Sports films and biopics of Hollywood

by Karundhel Rajesh July 4, 2020   Cinema articles

அந்திமழை ஜூன் 2020 இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை.

இந்தியாவுக்கு வெளியே, விளையாட்டுகள் மற்றும் அவற்றை மையமாக வைத்த நிஜவாழ்க்கைத் திரைப்படங்கள் மிகவும் பிரபலம். நிஜத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், அவைகளின் முக்கியத்துவங்களைப் பற்றியும், அவை நிகழ்த்தும் மனமாற்றங்களைப் பற்றியுமான திரைவகை இது. இவற்றிலேயே இன்னொரு பிரிவாக, கற்பனையாக விளையாட்டுகளில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களும் பிரபலம். Sports biopics and sports films. இந்த இரண்டு வகைகளும் ஏன் பிரபலம் என்றால், இவைகளில் நடக்கும் சம்பவங்கள் நமது வாழ்க்கைக்கே உத்வேகம் அளிப்பவை. இவற்றில் வரும் கதைமாந்தர்கள், விழுந்து எழும்போது நமக்கே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. கூடவே, மாபெரும் கூட்டம் ஒன்றை வசியப்படுத்த, ஒரு விளையாட்டு போதும். குத்துச்சண்டையோ, பேஸ்பாலோ, பேஸ்கெட்பாலோ, ஃபுட்பாலோ, கிரிக்கெட்டோ – இப்படி எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் நிகழும் பிரச்னைகளையும் அவற்றின்மூலம் கதைமாந்தர்கள் பாதிக்கப்பட்டு உத்வேகம் பெறுவதையும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் ஒரு தியேட்டரில் பார்க்கும்போது அவசியம் ஒரு மேஜிக் நிகழ்கிறது. ‘லகான்’ படம் இந்தியாவில் வந்தபோது அதில் இடம்பெற்ற கிரிக்கெட் பந்தயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். அதேபோல் ‘சக்தே இந்தியா’ படத்தில் வரும் ஹாக்கிப் பந்தயங்கள். நமக்கே, படத்தில் வருபவர்கள் வெல்லவேண்டும் என்ற வெறி கிளம்பியதா இல்லையா? இதன்மூலம் கிளம்பும் உற்சாகம்தான் ஒரு ஸ்போர்ட்ஸ் படம் எடுக்கப்படுவதற்கான காரணம். 

இந்த வகையில் அனைவராலும் மறக்கப்படமுடியாத படங்கள் பல உள்ளன. நிஜவாழ்க்கையை மையப்படுத்தி எடுத்த படங்களும் சரி, கற்பனையாக எடுக்கப்பட்ட விளையாட்டுப் படங்களும் சரி. அவற்றில் முக்கியமானவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மார்ட்டின் ஸ்கார்ஸேஸி மற்றும் ராபர்ட் டி நீரோவின் ரசிகர்களால் ஜாக் லமோட்டாவை மறக்கவே முடியாது. நிஜவாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு மார்ட்டின் ஸ்கார்ஸேஸி பிரசித்தமானவர். கிட்டத்தட்ட அவரது அத்தனை படங்களுமே புத்தகங்களை வைத்து, நிஜவாழ்க்கையில் வாழ்ந்த மாந்தர்களை வைத்து, கொஞ்சம் மாற்றியும், சில சமயம் அப்படியேயும் எடுக்கப்பட்டவை. அதேபோல் ஜாக் லமோட்டா என்ற ஒரு நிஜக் குத்துச்சண்டை வீரர், தன்னைப்பற்றி எழுதிய சுயசரிதையான ‘Raging Bull: My Story’ என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே ‘ரேஜிங் புல்’ திரைப்படம். இந்தப் படத்தில் என்ன விசேடம் என்றால், ராபர்ட் டி நீரோ, மெதட் ஆக்டிங் என்ற திரைப்பட நடிப்பு வகைக்குப் பெயர்போனவர். நிஜமான ஜாக் லமோட்டாவை சந்தித்துப் பேசி, பழகியே இந்தக் கதாபாத்திரத்துக்குத் தயாரானார். ஜாக் லமோட்டா உண்மையில் ஒரு வெறிகொண்ட ஆசாமி. காதல், நட்பு, பொறாமை என்று எதுவாக இருந்தாலும் அதில் உச்சம் வரை போனவர். ஒருமுறை ஒரு ஹோட்டலில் உணவு சரியாக இல்லை என்பதற்காக ஒரு மிருகம் போலக் கத்திக்கொண்டு ஹோட்டலின் உள்ளே அங்கும் இங்கும் கோபத்துடன் அலைந்திருக்கிறார் லமோட்டா.  இளம்வயதில் ஒரு கிரிமினலாக இருந்து, பின்னர் சிறையில் திருந்தி, அதன்பின்னர் குத்துச்சண்டை கற்றுக்கொண்டு, பின்னர் வெளியே அக்காலத்தில் இருந்த மாஃபியாவுடன் பழகி, அவர்களுடன் நட்பாகவும், சில சமயங்களில் பிரச்னை செய்தும் (குறிப்பாக டெட்ராய்ட் நகரின் மாஃபியா) 95 வருடங்கள் வாழ்ந்து, 2017ல் மறைந்தவர் லமோட்டா. இவரை அப்படியே தத்ரூபமாக உள்வாங்கி நடித்த ராபர்ட் டி நீரோவுக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 1981க்கான பல விருதுகள் அப்படத்துக்குக் கிடைத்தன. இன்றும் மிகச்சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றாக இப்படம் கருதப்படுகிறது. 

இருப்பதிலேயே தலைசிறந்த பேஸ்பால் படம் என்று அனைவராலும் பாராட்டுப் பெற்றது ‘புல் டர்ஹாம்’ திரைப்படம். காரணம் இதன் திரைக்கதை. பேஸ்பால் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒரு நல்ல கதையோடு சேர்த்துப் படமாக்கப்பட்டதே காரணம். கூடவே, கெவின் காஸ்ட்னர் போன்ற ஒரு பிரம்மாண்டமான ஹீரோ வேறு. இயக்குநர் ரான் ஷெல்டன், தனது சொந்தக் கதையையே படமாக எடுத்தார். உண்மையில் இந்தப் படம், இருப்பதிலேயே நம்ர் 1 விளையாட்டுத் திரைப்படம் என்றும் பல பத்திரிக்கைகளாலும் பட்டியல் இடவும் பட்டிருக்கிறது. ரேஜிங் புல்லா புல் டர்ஹமா என்று பல விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் இது ரேஜிங் புல் போல ஒவ்வொரு காட்சியிலும் தீவிரமாக எடுக்கப்பட்ட படம் இல்லை. பலவிதமான உணர்ச்சிகளின் கலவை. பன்னிரண்டு வருடங்கள் மைனர் லீக் என்ற பேஸ்பாலில் விளையாடிய கில்லாடி ‘க்ராஷ்’ டேவிஸ் என்ற கதாபாத்திரத்தில் கெவின் காஸ்ட்னர். இவர், டர்ஹாம் புல்ஸ் என்ற அணியால் ஒப்பந்தம் செய்யப்படுகிறார். எதற்காக? எப்பி கால்வின் என்ற, புதிதாக அணியில் இடம்பெற்றுள்ள மிகத்திறமையான பேஸ்பால் வீரனைத் தயார்படுத்த. இருவருமே திறமைசாலிகள் என்பதால் இருவருக்கும் துவக்கத்திலேயே பிரச்னை ஏற்படுகிறது. இருவராலும் ஒத்துப்போக முடியவில்லை. என்றாலும், அந்த அணிக்காகத் தொடர்ந்து கால்வினைத் தயார்படுத்துகிறார் க்ராஷ். பேஸ்பாலில் ஒரு பேட்டி கொடுத்தால் கூட எப்படியெல்லாம் பேசவேண்டும் என்பது உட்பட எல்லாமே சொல்லிக்கொடுக்கிறார். அப்போது ஆன்னி என்ற பெண் அவர்களுக்கு அறிமுகமாகிறாள். அவள், ஒவ்வொரு வருடமும் டர்ஹாம் புல்ஸ் அணியோடு சம்மந்தப்பட்ட ஒவ்வொரு விளையாட்டு வீரனுடன் நெருங்கிப் பழகுவது வழக்கம். மெல்ல மெல்ல க்ராஷுடனும் கால்வினுடனும் அவள் பழகுகிறாள். ஒரு கட்டத்துக்கு மேல், கால்வினை விடவும் க்ராஷைத்தான் அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பது அவளுக்கே புரிகிறது. அந்த சமயத்தில்தான் கால்வின், சட்டென்று, மைனர் லீக்கில் இருந்து மேஜர் லீக் பேஸ்பால் அணி ஒன்றுடன் திடீரென்று சென்றுவிடுகிறான். அவர்கள் கொடுத்த பணமும் புகழுமே காரணம். இதன்பின் என்ன ஆகிறது என்பதே படம். அவசியம் அனைவருக்கும் பிடிக்கும். 1988 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட்களில் ஒன்று இந்தப் படம். 

2014ம் ஆண்டின் கான் பட விருதுகளுக்காகப் பரிந்துசை செய்யப்பட்ட ஒரு படம்தான் அடுத்து நாம் பார்க்கும் படம். கானில், இந்தப் படத்தின் இயக்குநருக்கே சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. இது தவிரவும் பல்வேறு விருதுகளை வென்ற படம் இது. Foxcatcher. மல்யுத்தத்தைப் பற்றிய அட்டகாசமான படம் இது. நிஜத்தில் வாழ்ந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களைப் பற்றியது.  டேவ் ஷூல்ட்ஸ் மற்றும் மார்க் ஷூல்ட்ஸ் ஆகிய இருவருமே சகோதரர்கள். 1984ல் லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கியவர்கள். இருவருக்குமே ஒவ்வொருவரின் மீதும் நல்ல மரியாதையும் பாசமும் உண்டு என்றாலும், அண்ணன் டேவின் மீது லேசான பொறாமை, தம்பி மார்க்குக்கு உண்டு. இவர்கள் இருவருக்குமே, அமெரிக்காவின் பில்லியனர் ஜான் டு பாண்ட் என்பவரிடமிருந்து, அவரது மல்யுத்த அகாடெமியில் சேர்ந்து பயிற்சி பெற அழைப்பு வருகிறது. மார்க் ஒப்புக்கொண்டு அவரது பண்ணைக்குச் செல்கிறான். ஆனால் டேவ், தனது குடும்பத்தைக் காரணம் காட்டி, வர மறுத்துவிடுகிறான். மார்க்கின் பயிற்சிகள் துவங்குகின்றன. அங்கே மார்க் சந்திக்கும் சம்பவங்கள், டு பான்ட்டின் வித்தியாசமான உணர்ச்சிகள், பின்னர் மார்க்குடன் சேரும் டேவ், இருவருக்கும் 1988 ஆண்டின் சியோல் ஒலிம்பிக்ஸில் நடக்கும் சம்பவஙகள் என்று உணர்ச்சிகரமாகச் செல்லும் படம் இது. முற்றிலும் நிஜமான சம்பவங்கள். படம் பார்த்ததும் மனதில் ஆழமான உணர்ச்சி ஒன்றினைக் கட்டாயம் எழுப்பும் வகையான படம். வழக்கமாக நகைச்சுவைப் படங்களிலேயே நடிக்கும் ஸ்டீவ் கேரலின் மிக வித்தியாசமான நடிப்பை இதில் பார்க்கலாம்.

அடுத்து நாம் பார்க்கப்போகும் படமும் இரண்டு சகோதரர்களைப் பற்றியதுதான். ஆனால் இது மல்யுத்தம் இல்லை. மாறாக, குத்துச்சண்டை. The Fighter – 2010ல் வெளியான படம். டேவிட் ஓ ரஸல் இயக்கியது. ஏழு ஆஸ்கர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த ஆண் மற்றும் பெண் துணை நடிகர்களுக்கான விருதுகளை வாங்கிய படம். மிக்கி வார்ட் என்ற நிஜவாழ்க்கை குத்துச்சண்டை வீரர் பற்றிய படம். படத்தில், மிக்கி வார்டைத் தயார்படுத்துவது அவரது மூத்த சகோதரர் டிக்கி எக்லுண்ட். டிக்கி, ஒரு காலத்தில் குத்துச்சண்டையில் இருந்துவிட்டு, பின்னர் கோகெய்னுக்கு அடிமையானவர். இன்னொரு அப்பா மூலம் மிக்கியின் அம்மாவுக்குப் பிறந்தவர். மிக்கிக்கு மொத்தம் ஏழு சகோதரிகள். மிக்கியின் அம்மா அலீஸ் வார்ட் தான் மிக்கியின் மேனேஜரும்கூட. ஒரு நாள், ஒரு பந்தயத்தில் நடக்கும் சிறிய குழப்பம் காரணமாக, மிக்கி தோற்றுவிடுகிறான் (மிக்கியுடன் சம எடையில் போட்டியிடும் ஆசாமி வராமல், 20 பவுண்டுகள் அதிக எடையுள்ள இன்னொரு ஆசாமி வருகிறான். அம்மாவும் மூத்த சகோதரனும் பணத்துக்காக ஒப்புக்கொள்கின்றனர்). இதன்பின்னர் வெறுத்துப்போய் குத்துச்சண்டையில் இருந்தே வெளியேறிவிடுகிறான் மிக்கி. ஒரு பாரில் பணிபுரியும் சார்லீன் என்ற பெண்னுடன் பழகத் துவங்குகிறான். இதன்பின்னர் மிக்கியின் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதே படம். மிக்கியாக மார்க் வால்பெர்க். இவர் நிஜவாழ்க்கையிலும் மிக்கியின் நண்பர். டிக்கி எக்லுண்டாக க்ரிஸ்டியன் பேல். அம்மாவாக மெலிஸா லியோ. இவர்களில் க்ரிஸ்டியன் பேலும் மெலிஸா லியோவும் சிறந்த துணைநடிகர்களுக்கான ஆஸ்கர்கள் வாங்கினர். இந்தப் படம், மிக்கியின் குடும்பத்தில் இருக்கும் ஆயிரம் சிக்கல்கள், மிக்கிக்கும் டிக்கிக்கும் இருக்கும் உறவு, அவனது சகோதரிகள், அம்மா, அவர்களது தந்தை ஆகியோரின் நோக்கஙக்ள் ஆகிய அத்தனையையும் விவரிக்கிறது. 

அடுத்து, ஒரு குதிரைக்கும் அதை ஓட்டும் ஜாக்கிக்குமான உணர்ச்சிபூர்வமான உறவு. இதுவும் ஏழு ஆஸ்கர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம். ஸ்பைடர்மேனாக நடித்துப் புகழ்பெற்ற டோபி மேகயர் நடித்தது. நாற்பதுகளில் மிகப் புகழ்பெற்று விளங்கிய சீபிஸ்கட் என்ற குதிரையைப் பற்றிய படம். 1938ல் அமெரிக்காவின் அந்த வருடத்துக்கான சிறந்த குதிரை விருதை வாங்கிய குதிரை இது. இன்றும், இறுதிப் படியில் இருந்து மேலே முன்னேறும் தன்னம்பிக்கைக்கான சிறந்த உதாரணங்களில் இந்தக் குதிரையின் கதையும் இடம்பெறும். சீபிஸ்கெட் என்ற குதிரையின் கதையோடு, அதன் ஜாக்கி, அதன் உரிமையாளர் மற்றும் அதன் பயிற்சியாளர் ஆகிய அனைவரின் கதையையும் சொல்லும் படம் இது. இந்தக் குதிரைக்கே ஒரு தனிப்பட்ட ஈகோவும் குணாதிசயமும் இருந்திருக்கிறது. அது இந்தப் படத்தில் ஆங்காங்கே அருமையாக இடம்பெறும். கூடவே, அதன் ஜாக்கி ஜான் போல்லார்டுக்கும் அந்தக் குதிரைக்குமான உறவு. இது எப்படி அமெரிககவின் தன்னம்பிக்கை சின்னமாக மாறியது என்பதே கதை. அனைவருக்கும் அவசியம் பிடிக்கக்கூடிய மென்மையான உணர்வுகள் நிறைந்த படம். 

இவை ஒரு சில சிறந்த படங்களே. இவைதவிரவும், இந்த நிஜவாழ்க்கை சம்மந்தப்பட்ட விளையாட்டுப் படங்களில் (Sports biopics), Cinderella man, Miracle, Ali, Remember the Titans, Chariots of Fire, Unbroken, The Damned United, Moneyball, Chariots of Fire, 42, Pride of the Yankees, Rush, Invictus உட்பட பல படங்கள் உண்டு. இங்கு கொடுத்திருப்பவை அவற்றில் முக்கியம் என்று நான் கருதிய படங்களே.

இப்போது, விளையாட்டை மையமாக வைத்த புனைவுகள் பக்கம் வரலாம். உண்மையில் இந்த வகையில்தான் ஆயிரம் படங்கள் இருக்கின்றன. ஒரு விளையாட்டு- அதில் எப்படி முக்கியக் கதாபாத்திரங்கள் பாதிக்கப்படுகிறார்கள் – அதிலிருந்து அவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்ற இந்தக் கருவில், நிஜ வாழ்க்கையை மையமாகக் கொண்ட படங்களின் அதே அளவுக்குப் புனைவுகளை மையமாகக் கொண்ட படங்களும் மக்களின் மனதைத் தொட்டு, அவர்களின் வாழ்க்கைக்கு ஈடு இணையில்லாத இன்ஸ்பிரேஷன்களாக இருந்திருக்கின்றன. இருந்தும் வருகின்றன. அவற்றில் சில படங்களைப் பார்க்கலாம்.

முதலாவதாக, சில்வஸ்டர் ஸ்டாலோனின் ‘ராக்கி’. இந்த சீரீஸீல் இதுவரை ஆறு படங்கள் வந்தாயிற்று. மேலும் ராக்கி ஒரு துணைக் கதாபாத்திரமாக இரண்டு படங்களில் நடித்தாயிற்று. ஸ்டாலோன் ஏற்று நடித்த ராக்கி கதாபாத்திரத்துக்குச் சிலை கூட உண்டு. உலகெங்கும் பலரின் வாழ்க்கை பாதித்த படம் இது. இந்தப் படத்தின் மூலம்தான் ஸ்டாலோன் சூப்பர்ஸ்டார் ஆனார். 1977ம் ஆஸ்கர்களில் பத்து விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, மூன்று விருதுகளைப் பெற்ற படம். இந்தப் படத்தின் திரைக்கதையை எப்படி ஸ்டாலோன் எழுதினார் என்பது இன்றும் பல வெற்றிகரமான தன்னம்பிக்கைப் புத்தகங்களில் இடம்பெறும் அத்தியாயம்.  முஹம்மது அலி மற்றும் சக் வெப்னர் ஆகியோரிடையே மார்ச் 24, 1975ல் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டி இன்றுவரை பிரபலம். ஏனெனில், இந்தப் போட்டியில் சக் வெப்னர் யாரென்றே பலருக்கும் தெரியாது. முஹம்மது அலியோ, உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர். எனவே, பந்தயம் சில நொடிகளில் முடிந்துவிடும் என்று அனைவரும் நினைக்கையில், மொத்தம் பதினைந்து ரவுண்டுகள் போட்டி நடைபெற்றது. முஹம்மது அலீன் இடி போன்ற குத்துக்களை வெப்னர் நீன்ட நேரம் தாங்கி நின்றார். இறுதியில் வெப்னர் தோற்று அலி ஜெயித்தார் என்றாலும்,பதினைந்து ரவுண்டுகள் இப்போட்டி செல்லும் என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவே இல்லை. இதைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும்போது சில்வஸ்டர் ஸ்டாலோன் மிக இளைஞர். தடதடதடவென்று ஒரு நோட்டுப்ப் புத்தகத்தையும் ஒரு பென்சிலையும் எடுத்துக்கொண்டு எழுதத் துவங்கிய ஸ்டாலோன், இதன் திரைக்கதையை மூன்றரை நாட்களில் முடித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். பதினைந்து ரவுண்டுகள் உலகின் நம்பர் 1 குத்துச்சண்டை வீரனுடன் போட்டிபோட்ட ஒருவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கற்பனையே ராக்கி. ஒரு மிகப்பெரிய குத்துச்சண்டைப் போட்டிக்கு, உலகின் ஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரரான அப்போலோ க்ரீடுடன் மோத எதேச்சையாக ராக்கி என்ற இளைஞன், பெரிய அனுபவங்கள் இல்லாத வீரன் தேர்வுசெய்யப்பட்டு, அவன் எப்படித் தன்னைத் தயார் செய்துகொள்கிறான் என்பதைச் சொன்ன படம் இது. அவனைச் சுற்றி இனிமேல் இடம்பெறப்போகும் ராக்கி சீரீஸின் அத்தனை முக்கியமான கதாபாத்திரங்களும் ஒவ்வொன்றாக இதில் அறிமுகமாயினர்.  உலகம் முழுக்க ராக்கி கதாபாத்திரம் அடைந்திருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல. எதுவுமே இல்லாமல் இருந்தாலும் வாழ்க்கையில் உச்சத்துக்கு வரமுடியும் என்பதற்கு ராக்கி ஒரு மிகப்பெரிய உதாரணம்.

அடுத்து, ஸ்டாலோன் பிரம்மாண்ட ஸ்டாராக இருந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த நடிகர் மிக்கி ரூர்க் நடித்த படம். The Wrestler. பிரபல இயக்குநர் டாரன் அரனாவ்ஸ்கி இயக்கியது. 2008ல் வெளியான படம். ராபின் ராம்ஸின்ஸ்கி என்ற மல்யுத்த வீரனைப் பற்றிய படம். WWF பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது பின்னர் WWE என்று மாறி, அதில் ஹிட்மேன் ப்ரெட் ஹார்ட், ஹல்க் ஹோகன், த ராக், ஸ்டோன்கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் முதலிய பலரும் இடம்பெற்றதும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட ஒருவன் தான் ராபின். அவனுடைய பட்டப்பெயர், The Ram என்பது. எண்பதுகளில் மிகப்பிரபலமாக இருந்த ராபின், அதன்பின் அனைவராலும் மறக்கப்பட்டு, ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்துகொண்டு, சிறுசிறு போட்டிகளில் பங்குபெறுகிறான்.  ஒருநாள், அவனுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. எண்பதுகளில் இவனோடு பல பந்தயங்களில் பொருதிய அயதொல்லா’ என்பவனுடன் திரும்பவும் ஒரு பந்தயம். இது, அவர்களின் கடைசிப் பந்தயத்தில் இருந்து 20 ஆண்டுகள் கழித்து நடக்கிறது என்பதால் பரவலாகப் பேசப்படுகிறது. இதில் ராபின் எப்படிப் பந்தயத்துக்குத் தயாராகிறான் (ஸ்டீராய்ட் ஊசிகளும் போட்டுக்கொள்கிறான்), அவனுக்கு நேரும் இதய அறுவை சிகிச்சை, அவனை விட்டுப் பிரிந்த மகள் ஸ்டெஃப்னி, அவனுக்குப் பிடித்த காஸிடி என்ற பெண் (இவள் ஒரு stripper), ராபினின் முரட்டுத்தனம் கலந்த விளிம்பு நிலை வாழ்க்கை ஆகிய எல்லாமே அட்டகாசமாக வெளிப்பட்டிருக்கும். படத்தில் முக்கியமான இறுதிப் பந்தயம் என்ன ஆனது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

எதற்குமே லாயக்கில்லாத ஒரு அணி என்று சபிக்கப்பட்டு, எல்லோராலும் எள்ளி நகையாடக்கூடிய ஒரு கொடூரமான பேஸ்பால் அணிக்கு, முன்னாள் வீரனும் இந்நாளைய குடிகாரனுமான ஒரு ஆசாமி கோச்சாக நியமிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? இதில், அந்த அணியே குட்டிப் பசங்கள் அடங்கியது, பசங்கள் எபதைவிட, பிசாசுகள் என்று சொல்லலாம். இதுதான் Bad News Bears. ஒரு வழக்கு. என்னவென்றால், இருப்பதிலேயே சிறந்த மாணவர்கள் பேஸ்பால் அணி ஒன்றில் இடம்பெறுபவர்கள் அனைவருமே திறமைசாலிகள். இவர்களில் குறைந்தபட்சத் திறன் அடங்கியோர் யாருமே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று ஒருவர் வழக்குப் போடுகிறார். அதனால், அந்த ஆண்டுக்கான போட்டிகளில், ஒரு அணி – இதில் இருக்கும் அனைவருமே திறமை துளிக்கூட இல்லாத பிசாசுகள் – இடம்பெறுகிறது. இந்த அணிக்குத்தான் குடித்துக்கொண்டே இருக்கும் முன்னாள் வீரர் மோரிஸ் கோச்சாகத் தேர்வுசெய்யப்படுகிறர். அதாவது, நீதிமன்றத்தின் கண்களுக்கு, திறமையே இல்லாதவர்களையும் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்பதற்காக. இந்த அணி ஒரு போட்டி கூட ஜெயிக்காது என்பதே அனைவரின் எண்ணமும். அதேபோல்தான் ஆரம்பத்திலும் நடக்கிறது. எனவே, மோரிஸ், தனக்கு உதவ, தனது முன்னாள் காதலி ஒருத்தியின் மகளை தன் கோச்சிங் அணிக்குத் தேர்வுசெய்கிறார். கூடவே உள்ளூர் வட்டிக்கடைக்காரர்,  ரவுடி கெல்லியையும் தேர்வு செய்கிறார். அந்த அணிக்கு Bears என்று பெயர். இவர்கள் எல்லாரும் சேர்ந்து, அந்த டண்டணக்கா அணியை எப்படி நல்ல அணியாக மாற்றுகிறார்கள் என்பதுதான் படம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. இதில் பலதரப்பட்ட பசங்கள் வருவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம். மோரிஸாக நடித்தவர், பிரம்மாதமான நடிகர் வால்டர் மத்தாவ். படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருக்கலாம். அதேசமயம் உணர்வுகளுக்கும் படத்தில் நல்ல மதிப்பும் இருக்கும்.

மறுபடியும் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியிடமே வருவோம். இது அவர் எடுத்த விளையாட்டை மையமாக வைத்த புனைவு. படத்தின் ஹீரோ டாம் க்ரூஸ். ஆனால் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் பால் ந்யூமேன். இவர் அறுபதுகளின் சூப்பர்ஸ்டார். அக்கால ஹாலிவுட் ரசிகர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். 1961ல் The Hustler என்ற திரைப்படம் வெளியானது. Pool என்று அழைக்கப்படும் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியும்தானே? பார்க்க பில்லியர்ட்ஸ் போல இருந்தாலும், இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அது இங்கே நமக்கு வேண்டாம். இந்த பூல் விளையாட்டில் பல வித்தைகளைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கும் ஹீரோவின் கதைதான் The Hustler. அதில் பால் ந்யூமேன் தான் ஹீரோ. ஸ்கார்ஸேஸி, 25 வருடங்கள் கழித்து 1986ல் எடுத்த படம், Color of Money. இது ஹஸ்லரின் இரம்டாம் பாகம் என்று தாராளமாகச் சொல்லலாம். முதல் பாகத்தில் ஹீரோவான எட்டீ ஃபெல்ஸன், இதில் ரிடையர் ஆகி, இந்தப் பாகத்தில், பந்தயங்களை உருவாக்குவதிலும், அவற்றில் பெட்கள் கட்டுவதிலும் காலம் கழிப்பவர். அப்போது வின்செண்ட் என்ற இளைஞனைக் கவனிக்கிறார். அவன் பூல் விளையாட்டில் மிகுந்த திறமைசாலி. அவனது காதலி கார்மென், பந்தயத்தில் விருப்பம் இருப்பவர்களை நைஸாக உள்ளே அழைத்து, பந்தயம் கட்ட வைத்து, வின்செண்ட்டோடு சேர்ந்து அவர்களை ஏமாற்றுவதையும் கவனிக்கிறார். தனது பழைய காலம் எட்டீக்கு நினைவு வருகிறது. எனவே, வின்செண்ட் மற்றும் அவனது காதலியோடு ஒரு அணியாகச் சேர்ந்து, பிறரை ஏமாற்றிப் பணம் சேர்க்கலாம் என்று முடிவுசெய்கிறார். இதன்பின் நடக்கும் வேகமான சம்பவங்கள் நிறைந்த படம்தான் கலர் ஆஃப் மனி. இந்தப் படத்துக்காக, எட்டீ ஃபெல்ஸனாக நடித்த பால் ந்யூமேனுக்கு, பல வருடங்களில் பல சிறந்த நடிகர் பரிந்துரைகளுக்குப் பிறகு இதில் ஆஸ்கர் கிடைத்தது. 

இந்தப் படங்கள் தவிர, இந்த விளையாட்டுப் புனைவுப் படங்களில் ஏராளம் உண்டு. அவற்றில் மிகப் பிரபலமான படங்களே நூற்றுக்கணக்கில் தேறும். உதாரணமாக, MIllion Dollar Baby, Happy Gilmore, Remember the Titans, The Karate Kid, Bed it like Beckam, Lagaan, Dangal, Dodgeball, A league of their own, The Longest Yard, Talladega Nights, Tin cup, White men can’t Jump, Any Given Sunday, Over the Top, Field of Dreams என்று துவங்கி, எக்கச்சக்கமான படங்கள் உண்டு. 

பொதுவாகவே, ஸ்போர்ட்ஸ் படங்கள், ஆடியன்ஸைக் கட்டுவிப்பதில் சிறந்தவை என்பது என் தனிப்பட்ட கருத்து. பிரம்மாண்டமான திரையில் காண்பிக்கப்படும் விளையாட்டு, அதில் இடம்பெறும் உணர்வுகள், கதாபாத்திரங்கள், அவை சந்திக்கும் பிரச்னைகள் என்பவையெல்லாம் அந்தக் கதையின் உணர்வுகளை அப்படியே ஆடியன்ஸுக்குக் கடத்திவிடும் திறன் மிகுந்தவை. எனவே, இத்தகைய விளையாட்டுப் படங்கள், மற்றும் அவைகளின் அமரத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களோடு நாமும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவற்றால் உத்வேகம் பெற்று, வாழ்க்கையில் எவ்வளவோ சாதிக்கலாம். அதற்கான உந்துதலை இவை அவசியம் அளிக்கின்றன என்றே சொல்லுவேன். 

  Comments

2 Comments

  1. The Last youtube video not available. what was it ?

    Reply
  2. Holland-Thomas Kevin

    What a great article I have just finished.
    Thank you very much, you’re an outstanding author! I could
    only compare this article into the amazing item I have read in https://ESSAYWRITENOW.COM WRITE MY RESEARCH PAPER SERVICE .
    You attention to details is evident, which says alot. Keep providing us with great stuff in the future.

    Reply

Join the conversation