக்கு அனுப்பிய ஒரு கட்டுரையில் இருந்து ஜாக் த ரிப்பரின் புலனாய்வு துவங்குகிறது. இந்தக் கட்டுரையில், வைட்சேப்பல் கொலைகள் நடந்த சமயத்தில் அரசியாக இருந்த க்வீன் விக்டோரியாவின் பேரனான ஆல்பர்ட் விக்டர்தான் ரிப்பர் என்று (பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல்) சில க்ளூக்கள் கொடுத்திருந்தார் ஸ்டோவெல். இளவரசர் ஆல்பர்ட் விக்டர் இளவயதில் வெஸ்ட் இண்டீஸ் சென்றபோது ஸிஃபிலிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு மனநலன் குன்றியே இக்கொலைகளைச் செய்தார் என்பது ஸ்டோவெலின் கருத்து. இதற்கு என்னய்யா ஆதாரம் என்று யாராவது கேட்டால், அச்சமயத்தில் மிகப்பிரபல மருத்துவராக இருந்த ஸர் வில்லியம் கல் என்பவர் அப்போதுஎழுதி வைத்திருந்த குறிப்புகள் அவரது மருமகனின் மூலமாக தனக்குக் கிடைத்ததுதான் காரணம் என்றார். இதன்பிறகு ஸ்டோவெல் அதே ஆண்டில் இறந்தும் போனார். அப்போதே ஸ்டோவெலின் இந்தக் குறிப்பு தவறு என்று நிரூபிக்கப்பட்டும் விட்டது. காரணம், ஆல்பர்ட் விக்டர் இறந்தது நிமோனியாவால். அதேபோல் அவருக்கு மிக உறுதியான அலிபிக்களும் இருந்தன – கொலைகள் நடந்த சமயத்தில் வேறு இடங்களில் அவர் இருந்ததாக.

இருந்தாலும், சமீபத்திய காலங்களில் ஜாக் த ரிப்பரைப்பற்றிய செய்தியை ஊடகங்களில் முதலில் பரப்பியவர் ஸ்டோவெல்தான். இதுவே ரிப்பரைப்பற்றிய பிற ஆராய்ச்சிகளுக்கும் தொடக்கமாக இருந்தது. 1973ல் BBCல் ஆறு பாக ஸீரீஸ் ஒன்று ஒளிபரப்பப்பட்டபோது அதன் இறுதி எபிஸோடில் ஜோஸஃப் கோர்மேன் என்பவரின் பேட்டி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்தப் பேட்டியில், க்வீன் விக்டோரியாவின் மகனான ஆல்பர்ட் விக்டர் தனது தாயை ரகசியமாக மணந்துகொண்டதாகவும், ஆகவே பட்டத்துக்கு உருவான இந்த ஆபத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்காக ராஜகுடும்பம் செய்த சதியே இந்தக் கொலைகள் என்றும் அவர் கூறியிருந்தார். இந்தத் திருமணத்தைப் பற்றித் தெரிந்த அத்தனைபேரும், ராஜகுடும்பத்தின் பிரபல மருத்துவராக விளங்கிய ஸர் வில்லியம் கல்லினால் கொல்லப்பட்டதாகவும் அந்தப் பேட்டியில் இருந்தது.

இந்த பிபிஸி ஸீரீஸைப் பார்த்த ஸ்டீஃபன் நைட் என்ற இளைஞன், இதன் உந்துதலால் இந்தக் கேஸை துப்பறிய முடிவு செய்தான். முதலில் ஜோஸஃப் கோர்மேனை சந்தித்துப் பேசினான். அப்போது கோர்மேன் இன்னமும் பல தகவல்களை ஸ்டீஃபன் நைட்டிடம் தெரிவித்திருக்கிறார். சுருக்கமாக: இளவரசர் ஆல்பர்ட் விக்டர், ஆன்னி எலிஸபெத் க்ருக் என்ற பெண்ணிடம் காதல்வயப்பட்டு அவளைத் திருமணம் செய்துகொண்டு, ஆலீஸ் மார்கரெட் க்ருக் என்ற பெண்குழந்தைக்குத் தந்தையானார். தனது மனைவியான ஆன்னியை லண்டனின் க்ளீவ்லாண்ட் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கவைத்தும் இருக்கிறார். இது, அப்போதைய பிரதமர் ஸாலிஸ்பரி பிரபுவுக்குத் தெரியவந்ததால், அவர் மூலமாக விஷயத்தைக் கேள்விப்பட்ட க்வீன் விக்டோரியா ஆன்னியை போலீஸ் உதவியால் பிடித்து, மனநல காப்பகம் ஒன்றில் அடுத்த முப்பது வருடங்களுக்கு அடைத்துவைக்க உத்தரவிட்டிருக்கிறார். இந்தச் சமயத்தில் குழந்தை ஆலீஸை கவனித்துக்கொண்டது மேரி கெல்லி என்ற விலைமாது. சில நாட்கள் கழித்து தன்னிடம் அரசின் வாரிசு இருக்கிறது என்ற செய்தியை இங்லாண்ட் அரசபரம்பரையினருக்குத் தெரியப்படுத்திய மேரி, பணம் கேட்டு அவர்களை ப்ளாக்மெய்ல் செய்ததாகவும், இதனால் கோபமடைந்த பிரதமர் ஸாலிஸ்பரி, மருத்துவர் ஸர் வில்லியம் கல் என்பவரை அழைத்து, விபரம் தெரிந்த எவரையும் உயிரோடு விடக்கூடாது என்று சொன்னதாகவும், இதனால் கல் அரங்கேற்றிய கொலைகளே ஜாக் த ரிப்பர் கொலைகள் என்று பிரபலம் அடைந்ததாகவும் கோர்மேன் ஸ்டீஃபன் நைட்டிடம் சொல்லி முடித்தார்.

இதையெல்லாம் கட்டுக்கதை என்று எண்ணிய ஸ்டீஃபன் குக், இந்தக் கேஸில் உள்ளே நுழைந்த சில காலத்திலேயே அவருக்குக் கிடைத்த சில தற்செயலான தகவல்களால் மனம் மாறினார். உதாரணமாக, க்ளீவ்லேண்ட் தெருவில், ரிப்பர் கொலைகள் நடந்த சமயத்தில் நிஜமாகவே ஆன்னி எலிஸபெத் குக் (க்ருக் இல்லை; குக்) என்ற பெண் வாழ்ந்திருக்கிறாள். அதேபோல் இளவரசர் ஆல்பர்ட் விக்டரின் தாய் (க்வீன் விக்டோரியாவின் மருமகள்) காதுகேளாமையால் அவதிப்பட்டார். அதேபோல் ஆல்பர்ட் விக்டரின் மகளாகக் கருதப்பட்ட ஆலீஸுக்கும் காது கேட்காது. போலவே, இந்த ஆலீஸை வளர்த்த மேரி கெல்லியின் (அரசை ப்ளாக்மெய்ல் செய்த பெண்) மரணத்தோடு கொலைகள் முடிந்துவிட்டன. ஆன்னி எலிஸபெத் குக் மனநலக் காப்பகத்தில் சேர்ந்ததும் உண்மையே. இதையெல்லாம் விட, ஸர் வில்லியம் கல்லுக்கு திராட்சைகள் என்றால் பிடிக்கும். அதேபோல, கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணின் போஸ்ட்மார்ட்டத்தில் அவள் திராட்சைகள் சாப்பிட்டதாக அறிக்கை வந்திருக்கிறது. கொலைகள் நடந்த சமயத்தில் ராபர்ட் ஜேம்ஸ் லீஸ் என்ற க்ளார்வாயண்ட் (அமானுஷ்ய சக்தி படைத்தவர்), கொலைகாரனான ரிப்பரின் அங்க அடையாளங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவையெல்லாம் அப்படியே ஸர் வில்லியம் கல்லுக்குப் பொருந்தின.

இதன்பின்னர்தான் தனது புத்தகத்தை எழுதத் துவங்கினார் ஸ்டீஃபன் குக். அந்தப் புத்தகமான ‘Jack The Ripper: The Final Solution’ என்பது 1976ல் வெளிவந்தது.

இந்தப் புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் பலரால் மறுக்கப்பட்டுவிட்டன. இதன்பின்னரும் பல புத்தகங்கள் எழுதப்பட்டுவிட்டன. ஆனால் இன்றுவரை ஜாக் த ரிப்பர் பற்றிய கதைகளோ படங்களோ இந்தப் புத்தகத்தை வைத்துதான் வெளிவந்திருக்கின்றன. அத்தனை பிரபலமான புத்தகம் இது.

இத்தனை தகவல்களும் அவசியம் இந்த க்ராஃபிக் நாவலைப் பார்ப்பதற்கு முன்னர் தேவைப்படும். அப்போதுதான் இந்த நாவலைப் பற்றி அலச முடியும் என்பதால்.

அடுத்த கட்டுரையில் க்ராஃபிக் நாவலைப் பார்த்து முடிப்போம்.

தொடரும்…

 

உதவிய பக்கம் –  http://en.wikipedia.org/wiki/Jack_the_Ripper:_The_Final_Solution

  Comments

7 Comments

  1. raman

    வணக்கம் . சில வருடங்களுக்கு முன்பு நான் ஏதோ ஒரு சானலில் ஒரு ஆங்கில படம் பார்த்தேன் . அதில் நாயகன் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து மறைந்து கொள்வான். பின்னர், அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பான் , அந்த பெண் அசிங்கமாக என்னவெல்லாமோ செய்வாள். உதாரணம், நிறைய உண்டு விட்டு வாந்தி எடுப்பாள் . அது என்ன படம் , ஒருவர் தனிமையான அறையில் என்ன செய்யக்கூடும் என்பதை சொல்வது போன்று இந்த படக்கதை இருக்கும்.அந்த படத்தின் பெயர் உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் சொல்லவும் .நன்றி.

    Reply
    • Rajesh Da Scorp

      வணக்கம் ராமன்.. நீங்கள் சொல்லும் படம் எனக்குத் தெரியவில்லை. இதுவா என்று பாருங்கள் —> http://www.imdb.com/title/tt0097503/

      Reply
  2. dany

    thanks mr black scorp

    Reply
  3. thala from hell padatha 2009 il thedi pidichu paarthen. jhonny depp enakku romba pidicha hero. aanaa kathai puriyala. ippo puriyuthu

    Reply
    • Rajesh Da Scorp

      Yes Yuvan. அந்தக் கதை கொஞ்சம் காம்ப்ளிகேட்டடா தான் இருக்கும்.

      Reply
  4. seetheavatar

    Karundhel it is not Sor,it is Sir,his ‘r’ is written in old format.if you see other ‘r’ in the letter you will notice

    Reply
    • Rajesh Da Scorp

      Might be true. It might have been written in old format. But the references I did all pointed out that it’s ‘sor’.. ANyway, your point indeed has a point in itself Seetheavatar.. Thank you for the input 🙂

      Reply

Join the conversation