Headhunters (2011) – Norway

by Karundhel Rajesh May 26, 2013   world cinema

ரூல் நம்பர் 1 – நுழையப்போகும் இடத்தைப் பற்றிய அத்தனை விபரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அங்கு செல்லக்கூடாது.

ரூல் நம்பர் 2 – பத்து நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்கக்கூடாது.

ரூல் நம்பர் 3 – ஒவ்வொரு நிமிடத்திலும், அங்கு யாரேனும் திடீரென வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

ரூல் நம்பர் 4 – எந்த DNA அடையாளத்தையும் அங்கே விட்டுவிடக்கூடாது.

ரூல் நம்பர் 5 – மிக விலையுயர்ந்த போலியை தயாரிப்பதில் அதிக நேரம் செலவிடவேண்டாம். காரணம், மிக அசிங்கமான போலியைக் கண்டுபிடிக்கக்கூட பல நாட்கள் ஆகும்.

ரூல் நம்பர் 6 – எத்தனை திறமையான திருடனாக இருந்தாலும் எப்படியும் இரண்டு விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு அதிகம். ஒன்று – வாழ்க்கை முழுதும் நன்றாக வாழக்கூடிய அளவு விலைபோகும் ஓவியம் ஒன்று உங்களுக்குக் கிடைக்கக்கூடும். அல்லது, நீங்கள் பிடிபடலாம்.[divider]

க்ரைம் த்ரில்லர்களை எழுதுவதில் நார்வே நாட்டின் சிறந்த பல்ப் எழுத்தாளர்களில் ஒருவர் யூ நெஸ்போ (Jo Nesbø). அவரது சிறந்த பல்ப் நாவல்களில் ஒன்று – Hodejegerne. இந்த நாவலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமே Headhunters. க்ரைம் த்ரில்லர்கள், ஆங்கிலத்தை விட மற்ற மொழிகளில் பல சமயங்களில் நன்றாக இருப்பதுண்டு. அப்படி ஒரு படம் இது. இந்தப்படம் ஆங்கிலத்தில் வந்திருந்தால், படத்தின் graphic violence பெருமளவு குறைக்கப்பட்டிருக்கும். ஆனாலும், ஆங்கிலத்தில் இந்தப்படம் வெளிவரப்போவதாகவே தெரிகிறது. எப்படி எடுக்கப்படப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

‘Headhunter’ என்ற பதம் வெளிநாடுகளில் பிரபலம். எந்தத் துறையாக இருந்தாலும், அதில் கில்லாடியாக விளங்குபவர்கள் இந்த headhunters. இவர்களை பல நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தி, தங்களுக்குத் தேவையான ஆட்களை இவர்களின்மூலமாக கண்டுபிடித்து, வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள். Consultancy என்று நம்மூரில் சொல்லப்படுவதன் இம்ப்ரவைஸ் செய்யப்பட்ட பதம் இது. கன்ஸல்டன்ஸிகளில் இருப்பவர்கள், தத்தமது துறையில் சிறந்தவர்கள் அல்ல. அவர்களின் வேலை, இணையத்தில் இருக்கும் பல்வேறு விண்ணப்பங்களை அலசி, தேவையான தகுதி இருப்பவர்களின் விண்ண்ணப்பத்தை வேறொரு நிறுவனத்துக்கு அனுப்புவது. ஆனால், headhunterகள், நிறுவனங்களாலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டு, அவர்களது துறைசார்ந்த அறிவின் காரணமாக அந்தந்த நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நபர்களைத் தேர்வு செய்வார்கள்.

அப்படி ஒரு headhunter – ரோஜர் ப்ரௌன். இருப்பவர்களில் தலைசிறந்தவன்.

அவனது மனைவி, ஒரு ஓவியர். பெயர் டயானா. மனைவியின் காஸ்ட்லி வாழ்க்கையை ரோஜரின் வேலையால் ஈடுசெய்யமுடிவதில்லை. ஆகவே, அபாயகரமான தொழில் ஒன்றில் இறங்குகிறான்.

தேர்வுசெய்யப்படும் நபர்களிடம் சாதுர்யமாகப் பேசி, அவர்களிடம் ஏதாவது பழமைவாய்ந்த அரிய ஓவியங்கள் இருக்கின்றனவா என்று அறிந்துகொண்டு, தேவைப்படும் நிறுவனங்களிடம் அவர்களின் நேர்முகத்தேர்வை ஏற்பாடு செய்துவிட்டு, அந்த நேரத்தில் அவர்களின் வீட்டுக்கு சென்று அந்த ஓவியங்களை திருடுவது ரோஜரின் வேலை. அந்த ஓவியங்கள் அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விலைபோகும். இதில் ரோஜருடன் துணையாக இருப்பது, ஓவெ. நார்வே போன்ற ஸ்கேண்டிநேவியன் நாடுகளில் (வட ஐரோப்பிய நாடுகள். டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகியவை ஸ்கேண்டிநேவியன் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன), ஒவ்வொரு வீட்டிலும் செக்யூரிடி சிஸ்டம் அவசியம் இருக்கும். திருடர்கள் அவ்வளவு சுலபத்தில் உள்ளே நுழைய இயலாது. எனவே, ஓவெயின் வேலை, இந்த செக்யூரிடி ஸிஸ்டத்தை சில நிமிடங்களுக்கு செயலிழக்க வைப்பது.

தனது தொழிலை செவ்வனே செய்துகொண்டு அழகிய மனைவியுடன் சந்தோஷமாக இருக்கும் ரோஜரின் வாழ்க்கையில் ஒரு சோதனை வருகிறது. அந்த சோதனையில் தன்னையறியாமல் சிக்கிக்கொள்ளும் ரோஜரின் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. The Shawshank Redemption படத்தில் வரும் ஆண்டி டுஃப்ரீனைப் போல், மலம் நிரம்பிய ஒரு குட்டையில் முழுக்கு போடும் அளவு அவனைத் துரத்துகிறது விதி (ஆண்டியாவது பரவாயில்லை. கழுத்தளவு மலம் நிரம்பிய ஒரு குழாயில் நீந்தி வந்து சிறையில் இருந்து தப்பித்தான். ஆனால் ரோஜரோ, மலக்குட்டையில் முற்றிலுமாக முழுகும் சோதனைக்கு ஆளாகிறான்).

அது என்ன சோதனை? அதிலிருந்து ரோஜரால் தப்பிக்க முடிந்ததா? படத்தைப் பார்த்தால் தெரியும்.

படத்தில் மற்றொரு பிரதான கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது, Game of Thrones தொடரில் ஜாய்மி லானிஸ்டராக நடிக்கும் நிகலாய் கோஸ்டர் வெல்தாவ் (Nikolaj Coster-Waldau).

படம் மிக மிக மெதுவாக ஆரம்பிக்கிறது. பொறுமையின் எல்லைக்கே நாம் செல்லும்போது சூடுபிடித்து, இறுதிவரை அதே வேகத்தில் செல்கிறது. படத்தில் பல திருப்பங்கள் உள்ளன. அவற்றில் சில, நாம் எதிர்பார்ப்பது. பல, நாம் எதிர்பாராதது. திரைக்கதை நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. முதல் பாதியை இரண்டாம் பாதியுடன் இணைக்கும் பல திருப்பங்கள் உள்ளன. இப்படிப்பட்ட திருப்பங்களின் மூலம் பல முடிச்சுக்கள் அவிழவது போன்று திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இதுபோன்ற திரைக்கதையே த்ரில்லர் படங்களில் தேவையானது. அதேபோல் படத்தில் graphic violence அதிகம். எனவே, ரத்தம் பிடிக்காத நபர்கள் படத்தைப் பார்க்க வேண்டாம்.

பி.கு – படத்தில் ரோஜரின் காராக வரும் கறுப்பு நிற LS460 லெக்ஸஸ் கார், அட்டகாசமாக இருந்தது. பல படங்களில் வரும் கார்களை நான் கவனித்தாலும், இந்தக் கார்  தனிப்பட்ட முறையில் என்னைக் கவர்ந்தது. இதோ இந்த LS460 மாடல் லெக்ஸஸைப் பற்றிய ட்ரெய்லர். காரின் விலை – 38 லட்சம் ரூபாய். இந்த ட்ரெய்லரைத் தொடர்வது திரைப்படத்தின் ட்ரெய்லர்.

 

  Comments

4 Comments

  1. thala edhumari padathaiyellam neenga yenga pudikuringa? super

    Reply
  2. Special interest leads to the things that you wanted, you search you’ll get it… its all in the nature. (Same here) 🙂

    Reply
  3. Bala

    Thank you.

    Reply

Join the conversation