The Hateful Eight (2015) – English – Part 1

by Karundhel Rajesh March 4, 2016   English films

My movie is not a carton of milk that has an expiration date. It’s going to be available 20 years, 30 years, hopefully 100 years from now. Those critics will come and go, but the movie will be the movie. My revenge is I’m going to win their kids and grandkids over. They’re going to be stuck, an old man at Thanksgiving, having their granddaughter talk about how she’s taking a Tarantino class in college, and it’s the most stimulating class that she’s taking. They’re going to fry an egg on their bald pate while their grandkids exalt my virtues – Quentin Tarantino.

  1. ஹேட்ஃபுல் எய்ட் பற்றி ஏற்கெனவே எழுதிய கட்டுரை – இங்கே. இதைப் படித்தால், இந்தப் படத்தின் பின்னணி தெளிவாகத் தெரிந்துவிடும்.
  2. 2. Quentin Tarantino பற்றிய எனது விபரமான தொடரை இங்கே படிக்கலாம்.

 

இந்தக் கட்டுரையை மிகமிகத் தாமதமாக எழுதக் காரணம் – நேரமின்மை (which is way too obvious).

இந்த ஆண்டு நான் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம் இது. ரிலீஸுக்கு முன்னரே டாரண்ட்டில் வந்தது. அதன்பின் க்ரிஸ்மஸ் தினத்தில் ஹாலிவுட்டில் Roadshowஆக இதன் ப்ரீமியர் நடைபெற்றது. முற்றிலும் ஃபில்மில், 70MM திரைகளில் இந்தப் ப்ரீமியரில் படம் வெளியானது. அதன்பின் உலகம் முழுக்க டிஜிட்டலில் ஜனவரியில் வெளிவந்தது.

இந்தப் படத்தின் சிறப்புகள் என்னென்ன என்பதெல்லாம் பார்ப்பதற்குமுன்னர், இந்தப் படத்தைப் பற்றிய டாரண்டினோவின் கருத்தைக் கவனிப்போம். இது ஒரு சாதாரண வெஸ்டர்ன் படம் அல்ல. மாறாக, அமெரிக்காவில் கறுப்பின மக்களின் பதைபதைப்பு பற்றிய அவரது கருத்துகளே இந்தப் படமாக வந்துள்ளன. இதுவேதான் Django Unchained படத்திலும் அவரது கருத்தாக இருந்தது. ஒரு குட்டிக் கறுப்பினச் சிறுவன் வெஸ்டர்ன்கள் பார்க்கவேண்டும் என்று விரும்பினால், வெள்ளையர்களால் நிரம்பிய வெஸ்டர்ன்களில் அவனுக்குப் கிடைக்கும் ம்கிழ்ச்சியை விட, ஜாங்கோவிடம் அவனுக்கு மகிழ்ச்சி கூடுதலாகக் கிடைக்கும் என்பது அவரது கருத்து. இதுதான் ஹேட்ஃபுல் எய்ட் பற்றிய டாரண்டினோவின் கருத்தும் கூட. இதிலும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு மனிதனே பிரதான கதாபாத்திரம் வகிக்கிறான். இதுவும் ஒரு வெஸ்டர்ன் தான். ஆனால் பெருமளவில் வெளியாகும் பிற வெஸ்டர்ன்களைப் போல் அல்லாமல், இது கொஞ்சம் வசனங்கள் நிரம்பியது. அதுவும் தெரிந்தேதான் டாரண்டினோ செய்திருக்கிறார்.ஒரு வெஸ்டர்ன் எடுப்பதைவிட, தொடர்ச்சியாக இரண்டு வெஸ்டர்ன்கள் எடுப்பதில் சவால்கள் அதிகம் என்று சொல்லியிருக்கிறார். அத்தகைய சவால்மிக்க ஒரு படமாகவே இது வெளிவந்துள்ளது என்பது அவரது கருத்து.

டாரண்டினோவின் பிற படங்கள் அவருக்குப் பிடித்த ஏராளமான படங்களை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன என்ப்து அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் ஹேட்ஃபுல் எய்ட் படத்துக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்த படங்கள் எவை?

The inspirations to The Hateful Eight

முதலாவதாக, டாரண்டினோவுக்கு மிகப்பிடித்தமான இயக்குநர்களில் ஒருவராகிய செர்ஜியோ கார்புச்சி இயக்கிய The Great Silence. இது ஒரு Snow western.  மிகவும் அட்டகாசமான ஒரு வெஸ்டர்ன். இதற்கு இசையமைத்தவர் என்னியோ மாரிகோனி (வேறு யாராக இருக்கமுடியும்?).  ஜாங்கோவுக்கும் இந்தப் படம்தான் இன்ஸ்பிரேஷன். அடுத்ததாக, Day of the Outlaw. இது ஆண்ட்ரெ டெ டோத் இயக்கிய படம். இதுவும் ஒரு snow westernதான்.  இதன்பின்னர் யூஜீன் ஓ நீல் எழுதிய நாடகமான The Iceman Cometh. அடுத்ததாக, ஜான் கார்பெண்டர் இயக்கிய The Thing (1982). அகதா க்ரிஸ்டி எழுதிய மிகப்பிரபலமான And then there were none நாவலும் ஒரு இன்ஸ்பிரேஷனே. இதுவரை உலகில் மிக அதிகமாக (100 மில்லியன் பிரதிகள்) விற்பனையான மிஸ்டரி இதுதான். இதுவரை ஒரு மிஸ்டரியை எழுதியதில்லை என்பது டாரண்டினோவின் கூற்று. எனவே, இந்தப் படத்தில் சாமுவேல் ஜாக்ஸனின் கதாபாத்திரத்தை எழுதியபின்னர், இதைப்பற்றி ஜாக்ஸனிடம் கேட்டபோது, இதை ஹெர்க்யூல் நீக்ரோ  என்றே ஜாக்ஸன் சொன்னதுபற்றியும், அப்பெயரை வைத்தே படப்பிடிப்பு முழுதும் ஜாக்ஸனை அனைவரும் அழைத்தது பற்றியும் டாரண்டினோ சொல்லியிருக்கிறார் (ஹெர்க்யூல் பாய்ரோ என்பவர் அகதா க்ரிஸ்டியின் மிகப்பிரபலமான துப்பறிவாளர்). இவைதவிர, Rio Bravo திரைப்படமும் இன்னொரு காரணம். இப்படம் எனக்கும் பிடித்த படங்களில் ஒன்று. அமெரிக்காவில் Bonanza என்ற பெயரில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலம்.  இதில் பல எபிஸோட்களில் பிரபல நட்சத்திரங்கள் guest starகளாக வருவது உண்டு. இதில் வரும் சில கதாபாத்திரங்கள்தான் ஹேட்ஃபுல் எய்ட் கதாபாத்திரங்களை இன்ஸ்பையர் செய்தவர்கள் என்று டாரண்டினோ சொல்லியிருக்கிறார். பதினான்கு வருடங்கள் ஒளிபரப்பான சீரீஸ் இது. இதன் தீம் இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இத்தனை இன்ஸ்பிரேஷன்களுக்குப் பின்னரே ஹேட்ஃபுல் எய்ட் வெளிவந்துள்ளது. சினிமா வெறியரான டாரண்டினோவுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. எதாவது ஒரு மூலையில் இருந்து இன்னமும் பலரும் அறியாத ரெஃபரன்ஸ்களைக் கொடுப்பது டாரண்டினோவின் வழக்கம். அவர் ஒரு சினிமா historian கூட என்பதால் இது அவருக்குச் சாத்தியம்.

The Hateful Eight & The Revenant

இந்தப் படத்துக்கும் ‘The Revenant’ படத்துக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டுமே பனிபடர்ந்த பிரதேசங்களில் நடக்கும் கதைகள். இரண்டுமே பழிவாங்கும் கதைகள். ஒன்றில் தந்தை; இன்னொன்றில் அண்ணன். இரண்டிலும் கெட்டவர்கள் ஃப்ரெஞ்ச் பேசுகிறார்கள். இரண்டிலுமே கிரிஸ்தவ சின்னங்கள் உண்டு. இரண்டு படங்களிலுமே ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் மட்டுமே. இரண்டு படங்களிலுமே தூக்கில் போடுவது முக்கியமான இடங்களில் வருகிறது.  மிகமிகக் குறிப்பாக, இரண்டு படங்களிலுமே முக்கியமான கதாபாத்திரங்கள் காற்றில் பொழியும் பனியை உண்ண முயல்வது வரும் (ஹேட்ஃபுல் எய்ட்டில் பார்த்திருப்பீர்கள். ரெவனண்ட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா?) இரண்டுமே மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களைக் கொண்டவை. இரண்டிலுமே நல்ல நடிகர்கள் உண்டு. அதேசமயம், இந்த இரண்டு படங்களுக்கும் இருக்கும் பிரதான வேற்றுமை, ரெவனண்ட் உலகம் முழுக்க மார்க்கெட்டிங் செய்யப்பட்டதைப்போல ஹேட்ஃபுல் எய்ட் செய்யப்படவில்லை என்பதுதான். கூடவே, ரெவனண்ட் ஒரு one dimensional படம். வில்லனைப் பழிவாங்கும் ஹீரோ என்ற ஒரு பரிமாணக் கதையில், முழுக்க முழுக்க ஒளிப்பதிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். ஆனால் ஹேட்ஃபுல் எய்ட்டின் கதை அப்படி அல்ல. அது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். முழுக்க முழுக்க (ஒரு சில காட்சிகள் தவிர்த்து) செட்டுக்குள்ளேயே, கதாபாத்திரங்களுக்கான வசனங்களை வைத்தே இயக்கப்பட்ட படம் அது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குப் பின்னாலும் மிக நீண்ட கதை இதில் உண்டு. படத்தில் காண்பிக்கப்பட்டது ஒரு துளி மட்டுமே. காண்பிக்கப்படாத கதைதான் இப்படத்தில் மிக முக்கியம். அதுதான் ஹேட்ஃபுல் எய்ட்டின் சிறப்பு. முற்றிலும் கதாபாத்திரங்களின் பின்னணியை வைத்தே எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் பின்னணி, வசனங்களில் விரிவாக வெளிப்பட்டிருக்கும். அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அடுத்த கதாபாத்திரத்தின் மீது இருக்கும் வெறுப்பு என்பதுதான் ஹேட்ஃபுல் எய்ட்டின் பிரதான அம்சம். இந்த வெறுப்பால் அவர்கள் அனைவருக்குமே மோசமான முடிவு நிகழப்போகிறது என்பதுதான் படத்தின் செய்தி.

அடுத்ததாக, இரண்டு படங்களையும் கவனித்தால், ரெவனண்ட் என்பது தனது மகனைக் கொன்று, தன்னை விட்டுவிட்டுப்போன நபரைப் பழிவாங்கப் பல நாட்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மரணத்தை வென்ற ஒரு மனிதனின் கதை. இதில் எங்காவது சந்தோஷமோ, மகிழ்ச்சியோ, grandeur எனப்படும் பிரம்மாண்டமோ இருக்கிறதா? ஆனால் இவை எல்லாமே இப்படத்தின் ஒளிப்பதிவில் உள்ளது. இமானுவேல் லுபெஸ்கி சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்பது உண்மைதான். ஆனால், இப்படத்தின் ஆன்மாவுக்குச் சம்மந்தமே இல்லாத ஒளிப்பதிவை இப்படத்தில் கையாண்டுள்ளார். இது ஒரு grim கதை. இக்கதையில், பனிப்பிரதேசத்தின் பிரம்மாண்டம், இயற்கையின் மலைக்க வைக்கும் அழகு ஆகியவற்றை ஃப்ரேமுக்கு ஃப்ரேம் காட்டிக்கொண்டே இருக்கிறார் லுபெஸ்கி. இது எப்படி இருந்தது என்றால், ‘இதோ பார்த்துக்கொள்ளுங்கள். இதுதான் ஒளிப்பதிவு. இப்படித்தான் ஃப்ரேம்கள் வைக்கவேண்டும்’ என்று டமாரம் அடிப்பதைப்போலவே இருந்தது.

மாறாக, ஹேட்ஃபுல் எய்ட் படத்தைக் கவனித்தால், படத்தை Ultra 70 MMல் எடுத்திருந்தாலும், படத்தின் லென்ஸ்கள் மிகப்பழையவையாக – பென்ஹர் போன்ற படங்களை எடுக்க உபயோகித்திருந்த லென்ஸ்களாக இருந்தாலும், ஆரம்பக் காட்சியில்  காண்பிக்கப்படும் பனிப்பிரதேசத்தின் ஷாட்களைத் தவிர, இந்தப் படத்தில் ரெவனண்ட்டில் வைக்கப்பட்டதைப் போன்ற செயற்கையான ஃப்ரேம்கள் எதுவும் இல்லை என்பது தெரியும். ஹேட்ஃபுல் எய்ட் படத்தின் பெரும்பாலான காட்சிகள், ஒரு விடுதிக்குள் நடக்கின்றன. இங்கே கதாபாத்திரங்களின் நடிப்பும், அவர்கள் பேசும் வசனங்களுமே முக்கியம். இந்த விடுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் ஷாட்களைக் கவனித்துப் பாருங்கள். காட்சிகளின் பின்னணியில் நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். கேமரா, உணவு விடுதியின் ஒவ்வொரு அங்குலத்தையும் எப்படிப் படம் பிடித்திருக்கிறது என்பதை observe செய்து பாருங்கள். இதுதான் Subtlety. இத்தகைய ஒளிப்பதிவுதான் பாராட்டத்தக்கது என்பது புரியும். ஹேட்ஃபுல் எய்ட்டில் வரும் க்ளோஸப் ஷாட்களைக் கவனித்தால் தெரியும் – Ultra 70 லென்ஸ்களை வைத்துக்கொண்டு இப்படிப் படம் எடுப்பதன் சவால்கள் என்னென்ன என்பது. இந்தப் படத்தின் கதை, ரெவனண்டைப் போலவே ஒரு gloomy கதை. இதன் ஒளிப்பதிவில் எங்காவது பளீரென்று சூரிய வெளிச்சம், ரெவனண்ட்டைப்போன்ற பனிப்பிரதேசத்தின் அழகு, இயற்கையைக் கேமராவில் படம்பிடிக்க நினைக்கும் தன்மை ஆகியவை இருக்கிறதா என்று கவனித்துப் பாருங்கள். எங்கேயுமே இருக்காது. படம் முழுதுமே ஒருவித dark லைட்டிங் இருக்கும். படத்தின் தன்மைக்கும் ஒளிப்பதிவுக்கும் இருக்கும் ஒற்றுமை என்பது இதுதான். இதை டாரண்டினோவும் ஒளிப்பதிவாளர் ராபர்ட் ரிச்சர்ட்ஸனுமே பேசிவைத்துக்கொண்டு செய்திருக்கின்றனர்.

இதை இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பார்க்கலாம். இந்த Ultra 70 Panavision லென்ஸ்களை வைத்துக்கொண்டு ஒரு ஒளிப்பதிவாளர் அமைக்கும் ஃப்ரேம்கள் அகலமானவையாகவே இருக்கும். இவைகளின் ஆஸ்பெக்ட் ரேஷியோ என்பது 2.76:1. வழக்கமான 35MM படங்களை விட இரண்டு மடங்கு பெரிய ஆஸ்பெக்ட் ரேஷியோ இது. ஃப்ரேம்கள் வழக்கமான படங்களைவிடவும் இரண்டுமடங்கு பெரியவை என்று மனதில் வைத்துக்கொண்டால் போதும்.

இப்படிப்பட்ட ஃப்ரேம்களை உபயோகப்படுத்தும் Ultra Panavision 70 லென்ஸ்கள் இருந்து, பிரம்மாண்டமான பனிப்பிரதேசத்தையும் கையில் கொடுத்துவிட்டால் என்னாகும்? ஒளிப்பதிவாளர் குஷியாகி கண்டபடி சுட்டுத்தள்ளவேண்டும் என்றுதானே நினைப்பார்? ஆனால் டாரண்டினோ அதில் மிகத்தெளிவாக இருந்தார். அவரது கதையில் Ultra 70MM என்பது ஒரு கருவி மட்டுமே. அதைவைத்துக்கொண்டுமட்டுமே படத்துக்கு விளம்பரம் தேடுவது அவரது நோக்கமாக இல்லை. கதைப்படி ஒரு விடுதியில்தான் பாதிக்கும் மேற்பட்ட படம் நடைபெறவேண்டும். இதனால், அந்த விடுதிக்குள்ளேயே, இந்தப் பிரம்மாண்ட லென்ஸ்களை வைத்துக்கொண்டு துல்லியமாக, நடிகர்களின் ஒவ்வொரு அசைவையும் படம்பிடித்தார். செர்ஜியோ லியோனியின் பழைய படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் அதிகம் இருக்கும்.

ஒரு பிரபல உதாரணமாக, இந்தக் காட்சியைப் பார்க்கலாம்.

ஹேட்ஃபுல் எய்ட்டின் ஓப்பனிங் காட்சிக்கு இதுபோன்ற செர்ஜியோ லியோனியின் ஓப்பனிங் காட்சிகள்தான் இன்ஸ்பிரேஷன். அந்தக் காட்சியைத் திரைக்கதையில் எழுதும்போதே Sergio Leone  Close Up என்றுதான் டாரண்டினோ எழுதியிருப்பார். மேலே இருக்கும் காட்சியில் க்ளோஸப்களை கவனியுங்கள். எத்தனை அட்டகாசமாக இருக்கின்றன? அதுதான் ஹேட்ஃபுல் எய்ட்டில் டாரண்டினோ கையாண்ட வழிமுறை. இவ்வளவு பிரம்மாண்ட ஃப்ரேம்களை அமைக்கும் அளவு லென்ஸ்கள் இருந்தால், அவற்றைவைத்துக்கொண்டு ஒரு மூடிய வீட்டினுள்ளேகூட கதைக்கேற்றபடி ஷாட்கள் அமைத்து எடுக்கலாம் என்பதுதான் டாரண்டினோவின் முடிவு. மாறாக, ரெவனண்ட்டில் செய்ததுபோல் எப்போதுபார்த்தாலும் இயற்கையையே காண்பித்துக்கொண்டிருக்க டாரண்டினோவால் முடியாது. அவர் ஒரு கதைசொல்லி என்பதுதான் காரணம். அப்படிக் காண்பித்திருந்தால், ஒரு துயரமான படத்தில் எதற்கு இத்தனை viStaக்கள் என்ற இந்த முரண் அவசியம் ஆடியன்ஸுக்கு உறைத்திருக்கும்.

மீதியை நாளை இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்.

(தொடரும்)..

  Comments

1 Comment;

  1. Dany

    இத்தொடரை முடிக்கும்முன்பு Torrent version ஐ கண்டிப்பாக பார்த்துவிடவும், என் கூற்றுப்படி நிறைய காட்சிகள் தியேட்டரில் missing, படத்தின் technical விசயங்களை விட கதையை பற்றி அதிகமாக எழுதுங்கள் please, மொத்தமாக பத்து பாரா எழுதிவிட்டு கடமை முடிந்தது என்று விட்டு விடாதீர்கள்…! இந்த படத்தின் கதை அதன் பின்னனி, இதற்கும் “ட்ஜங்கோ” க்கும் உள்ள தொடர்புகள் ன்னு நிறைய எழுதுங்கள்…

    குறிப்பு1: எங்கு எழுதினாலும் என்ன பிசியாக இருந்தாலும் இங்கேயும் எழுதவும்..
    குறிப்பு2: நன்றி…

    Reply

Join the conversation