Harry Potter and the Deathly Hallows – part 2 : 3D – English (2011)

by Karundhel Rajesh July 18, 2011   English films

ஹாரி பாட்டரின் கடைசி பாகத்தின் கடைசி பாகம். இந்தப் படம் மட்டுமல்ல; வேறு எந்த ஹாரி பாட்டர் படமாக இருந்தாலும், அதுவரை வந்திருக்கும் புத்தகங்களைப் படிக்காமல் பார்த்தால், ஒரு மண்ணும் புரியாது. எனக்கு அந்த அனுபவம், Harry Potter and the Half Blood Prince படத்தைத் திரையரங்கில் பார்க்கையில் ஏற்பட்டது. அதுவரை ஹாரி பாட்டர் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்ததால், அந்தப் படம், தலைவேதனையாக இருந்தது. அதற்குப் பின்னர், ஹாரி பாட்டரின் முதல் பாகத்தில் ஆரம்பித்து, கடைசி பாகம் வரை வந்துள்ள படங்களை இரண்டே நாட்களில் பார்த்துவிட்டு, கடைசி மூன்று பாகங்களைப் படித்தும் வைத்ததால், அதன்பின்னர் இன்னொரு முறை பார்க்கையில், படம் நன்றாகப் புரிந்தது மட்டுமல்லாமல், பிடித்தும் போனது.

இந்தக் கடைசி பாகம் என்ன சொல்கிறது? இந்தப் பாகத்தை மட்டும் எழுதினால், கட்டாயம் பல இடங்கள் புரியாது என்பதால், இந்தப் பாகத்தில் வரக்கூடிய சில விஷயங்களை விவரித்து எழுதப்போகிறேன். அது, இந்தப் பாகத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

ஹாரி பாட்டர் என்ற சிறுவன், ஹாக்வார்ட்ஸ் என்னும் மாஜிக் கற்றுத்தரும் பள்ளியில் சேர்ந்து, அவனுக்கு ரான் மற்றும் ஹெர்மியோனி என்ற இரண்டு உற்ற நண்பர்கள் அமைந்தது பற்றியும், வால்டெமார்ட் என்னும் தீய மந்திரவாதி, இந்தச் சிறுவனுக்கு எதிரியாக மாறியது பற்றியும் நான் ஏற்கெனவே எழுதிய ஹாரி பாட்டரின் முதல் பாக விமர்சனத்தை இங்கே க்ளிக்கிப் படிக்கலாம். இதன்பின், அடுத்து வந்த ஐந்து பாகங்களிலும் ஏராளமான திருப்பங்கள் நிகழ்ந்துவிட்டன. சுருக்கமாக: மந்திரவாதி வால்டெமார்ட்டின் உயிர், பல பிரிவுகளாக அவனால் பிரிக்கப்பட்டு, அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டால் கூட, மறுபடி இந்த உயிர்களின்மூலம் பிழைத்து வரும் நோக்கத்துடன், உலகின் பல்வேறு மூலைகளில், அவனால் ஒளித்துவைக்கப்படுகிறது. உயிரின் ஒவ்வொரு துணுக்கையும், ஒவ்வொரு அரிய பொருளுக்குள் பதுக்கி வைத்து, அவற்றை லேசில் அணுக முடியாதவாறு மந்திரமும் போட்டுவைக்கிறான் வால்டெமார்ட். ஒரு உயிரைத் தனக்குள் வைத்திருக்கும் அந்தப் பொருளின் பெயர், Horcrux. இந்த Horcrux என்ற பொருளுக்குள் உயிரைப் பதுக்குவது அத்தனை சுலபமல்ல. ஒரு மனிதன், தனது உயிரைத் துண்டுகளாக்கி, அதில் ஒரு துண்டை ஒரு பொருளுக்குள் பதுக்குவதற்கு, மந்திரதந்திரங்களிலேயே மிகக் கொடியதும், மிக ஆபத்தானதுமான ஒரு வித்தையைப் பிரயோகிக்கவேண்டும். அது – கொலை ! அதேபோல், இந்த Horcrux என்னும் பொருளை, அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட இயலாது. அதை அழிப்பதற்கென்றே இருக்கும் பிரத்யேகப் பொருட்களை வைத்துத்தான் அழிக்கவேண்டும். இல்லையேல், அழிக்க நினைப்பவரின் உயிரை அது குடித்துவிடும்.

ஒரு கொலையைப் புரிந்துவிட்டு, ஒரு மந்திரத்தை உபயோகிப்பதன்மூலம், தனது கையில் இருக்கும் பொருளினுள் உயிரின் துணுக்கைப் பதுக்கி வைக்க முடியும். ஆனால் அது எவராலும் இதுவரை செய்யப்படாத ஒரு கொடும் வித்தை. அதையும் செய்துமுடிக்கிறான் வால்டெமார்ட். ஏழு கொலைகளைச் செய்வதன்மூலம், ஏழு பொருட்களினுள் அவனது உயிரின் துணுக்குகளை அவனால் ஒளித்துவைக்க முடிகிறது. அவற்றைப் பார்த்துவிடுவோம்.

Horcrux 1 – மோதிரம்

தனது தாத்தா மார்வலோ காண்ட் என்பவர் வைத்திருந்த மோதிரம் ஒன்றினுள்தான், ஹாக்வார்ட்ஸில் படித்த ஆறாவது வருடத்தில், தனது உயிரின் முதல் துணுக்கை ஒளித்துவைக்கிறான் வால்டெமார்ட். தனது தந்தையைக் கொலைசெய்வதன் மூலம், இது அவனால் முடிகிறது. இந்த மோதிரம், அவனது தாத்தாவின் வீட்டில் ஒரு மூலையில், ஒரு தங்கப்பெட்டியில் வைக்கப்பட்டு, பல மந்திரங்களால் சூழப்பட்டுக் கிடக்கிறது. Harry Potter and the Half Blood Prince படத்தில், ப்ரொஃபஸர் டம்பிள்டோரின் கைவிரல்கள் கறுப்பாக இருப்பதை ஹாரி பார்க்கிறான். அவரிடம் கேட்கவும் செய்கிறான். ஆனால், அவர் பதிலளிக்காமல் நழுவிவிடுவார். அதற்கு விடை, இறுதிப் பாகத்தில்தான் கிடைக்கிறது. அதாவது, அந்த மோதிரத்தை டம்பிள்டோர் அணிந்துவிடுவதால், அது அவரது விரல்களை அழுகவைத்துவிடுகிறது. இதன்பின் அவரால் அந்த மோதிரமும் அழிக்கப்பட்டுவிடுகிறது. ஆக, முதல் உயிர் இருந்த Horcrux அழிந்துவிடுகிறது.

Horcrux 2 – டாம் ரிட்டிலின் டைரி

டாம் ரிட்டில் என்பது, வால்டெமார்ட்டின் சிறுவயதுப் பெயர். Harry Potter and the Chamber of Secrets என்ற இரண்டாம் பாகத்தில், ஹாரி பாட்டரினால் அழிக்கப்படும் டைரியே, இரண்டாவது Horcrux. ஹாரி பாட்டர் படங்கள் அத்தனையிலும் வரும் moaning Myrtle என்ற பெண்ணைக் கொலைசெய்வதன்மூலம், தனது உயிரின் இரண்டாவது துணுக்கை அவனது பழைய டைரியில் ஒளித்துவைக்க வால்டெமார்ட்டினால் முடிகிறது. இந்த டைரியை, பல சாகஸங்களினூடே ஹாரி பாட்டர் அழிப்பதே இரண்டாம் பாகம். ஆனால், அப்போது, இந்த Horcrux பற்றி எதுவும் நமக்குத் தெரிவதில்லை. முதன்முதலில் அதைப்பற்றி நாம் கேள்விப்படுவது, Half Blood Prince பாகத்தில்தான்.

Horcrux 3 – கோப்பை

ஹெல்கா ஹஃப்ஃபிள்பஃப் என்னும் பெண், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னர் ஹாக்வார்ட்ஸ் பள்ளியை உருவாக்கிய நால்வரில் ஒருவர். இவரது கோப்பை ஒன்று, ஹெப்ஸிபா என்ற பெண்ணிடம் இருப்பதைத் தெரிந்துகொள்ளும் வால்டெமார்ட், அவளை விஷமிட்டுக் கொன்றுவிட்டு, அந்தக் கோப்பையில் தனது உயிரின் மூன்றாவது துணுக்கை ஒளித்துவைக்கிறான். இந்தக் கோப்பை, கடைசி பாகமான இப்படத்தில் ஹெர்மியோனியால் அழிக்கப்படுவதைக் காண்பீர்கள்.

Horcrux 4 – லாக்கெட்

ஸாலஸார் ஸ்லிதரீன் என்பவர், ஹாக்வார்ட்ஸ் பள்ளியை உருவாக்கிய நால்வரில் ஒருவர். அவரது லாக்கெட் ஒன்றில், தனது உயிரின் நான்காவது பகுதியை ஒரு கொலையின் மூலம் ஒளிக்கிறான் வால்டெமார்ட். இதற்கு முந்தைய படத்தில் அது ஹாரியின் நண்பன் ரானினால் அழிக்கப்பட்டுவிட்டது.

Horcrux 5 – க்ரீடம்

ரோவெனா ரேவன்க்ளா என்பவர், ஹாக்வார்ட்ஸ் பள்ளியை உருவாக்கியவர்களில் ஒருவர் (என்று சொல்லவும் வேண்டுமோ). அந்தப் பெண்மணியின் கிரீடத்தில் தனது உயிரின் ஐந்தாவது பகுதியை மறைத்துவைக்கிறான் வால்டெமார்ட். இதுவும் ஹாரியினால் இந்தக் கடைசி பாகத்தில் அழிக்கப்படுகிறது.

Horcrux 6 – Nagina பாம்பு

வால்டெமார்ட்டுடனே எப்பொழுதும் இருக்கும் பிரம்மாண்ட மலைப்பாம்பு இது. அதுதான் Horcrux ஆறு.

Horcrux 7 – ஹாரி பாட்டர்

இதுதான் இருப்பதிலேயே மிகச் சுவாரஸ்யமான Horcrux . முதல் பாகத்தில், ஹாரி பாட்டர் குழந்தையாக இருக்கும்போது அவனது தாயைக் கொன்றுவிடும் வால்டெமார்ட், இக்குழந்தையை நோக்கி மந்திரத்தைப் பிரயோகிக்கையில், அது அவனையே திரும்பவந்து தாக்குகிறது. இதனால் உருவை இழக்கும் வால்டெமார்ட்டின் உயிர் சிதறி, குழந்தை ஹாரியின் உடலில் புகுகிறது. ஆகையால்தான் ஹாரியால் அவ்வப்போது வால்டெமார்ட் நினைப்பதை அறியமுடிகிறது. ஆக, தன்னையறியாமலே ஒரு Horcrux ஐ உருவாக்கிவிட்டான் வால்டெமார்ட். அது கடைசிவரை அவனுக்குத் தெரிவதில்லை. அதுவே அவனது அழிவுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

இவையே ஏழு Horcruxகள்.

Horcrux என்றால் என்ன என்று புரிந்துவிட்டதல்லவா? இனி, இந்தக் கடைசிப் பாகத்தின் கதையைப் பார்க்கலாம்.

ஹாரி பாட்டரைத் தேடிக்கொண்டு, ஹாக்வார்ட்ஸ் பள்ளியைத் தனது படையுடன் தாக்க வருகிறான் வில்லன் வால்டெமார்ட். ஹாரி, பள்ளியினுள் இருக்கிறான். இருவருக்கும் நிகழும் இந்த மோதலில், வெல்வது யார்? இதுவே கதை.

நான் ஏற்கெனவே சொல்லியதுபோல, இதுவரை வந்த அத்தனை ஹாரி பாட்டர் புத்தகங்களையோ அல்லது படங்களையோ பார்த்திருந்தால் மட்டுமே இந்தப்பாகம் புரியும். ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கென்றே எடுக்கப்பட்டிருப்பவைதான் இந்த ஸீரீஸில் இருக்கும் அத்தனை படங்களும். ஆகவே, அவற்றைப் பற்றித் தெரியாமல் போய் இந்தப் படத்தில் அமர்ந்தால், பாயைப் பிறாண்டவேண்டியதுதான். நான் மேலே சொன்ன Horcrux விஷயங்களைப் போல், Deathly Hallows என்ற ஒரு புதிய சங்கதியும் இப்படத்தில் உண்டு. அது என்னவென்று நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இது மட்டுமல்லாமல், படத்தின் பல கதாபாத்திரங்களைப் பற்றிய புதிர்களும் (குறிப்பாக, ஹாரி பாட்டர் கதைகளில், வால்டெமார்ட்டுக்கு அடுத்தபடியாக வெறுக்கப்படும் ப்ரொஃபஸர் ஸ்னேப்) இப்படத்தில் அவிழ்கின்றன. ஆகையால், எதுவும் தெரியாமல் தயவுசெய்து படத்தில் அமர்ந்துவிடாதீர்கள்.

ஹாரி பாட்டர் ஸீரீஸ் பற்றிய எனது தனிப்பட்ட அபிப்பிராயம் என்னவெனில், ஹாரி பாட்டரின் முதல் மூன்று பாகங்களான Philosopher’s Stone, Chamber of Secrets, Prisoner of Azkaban ஆகிய கதைகள் (படங்களும்தான்), டக்கராக இருக்கும். இதன்பின், Goblet of Fire கதை, மெல்லச் சறுக்க ஆரம்பிக்கும் (இருந்தாலும் பெரும்பாலும் ஓகேதான்). ஐந்தாவது பாகமான Order of the Phoenix கதை, போர். படமும். ஆறாவது பாகமான Half Blood Prince கதையில், இந்த மொத்த ஸீரீஸின் பல மர்மங்கள் சொல்லப்படுவதால், கொஞ்சம் ஓகே. அதைப்போலவே, கடைசி பாகமான Deathly Hallows படத்தில் மர்மங்கள் அவிழுகின்றன. ஆனால், இந்த டெத்லி ஹாலோஸ் கதையின் முதல் பகுதி, கண்டபடி அலைபாயும். It just meanders. எவ்வித நோக்கமும் அதில் இருக்காது. இரண்டாம் பகுதிக் கதை, சற்றுப் பரவாயில்லாமல் இருக்கும். எனது கருத்து: நாவலின் கடைசி பாகத்தை சற்றே வேறுமாதிரி எழுதியிருக்கலாம். Nevertheless, ரோவ்லிங், எழுதி முடித்து அது பயங்கரமாக விற்றும் தீர்ந்துவிட்டது. ஆகவே, அதைக் குறைசொல்லி என்ன பயன்?

கடைசி சில பாகங்கள் சறுக்கினாலும், படத்தின் கதாபாத்திரங்கள் அதனை ஈடுசெய்துவிடுகின்றன. நான் ஹாரி பாட்டரில் கடந்த ஆறு மாதங்களாகத்தான் மூழ்கியிருக்கிறேன் என்றாலும், 1997ல் ஆரம்பித்து, 2007 வரை உலகின் பலகோடி மக்கள், ஹாரி பாட்டர் மந்திரத்தால் வசியப்பட்டிருந்தனர் என்பதை எண்ணிப் பார்க்கையில், வியப்பே மேலிடுகிறது. ஹாரி பாட்டரைப் படிக்க ஆரம்பிக்கும் எவராக இருந்தாலும், ஹெர்மியோனி மற்றும் ரான் ஆகியவர்களால் கவரப்படாமல் இருக்க முடியாது. ஹாரி பாட்டர் படிக்கும் ஹாக்வார்ட்ஸ் பள்ளி, அதன் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ப்ரொஃபஸர் டம்பிள்டோர், ஹாரியின் உற்ற நண்பன் ஹாக்ரிட், ஹாரியின் பிற மாணவ நண்பர்கள், இவர்களுக்குள் நடக்கும் சின்னச்சின்ன சுவாரஸ்யங்கள், நட்பு, காதல், சோகம், சாகஸங்கள் ஆகிய பற்பல சம்பவங்கள், உங்களை மகிழ்ச்சியிலும், அவ்வப்போது சுகமானதொரு சோகத்திலும் ஆழ்த்தும் தன்மையுடையன. கட்டாயம் ஒருமுறை படித்தால்கூட அந்தச் சம்பவங்கள் நெடுநாள் வரை நமது நினைவுகளில் இருந்துகொண்டேயிருக்கும். அப்படிப்பட்ட மேஜிக் இந்த ஹாரி பாட்டர் ஸீரீஸ்.

அத்தகையதொரு அட்டகாசமான ஸீரீஸ் 2007ல் முடிந்துவிட்டாலும், திரைப்பட உலகில் இப்போதுதான் முடிந்திருக்கிறது. இந்தத் திரைப்பட வரலாற்றில், 2001ல் இருந்து 2011 வரை பத்து வருடங்கள் பங்கேற்ற டானியல் ராட்க்ளிஃப், எம்மா வாட்ஸன், ரூபர்ட் க்ரிண்ட் ஆகிய சிறுவர்கள், இப்போது உலகெங்கிலும் அறியப்படுபவர்களாக மாறிவிட்டனர். குறிப்பாக ஹாரி பாட்டரின் முகமாகவே மாறிவிட்ட ராட்க்ளிஃப். பத்து வருடங்கள் ஒரு திரைப்பட ஸீரீஸில் பங்கேற்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்!

ஒரு காலத்தில் ஹாரி பாட்டர் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கையில், இந்த ஸீரீஸ் பற்றிக் கண்டபடி கலாய்த்து, இதனை விரும்பியவர்களையும் கேலி பேசியிருக்கிறேன் (‘ஃபேண்டஸி… அதுலயும் கொழந்தைங்க படம்.. உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடா’). ஆனால், இந்த 2011 ஜனவரியில், பயங்கர போர் அடித்துக்கொண்டிருந்த ஒரு விடுமுறை தினத்தில், ஹாரி பாட்டரின் முதல் மூன்று பாகங்கள் (sent from US by Shree’s brother) கைவசம் இருந்ததால், அசுவாரஸ்யமாக அவற்றைப் பார்ப்போம் என்று போட்டுப்பார்த்த நான், அந்த ஒரே வாரத்தில் அத்தனை ஹாரி பாட்டர் படங்களையும் பார்த்து, கடைசி மூன்று புத்தகங்களையும் ஒரே மூச்சில் படித்தும் முடித்துவிட்டேன் ! ஆகவே, எனது மனதில் நிறைந்துபோய், எனக்குப் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்றாக மாறிவிட்ட ஹாரி பாட்டருக்கு ஒரு பெரிய Cheerz !!!!

Harry Potter and the Deathly Hallows – part 2 படத்தின் ட்ரெய்லர் இங்கே.

  Comments

12 Comments

  1. எனக்கு என்னமோ ஹரி பாட்டர் முதலில் இருந்து பிடிக்கவே இல்ல.

    Reply
  2. நான் யாரையும் கலாய்க்கல அப்படின்னாலும், ஹாரி பாட்டர் எனக்கு புடிக்காது புரியாது-னு ரொம்ப காலம் சுத்தி 6-வது படம் வர்றதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி எடுத்து படிக்க ஆரம்பிச்சது தான் தெரியும். செமயா போச்சு.

    ஏழாவது பாகம் பத்தி நீங்க சொன்னது உண்மை தான். முதல் 300 பக்கம் எங்க போகுதுனே தெரியல. ஆனா மேல்பாய் (Malfoy)மேனர் இருந்து கதை தூள் பறக்கும்.

    4-வது எனக்கு புடிக்கும். ஆனா ரொம்பவே டார்க் தீம்ஸ் இருக்குற பாகம். 5-வது சுவாரஸ்யம் ஆனா கொஞ்சம் இழுத்துட்டாங்க. அதுவும் ஹாரி மினிஸ்ட்ரிய பத்தி கனவு கண்டு அங்க போயி அதுக்குள்ள நமக்கு தூக்கம் வந்திருக்கணும். ஆனா ரெளலிங்க் பக்காவா சில விஷயங்கள அந்த பகுதிகளோட இணைச்சி நம்மள தூங்க விடாம செஞ்சிட்டாங்க.

    6-வது நாவல் அருமை. காதல் எபிசோடு தான் கொஞ்சம் போர். படம் மகா மட்டம் 🙁

    முதல் மூன்று பாகங்களும் அற்புதம். அதுவும் இரண்டாவது எனது பேவரிட். அருமையா இருக்கும். அதுவும் ஹெர்மியோனி பஸிலிக்-க பத்தி பேப்பர கைல வச்சிட்டு மயக்கமடஞ்சதுல இருந்து பறக்கும். எப்ப படிச்சாலும் அலுக்காது.

    3-வது-ல ரானோட எலிக்கு கொடுக்கபட்ட லிங்க் அப்புறம் மரெளடர்ஸ் மேப். சில சமயம் ரெளவுலிங் எல்லாத்தையும் முன்னாடியே எழுதிட்டாங்களோ அப்டினு தோணும். அவ்ளோ கச்சிதம்.

    கடைசி படம் எனக்கு புடிச்சிருந்துது. கிளைமேக்ஸ் சண்டையும், ஸ்னேப் பத்தியும் இன்னும் விரிவா போட்டுருக்கலாம்-னு தோணுச்சு.

    http://kanaguonline.wordpress.com/2011/07/16/harry-potter-and-the-deathly-hallows-part-2/

    இது என்னோட விமர்சனம். நேரமிருந்தா படிச்சிட்டு எப்டி இருக்கு-னு சொல்லுங்க 🙂

    Reply
  3. @லக்கி – சொல்றது ஆறாவது பாகம். ஆனா புக்குல தான். படம் பாத்த ஒண்ணுமே இருக்காது 🙂

    Reply
  4. ஹாரிபோர்ட்டர் கனவுலகில் வாழ விரும்பும் நம் உள் மன ஆசைகளுக்கு தீனி போட்ட படம்.
    இதுவே பாக்ஸ் ஆபிஸ் சூத்திரம்.

    Reply
  5. படம் இன்னும் பார்க்கவில்லை தல,நீங்கள் சொல்லுவது போல கதை தெரியாமல் கடந்த பாகம் பார்த்தேன் செம மொக்கையாக இருந்தது ,அது போலதான் இதுவும் இருக்கபோகுதுன்னு இன்னும் படம் பார்க்கவில்லை,கிளைமாக்ஸ் கிராபிக்ஸ் கலக்கலாக இருப்பதாக கேள்விபட்டேன்,இப்போ உங்கள் விமர்சனம் படித்ததும் டெம்ப்ளேட் ஸ்டைல்லில் சொல்லனும்னா “உங்கள் பதிவு படம் பார்க்க தூண்டுகிறது “

    Reply
  6. நா முதல் ரெண்டு பாகங்கள் பார்த்ததோட சரி அப்புறம் ஏனோ பாக்கல … வரிசையா எட்டு படத்தையும் பாக்குர மாதிரி ஒரு ப்லன் இருக்கு … எப்போன்னு தான் தெரில…

    Reply
  7. Raaj,

    I remember I too turned my eyes towards this marvellous series in feb 2011 after your blogpost…..

    am yet to watch deathly hallows… will watch it sooner.

    personally I like the chamber of secrets well.. I felt very sorry for demise of sirius black in fifth part.

    I think Hermiones casting( Emma watson) absolutely matches the one in the story… but not Ron’s ( the red haired family in the story ) is missing.

    potter’s and lord of the rings series haunts anyone who watches it.

    whats your opinion on Ice age series… personally I can watch ice age 1, 2, 3…. upto 100 th part also !!!!!

    Reply
  8. ஓகே Mr.Butler சார் !!

    Reply
  9. நண்பரே,

    இறுதிப் பாகம் ஒன்றிற்கு இருக்க வேண்டிய அம்சங்கள் பல இல்லாமல் இருப்பதாகவே இப்படம் குறித்து உணர்கிறேன். ஸ்னேப் குறித்த காட்சிகள் பிடித்திருந்தன. வோல்டெர்மோர் செம போர் :))

    Reply
  10. Like you there are still many of my friends who ridicule HP without reading a single book or watching it. I would say it is a form of attempt at intimidation by some who are not able to comprehend certain things and they wonder why the heck is this so famous. I am happy that I jumped on the HP bandwagon from the 3rd movie and followed it there onwards.. it was a fantastic journey I grateful that such phenomenon came into existence in our generation. I can only pity people who are only going to realize late that they missed a wonderful experience.. HP is one of my favorite series with the order being
    1. LOTR – Can’t wait for the Hobbit
    2. Star Wars- The original first 3 films were such a classic and can’t help but marvel at the imagination.
    3. HP- The books first then the movies
    4. The Matrix- Cherished the philosopy behind more than the special effects. Resembles closely to Hinduism.
    5. The Bourne Trilogy- I was fortunate to read the books long before the movie was made.

    Reply
  11. @ மனசாலி – ஏங்க அப்புடி? சரி விடுங்க. ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்கி தலைவா..

    @ லக்கி – ஹார்க்ரக்ஸ் பத்தி , நம்ம கனகு சொல்லிருக்குற மாதிரி, ஆறாம் பாகத்துல சொல்றாங்க.

    @ கனகு – உங்களோட விவரமான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. நீங்க சொல்லிருக்குற மாதிரியே தான் எனக்கும். ஆனா, நாவல்ல வர காதல் எபிசோடுகள் எனக்குப் புடிச்சது 🙂 . . . உங்க சிட்டு பார்த்தேன். நல்லா இருக்கு. தமிழ்ல ஆரம்பிங்க பாஸு 🙂

    @ உலக சினிமா ரசிகரே – கரெக்ட் தான். ஹாரி பாட்டர், அதுல வர்ற சம்பவங்களையும் மனிதர்களையும் நாம அனுபவிக்க மாட்டோமான்னு நம்மளை ஏங்க வைக்குது தான் . அதான் அதோட வெற்றி

    @ டெனிம் – ட்ரஸ்ட் மீ. மொதல்ல இருந்து பாருங்க. அப்புறம் போன பார்ட் புரியும். புடிக்கவும் செய்யும். க்ளைமேக்ஸ் கிராபிக்ஸ் நல்லாவே இருந்தது. ஆனா கடைசி பார்ட், நாவலே கொஞ்சம் மொக்கையைப் போடும். அதுனால, படத்தைச் சொல்லிப் பிரயோஜனமில்ல

    @ ஆனந்த் – ஆரம்பிங்க உங்க ஹாரி பாட்டர் பெஸ்டிவல். கட்டாயம் சூப்பரா இருக்கும் 🙂

    @ மின்மினி – டிட்டோ நான் நினைக்குறதையே நீங்க சொல்லிருக்கீங்க. என்னால ஹாரி பாட்டரை மறக்கவே முடியல. சிரியஸ் ப்ளாக் இறந்தது, எனக்கும் அதிர்ச்சி. ஹெர்மியோனி – அவளைப் புடிக்காதவங்க்களை இன்னும் நான் சந்திக்கவே இல்ல 🙂 . . நல்ல காஸ்டிங். ஆனா எனக்கு ரான் அவ்வளவு வித்தியாசமா தெரியல. சத்தியமா எனக்கு சேம்பர் ஆப் சீக்ரெட்ஸ் தான் ரொம்பப் புடிச்ச ஹாரி பாட்டர் புத்தகம். அதுல வர்ற சஸ்பென்ஸ் & த்ரில் அப்புடி.

    ஐஸ் ஏஜ் – ஹஹ்ஹா . . எத்தனை பாகம் வந்தாலும் நானும் ரெடிதான் தலைவரே . .:-)

    @ காதலரே – வால்டேமார்ட் கடுப்புதான். இந்த நாவலே மொக்கையாத்தான் இருக்கும். அதை அப்புடியே படமா எடுத்துருக்காங்க. பேசாம ஏதாவது ஃபேன் ஃபிக்ஷன் எடுத்துருக்கலாம்னு தோணிச்சி.

    @ கோகுல் – உங்க லிஸ்ட்ல, எனக்கு பார்ன் trilogy மட்டும் அந்த அளவு புடிக்கல. மத்ததெல்லாம் எனக்கும் பிடிக்கும். ஹாரி பாட்டர் பத்திய உங்க கருத்தை ஒத்துக்குறேன். நிறைய பேருக்கு இதைப் பத்தி இன்னும் தெரியல 🙂

    Reply

Join the conversation