Hazaron khwahishen Aisi (2005) – English & Hindi

by Karundhel Rajesh January 18, 2010   Hindi Reviews

எமர்ஜென்ஸி. பல இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஒரு நிகழ்வு. இந்தச் சமயத்தில், சில இளைஞர்களின் வாழ்வைப் பற்றிய ஒரு நெஞ்சைத்தொடும் படம் தான் இந்த ‘Hazaron khwahishen Aisi’ என்ற ஹிந்திப்படம். இந்த இளைஞர்களின் கூடவே பயணிக்கும் இப்படம், அவர்களது வாழ்வை நம் கண்முன்னே நிறுத்துகிறது. இயக்குநர் சுதீர் மிஷ்ராவினால் எடுக்கப்பட்ட இந்தப்படம், பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டப்பட்டுள்ளது. ஆனால் (வழக்கம் போல) இந்தியாவில் படம் படு ஃப்ளாப். அவரது ஆகச்சிறந்த படம் என்று இன்றும் இப்படம் கருதப்படுகிறது.

நமது திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவரான கே கே மேனன் மற்றும் ஷைனி அஹூஜா, சித்ராங்தா சிங் ஆகியவர்கள் நடித்து, 2005ல் வெளிவந்த இப்படத்தைப் பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம்.

Hazaron khwahishen Aisi – இதன் பொருள், ஆயிரம் கனவுகள் இப்படியாக . . . உர்தூக் கவிஞர் மிர்ஸா காலிப்பின் ஒரு கவிதையில் வரும் வரி இது.

சித்தார்த், விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் கீதா ஆகிய மூவரும், டெல்லிப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கின்றனர். ஆண்டு, எழுபதுகளின் முற்பகுதி. சித்தார்த் (கே கே மேனன்), புரட்சியில் மிகுந்த நம்பிக்கையுடையவன். தனது மாநிலமான பீஹாரில் புரட்சியின் மூலமாக சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, ஒரு சமத்துவ அரசை நிறுவ வேண்டும் என்ற தீராத தாகமுடையவன். கீதா (சித்ராங்தா சிங்), லண்டனிலிருந்து வந்து, இங்கு படித்துக்கொண்டிருப்பவள். சித்தார்த்தைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள். விக்ரம் (ஷைனி அஹூஜா), ஒரு மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தப் புரட்சி, கிரட்சியிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவன். வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதே அவனது லட்சியம். விக்ரம், கீதாவை விரும்புகிறான். அவளுக்கும் இது தெரிகிறது.

கல்லூரியிலேயே விக்ரம் கீதாவிடம் அவன் அவளை விரும்புவதாகச் சொல்ல, அவள் அதை இயல்பாக மறுத்து விடுகிறாள். ஆனால், அவள் சித்தார்த்திடம் பேசும்போதெல்லாம், காதலைவிடப் புரட்சியையே அவன் தேர்ந்தெடுக்க விரும்புவதாகச் சொல்வது, அவளை வருத்தமுற வைக்கிறது. கல்லூரி முடியும் நேரத்தில், சித்தார்த்தும் கீதாவும் உறவு கொள்வதை, விக்ரம் பார்த்து விடுகிறான். மனமுடைந்து போகிறான்.

சில வருடங்கள் கழித்து, மூவரையும் நாம் பார்க்கிறோம். சித்தார்த், பீஹாரின் காடுகளில், புரட்சியாளனாக, ஒரு படையை வைத்திருக்கிறான். விக்ரம், டெல்லி அரசிடம் காரியம் சாதித்துக்கொடுக்கும் ஒரு தரகனாக இருக்கிறான். கீதா, ஒரு ஐ ஏ எஸ் ஆஃபீஸரை மணந்து கொண்டிருக்கிறாள். ஒரு விருந்தில் கீதாவும் விக்ரமும் சந்தித்துக்கொள்கிறார்கள். கீதா, இந்த ஆஃபீஸரை மணந்துகொண்டிருக்கும் காரணம், அவனிடத்தில் ‘எல்லாமே’ உள்ளது என்பதுதான் என்று விக்ரமுக்கு உணர்த்துகிறாள். ஆனால், சில நாட்களிலேயே, சித்தார்த்தை ரகசியமாக சந்திக்கிறாள். அவளுக்கு, ஆஃபீஸருடன் வாழ்வதில் விருப்பம் இல்லை. ஆனால், அவனிடம் பணமும் அதிகாரமும் இருப்பதால், வேறு வழியின்றி அவனோடு இருக்கிறாள்.

சித்தார்த் அவளை அவனுடனே வரச்சொல்கிறான். எனவே, கீதா, அவள் கணவனை விவாகரத்து செய்துவிடுகிறாள். அந்தச் சமயங்களில் அவளை விக்ரம் பார்த்துக்கொள்கிறான். என்னதான் அன்பாக அவள் பழகினாலும், அவளது மனம் சித்தார்த்தின் மேல் தான் இருக்கிறது என்று விக்ரம் புரிந்து கொள்கிறான். சித்தார்த்தையும் கீதாவையும் காட்டுள் சென்று ஒரு நாள் சந்திக்கிறான்.

கீதா, சித்தார்த்துடனேயே சென்றுவிடுகிறாள். சித்தார்த் ஒளிந்துள்ள கிராமத்தில் , ஒரு ஆசிரியையாகச் சேர்கிறாள். சித்தார்த் ஒரு நக்ஸலைட் என்பதால், போலீஸ் அவனைத் தீவிரமாகத் தேடி வருகிறது. இந்த நிலையில், கீதாவுக்குக் குழந்தை ஒன்று பிறக்கிறது. அதனை அவள் தனது பெற்றோர்கள் இருக்கும் லண்டனுக்கு, பாதுகாப்பு கருதி அனுப்பி விடுகிறாள்.

ஒருநாள், போலீஸ் சித்தார்த்தையும் கீதாவையும் அவனது சில ஆட்களையும் வளைத்துப்பிடித்து விடுகிறது. இருவரையும் ஜெயிலில் அடைத்து, கடுமையாக அடித்து விடுகிறது. சித்தார்த் தப்பி விடுகிறான். கீதாவை அவளது முன்னாள் கணவன் பெயிலில் எடுக்கிறான். தப்பிக்கும் சித்தார்த், குண்டடி வாங்கி, மருத்துவமனையில் சிறைவைக்கப்படுகிறான்.

இந்த நிலையில், நகரத்திற்கு வந்துவிடும் கீதா, சித்தார்த் இறந்துவிட்டதாக நினைத்து, வருத்தம் அடைகிறாள். அவளை விக்ரம் அடிக்கடி சென்று பார்க்கிறான். அப்போது, சித்தார்த் உயிரோடு இருப்பதை அவன் அறிந்து கொள்கிறான். அவனைச் சந்தித்து, போலீஸின் பிடியிலிருந்து, தனக்குத் தெரிந்த அரசியல் பிரமுகர்கள் மூலம் அவனை விடுவித்துவிடலாம் என்று எண்ணி, அவன் இருக்கும் இடத்துக்குச் செல்கிறான். செல்லும் வழியில், அவனது கார் விபத்துக்குள்ளாகி, சந்தர்ப்பவசமாக, சித்தார்த் உள்ள அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான்.

அங்கு வரும் சித்தார்த்தின் தோழர்கள் சித்தார்த்தை மட்டும் அங்கிருந்து கொண்டுசென்றுவிடுகின்றனர். மறுநாள் அங்கு வரும் போலீஸ், சித்தார்த்தைத் தப்புவிக்க விக்ரம் தான் சதி செய்தான் என்று எண்ணிக்கொண்டு, அவனைக் கொன்றுவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர். இது தெரிந்த விக்ரம், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பிக்க முயல்கிறான். அப்போது அவனைப் பிடித்துவிடும் போலீஸ் கான்ஸ்டபிள் (ஷௌரப் ஷுக்லா – ஹே ராம் மற்றும் ஸ்லம்டாக் – ஸ்லம்டாகிலும் போலீஸ் கான்ஸ்டபிள் தான்), விக்ரமை அடி வெளுத்து விடுகிறார். அவனது தலையிலேயே மாறி மாறி அடிக்கிறார்.

சிறிது நேரத்திலேயே அங்கு வரும் விக்ரமின் நண்பரான ஒரு போலீஸ் அதிகாரி, கான்ஸ்டபிளிடமிருந்து விக்ரமை விடுவிக்கிறார். தலையில் கடுமையாக அடிபட்ட விக்ரம், மனநிலை பாதிக்கப்பட்டு விடுகிறான்.

தப்பித்துச் சென்ற சித்தார்த், அவனது முயற்சிகளுக்கு மக்களது ஆதரவு இல்லாததைக் கண்டு, மனம் மாறி, லண்டனுக்கு மருத்துவம் படிக்கச் செல்வதாக முடிவெடுக்கிறான். அவனது அப்பட்டமான இந்த பச்சோந்தித்தனமான முடிவு, கீதாவைப் பாதிப்பதில்லை. கீதாவுக்குக் கடிதம் எழுதிவிட்டு, சித்தார்த் லண்டன் சென்றுவிடுகிறான்.

கீதா, மறுபடி அந்த கிராமத்தில் ஆசிரியை வேலையைத் தொடர்கிறாள். ஓர்நாள் அவள், யாரையோ தேடிக்கொண்டே, ஆற்றங்கரைக்கு வருகிறாள். அங்கு, விக்ரம், ஒரு பாறையில் சாய்ந்து கொண்டு, நிலைகுத்திய விழிகளோடு அமர்ந்துகொண்டிருக்கிறான். இவளைப் பார்த்தவுடன், புன்னகைக்கிறான். ஆனால், அப்புன்னகையில் உயிரில்லை. அவனது அருகில் அமர்ந்துகொண்டு ஆதுரத்துடன் அவனைப் பார்க்கிறாள் கீதா. விக்ரம், மண்தரையையே பார்த்துக்கொண்டிருக்கிறான். தானும் அவ்விடத்தை நோக்கும் கீதாவுக்கு, மண்ணில் அவன் எழுதிய வரிகள் தென்படுகின்றன.

“நான் உன்னைக் காதலிக்கிறேன் கீதா . . . . ”

இந்த வரிகளைப் பார்த்துக் கண்கலங்கும் கீதாவை நோக்கி விக்ரம் மெலிதாகப் புன்னகைக்க முயல்கிறான். அஸ்தமன சூரியனைக் காட்டும் ஒரு அற்புதமான காட்சியுடன், மிகவும் இனிமையான “பாவ்ரா மன் ( வசியப்படும் மனது)” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, படம் முடிகிறது.

இந்த பாவ்ரா மன் பாடலை எழுதியவர் ஸ்வானந்த் கிர்கிரே. பா படத்தின் பாடல்கள் இவரது கைவண்ணம் தான். ஒரு நல்ல கவிஞர். மிகவும் அழகான இந்தப் பாடலை நீங்கள் மேலே கொடுத்துள்ள சுட்டியில் கேட்கலாம். படத்தைப் பார்க்கும் நண்பர்கள், கடைசியில் வரும் இப்பாடலை முடியும் வரை கேட்டுப்பாருங்கள்.

இப்படம் வெளிவந்த ஆண்டு 2005. பல திரைப்பட விழாக்களுக்கு (வெளிநாடுகளுக்கு) இப்படம் அனுப்பப்பட்டது. பல திரைப்பட விமரிசகர்களால் சிலாகிக்கப்பட்டது. இப்படம் எடுக்கப்பட்ட விதம் அப்படி. நான் இப்படத்தின் கதையைத் தான் இங்கு சொல்லியிருக்கிறேனேயன்றி , இதில் வரும் ரத்தமும் சதையுமான உண்மைக் கதாபாத்திரங்கள் பற்றிச் சொல்லவில்லை. அவற்றை நீங்களே பார்த்தால் தான் நன்றாக இருக்கும். ஒரே ஒரு உதாரணத்துக்கு: சஞ்சய் காந்தி.

இந்தப் படத்தின் பல கதாபாத்திரங்களின் வாயிலாக, எமர்ஜென்ஸியின் போது மக்கள் அரசியல் தலைவர்களைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. சஞ்சய் காந்தி, அக்காலத்தில் சகலருக்கும் குழந்தைக் கட்டுப்பாடு செய்ததையும் காட்டமாக விமரிசிக்கும் கதாபாத்திரங்கள் இப்படத்தில் உண்டு.

நமது உள்ளத்தைத் திருகும் விஷயம் இப்படத்தில் என்னவென்றால், சித்தார்த்தை மலை போல் நம்பும் கீதா, அவன் எப்படியும் தன்னுடைய வாழ்வை ஒளிமயமாக்குவான் என்று எண்ணி, அவன் போகுமிடத்துக்கெல்லாம் தானும் போவதே. அவளுடனேயே இருக்கும் விக்ரம், அவளை உருகி உருகிக் காதலித்தும், அக்காதலை உதாசீனம் செய்து சித்தார்த்தின் பின்னே ஓடுகிறாள் கீதா. ஆனால், சித்தார்த், அவளை விட்டுவிட்டு, தனது லட்சியங்களையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஏதும் அறியாதவன் போல மருத்துவம் படிக்கச் செல்கிறான். அப்பொழுதுதான் விக்ரமின் காதலைப் பற்றி கீதா நினைத்துப் பார்க்கிறாள்.

இப்படத்தில் பல வெளிநாட்டு டெக்னீஷியன்கள் பணியாற்றியுள்ளனர். மிக நேர்த்தியாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் தொய்வில்லாமல், நம்மை எமர்ஜென்ஸியின் காலகட்டத்துக்கே இட்டுச் செல்கிறது.

கொசுறு:- இப்படத்தை ஐ எம் டி பியில் நோண்டினீர்கள் என்றால், என்றோ ஒரு காலத்தில் (நான்கு வருடங்கள் முன்பு), இப்படம் பார்த்த புதிதில் நான் எனது இயற்பெயரில் எழுதிய விமரிசனத்தைக் காணலாம் ? .

Hazaron khwahishen Aisi – படத்தின் டிரைலர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே, இப்படத்தின் ஒரு முக்கியக் காட்சியை இங்கே காணலாம்..

  Comments

14 Comments

  1. எமர்ஜென்ஸி காலத்தைப் பத்தி படிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். இந்தப் படம் எந்தளவுக்கு ‘ஆதண்டிக்’ கருந்தேள்?

    இல்லை.. வெறும் பேக்ட்ராப்ப வைச்சிருக்காங்களா?

    Reply
  2. நான் தற்போது எழுதி வரும் தொடர்கதை ஒரு உலகத்திரைப்படத்தின் தழுவல். முடிந்தால் கண்டுபிடியுங்கள்! http://eluthuvathukarthick.wordpress.com/

    Reply
  3. @ அண்ணாமலையான் – தெரியும்… 🙂 ஆனா சொல்ல மாட்டனே . . . ஹீ ஹீ . . . சொன்னா நீங்க என்ன பதில் சொல்லுவீங்கன்னு எனக்குத் தெரியும் . . 🙂

    @ பாலா – இந்தப்படத்துல காட்டபடுற சரித்திர சம்பவங்கள் ஆதண்டிக் தான் . . ஆனா, இதுல எமர்ஜென்சி ஒரு பேக்ட்ராப் தான் . .இருந்தாலும், இத நீங்க பார்க்கலாம் . .நெறைய விஷயம் பேசப்படும். .

    @ இமயவரம்பன் – நீங்க எழுதும் தொடர், ‘Goodbye Lenin’ படம்தாங்கறது அதுல ரெண்டு லைன் படிச்சவுடனே தெரிஞ்சிருச்சு . . 🙂 . . கொஞ்சமாவது மாத்தி எழுதுங்க பாஸு . . 🙂

    Reply
  4. // ஆனால் (வழக்கம் போல) இந்தியாவில் படம் படு ஃப்ளாப்.//

    கசப்பான உண்மை…

    Reply
  5. அது அப்புடித்தாங்க ஆகும் நம்ம ஊர்ல. . நல்ல படம் எதுன்னு மக்கள் சில சமயம் புரிஞ்சிக்கறது இல்ல . . 🙁

    Reply
  6. மனசு நிறைவா இருக்கு……இந்தில நிறைய நல்ல இயக்குனர்கள்,படங்கள் உள.எழுதுங்கண்ணே…லிஸ்ட் மெயில் அனுப்புறேன்.போட்டோ பாத்துட்டு ’தபு’ன்னு நெனைச்சேன்…:)அநேகமாக என்னோட அடுத்தப் பதிவு பாத்துட்டு லெஃப்ட்ல சேர்ப்பீர்கள்னு நேத்து ஒரு கனவு கண்டேன்…பாப்போம்..

    Reply
  7. அருமை நண்பா
    ஹிந்தி படம் மட்டும் யாராவது பார்த்து நன்றாய் இருக்கிறது என்று சொன்னால் தான் பார்ப்பேன்.
    சொல்லிட்டிங்கல்ல
    தரவிறக்கி பார்த்துடுறேன்.உங்க சேவை வாழ்க
    ஓட்டுக்கள் போட்டாச்சி

    Reply
  8. @ மயில்ராவணன் – அட ஏங்க. . லெப்ட்ல செர்க்காததுக்குக் காரணம், மறதிதான் . . 🙂 போடுங்க சேர்த்துருவோம் . . லிஸ்ட சீக்கிரம் அனுப்புங்க . . நானும் நல்ல ஹிந்திப்படங்கள தேடித் தேடிப் பாக்குரவந்தேன் . .:-)

    @ கார்த்திகேயன் – நண்பா . .அப்பப்ப நல்ல ஹிந்திப்படங்கள பத்தி ஏதோ எனக்குத் தெரிஞ்சதப் பத்தி இனிமே எழுதுறேன். . . நன்றி நண்பா . .

    Reply
  9. நண்பரே,

    அழகான நடையில் எழுதியிருக்கிறீர்கள். ஒரு நல்ல திரைப்படம் குறித்து அறிந்து கொண்டது மகிழ்ச்சியே.

    Reply
  10. good movie, but a sad one. Chitrangada is too good…reminded Smita Patil in many scenes.

    thanks for sharing your views & introducing good movies in other languages…doing a great job in this Tamil blog. keep writing.

    Reply
  11. @ காதலரே – நன்றி. இப்படம் உங்களுக்குக் கட்டாயம் பிடிக்கும் என்று கருதுகிறேன். . .

    @ கமல் – உங்க சித்திரங்களுக்கு நான் ஒரு ரசிகன் . . பட்டைய கிளப்பிட்டு இருக்கீங்க . . சாருவோட சைட்ல உங்க சித்திரம் வந்ததுலேருந்து உங்க சைட்ட ரெகுலரா நானு பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் தல. . சூப்பர் !

    இந்தப்படத்துல chitrangdha Singh அப்படியே ஸ்மிதா பாடில் மாதிரி தான் இருப்பாங்க . . 🙂 நல்லா கவனிச்சிருக்கிங்க . .உங்க வாழ்த்துகளுக்கு ஒரு ரசிகனின் நன்றி . .

    Reply
  12. நண்பா
    பின்னூட்டம் போட்டு மாமாங்கமாச்சி
    ஆனா இப்போ தான் பார்த்தேன்,தெல்மாலூயிஸையே 2மாசமுன்புதான் பார்த்தேன்,பலசமயம் இப்படிஆகிறது,நல்ல பொக்கிஷத்தை இவ்வளவு தாமதமாய் பார்த்ததில் வருத்தம்,

    Reply
  13. நான் தரவிறக்கி வச்சிருந்தேன்,ஆனால் சொன்னப்டி பார்க்க சந்தர்ப்பம்
    நேற்று தான் வாய்ச்சது,ஆனால் நீங்க எழுதுனதை மறந்துட்டேன்,தவிற இதன் பெயர் வாய்க்குள் நுழையவேயில்ல,கசம்,லகான்,தில்,தேசாப்,ஸ்வாஸ்
    இதுபோல் இருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்குமா?
    :))

    மீண்டும் படிக்க சுகம் , காட்சிகள் கண்ணில் விருகிறது,படத்தில் வந்த பழைய 60களின் உடைகள்,மூட் லைட்டிங் டாட்ஜ்,மெர்க்,செவ்வி, ஜீப் அருமை,ஹீரோயின் சிங்,டிடி ராமயண சீதைப்போலவே அழகு
    அடடா நண்பா என்ன ஒரு க்ளைமாக்ஸ்
    இது ட்ரூஸ்டோரியா?
    கஸல்கள் இனி கேட்க ஆவலெழுகிறது
    சஞ்சய்காந்தி நல்லவனா கெட்டவனா?
    அடேங்கப்பா,நண்பன் எதிரின்னு பாரபட்சம் பாக்காமே தூக்கி போட்டு மிதிச்சு துவச்சி,பலரை வாசக்டமி பண்ணிருக்கான்?ஷனி அகுஜா வேலைக்காரை மேட்டர்ல மாட்டாட்டி செம பேர் இருந்திருக்கும்.:(

    Reply

Join the conversation