Guzaarish (2010) – Hindi
சஞ்சய் லீலா பன்ஸாலியைப் பற்றிப் பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு உண்டு. எந்தத் தயாரிப்பாளரையும் ஏழையாக்கி விடுவார் என்று. அந்த அளவுக்கு, ஒரே ஒரு ஷாட் என்றாலும் கூட, அதையும் மிகப் பிரம்மாண்டமாகப் படமாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர் அவர். அவர் இதுவரை எடுத்துள்ள படங்களில், எனக்குப் பிடித்த படம் என்றால், ப்ளாக் மட்டுமே. தேவ்தாஸ், ஹம் தில் தே சுகே சனம் மற்றும் (க்)ஹாமோஷி, ஸாவரியா ஆகிய படங்கள் எனக்கு அந்த அளவு பிடிக்கவில்லை. குறிப்பாக தேவ்தாஸ். ஹாமோஷியில் சில காட்சிகள் பிடிக்கும். அவ்வளவே.
அவரது ‘குஸாரிஷ்’ படத்தை இன்று மதியம் பார்க்க நேர்ந்தது. குஸாரிஷ், 2004ல் வெளிவந்த ஸ்பானிஷ் படமான ‘The Sea Inside’ படத்தின் காப்பி என்பதால், அப்படத்தைப் பார்க்க இதுவரை ஆர்வம் எழாமல் இருந்தது. இன்று மதியம், டிவிடி கைக்கு வந்தவுடன், அரைமனதாகவே படத்தைப் பார்க்க ஆரம்பித்தோம்.
குஸாரிஷ் படத்தைப் பற்றிப் பார்க்குமுன், த ஸீ இன்ஸைட் படத்தைப் பற்றிப் பார்த்து விடுவோம். அலெஹந்த்ரோ அமெனபார் இயக்கத்தில், ஹவியே பார்டம் நடிப்பில் வெளிவந்த படமான இதில், ரமோன் சாம்பெத்ரோ என்ற ஸ்பானிய மாலுமியின் நிஜவாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கும். ஒரு விபத்தில், க்வாட்ரப்ளெஜிக் ( quadriplegic) என்ற (வாத நோய் – எந்த உறுப்பும் இயங்காது. தலையைத் தவிர) நிலைக்கு ஆட்படும் ரமோன், அதன்பின், தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதற்கு, ஸ்பானிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து, அதில் தோற்று, பின் விஷமருந்தி இறந்தார். இந்த ரமோனின் கதையைத் திரைப்படமாக எடுத்த அமெனபாரின் உழைப்புக்குப் பரிசாக, 2005ம் ஆண்டின் ஆஸ்கரில், சிறந்த வெளிநாட்டுப் படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டது. இதைத்தவிரவும், மேலும் பல விருதுகளை அள்ளிய இப்படம், உலகெங்கும் மிகப் பிரபலமான ஒரு படமாகும்.
தனது ஸாவரியா ஒரு படு ஃப்ளாப்பாக ஆனதும், சஞ்சய் லீலா பன்ஸாலி இயக்கத் தீர்மானித்த படம், குஸாரிஷ். இந்த வார்த்தைக்கு, ‘கோரிக்கை’ என்று அர்த்தம். இப்படத்தின் கதை? ஒரு பேராஃப்ளஜிக் நோயாளி, தனது உயிரை மாய்த்துக் கொள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது. எங்கேயோ கேட்டது போல இல்லை? ஆனால் இன்னொரு விஷயம். காப்பிகளில், ஒரிஜினலை விட, காப்பியடித்த படம் நன்றாக இருப்பது, வெகு அரிதாக நிகழும் ஒரு நிகழ்வு. எனக்குத் தெரிந்து, அது, இதுவரை நந்தலாலாவுக்கு மட்டுமே ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், இப்போது குஸாரிஷ்ஷையும் தாராளமாக அப்பட்டியலில் சேர்க்கலாம்.
ஈதன் மஸ்கரென்ஹாஸ், கோவாவில் பிறந்து, உலகெங்கும் பெரும்புகழை எட்டிய மாஜிக் நிபுணர். உலகின் தலைசிறந்த விருதான ‘மெர்லின்’ விருதை வாங்கி, அனைவராலும் ‘மெர்லின்’ என்றே அழைக்கப்படும் அளவு, உலகின் நம்பர் ஒன் மாஜிக் நிபுணராகத் திகழ்ந்தவர். ஒரு சக மாஜிக் கலைஞர், இவர்மீது உள்ள பொறாமையினால், ஈதன், தனது புகழ்பெற்ற மெழுகுவர்த்தி மேஜிக்கைச் செய்துகொண்டிருக்கையில், ஈதனைத் தாங்கும் கம்பிகளை வெட்டிவிடுவதால், ஈதனின் முதுகெலும்பு முறிந்து, வாத நோய்க்கு ஆட்பட்டுவிடுகிறார். எந்த சிகிச்சையினாலும் எந்தப் பயனும் இருப்பதில்லை. மிக மெதுவாக அவரது உறுப்புகள் செயலிழந்துகொண்டிருக்கின்றன. எங்கும் செல்லாமல், படுக்கையிலேயே விழுந்து கிடக்கும் ஈதனைப் பன்னிரண்டு வருடங்களாகப் பார்த்துக்கொள்ளும் நர்ஸ், சோஃபியா. ஈதன், ஒரு எஃப்.எம் சேனலில், தினமும் ஒரு ஷோ நடத்துகிறான். தன்னைப்போல் இருக்கும் பிற நோயாளிகளுக்குப் புத்துணர்வு ஊட்டக்கூடிய வகையில் பேசியும் எழுதியும் வருகிறான் (சில வருடங்களுக்கு முன்னர், ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறான்).
ஈதனின் விபத்து நடந்து பதிநான்காவது வருடத்தில், ஈதனின் வக்கீல் தோழியான தேவ்யானி அவனைப் பார்க்க வருகையில், அவளிடம், மெதுவே, தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக ஈதன் சொல்கிறான். யூதனேஸியா என்று அழைக்கப்படும் இது, உலகின் சில நாடுகளில் நடைமுறையில் இருப்பதுதான். இனிமேல் வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்ற நிலையில் இருக்கும் நோயாளிகள், இம்முறையில் உயிரிழக்க விண்னப்பிப்பதும் உண்டு. ஆனால்,, இந்தியாவில் அது குற்றம். ஈதனின் கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியாகும் தேவ்யானி, அவனது நிலையை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பதால், நீதிமன்றத்தில் மனுப்போடுகிறாள்.
ஈதனின் கூடவே இருந்து பார்த்துக்கொள்ளும் நர்ஸ் சோஃபியாவுக்கு இந்தச் செய்தி, மறுநாள் பத்திரிக்கைகளின் வாயிலாகவே தெரிகிறது. மிகுந்த கோபமும், வருத்தமும் அடைகிறாள் ஸோஃபியா. அன்றே, ஈதனின் வானொலி நிகழ்ச்சியின் புதிய தயாரிப்பாளரான ஒமார் சித்திக்கி என்ற இளைஞன், ஈதனின் வீட்டுக்கு வருகிறான். ஈதனின் மிகப்பெரிய விசிறி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒமார், ஈதனின் வீட்டிலேயே தங்கத் தொடங்குகிறான். தனக்கு மட்டுமே தெரிந்த அற்புதமான மாஜிக் கலையை, ஒமாருக்குக் கற்றுத்தருவதாக ஈதன் முடிவெடுக்கிறான். அன்றிலிருந்து ஒமாரின் பயிற்சி தொடங்குகிறது. படத்தின் இறுதியில், ஒமார், ஒரு அற்புதமான மாஜிக் கலைஞனாக மாறும் வரையில், பயிற்சி தொடர்கிறது.
இடையே, ஈதனின் கேஸ், விசாரணைக்கு வருகிறது. அன்றே, நிராகரிக்கப்பட்டும் விடுகிறது. மனம் தளராத ஈதன், தனது வானொலி நிகழ்ச்சியில், ‘ஆபரேஷன் ஈதனேஷியா’ என்ற பெயரில், நிகழ்ச்சியின் ரசிகர்களிடம், தனது இந்த முடிவை ஆதரிக்கச்சொல்லி, ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறான். மிகப்பலரும், ஈதன் தனது உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது என்றே கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், ஈதனின் உதவியாளினியாகப் பதிநான்கு வருடங்களுக்கு முன் இருந்த ஒரு பெண் – இன்னமும் ஈதனின் மேல் உயிரையே வைத்திருப்பவள் – மட்டும், ஈதனின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறாள். தொலைக்காட்சி மற்றும் அனைத்து மீடியாவிலும் ஈதனின் இந்த முடிவு, சர்ச்சையைக் கிளப்ப, ஈதன், மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறான். இம்முறை, வாதாடுவதற்காக, மிகுந்த சிரமஙளுக்கு இடையில், தானே நீதிமன்றத்துக்கும் ஸோஃபியா மற்றும் ஓமரின் உதவியோடு செல்கிறான். ஆனால், அரசுத்தரப்பு வக்கீல், சில காலம் அவகாசம் கேட்பதால், ஈதனின் வாதத்தைக் கேளாமலேயே, வழக்கை ஒத்திவைத்துவிடுகிறார் நீதிபதி. இருப்பினும், ஈதனின் நிலையைக் கவனத்தில் கொண்டு, அடுத்தமுறை, வழக்கு ஈதனின் வீட்டிலேயே நடைபெறும் என்றும் அறிவிக்கிறார்.
சில நாட்களில், ஈதனின் வீட்டில் வழக்கு நடைபெறுகிறது. அரசுத் தரப்பு வக்கீல், ஈதனின் இந்த முடிவு, சட்டரீதியாக ஒரு குற்றம் என்று வீறிடுகிறார். ஈதனின் பல நண்பர்களும், அவனுடனேயே இருக்கும் சோஃபியா மற்றும் ஒமார் ஆகியவர்களுடைய கருத்தும் கேட்கப்படுகிறது. அனைவருமே ஈதனின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்க, அரசுத்தரப்பு வக்கீலை, ஒரு மேஜிக் நிகழ்த்தவிருப்பதாகச் சொல்லி, நீதிபதியின் அனுமதியோடு ஒரு பெரிய பெட்டியில் வைத்து அறுபது நொடிகளுக்குப் பூட்டிவிடுகிறான் ஈதன். அறுபது நொடிகள் கழித்து வெளியே வரும் வக்கீல், மிகுந்த கோபத்தோடு, உள்ளே கைகாலைக்கூட அசைக்க முடியாமல் மிகுந்த சிரமத்தை அனுபவித்ததாகக் கத்த, அது, தனது வாழ்வின் ஒருநிமிடம் கூடத்தான் என்று ஈதன் அமைதியாக நீதிபதியை நோக்கிச் சொல்கிறான். தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வழங்கப்படும் என்று நீதிபதி அறிவிக்கிறார்.
அன்று இரவு, பலத்த மழை பெய்கிறது. வீடு பழையதாகையால், மழைநீர் சொட்டுச்சொட்டாக ஈதனின் நெற்றியில் விழ ஆரம்பிக்கிறது. கை கால்களை அசைக்கக்கூடிய நிலையில் இல்லாததால், தலையை மட்டுமே ஈதன் திருப்ப, மழை மேலும் வலுக்கிறது. இயலாமையின் உச்சத்தில், ஒமாரின் பெயரைச் சொல்லி ஈதன் அலற, ஒமாரோ, நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கிறான். அன்று தனது வீட்டில் தங்க வந்திருக்கும் தனது தாயின் பெயரைச் சொல்லி ஈதன் கதற, வெறித்த கண்களோடு, அவனது தாய் இறந்துவிட்டிருக்கிறார். காலையில் அங்கு வரும் ஸோஃபியா, ஈதனின் படுக்கை முழுக்க நனைந்துபோய், ஈதனும் மயக்கமடைந்திருப்பதைக் கண்டு பதறிப்போகிறாள். அப்போதுதான் எழுந்து அங்கே வரும் ஒமாரைக் கடிந்துகொள்கிறாள். ஈதனின் தாய் மரணித்திருப்பது அப்போதுதான் அவர்களுக்குத் தெரிகிறது.
இதற்கிடையில், ஒரு நாள், சோஃபியாவின் கணவன், ஈதனின் வீட்டுக்கு வருகிறான். தன்னைக் கவனிப்பதை விட்டுவிட்டு, ஈதனின் கூடவே ஸோஃபியா இருப்பதைக் குறித்து அவளைத் திட்டி, அடித்து, ஈதனின் கண் முன்னரே இழுத்துச் செல்கிறான். தன்னால் எதுவுமே செய்ய முடியாமல், ஒரு காய்கறியைப் போலவே படுக்கையில் கிடப்பது ஈதனின் மனதில் தாளமுடியாத வருத்தத்தை விளைவிக்கிறது. ஸோஃபியாவை இழுத்துச் செல்ல வேண்டாம் என்று கதறி அழுகிறான் ஈதன்.
சில தினங்களில், ஈதனின் வழக்கில் தீர்ப்பு வருகிறது. நீதிபதி, ஈதன் தன் உயிரை மாய்த்துக்கொள்வது சட்டவிரோதம் என்று தீர்ப்பை வழங்கிவிட்டிருக்கிறார். ஈதனின் வீட்டுக்கு வரும் ஸோஃபியா, ஈதனின் வழக்கு தோற்றுவிட்டாலும், தனது விவாகரத்து வழக்கு வெற்றிபெற்றதாக அவனிடம் சொல்கிறாள். மிகுந்த சந்தோஷமடையும் ஈதன், தன்னைத் திருமணம் செய்துகொள்ளமுடியுமா என்று ஸோஃபியாவிடம் கேட்கிறான். ஸோஃபியாவும் சம்மதிக்கிறாள்.
மறுநாள், ஈதனின் வீட்டில் ஒரு குதூகலமான பார்ட்டி நடக்கிறது. அது, ஈதன் இந்த உலகில் கழிக்கும் கடைசி நாள். நண்பர்களுக்கு மத்தியில் இந்தச் செய்தியை அறிவிக்கும் ஈதன், ஸோஃபியா தன்னை மணக்கச் சம்மதித்திருப்பதையும் கூறுகிறான். அனைவரும் ஈதனையும் ஸோஃபியாவையும் வாழ்த்துகின்றனர். மிகுந்த சந்தோஷத்தில் அனைவரிடமும் பேசும் ஈதன், நண்பர்களின் பாடலோடு இணைந்து தானும் பாடத்துவங்குகிறான். பாடி முடிக்கும் ஈதன், வாய்விட்டு உரக்கச் சிரிக்கத் துவங்குகிறான். அந்தச் சிரிப்பு, அவனது மனதில் இருந்து பெருகி வழிகிறது. அவனது தலைமாட்டில், ஒரு பாட்டிலின் வழியாக, அவனது உடலில் மெதுவே இறங்கிக்கொண்டிருக்கிறது . . . . . . . . விஷம்.
அருமையான ஒரு பாடலோடு படம் முடிகிறது.
இந்தப் படம் துவங்கும்போது, இதுவும் இன்னொரு பன்ஸாலி மெலோடிராமா என்று நினைத்து அசுவாரஸ்யமாகவே பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சட்டென்று என்னை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டது. ஈதன் மஸ்கரன்ஹாஸாக நடித்திருக்கும் ஹ்ரிதிக் ரோஷன், படத்தின் எந்தக் காட்சியிலும் காணக்கிடைக்கவில்லை. எவ்வளவு தேடியும், படுத்த படுக்கையாக வீழ்ந்து கிடக்கும் துடிப்பான, சந்தோஷமான, தன்னைச் சுற்றியிருக்கும் எவரையும் ஒரு சிரிப்பினால் கவர்ந்துவிடக்கூடிய மாஜிக் நிபுணனான ஈதன் என்பவனையே பார்த்தேன். தனது அவல நிலையைக் குறித்த வருத்தமும் அழுகையையும், தனது தனியான நிமிடங்களில் மட்டுமே வெளிப்படுத்தும் இளைஞன் அவன். மற்றவர்கள் தன்னைச் சூழ்ந்திருக்கையில், அவர்களை சந்தோஷமாக வைத்திருக்கக்கூடிய கொண்டாட்டமான பேச்சை எப்பொழுதும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு சிரிப்பையும் மஸ்கரன்ஹாஸாகவே வெளிப்படுத்தும் அருமையான நடிப்பை ஹ்ரிதிக் ரோஷன் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள்.
அதேபோல், கண்டிப்பான நர்ஸாக, ஈதனின் மேல் உயிரையே வைத்திருக்கும் ஸோஃபியாவின் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய். ஈதனின் வலது கையாக, மிகத் தேர்ந்த நடிப்பை நல்கியிருக்கிறார். ஈதனின் மேல் தனக்கு உள்ள மரியாதை, ஈதனின் மேல் தனக்கு உள்ள காதலைத் தாண்டிப் பரிமளிக்கும் வகையில் தனது செய்கைகளையும் பேச்சுக்களையும் வடிவமைத்துக்கொண்டுவிட்டிருக்கும் நிலை, சோஃபியாவின் நிலை. அதனைப் பிரமாதமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
படத்தின் குறைபாடுகள் என்று பார்த்தால், ஒரு சில வசனங்கள் சற்றே சிறுபிள்ளைத்தனமாக இருப்பதே. வசனங்களில் பன்ஸாலி கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இன்னமும் நன்றாக இருந்திருக்கும். அதே போல், எல்லா பன்ஸாலியின் படங்களிலும், சோகக்காட்சியில் கூட, பின்னணி மிகப்பிரம்மாண்டமாக இருக்கும் அடிப்படைத் தவறு, இடம்பெறும். இதிலும். இனியாவது பன்ஸாலி இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அதேபோல், படத்தில், எளிதில் ஊகித்துவிடக்கூடிய சில திருப்பங்கள் இடம்பெறுகின்றன. அவை இல்லாமல் இருந்திருந்தால், படம் இன்னமும் சுவாரஸ்யமாக இருந்திருக்கக்கூடும்.
வெளியிலிருந்து பார்க்கையில், நோயாளிகளின் மனக்கவலைகள் நமக்குப் புரியாது. நம்மைப் பொறுத்தவரையில், அவர்கள் நம்முடனேயே இருக்க வேண்டும் என்றே விரும்பிக்கொண்டிருப்போம். ஆனால், அந்த நோயுற்றவர்களின் மனதில், சுதந்திரம் என்பது, சில சமயம் மரணமாக இருந்துவிடுகிறது. அந்த நேரத்தில், அவர்களின் எண்ணங்களை நாம் மதித்துப் புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. இதனை உள்ளபடி புரிந்துகொண்டால், அவர்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக, மரணம் அமைந்துவிடுகிறது.
குஸாரிஷ் பாருங்கள். அதே சமயம், த ஸீ இன்சைட் படத்தையும் பார்த்துவிடுங்கள்.
குஸாரிஷ் படத்தின் டிரெய்லர் இங்கே.
பஹலா காட்
அருமையான விமர்சனம் நண்பா
படம் டிவிடி ரிப் வைத்திருக்கிறேன்,பார்த்துவிடுகிறேன்.மூலக்கதைக்கு க்ரெடிட் போட்டார்களா? இல்லையா? முன்னாள் உலக அழகிக்காக தான் இப்படி பேசப்படுகிறது என்று தான் பார்க்காமல் இருந்தேன்.
தவிர சாவரியா திரைப்படம் பாடலகளி ஓவெர்ரேட்டட்,இசைக்கு தேசிய விருதெல்லாம் வேற,அது பார்த்தவர்களை சாகறியா எனக்கேட்டது வேற கதை..
எனக்கு ஹ்ரித்திக் ரோஷன் பிடிக்கும்,நல்ல நடிகர்.அபிஷேக் பச்சன் படம் பார்க்க தான் யோசிப்பேன்.
>>>ஆனால் இன்னொரு விஷயம். காப்பிகளில், ஒரிஜினலை விட, காப்பியடித்த படம் நன்றாக இருப்பது, வெகு அரிதாக நிகழும் ஒரு நிகழ்வு.
ஹா ஹா ரசித்தேன்
இப்போதெல்லாம் ஹிந்தியில்,கோர்ட் கேஸுக்கு பயந்து மூலக்கதையின் உரிமைய வாங்கி டப்புவதாக கேள்விப்பட்டேன்,
>>>>அந்த நோயுற்றவர்களின் மனதில், சுதந்திரம் என்பது, சில சமயம் மரணமாக இருந்துவிடுகிறது. அந்த நேரத்தில், அவர்களின் எண்ணங்களை நாம் மதித்துப் புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. இதனை உள்ளபடி புரிந்துகொண்டால், அவர்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக, மரணம் அமைந்துவிடுகிறது.
உண்மைதான்
நண்பா
டோபி காட் பார்த்துவிட்டீர்களா?
நண்பரே,
ஸீ இன்சைட், கலங்க வைத்த படம். உங்கள் பதிவைப் படிக்கையில் இத்திரைப்படம் அதைத்தாண்டி கலங்கடிக்கும் போல் தெரிகிறது. அறிமுகத்திற்கு நன்றி.
Sea inside படம் ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்று நினைத்து தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கும் படம்.அதை பார்த்துவிட்டு இதையும் பார்க்கிறேன்.நல்ல பதிவு தல.
present sir! 🙂
அருமையான பகிர்வு நண்பா. குஜாரிஷ் முன்பே பார்த்துவிட்டேன். படம் எனக்கு பிடித்திருந்தது. கிருத்திக்கின் நடிப்பு அபாரம். ஸீ இன்சைட் அறிமுகத்திற்கு நன்றி.
Raaj,
Itz one of d haunting story/ screenplay I have came across.
There were poignant moments in the movie, when ethan watches a scarecrow on a field ( when he happens to come travel to the court), he looks at himself… we soon understand there is not much difference between it and him.
Also we get to see a troublesome housefly keeps targeting his nose in the beginning of the movie. I have seen moist eyes in most of them who watched ethans lying helplessly in his bed, when water continuously trickles on his forehead.
well, only controversial aspect of the movie,( surprising… u never mentioned it !!!!) is that ethens very well knows that sophia will be in trouble if she helps him in ending his life… but he sticks to his decision helplessly… thatz the only irking aspect of the movie.
Bhansali may be targeted for dramatic picturization in his movies… but itz good na, it is his strength.Am happy that he is what he is inspite of the box office results of his movie.
ஒரே உறையில் இருந்து இரண்டு கத்தி எடுத்து வீசியிருக்கிறீர்கள்.இரண்டிலும் உங்கள் தனித்துவம் தெரிந்தது.அற்ப்புதம்.கிகுஜிரோவைவிட நந்தலாலா ஒரே ஒரு இடத்தில்கூட விஞ்சவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. “சினிமா என்பது திரையில் நிகழ்வது அல்ல.பார்ப்பவர் மனதில் நிகழ்வது”அடூர் கோபலகிருஷ்ணனின் வார்த்தைகள் எவ்வளவு சத்தியம்!!!!!!!.
நான் ஒரிஜினலை போன வாரம்தான் பார்தேன். காப்பியை ஒரு 3-4 வாரத்துக்கு முன்னாடி நெட்ஃப்ளிக்ஸில் இருந்ததுன்னு பார்த்தோம்.
ஷீபா கண்ணிலிருந்து படம் முடியற வரைக்கும் தண்ணி நிக்கலை. எனக்கென்னவோ.. பன்ஸாலியோட டிபிகல் மெலோட்ராமா மாதிரிதான் தல தோணுச்சி. ஆனா டெக்னிகல் விஷயங்கள் எல்லாம்.. அதே உலகத்தரம்.
இன்னும் ப்ளாக்/ஸாவரியா படங்களில்.. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு மனசில் அப்படியே இருக்கு. லேவிஷ் ஷாட்களுக்கு பன்ஸாலியை விட்டா அடிச்சிக்க யாருமில்லைன்னு நினைக்கிறேன்.
சீக்கிரம் பார்க்க முயற்சிக்கிறேன்.சமீபத்தில் ரசித்த ஹிந்தி படம் “பீப்லி லைவ்” .மீடியாவின் பைத்தியகாரதனத்தை அரசியல்வாதிகளின் அலட்சியத்தை சமூகத்தை கடுமையாக பகடி செய்த படம் இதுவே.இதற்கு முன் இப்படி ஒரு படம் நான் பார்ததில்லை.அருமையான நடிப்பு(புதுமுகம்தான் என்றாலும்).இந்த படத்தை தைரியமாக தயாரித்த அமீர்கானுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்..அதே நேரம் இந்த படம் சொந்த தயாரிப்பு என்றாலும் இதில் தனக்கு பொருத்தமான பாத்திரம் இல்லை என்றவுடன் நடிக்காமல் ஒதுங்கி கொண்டமைக்கு ஒரு சபாஷ்.
நன்றி.
மேலும் ஹிந்தியில் வரும் அறிய முயற்சிகளை பாராட்டியே ஆக வேண்டும்(பல மசாலா படங்கள் இன்றும் வருகிறதென்றாலும்).பீப்லி லைவ்,தேவ் டி .கமினே,சீனி கம் ஆகியன எனக்கு பிடித்தவை.இதை போன்ற அசாதாரமான முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
Enakku ennamo ellame romba seyarkaya irunduthu. I did not like it some how, though i went to first day.
எனக்கு பிளாக் படம் ரொம்பவே பிடிச்சிருந்தது…கிளாசிக் மூவி. ஹம் தில் தே சுக்கே சனம் கூட நல்லப்படம்தான் தல…. அநத அரைலூசு சல்மான் வர்ற காட்சிகள் மட்டும் சொதப்பல்.
அதை தமிழ்ல கூட பிரசன்னா நடிச்சு வந்துச்சு…படம் படு பிளாப். பேரு ஞாபகம் இல்லை.
குஜாரிஷ் இன்னும் பார்க்கலை. சாவாரியா படம் பார்த்தததின் விளைவு. அதுமாதிரி பெரிய மொக்கையா இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க சொன்னமாதிரி அநியாயத்துக்கு ஆடம்பரம் மற்றும் மிக்கப்படுத்தப்பட்ட பின்ணனி் காட்சிக்ள இருக்கும். இதனாலேயே பல நல்ல காட்சிகளின் நம்பகத்தன்மை போய்விடுகிறது. Eventough Bansali is one of the versatile director.
The film and its wonderful review are just in time for today’s news… //The Supreme Court is likely to pass its judgement on a petition seeking mercy killing for Aruna Shanbaug, a former nurse who has been lying in a vegetative state in a Mumbai hospital bed for the last 37 years following sexual assault by a sweeper.//
37 years in vegetative state.. isn’t that too much?? Why doesn’t Indian Govt understand ‘special’ pleas to die with dignity? Its a shame…
என்னது ஹீரோ பாதிபடம் வீல்சார்ல உக்கார்திருக்கானமே! நம்ம தமிழ் படத்துல இத சுட்டுபோட்டாலும் செய்ய மாட்டணுவ.ஏன்னா பறந்து அடிக்கனுமில்ல!அப்படியே ஒருத்தன் ஊனமாயிட்டாலும் இன்னொரு ஆக்ட் குடுத்து பரந்தடிப்பான் தமிழ் சினிமா ஹீரோ..அட்ரா அட்ரா
@ செந்தில்குமார் – எக் காவ்மே ஏக் கிசான் ரகுதாத்தா . . 🙂
@ கீதப்ரியன் – நண்பா… நானுமே அப்புடி நெனைச்சி தான் படம் பார்க்காமயே இருந்தேன் . இது, ஷ்ரீ ரிசர்வ் பண்ணி வெச்ச டிவிடி. கேஷுவலா பார்க்க ஆரம்பிச்சி, எனக்கு ரொம்பப் புடிச்சி போச்சு. . ஆனா டைட்டில்ல ஒரிஜினல் படத்த பத்தி போடல. . தேடி பார்த்தேன் . . இன்னமும் தோபி காட் பார்க்கல நண்பா.. சீக்கிரம் பார்த்துருவேன் . .
@ காதலர் & இலுமி – ஸீ இன்சைட், எனக்குப புடிச்சத விட இந்தப் படம் புடிச்சது. ஆனா கபர்தார் . . சில பேருக்கு ஒரிஜினல் புடிச்சிருக்கலாம். . நீங்க இதை பார்த்துபுட்டு சொல்லுங்க. .
@ ஷங்கர் – நோட்டட் சார் 🙂
@ சரவணக்குமார் – நண்பா.. குசாரிஷ் பார்தாச்சில்ல . . அப்ப ஸீ இன்சைட் பாருங்க. . எப்புடி இருக்குன்னு சொல்லுங்க. .
@ மின்மினி – ரொம்பப் புடிச்சிப் போயி படம் பார்துருக்கிங்க போல. . ஆழமா எழுதிருக்கீங்க. . நீங்க சொன்ன அந்த முரண்பாட்டை நான் கவனிச்சேன் . .ஆனா, அவனுக்கு வேற வழி தெரியல அந்த சூழ்நிலைலன்னு எடுத்துகினேன் . . பட, அது கண்டிப்பா ஒரு நெகடிவ் பாயின்ட் தான் . . டோட்டலி அக்செப்டட் 🙂
@ உலக சினிமா ரசிகரே – //சினிமா என்பது திரையில் நிகழ்வது அல்ல.பார்ப்பவர் மனதில் நிகழ்வது// எவ்வளவு உண்மை !!! என்னைப்பொறுத்த வரையில், நந்தலாலா ஒரிஜினலை விட கொஞ்சம் நல்லா இருந்தது . . எனிவே, அது ஒவ்வொருத்தர் மனசைப் பொறுத்த விஷயம் தான்நு உதாரணத்தோட சொல்லிப்புட்டிங்க போங்க 🙂
@ விக்கி – பீப்லி லைவ், இன்னமும் பார்க்கவே இல்லை. டிவிடி வாங்கிடுறேன் . நண்பர் கீதப்ரியனும் சொன்னாரு . . அதே சமயம், தேவ் டி , கமீனே, சீனி கம், இஷ்கியா எல்லாமே எனக்கும் புடிச்ச படங்கள் தான் 🙂
@ ஸ்ரீநாராயணன் – அதுக்குக் காரணம் இருக்கு. மேலே உலக சினிமா ரசிகர் சொன்னதைப் பாருங்க. – சினிமா என்பது திரையில் நிகழ்வது அல்ல.பார்ப்பவர் மனதில் நிகழ்வது – இதுனாலதான் அப்புடி..
@ நாஞ்சில் – என்னாது? ஹம தில் தே சுகே சனம் படத்தை தமிழ்ல எடுத்துபுட்டாங்களா ? அடப்பாவிகளா. . .அதையும் உடலியா? என்ன கொடுமை இது.. எனக்கும் சல்மான் வர்ற சீன்கள் புடிக்காம, படமே வெறுத்துப் போற மாதிரி ஆயிருச்சி. . 🙁
@ ஷ்ரீ – அந்த நர்ஸ் பத்தின செய்தி, கொடுமை 🙁 .. அந்த நர்சை சொடோமைட் பண்ணின ஆளை, சித்ரவதை பண்ணி கொன்னு போட்ருக்கணும் . . முப்பத்தேழு வருஷமா வெஜிடபிள் கண்டிஷன்ல இருக்குறது ஒரு பெரிய சித்ரவதை. . அவங்க உயிரைப் போக்கிக்க அரசு அனுமதி கொடுத்தே ஆகணும் 🙁 . .
@ இப்ப ராமசாமி – அங்க புடிச்சீங்க பாயின்ட்ட 🙂
இந்த மாத உயிர்மைல சாரு நிவேதிதா பயணம் படத்த ஓட்டுன ஒட்டு இருக்கே.யப்பா சிரிச்சி வயிறு வலிக்குது.அதுவும் அந்த கூத்துப்பட்டறை அழகேசன போட்டு வாங்கியிருக்கார்.தீவிரவாதியிடம் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் போல பேசுகிறார் என சாறு எழுதியதை படித்த பொது lolz..ஹி ஹீ
@ சுண்டெலி – தல.. உங்க கமெண்டுக்கு தனியா பதில் போடலாம்னு நெனைச்சேன்.. ஆக்சுவலா, படம் செகண்ட் ஹாஃப் பாக்கும்போது, என் கண்ணுலயும் தண்ணி நிக்கவேயில்ல. . எனக்கு எளகுன மனசாச்சா.. அதுனால, இந்த மாதிரி படம் பார்க்கும்போது கண்ணுல தண்ணி வந்துரும்.. 🙂
அப்புறம், நீங்க யுத்தம் செய்ல் போட்ருக்குற கமெண்டுக்கும், அதுல இருக்குற மத்த கமெண்டுக்கும் நாளை தான் பதில் எழுத முடியும். ஏன்னா, நான் cafeல இருந்துதான் இப்பல்லாம் போஸ்ட் போடுறேன். அது ஒரு சோகக்கதை 🙁
@ ஜோக்கர் – அந்த ஆர்டிக்கிளை சீக்கிரம் படிக்க முயல்கிறேன் 🙂
இப்படியெல்லாம்.. உண்மையை ஒத்துகிட்டீங்கன்னா… அப்புறம் ‘ஷீபா கண்ணிலிருந்து தண்ணி நிக்கலை’ன்னு நானெப்படி பொய் சொல்லிட்டு… கில்ட் ஃபீலிங் இல்லாம இருக்க முடியும்?? 🙂 🙂
ச்ச்சே..ச்ச்சே.. இதுக்குத்தான்… கமெண்ட்ல எந்த மேட்டரையும் சொல்லக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.
====
தல.. நீங்க பதிலே எழுதலைன்னாலும் பரவாயில்லை. கேஃப்-ல போய் பதிவு போடுற அந்த கடமை உணர்ச்சியை பார்த்தே.. முடியெல்லாம் முள்ளம்பன்றி கணக்கா.. நிக்கிது. உங்க சேவை நாட்டுக்குத் தேவை..!! 🙂
அன்பின் தேளு,
நல்ல பதிவு.நல்ல படம் குஷாரிஷ். பாத்து 2 மாசம் ஆச்சு.ஆனா நீங்க சொன்ன ’சீ இன்சைட்’ இனிமே தான் பார்க்கனும். யாரோ ‘The Diving Bell and the Butterfly’ தான் இந்த படம்னு சொன்னாய்ங்க.நன்னி.
@ சைத்தான் – 🙂 ஹை.. சேம் பின்ச் 🙂 … cafe ல என்ன? தெருவுல ஒரு கம்ப்யூட்டர் இருந்தாக்கூட அங்க போயி எழுத நான் தயார். ஏன்னா, நாளைக்கு சரித்திரம் என்னப்பத்தி சொல்லும்போது, இப்புடியெல்லாம் வேல பண்ணி தமிழ வளர்த்தான்யா கருந்தேளு அப்புடீன்னு சொல்லும்லயா? அதப்பார்த்து, posthumous ஆ நமக்கு ஒரு பாரத ரத்னாவோ, இல்லேன்ன அட்லீஸ்ட் ஒரு நோபலோ தரமாட்டாங்களா என்ன ? 🙂 ஹீஹ்ஹீ
@ மரா – நீங்க சொன்ன படத்த இப்பதான் கேள்வியே படுறேன். பார்க்க முயல்கிறேன். நன்னி 🙂