Harry Potter and the Sorcerer’s Stone

by Karundhel Rajesh February 1, 2011   English films

இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்ததுமே, சில புருவங்கள் மேலெழுவதைக் காண்கிறேன். ‘என்னடா இது – ஹாரி பாட்டரா? கருந்தேளிலா?’ என்ற ரீதியில். கடந்த வாரத்தில் ஓர் நாள். வீட்டில் இருந்த போது, மிகவும் போர் அடிக்கவே, எதாவது படம் பார்க்கலாம் என்று, எனது டிவிடிக்கள் தொகுப்பை நோண்டிக்கொண்டிருந்தபோதுதான், ஷ்ரீயின் ஹாரி பாட்டர் collector’s edition கண்ணில் பட்டது. பல வருடங்களாக, ஹாரி பாட்டரில் கொஞ்சம் கூட interest இல்லாமலேயே இருந்து வந்தது. அதைப்பற்றி இத்தனை நாட்களில், ஒரு வரி கூட அறியேன். ஆனால், விதிவசத்தால், ஒரு உலகப் படம் பார்க்க இருந்த நான், ‘சரி.. இதில் என்ன தான் இருக்கிறது என்று கொஞ்சம் ஓட்டிப் பார்க்கலாமே’ என்று முடிவெடுத்து, ஹாரி பாட்டரின் முதல் டிவிடியை ஓட விட்டேன்.

அப்போது ஆரம்பித்தது அதகளம். அதன்பின், அன்று ஒரு நாளிலேயே, தொடர்ந்து நான்கு ஹாரி பாட்டர் படங்கள் பார்த்தேன். அதுவும் போதாமல், கடைசி இரண்டு ஹாரி பாட்டர் நாவல்களை மூன்றே நாட்களில் படித்தும் முடித்து விட்டேன் (ஒவ்வொரு நாவலும் 600 பக்கம்). எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொகுப்பாக மாறிப்போனது ஹாரி பாட்டர்.

என்னைப்போல் பலரும் ஹாரி பாட்டர் ஒரு மொக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். Trust me. அது மொக்கை இல்லவே இல்லை. மிகவும் சுவாரஸ்யமான ஒரு சீரீஸ் அது. எனவேதான் இந்தக் கட்டுரை. ஹாரி பாட்டர் கதைகளில் வரும் சில முக்கியமான விஷயங்களை சற்றே அலசிப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒவ்வொரு பாகமாகப் பார்க்கப்போகிறோம். உங்களது கருத்துகளை எழுதுங்கள்.

1. Harry Potter and the Sorceror’s stone

ஹாரி பாட்டரின் முதல் நாவலான இதில், ஹாரி பாட்டர் கதையில் பின்னாட்களில் வரும் பல முக்கியமான விஷயங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன.

கும்மிருட்டான ஒரு இரவில், வயது முதிர்ந்த – விசித்திர உடையணிந்த ஒரு தாத்தா, ஒரு குழந்தையை ஒரு வீட்டின் முன் கொண்டுவந்து வைப்பதில், படம் தொடங்குகிறது. அதன்பின், ஹாரி பாட்டர் என்ற சிறுவன், தனது பதினோராவது பிறந்தநாளில் அடியெடுத்து வைப்பதைப் பார்க்கிறோம். அவனுக்குத் தாய் தந்தையர் இல்லை. தனது மாமாவான ’வெர்னான்’ மற்றும் அவரது மனைவி பெதூனியா ஆகிய இருவரும், அவனை வளர்த்து வருகிறார்கள். வீட்டின் சம்பளமில்லா வேலைக்காரனாக இருந்து வருகிறான் ஹாரி.

ஒருநாள், ஒரு ஆந்தை, ஒரு கடிதத்தை எடுத்துவந்து, இவர்கள் வீட்டின்முன் போடுகிறது. அதனைப் பார்த்தவுடன் கடுப்பாகும் வெர்னான், அந்த ஆந்தைக் கடிதத்தை எடுத்துக் கிழித்துப் போட்டு விடுகிறார். ஆனால், தொடர்ந்து ஆந்தைகளின் கடித மழையால் கலவரமடையும் வெர்னான், யாருமற்ற ஒரு இடத்துக்குத் தனது வீட்டை மாற்றிக் கொள்கிறார். ஒரு நாள், இரவில், திடும் என்று இவர்கள் வீட்டுக் கதவு உடைக்கப்பட, அங்கு வரும் நெடிதுயர்ந்த பூதம் போன்ற ஒரு ஆள் – பெயர் ரூபியஸ் ஹாக்ரிட்(ராப்பி கால்ட்ரேன் – கோல்டன் ஐ மற்றும் வேர்ல்ட் இஸ் நாட் எனஃப் படங்களில் பாண்டுக்கு உதவும் தாதா), ஹாரி பாட்டருக்கு, ஹாக்வார்ட்ஸ் என்ற பள்ளியில் சேர அனுமதி கிடைத்திருப்பதாகச் சொல்லி, அவனைத் தன்னுடனேயே அழைத்துச் சென்று விடுகிறான். அதிசயமடையும் ஹாரி, அந்தப் பள்ளியைப் பற்றி ஹாக்ரிட்டிடம் வினவ, தொலைதூரத்தில், சிறுவர்களுக்கு மந்திரக் கலைகளைக் கற்றுத் தரும் பள்ளி ஒன்று இருப்பதாகவும், அந்தப் பள்ளியில் ஹாரிக்கு அனுமதி கிடைத்திருப்பதாகவும் சொல்கிறான். அதே பள்ளியில் தான் ஹாரியின் பெற்றோரும் படித்ததாகவும் சொல்கிறான்.

ஹாக்வார்ட்ஸ் (Hogwarts School of Witchcraft and Wizardry) என்ற அந்தப் பள்ளியில் சேருவதற்கு முன், புத்தகங்களும், இன்னபிற உபகரணங்களும் வாங்க வேண்டும் என்று சொல்லி, அந்தப் பொருட்கள் விற்கும் இடத்துக்கும் அழைத்துச் செல்கிறான். இந்தப் பள்ளி இருப்பது, சாதாரண மனிதர்களுக்குத் தெரியாது. மந்திரவாதிகள் மட்டுமே அறிந்த ஒரு ரகசியம் அது. இந்த உலகத்தில், சாதாரண மனிதர்கள் போலவே, எண்ணிக்கையில் பெரிய அளவில் மந்திரவாதிகளும் வாழ்கின்றனர். அவர்களுக்கென்றே ஒரு அமைச்சரவையும் உண்டு. அவர்களது பிரதமர் பதவியின் பெயர், Minister for Magic என்பது. அந்த அமைச்சரவையில், நமது எம்பீக்கள் போலவே பலரும் உண்டு. மனிதர்களுக்கு நாடாளுமன்றம் போல், மந்திரவாதிகளுக்கான அமைப்பே இந்த மினிஸ்ட்ரி ஃபார் மேஜிக். அதேபோல், மந்திரக் கலைகள் தெரியாத மனிதர்களை, ’Muggle’ என்ற பெயரில் இந்த மந்திரவாதிகள் அழைக்கின்றனர். மக்கிள்கள் கலவாத தூய மந்திரவாதித் தம்பதியினர், Pure blood என்றும், மக்கிள் – மந்திரவாதிக் கலப்பு, Half Blood என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ப்யூர் ப்ளட் – ஹாஃப் ப்ளட் தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகளே , இந்த ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் சேர அனுமதிக்கப்படுகின்றன. வெகு அரிதாக, மனிதத் தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகளும் இங்கே அனுமதிக்கப்படுவது உண்டு.

இந்தப் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள், Diagon Ally என்று அழைக்கப்படும் ஒரு தெருவில் விற்கப்படுகின்றன. ஒரு ரகசிய இடத்தில் இருக்கும் இந்தத் தெருவுக்கு, ஹாரியை, ஹாக்ரிட் அழைத்துச் செல்கிறான். இந்த உபகரணங்களை வாங்கப் பணம் தேவை அல்லவா? எனவே, அந்தத் தெருவில் இருக்கும் Gringotts என்ற வங்கிக்கும் ஹாரியை அழைத்துச் செல்கிறான் ஹாக்ரிட். அந்த வங்கியில், ஹாரிக்கு என்றே ஒரு கணக்கும், லாக்கரும் இருக்கின்றன. அவனது பெற்றோர் சேமித்து வைத்த ஏராளமான தங்கக் காசுகளைப் பார்த்த ஹாரி, வியப்பு அடைகிறான்.

அதே சமயம், ஹாரியை ஹாக்ரிட், அங்கே சிலருக்கு அறிமுகப்படுத்த, இவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் முகமன் கூறுகின்றனர். இது, ஹாரியைக் குழம்ப வைக்கிறது. அப்போதுதான், ஹாரியின் பிறப்பைக் குறித்த ஒரு முக்கிய நிகழ்வு, ஹாரிக்குப் புரிய வைக்கப்படுகிறது. மந்திரவாதிகளினிடையே சிம்ம சொப்பனமாகவும், எவரும் செல்ல முடியாத உயரத்துக்குச் சென்று, தீய செயல்களைப் புரிந்துகொண்டிருக்கும் வோல்டமார்(ட்) (Voldemort) என்ற கொடும் மந்திரவாதி, ஹாரியின் பெற்றோர்களைக் கொன்ற விபரமும், அதன்பின் ஹாரியையும் கொல்ல முயன்று, அது பலிக்காமல், அந்தச் சாபம் வேல்டமார்ட்டைத் திரும்பத் தாக்கியதால், அவனது உருவமே முற்றிலும் அழிந்து போன விபரமும் ஹாரிக்குத் தெரிகிறது. அவனது நெற்றியில் இருக்கும் மின்னல் வடிவத் தழும்பு, வோல்டமார்ட்டின் தாக்குதலால்தான் ஏற்பட்டது என்றும் தெரிந்து கொள்கிறான் ஹாரி. யாராலும் தப்ப இயலாத ஒரு கொடும் தாக்குதலிலிருந்து ஹாரி தப்பியிருந்தது, மந்திர உலகம் முழுவதும் தெரிந்திருக்கிறது. எல்லோருமே அவனை, ‘The boy who survived’ என்றே அழைக்கின்றனர்.

பணத்தை எடுத்துக்கொண்டு, ஹாரியும் ஹாக்ரிட்டும் செல்லும் அடுத்த இடம், ஒலிவாண்டர் என்ற நபர் நடத்தும் கடை. இந்தக் கடையில், மிகச்சிறந்த தரத்தில் விளங்கும் மந்திரக்கோல்கள் கிடைக்கின்றன. ஹாரியை அடையாளம் தெரிந்துகொள்ளும் ஒலிவாண்டர், அவனுக்கென்றே இருக்கும் மந்திரக்கோல் ஒன்றை எடுத்துத் தருகிறார். அப்போது, மந்திரக்கோல்களின் சிறப்பியல்புகளைப் பற்றிக் கூறும் அவர், ஒரு சிறந்த மந்திரக்கோல், தனது எஜமானனைத் தேடிச் சென்று அடைகிறது என்று சொல்கிறார் (இந்த வாக்கியத்தின் உள்ளர்த்தம், ஏழாவது பாகத்தில் விளங்கும். இதுபோல் பல முக்கிய விஷயங்கள் இப்படத்தில் உண்டு. சாதாரண வார்த்தையாக நமக்குத் தோன்றும் ஒன்றின் முக்கியத்துவம், பின்னால் வரும் பாகங்களில் புரிய வைக்கப்படும்).

மந்திரக்கோல் வாங்கிய ஹாரி, செய்தித் தொடர்புகளுக்காக ஒரு ஆந்தையையோ அல்லது ஒரு எலியையோ அல்லது பூனையையோ வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஹாக்வார்ட்ஸ் பள்ளியின் முக்கிய விதி. எனவே, ஹாக்ரிட், ஹாரிக்கு, ஹெட்விக் என்ற அழகான ஆந்தையைப் பரிசளிக்கிறான். முதலாம் வருடத்துக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக்கொண்ட ஹாரி, அங்கிருந்து, ஹாக்வார்ட்ஸ் பள்ளிக்குச் செல்ல, ரயில்நிலையத்துக்கு வருகிறான்.

ஹாக்வார்ட்ஸ் பள்ளிக்குச் செல்ல வேண்டிய ரயில், தளம் எண் 9¾ல் வரும் என்று பயணச்சீட்டில் போட்டிருப்பது கண்டு, ஹாரி குழம்புகிறான். அப்போது, அவனைத் தாண்டிக்கொண்டு, ஒரு குடும்பம் ஓடுகிறது. 9¾க்குச் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று கத்திக்கொண்டே. அவர்களுடனே சேர்ந்து ஓடும் ஹாரி, அந்தத் தளத்தைக் கண்டுபிடித்து, ரயிலில் அமர்கிறான். இவனுடன் அந்தப் பெட்டியில் இருக்கும் ரான் வீஸ்லி (Ron Weasley) மற்றும் ஹெர்மியோனி க்ரேஞ்சர் (Hermione Granger) என்ற இரண்டு சிறுவர்களுடன் நட்பாகிறான்.

ரயில், ஹாக்வார்ட்ஸ் ஸ்டேஷனை அடைகிறது. அனைத்து மாணவர்களும் ஹாக்வார்ட்ஸ் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

ஹாக்வார்ஸ் பள்ளியின் பிரதான ஹால். The Great hall of Hogwarts என்று அழைக்கப்படும் இந்த ஹாலில், கூரையில் அழகிய மேகங்களும் நட்சத்திரங்களும் பளிச்சிடுகின்றன. அவற்றுக்குக் கீழே, ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகள் அந்தரத்தில் நின்றுகொண்டு, ஹாலுக்கான வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருக்கின்றன. அங்கே, நான்கு பெரும் மேஜைகள் போடப்பட்டிருக்க, அவற்றில் பல மாணவர்கள். ஹாலின் ஒரு கோடியில், ஒரு மேடை. அந்த மேடையில், ஹாக்வார்ட்ஸ் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் வீற்றிருக்க, நடுநாயகமாக ஒரு சிம்மாசனத்தில், ஆல்பஸ் டம்பிள்டோர் (Albus Dumbledore). ஹாக்வார்ட்ஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர். இக்கதையின் ஆரம்பத்தில் நாம் பார்த்த முதியவர்.

அவரது அருகில் ஒரு தொப்பி. அந்தத் தொப்பியைப் பார்த்ததும், ஹெர்மியோனி, ஹாரியின் காதில் கிசுகிசுக்கிறாள். ஹாக்வார்ட்ஸில், மாணவர்கள், மொத்தம் நான்கு பிரிவுகளில் பிரிக்கப்படுவார்கள். க்ரிஃபிண்டோர் (Gryffindor), ஹஃப்ஃபிள்பஃப் (Hufflepuff), ரேவன்க்ளா (Ravenclaw) மற்றும் ஸ்லிதரீன் (Slytherine). மாணவர்களின் தலையில் இந்தத் தொப்பி வைக்கப்பட, அவர்கள் எந்தப் பிரிவில் இருக்கவேண்டும் என்பதை அந்தத் தொப்பி சொல்லும். இந்த நான்கு பிரிவுகளில், ஸ்லிதரீன் என்பது, கொடிய மந்திரவாதிகள் படித்த ஒரு பிரிவு என்று ஹெர்மியோனி சொல்ல, ஹாரியின் மனம், ஸ்லிதரீன் பிரிவில் இடம்பெற்றுவிடக்கூடாது என்று தொடர்ந்து அரற்ற ஆரம்பிக்கிறது. ஹாரிக்கு முன், ஹெர்மியோனியும் ரானும், க்ரிஃபிண்டோர் பிரிவில் இடம்பெற்றுவிடுகின்றனர்.

ஹாரியின் முறை வருகிறது. தொப்பி, அவனுடன் பேசுகிறது. இவன், ஸ்லிதரீன் பிரிவில் இடம்பெற்றால், வருங்காலத்தில் மிகச்சிறந்த மந்திரவாதியாக வருவான் என்றும் அது சொல்கிறது. ஆனால், ஸ்லிதரீன் வேண்டாம் என்று தொடர்ந்து முணுமுணுத்துக்கொண்டிருக்கும் ஹாரியின் அரற்றலைக் கேட்டுவிட்டு, உரத்த குரலில், ‘க்ரிஃபிண்டோர்’ என்று அறிவிக்கிறது தொப்பி. தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்துகொள்கிறான் ஹாரி.

இதன்பின், மறுநாளிலிருந்து வகுப்புகள் தொடங்குகின்றன. பல்வேறு அதிசய அனுபவங்களுக்கு ஆளாகிறான் சிறுவன் ஹாரி. டம்பிள்டோர், மாணவர்களை, அந்தப் பள்ளியின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்க, ஒருநாள் விளையாட்டாக அந்த இடத்துக்குச் சென்றுவிடுகின்றனர் ஹாரி, ரான் மற்றும் ஹெர்மியோனி. அங்கே, ஒரு பிரம்மாண்டமான மூன்றுதலை நாய் இருக்கிறது.

ஹாக்வார்ட்ஸ் பள்ளியின் பிரதான ஆட்டம், க்விட்டிச் (Quidditch) என்பது. வானத்தில் பறந்து ஆடும் ஒருவிதப் பந்தாட்டம். க்ரிஃபிண்டோர் பிரிவின் க்விட்டிச் அணியில் இடம்பெறுகிறான் ஹாரி. அவனது வேலை, Seeker எனப்படுவது. ஒரு மிகச்சிறிய பறக்கும் பந்தைத் துரத்திப் பிடிக்கவேண்டும். முதலில் பிடிக்கும் அணி, வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

ஒருநாள், தற்செயலாக, அந்த நாய்கள் காவல் காக்கும் காரணத்தை ஹெர்மியோனியும் ஹாரியும் கண்டுபிடிக்கிறார்கள். அது என்ன?

நாய்களால் காவல் காக்கப்படுவது, Philosopher’s Stone என்று அழைக்கப்படும் ஒரு மந்திரக் கல். ரசவாதம் என்று படித்திருக்கிறோம் அல்லவா? நமது ஊரில், ரசவாதம் பற்றிய ரசமான பல குறிப்புகள் உண்டு. ராமலிங்க அடிகளாரின் பாடல்களில் ரசவாதம் பற்றிப் பல குறிப்புகள் அறிந்துகொள்ளலாம். ஆதியில் இருந்தே இந்த ரசவாதத்தில் மனிதனுக்கு ஒரு பெரும் பித்தே உண்டு. பல மூலிகைகளின் உதவியால் உருவாக்கப்படும் இந்தக் கல்லைக் கொண்டு, எதனையும் தங்கமாக மாற்ற முடியும் என்பது நம்பிக்கை. இந்த நாய்கள் காவல் காப்பது, அப்படிப்பட்ட ஒரு கல். தங்கமாக மட்டுமல்லாது, தன்னை வைத்திருப்பவரது உயிரையும் காக்கும் கல் அது. சாகாவரம் அளிக்க வல்லது. இந்தக் கல்லையே அந்த நாய்கள் காவல் காக்கின்றன என்று ஹாரியும் நண்பர்களும் அறிந்துகொள்கின்றனர்.

ஓர் நாள் இரவு, அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் – ப்ரொஃபஸர் செவரஸ் ஸ்னேப் (Severus Snape) – இந்த ஹாரி பாட்டர் கதைகளின் மிக முக்கியமானதொரு கதாபாத்திரம் – இந்தக் கல்லைத் தேடி, நாய்கள் காவல் காக்கும் நிலவறையினுள் சென்றிருக்கிறார் என்பதை ஹாரி மற்றும் ஹெர்மியோனி கண்டுபிடிக்கின்றனர். நாய்களை ஏமாற்றிவிட்டு, இந்த நண்பர்கள் மூவரும், அந்த நிலவறையினுள் குதிக்கின்றனர். அங்கே அவர்கள் அடையும் அனுபவம், மயிர்க்கூச்செரிய வைக்கும் ஒன்றாக அமைந்துவிடுகிறது. கொடும் மந்திரவாதி வோல்டமார்ட்டை முதன்முதலாக ஹாரி சந்திக்கிறான்.

இறுதியில் என்ன ஆனது? Philosopher’s Stoneன் மர்மம் என்ன? வோல்டமாட்டைச் சூழ்ந்துள்ள இருண்ட உண்மைகள் என்னென்ன? ப்ரொஃபஸர் ஸ்னேப் என்ன ஆனார்? இக்கேள்விகளுக்கு விடை தெரிய, நாவல் அல்லது படத்தைப் பாருங்கள்.

இந்த முதல் பாகத்தில்தான், அத்தனை கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அதேபோல், ஹாரியின் பெற்றோர்கள் இறந்ததையும், வோல்டமார்ட்டைக் குறித்த பல உண்மைகளையும் அறிகிறோம். ஹாரிக்கும் அவனது இரு நண்பர்களுக்கும் இடையே நிலவும் அந்நியோன்யம், ஹாரியின் மற்ற பள்ளித் தோழர்கள், அவர்களில் ஹாரியின் எதிரியாக விளங்கும் ட்ரேகோ மால்ஃபாய் (Draco Malfoy), ஹாக்ரிட்டிடம் ஹாரிக்கு இருக்கும் அன்பு, டம்பிள்டோர் குறித்த பல செய்திகள் ஆகிய பல விஷயங்களை இப்படம் நமக்கு அறிவிக்கிறது. இப்படத்தைப் பாராமல், மற்ற பாகங்களைப் பார்த்தால், ஒரு மண்ணும் புரியாது.

குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களையும் கட்டாயம் இப்படம் கவரும். அதிலும், காமிக்ஸ் படிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு, இப்படம் ஒரு சிறந்த விஷயம். என்னதான் படத்தைப் பார்த்தாலும், இந்தப் புத்தகத்தையும் முடிந்தால் படித்துவிடுங்கள். அது இன்னும் விபரமாகவும், மேலும் படு சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

வரும் நாட்களில், ஒவ்வொன்றாக மற்ற ஹாரி பாட்டர் படங்கள் நாவல்களையும் அலசலாம். ஏழு பாகங்களையும் பார்த்துவிட்டு, இறுதியாக, ஹாரி பாட்டர் கதைகளில் சொல்லப்படும் விஷயங்களைப் பற்றியும் மிக விரிவாகப் பார்த்துவிடலாம். Trust me. It’ll be real fun !

பி.கு – அடிக்கடி கருந்தேளின் பக்கம் வர இயலாத சூழலில் இருக்கிறேன். எனவே, பின்னூட்டங்களுக்குப் பதில், மிகத் தாமதமாகத்தான் வரும். பொறுத்துக் கொள்ளவும். அதேபோல், நண்பர்களின் வலைப்பூக்கள் இப்போதைக்குப் படிக்க இயலாத சூழல். இன்னும் சில நாட்களில் I’ll be back !

  Comments

23 Comments

  1. அருமையான பதிப்பு. ஆரம்பம் அட்டகாசம். நானும் உங்களைப் போலே தான் ஹாரி பாட்டர் முதலில் மொக்கை என்று நினைத்து பிறகு தற்செயலாக முதல் படம் பார்த்து, அது பிடித்து போகவே ஏழு புத்தகங்களையும் ஒரே வாரத்தில் படித்து முடித்தேன்.
    இந்த விமர்சனம் போல், மீதம் உள்ள ஆறு புத்தகங்களின் விமர்சனம் எதிர்பார்க்கிறேன்.

    Reply
  2. அடடா
    அட்டகாசம் நண்பா
    ஆரம்பிங்க ஒவ்வொரு ஹாரிபாட்டரா
    ஃப்ரீ டைம்ல சாட்ல வாங்க

    Reply
  3. என்னாது.. மந்திரவாதியே மந்திரவாதிகளைப்பற்றி எழுதுவதா :)அடி பின்னி எடுங்கள் :))

    Reply
  4. சூப்பர்.. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு..

    Reply
  5. //என்னாது.. மந்திரவாதியே மந்திரவாதிகளைப்பற்றி எழுதுவதா //

    hahaha…நீங்க எந்த பிரிவுல படிச்சீஙக தேளு கண்டிப்பா “ஸ்லிதரீன்” த்தான் இருக்கும் :))

    சுவராஸ்யமாத்தான் இருக்கு….என்னவோ இதுக்கு மேல ஒரு ஈடுபாடே வரல….குந்தைகள் ஐட்டம்னு ஒருபாகம்கூட பார்க்கலை…

    Reply
  6. வந்தோம்ல,
    ஹாரி பாட்டர் முதல் மூன்று பாகங்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. முதல் பாகம் பார்த்த போது உண்டான அனுபவம் இன்னும் மறக்க இயலாது.

    இது போல் அதகள பதிவுகளை எதிர்பார்க்கும்

    லக்கி லிமட்

    Reply
  7. தல இது கண்டிப்பா பாக்க சிறுபுள்ள தனமா இல்ல,நா கடைசியா வந்த பாகம் மட்டும் பார்த்தேன்,அதுவும் அதில் கொஞ்சம் வேலை பார்த்ததால்,செம மொக்க பாசு,என்னமோ சொல்லுறீங்க,பாப்போம்னு சொல்ல மாட்டேன்,கண்டிப்பா பார்க்கமாட்டேன்,

    Reply
  8. நான் ஆங்கிலத்தில் முதல் இரண்டு பாகம் பார்த்தேன். மீதி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனா நல்லா விரிவா எழுதியிருக்கீங்க!

    Reply
  9. நாவல்கள் அளவுக்குப் படங்கள் பரபரப்பு உணர்வைத் தரவில்லை என்பது என் கருத்து. நாவல்கள் வந்தவந்த உடனே வாசித்து இருக்கிறேன். ஏழாவது (இறுதி) நாவல் வருவதற்குமுன் ஒரு வாசகர் எழுதிய ஏழாவது பாகம் ஒன்றும் வந்தது. ரவுலிங்குடைய எழுத்துக்கு சுவைகுன்றாத வகையில் இருந்தது அதுவும்.

    ஆனால் ஹாரிபாட்டர் கதைகள், இதுகளுக்கெல்லாம் அப்பன் ஜே.ஆர்.ஆர். டோல்க்கீன் எழுதிய ‘Lord of the Rings’-கு கிட்டக்கூட வராது என்பதும் என் கருத்து. வாசிக்க விரும்புபவர்கள் டோல்க்கீன் எழுதிய ‘Hobbit’-இல் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    Reply
  10. @ boyinthehood – 🙂 அப்புடிப்போடு

    @ நெல்லை நாயகன் – கட்டாயம் அடுத்த அத்தனை ஹாரி பாட்டர் விமர்சனமும் கருந்தேளில் வரும் நண்பா.. நீங்களும் என்னை மாதிரித்தானா? 🙂 சேம் பின்ச்

    @ கீதப்ரியன் – நண்பா… இண்டர்நெட் பிரச்னையால, நெட் பக்கம் வரவே முடிய மாட்டேன்னுது. மீறி வந்தா, அது பதிவு போடுறதுலேயே தாவு தீர்ந்துடுது.. 🙁 .. சீக்கிரமே வர முயல்கிறேன். வெகு சீக்கிரம்..

    @ காதலரே – அடடே… இந்த மேட்டர் நல்லா இருக்கே 🙂 .. மந்திரவாதி.. 🙂

    @ captaintiger – நன்றி… விரைவிலேயே இரண்டாம் பாகம் வரும்.

    @ நாஞ்சில் – எனக்குமே இதுல ஈடுபாடே வரல முதல்ல.. அப்புறம், இதைப் பார்த்தப்புறம்தான் தெரிஞ்சது… நீங்களும் பாருங்க.. அப்புறம் சொல்லுங்க.. மத்தபடி, என்னாது ஸ்லிதரீனா? நானெல்லாம் அப்பாவிய்யா… படு அப்பாவி 🙂

    @ லக்கி லிமட் – வெரிகுட். சூப்பர்.. அடுத்த விமர்சனம், ஒரு அதிரடி படம் பாஸ்… உங்களுக்காகத்தான் 🙂 .. படிச்சிப் பாருங்க

    @ டெனிம் – அடப்பாவி.. 🙂 .. நீரு இத பார்த்தே ஆகோணும்யா… இது நம்ம நாட்டாமை கொழந்தையோட தீர்ப்பு… தீர்ப்பு.. தீர்ப்பு..

    @ ம. பொன்ராஜ் – அய்யய்யோ ஒரு ஞானசூன்யத்துகிட்ட மாட்டிகிட்டனே 🙂

    @ எஸ்.கே – மீதியைப் பார்க்கும் முன், நாவலைப் படிச்சிப் பாருங்க.. உங்களுக்குப் புடிக்கும்னு நினைக்கிறேன். நன்றி..

    @ rajasundarrajan – நீங்கள் சொல்வது உண்மை. நாவல் அளவு, படம் இல்லைதான். நாவலே பெஸ்ட். ஹாப்பிட் இன்னும் படிக்கல. ஃப்ரான்ஸ் கேஸனோவாவான கனவுகளின் காதலர், அதைப் படிச்சிட்டு பதிவு போடுறேன்னு சொல்லிருந்தாரு. அதுக்குத்தான் வெயிட்டிங்.. உங்கள் கருத்துக்கு நன்றி 🙂

    Reply
  11. இங்கே பொன்ராஜ் என்ற சொறிநாய், வாந்தியெடுத்து வைத்திருந்ததால், அந்தப் பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இனிமேலும் அது இங்கே பேண்டு வைத்தால், அவையும் அழிக்கப்படும் 🙂

    Reply
  12. ஹாரி படங்களை விட நாவல்களே அருமையானவை.படங்களை பார்த்து வெறுத்துப் போய் பின்னர் நாவல் படித்து அதனை விரும்ப ஆரம்பித்தவன் நான்.இதற்கு சில fan fiction களும் நெட்டில் உண்டு.ஒரிஜினல் ஏழாம் பாகத்தை விட அவற்றில் சில சிறப்பாக இருக்கும்.

    Reply
  13. naanum ungali polathhan nechen but padam parkka aarambitha pothu namraga iruthathu

    Reply
  14. நான் Harry Potter Novels இன் தீவிரமான ரசிகன். இரண்டு வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாண நூலகத்தில் அவற்றை ஒரு வெறியுடன் வாசித்திருக்கிறேன். அப்போது எங்கள் ஊரில் இது போன்ற ஆங்கில நூல்கள் விற்பனைக்கு வருவதில்லை. இப்போதும் கூடத்தான். இது போன்ற Fantasy Stories ஐ வாசிப்பவர்கள் இளைய தலைமுறையில் எங்கள் ஊரில் இப்போது மிகவும் குறைவு. ஆங்கிலத்தில் இருப்பது இன்னொரு காரணம். Harry Potter Novels ஒவ்வொன்றினதும் விலை எங்கள் ஊரில் 1000 ரூபாய்க்கு மேலிருப்பதால் கட்டுப்படியாவதில்லை. ஆனாலும் நூலகத்தில் அவை கிடைத்தன. வாசிக்க வாசிக்க ஒரு புது உலகத்தினுள் அவை இட்டுச் சென்றன. இறுதி இரண்டு பாகங்கள் மட்டும் உங்களை மிகவும் சுவாரசியமான ஒரு தேடலினுள் இட்டுச் செல்லும்.எனக்கு மிகவும் பிடித்தவை இவைதான். ஆனாலும் துரதிஷ்டவசமாக நூலகத்தில் 7 வது பாகம் கிடைக்கவில்லை. நான் ஓராண்டாகத் தேடியும் கிடைக்கவில்லை. நூலகரிடம் எப்போது வரும் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன். இறுதியில் காசு சேர்த்து எப்படியும் வாங்கி விடுவது என முடிவு செய்தேன். ஆனால் எந்தவொரு புத்தகக் கடையிலும் அது கிடைக்கவில்லை எங்கள் ஊரில். 6 புத்தகங்களையும் வாசித்து விட்டு இறுதியை வாசிக்காமலிருப்பது மிகவும் கொடுமை. Wikipedia இல் தேடியதில் கதையின் Plot Summary கிடைத்தது. ஆனாலும் எனது ஆவல் தீரவில்லை. பின் Advanced Level முடித்து கொழும்பிற்கு மேற் படிப்பைத் தொடர வந்த போது(2009) நான் முதலில் Harry Potter and the Deathly Hallows ஐ வாங்கினேன். இங்கேயுள்ள புத்தகக் கடைகளில் எல்லாப் பாகமும் தாராளமாகக் கிடைக்கிறது. அந்த புத்தகத்தை ஒரு வெறியுடன் ஒரு இரவில் தூங்காது வாசித்து முடித்தேன். இது வரை வந்த எல்லா Harry Potter Films ஐயும் பார்த்திருக்கிறேன். புத்தகம் கவர்ந்த அளவு என்னைக் கவரவில்லை. புத்தகத்திலுள்ள சின்னச் சின்ன நுணுக்கமான விவரங்களைத் திரைப் படத்தில் கொண்டு வர முடியவில்லை. அதிலும் எனக்கு Harry Potter and the Half-Blood Prince திரைப் படம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இப்போது வந்திருக்கும் Deathly Hallows Part 1 பரவாயில்லை. இருந்தும் நான் படம் பார்ப்பது Severus Snape ஆக நடிக்கும் Alan Rickman இன் நடிப்பிற்காகவும் Emma Watson இற்காகவும். தீவிரமான இலக்கியப் புத்தகங்களின் வாசகனாக இருந்தும் என்னால் இந்த குழந்தைகள் Fantasy உருவாக்கிய Magic இலிருந்து விடுபட முடியவில்லை. அதுதான் வயது முதிர்ந்தவர்கள் பலரும் இதன் வாசகர்களாகவிருப்பதன் காரணம். ஒருமுறை வாசித்தால்தான் தெரியும். உங்களால் அந்த உலகிலிருந்து மீள முடியாது. J.K.Rowling இதனுடன் தொடர்பு பட்ட additional Novels சிலவற்றையும் எழுதியிருக்கிறார். 7 ஆவது நாவலின் பின்னான கதாபாத்திரங்களின் வாழ்க்கை பற்றி ஒரு நேர்காணலில் மேலதிக தகவல்களை வழங்கியிருக்கிறார்.
    The Hobbit இலும் The Lord of the Rings trilogy இலும் J.R.R.Tolkien ஒரு புது உலகையே/ நாகரிகத்தையே படைத்திருக்கிறார். மொழி உட்பட. மொழியின் Alphabets, Phonology எல்லாமும்.வாசித்துப் பாருங்கள். The Lord of the Rings trilogy திரைப்படமாக வந்துவிட்டது. The Hobbit திரைப்படமாக எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. J.R.R.Tolkien ஒரு Anglo – Saxon பேராசியராகவிருந்தவர். அவர் இந்தத் தொடரை எழுதியது பற்றி S.ராமகிருஷ்ணன் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

    கருந்தேள் நீங்கள் உலக சினிமா பற்றிப் பார்த்த்வறைப் பகிர்ந்து கொள்வதை நான் வரவேற்கிறேன். இது போன்ற அனுபவப் பகிர்வுகள் Healthy ஆன ஒரு தேடலிற்கு இட்டுச் செல்லும்.

    Reply
  15. லார்ட் ஆஃப் த ரிங்ஸ்-க்கு முன்னாடி.. ஹாரி ஜுஜுபி தல. ஏரியாவை காலி பண்ணுற வரைக்கும் (இன்னும்கூட) எனக்கு எழுதனும்னு தோணிகிட்டே இருக்கறது அதைப் பத்திதான்.

    அப்படியே… அதை முழுசா தமிழ்ல எழுதுங்க தல.

    Reply
  16. @ ஹரிநிவாஸ் – சூப்பர் 🙂 .. சேம் பின்ச்

    @ இலுமி – கடைசி ரெண்டு பாகம் தான் நாவலா படிச்சேன்.. அது கட்டாயம் படங்களை விட நல்லாத்தான் இருந்தது.. முதல் 5 பாகங்களும், இதோ ஆரம்பிக்கிறேன்

    @ ArvinD – உங்களது விரிவான பின்னூட்டம், மிகவும் அருமை. அதுவே ஒரு சிறுகதை மாதிரி இருந்தது.. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா

    @ வெளங்காத தமிழ் அனானி – லார்ட் ஆஃப் த ரிங்ஸ் எனக்கும் புடிக்கும்தான். ஆனா, அந்த மோதிரத்தைத் தேடிக்கினு போறது கொஞ்சம் சோகமா எனக்குப் பட்டது.. சொல்லிட்டீங்கல்ல… சீக்கிரமே கட்டாயம் ஆரம்பிச்சிரலாம். ஆனா, அதைப்பத்தி நீங்க ஏன் தொடங்கக்கூடாது மறுபடி? என்னா சொல்றிங்க

    Reply
  17. Thank You and You are mostly welcome Mr.Scorp.

    Reply
  18. தல… அது மோதிரத்தை அழிக்கப் போகும் கதை. நாவலா படிச்சாலும் சரி.. படமா பார்த்தாலும் சரி. அது அனுபவம்!!!

    சோகமே கிடையாது தல. செம அட்வென்சர் படம்!!

    இந்தக் கதையை படமா எடுக்கவே முடியாதுன்னு ஹாலிவுட் ரொம்ப வருசமா தள்ளி வச்சது. கடைசில நியூசிலாந்துகாரர் ஒரு வழியா எடுத்து முடிச்சாரு.

    படத்தோட டெக்னிகல் மேட்டரை தோண்டிப்பாருங்க. அசந்துடுவோம். வெட்டா டிஜிடல் 2009-ல அவதார்ல காட்டின மேட்டரெல்லாம் 2001-லயே பண்ணிட்டாங்க.

    இன்ஃபேக்ட், LOTR – Two Towers வந்தப்பின்னாடிதான் ஜேம்ஸுக்கே அவதார் மேல திரும்ப நம்பிக்கை வர ஆரம்பிச்சது; அந்த கொல்லம் கேரக்டரை பார்த்ததும். அதுக்கப்புறம் Return of the King & King Kong ரெண்டுலயும் வெட்டா மிச்ச மீதியையும் பண்ணி காட்டிடுச்சி.

    ஒரே ஷாட்ல ஹாபிட்ஸை எப்படி குள்ளமாவும், மத்தவங்களை உயரமாவும் காமிச்சாங்கங்கறது ஒரு சேம்பிள்.

    ==

    ஊர்ல இருந்தப்ப முதல் பாகம் பார்த்துட்டு, ஒரு எழவும் புரியாம, ரெண்டாவது பார்ட் வந்தப்ப தியேட்டர் பக்கமே போகலை. திடீர்ன்னு நீங்க ஹாரிபாட்டர் பார்த்த மாறி, நானும் ஒரு நாள் LOTR பார்க்க ஆரம்பிச்சி… இப்ப 7 வருஷத்தில் எத்தனை தடவை பார்த்தேன்னே தெரியலை.

    நீங்க பார்க்கனும்னா, முதல்ல தியரிட்டிகல் வெர்ஷன் பாருங்க. ஒவ்வொன்னும் 3 மணி நேரம் போகும். படம் பிடிச்சா, எக்ஸ்டண்ட்ட் வெர்ஷன் பாருங்க. ஒவ்வொன்னும் 4.30- மணி நேரம்.

    Reply
  19. //லார்ட் ஆஃப் த ரிங்ஸ் எனக்கும் புடிக்கும்தான். //

    ஸாரி தல. நீங்க படம் பார்க்கலையோன்னு நினைச்சி ஓவரா அளந்துட்டேன்.

    மீ ஸோ ஸாரி..

    Reply
  20. // அதைப்பத்தி நீங்க ஏன் தொடங்கக்கூடாது மறுபடி? என்னா சொல்றிங்க//

    வேணாம்… வெளங்காதவன் வாய்ல விழுந்து வைக்காதீங்க…!! சொல்லிபுட்டேன்!!! 🙂 🙂 🙂

    Reply
  21. harry potter series (books) are not only for children.

    it has all the qualities of a classic.

    i have to agree lord of the rings movies were better made.

    hp movies will be interesting only when u have read the novels.
    thanks for sharing

    Reply

Join the conversation