Gone Girl (2014) – English

by Karundhel Rajesh November 1, 2014   English films

ஜிலியன் ஃப்ளின் என்ற நாவலாசிரியை எழுதிய மூன்றாவது புத்தகம்தான் Gone Girl. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் பத்திரிக்கைத் துறையில் (U.S News & World Report and Entertainment Weekly) இருந்துவிட்டு, அப்போதே நாவல்களையும் எழுதி வெளியிட்டவர். இவரது இரண்டாவது நாவலான Dark Places என்பது 2009ல் எழுதப்பட்டது. இந்த வருட இறுதியில் சார்லீஸ் தெரான் நடித்துப் படமாக வரப்போகிறது. அவரது மூன்றாவது நாவலான Gone Girlன் திரை உரிமை, ஒன்றரை மில்லியன் டாலர்களுக்கு ட்வெண்டியத் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தாரால் வாங்கப்பட்டது. திரைப்படத்தைப் பார்க்கும்போது அதில் தயாரிப்பாளர்கள் வரிசையில் ரீஸ் விதர்ஸ்பூனின் பெயரை நீங்கள் கவனிக்கலாம். அவரது தயாரிப்பு நிறுவனமான Pacific Standard இதைத் தயாரித்திருப்பதுதான் காரணம். இந்த ஒன்றரை மில்லியன் டாலர் டீல்தான் ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய டீல்களில் ஒன்று என்று அதன் தலைவர்களில் ஒருவரான பீட்டர் காங் குறிப்பிட்டிருக்கிறார். காரணம், Gone Girl நாவலாக வெளிவந்து பெற்ற வெற்றிதான். கிட்டத்தட்ட எட்டு வாரங்கள் ந்யூயார்க் ட்டைம்ஸ் பெஸ்ட் செல்லர் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருந்த நாவல் இது என்பது இணையும் முழுதுமே தெரிந்த தகவல்.

இந்தத் திரைப்படத்தால் நாவலாரிசியை ஜிலியன் ஃப்ளின்னுக்குக் கிடைத்த பணத்தைப் பற்றி முதலில் பார்க்கலாம். ஒரு அட்டகாசமான திரைக்கதை எழுதினால் அது எப்படி இருந்தாலும் வெற்றிபெறும் என்பதற்கு உதாரணம் இது. முதலில் அவருக்கு இந்தத் திரைக்கதை எழுத 500,000 டாலர்கள் கொடுக்கப்பட்டன. இந்தத் திரைக்கதை படமாக எடுக்கப்பட்டால் இன்னொரு 500,000 டாலர் சம்பளம் அவருக்குக் கிடைக்கும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்பின் படம் முடிந்ததும் இன்னொரு 500,000 டாலர்கள் அவருக்குக் கிடைக்கும். நம்மூர் பணத்தில் இந்த ஒன்றரை மில்லியன் என்பது ஒன்பது கோடி. இதுதான் நல்ல திரைக்கதை ஒன்றுக்கு ஹாலிவுட் கொடுக்கும் சம்பளம். எழுத்தாளர் யாரென்றே தெரியாமல் இருந்தாலும் சரி.

நமது தளத்தைப் படிக்கும் அத்தனை நண்பர்களும் கில்லாடிகள் என்பதால், படத்தை இயக்கிய டேவிட் ஃபிஞ்ச்சர் பற்றி எழுத எதுவுமே இல்லை. ஹாலிவுட் உருவாக்கிய சிறந்த இயக்குநர்களில் ஒருவர். பல்வேறு விதமான படங்களை இயக்கியிருக்கிறார். தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் அவசியம் முதலிடத்தில் இருக்கும் சிலரில் ஒருவர். ’டேவிட் ஃபிஞ்ச்சரின் பெயரும் ரிச்சர்ட் லிங்க்லேட்டரின் பெயரும்தான் எனது எல்லா திரைத்துறை நண்பர்களின் டாப் டென் லிஸ்ட்டிலும் தவறாமல் இருந்தன’ என்று க்வெண்டின் டாரண்டினோவால் பாராட்டப்பட்ட நபர் (உடனே நோலன் அதில் இல்லையா என்று கிளம்பவேண்டாம். நோலன், ஃபிஞ்ச்சர் போல versatile படங்கள் எடுப்பவர் இல்லை). ஒரு இயக்குநர் ஒரே போன்ற படங்களை எடுத்தால் அதில் பெரிதாக சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஆனால் ஃபிஞ்ச்சர் அப்படி இல்லை. இதுவரை பத்து படங்கள் இயக்கியிருக்கும் ஃபிஞ்ச்சரின் படங்களைப் பார்த்தால், ஏலியன் 3 போன்ற விண்வெளி சாகஸங்களில் துவங்கி, இருண்ட சைக்கலாஜிகல் த்ரில்லர் (Seven, Zodiac), உணர்வுபூர்வமான Dramaக்கள் (Curious Case of Benjamin Button), அதிரடி சாகஸம் (Girl with a Dragon Tattoo), சுயசரிதை (The Social Network), பார்த்தவர்களால் மறக்க இயலாத cult படங்கள் (Fight Club) என்று பல்வேறு படங்களை இயக்கியிருப்பவர். (Fight Club பற்றிய விரிவான analysis விரைவில் நம் தளத்தில் வரும்). ஆனால் ஃபிஞ்ச்சர் உண்மையில் ம்யூஸீக் வீடியோக்கள் இயக்கித்தான் தனது திரையுலகக் கணக்கை ஆரம்பித்தார் என்றும் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.குப்ரிக் போலவே ஃபிஞ்ச்சரும் ஒரே காட்சியைப் பலமுறைகள் எடுப்பவர்.

இந்தப் படத்தைப் பார்த்தபின் எனக்குத் தோன்றியது – பென் ஆஃப்லெக் மற்றும் ரோஸமண்ட் பைக் ஆகிய இருவருமே அவசியம் 2015 ஆஸ்கர்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை விருதுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் இருவருக்குமே விருதுகள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. குறிப்பாக, ரோஸமண்ட் பைக்கின் அட்டகாசமான நடிப்பு (ரோஸமண்ட் பைக்குக்கு ஷைலீன் வூட்லி tough fight கொடுப்பார். ஆனாலும் பைக்தான் ஜெயிப்பார். இருந்தாலும், அழுவாச்சி காவியமான ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸும் சில விருதுகளை வாங்கலாம்). போலவே இந்தத் திரைக்கதைதான் சிறந்த திரைக்கதை ஆஸ்கர் வாங்கப்போகிறது. டேவிட் ஃபிஞ்ச்சர் அவசியம் சிறந்த இயக்குநர் ஆஸ்கரைப் பெறுவார் (ரிச்சர்ட் லிங்க்லேட்டர் ஃபிஞ்ச்சருக்குக் கடும் போட்டியைக் கொடுக்கக்கூடும். இருந்தாலும் ஃபிஞ்ச்சருக்கே விருது).

நிஜத்தில் எல்லாரின் வாழ்க்கையிலும் நடக்கும் சில சம்பவங்கள்தான் Gone Girl. நமக்குப் பிடித்த பெண்ணையோ ஆணையோ காதலித்துத் திருமணம் செய்துகொண்டபின்னர், மெல்ல மெல்ல அந்தக் காதல் உடைந்து சிதறுவது பலரது வாழ்க்கையிலும் நடப்பதுதான். இதை விரிவாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்டியிருக்கும் படம் இது. அதேபோல் எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்லது கெட்டது ஆகிய இரண்டும் இருக்கும். இந்த குணங்கள் அவ்வப்போது வெளிவரும். அப்படி வெளிவருகையில் அவற்றின் வீச்சு எப்படி இருக்கும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

பொதுவாக பென் ஆஃப்லெக்கைப் பலருக்கும் பிடிக்காது. இருந்தாலும், அவர் ஒரு நல்ல நடிகர். Argoவிலும் The Towனிலும் இவர் நடிப்பு தெளிவாக இருக்கும். போலவே Goodwill Hunting படத்துக்கு இவர் மேட் டேமனுடன் சேர்ந்து எழுதிய திரைக்கதைக்காக ஆஸ்கரும் வென்றிருக்கிறார். மிகவும் underplay செய்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். படத்தில் நிக் டன் (Nick Dunne) என்ற, சற்றே அலட்சியமான, மந்தமான, திருமண வாழ்க்கையால் மெல்ல மெல்ல ஒரு introvertஆக மாறிக்கொண்டிருக்கும் நபர். இவரது கதாபாத்திரம் எனக்கு நான் நிஜவாழ்க்கையில் பார்த்திருக்கும் பலரையும் நினைவுபடுத்தியது. இவருடன் கிட்டத்தட்ட இதேபோன்று மாறிக்கொண்டிருக்கும் ஆமி எலியட் டன் (Amy Elliot Dunne) என்ற பாத்திரத்தில் ரோஸமண்ட் பைக் (Die Another Dayவுக்குப் பிறகுதான் பிரபலம் அடைந்தார்). ஆமிக்கும் நிக்குக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம், நிக் ஆமியைக் குறைந்து மதிப்பிடுகிறான். எனவே, ஏற்கெனவே அழிந்துகொண்டிருக்கும் அவனது திருமண வாழ்க்கையைக் காப்பாற்ற அவன் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஆனால் ஆமி நிக்கைக் கச்சிதமாகக் கணித்து வைத்திருக்கிறாள் என்பது ஆமியின் கதை அவளால் சொல்லப்படும்போது புரியும்.

ஆமியின் பெற்றோர்கள், ஆமியை மாடலாக வைத்து Amazing Amy என்ற வெற்றிகரமான சிறுவர் புத்தகத் தொடரை எழுதியிருக்கிறார்கள். அந்தத் தொடரின் நாயகி சிறுமி ஆமிக்கும் நிஜமான ஆமிக்கும் எப்போதும் போட்டி நிலவியே வந்திருக்கிறது என்று ஒரு காட்சியில் ஆமி சொல்கிறாள். அந்தப் போட்டியில் எப்போதும் இவள் தோற்றே வந்திருக்கிறாள். நாவலின் ஆமிக்கு எல்லாமே கிடைத்தன. நிஜமான ஆமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. இந்த ஆற்றாமைதான் அவளது கதாபாத்திரத்தின் முக்கிய அம்சம். கூடவே, சிறுவயதில் இருந்தே கொஞ்சம் வித்தியாசமாக வளர்ந்தவள் ஆமி. ‘வித்தியாசம்’ என்றால் பைத்தியம் அல்ல. அது என்ன என்று படம் பார்க்கும்போது தெரியும்.

ஒரு த்ரில்லர் கதையில் பொதுவாக உணர்வுகளுக்கு வேலை இருக்காது. த்ரில்லரின் மையப்புள்ளியை நோக்கியே கதை செல்லும். ஆனால் இதில் உணர்வுகளுக்கே முதலிடம். இரண்டு மனிதர்கள் ஒரே வீட்டில் பல வருடம் சேர்ந்து வாழும் திருமணம் என்ற பந்தம் எப்படிப்பட்டது – அது எப்படியெல்லாம் அந்த இருவரையும் மாற்றுகிறது – அதனால் என்னென்ன நடக்கிறது என்று செல்லும் கதையில் ஆங்காங்கே சில சஸ்பென்ஸ்கள் உண்டு. அவையெல்லாம் படம் பார்க்கையில் உங்களுக்கே புரியும். அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான முயற்சி. படம் பார்க்கையில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எடுக்கப்படும் தரமான படங்களில் ஒன்றைப் பார்ப்பதுபோலவே தோன்றியது. சென்ற வருடம் பெங்களூர் திரைப்பட விழாவில் பார்த்த படம் ஒன்று – The Eternal Return of Antonis Paraskevas – படத்தில் இந்தப் படத்தில் பேசப்படும் கருவைப் பற்றிய விவரிப்பு உண்டு. அதாவது, மனிதர்களின் இருப்பும் இல்லாமையும் அவர்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தால் எப்படிப் பார்க்கப்படுகிறது என்பது.

நிஜவாழ்க்கையில் நமக்குப் பிடித்தவர்களிடம் முகமூடி அணிந்துகொண்டுதான் பழகுகிறோம். அந்த முகமூடியால், அவர்களுக்கு நம்மைப் பிடிக்கிறது. எப்போதும் சிரித்துப் பேசி, நல்லவர்களாக, காதலர்களாக நடித்துக்கொண்டே இருக்கிறோம். அப்படி நடித்து, நமக்குப் பிடித்தவர்களைத் திருமணம் செய்தபின்னர்தான் இயல்பு வாழ்க்கையில் நாம் எப்படி இருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரிகிறது. இதன்பின் ஒன்று – அந்தத் திருமணம் முறிகிறது; அல்லது அந்த வாழ்க்கையை ஜீரணித்துக்கொண்டு நாம் வாழ ஆரம்பிக்கிறோம். அப்போது மறுபடியும் பிறரிடம் இந்த நடிப்பு தொடர்கிறது. இதுதான் இந்தத் திரைப்படத்தின் செய்தி. இந்தப்படம், நம்மை நாமே ஒருமுறை அலசிப்பார்ப்பதை அவசியம் நிகழ்த்தும் என்று தோன்றுகிறது.

இன்னொரு விஷயம் – படத்தில் வரும் மீடியாவின் பங்கு. எப்படியெல்லாம் ஒரு கதையைத் தங்களிஷ்டத்துக்கு மீடியா வளைக்கிறது என்பதையும் விபரமாகப் பார்க்கமுடியும். அமெரிக்காவில் ரியாலிடி டிவி ஷோக்கள் மிகவும் சகஜம். அவற்றின் பாதிப்பு பொதுமக்கள் மீது எப்படி இறங்குகிறது என்பது இந்தப் படத்தில் நன்றாகவே சொல்லப்படுகிறது.

படத்தின் இசையைப் பற்றிச் சொல்லவேண்டும். ஃபிஞ்ச்சர், ஒரு ஸ்பாவில் நாம் நுழையும்போது எப்படிப்பட்ட அமைதியான இசை கசிகிறதோ அப்படித்தான் இதில் வேண்டும் என்று சொல்லி, அதேபோன்ற இசையைப் பெற்றிருக்கிறார். ஆனால் இதில் சில முக்கியமான காட்சிகளில் பின்னணியின் இசை அதற்கு நேர் எதிராக, திகிலைக் கிளப்பும் இசையாகவும் உள்ளது (Trent Reznor & Atticus Ross).

நடிப்பு, இசை, திரைக்கதை ஆகிய அத்தனை துறைகளிலும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் பல விருதுகளை வெல்லப்போகிறது. அதில் எனக்குச் சந்தேகமே இல்லை. இரண்டேகால் மணி நேரம் ஓடினாலும், அவசியம் திரையரங்கில் பார்க்கவேண்டிய படம் இது. இதற்குமேல் படத்தைப் பற்றி எதுவும் சொல்ல இயலாது. சொன்னால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் போய்விடும். படத்தைப் பாருங்கள்.

படத்தின் முதல் காட்சியும் இறுதிக் காட்சியும் ஒரே காட்சிதான். அதில் நிக் சொல்லும் வசனம் முதலில் புரியாமல் இருக்கலாம். இறுதியில் அதே வசனம் வரும்போது கதை கச்சிதமாக ஆடியன்ஸுக்கு சொல்லப்பட்டுவிட்டதால் ஃபிஞ்ச்சரின் திறமை புரிகிறது.

  Comments

7 Comments

  1. நண்பா பதிவிற்கு நன்றி…படம் பார்க்க தூண்டும் விமர்சனம்…எனக்கு பென் ஆஃப்லெக்கை பிடிக்கும்…பன்முக கலைஞர்….

    Reply
  2. Accust Here

    There is a rumour that Robert Downey Jr. appearing in Captain America 3, because it is about the fight between Captain America and Iron Man in the comics titled Civil War. Do you know anything about this?

    Reply
  3. mayan

    hats off to your hard work !!!!!!

    Reply
  4. Suryakumar

    டவுன்லோட் பண்ணலாமா வேணாமான்னு திங்கிங்ல இருந்தபோது, ஒரு எட்டு உங்க வெப்சைட்டை பார்க்கலாமேன்னு வந்தேன்… நன்றி… படம் பார்த்துட்டு சொல்றேன்

    Reply
  5. Sukumar M

    Really Breathtaking thriller movie thala….Thanks for this one…

    Reply
  6. i felt like watching a Tamil movie with no logic….but thrilling never the less …..

    Reply
  7. Prabhu J

    1st half of the film is good. But in the 2nd half when she plan to murder her friend whatever she do. Doesn’t make sense. Also from the hospital she come to her home with all those blood in her body.

    2nd half is kinda let down

    Reply

Join the conversation