Gangs of Wasseypur (2012) -Hindi
ஒரு சிறிய கற்பனை. நாம் ஒரு திரைப்படம் எடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதில், வில்லன் ஒருவனை ஹீரோ கொல்வதாக வருகிறது. இந்த ஸீனை எழுத அமர்கிறோம். நமது கற்பனை எப்படி ஓடும்? முதலில், ஹீரோ தயாராவதைக் காட்டுகிறோம். லெதர் ஷூ அணிகிறார். அதில் ஸிப் வைத்திருக்கிறது. பாலீஷ் போடவே தேவையில்லாமல் ஷூ ஆல்ரெடி பளபளக்கிறது (நாயகன் ஒரு அன்றாடங்காய்ச்சி). அதன்பின் அவரது லெதர் பேண்ட்டைக் காட்டுகிறோம். ஸ்க்ரீனுக்கு அவரது முதுகு மட்டுமே தெரிகிறது. எதையோ எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது கைகளின் க்ளோஸப். கையில் வெடிகுண்டுகள். அவற்றை ஜாலியாக எடுத்து ஹீரோவின் லெதர் பனியனின் மீது, போலீஸ் நேம்ப்ளேட் போல வரிசையாக குத்திக்கொள்கிறார். பக்கத்திலேயே நாற்காலியில் மினி பீரங்கி ஸைஸில் ஒரு இயந்திரத் துப்பாக்கி. அதையும் லபக்கென்று கவ்விக்கொள்கிறார். பின்னணியில் தீம் ஸாங் ஒலிக்கிறது. ‘டக்….டக்’கென்று ஷூ ஒலிக்க, முகத்தில் கோபத்துடன் வில்லனைக் கொல்லக் கிளம்புகிறார் ஹீரோ.
கட். வில்லனைக் காட்டுகிறோம். படுக்கையில் இருக்கிறான். அண்டர்வேருடன். அவனுக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு மலையாளப் பெண்கள். அவர்கள் கையில் திராட்சை. வில்லனின் கையில் தங்க டம்ளர். அவனுக்கு அவசியம் சொட்டைத்தலைதான். தொப்பை. வயது ஐம்பதுக்கு மேல். எங்கும் ஒரே சிரிப்பு சத்தம்.
‘டமால்’. கதவு உதைத்துத் திறக்கப்படுகிறது. ஹீரோ. படபடவென்று சுடுகிறார். வில்லன் காலி. சிரித்துக்கொண்டே சென்றுவிடுகிறார் ஹீரோ.
இதே காட்சி, காங்ஸ் ஆஃப் வஸேபூர் படம் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது.
காரணம் என்ன என்றால், திரை வரலாற்றில் அவ்வப்போது, அந்தக் காலகட்டத்தின் டெம்ப்ளேட் யாரோ ஒருவரால் உடைபடுவதை நாம் கவனித்துக்கொண்டே வளர்ந்திருக்கிறோம். என் சிறுவயதில், கர்லிங் க்ராப் வில்லன், பார் டான்ஸ், கவர்ச்சிக்கன்னிகள், இரண்டு பூக்கள் ஒன்றோடொன்று சேர்ந்தால் அது கிஸ், ஃபைட்டில் ‘அபுஹாய்….அபுஹாய்’ என்று பின்னணி ஒலி, படத்துக்கு சம்மந்தமே இல்லாத காமெடி, வானத்தில் அங்குமிங்கும் குதித்துச் சண்டையிடும் ஹீரோ என்று இருந்தது (இதை அப்போது கவனிக்கவில்லை. கடந்த சில வருடங்களாகத்தான்). இது எண்பதுகளில். இந்த ‘கர்லிங் கிராப்’ சமயத்தில்தான் எண்பதுகளிலேயே கி.பி இரண்டாயிரமாவது வருடத்தில் படமெடுப்பதைப்போல் மணிரத்னம் வந்தார் (ஆனால் அவர் இன்னமும் அதே பாணியில்தான் படமெடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து. கி.பி இரண்டாயிரத்திப் பனிரண்டிலும் அதே கி.பி இரண்டாயிர படங்கள்). இதன்பின் தொண்ணூறுகளில் இதே டெம்ப்ளேட்டின் ஸ்டைலிஷ் வெர்ஷன் அமல்படுத்தப்பட்டது. திரைக்கதையும் கொஞ்சம் வேகமாகியது. அந்தச் சமயத்தில்கூட, இப்போது நாம் ‘நல்ல படம்’ என்று சிலாகிப்பதைப்போன்ற படங்கள் இல்லை. அப்போதைய படங்களை இப்போது தூசி தட்டினால் சிரிப்பு வருவதைத் தவிர்க்க முடியாது. தொண்ணூறுகளில் கூட அதே கமர்ஷியல் டெம்ப்ளேட் தான் (ஓரிரண்டு விதிவிலக்குகள் தவிர).
ஆனால் அப்போதைய ஹிந்தியை எடுத்துக்கொண்டால், அப்போதைய காலத்திற்கு மிக மிக அட்வான்ஸாகப் படங்களை எடுத்துக்கொண்டிருந்த ஆரம்பகால ராம்கோபால் வர்மாவைக் காணலாம் (இவரும் அதே மணி ரத்னம் ஃபார்முலாதான். இன்றுவரை, ஆரம்ப காலத்தில் எப்படி எடுத்தாரோ அப்படியேதான் எடுத்துக்கொண்டிருக்கிறார்).
வளவளவென்று ஏன் இப்படிப் பேசுகிறான் என்று எண்ணிவிடாதீர்கள். கேங்ஸ் ஆஃப் வஸேபூர் படத்தைப் பார்க்கும்போது இதற்கு முந்தைய படங்களையும் ஒருமுறை நினைத்துக்கொள்வதுதான் சரி.
ஹிந்தியில் Hazaron Khwaishen Aisi என்று ஒரு படம் இருக்கிறது. நான் பார்த்தவற்றில் ரியலிஸத்துக்கு மிக அருகில் வரக்கூடிய படம் என்று இதைச் சொல்வேன். இதைப்போன்ற ஒரு படம் தமிழில் நான் இதுவரை பார்த்ததில்லை. நான் சொல்லிக்கொண்டிருப்பது கமர்ஷியல் படங்களையே. ஆர்ட் படங்களை அல்ல. கமர்ஷியல் படங்களில் ‘தரம்’ என்று ஒரு விஷயம் கொஞ்சம் அரிதுதான்.
கமர்ஷியல் படத்தையும் ‘ஆர்ட்’ படத்தையும் பிரிப்பது எது? அதற்குமுன், ஆர்ட் படம் என்றால் என்ன? விருதுக்காகப் படம் எடுப்பதா? காமெராவை ஒரே இடத்தில் வைத்துவிட்டு, மிக மெதுவாக வசனங்கள் பேசிக்கொண்டே அவ்வப்போது அழுவதா? கண்டிப்பாக இல்லை என்றுதானே சொல்லத்தோன்றுகிறது? என்னிடம் இந்தக் கேள்வியை சில வருடங்கள் முன்னர் கேட்டிருந்தால், ஆர்ட் படங்கள் என்பது விருது வாங்கும் படங்கள்; நிஜமான சினிமா; அது இது என்று சொல்லியிருப்பேன். ஆனால் கடந்த சில வருடங்களில், மிக உயர்ந்த தரத்துடன் எடுக்கப்படும் கமர்ஷியல் திரைப்படங்கள், ‘ஆர்ட்’ படங்களின் தேவையை எளிதில் பூர்த்தி செய்துவிடுகின்றன என்பதை நாம் எல்லோருமே பார்த்திருக்கிறோம்.
ரைட். வாருங்கள். வஸேபூருக்குள் நுழைவோம்.
ஒரு கதையை சொல்லவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டால், அந்தக் கதையின் மேல் சினிமாவுக்கே உரிய சில அடுக்குகள் வந்து அப்பிக்கொண்டுவிடுவதைத் தவிர்க்கமுடியாது. உதாரணத்துக்கு – சண்டைக்காட்சிகள்; பாடல்கள்; நகைச்சுவைக் காட்சிகள் இத்யாதி. ஆனால், நமது வாழ்க்கையையே நோக்கிக்கொண்டால், இப்படியெல்லாம் எந்தப் பூச்சும் நம்மீது இல்லை என்பது புரிகிறது. அதோ பஸ்ஸில் அமர்ந்துகொண்டிருக்கும் பெண் நம்மைப் பார்க்கிறாள். டக்கென்று பேக்ரௌண்டில் யாரும் இசையமைப்பதில்லை. ட்ராஃபிக்கில் சண்டையிடுகிறோம். அது என்ன சினிமாவில் வரும் சண்டையைப் போலவா இருக்கிறது?
அனுராக் காஷ்யப் இந்த உண்மையை நன்கு புரிந்துவைத்திருக்கிறார். இரண்டு மனிதர்களுக்குள் உருவாகும் விரோதம், மெல்ல வளர்ந்து, ஒரு கிராமத்தையே ஆட்டிப்படைப்பதை இதைவிட எளிதாக, இயல்பாக யராலும் சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது. இந்தப் படத்தின் கதை என்பது வெகு சாதாரண சப்பை மேட்டர். இந்தக் கதையை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம்? ஆனால், வஸேபூர் எங்கே ஸ்கோர் செய்கிறது என்றால், அது ————-> திரைக்கதை.
பொதுவாக, எந்தப் படத்தைப் பார்த்தாலும், கதை வேகமாக செல்லவேண்டும் என்பது நமக்கு ஆட்டோமேடிக்காக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் ‘மச்சி… என்னடா இழுக்குறானுங்க… வாடா போலாம்…” என்பதெல்லாம் நிகழ்கின்றன. ஆனால், அதே சமயம், திரைக்கதை வேகமாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், சினிமாத்தனங்கள் நம்மீது ஒட்டிக்கொள்கின்றன. பெரிய ஃபைட்கள், காமெடி ஸீன்கள் இத்யாதி. ஆனால், சொத்தையான கதை ஒன்றில், திரைக்கதையை அட்டகாசமாக அமைத்து, அதே சமயம் அதில் சினிமாத்தனங்கள் வந்து ஒட்டிக்கொள்ளாதவாறு கவனமாகப் பாதுகாத்து, இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறார் அனுராக் காஷ்யப் என்பது படத்தின் இடைவேளையிலேயே தெரிந்துவிடுகிறது.
மிக இயல்பான மனிதர்கள். உங்களையும் என்னையும் போல. கிடைக்கும் சந்தர்ப்பத்தை எப்படி நாம் உபயோகித்துக்கொள்கிறோம் என்பதில் ஆரம்பிக்கிறது கதை. அதனால் இரண்டு மனிதர்களுக்கு விரோதம் வருகிறது. இதனால் அதில் கொஞ்சம் செல்வாக்குள்ள மனிதன், இன்னொருவனை ஊரைவிட்டே துரத்துகிறான். அதனால் அந்த இன்னொரு மனிதன் வெளியூரில் அடியாளாகிறான். அதனால் புதிய ஊரில் இன்னொருவனை விரோதித்துக்கொள்கிறான். அவனும் சக்திவாய்ந்த நபராவதால், இந்த மனிதனுக்கு இன்னல் நேர்கிறது. இந்த விரோதம், அவர்களின் பரம்பரையிலும் தொடர்கிறது. இதன் விளைவே இப்படத்தின் சம்பவங்கள்.
இப்படி ஒரு அரத மொக்கைக் கதை, எப்படி இந்தப் படத்தில் அட்டகாசமாக மாறியது?
தூக்கம் கண்ணைச் சுழற்றுவதால், கட்டுரையின் இரண்டாம் பகுதியில் இன்னமும் விரிவாக நாளை காணலாம்…
To be continued . . .