Guardians of the Galaxy (2014) 3D – English

by Karundhel Rajesh August 9, 2014   English films

சென்ற வருடம் Firefly என்ற டிவி சீரீஸ் பற்றி நான் எழுதிய கட்டுரை நினைவிருக்கும். Avengers இயக்குநர் ஜாஸ் வீடன் உருவாக்கிய தொலைக்காட்சி சீரீஸ் இது. மிகவும் ஜாலியான ஒன்று. இதைப்போன்ற தீம்கள் உடைய படங்களும் சரி – தொலைக்காட்சி சீரீஸ்களும் சரி – உலகெங்கும் ரசிகர்களால் விரும்பப்படுகின்றன. Space என்பதுதான் இறுதி எல்லை என்றபோது அந்த எல்லையைத் தாண்டி, பல்வேறு உலகங்களுக்குள் சென்று சாகஸங்கள் புரியும் ஒரு விண்வெளிக் கப்பலையும் அதன் அங்கத்தினர்களையும் யாருக்குத்தான் பிடிக்காது?

Star wars நம் எல்லோருக்கும் தெரிந்த அப்படிப்பட்ட சாகஸம். அதற்கும் முன்னர் 1966லேயே ஒளிபரப்பப்பட ஆரம்பித்த Star Trek அமெரிக்காவில் cult ஸ்டேட்டஸை அடைந்த சீரீஸ். இப்போதுவரை கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இப்படிப்பட்ட சீரீஸ்கள் அங்கே இருக்கின்றன.அவற்றைப்போலவே அங்கே காமிக்ஸ்களும் மிகப்பிரபலம் என்பதும் எல்லாருக்கும் தெரியும். கிட்டத்தட்ட 70-80 ஆண்டுகளாக காமிக்ஸ்கள் அங்கே அட்டகாசமாக அஸ்திவாரம் போடப்பட்டு, செழித்து வளர்ந்துள்ளன. மார்வெல், DC போன்ற நிறுவனங்கள் உருவானது, அவர்களுக்குள்ளான போட்டி, ஸ்டான் லீ போன்ற சூப்பர்ஸ்டார்கள் உருவானது ஆகிய எல்லா backstoryயும் அவெஞ்சர்களைப் பற்றிய எனது கட்டுரைகளில் விரிவாக எழுதியிருக்கிறேன்.

குறிப்பாக மார்வெல் உருவாக்கிய உலகம் பிரமாதமானது. (கேப்டன் அமெரிக்காவைத் தவிர) எல்லாமே சிறுசிறு ஹீரோக்கள். ஆனால் அவர்கள் ஒன்றிணையும்போது பிரம்மாண்டமான சக்தியாக உருமாறி, அடித்துத் துவம்சம் செய்துவிடுவார்கள். இப்படித்தான் அவெஞ்சர்களின் உருவாக்கம் நிகழ்ந்தது. Fantastic Four போன்ற டீம்களும் தோன்றின. ஐம்பதுகளில் கும்பல் கும்பலாக சேர்ந்து சண்டையிடும் சூப்பர் ஹீரோக்களைப் பற்றிய craze காமிக்ஸ் ரசிகர்களிடையே பெருக ஆரம்பித்தது (ஆல்ரெடி DC காமிக்ஸ், Justice Leagueகினால் இந்த நெருப்பில் நெய் வார்த்திருந்தது). அதற்கு சரியான வகையில் தீனிபோடும் திறமையும் ஸ்டான் லீயிடம் அபரிமிதமாக இருந்தது. ஆகவே, இந்த சீரீஸை உருவாக்கியபின், சரமாரியாக புதுப்புது கதாபாத்திரங்களை உருவாக்க ஆரம்பித்தார் லீ. அவற்றில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இன்றளவும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருப்பதை கவனித்தால், அவரது புத்திசாலித்தனம் புரியும்.

அந்தக் கட்டுரைகளைப் படிக்க விரும்புபவர்களுக்கான லிங்க் இதோ:

Avengers: From Comics to Movies – a complete series

அவெஞ்சர்கள் உருவாகி, பிரம்மாண்ட வெற்றியை அடைந்தபின்னர் உருவாக்கப்பட்ட இன்னொரு கும்பல்தான் Guardians of the Galaxy. இவர்களுக்கும் அவெஞ்சர்களுக்கும் தொடர்பு உண்டு. இரண்டு கும்பல்களும் ஒருவருடன் மற்றோருவர் இணைந்து போரிடுவது சகஜம். குறிப்பாக, Iron Man. இந்த கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி டீம் 2008ல் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் முதன்முதலில் இந்தக் காமிக்ஸ் உருவாக்கப்பட்டபோது (1969) முற்றிலும் வேறு ஒரு டீம்தான் இருந்தது. ஆனால் அந்த டீமைவிட இந்தப் புதிய டீமின் கதாபாத்திரங்கள் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன என்பது என் கருத்து.


 

Guardians of the Galaxy டீமின் பின்னணி

Thanos

எல்லாவற்றுக்கும் முதலில் தானோஸ். இவன் தான் அண்டவெளியின் சக்திவாய்ந்த வில்லன். பல அவெஞ்சர் காமிக்ஸ்களில் வில்லத்தனம் செய்திருக்கிறான். அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசிக் காட்சியில் இவன் வருவான். கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸியில் தானோஸாக ஜாஷ் ப்ரோலின் நடித்திருக்கிறார். அதாவது மோஷன் கேப்சரில். இந்தத் தானோஸுக்கு இரண்டு அடியாட்கள். இருவரும் பெண்கள். அவர்களில் ஒருத்திதான் இந்தப் படத்தின் கதாநாயகி கமோரா. அவளைப் பற்றிப் பின்னால்.

guardians-of-the-galaxy-official-picture

Guardians of the Galaxy டீமின் தலைவன் – பீட்டர் க்வில் (Peter Quill). ஒரிஜினல் கதைப்படி வானவெளியில் இருந்து பூமியில் வெடித்துச்சிதறும் ஒரு விண்வெளிக் கலத்தில் இருக்கும் ஜேஸன் (J’Son), படுகாயப்படுகிறார். அப்போது அவரைக் காப்பாற்றும் மெரிடித் என்ற பெண்ணுடன் கொஞ்சகாலம் வாழ்கிறார். திரும்பியும் சென்றுவிடுகிறார். அதன் பலனாக மெரிடித்துக்கு பீட்டர் என்ற மகன் பிறக்கிறான். இந்த ஜேஸன், ஸ்பார்டாக்ஸ் (Spartax) என்ற கிரகத்தின் மன்னர். அங்கு நடக்கும் ஒரு கிளர்ச்சியின் காரணமாக இவரது எதிரி கும்பல் அவரைத் தேடுகிறது. அவரது வாரிசு பூமியில் இருப்பதால் பீட்டரைக் கொல்லவும் ஒரு படை வருகிறது. பீட்டரின் தாய் கொல்லப்படுகிறாள். வீடு வெடித்துச் சிதறுகிறது. பீட்டர் வளர்ந்து நாஸாவில் சேர்கிறான். விண்வெளிக்குப் பயணிக்கிறான். அதன்பின் அங்கே ஒரு ஏலியன் மூலமாக Star Lord என்ற பட்டத்தைப் பெறுகிறான். அவனது சாகஸ வாழ்க்கை துவங்குகிறது. இது, காமிக்ஸ் கதை.

ஆனால் திரைப்படத்தில் வரும் பீட்டரின் கதை சற்றே வேறுவகையானது. படத்தில், முதல் காட்சியிலேயே பீட்டரின் தாய் இறக்கிறாள். சிறுவன் பீட்டர் வெளியே வரும்போது அவனை ஒரு ஏலியன் கலம் கடத்திவிடுகிறது. அந்தக் கலத்தில் இருப்பவர்கள் பீட்டரை சாப்பிட முயற்சிக்க, அதனைத் தடுக்கிறான் அவர்களின் தலைவன் யோண்டு (Yondu). (யோண்டு என்ற பெயரில் பழைய கேலக்ஸி டீமில் ஒரு பாத்திரமும் காமிக்ஸில் உண்டு). அவன் வளர்ப்பில் வேற்றுக்கிரகத்தில் வளர்கிறான் பீட்டர். யோண்டு ஆணையிடும் திருட்டு சம்பவங்களைச் சிறப்பாகச் செய்துமுடிப்பதே பீட்டரின் வேலை. அப்படி ஒரு திருட்டில்தான் படம் துவங்குகிறது.

Guardians-of-the-Galaxy-poster-Rocket-Raccoon

கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி டீமுன் அடுத்த முக்கியமான நபர், ஒரு நபரே இல்லை. ஒரு மிருகம். ஒரு Raccoon. அதன் பெயர் ராக்கெட். அதிபுத்திசாலி. இந்த டீமில் பீட்டர் இல்லையெனில் ராக்கெட்தான் காமிக்ஸில் தலைமைப் பொறுப்பை அவ்வப்போது ஏற்கும். கைதேர்ந்த பைலட். மிகக்கடினமான நேரங்களில் தனது மூளையை உபயோகித்து அட்டகாசமான திட்டங்களைத் தீட்டும். விண்வெளியில் ஒரு கிரகத்தில் மிருகங்களை வைத்துப் பரிசோதனைகள் நடத்தியபோது அதன் விளைவாக சாதாரண ராக்கூனாக இருந்த இந்த ராக்கெட் அதிபுத்திசாலியான ராக்கெட் ராக்கூனாக மாறியது. நன்றாகப் பேசவும் செய்யும். இதுதான் பீட்டர் க்வில்லின் தளபதி.

படத்தில் இந்த ராக்கெட்டுக்குக் குரல் கொடுத்திருப்பவர் ப்ராட்லி கூப்பர். இந்த ராக்கெட்டின் கதாபாத்திரம் எக்கச்சக்க நகைச்சுவையோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. மறக்கவே முடியாத ஒரு பாத்திரமாக ராக்கெட் உங்கள் மனதில் இடம்பெறும் என்பதைப் படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.

அடுத்ததாக, கமோரா (Gamora). இவள்தான் படத்தின் ஹீரோயின். தானோஸின் அடியாள்.

guardians-of-the-galaxy-poster-drax

பீட்டர், ராக்கெட் மற்றும் கமோராவுக்கு அடுத்தபடியாக ’ட்ராக்ஸ்’ (Drax the Destroyer) என்ற கதாபாத்திரம் முக்கியமானது. ட்ராக்ஸ் என்பவன் ஒரு மானிடன். இவனது மனைவியையும் குழந்தைகளையும் தானோஸ் கொன்றுவிடுகிறான். இதனால் தானோஸின் மீது கொலைவெறியோடு அலையும் பாத்திரம் இது. மிகவும் பலசாலி. படத்தில் இந்தப் பாத்திரத்தை WWEயை ஒரு காலத்தில் கலக்கிய படீஸ்டா (Bautista) செய்திருக்கிறார்.

hr_Guardians_of_the_Galaxy_56

அடுத்ததாக க்ரூட் (Groot). லார்ட் ஆஃப் த ரிங்ஸில் நடமாடும் மரங்களாக எண்ட்கள் வருகின்றன அல்லவா? அவற்றைப் போன்ற ஜந்து இது. பூமிக்கு மனிதர்களைப் பிடித்துப் பரிசோதனைகள் செய்ய அனுப்பி வைக்கப்பட்ட ஜந்து இது. ஆனால் பின்னர் நல்லவனாக மாறி அவெஞ்சர்களுக்குப் பல காமிக்ஸ்களில் உதவும் பாத்திரம் இது. திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்துக்கு மோஷன் கேப்சர் செய்திருப்பவர் வின் டீஸல். குரல் கொடுத்திருப்பவரும் அவரேதான். இது ராக்கெட்டின் இணைபிரியா நண்பன். ராக்கெட் மீது பரிவும் பாசமும் கொண்டிருக்கும் கதாபாத்திரம். மிகவும் நல்ல பாத்திரமும் கூட.

இந்த ஐவர்தான் Guardians of the Galaxy அணியினர். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட இயல்பு உண்டு. உதாரணமாக, ராக்கெட்டை யாராவது மிருகம் என்று நக்கலடித்தால் அவர்களை சுட்டுத் தள்ளுவதே ராக்கெட்டின் இயல்பு. ட்ராக்ஸோ, ஒரு நடமாடும் அகராதி. அவனுக்கு இயல்பாகப் பேச வராது. யார் என்ன சொன்னாலும் அதன் பொருளை ஆராய்வான். அடுக்கடுக்கான அடுக்குமொழிகளில்தான் அவனால் பேச முடியும். இதுபோன்ற கதாபாத்திர வடிவமைப்புகளால் படத்தில் வெடிச்சிரிப்பு வழவழைக்கும் பல தருணங்கள் உண்டு.

பெனீஸியோ டெல் டோரோவும் படத்தில் உண்டு. The Collector என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கெனவே Thor 2: The Dark World படத்தின் போஸ்ட் க்ரெடிட் ஸீனில் இவரது பாத்திரம் அறிமுகமாகியிருக்கும்.

அதிகபட்சமான சக்தியைத் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் ஒரு Orbபை மையமாக வைத்து, அதனைக் கைப்பற்ற நடக்கும் போராட்டமே இந்தப் படத்தின் கதை.

ஸ்டார் வார்ஸ் (New Hope), Firefly series, ஸ்டார் ட்ரெக் (2009) போன்ற படங்களின் பாணியில்தான் இதுவும் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதால் அலுக்கவே அலுக்காத அந்தப் படங்களைப் போலவே இதிலும் படத்தின் முதல் நிமிடத்திலிருந்து இறுதி நிமிடம் வரை சுவாரஸ்யமும் நகைச்சுவையும் சமமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.ஆனால் ஸ்டார் வார்ஸிலும் ஸ்டார் ட்ரெக்கிலும் நகைச்சுவை கொஞ்சம் குறைவு. Firefiyதான் நகைச்சுவைக்கும் ஆக்‌ஷனுக்கும் நல்ல உதாரணம். அப்படியே ஃபையர்ஃப்ளையின் நகலைப் பார்த்ததுபோன்ற ஒரு எண்ணத்தை இந்தப் படம் கொடுத்தது. இந்தப் படத்தில் ஃபையர்ஃப்ளையை உருவாக்கிய ஜாஸ் வீடனின் இன்புட்கள் நிறைய இருக்கின்றன என்பது படம் பார்க்கும்போதே எளிதாக விளங்கியது.

விரைவில் இவர்கள் அவெஞ்சர்களுடன் இணையலாம். அடுத்தடுத்த படங்களில் அது நடக்கலாம் என்று தோன்றுகிறது. அவசியம் திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்துச் சிரித்துவிட்டு வரலாம்.

பி.கு

1. படத்தில் ஒரு போஸ்ட் க்ரெடிட் சீன் உண்டு. ஆனால் அதற்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அதை மிஸ் செய்தாலும் பிரச்னையில்லை.

2. ஸ்டான் லீ இதிலும் வருகிறார்.

3. படத்தின் இன்னொரு வில்லன் ரோனான் பற்றி எதுவும் சொல்லவில்லை. சொல்ல எதுவும் இல்லை என்பதால்தான். படத்தைப் பார்த்து இவனை அறிந்துகொள்ளுங்கள்.

4. பழைய ராக் பாடல்களுக்கு இந்தப் படத்தில் ஒரு ஜாலியான ட்ரிப்யூட் உண்டு

  Comments

8 Comments

  1. Accust Here

    கடைசிவரை உட்கார்ந்து post credit சீன பார்த்தேன் சப்புனு ஆயிருச்சு.
    கேரக்டர் இண்ட்ரோதான் குடுத்திருக்கேள் அதிலும் கமோலா பத்தி ரொம்ப கம்மி. படத்தை பத்தி கம்மியாத்தான் சொல்லிருகேள் ரொம்ப எதிர்ப்பார்த்தேன்.

    Reply
    • Rajesh Da Scorp

      That’s because, if I had explained about the scenes, you would have felt less interesting to watch, isn’t it? that’s why 🙂

      Reply
      • Accust Here

        Agreed
        ஒரே ஒரு சந்தேகம் இதுல வர Collector நல்லவரா கெட்டவரா

        Reply
        • Rajesh Da Scorp

          கலெக்டர், ஒரு காலத்துல அவெஞ்சர்கள் கூட சண்டை போட்ட ஆள். மிகப் பயங்கர சக்திமான். ரொம்பப் பழைய ஆன்மா. அவரை இப்போ எப்புடி காட்டப்போறாங்கன்னு தெரியல

          Reply
    • Sathish

      Actually the focus of the post credit scene is a distraction. The focus is actually on the duck and the collector. But in the background a cocoon will be shown broken. The cocoon is adam warlocks cocoon. He is very essential for future guardians of galaxy movie and also the avengers future movies.

      Reply
      • Rajesh Da Scorp

        That’s a fantastic observation boss 🙂 ..I didn’t know it’s adam warlock. Superb !!

        Reply
  2. நாதன்

    ஜிகர்தண்டாவை சுட்ட கொரியர்கள் முகமூடி கிழிப்பு…dont miss…

    tamil.jillmore.com/jigarthandas-striking-similarity-with-a-dirty-carnival/

    Reply
  3. (neengala boss ithu nambave mudiyala …. very descent feedback).. but collector avengers time allu na intha katha future la nadakutha illa future kum past kum idai patta kalathula nadakutha like “star trek” or “future past”

    Reply

Join the conversation