Game of Thrones (2011) – TV Series

by Karundhel Rajesh September 24, 2011   TV

கோடை முடியும் நேரம். பனிக்காலம் ஆரம்பிக்கப்போவதன் அறிகுறிகள் எங்கும் தென்படுகின்றன. மெல்லிய பனி தூவிக்கொண்டிருக்கிறது. கருங்கோட்டை என்று அழைக்கப்படும் அந்தக் கோட்டையின் கீழ் உள்ள நிலவறையின் கதவுகள் பெரும் சத்தத்துடன் திறக்கின்றன. கதவுகளுக்குப் பின்னால் – கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பனியில் அமிழ்ந்த மரங்கள். அந்தக் காட்டின் பெயர் – The Haunted Forest. நிலவறை முடிவடையும் இடத்தில், இந்தப் பேய்க்காட்டின் எல்லை தொடங்குகிறது. திறக்கப்பட்ட கதவுகளின் வழியே, சில மனிதர்கள், கத்திகளை உயர்த்தியபடியே, எச்சரிக்கையுடன் வெளிவருகின்றனர். ஒவொருவரும் ஒவ்வொரு வழியாக அந்தக் காட்டினுள் நுழைகின்றனர். அதில் ஒருவன் மட்டும், சற்றே மேடாக இருக்கும் ஒரு பகுதியின் மேல் ஏற எத்தனிக்கிறான். அதன் மறுபகுதியான பள்ளத்தில், கும்பலாக சிதறிக்கிடக்கும் அவை…….. என்ன?

முகமெங்கும் பீதியுடன் ஓடத் தொடங்குகிறான் அவன். நிலவறைக் கதவை அடைந்துவிடவேண்டும் என்பது அவன் எண்ணம். அவனுடன் வந்தவர்களில் ஒருவனது அலறல், வெகுதூரத்தில் கேட்கிறது. இதைக் கேட்டவுடன், அம்மனிதனின் வேகம் இன்னமும் அதிகரிக்கிறது.

ஓடிக்கொண்டிருக்கும் அவன் முன் திடீரென்று எதுவோ விழுகிறது.

தட் . . . . .

ரத்தம்…… அலறல்கள் …….. பீதி……. அம்மனிதனின் முகத்தை இறுதியாக, வெகு அருகில் காண்கிறோம். கண்களெங்கும் பயம். மரணம் உறுதி என்று தெரிந்துவிட்ட, வெளிறிப்போன முகம்.

Welcome to the Game of Thrones.

வெஸ்டரோஸ் கண்டம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன். ராபர்ட் பேரதார்ன் என்ற மன்னனின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வெஸ்டரோஸ் கண்டத்தில் அமைந்திருக்கும் ஏழு நாடுகளுக்கும் தலைமை மன்னன் அவன். வெஸ்டரோஸ் கண்டத்தின் வடபுறத்தில் அமைந்துள்ள Winterfell என்ற நகரத்தை, ராபர்ட்டின் உற்ற நண்பன் நெட் ஸ்டார்க் ஆட்சிபுரிந்துவருகிறான். ராபர்ட், தனது நகரமான Kings Landingகில் இருந்து ஒரு மாதம் பயணம் செய்து, தன்னைக் காண வருகிறான் என்ற செய்தி நெட் ஸ்டார்க்குக்குக் கிடைக்கிறது. நெட்டைப் பார்க்க வரும் ராபர்ட், தன்னுடன் தலைநகரத்துக்கு நெட் வரவேண்டும் என்றும், தனக்கு அடுத்தபடியாக மிகச்சக்திவாய்ந்த அரசுப்பொறுப்பை நெட் ஏற்றுக்கொண்டு, ஆட்சியில் உதவிபுரியவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறான். உற்ற நண்பன் கேட்கும் உதவியை நெட்டால் மறுக்க முடிவதில்லை. தனது மனைவியின் எச்சரிக்கையையும் மீறி, மன்னன் ராபர்ட்டுடன் தலைநகரம் பயணிக்கிறான் நெட்.

ராபர்ட்டின் மனைவியின் பெயர் செர்ஸெய். அவளுக்கு ஒரு இரட்டைச் சகோதரன் உண்டு. பெயர் ஜெய்மி. செர்ஸெயின் இன்னொரு சகோதரன், நான்கு அடியே உள்ள குள்ள மனிதன் ஒருவன். அவனது பெயர் – டிரியன்.

நெட்டின் பத்து வயது மகன், அரண்மனை மதில் சுவரில் இருந்து கீழே விழுந்து, இடுப்புக்குக் கீழ் செயலிழந்துபோய்விட்ட விஷயம், தலைநகருக்குப் போய்க்கொண்டிருக்கும் நெட்டுக்குக் கிடைக்கிறது. மூன்று வாரங்கள் கழித்துக் கண்விழிக்கும் நெட்டின் மகன், நடந்தது எதுவும் நினைவில்லை என்று சொல்லிவிடுகிறான். அதேசமயத்தில், அவனைக் கொல்லமுயலும் கொலையாளி ஒருவன், பிடிபடுகிறான். அவனிடம் இருப்பது, மாமன்னன் ராபர்ட்டின் மனைவி செர்ஸெயின் குள்ள சகோதரன் டிரியனின் கத்தி. டிரியன் தான் தனது மகனை மதிலில் இருந்து தள்ளிவிடக் காரணம் என்று புரிந்துகொண்டு, இதனைத் தனது கணவனிடம் சொல்லுவதற்காகத் தலைநகர் நோக்கிப் பயணப்படுகிறாள் நெட்டின் மனைவி கேட்லின்.

இதற்கிடையில், நெட்டுக்கு, வேறொரு பெண்ணின் மூலம் பிறந்த மகனான ஜான் ஸ்நோ என்பவன், நெட் ராபர்ட்டோடு தலைநகர் பயணிக்கையில், நாட்டின் வட எல்லையான கறுப்புக் கோட்டைக்குப் பயணப்படுகிறான். இந்தக் கோட்டையோடு வெஸ்டரோஸ் கண்டத்தின் எல்லை முடிகிறது. எல்லை முடியுமிடத்தில் இருப்பது ஒரு மாபெரும் மதில்சுவர். முன்னூறு மைல் நீளமும், எழுநூறு அடி உயரமும் கொண்டு, பனியாலும் மண்ணாலும் கட்டப்பட்ட சுவர் இது. இந்தச் சுவர் கட்டப்பட்டதன் காரணம், சுவருக்கு அப்பால் இருக்கும் பேய்க்காட்டிலிருக்கும் பல அமானுஷ்ய சக்திகள், வெஸ்டரோஸ் கண்டத்துக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். கதை நடப்பதில் இருந்து எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சுவர் இது. அப்போதிருந்து இன்றுவரை எந்தச் சக்தியும் இந்தச் சுவரைத் தாக்கியதில்லை. ஆகவே, காலப்போக்கில், காவல் செய்யும் காரணம் மறந்து, இந்தக் கறுப்புக் கோட்டை, ஒரு தண்டனைக்குரிய இடமாக மாறிவிடுகிறது. நாட்டில் உள்ள கருங்காலிகள், திருடர்கள், கொலைக்குற்றவாளிகள் ஆகியவர்கள், அரசால் இங்கு அனுப்பப்படுவார்கள். இந்தச் சுவரைக் காப்பதே அவர்களது வேலை. அவ்வப்போது சுவரைத் தாண்டியிருக்கும் பேய்க்காட்டிற்குள்ளும் ரோந்து செல்லவேண்டும். எதாவது ஆபத்து நெருங்கினால், உள்ளே வந்து வெஸ்டரோஸ் கண்டத்தை எச்சரிக்க வேண்டும். இதுவே அவர்களது வேலை.

இந்தக் கோட்டைக்குத்தான் நெட்டின் மகனான ஜான் ஸ்நோ வருகிறான். அங்கிருக்கும் தீய மனிதர்களை, மெல்ல மெல்ல போர்ப்பயிற்சி கொடுத்து, வீரர்களாக மாற்றுகிறான் ஜான்.

இது ஒருபுறமிருக்க, மன்னர் ராபர்ட்டால் துரத்தப்பட்ட அரியணையின் நிஜ வாரிசான இளவரசன் ஒருவன், கடல்கடந்து சென்று, கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு தீவில் உள்ள காட்டுவாசிகளின் அரசனான க்ஹால் த்ரோகோ என்பவனுக்கு, தனது தங்கையான டயனேயர்ஸ் என்பவளை மணமுடித்துவைக்கிறான். த்ரோகோவின் படைகளை வைத்து, இழந்த நாட்டை மீட்கலாம் என்பது அவனது குறிக்கோள்.

மேலே நாம் கண்ட மூன்று கதைகளும் – மாமன்னர் ராபர்ட்டும் நண்பர் நெட்டும் தலைநகரில் என்ன செய்தார்கள் – வடகோடி எல்லையான கருங்கோட்டைக்குச் சென்ற நெட்டின் மகன் ஜான் ஸ்நோவின் சாகஸங்கள் – க்ஹால் த்ரோகோவை மணந்த டயனேயர்ஸின் அனுபவங்கள் – ஆகிய மூன்று கதைகள் ஒன்றுசேரும் புள்ளியே Game of Thrones.

படு விறுவிறுப்பான இந்த HBO ஸீரீஸ், இந்த ஏப்ரில் மாதத்தில் திரையிடப்பட்டது. மிகுந்த வரவேற்பையும் பெற்றது. ஒரே மூச்சில் அமர்ந்து முதல் ஸீஸனின் பத்து எபிஸோட்களையும் பார்க்கும் அளவு விறுவிறுப்பான கதை இது.

உண்மையில், இது, George Martin என்பவர் எழுதிய நாவல்களான A Song of Ice and Fire என்பவற்றைத் தழுவி எடுக்கப்பட்ட தொலைக்காட்சி ஸீரீஸ். இந்த ஸீரீஸில் இதுவரை மொத்தம் ஐந்து நாவல்கள் வெளிவந்துவிட்டன. ஆறாவது நாவலை அவர் எழுதிக்கொண்டிருக்கிறார். ஏழாவது நாவல்தான் இந்த ஸீரீஸில் இறுதியானது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாவலுக்கும் ஒவ்வொரு ஸீரீஸ் எடுக்கப்படும் என்று HBO அறிவித்துள்ளது.

இந்த முதல் ஸீஸனின் specialty என்னவெனில், கொஞ்சம் கூட அலுக்காத முறையில் இதன் பத்து எபிஸோட்களையும் எடுத்துள்ள விதம்தான். ஒவ்வொரு எபிஸோடிலும், விறுவிறுப்பு நிறைந்த பல காட்சிகள் உள்ளன.

பொன்னியின் செல்வன் நாவலில், முதல் பகுதியின் ஆரம்ப சில அத்தியாயங்களில், சுந்தர சோழரின் ஆட்சிக்குப் பலவகையிலும் நேரும் ஆபத்துகளையும் சதிச்செயல்களையும் பற்றி அறியலாம். அதேபோல், இதிலும், மாமன்னன் ராபர்ட்டின் ஆட்சிக்குப் பல்வேறு பகுதிகளிலும் கிளம்பும் எதிர்ப்புகளை அவனது நண்பன் நெட் எப்படிச் சமாளிக்கிறான் என்பதே பெரும்பகுதி.

நெட்டாக நடித்துள்ளவர், பிறவி வில்லன் ஷான் பீன் (Goldeneye மற்றும் Lord of the Rings – போரோமிர்). போரோமிரே எழுந்துவந்துவிட்டதுபோல், இதிலும் அதே கெட்டப். ஆனால், மிக அருமையான, மெச்சூர்டான நடிப்பு.

இந்த ஸீரீஸில் குறிப்பிடத்தகுந்த நபர் – ராபர்ட்டின் மனைவியின் குள்ள சகோதரன் டிரியனாக நடித்துள்ள பீட்டர் டிங்க்லேஜ் (Peter Dinklage). இவரது நடிப்பைக் கவனித்துப் பாருங்கள். நான்கே அடி உயரமான மனிதன் ஒருவன், பிறவி சகுனியாக சக்கைப்போடு போடுவதைக் காண்பீர்கள். சகுனி என்றது, இக்கதாபாத்திரத்தின் குயுக்திக்காக. ஆனால், இது ஒரு நல்ல குணம் படைத்த கதாபாத்திரமே.

தவறவே விட்டுவிடக்கூடாத ஒரு ஸீரீஸ் இது. இப்போதுதான் முதல் ஸீஸன் முடிந்துள்ளது. இன்னும் ஆறு ஸீஸன்கள் உள்ளன.

Game of Thrones நாவல்களையும் தவறாமல் படியுங்கள். நான் ஆரம்பித்தாயிற்று. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் போலவே, இதிலும் பல mapகள் உண்டு. இந்தத் தளத்துக்குச் சென்று ஆராயலாம்.

Game of Thrones முதல் சீசனின் ட்ரய்லர் இங்கே காணலாம்.

பி.கு – இதன் அட்டகாசமான டைட்டில்களைக் காணத் தவறாதீர்கள். இந்த ஸீரீஸைப்பற்றித் தெரிந்தது, ஹாலிவுட் பாலா எனக்குப் பின்னூட்டியிருந்த ஒரு லின்க்கில்தான்.

  Comments

14 Comments

  1. இதுவரை 7 எபிசோடுகள் பார்த்துள்ளேன். எதிர்பாராத திருப்பங்களும், ஒவ்வொரு முடிச்சுகளும் அவிழும் தருணங்களும் அருமை.

    English TV சீரியல்களுக்கு அடிமையாகிவிடுவேனோ என பயமாக உள்ளது.

    Reply
  2. நீங்க Dexter சீரியல் பாத்து இருக்கீங்களா…செமத்தியா இருக்கும்……Don’t miss it…

    Reply
  3. @ ஜலீல் – 🙂 அது பரவாயில்லை. நம்ம ஊரு அழுவாச்சி சீரியல் கம்பேர் பண்ணும்போது ஹாலிவுட் சீரியலுக்கு தாராளமா அடிமை ஆகலாமே 🙂

    @ யோஜிம்போ – டெக்ஸ்டர் – என்னோட பிடித்தமான சீரியல்ல ஒன்னு. பார்த்தாச்சு. முதல் இரண்டு பார்ட் எனக்கு ரொம்பப் புடிச்சது. ஆனா அதுக்கப்புறம் கொஞ்ச்சம் ஸ்லோ ஆனமாதிரி ஃபீலிங் . நன்றி .

    Reply
  4. நா முழுசா படிக்கலா……….முதல் – ரெண்டாவது (கொஞ்சம் மூனாவதும்)…………..நச்சுன்னு இருப்பதால், பாத்துட்டு அப்பறம் படிச்சுகுறேன்……..HBOல அடிகடி போட்டாங்க…….ஸ்பார்டகஸ் மாதிடி மொக்கையா இருக்கும்னு நெனச்சு வுட்டேன்..

    அப்பறம், ஆங்கில சீரியல்கள்………..அதுவும் ஸ்டீரியோடைபிக்காக இருக்குற மாதிரி தான் எனக்கு தெரியுது…..

    Two & half menலாம் ரெண்டு – மூனு தொடர் வரை பாக்க முடியுது…….அப்பறம், ஒரேவகையான ஒன்-லைனர்கள் என்னமோ ஈர்ப்பு கொறஞ்ச மாதிரி இருக்கு…….

    // இதன் அட்டகாசமான டைட்டில்களைக் காணத் தவறாதீர்கள். இந்த ஸீரீஸைப்பற்றித் தெரிந்தது, ஹாலிவுட் பாலா எனக்குப் பின்னூட்டியிருந்த ஒரு லின்க்கில்தான் //

    அந்தாளுக்கு இதே வேலையா……….எல்லார்ட்டயும் இத கேட்டிருப்பாறு போல….பாத்தாச்சா, பாத்தாசானு

    Reply
  5. @ john peter – fantastic ! I saw the trailer, and it’s gr8 !! I’ll get the game DVD for sure …. thanx for the info. BTW, it’s true that I luv first person games. But Real time strategy games are my cup of tea too, sometimes. I luvd AOE !! Even now, I’d play AOE in the network if someone joins me 🙂

    Reply
  6. http://kanuvukalinkathalan.blogspot.com/2011/07/blog-post.html

    Game of Thrones பற்றிய காதலரின் பதிவு – இதை சுத்தமாக மறந்துவிட்டேன். இப்போதுதான் அவரது தளத்தில் இதைப் பார்த்து, இங்கே பகிர்கிறேன்.

    Reply
  7. @karundhel
    It has crossed five seasons….and the interest grows bigger as it goes….season four and five are top class….

    Reply
  8. சொல்லிட்டீங்க இல்ல. பார்த்துடுறேன். மூணாவது சீசன் எனக்குப் புடிக்கல. அதுனால அத்தோட விட்டுட்டேன். 4 & 5 கட்டாயம் பார்த்துடுறேன்.

    Reply
  9. @karundhel

    AOE is my all time favo… man i use to play day and nights… felt sad when microsoft closed ensemble studios…

    i’m not good at the controls on the fs games, more of a RTS player which uses mouse for most commands… 🙂

    super, so we can expect a review for the thrones game… 🙂

    Reply
  10. its my favorite. thx for the share

    Reply

Join the conversation