The Ghost and the Darkness (1996) – English

by Karundhel Rajesh January 8, 2010   English films

இம்முறை, கொஞ்சம் வித்தியாசமான படத்தைப் பார்க்கப்போகிறோம். இதுவரை நாம் பார்த்த படங்களில், ஒரு ஹீரோ இருப்பான்; ஒரு வில்லன் இருப்பான்; இருவரும் அடித்துக்கொள்வார்கள்; சுபம். ஆனால், இந்தப் படத்தில், இரண்டு மனிதர்கள், தங்களுக்கு முற்றிலும் வேறான இரு சக்திகளுடன் போரிடுவதே கதை. எனக்குத் தெரிந்து, இந்தக் கதையை நான் முதலில் படித்தது, நம் லயன் காமிக்ஸில். சிறுவயதில், ஒரு படக்கதையின் முடிவில், திரு. விஜயன், இக்கதையைப் பற்றி எழுதியிருந்தார். இந்தப் படத்தைப் பற்றி அல்ல. இது ஒரு உண்மைச் சம்பவம். இந்தச் சம்பவத்தைப் பற்றி, சுவாரசியமாக அவர் எழுதியிருந்ததைப் படித்த நினைவு இன்னமும் இருக்கிறது. அதன்பின், சில வருடங்களுக்கு முன்னர் இப்படத்தைப் பார்த்தேன். பார்த்தவுடன் தெரிந்துவிட்டது – நாம் லயனில் படித்த ஒரு சம்பவத்தைப் பற்றிய படம்தான் இது என்று. படமும் நன்றாக இருந்தது.

கதை நடந்த காலம் 1898. ஸாவோ (Tsavo) என்று ஆப்பிரிக்காவில் ஒரு ஊர். அந்த ஊரில், ஒரு ரயில் பாலம் கட்டுவற்கான ஒப்பந்தத்தை எடுத்திருக்கிறார் இங்கிலாந்தின் மிகப்பெரிய காண்ட்ராக்டரான ஸர் ராபர்ட் ப்யூமாண்ட் என்பவர். ஆனால், ஸாவோவிலிருந்து அவருக்கு வரும் செய்திகள் உற்சாகம் அளிக்கக்கூடியவனவாக இல்லை. ஜான் ஹென்றி பேட்டர்சன் (வால் கில்மர்) என்ற ஒரு ராணுவ அதிகாரியை அழைக்கிறார். அவரிடம் ப்யூமாண்ட் பேசும்போது, நமக்கும் பிரச்னையின் தீவிரம் உறைக்கிறது. பேட்டர்சன், பணியினை ஏற்றுக்கொண்டு, ஆப்பிரிக்கா செல்கிறார். ஸாவோ, மிகுந்த இயற்கை வளங்களைக் கொண்டதாக இருக்கிறது. முகாமுக்குச் செல்லும் பேட்டர்சன், அங்கு சாமுவேல் என்ற ஒரு உள்ளூர் மனிதரைச் சந்திக்கிறார். சாமுவேல், பேட்டர்சனிடம், அங்கு சிலபேரை, ஒரு சிங்கம் கொன்று தின்றுவிட்டதைச் சொல்கிறார். இதனாலேயே, கட்டுமானப் பணி மிகவும் மெதுவாக நடப்பதாகவும், தொழிலாளர்கள் அனைவரும் பீதியினால் உறைந்து போயிருப்பதாகவும் சாமுவேல் சொல்கிறார்.

அன்று இரவு, ஏதோ சத்தம் கேட்டு வேளியே வரும் பேட்டர்சன், முகாமில் நுழையும் ஒரு சிங்கத்தை சுட்டுக் கொன்று விடுகிறார். பிரச்னை ஓய்ந்தது என்று அனைவரும் நிம்மதியாகிறார்கள். சில நாட்களிலேயே, ஓர் இரவில், ஒரு தொழிலாளி, சிங்கத்தினால் அடித்து இழுத்துச் செல்லப்படுவதை நாம் பார்க்கிறோம். மறுநாள், அவனது உடல் காட்டுக்குள் கண்டெடுக்கப்படுகிறது.

பேட்டர்சன் உஷாராகிறார். அன்று இரவு, விழிப்புடன் காவல் புரிகிறார். ஆனால், மறுநாளே, இன்னொரு தொழிலாளி கொல்லப்பட்ட செய்தி அவருக்குக் கிடைக்கிறது. அதுவும், அவர் காவல் புரிந்த இடத்திற்கு நேர் மறுகோடியில்.

இக்கொலைகளை நிகழ்த்துவது, வேறு ஒரு சிங்கம் என்று அனைவரும் உணர்கிறார்கள். ஓர்நாள், பேட்டர்சன் முகாமில் இருக்கும்போதே, ஒரு சிங்கம், அவரது நண்பனான ஸ்டெர்லிங் என்ற ஒருவனைத் துரத்துகிறது. அந்தச் சிங்கத்தை பேட்டர்சன் சுட முயலும்போது, இன்னொரு சிங்கம் அங்கு தோன்றி, ஸ்டெர்லிங்கைக் கொன்று விடுகிறது. அப்போதுதான், இரண்டு சிங்கங்கள், கூட்டணி அமைத்துக்கொண்டு, தொழிலாளிகளை வேட்டையாடி வருவது அனைவருக்கும் தெரிகிறது. தொழிலாளிகள் அனைவரும், வேலை செய்யாமல், அவர்களது ஊர்களுக்குப் புறப்படுகிறார்கள்.

பேட்டர்சன், இச்சிங்கங்களைப் பிடிக்க ஒரு பொறியை அமைக்கிறார். இப்பொறி, ஒரு பெரிய மரக்கூண்டு ஆகும். அந்தக் கூண்டு, இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, இரண்டுக்கும் இடையில் ஒரு கம்பிகளால் ஆன கதவு பொருத்தப்படுகிறது. மறுபக்கத்தில், சில ஆட்கள், துப்பாக்கிகளோடு நிற்கவைக்கப்படுகின்றனர். கூண்டின் முன்பக்கத்தின் வாயிலில், ஒரு பெரிய மரக்கதவு பொருத்தப்படுகிறது. கூண்டு, முகாமுக்கு உள்ளே திறந்து வைக்கப்படுகிறது. சிங்கத்தை எப்படியோ கூண்டினுள் அனுப்பி விட்டால், கூண்டின் மறுகோடியில் உள்ளவர்கள், சிங்கங்களைச் சுட்டுவிடலாம் என்பது ஏற்பாடு.

ஒரு சிங்கம் எப்படியோ கூண்டினுள் மாட்டி விடுகிறது. முன்கதவும் மூடிவிடுகிறது. கூண்டினுள் அகப்பட்டு விட்ட சிங்கம், ஆவேசமாக அங்குமிங்கும் குதிக்கிறது. கூண்டின் மறுகோடியில் உள்ளவர்கள், பயந்துபோய், கண்டபடி சிங்கத்தைச் சுடுவதில், ஒரு குண்டு வாயிற்கதவின் மேல் பட்டு, கதவு திறந்துவிடுகிறது. சிங்கம் ஓடிவிடுகிறது.

அந்த நேரத்தில், முகாமுக்கு வரும் ப்யூமாண்ட், இந்தப் பாலம் கட்டப்படாவிட்டால், அவருடைய மதிப்புக்கு ஒரு இழுக்கு என்று சொல்லி, அந்தப் பிராந்தியத்திலேயே புகழ்பெற்ற வேட்டைக்காரரான ரெமிங்டனுக்கு அழைப்பு விடுக்கப்போவதாகச் சொல்கிறார்.

சில நாட்களிலேயே, தன்னுடைய பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆட்களோடு முகாமுக்கு வரும் ரெமிங்டன் (மைக்கேல் டக்ளஸ்), பேட்டர்சனிடம் அனைத்து விஷயங்களையும் கேட்டறிகிறார். தன்னுடைய பழங்குடி ஆட்களை வைத்து, சிங்கங்களைப் பிடிக்க முயல்கிறார். அனைவரும் ஒரு பெரும் படையாகக் காட்டுக்குள் செல்கிறார்கள். ஒரு பெரிய வட்டமாக, மெதுவே வட்டத்தைக் குறுக்கிக் கொண்டே வருகிறார்கள். ஒரு கட்டத்தில், பேட்டர்சன், ஒரு சிங்கத்தைப் பார்த்து விடுகிறார். சிங்கமும் பேட்டர்சனை முகத்துக்கு முகம் – நேருக்கு நேர் பார்க்கிறது. அதன் வெகு அருகில் – எதிரே நின்று கொண்டு, அதன் முகத்தை நோக்கி, துப்பாக்கியை மெதுவாக உயர்த்தி, ட்ரிக்கரை அழுத்துகிறார் பேட்டர்சன்.

அதன்பின் என்ன நடந்தது? பேட்டர்சன் சிங்கத்தைக் கொன்றாரா? மற்றொரு சிங்கம் என்ன ஆயிற்று? சிங்கங்களின் ரத்தவெறி அடங்கியதா? டி வி டி திரையில் காணுங்கள்.

இந்தப்படம், ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை, சர்ர்ரென்று செல்லக்கூடிய ஒரு படம். இரண்டு சிங்கங்கள் அறிமுகமாகும் காட்சியில், ஒரு சிங்கம் வால் கில்மரின் தலைக்கு மேலாக எகிறிக் குதிக்கும். அந்தக் காட்சி, அட்டகாசம் ! வால் கில்மரின் நடிப்பைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. மைக்கேல் டக்ளஸ், இப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்ததால், அவரது கதாபாத்திரம், இரண்டாம் பகுதி முழுக்க வருமாறு மாற்றியமைக்கப்பட்டது. துடிப்பான ஒரு எக்ஸென்ட்ரிக் போல் ஜாலியாக இப்படத்தில் நடித்திருப்பார்.

இப்படத்தில் நம்ம ஓம்பூரியும் உண்டு. தொழிலாளர்கள் தலைவராக வருவார். எப்போது பார்த்தாலும் பேட்டர்சன்னோடு சண்டை போடுவார். சாமுவேல் கதாபாத்திரத்தின் வாயிலாகவே இக்கதை நமக்குச் சொல்லப்படுகிறது. படம் முழுக்கவும், பேட்டர்சனின் தோழராக, நம்பிக்கையான ஒரு உதவியாளராக வரும் இந்தக் கதாபாத்திரம்.

இக்கதை, உண்மையில் நடந்த ஒன்றாகும். இந்த இரண்டு சிங்கங்களின் நிஜப்புகைப்படம் இதோ. ஒரு ம்யூசியத்தில் பாடம் செய்து வைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிங்கங்கள், சாதாரணமான சிங்கங்களை விட, அளவில் பெரிய உருவத்தைக் கொண்டவை. இந்தச் சுட்டியில் சென்று பார்த்தீர்களானால், இந்தச் சிங்கங்களைப் பற்றிய உண்மைகளையும், அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட இரு புகைப்படங்களையும் காணலாம். இவ்வளவு பெரிய ஒரு சிங்கம், நம் எதிரே உறுமிக்கொண்டு நின்றால், பயத்திலேயே உயிர் போய்விடும் என்று தோன்றுகிறது.

இந்தச் சிங்கங்கள் மனிதனை வேட்டையாட ஆரம்பிப்பதற்குப் பல காரணங்கள். அதில் முக்கியமானது, காயம் அடைவது. மற்ற மிருகங்கள் ஓடிவிடுவதால், பேயறைந்தது போல் நிற்கும் மனிதப் பதரை இரையாக வெகு சுலபமாகத் தேர்ந்தெடுத்து விடுகின்றன. பொதுவாக, மனிதனை உண்பதில், புலிகள் தான் அதிகம் என்று கூறப்படுகின்றது. இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள, நம் ஜிம் கார்பெட் எழுதிய அவரது சாகசங்களின் தொகுப்பான, ‘The Jim Corbett Omnibus’ என்ற நூலைப் படிக்கலாம். அதில், அவர் கொன்ற அனைத்துப் புலிகளைப் பற்றியும், அருமையாக, மயிக்கூச்சிடவைக்கும்படி விவரித்திருப்பார் (என்ன.. படிக்கும்போது, இரவில் புலி நம் மீது பாய்ந்து, குரல்வளையைக் கடிப்பது போன்ற சொப்பனம் வரும்.. அது பரவாயில்லை என்பவர்கள் படிக்கவும்).

இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது கட்டுரை இங்கே

கோஸ்ட் அண்ட் த டார்க்னெஸ் படத்தின் டிரைலர் இதோ.

  Comments

14 Comments

  1. நண்பரே,

    அருமையான பதிவு, இவ்வளவு பெரிய சிங்கம் அருகே வர நான் அங்கு நிற்க வேண்டுமே. ஒரே ஓட்டம்தான்!!

    Reply
  2. நல்ல நடை (உங்க எழுத்து நடைய சொன்னேன்). முழுக்கதையும் சொல்லிடுவீங்க்ளோன்னு நினைச்சேன். ஆனா, எங்க விமர்சனத்த நிறுத்தனும் (அது பெரிய கலை) உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சுருக்கு. பார்த்துடுவோம்.

    Reply
  3. யப்பா.. என்னால இப்பல்லாம் பின்னூட்டம் கூட போட முடியறது இல்லை. ஆனா.. நீங்க பதிவா எழுதி கலக்குறீங்க!!! 🙂 🙂

    ஆச்சரியம்.. நீங்க எழுதும் படங்கள்… ஒன்னு நான் கேள்விப்பட்டதாவே இருக்காது. இல்லைனா.. அது என் ட்ராஃப்ட்டில் இருக்கும். 🙂 🙂 🙂

    நெட்ஃப்ளிக்ஸில் இந்தப் படத்தை… ஆன்லைனில் பார்க்க முடியும். க்யூவில் போட்டுட்டேன். நாளைக்குப் பார்த்துடுறேன்.

    அந்த காலத்தில்.. ஆங்கிலப் படங்களில் இந்திய முகம்னா.. ஓம்பூரிதான்னு நினைக்கிறேன்.

    Reply
  4. படம் பார்த்த எஃபெகிட்…
    டவுன்லோடு போட்டாச்சு …..
    கிட்ட தட்ட “Prey” மாதிரி படம் போல ?

    Reply
  5. கருந்தேள் கண்ணாயிரம்,

    வாழ்த்துக்கள். தொடர்ந்து நல்ல படங்களை பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கு. இப்போது இருக்கும் சின்ன வயசை விட இன்னும் சிறியவனாக இருக்கும் பொது பார்த்து ரசித்த படம் இது. மறுபடியும் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள்.

    Reply
  6. KK,

    சொல்ல மறந்து விட்டேனே, மீ த பேக்.

    Reply
  7. ///. இப்போது இருக்கும் சின்ன வயசை விட இன்னும் சிறியவனாக இருக்கும் பொது பார்த்து ரசித்த படம் இது///

    இங்க பாருய்யா…. இன்னொரு யூத்து..!

    Reply
  8. பாலா,

    // இங்க பாருய்யா, இன்னொரு யூத்து…..//

    அந்த இன்னொரு யூத்து நான். சரி, ஒக்கே. அப்ப முதல் யூத்து யாரு?

    Reply
  9. அருமையான விமர்சனம் எப்படியும் நாளைக்கு பார்த்திடவேண்டியது தான்.

    யூத்தா …. அப்படின்னா … ??? முதல்ல யாராவது யூத் ன்ன என்னான்னு ஒரு பதிவு போடுங்கையா……
    இவங்க ரெண்டு பேரு இம்சையும் தாங்க முடியல ….:))))

    Reply
  10. யப்பாடி . .நேத்து பதிவு போட்டவுடனே போய் நல்லா சரக்கடிச்சிட்டு கவுந்ததோட சரி . .அதுக்கப்புறம் சரியா ஒரு நாள் கழிச்சித்தான் திரும்ப வந்துருக்கேன் . .அதுனால, பின்னூட்டம் இப்போதான் போட முடிஞ்சுது . . நண்பர்கள் தவறா எடுத்துக்க வேணாம் . . 🙂

    @ அண்ணாமலையான் – வாங்க வாங்க . .கொஞ்ச நாள் கழிச்சி இந்தப்பக்கம் வந்துருக்கீங்க . . 🙂 . . நன்றி . .

    @ கார்த்திகேயன் – மிக்க நன்றி நண்பா . .

    @ காதலரே – அதேதான் நானும் ! 🙂 எனக்கு பல போபியாக்கள் உண்டு . .கிட்டத்தட்ட தெனாலி மாதிரித்தான் நானு . . 🙂

    @ பின்னோக்கி – ரொம்ப நன்றி .. . இன்னும் சிறப்பா இனிமேல் வர்ற விமரிசனங்களை எழுதி, உங்க நம்பிக்கையைக் காப்பாத்த முயற்சி பண்றேன் தல . .

    @ பாலா – வணக்கம் தல . .அந்த ரகசியம் வேற ஒண்ணுமில்ல . .ஆபீஸ்ல வேலை ரொம்ப கம்மி . .எல்லா கிளையண்டுகளும் வெகேஷன்ல போயிட்டானுவ . .அதான் இப்புடி . . ஹீ ஹீ 🙂 . .

    இந்தப்படம் உங்களுக்குக் கண்டிப்பா புடிக்கும் தல . .பார்த்துட்டு சொல்லுங்க . .

    நீங்க சொன்னது சரி . .அந்தக்காலத்துல ஒம்புரிதான் ஒரே இந்திய முகம் . . ஹாலிவுட்ல. . 🙂

    @ சரவணன் – அமாம் . .இது ப்ரே மாதிரி தான் . .ஆனா, கொஞ்சம் பழைய படம்ங்கரதால, கிராபிக்ஸ் கொஞ்சம் கம்மி . .ஆனா நல்லா படம் . .

    @ விஸ்வா – அட! நானும் சின்னப்பையனா இருந்தப்ப தான் பார்த்தேன் . .:) நானும் யூத்துதான் . . நானும் யூத்துதான் . . 🙂 அந்த மோதல் யூத்து . . நம்ம தல தான் . . 🙂

    @ mahee – மிக்க நன்றி. . பாருங்க . .

    அட என்ன இப்புடி சொல்லிபுட்டீங்க . .நம்ம எல்லாருமே யூத்துதானே . . (உங்களையும் சேர்த்தி. . ஹீ ஹீ ) . .

    Reply
  11. பாஸ்.நல்ல படம்…நான் எழுதனும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன்.நீங்க அருமையா எழுதிவிட்டீர்கள்.இப்படத்தில சொல்லாமல் சொல்ற விசயம் ஒரு காட்ட அழிச்சா எவ்வளோ பிரச்சனைகள்…இயற்கையை நேசிக்கனும்.அம்புட்டுதேன்..

    Reply

Join the conversation