Highway (2014) – Hindi

by Karundhel Rajesh February 26, 2014   Hindi Reviews

பொதுவாக Road movies என்றால் ஜாலியாக அமர்ந்து பார்க்கலாம்; நாம் சென்றிருக்கும்/சென்றிராத இடங்களையெல்லாம் நன்றாகக் காட்டுவார்கள்; அதில் ஒரு நாஸ்டால்ஜியா கிளம்பும் – இப்படியெல்லாம் ஒரு பொதுவான கருத்து உண்டு.

தனது திருமணத்துக்கு முந்தைய இரவு, வீட்டிலேயே அடைந்து கிடப்பது பிடிக்காத பெண், தனது வருங்காலக் கணவனுடன் வெளியே செல்கிறாள். அப்போது திடீரென எதிர்பாராத பிரச்னையால் கடத்தப்படுகிறாள். இதன்பின்தான் அந்தப் பெண்ணின் தந்தைக்கு இருக்கும் செல்வாக்கு கடத்தியவர்களுக்குத் தெரியவருகிறது. அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு (தூக்கிக்கொண்டு) பல இடங்களுக்குச் செல்கிறார்கள். இதில் முக்கியமான வில்லனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் காதல் முளைக்கிறது. இறுதியில் இருவரின் காதலும் பலவந்தமாகத் துண்டிக்கப்படுகிறது. இதுதான் கதை.

படத்தின் ஆரம்பம் நன்றாக இருந்தாலும், ஆலியா பட்டின் அரைகுறையான நடிப்பைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. தன்னைக் கடத்தி வைத்துக்கொண்டிருப்பவர்களிடம் போய் வாய்க்கு வந்தபடி உளற முடிந்த ஹீரோயின். நிஜவாழ்க்கையாக இருந்தால் என்ன நடக்கும் என்பதைத்தான் தினமும் செய்திகளில் படிக்கிறோமே? படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை பல இடங்களுக்கு இந்தப் படம் நகர்கிறது. அவை எல்லாமே அருமையான லொகேஷன்கள். ஆனால் கதை திராபையாக இருப்பதால் அந்த இடங்களையெல்லாம் பார்க்கும்போதே எரிச்சலாக இருக்கிறது. நமக்குப் பிடித்த இடங்களைப் பார்க்கையில் எரிச்சல் வந்தால் எப்படி இருக்கும்?

இந்தக் கதையை அருமையாக எடுத்திருக்கலாம். குறிப்பாக ரஹ்மானின் இசை துணையாக இருக்கும்போது. ஸ்வதேஸின் Yun hi chala chal பாடல் நினைவிருக்கிறதல்லவா? அந்தப் பாடலின் அனுபவம்கூட இந்த முழுப்படத்திலும் இல்லை என்னும்போது இந்தப் படம் எப்படி வேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது என்பது புரிந்துவிடும்.

ரந்தீப் ஹூடாவை எனக்குப் பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவருக்கு மொத்தமே இரண்டு பக்க டயலாக்தான். அதில் தப்பே இல்லை. ஆனால் அந்த இரண்டு பக்கங்களில், ஒரு பக்கம் முழுக்க ‘Chup’, ‘Bandh kar’, ‘Andhar Jaa’ போன்ற வசனங்களே இருந்தால்?

ஆலியா பட். இந்தப் படத்தின் அரைவேக்காடு. கால் வேக்காடு என்று கூட சொல்லலாம். ஒரு பெண்ணை முதல்முறை பார்க்கும்போதே உங்களுக்கு எரிச்சல் கிளம்பினால், இரண்டு மணி நேரங்கள் அந்தப் பெண்ணை எப்படிப் பார்த்துக்கொண்டே இருப்பது? அதிலும் ஒவ்வொரு நிமிடமும் அந்தப் பெண் பேசுவதைப் பார்க்கும்போதெல்லாம் கொலைவெறி கிளம்பினால்? அதுதான் ஆலியா பட். துளிக்கூட நடிக்கவே தெரியாமல், திரையில் எல்லா காட்சிகளிலும் வரும் நபர். குறிப்பாக க்ளைமேக்ஸ் ஒரு மிகப்பெரிய let down.

இந்தப் படத்தை ஏதோ பெரிய காவியம் ரேஞ்சுக்கு மீடியாக்கள் (வட இந்தியா) ப்ரமோட் செய்துகொண்டிருக்கின்றன. பார்த்து விடாதீர்கள். உயிர் போய்விடும். படத்தில் வரும் லொகேஷன்களைப் பார்க்கவேண்டும் என்றால் யூட்யூப் இருக்கவே இருக்கிறது.

ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரோம் பற்றி எத்தனையோ படங்களில் காண்பிக்கப்பட்ட காட்சிகள்தான் இதிலும் வருகின்றன. துளிக்கூட க்ரியேட்டிவிடி இல்லாத காட்சிகள். இந்தப் படத்தின் கதையை வருடக்கணக்கில் யோசித்து எழுதியதாக இயக்குநர் இம்தியாஸ் அலி சொல்லியிருக்கிறார். அவரது திறமை மங்கி மக்கிப்போனதை உணர்த்தும் கருத்து இது. அவரது திறமை மேல் எனக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லை. அவரது படங்களில் இதுவரை எதுவுமே எனக்குப் பிடிக்காது. இருந்தாலும், இது ஒரு road movie என்பதால் மட்டுமே படத்தைப் பார்க்கச் சென்றேன். படத்துக்கு எப்படியெல்லாம் விளம்பரம் செய்தார்கள் என்பதை கவனித்தால், அதுவும் ஒரு ஏமாற்றுவேலை என்பது புரிகிறது. குறிப்பாக மேலே இருக்கும் போஸ்டர் என் கவனத்தைக் கவர்ந்தது. ஆனால் படத்தில் இந்தக் காட்சி ஒரே நொடிதான் வருகிறது. அந்தக் காட்சி, நாம் நினைப்பது போன்ற காட்சியும் அல்ல.

இந்தப் படத்தில் பரிதாபகரமான ஜீவன் ஒன்று கஷ்டப்பட்டு உழைத்திருப்பது தெரிகிறது. அந்த ஜீவனின் பெயர் ரஹ்மான். ரஹ்மானின் பாடல்களும் இசையும் மட்டுமேதான் இந்தப் படத்தைக் கொஞ்சமாவது உயிரோடு வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அது இல்லையெனில் படம் அவசியம் பாக்ஸ் ஆஃபீஸ் ஃபெய்லியர்தான். அவருடைய இசையால் மட்டுமே இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆகியிருக்கிறது.

இதோ ஒரு சில நல்ல பாடல்கள்.

பி.கு – இந்தப் படத்தைப் பற்றி எழுதவே கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் நண்பர்கள் தெரியாமல் இந்தப் படத்துக்குப் போய்விடக்கூடிய ஆபத்து இருப்பதால் எழுதிவிட்டேன்.

  Comments

4 Comments

  1. Hariprasad

    Nandri Hai!

    Reply
  2. nalla vela sonneenga !!! ilati nanum siki irupen:(

    Reply

Join the conversation