Game of Thrones: Season 2 (2012) – English

by Karundhel Rajesh June 18, 2012   TV

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களில் (என்னது மறுபடியும் லார்ட் ஆஃப் த ரிங்ஸா என்று அலறிவிடாதீர்கள். சும்மா ஒரு சின்ன reference தான்) டோல்கீன் உருவாக்கியிருந்த மிடில் எர்த் என்ற உலகை அந்த நாவல் படித்திருக்கும் வாசகர்கள் மறந்திருக்க முடியாது. தற்போதைய உலகின் காலத்துக்கு ஆறாயிரம் வருடங்கள் முன்னர் ‘ஆர்டா’ என்ற உலகத்தை சிருஷ்டி செய்து, அதன் ஒவ்வொரு இடத்தையும் துல்லியமாக அமைத்து, அந்த உலகில் நடப்பதாக டோல்கீன் எழுதியிருக்கும் சம்பவங்கள் படிப்பவர்களின் மனதை விட்டு அகலாதவை. இந்த நாவல்களை ஜார்ஜ் மார்டின் என்ற நபரும் படித்து, அந்தக் கற்பனைகளின் உலகங்களில் மூழ்கியிருந்தார். இவர் பெரும்பாலும் Science Fiction  கதைகளையே எழுதி வந்திருந்தாலும், ஹாலிவுட்டிலும் ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டராகவும் இருந்துவந்தார். அந்தக் காலகட்டத்தில், ஒருநாள் (1991) திடீரென மார்டினுக்கு ஒரு கற்பனை தோன்றியது. ஒரு சிறுவன், ஒரு மனிதனின் தலை கொய்யப்படுதலை நேரில் காண்பதாகவும், அவனது நாட்டில் பனியில் பெரும் ஓநாய் குட்டிகளை (Dire-Wolf என்று அழைக்கப்படும் இந்த ஓநாய்கள், பத்திலிருந்து ஒன்பது மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்ட ஒரு பிரம்மாண்ட ஓநாய் இனம். ஐந்தடி நீளமும், கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து கிலோ எடையோடும் வாழ்ந்த ஜீவன்கள் இவை என்று விகிபீடியா சொல்கிறது) கண்டெடுப்பதாகவும் தோன்றிய ஒரு சிறிய கற்பனையை ஊதி ஊதி பெரிதாக்கிய மார்டின், சில வருடங்கள் கழித்து 1994ல் ஒரே மூச்சில் அமர்ந்து 1400 பக்கங்களை எழுதினார் (இவர்தான் உண்மையில் பிரபல பதிவர்களின் தந்தையோ?). அப்படியும் அவரால் அந்த நாவலை முடிக்க முடியாததால், மூன்று பாகங்களாக ஆரம்பத்தில் எழுத நினைத்த நாவலை, நான்கு பாகங்களாக மாற்றி, அதன்பின் ஆறு பாகங்களில் முடித்துவிடலாம் என்று எண்ணி, அதுவும் நடக்காமல் ஏழு பாகங்களில் முடிப்பதாக ஒரு தற்காலிக முடிவெடுத்து, இப்போது இந்நாவலின் ஆறாவது பாகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார் (இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்த ஒவ்வொரு சீரீஸும் குறைந்தபட்சம் ஆயிரம் பக்கங்கள் கொண்டிருப்பதே).

இந்த நாவல்கள் சரித்திர காலத்தில் ஒரு கற்பனை நாட்டின் சிம்மாதனத்துக்கு நடக்கும் வாரிசுரிமைப் போர் ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்டவை.

அந்த நாட்டின் பெயர் – வெஸ்டரோஸ் (Westeros).

வெஸ்டரோஸ் என்ற இந்தக் கண்டம், ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்குப்பகுதி, இரும்புத் தீவுகள் (Iron Islands), ஆற்றுப்பகுதிகள் (Riverlands), the Westerlands, the Vale of Arryn, the Stormlands, the Crownlands, the Reach மற்றும் Dorne. இந்த ஒன்பது பகுதிகளும், ஒவ்வொரு பரம்பரையினரால் ஆளப்பட்டுவருகிறது. இந்த ஒன்பது பிராந்தியங்களுக்கும் சேர்த்து ஒரு மன்னன். அந்த மன்னனின் அரசவை அமைந்திருக்கும் நாட்டின் பெயர் – கிங்’ஸ் லாண்டிங் (King’s Landing).

நமது கதை நடக்கும் காலத்துக்கு முன்னூறு வருடங்களக்கு முன்னர், டார்காரியன்கள் (Targaryans) என்னும் இனத்தினர், அக்காலகட்டத்தில் உயிரோடு இருந்த மூன்றே மூன்று கடைசி டிராகன்களை வைத்துக்கொண்டு கிங்’ஸ் லாண்டிங்கில் வந்து இறங்கி, ஆட்சியைக் கைப்பற்றினர். அந்த இனத்தவரிடமிருந்து, ஒரு புரட்சியின் வாயிலாக, ராபர்ட் பராதியன் (Robert Baratheon) என்ற மனிதன், அவனது உற்ற நண்பனான எட்டார்ட் ஸ்டார்க் (Eddard Stark)கின் உதவியோடு, அப்போதைய மன்னன் ஏரிஸ் (Aerys) என்பவனைக் கொன்று (ஏரிஸைக் கொன்றவன், ராபர்ட்டின் மனைவியின் சகோதரன் ஜைமி), ஆட்சியைக் கைப்பற்றினான்.

கண்டத்தின் வடக்குப்பகுதியில், ஒரு மிகப்பெரிய சுவர் உள்ளது. நமது இமயமலையைப்போல், இந்த கண்டத்தை வெளியிலிருக்கும் சில கொடிய சக்திகளிடமிருந்து காக்கும்வண்ணம் இந்த சுவர் அமைந்துள்ளது. இந்த சுவரின் நீளம் – 480 கிலோமீட்டர்கள். உயரம் – 700 அடி. இந்தச் சுவரின்மீது காவல்புரிந்து நாட்டைக் காக்கும் மனிதர்களின் பெயர் – The Night Watch. பல பரம்பரைகளாக இங்கேயே பிறந்து இதே வேலையில் ஈடுபடுபவர்கள் இவர்கள். கூடவே, சில கொடிய குற்றங்கள் இழைத்தவர்களும் இங்கே அனுப்பிவைக்கப்படுவதுண்டு. இந்த வடக்குப்பகுதியை ஆள்பவர்கள் – ஸ்டார்க் (Stark) என்று அழைக்கப்படும் ராஜகுடும்பத்தினர். இவர்களது தலைவனே நாம் ஏற்கெனவே பார்த்த எட்டார்ட் ஸ்டார்க்.

இந்தக் காலகட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்டவையே இந்த நாவல்கள். சென்ற வருடம், முதல் நாவலை மையமாக வைத்து ஒரு டிவி சீரீஸ் HBOவினால் எடுக்கப்பட்டது. அதன் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்த வருட ஆரம்பத்தில் இரண்டாம் சீரீஸ் ஒளிபரப்பப்பட்டது.

முதல் சீரீஸைப் பற்றிய எனது கட்டுரையைப் படிக்க, இங்கே க்ளிக்கலாம்.

முதல் சீரீஸில் என்ன நடந்தது? மிகச்சுருக்கமாக, அரசன் ராபர்ட் பராதியன் இறந்துவிட, எட்டார்ட் ஸ்டார்க், வடக்கிலிருந்து வந்து, ஆட்சியை சீரமைக்க உதவுகிறார். ஆனால் அவருக்கு ஒரு கொடிய உண்மை தெரியவருகிறது. இறந்துபோன மன்னன் ராபர்ட்டின் மனைவி செர்ஸிக்கும் அவளது சகோதரன் ஜைமிக்கும் உடல்ரீதியான தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பின் காரணமாகப் பிறந்தவர்கள்தான் ராபர்ட்டின் மூன்று குழந்தைகளும். ஆகவே, ராபர்ட்டின் மரணத்துக்குப் பிறகு,வாரிசாகவேண்டிய உரிமை இவர்களுக்கு இல்லை. ஒருவேளை ராபர்ட்டுக்கு வேறு ஏதாவது தொடர்பின் மூலம் குழந்தை பிறந்திருக்கிறதா என்று ஆராயும் எட்டார்டுக்கு, ராபர்ட்டின் குழந்தை ஒன்று, ஒரு இரும்புக்கடையில் எடுபிடியாக வேலைசெய்துகொண்டிருக்கும் உண்மை தெரியவருகிறது. எனவே, எங்கே எட்டார்ட் அத்தனை உண்மைகளையும் வெளியே சொல்லிவிடுவாரோ என்று பயந்து, செர்ஸி அவருக்கு தேசத்துரோக பட்டம் கட்டி, அவரது தலையைக் கொய்துவிடுகிறாள். ஆகவே, செர்ஸிக்கும் அவளது சகோதரன் ஜைமிக்கும் பிறந்த மூத்த மகனான ஜோஃப்ரி, மன்னனாக முடிசூடப்படுகிறான். இதை எதிர்த்து இறந்துபோன எட்டார்ட்டின் மகன் ராப் பெரும்படையைத் திரட்டி, கிங்’ஸ் லாண்டிங் நோக்கி வருகிறான். இறந்த மன்னன் ராபர்ட்டின் சகோதரன் ஸ்டான்னிஸ் பராதியன், தன்பங்குக்கு இன்னொரு படையைத் திரட்டி, ஆட்சியைக் கைப்பற்ற முடிவுசெய்கிறான். இதுதவிர, ஜைமியினால் கொல்லப்பட்டு, ராபர்ட்டின் புரட்சியில் வீழ்ந்த பழைய மன்னன் ஏரிஸின் மகள் டனேரிஸ் டார்கேரியன், மூன்று குட்டி டிராகன்களை வளர்த்து, தன்னுடன் ஒரு சிறிய படையை சேர்த்துக்கொண்டு, ஆட்சியைக் கைப்பற்ற முடிவு செய்கிறாள்.
இப்படி நாலாபக்கமும் அரியணையைக் கைப்பற்ற விரும்பும் வாரிசுகளின் மத்தியில் முதல் சீரீஸ் முடிந்தது.

இரண்டாம் சீரிஸில் என்ன நடக்கிறது? இந்த ஒவ்வொரு வாரிசுகளின் வாழ்விலும் சில பக்கங்களை நமக்கு அளிக்கிறது இந்த இரண்டாம் சீரீஸ். கிங்’ஸ் லாண்டிங் நோக்கி முன்னேறி வந்துகொண்டிருக்கும் இந்த ஒவ்வொருவரின் படிகளிலும் என்ன நடக்கிறது? கிங்’ஸ் லாண்டிங்கில் இருப்பவர்கள் இவர்களை எப்படி சமாளிக்க முயல்கிறார்கள்? இவர்களுக்குள் என்னென்ன சதித்திட்டங்கள் அரங்கேறுகின்றன? ஒவ்வொரு வாரிசும் அடுத்தவர்களை எப்படி வேரறுக்க முயல்கிறார்கள்? இத்தனை விஷயங்களும் மிக சுவாரஸ்யமாக நம்முன் வைக்கப்படுகின்றன.

இந்த சீரீஸின் பிரதான அம்சம் என்ன? சந்தேகமில்லாமல், இந்த இரண்டாம் சீரீஸ் நெடுக வளையவரும் மனிதர் ஒருவர்தான். கிங்’ஸ் லாண்டிங்கில் இருந்துகொண்டு, தன்னை நோக்கி வரும் இந்த வெவ்வேறு வாரிசுகளின் படைகளையும் முறியடிக்க பிரமாதமான திட்டங்கள் தீட்டி, மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக இவரது வியூகங்களை நிறைவேற்றும் ராஜதந்திரி இவர். உயரத்தில் வெறும் மூன்றரையடியே இருக்கும் இவர், அரசி செர்ஸியின் மற்றொரு சகோதரர். குள்ளமாகப் பிறந்ததால் அனைவராலும் கேலிசெய்யப்பட்டு ஒதுக்கப்படும் இவர்தான் இந்த இரண்டாம் சீரீஸின் அட்டகாசமான பாத்திரம். இவரது பெயர் – டிரியன் லானிஸ்டர் (Tyrion Lannister).

இவரைத் தவிர இந்த சீரிஸில் மேலும் பல கதாபாத்திரங்கள் உண்டு. முதல் சீரீஸைப் பற்றிய கட்டுரையில் இந்தக் கதாபாத்திரங்களைக் காணலாம்.

இந்த சீரீஸின் முடிவும், இதற்கு மேல் வரப்போகும் (குறைந்தபட்சம்) ஐந்து சீரீஸ்களைப் பற்றிய எதிர்பார்ப்பில் நம்மை ஆழ்த்துகின்றன. ஆனால் மூன்றாம் சீரீஸ் வெளியாக இன்னும் ஒரு வருடம் ஆகும் என்பதால், மூன்றாம் பாகத்தை நாவலாகவே வாங்கிவிட்டேன். விரைவில் அதனைப் படித்துவிட்டு, அதனைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுத முயல்கிறேன். அதன்பின் ஒவ்வொன்றாக இந்த நாவல்களைப் படித்துவிட்டு எழுதுவதே நோக்கம்.

தவறவே விடக்கூடாத தொலைக்காட்சி சீரீஸ்களில் Game of Thrones கட்டாயம் ஒரு முக்கியமான சீரீஸ் எனலாம்.

Game of Thrones Season 2 – ட்ரெய்லர் இங்கே.

இந்த கதைகளில் வரும் பரம்பரைகளைப் பற்றிய ஒரு விரிவான வரைபடம் இங்கே. இதனைப் பார்த்துவிட்டே கூட இந்த சீரீஸைப் பார்க்கத்துவங்கலாம்.

Note – Game of Thrones Genealogy poster taken from here

  Comments

13 Comments

  1. என்னடா games of thrones season2 ஆரம்பிச்சாச்சு இன்னும் அண்ணாத்த ஒன்னும் சொல்லலையே பார்த்தேன் சொல்லிடோர்…நான் Episode 4- Garden Of Bones வரை பார்த்து உள்ளேன் அதுக்கு பின்னர் பார்க்க முடியலை…///(என்னது மறுபடியும் லார்ட் ஆஃப் த ரிங்ஸா என்று அலறிவிடாதீர்கள்.///
    அட நீங்க எத்தனை முறை எழுதினாலும் அடிச்சு புடிச்சுகிட்டு படிக்க தான் வருவோம் அண்ணா…////இவர்தான் உண்மையில் பிரபல பதிவர்களின் தந்தையோ?/////இருக்கும் ஒரே அடியாய் 1400 எழுதுராய்களே மனுசனா இங்க ஒரு போஸ்ட் போடவே முடியலை…பயபுள்ள 7 பாகம் சொல்லிபுட்டு பத்து பாகமா எழுதிட போராய்க…

    Reply
  2. சுவாரஸ்யமாகவே உள்ளது.
    நீங்கள் ஏன் Taken படத்தைப் பற்றி எழுதவில்லை?
    அப்புறம் 3 இடியட்ஸ், தாரே சமீன் பர் ?
    நேரம் இருந்தால் என் தளத்தை பார்வையிட்டு விமர்சிக்கவும். http://spraymythoughts.blogspot.in

    Reply
  3. well written as usual… And Peter was awesome in his role as Tyrion Lannister. He has an amazing screen presence inspite of his dwarfism !

    Reply
  4. சினிமாவைப் பற்றிய தங்கள் அறிவு மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. நீங்கள் ஏதாவது விந்தையான விஷயத்தை பற்றி தொடர் எழுதுங்களேன் ( ஒரு வேண்டுகோள் !).

    Reply
  5. முதல் சீசனை போன மாசம் தான் பார்த்து முடிச்சேன் .., ரூம்ல நெட் இல்லாத்தால Castro Karthi ரூம்க்கு தான் படை எடுக்கனும் அடுத்த சீசன் வாங்க…,

    Reply
  6. போன மாசம் தான் ஃபர்ஸ்ட் சீசன் பார்த்து முடிச்சேன் செமையா இருந்துச்சு செகண்ட் ஸ்டார்ட் பண்ணனும்.., இத நம்ம ஊர் H.B.O ல போட போறாங்களாமே எப்புடி சென்சார் பண்ண போறாங்க.. ??,

    Reply
  7. And Stannis Baratheon is missing from the family tree… nangalum kutham kandu pudippom

    Reply
  8. yeah really sad! 2nd season hv ended, dont worry breaking bad final season starts from july 15th,if u like Tyrion Lannister( dont miss The Station Agent & Death at a Funeral (2007 frank oz) not u.s version)

    & just curious where u did u r U.G

    Reply
  9. thalaiva vishwaroopam trailer released so please tell which movbie copycat…am regular one of ur blog reader ….u changed my thoughts ……..abt kamal thanks fr tat

    Reply
  10. i liked game of thrones more, than i liked lord of the rings. the complex story and variety of characters is the main reason for this.
    kamal anjelo

    Reply
  11. @ chinna malai – ஹாஹா 🙂 . சூப்பர். பாக்கி எபிஸோடையும் ஒண்ணொண்ணா பாருங்க. பார்த்துபுட்டு சொல்லுங்க

    @ சரவணகுமார் – தாரே ஸமீன் பர் மற்றும் 3 இடியட்ஸ் பற்றி சொல்லவேண்டும் என்றால், தாரே எனக்குப் பிடித்தது. பாப்புலர் படம் என்பதால் எழுதவில்லை. 3 இடியட்ஸ் எனக்கு அந்த அலவு பிடிக்கவில்லை நண்பரே.. தாரே விரைவில் எழுதிவிடட்டுமா? என்ன சொல்கிறீர்கள்?

    விந்தையான விஷயம் பற்றி – ஆல்ரெடி திரைக்கதை தொடரை எழுதிக்கொண்டிருக்கிறேன். வேறு என்ன எழுதலாம் என்று சொல்லுங்கள்.

    @ Arun – oh yea !! Peter’s screen presence mesmerized me. Especially his quirk remarks !

    @ …αηαη∂…. – நம்மூர் HBOல போன வருஷம் ஃபர்ஸ்ட் ஸீஸன் பார்த்தேன். அத்தனையும் சென்ஸார் பண்ணி மொக்கையா காட்டுனாங்க. ரெண்டாவது ஸீஸன்ல இன்ன்னும் அதிகம் :-).. பல கட்டு விழும் என்பதில் சந்தேகமே இல்லை

    @ Arun – கரெக்டா புடிச்சிட்டீங்க… ஸ்டான்னிஸ் பராதியன் அதுல இல்லைதான் :-)…. நீங்கதான் கேம் ஆஃப் த்ரோன்ஸ் கில்லாடி.

    @ Sathesh – Oh yea!! I learned about those two movies when I researched about Peter Dinklage. Will see them for sure..

    I did both my UG and PG at CIT – coimbatore

    @ Bala Ganesan – அடப்பாவி. ட்ரெய்லர் பார்த்து சொல்ல முடியாதே.. படம் வரட்டும் அலசிரலாம். கமல் பத்தி மட்டுமில்ல. இன்னும் பல திரைப்பட ஆளுமைகள் இப்புடித்தான் பண்ணுறாங்க… என்ன பண்ணுறது…

    @ Kamal – U bet! கேம் ஆஃப் த்ரோன்ஸ் மூன்றாவது பாகம் இன்னிக்கிதான் படிச்சி முடிச்சேன். அதுல ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணிய்உம், அவர்களின் செயல்களும் படிச்சிட்டு லார்ட் ஆஃப் த ரிங்ஸ் தான் நினைச்சேன். அது புனிதத்துவத்தோட எழுதப்பட்டிருக்கு. ஆனா கேம் ஆஃப் த்ரோன்ஸ், இயல்பான குணங்களோடு இருக்கு. கரெக்டா அப்ஸர்வ் பண்ணிருக்கீங்க !!!!!

    Reply
  12. thala… as one our frnd said in the above comments, you shold watch breaking bad and write abt it. I bet u wud love it..

    Reply
  13. saw both the seasons in five days.. kalakkal.. cant wait for the third season.. Peter Dinklage won a golden globe for his portrayal of Tyrion.. semma acting.. apparam andha kutti ponnu Arya, chance illa.. all characters well developed.. Daenerys character is also awesome.. first season ku mattum 60 million selavu pannangalama(partly financed by Government of Ireland to promote tourism).. and that battle episode in season 2(episode 9) is amazing.. oru series kaaga ivvalo menakkedaranga.. namma aaluga thirundaradhukku 50 varushamaavadhu aagum..

    Reply

Join the conversation