Gangs of Wasseypur II (2012) – Hindi

by Karundhel Rajesh August 13, 2012   Hindi Reviews

கேங்ஸ் ஆஃப் வஸேபூர் படத்தின் முதல் பாக விமர்சனங்கள் இங்கே:

Gangs of Wasseypur (2012) – Hindi
Gangs of Wasseyppur- Contd . .


முதல் பாகத்தில் சர்தார் கானின் வாழ்க்கையைப் பார்த்தோம். ரமாதீர் ஸிங்குடனான அவனது மோதல், அதனால் ஏற்பட்ட பகை, சர்தார் கானின் பரம்பரை, ரமாதீர் ஸிங்கின் வளர்ச்சி, இருவரின் மோதல்கள், இறுதியில் சர்தார் கான் இறப்பது வரை பார்த்தாயிற்று. ஆனால், அதன்பின் நடப்பது என்ன? இந்த யுத்தத்தின் முடிவு எப்படி இருக்கும்? அதைத்தான் இரண்டாம் பாகம் சொல்கிறது.

இந்தப் படத்தின் genre பற்றி மேலே இருக்கும் இரண்டு கட்டுரைகளிலேயே நிறையப் பார்த்தாயிற்று. அடிப்படை மனிதர்கள். அவர்களது சினிமாத்தனங்கள் இல்லாத வாழ்க்கை. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமே ஒரு படம் எடுக்கும் அளவு முன்கதை இருக்கிறது. அட்டகாசமான ஒரு களனைப் பாதியில் நிறுத்தியிருந்ததால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்ப்பதற்கு இன்னொரு மாதம் காத்திருக்கவேண்டுமே என்ற ஏமாற்றமே எனக்கு இருந்தது. கடந்த வாரத்தில் படம் பார்க்க முடியவில்லை. ஆகவே இன்று மாலை கருடா மாலில் இருக்கும் ஐநாக்ஸில் இப்படத்துக்கு நண்பர்கள் மூவர் சென்றிருந்தோம்.

வஸேபூரிலும் தன்பாதிலும் ஆதிக்கம் செலுத்திவந்த சர்தார் கான் கொலைசெய்யப்பட்டபின், மறுபடியும் ரமாதீர் ஸிங்கின் ஆதிக்கம் மேலோங்குகிறது. சர்தார் கானைக் கொலைசெய்த சுல்தான் குரேஷி, சர்தார் கானின் தந்தை ஷாஹீத் கானை ஊரைவிட்டே துரத்திய ஸுல்தானா டாகுவின் வம்சத்தில் வந்தவன். இயல்பாகவே கான்களுக்கும் குரேஷிகளுக்கும் பகை தலைமுறை தலைமுறையாக நிலவி வருகிறது. இந்தப் பகையைக் கில்லாடித்தனமாக உபயோகப்படுத்திக்கொள்கிறான் ரமாதீர் ஸிங். படம் நெடுக. இதைப்போல இன்னொரு கதாபாத்திரத்தையும். அதைப்பற்றிப் படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

சர்தார் கானின் மூத்த மகன் – டேனிஷ் கான். தந்தை இறந்ததும் இயல்பாகவே குற்ற சாம்ராஜ்யத்தின் வாரிசாக ஆகிறான். சர்தார் கானின் சாம்ராஜ்யம் ரமாதீர் ஸிங்கின் organized அமைப்பு அல்ல. ரமாதீர் ஸிங் அரசியல்வாதி என்பதால் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் அவனிடம் இருக்கிறது. ஆனால், சர்தார் கான் உருவாக்கி வைத்திருந்தது, ஜெங்கிஸ் கானின் கெரில்லா படையைப் போன்ற ஒரு கும்பல். பெரும்பாலும் பல ஊர்களின் குட்டி தாதாக்களைப் போல. ஆனால் அவனுக்கும் பலவிதமான வியாபாரங்களின் மூலமாக பணம் வந்துகொண்டுதான் இருந்தது. இரும்புத்தாது வியாபாரம் ஒரு உதாரணம். இந்த வியாபாரங்களை கவனித்துக்கொள்ளும் வாரிசாக மூத்த மகன் டேனிஷ் கான்.   முந்தைய பாகத்தின் இறுதியில் பிடிபட்டிருந்த தனது தந்தையைக் கொன்றவர்களில் ஒருவனை போலீஸ் ஜீப்பிலிருந்தே இழுத்துக் கீழே தள்ளிக் கொல்லும் அளவு ஆதிக்கமுடையவன். அவனுக்கு, தந்தை சர்தார் கானின் சாவுக்கே காரணம் அவனது தம்பியும் சர்தாரின் இரண்டாவது மகனுமான ஃபைஸல் கானின் நண்பன் ஃபாஸ்லுதான் என்னும் உணர்வு இருக்கிறது. அது சரிதான் என்பது நமக்குத் தெரியும். முதல் பாகத்தின் இறுதியில், ஃபாஸ்லுவிடம்தான் மறுநாள் தந்தை சர்தார் தனியாகப் பயணம் செல்லப்போவதை கஞ்ஜா அடித்துவிட்டு ஃபைஸல் உளறிவைக்க, அந்த செய்தியை ரமாதீரிடம் ஃபாஸ்லு சொல்வதால்தான் சர்தாரின் கொலையின் முதல்படி அரங்கேறுகிறது (இரண்டாம் படி, சர்தாரின் இரண்டாவது மனைவி துர்காவும் துரோகியாக மாறுவதில் முடிகிறது).  ஃபைஸல் கஞ்ஜா அடித்தே செத்துவிடுவான் என்பது டேனிஷின் எண்ணம். அவர்களின் தாயான நஹ்மாவுக்கும் அதே எண்ணம்தான். ரமாதீரால் சர்தார் கானின் வட்டத்தில் இருக்கும் பலரையும் விலைக்கு வாங்க முடிந்திருக்கிறது. அவனது மதிநுட்பத்திற்கும், சர்தாரின் விட்டேத்தியான மனநிலைக்கும் இது உதாரணம்.

ஆனால், சர்தாரைக் கொன்ற சுல்தான் குரேஷி விழிப்பாக இருப்பதால், டேனிஷ் கான், படத்தின் ஆரம்பத்திலேயே கொல்லப்பட்டுவிடுகிறான். இதனால் இரண்டாம் மகனான ஃபைஸல், அண்ணன் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பவேண்டியதாகிறது. இவன் கஞ்ஜா அடித்துவிட்டு சாகத்தான் லாயக்கு என்று குமுறும் தாயிடம் பழிவாங்கப்போவதாக சபதம் செய்கிறான் ஃபைஸல்.

ஃபைஸலுக்கு ஒரு குட்டித்தம்பி. அவன் பெயர் பெர்பெண்டிகுலர் கான். இவன், பல கடைகளில் துப்பாக்கியைக் காட்டிக் கொள்ளையடிக்கும் அளவு இருக்கிறான். இவனது அட்டகாசம் தாங்காத கடை உரிமையாளர்கள், ஏற்கெனவே சர்தாரின் குடும்பத்தில் இருவரைக் கொன்றிருக்கும் சுல்தான் குரேஷியிடம் அஸைன்மெண்ட் கொடுக்க, குரூரமான முறையில் கொல்லப்படுகிறான் பதிநான்கு வயது பர்பெண்டிகுலர். இதற்கிடையில் ரமாதீர் ஸிங்கை நேரிலேயே சந்தித்துப் பேசுகிறான் ஃபைஸல் கான். அப்போது, குரேஷி குடும்பத்தாரை என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்றும், இதில் தன்னுடைய தலையீடு இருக்காது என்றும் உறுதியளிக்கிறான் ரமாதீர். இதன்பின்னர் தந்தையை சுட்டவர்களில் மீதியிருக்கும் மூவரில் இருவரைக் கொல்கிறான் ஃபைஸல். பாக்கியிருப்பது சுல்தான் குரேஷி மட்டுமே. கோபத்தில் ரமாதீரை தொலைபேசியில் அழைக்கும் சுல்தானுக்கு ரமாதீரின் தரப்பில் இருந்து எந்த ஆதரவும் இல்லை. ஆனால் ரமாதீரின் மகனான ஜே.பி ஸிங், சுல்தானுக்கு உதவுகிறான். தந்தைக்குத் தெரியாமல்.

சர்தார் கானின் இரண்டாவது மனைவி துர்காவின் மகன் – டெஃபனைட் கான். இவனும் ஒரு குட்டி தாதா. மிக இளைஞன். துர்கா தற்போது ரமாதீரின் வீட்டில் இருந்தாலும்- ரமாதீரின் கண்காணிப்பிலேயே வளர்ந்தாலும்- டெஃபனைட் கான், தனது அண்ணன் ஃபைஸல் கானுடன் இருப்பதையே விரும்புகிறான்.

ஃபைஸல் கானுடன் வியாபாரம் செய்த ஷம்ஷத் ஆலம் என்றவன், போலீஸில் இதைப்பற்றிப் போட்டுக்கொடுக்க, ஃபைஸல் கைதாகிறான். இந்த ஷம்ஷத் ஆலத்திடம் இருக்கும் பணத்தைத் திருடி மிலிட்டரி ஆட்களிடம் மாட்டுவதால், டெஃபனைட்டும் ஜெயிலில். சில வருடங்கள் இதனால் தைரியமடையும் சுல்தான் குரேஷி, ஃபைஸலின் வீட்டுக்குள்ளேயே புகுந்து, இவனுக்கு நெருங்கிய உறவுக்காரியான இறந்துபோன டேனிஷ் கானின் விதவையை சுட்டுக் கொல்கிறான். ஆக, கான் – குரேஷி வம்ச சண்டை, உச்சத்தில் நிற்கிறது.

வெளியே வருகிறான் ஃபைஸல். ஆனால் அவனது கவனமோ வியாபாரத்தை வளர்ப்பதில் இருக்க, விடுதலையாகும் டெஃபனைட்டை சாதுர்யமாக வளைக்கிறான் ரமாதீர். ஃபைஸலை அவன் கொல்லவேண்டும் என்பது திட்டம். ஒப்புக்கொள்ளும் டெஃபனைட், நேராக ஃபைஸலிடம் வந்து போட்டுக்கொடுக்க, அவனை சேர்த்துக்கொள்கிறான் ஃபைஸல். இந்த நேரத்தில், ஃபைஸலின் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரையும் கொல்ல சுல்தான் குரேஷி எடுக்கும் முயற்சி தோற்கிறது (முதல் பாகத்தின் ஆரம்ப நிமிடங்கள்).

ரமாதீருக்கு எதிராக தேர்தலிலும் நிற்கிறான் ஃபைஸல் கான். எலக்‌ஷன் வருகிறது. ஊரெங்கும் ரகளை. ரமாதீரைக் கொல்ல நேரடியாகக் கிளம்புகிறான் ஃபைஸல். ஒரு மருத்துவமனையில் க்ளைமேக்ஸ் நடக்கிறது. முதல் பாக முடிவைப் போலவே இரண்டாவது பாக முடிவும் துரோகத்தில் முடிகிறது.


இந்தப் படத்திலும் படு இயல்பான வசனங்கள் எக்கச்சக்கம். ரமாதீரும் ஃபைஸலும் சந்தித்துக்கொள்ளும் இடம் ஒரு சரியான உதாரணம். தனது தந்தையைக் கொன்றவன் ரமாதீர். அப்படிப்பட்டவனை நேரில் சந்திக்கிறான் மகன் ஃபைஸல். அப்போது ரமாதீர் சொல்வது – ‘உன் தந்தையை நான் கொன்றிருக்காவிட்டால் அவன் என்னைக் கொன்றிருப்பான். நான் வாழ்வதற்கே அவனைக் கொன்றேன்’ – என்பது. ஃபைஸல் வருங்காலத்தில் எப்படியும் தன்மீது பழிவெறியுடன் இருப்பான் என்பதும் ரமாதீருக்குத் தெரியும். ஆனாலும் உண்மையைப் பேசுகிறான் ரமாதீர்.

இதேபோல் ரமாதீர் பேசும் இன்னொரு வசனம் – மூன்று தலைமுறைகளாக கான் வம்சத்தின் முக்கிய நபர்களை இவன் கொன்றிருக்கிறான். எப்படி அது முடிந்தது? என்று அவனே சொல்லும் இடம். கான் வம்சத்தினர்களைப் போல் இவன் திரைப்பட வெறியன் அல்ல. எப்படி திரைப்படங்களை ஒவ்வொரு தலைமுறை ஹிந்தி ரசிகர்களும் ரசித்து வந்திருக்கிறார்கள் என்று திலீப் குமாரில் ஆரம்பித்து தேவ் ஆனந்த், ராஜேஷ் கன்னா, பச்சன் அமிதாப் (இப்படி அவன் சொல்வது எனக்குப் பிடித்தது), ஸல்மான் கான் என்ற வரிசையை சொல்லிவிட்டு, இவர்களை ரசிக்கும் தாதாக்கள், தங்களையும் அப்படியே கற்பனை செய்துகொண்டு, இதைப்போன்ற ஹீரோத்தனங்கள் செய்தே சாகிறார்கள் என்று முடித்துவிட்டு, ‘ஹிந்திப்படங்கள் இருக்கிறதே… இந்தியா முழுக்க இவைகளை பார்ப்பவர்கள் motherf*ckers என்று முத்தாய்ப்பு வைப்பான். இதுவும் ஆடியன்ஸின் கைதட்டலை அதிகம் வாங்கிய இடங்களில் ஒன்று.

இதேபோல ஃபைஸலுக்கும் வசனங்கள் இருக்கின்றன. துரோகி நண்பன் ஃபாஸ்லுவைக் கொல்லப்போகும்போது அவன் சொல்லும் ஷோலே பட reference வசனம் ஒரு உதாரணம். போகிறபோக்கில் சட்டென்று இவன் உதிர்க்கும் அட்டகாசமான வசனங்கள் படம் முழுக்க உண்டு.

வசனம் என்பதைத் தாண்டி, கதையை நகர்த்துவது என்ற அம்சம் உண்டல்லவா? அது, முதல்பாகத்தைப் போலவே இதிலும் விறுவிறுப்பாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியாக, ஒவ்வொரு கதையாக, ஒவ்வொரு சம்பவமாக விரியும் கிளைக்கதைகள் சுவாரஸ்யமாகவே காட்டப்படுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எஷ்டாப்ளிஷ் செய்வதற்காக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில், சிறுவனாக இருந்தபோது தனது தாய் நஹ்மாவும், தந்தையை வளர்த்த ஃபர்ஹானும் உறவு கொள்வதைப் பார்த்துவிடுகிறான் ஃபைஸல். இதனால் இந்தப் பாகத்தில், திருமணம் முடிந்து உறவுகொள்ளும்போது வேண்டுமென்றே மிக சத்தமாக உறவுகொண்டுவிட்டு, அதை ஃபர்ஹான் கேட்டே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறான். இதற்குத் தண்டனையாக, தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொள்கிறார் ஃபர்ஹான்.

ஆனாலும், முதல் பாகத்தில் படத்தையே தனது தோள்களில் தாங்கிய மனோஜ் பாஜ்பாய் இதில் இல்லை. இதனால், இந்தப் படத்தை சமமாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பிரித்துக்கொடுத்து, அவர்களால் இந்தப் படத்தை க்ளைமேக்ஸை நோக்கி நகர்த்தியிருக்கிறார் அனுராக் காஷ்யப். அந்த முயற்சியில் வெற்றியும் அடைந்துவிட்டார். அப்படியும், கடைசி ஒரு மணி நேரத்தில் கொஞ்சம் இழுவையான சில காட்சிகள் இருந்துவிடுகின்றன. படத்தின் நீளம் இம்முறை கொஞ்சம் குறைக்கப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. 2.45 மணி நேரம் இந்த இரண்டாம் பாகத்துக்குக் கொஞ்சம் அதிகம்தான்.

இந்தப் படத்திலும் பின்னணி இசை அட்டகாசம். ஜி.வி. ப்ரகாஷ் அனுராக் காஷ்யப்பின் நுண்ணிய ஷாட்களையும் ஸீக்வென்ஸ்களையும் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார். டேனிஷ் கான் ஆரம்பத்தில் கொல்லும் காட்சிகளின் பின்னணி ஒரு உதாரணம்.

வன்முறைக் காட்சிகள், முதல் படத்தை விட இதில் அதிகம். ஆகவே, if you are not a blood & gore fan, you gotta take a decision here.

மூன்று குடும்பங்களின் பழிவெறி – அதன் விளைவுகள் என்ற கதையை சினிமாத்தனங்கள் இல்லாமல்  எடுத்ததால், பிரமாதமான இரண்டு படங்களைக் கொடுக்க அனுராக் காஷ்யப்பினால் முடிந்திருக்கிறது. குறைந்த பட்சம் அடுத்த சில வருடங்களில் ஹிந்தித் திரையுலகின் signature படங்களாக இவை காட்டாயம் அமையப்போகின்றன. இனிமேல் கேங்ஸ்டர் படம் எடுக்க விரும்பும் எவருமே இந்தப் படங்களை baseliனாக வைத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தை அனுராக் ஏற்படுத்தியிருக்கிறார்.

இதோ Gangs of Wasseypur II படத்தின் ட்ரெய்லர்.

Gangs of Wasseypur II poster taken from here

  Comments

7 Comments

  1. ஆவலுடன் எதிர்பார்த்த இரண்டாவது வால்யூம் வந்துவிட்டாலும், விமர்சனம் எப்போது வரும் என காத்திருந்தேன்…
    ரைட்டு… பார்த்திர வேண்டியது தான்…

    Reply
  2. நண்பா,
    நலமா?
    முதல் பாகம் மட்டும் பார்த்திருக்கிறேன்.வாழ்வில் என்னுடைய ஃபேவரிட் படமாக அமைந்துவிட்டது,க்ளிஷேத்தனத்தை உடைத்த விதம் புதுமையானது.

    மிகவும் பிடித்த காட்சிகள் என்று மூன்றை சொல்லுவேன்,
    1.சர்தார்கானின் அப்பா சொன்ன உண்மையை ஒளிந்து நின்று கேட்ட ராமாதீர்சிங் குடையை விட்டுச்சென்றுவிடுவான்.ஜீப்பில் சென்று அமர்ந்து சரக்குடன் காசிக்கு அனுப்புவான்.
    அதே நேரத்தில் குடையைப்பார்க்கும் ஃபர்ஹான் அதில் உள்ள rs என்னும் எழுத்தை கண்டதும்,ராமாதீர் இங்கே வந்து எல்லாவற்றையும் கேட்டுவிட்டான்,அண்ணன் இத்துடன் தீர்ந்தான்,நாமாவது தப்பிக்கவேண்டும் என்று சர்தாரை விரைவாக அழைத்துக்கொண்டு தப்பிப்பான்.அது ஒரு கவிதை என்றால்.

    காசியில் லாட்ஜில் சென்று தங்கியிருக்கும் சர்தாரின் அப்பா பணத்தை வாங்க பார்ட்டி வந்தவுடன் பணத்தை கொடுத்தால் வேலை முடியும் என பணத்தை நீட்டுவான்.அவன் அதை அலட்சியம் செய்து துப்பாக்கியை லோட் செய்து எங்கோ சென்று விடுவான்,அவன் அப்பாவி போல எனக்கு துப்பாக்கியை இயக்கி காண்பிப்பாயா?என்பான்.அதற்கு அவனது பதிலாக அவன் மேலேயே குண்டு மழை பொழியும்.இது இன்னொரு கவிதை.

    சர்தார் கான் இறக்கும் காட்சியெல்லாம் டார்க் ஹ்யூமரின் உச்சம்.சர்தார் நழுவ விட்ட துப்பாக்கி கட்டை வண்டியின் சக்கரத்தில் பட்டு வெடிப்பதும்,ராமாதீரை இன்னும் கருவருக்க முடியவில்லையே,தப்பிவிட்டானே என ஏங்கிய படி சாகும் இடம் எல்லாம் அற்புதம்.அனுராக் காஷ்யப் மதித்து பாராட்டிய ட்ரயம்விரேட்கள் அமீர் சுல்தான்,சசிகுமார்,பாலா மூவரும் தமிழ் சினிமாவுக்கே பெருமை.
    சர்தாரின் கேரக்டரைசேஷன் எப்படிப்பட்டது என வியக்கிறேன்.
    வெளியே ஒரு சந்தில் வைத்து சுல்தானாவின் மகனை வயிற்றின் பக்கவாட்டில் வைத்து கத்தியால் குத்துவதும்,அவன் வெட்கமாயில்லை என்று கேட்டும் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் குத்தி விரட்டிச்சென்று சாய்க்கும் இடம் எல்லாம் பிரமாதம்.அந்த பாடி லாங்குவேஜ் சூப்பர்.மனோஜ் பாஜ்பாய் பின்னியிருக்கிறார்.ரீமாசென் மிக நல்ல நடிகை என நிரூபித்துள்ளார்,ரிச்சா சட்டா இந்த படம் நடித்ததன் மூலம் 12 படம் பெற்றார் என எங்கோ படித்தேன்,நல்ல பாத்திர படைப்பு,மனோஜ் பாஜ்பாய் இந்த அளவுக்கு காமுகனாக நடித்தது இப்படம் தான் என நினைவு.

    Reply
  3. @கீதப்பிரியன் ! இவையெல்லாம் கவிதை என்று எப்படி சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை. வார்த்தை பிரயோகம் தவறோ ?

    Reply
  4. ரமாதீர் சிங் – ஒரு வேளை “ஷோலே” படத்தைப் பார்த்துவிட்டு “இடி இடி”யென சிரித்திருப்பானோ … ?

    Reply
  5. @ திண்டுக்கல் தனபாலன் – உண்மையில் நீங்கள் இந்தக்க் அத்துறையை முழுதாகப் படித்தீர்களா என்று தெரிந்துகொள்ள விருப்பம். அதேபோல், தமிழ்மணத்தில் நீங்கள் ஓட்டுப்போட்ட விஷயத்தை அடைப்புக்குறிகளுக்குள் நீங்கள் தெரிவிப்பதால் சொல்லவரும் விஷயம் என்ன? நன்றி

    @ சிங்கார வேலன் – நன்றி அய்யா

    @ மலரின் நினைவுகள் – ஒகே . பார்த்துவிட்டீர்களா?

    @ கீதப்ரியன் – நண்பா… மிக்க நலம். அட்டகாசமாக முதல் பாகத்தின் அத்தனை முக்கியமான காட்சிகளையும் பிரித்து மேய்ந்து விட்டீர்கள். மனோஜ் பாஜ்பாய் வெகு நாட்களுக்குப் பின்னர் ‘நடிகண்டா’என்று சொல்லியுள்ள படம் இது. இரண்டாவது பாகத்தை தவறாமல் பார்த்துவிடுங்கள்.

    @ Pritam – நண்பர் கீதப்ரியன் கவிஷை என்று சொல்லும் காரணம் – இதுகாறும் வெளிவந்த படங்களில் இந்த அளவு இயல்பான (அதேசமயம் ரசிக்கவைக்கும்) காட்சிகள் இல்லை. அதாவது படம் நெடுக. இந்த மற்றும் முதல் பாக விமர்சனங்களை படித்தீர்கள் என்றால் அதிலேயே அதன் காரணங்கள் விரிவாக விளக்கப்பட்டிருக்கும். அதனால்தான் அவர் அப்படிச் சொல்கிறார்

    @ parthiban Nagarajan – ஹா ஹா ஹா ஹா :)..

    Reply

Join the conversation