God of War: Ascension (2013) – PS3 game review

by Karundhel Rajesh September 17, 2013   Game Reviews

முன்னுரை – God of War பற்றிய எனது கட்டுரையை முதல் வார்த்தையை க்ளிக் செய்து படிக்கலாம்.[divider]

கிரேக்கத்தின் கடவுள்களான ஸ்யூஸ் (Zeus), பொஸைடன், ஹேடெஸ் மற்றும் இன்னும் பல குட்டி, பெரிய, நடுநிலைக் கடவுட்கள் வாழ்ந்து வந்த ஒலிம்பஸ் மலையில் பல்வேறு சாகஸங்களை நிகழ்த்திய க்ராடோஸ், பெரும் கடவுள் ஸ்யூஸைக் கொன்றுவிட்டு, ஸ்யூஸின் ஆயுதமான ஒலிம்பஸின் வாளால் தன்னைத்தானே குத்திக்கொண்டு இறக்கும் தருவாயில் விழுந்து கிடக்கிறான் (God of War 3).

போர்க்கடவுள் ஆனபின்னர் கடவுட்களின் அரசன் ஸ்யூஸால் வஞ்சிக்கப்பட்டு, பாதாள உலகில் தள்ளப்பட்டு, கிரேக்கக் கடவுள்களின் முதல் எதிரிகளான டைட்டன்களை சேர்த்துக்கொண்டு ஒலிம்பஸ் மலையின் மேல் கொலைவெறியோடு க்ராடோஸ் ஏறிக்கொண்டிருக்கிறான் (God of War 2).

பண்டைய கிரேக்கத்தின் போர்க்கடவுள் ஏரீஸைக் கொன்று, ஒரு சாதாரண தளபதியாக இருந்த க்ராடோஸ் என்ற மனிதன், போர்க்கடவுள் ஆகிறான் (God of War).[divider]

‘எல்லாவற்றுக்கும் முன்னர் – கிரேக்கக் கடவுளர்கள், அவர்களின் எதிரிகளான டைட்டன்கள் ஆகியவர்களின் பிறப்புக்கும் ஆயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன்னர் – Primordial என்பவர்கள் இருந்தனர்’ என்ற விஷயத்தோடு இந்த God Of War நான்காவது பாகம் ஆரம்பிக்கிறது. உண்மையில் இதுதான் எல்லா கேம்களுக்கும் முன்னால் நடந்த கதை. Prequel. கிரேக்க கடவுளர்களின் கதையை இதற்கு முன்னரே பல கட்டுரைகளில் நமது தளத்தில் நாம் பார்த்திருக்கிறோம். இதோ இந்தக் கட்டுரைகளில் அவர்களின் கதையை படிக்கலாம். கிரேக்க கடவுளர்களின் தலைவரின் பெயர் – ஸ்யூஸ் (zeus). நமது கைலாய மலையில் அமர்ந்திருக்கும் சிவனைப்போல், இவரது மலை – ஒலிம்பஸ். இந்த ஸ்யூஸுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பூமி உருவாக்கப்படுவதற்கும் முன்னர் இருந்தவர்கள்தான் ப்ரீமார்டியல்கள். மிகவும் சக்திவாய்ந்தவர்கள். இவர்களுக்குள் நிகழ்ந்த ஒரு பெரும் போரினால்தான் மலைகள், கடல்கள், எரிமலைகள் போன்றவை பூமியில் தோன்றின. இந்தப் போரில் உருவான கொடிய சக்திகள்தான் Furies என்று அழைக்கப்படும் மூன்று சகோதரிகள்.

இதுதான் க்ரேக்கப் புராணங்கள் விவரிக்கும் கதை.

இதன்பின் டைட்டன்கள் என்றவர்கள் உருவாகி, அவர்களின் தலைவர் க்ரோனஸ் பிறந்து, தனது மகனாலேயே தனது உயிர் போகும் என்ற அசரீரியைக் கேட்டு, தனது மகன்களை ஒவ்வொருவராக கொன்று, அவர்களில் தப்பிப்பிழைத்த ஆறாவது மகன் ஸ்யூஸால் கைப்பற்றப்பட்டு டார்டாரஸ் என்ற மலையில் அடைக்கப்பட்டது, பிரபல கிரேக்க புராண வரலாறு.

அப்படி தனது தந்தைக்கெதிராக புரட்சி செய்த ஸ்யூஸும் அவரது பக்கம் நின்ற பிற கடவுளர்களும், ‘ஒலிம்பியன்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் வாசஸ்தலம், ஒலிம்பஸ் மலை. அங்கிருந்தபடியே பூமியை ஸ்யூஸ் மேற்பார்வையிட்டு வந்தார். அவரது தம்பி பொஸைடன் கடலையும், ஹேடெஸ் பாதாளத்தையும் ஸ்யூஸின் தலைமையின் கீழ் கவனித்துக்கொண்டனர். ஸ்யூஸ், ஃப்யூரிகளை தனது சக்தியின்கீழ் கட்டுப்படுத்தி, அவர்களை கடவுளர்களின் எதிரிகளை தண்டிப்பதற்கு பயன்படுத்தினார்.

இத்தகையதொரு சூழலில்தான் God of War: Ascension ஆரம்பிக்கிறது.

இந்தக் கதைதான் God of War ஸீரீஸின் முதல் கதை. இக்கதை தொடங்கும்போது க்ராடோஸ் என்ற ஸ்பார்ட்டாவின் தளபதி, தனது மனைவி மற்றும் குழந்தையை போர்வெறியில் கொன்றுவிட்டு, அதனால் மனதில் ஆறாத ரணத்துடன் இருக்கிறான். போர்க்கடவுள் ஏரீஸிடம் தான் கொடுத்த சத்தியத்தை (அடிமையாக இருப்பதை) மீறியதற்காக, அப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகள் சிறைப்படுத்தப்படும் ஒரு மெகா சைஸ் ஜெயிலில் சதை ஆரம்பிக்கிறது. அங்கே கட்டுண்டு கிடக்கிறான் க்ராடோஸ். இந்த ஜெயில் – ஹெகடாங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட ஆயிரம் கைகள் உடைய ஒரு மிகப்பிரம்மாண்ட மனித ஜந்துவின் உடல். கல்லாக மாறிய அந்த ஜந்துவின் உடலே, இப்போது ஜெயிலாக இருக்கிறது.

நாம் ஏற்கெனவே பார்த்த Fury சகோதரிகளில் ஒருத்தியான மேகேய்ரா, க்ராடோஸை சித்ரவதைப்படுத்துகிறாள். அப்போது தனது ஒரு கையில் பிணைக்கப்பட்ட விலங்கை உடைத்துக்கொள்வதுமூலம் அவளிடமிருந்து தப்பிக்கிறான் க்ராடோஸ். உடனடியாக அங்கிருந்து தப்பிக்கும் மேகேய்ராவை துரத்துகிறான் க்ராடோஸ். கடுமையான சாகசங்களுக்குப் பின்னர் அவளைக் கொல்கிறான்.

இப்போது ஃப்ளாஷ்பேக்.

டெல்ஃபி கோயில் என்பது பண்டைய கால கிரேக்கத்தில் மிகவும் புகழ்பெற்ற விஷயம். இந்தக் கோயிலில் அமர்ந்திருக்கும் வயதான மாதுவின் (ஆரக்கிள்) மூலம் கடவுள்கள் பேசுவதாக நம்பப்பட்டது. தற்காலத்தின் குறிசொல்லும் பூசாரிகளுக்கு முன்னோடிகள் இவர்கள். வயதான மாதுக்கள் என்பதற்குக் காரணம், ஒரு காலத்தில் இளம்பெண்களே ஆரக்கிள்களாக நியமிக்கப்பட்டதாகவும், ஆனால் சாமியாடும்போது அங்கு வந்த Echecrates என்பவனால் பலாத்காரம் செய்யப்பட்டதால் அதன்பின்னர் வந்த ஆரக்கிள்கள் யாவருமே 50 வயதாவது நிரம்பியிருக்கவேண்டும் என்பதாக ஒரு சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

இப்படிப்பட்ட ஆரக்கிளை தேடிச்செல்கிறான் க்ராடோஸ். இதற்குக் காரணம், ஏற்கெனவே அவனது மனதில் இந்த ஃப்யூரிகளால் உருவாக்கப்பட்ட பிம்பங்கள். ஆரக்கிளிடம் சென்றால், அவள் இறக்கும் தருவாயில் இருப்பது க்ராடோஸுக்கு தெரிகிறது. அவள் அவனை டெலாஸ் என்ற இடத்தில் இருக்கும் Eyes of Truth என்ற விசேட சக்தி வாய்ந்த கண்களை எடுத்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு இறக்கிறாள்.

டெலாஸ். அப்போலோவின் பிரம்மாண்ட சிலை அங்கு இருக்கிறது. ஆனால் அது உருக்குலைந்து கிடக்கிறது. அந்த சிலைக்குள் நுழையும் க்ராடோஸ், பல சாகசங்களின் மூலம் சிலையை மீண்டும் புதியதாக மாற்றுகிறான். அப்போதுதான் ஃப்யூரிகள் அவனை சிறைப்படுத்துகின்றன. இதன்பின் நிகழ்காலம்.

நிகழ்காலத்தில் ஃப்யூரிகளோடு சண்டையிடும் க்ராடோஸ், அவர்களை கொல்கிறான். இந்த ப்யூரிகளின் சகோதரனான ஆர்கோஸ் என்பவன், க்ராடோஸுக்கு முதலிலிருந்தே உதவி வருபவன். ஃப்யூரிகளோடு சேர்ந்து தானும் இறந்தால்தான் கடவுள் ஏரீஸின் சாபத்திலிருந்து க்ராடோஸ் விடுபடமுடியும் என்று இறைஞ்சும் ஆர்கோஸை இறுதியாகக் கொல்லும் க்ராடோஸ், முதல் பாக துவக்கத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கிறான். [divider]

துவக்கத்திலிருந்து நான் – லீனியராக பயணிக்கும் இந்தக் கதை, இந்த கேமின் முந்தைய பிற பாகங்களைப் போல் அந்த அளவு சுவாரஸ்யமாக இல்லை. விறுவிறுப்பு மிகவும் கம்மி. ஆயுதங்கள், விசேட சக்திகள் ஆகியவை நன்றாக இருந்தாலும், ஒரே போன்ற கதையமைப்பால் ஆட்டத்தின் சுவாரஸ்யம் கெடுகிறது. அதேபோல், இதில் வரும் புதிர்களும் மிக எளிமையானவை.

பழைய கேம்களைப் போலவே க்ராடோஸின் முக்கியமான ஆயுதமாக, அவன் கைகளைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் Blades of Chaos என்ற சங்கிலியால் பிணைக்கப்பட்ட கத்திகளே இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், இந்த ஆட்டத்தில், புதியதொரு moveஆக, க்ராடோஸ் கொல்லும் எதிரிகளின் கையிலிருக்கும் ஆயுதங்களை எடுத்துப் பயன்படுத்தும் ஆப்ஷனும் இருக்கிறது. இது ஓரளவு சுவாரஸ்யமாகவும் இருந்தது. பழைய கேம்களில் இருக்கும் அதே விசேட சக்திகளான ஸீயஸின் இடி, ஹேடெஸின் அழிவுசக்தி, பொஸைடனின் பனி, ஏரிஸின் நெருப்பு ஆகியவை இந்த கேமிலும் இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக பாயிண்ட்களை ஏற்றிக்கொண்டு இந்த சக்திகளை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.

இதைத்தவிர, இந்த கேமின் விசேட அம்சங்கள்: க்ராடோஸுக்கு கிடைக்கும் மூன்று பெரும் சக்திகள். Amulet of Uroborus, Oath Stone of Orkos மற்றும் Eyes of Truth. இவையால், முறையே அழிந்துபோன ஒரு பொருளை மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கவும், ஃப்யூரிகளால் உருவாக்கப்பட்ட மாயைகளை மறையவைக்கவும் முடியும். இவற்றை வைத்துக்கொண்டு சரியான நேரத்தில் சரியான சக்தியை உபயோகித்து க்ராடோஸ் செய்யும் சாகசங்கள் நன்றாக இருக்கின்றன. (குறிப்பாக Amulet of Uroborus. இடிந்துபோன பல கட்டிடங்களை உருவாக்க இது உதவுகிறது. அந்த இடங்களின் க்ராஃபிக்ஸ் அருமையாக இருக்கிறது).

இந்த கேமிலும், முந்தைய கேம்களைப்போலவே பல வகையான ராட்சத ஜந்துகள் வருகின்றன. ஆனால், அவைகளை சுலபமாக கொன்றுவிட முடிகிறது. இன்னும் கடினமான modeகளில் இனிமேல்தான் ஆடிப்பார்க்க வேண்டும். ஆனால், இந்த ஃப்யூரிகளை கொல்ல க்ராடோஸ் செய்யும் போர்கள் மிகவும் அலுப்பையே தந்தன. அவைகளைக் கொல்வது எரிச்சலாகவும் இருந்தது.

இனிமேல் இந்த கேம் ஸீரீஸை நிறுத்திவிடுவதே ஸோனிக்கு நல்லது. இனிமேலும் இது தொடர்ந்தால், அது கேம் பிரியர்களை ஏமாற்றும் வேலையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

My rating for this game would be 3. It’s a just pass. That’s it.

பி.கு

1. இந்த கேமை நான் விளையாடி முடித்தது, 2013 ஏப்ரலில். அப்போதே பாதியை எழுதிமுடித்துவிடேன். ஆனால், மீதியை இப்போதுதான் எழுத முடிந்தது.

2. இனிமேல் வரப்போகும் கேம் ரிவ்யூக்கள் – Tomb Raider 2013, Max Payne 3 & Red Dead redemption.

3. இந்த கேமின் ஸ்பெஷல் PS3 எடிஷனை நான் பெங்களூரின் சப்னா புக் ஹௌசில் வாங்கினேன். விலை – 3200/-.

 

  Comments

3 Comments

  1. iam waiting for tomb raider rivew. அதுல பலைய ரிவ்யூல இருக்குறமாரி ஒரு போட்டோ போடுங்க தல.

    Reply
    • Rajesh Da Scorp

      ஹா ஹா … பழைய ஃபோட்டோவை இன்னும் நினைவு வெச்சிருக்கீங்களா?

      Reply
  2. bharani

    god of war 4 part vandhuruche… ungalukku theriyadha? seekkiram adhai vangi vilayadung… it’s very interesting…

    Reply

Join the conversation