I saw the Devil (2010) – South Korean

by Karundhel Rajesh May 17, 2011   world cinema

கருந்தேளில், கிம் கி டுக் இல்லாத தென் கொரியப் படம் ஒன்றின் விமர்சனம் வருவது அவ்வளவு எளிது அல்ல என்பதை நண்பர்கள் அறிவீர்கள். இருப்பினும், அப்படியும் பல நல்ல படங்கள் இருப்பதால், இனி அவற்றைப் பற்றியும் அவ்வப்போது பார்க்கலாம். படத்தைப் பற்றிப் பார்க்குமுன், இப்படம் எப்படி என்னிடம் வந்தது என்பதை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். தமிழ்ப்பதிவர்களில் முடிசூடா இளவரசனாக (கரெக்டா சொல்லிட்டனா?) விளங்கும் கொழந்த என்ற சரவணகணேஷ், எனது நண்பர்களில் ஒருவர் (இல்லையில்லை. நான் தான் அவரது நண்பர்களில் ஒருவன்). அவர், சென்றவாரம், பல திரைப்படங்களை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவற்றில் ஒன்றுதான் இந்தப்படம். இப்படங்களை நான் பார்க்கவில்லை என்றால், ‘புத்தர் வந்தார்’ என்று ஆரம்பிக்கும் ஐம்பது பாடல்களை, அவரே மெட்டமைத்து, எனது வீட்டின்முன் நின்றுகொண்டு பாடப்போவதாக மிரட்டலும் விடுத்திருந்தார். ஆகவே, ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். அப்படிப் பார்த்ததுதான் இந்தப் படம். நாம் இந்தத் தளத்தில் ஏற்கெனவே பார்த்திருக்கும் ‘A Tale of two sisters‘ இயக்குநரான கிம் – ஜி – வூன் தான் இப்படத்தின் இயக்குனராவார். படத்தின் கதை, மிக எளிதானது. திருடன் போலீஸ் விளையாட்டு. ஆனால், இந்த எளிமையான கதையை, பரபரப்பாக அவர் எழுதியிருக்கும் விதம் தான் இப்படத்தை சுவாரஸ்யமாக்குகிறது. அதேசமயம், இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில், இப்படம் ஒரு உலக சினிமா அல்ல. ஒரு வேற்றுமொழிப்படம். அவ்வளவே. அதேபோல், படத்தைப் பற்றி எழுதுமுன், இன்னொரு டிஸ்கி என்னவெனில், ரத்தம், மாறுகை மாறுகால் வாங்குவது, அதீத வன்முறை ஆகிய ‘பாகிஸ்தான்’ சமாச்சாரங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் மட்டுமே இப்படத்தைப் பாருங்கள். மெல்லிய மனதுடைய நண்பர்கள் (குறிப்பாக, ‘சங்க’ நண்பர்கள்) இப்படத்தைப் பார்த்தால், இரவில் அலறிக்கொண்டு எழுந்திருக்கவேண்டிவரும். கொரியத்திரைப்படங்களில், வெளிப்படையான வன்முறைக் காட்சிகள் பொதுவில் ஏராளமாக இருக்கும். கிம் கி டுக் படங்கள் ஒரு உதாரணம். அதைப்போலவே இப்படமும் இருக்கிறது.

பனி கொட்டும் ஒரு இரவு. அந்த நெடுஞ்சாலையில், ஆள் அரவமே இல்லை. மிகத்தனிமையான அந்த சாலையில், ஒரு கார் மட்டுமே நின்றுகொண்டிருக்கிறது. காரினுள், ஒரு இளம்பெண், செல்ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிறாள். மறுமுனையில், அவளது காதலன். இந்த இரவில் அவள் இப்படி வேற்றூருக்குச் செல்வது அவனுக்கு மனதில் உறுத்துகிறது. ஆனால், அவனது கடமை, அவனை எங்கும் செல்லவிடாமல் கட்டிப்போட்டிருக்கிறது. எனவே, வேறு வழியே இல்லாமல், காதலியைத் தனியாக அனுப்பிவிட்டு, சிலமணிநேரங்கள் கழித்து, தானும் கிளம்பும் உத்தேசத்தில் இருக்கிறான் காதலன். ஆனால், சோதனையாக, காதலியின் காரின் டயர், சாலையில் இருக்கும் பெரிய குழி ஒன்றில் இறங்கிவிடுவதால், காதலியால் கார் ஓட்ட முடியாத சூழல். பழுது பார்க்கும் வண்டிக்குத் தொலைபேசியில் தகவல் அனுப்பிவிட்டு, காதலனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்.

“தட். . தட்..”

கார்க்கதவு, பலமாகத் தட்டப்படுகிறது. வெளியே, நட்பான புன்னகையுடன், ஒரு நடுத்தர வயது மனிதன்.

காதலி, காதலனிடம், யாரோ கதவைத் தட்டுவதாகச் சொல்லிவிட்டு, கண்ணாடியை சிறிது இறக்குகிறாள். தனக்குப் பழுது பார்க்கத் தெரியும் என்றும், அவள் அனுமதித்தால், சரி செய்ய முயல்வதாகவும் அந்த மனிதன் சொல்ல, காதலி, அரைமனதாகத் தலையசைக்கிறாள். அந்த மனிதன், காருக்குப் பின்னே சென்று, டயரை ஆராயத் தொடங்குகிறான். காதலன், அவளிடம், கார்க்கதவை உள்ளே பூட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டு, அந்த மனிதனை அனுப்பிவிடுமாறு சொல்கிறான். சிறிதுநேரம் கழித்து, தோல்வியுடன் எழுந்து வரும் அந்த மனிதன், குழியில் டயர் பலமாகச் சிக்கிக்கொண்டிருப்பதைச் சொல்கிறான். அதன்பின், அங்கிருந்து சென்று, சற்றுத் தொலைவில் நிற்கும் தனது காரிலும் ஏறுகிறான்.

ஆனால் . .

அவனது கார் கிளம்புவதில்லை. நெடுநேரம் அங்கேயே நின்றுகொண்டிருக்கும் காரையே பார்த்துக்கொண்டிருக்கும் காதலியின் கார்க்கண்ணாடி, திடுமென்று உடைபடுகிறது. வெளியே, கையில் ஒரு சுத்தியுடன், வெறித்தனமாக நிற்கிறான் அந்த மனிதன். கதவை உடைத்துத் திறக்கும் அவன், சுத்தியால் அவளது தலையில் பலமுறை வெறித்தனமாகக் கத்திக்கொண்டே அடிக்கத் தொடங்குகிறான். காட்சி இருள்கிறது.

மெதுவே கண்ணைத் திறக்கிறாள் அவள். ஒரு பிளாஸ்டிக் போர்வையால், அவளது உடல் மூடப்பட்டிருக்கிறது. பக்கலிலேயே, கசாப்பு வெட்டப் பயன்படுத்தும் கத்தியுடன், அவன் அமர்ந்துகொண்டிருக்கிறான். நிலைமையைப் புரிந்துகொள்ளும் அவள், அவனிடம் மெல்லிய குரலில் இறைஞ்சுகிறாள்.

“என்னைக் கொன்று விடாதே. . எனது வயிற்றில் ஒரு குழந்தை வளர்ந்துகொண்டிருக்கிறது’ . .

சரக்கென்று கத்தியைப் பாய்ச்சுகிறான் அவன். ரத்தம் பீறிடுகிறது.

மேலே சொல்லப்பட்டிருப்பது, இப்படத்தின் முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே.

இப்படியொரு நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது படம். இதற்குப்பின், காணாமல் போன அப்பெண்ணை, போலீஸ் தேடுகிறது. ஓய்வுபெற்றுவிட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் மகளாகவும், துடிப்புமிக்க ஒரு உளவாளியின் காதலியாகவும் அப்பெண் இருப்பதால், போலீசின் தேடல் தீவிரமாக இருக்கிறது. ஒரு ஏரியில் அவளது தலை மட்டும் மிதந்துகொண்டிருப்பதை, மிகுந்த பிரயாசைக்குப்பின், போலீஸ் கண்டுபிடிக்கிறது. இது, அவளது காதலனுக்கும் தந்தைக்கும் தெரிவிக்கப்படுகிறது. இருவருமே, மிகுந்த சோகத்துக்குள்ளாகிறார்கள். அதேசமயம், இப்படிப்பட்ட கோரமான கொலைவழக்குகளில் இதுவரை சந்தேகிக்கப்பட்டவர்களையெல்லாம், போலீஸ் கண்காணிக்கத் துவங்குகிறது. ஆறு பேரை, பட்டியல் இடுகிறது போலீஸ். இதற்குள், இறந்த பெண்ணின் காதலனான அந்தப் போலீஸ் அதிகாரி, தனது மனதில் எதையோ முடிவு செய்துவிட்டவனாக, தனக்குத் தேவைப்படும் விஷயங்களையெல்லாம் சேகரிக்கத் துவங்குகிறான்.

ஆரம்பிக்கிறது சுவாரஸ்யமான எலி – பூனை ஆட்டம்.

இதற்குமேல், படத்தில் என்ன நடக்கிறது என்பதை நான் எழுதினால், சுவாரஸ்யம் போய்விடும். எனவே, நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர், உலகப்பட ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானதொரு நபர். ஒல்ட்பாய் (Oldboy) பார்த்திருக்கும் நண்பர்களெல்லாம் கைதூக்குங்கள் பார்க்கலாம். அதில், நீண்டகாலம் அடைத்துவைக்கப்பட்டு, பின்னர் பழிவாங்கும் வெறியுடன் கிளம்பும் கதாநாயகனை நினைவிருக்கிறதா? அந்தக் கதாபாத்திரத்தில் பின்னியெடுத்த ‘ச்சோய்-மின்-ஸிக்’ தான் இப்படத்தில் வில்லன். காட்டுத்தனமான கொலைகாரன் வேடத்தில் அருமையாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, கோயன் சகோதரர்களின் ‘No Country for Old men’ படம் நினைவு வந்தது. அதில் வில்லனாக நடித்திருக்கும் ஹவியே பார்டெமைத் துரத்தும் நபராக ஜாஷ் ப்ராலின் நடித்திருப்பார். அதில் ஹவியே பார்டெமைக் கண்டால் எப்படி பயமாக இருக்குமோ, அதைப்போல், இதில் ச்சோய்-மின்-ஸிக். அதேபோல், இரண்டு படங்களின் கதைக்களனும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இருப்பினும், நோ கண்ட்ரி படத்தை ஒரு உலகப்படம் என்று தாராளமாகச் சொல்லலாம். ஆனால், இப்படத்தை அப்படிச் சொல்ல இயலாது. ஏனென்று, படத்தைப் பார்த்ததும் புரிந்துகொள்வீர்கள்.

கொரியப்படங்களைப் பார்க்கும்போதெல்லாம், ஒரு விஷயம் தோன்றிக்கொண்டே இருக்கும். அதாவது, நிஜவாழ்வில், இந்தக் கொரியப்படங்களில் வருவது போன்ற சந்தர்ப்பங்களை நாம் எதிர்கொள்ள நேரும்போது, அவற்றுக்கு நமது எதிர்வினை எப்படி இருக்குமோ, அதற்கு நேர் எதிராக இந்தக் கொரியப்படங்களின் கதைமாந்தர்கள் நடந்துகொள்வார்கள். அதுவும், அவர்களது எதிர்வினை, வருங்காலத்தை நோக்கியே இருக்கும். அந்த நொடியில் அந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்பதில் அவர்களின் கவனம் இருக்கவே இருக்காது. இதற்கும் கிம் கி டுக்கின் பல படங்களை உதாரணமாகப் பட்டியலிடமுடியும் (Samaritan Girl, 3-Iron & Time – சில உதாரணங்கள்) . இப்படங்களில் கதாபாத்திரங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகளை சற்றே அலசிப் பாருங்கள். சமாரிடன் கேர்லில், கதாநாயகி, இறந்துபோன தனது தோழிக்காக, அவள் உறவுகொண்ட அனைத்து நபர்களையும் தேடிப்பிடித்து உறவுகொண்டு, அவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பி அளிப்பதே அவளது ஆன்மாவைச் சாந்தியடைய வைக்கும் என்று எடுக்கும் முடிவு, 3 – அயர்னில், கதாநாயகியைச் சேர்வதற்காக ஜெயிலில் மறையும் கலையைக் கற்கும் கதாநாயகனின் முடிவு, டைம் படத்தில், கொலைகாரனை அவ்வப்போது சந்தித்து, பாடல்களைப் பாடும் கதாநாயகியின் செயல் ஆகிய அனைத்துமே, நாம் அந்தச் சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்வோமோ, அதற்கு முற்றிலும் மாறான செய்கைகள். ஆனால், படத்தின் இறுதியில் பார்க்கும்போது, அவை படத்திலிருந்து வித்தியாசமாகத் துருத்திக்கொண்டு தெரிவதில்லை. அதேபோன்று, இப்படத்திலும், கதாநாயகன் எடுக்கும் முக்கியமான முடிவு ஒன்று இருக்கிறது. அது, குறிப்பிட்ட அந்த நிமிடத்தில் அவனுக்கு வேண்டிய விஷயம் நிறைவேற எந்த மாதிரியான முடிவு எடுக்கவேண்டுமோ, அதற்கு முற்றிலும் மாறானதொரு முடிவாக இருக்கிறது. ஆனால், படம் செல்லச்செல்ல, அவன் எடுத்த முடிவுதான் சரி என்ற எண்ணம் நம்முள் வலுப்படுகிறது. இந்த விதமான சிந்திக்கும் முறை, நான் இதுவரை பார்த்திருக்கும் பெரும்பாலான கொரியப்படங்களில் கவனித்திருக்கிறேன்.

படம் பாருங்கள்.

I saw the Devil படத்தின் ட்ரைலர் இங்கே.

  Comments

20 Comments

  1. நல்லவேளை கொரிய படத்தில் உலக சினிமாவை விட்டு விட்டு பர பர சினிமாவை பதிவிடீர்களே

    Reply
  2. நண்பரே,

    கொரிய துப்பறியும் படங்கள் பார்த்து நீண்ட நாட்கள் ஆயிற்று. இங்கு திரையில் வெளியிட்டால் பார்த்து விடலாம். கொழந்தைக்கு தியாகராஜபாகவதரின் ஒலிநாடாக்களை வாங்கி அனுப்புங்கள். தார், உங்களை திருப்தி செய்யும் என்றே நம்புகிறேன் 🙂 கொரிய பிரஜை இலுமிக்கு என்ன ஆயிற்று :))

    Reply
  3. தல..நீங்க எப்ப என் followerரா ஆனிங்களோ அப்பவே என் பிறவி பயனை அடஞ்சிட்டேன்…அப்பறமும் சும்மா என் நண்பர்ன்னு – சொல்லி என்னை மூர்ச்சை ஆக்காதீங்க…
    ஏண்ணே…செக்யூரிட்டி வேலைக்கா என்ன எடுக்குறாங்க…கொழந்தை என்கிற சரவண கணேஷ்….இவ்வளவு டீடெயில் தேவையானு மக்கள் யோசிக்க மாட்டாங்க….அப்பறம் நா ஏதோ உங்கள் எழுதி சொல்லி – இல்லாட்டி பின்நவீனத்துவ கதைகள் எழுதுவேன்னு மிரட்டி எழுதுறதா நெனச்சுட்டா…(ஏன் வயசு – உயரம் – மார்பளவு விட்டுட்டீங்க….)
    இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு குயுக்தி கூடாது…எவ்வளவு சொல்லியிருந்தேன்….”தமிழகத்தின் எழுச்சி நாயகன், நாளைய முதல்வர், வாழும் வள்ளுவம், தமிழ்நாட்டின் தங்கமகன் “ இதெல்லாத்தையும் வேனணும்னே வுட்டுடுட்டு வெறும் இளவரசனோட நிறுத்திட்டீங்க….

    Reply
  4. அப்புறம், இந்த படத்தையும் The Chaserரையும் நெறய காட்சிகள் F.Forward பண்ணிதான் பாத்தேன்…யப்பா…சாமி…முடியல…….
    ராஜ்கிரண் படத்துல நல்லி எலும்ப கடிக்கிற காட்சி கட்டாயம் வர மாதிரி, ச்சோய்-மின்-ஸிக்க்கு எல்லா படத்துலயும் ரேப் சீன் இருக்கு..

    Reply
  5. படம் playerல எடுத்துச்சா இல்லையானுறத கூட பதிவ பாத்துதான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு…என்ன உலகம் இது….அடுத்து A Bittersweet life யையும் Vengence Triologyயையும் எதிர்பார்க்கிறேன்…குறிப்பா A Bittersweet lifee என் ஆல் டைம் ஃபேவரைட் கேங்க்ஸ்டர் படமா ஆயிருச்சு…

    கொரியன் படங்கள்ல Characterization & Screenplay ஹாலிவூட் படங்களை விட பல மடங்கு சிறப்பா இருக்கு என்று எனக்கு தோன்றுகிறது…கொரியன் படங்களின் பால் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய பதிவுலக பெரியவர்கள் கருந்தேள் – இலுமி – MSK (tha cinema) ஆகியோருக்கு இங்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்…

    Reply
  6. நண்பரே,
    வெகு நாட்களாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தாத தமிழ் சினிமா உலகம் என்ற தளம் இன்று முதல் இயங்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த வாரம் ரிலீஸ் ஆன த ப்ரீஸ்ட் காமிக்ஸ் கதையை மைய்யமாக கொண்டு வந்த கல்லறை உலகம் என்கிற ப்ரீஸ்ட் படமே முதல் விமர்சனம்.

    கிங் விஸ்வா

    தமிழ் சினிமா உலகம் – ப்ரீஸ்ட் – கல்லறை உலகம் விமர்சனம்

    Reply
  7. இந்த படம் பாக்கல.

    ஆனா நம்ம மனோஜ் நைட் ஷியாமளன் படமாகிய டெவில் பார்த்தேன். அதை யாராவது பார்த்தீங்களா? எனக்கு அது வழக்கமான ஷியாமளன் படம் போலவே தோன்றியது. அதாவது பாதி படம் வரைக்கும் செமையாக இருக்கும், இரண்டாம் பாதியில் மொக்கை செய்து ஏண்டா இந்த படத்தை பார்த்தோம் என்று செய்து விடுவார்.

    கிங் விஸ்வா
    தமிழ் சினிமா உலகம் – ப்ரீஸ்ட் – கல்லறை உலகம் விமர்சனம்

    கலைஞரின் பொன்னர் சங்கர் காமிக்ஸ்

    Reply
  8. நண்பா நம்ம தளத்துக்கு வாங்களேன் கொஞ்சம்?!!!,வதை,சித்ரவதை என்று பேசுபவர்கள் இதைப் பார்க்கவேண்டும். இதையும் ஒல்டுபாயை ஸிந்தா என திருடி எடுத்தது போல ஹிந்தியில் திருடிவிடுவார்களா? ஆனால் அற்பமாக காட்சி வைப்பார்கள்.இவ்வளவு டீடெய்ல்டாக சான்சே இல்லை.பிண்ணணி இசையும் கேமராவும் அபாரமாக இருந்தது.கடைசி வரை அந்த சைக்கோவை அந்த போலீஸ்காரன் எப்படி கொல்வான் என ஆர்வம் காட்டிவிட்டனர். ஆனால் ஒரே குறை அந்த போலீஸ்காரன் பிரஷாந்தை போல மொழு மொழு என்று இருந்ததால் அவன் இவனுக்கு டஃப் ஃபைட் கொடுத்ததை நம்ப முடியவில்லை,தவிர ஒல்டு பாய் சோய் மின் சிக்கிடம் எந்த பாச்சாவாவது பலிக்குமா?ஆனால் போலீஸ் தும்பை விட்டு வாலை பிடிப்பது போல அவனை விட்டுபிடிக்கிறேன் என்று 3 கொலைகளை நிகழ்த்தவிட்டதெல்லாம் டூமச்,திரைக்கதையில் பெரிய ஓட்டை.

    Reply
  9. ஹாலி பாலி சொன்ன செர்பியன் ஃபில்ம் சான்சே இல்லை,இதுக்கு எல்லாம் மேலே,எல்லாத்துக்கும் மேல,அதை மிஞ்சனும்னா இனிமே வரனும்.எரேசர் ஹெட்,எல் டோரோ,சாலோ ஆர் த 120டேஸ் ஆஃப் சோடம் எல்லாத்தையுமே வயலன்ஸ் தூக்கி சாப்பிடுது,என்னால எழுத முடியாம அப்புடியே 3 மாசமா பாதியிலயே கிடக்கு,பார்த்துட்டு எழுதுங்க நண்பா.அப்புறம் நான் புத்தர் போனார் என்று 60 பாடல்கள் பாடப்போறேன்.

    Reply
  10. Try n watch “Save the green planet” too.Its a wonderfully directed low budget thriller… Its a kind of a movie where in one scene u’l be laughing heartily n in the next u’l be freaked out !! I loved it..

    Reply
  11. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி!

    Reply
  12. அருமையான த்ரில்லர்.ஏற்கனவே கேபிள் சங்கர் எழுதிவிட்டார்.ஆனால் பார்க்காதவர்களுக்கு
    ஆர்வமூட்டும் விதம் எழுதியுள்ளீர்கள்.நன்றி.

    Reply
  13. @ லக்கி – ஹ ஹ ஹ 🙂 . . பயங்கர ஸ்லோ படங்களை இன்னும் கொஞ்ச நாளு எழுதமாட்டேன் 🙂

    @ காதலரே – தோர், முதல்பாதி பட்டையைக் கிளப்பியது. ஆனால், இரண்டாம் பாதி, மொக்கை போட்டது. இன்று மாலை தோர் பதிவு வெளிவரும் 🙂

    @ கொழந்த – இந்தப் பட்டங்களெல்லாம், இனி வரும் படங்களில் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். கொரியப் படங்களைப் பத்தி நீங்க சொன்னது சரி. கேரக்டரைசேஷன் நீட்டா பண்ணிருப்பாங்க. உண்மைய சொன்னா, ஹாலிவுட் படங்களுக்கும் இந்தக் கொரியப் படங்கள் ஒரு முன்னோடி. அப்பாலிக்கா, உங்க டிவிடி, ஒரு ‘பிரபலத்துக்கு’ குரியர் ஆகப்போவுது . உங்களுக்கு உரிய க்ரெடிடோடு ‘அங்கே’ சேர்க்கப்படும் 🙂

    @ விஸ்வா – டெவில் பார்க்கல. ஆனா அந்தாளு படமெல்லாம், ரெண்டாவது பாதி மகா மொக்கையா மாறிக்கினே வருது 🙂 . . அதான் நீங்க பார்த்துட்டு சொல்லிட்டீங்கல்ல. இனி அந்தப்பக்கமே போவமாட்டேன் 🙂

    @ கீதப்ரியன் – நண்பா . . அந்த விட்டுப்புடிக்கிரதுதான், எனக்கு புடிச்சது 🙂 . . அது பரவால்ல. கருத்து வேறுபாடு இருந்தாத்தான் டிஸ்கஷன் சுவாரஸ்யமா போவும்ல 🙂 . . இத ஹிந்தில காப்பியே அடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, இத இன்னும் அவனுங்க பார்த்திருக்க மாட்டானுவ . . அப்புறம், அது என்ன செர்பியன் படம்? மறந்துபோச்சே . .பேரு அனுப்புங்க. பார்த்துர்றேன். ..

    @ அருண் – கட்டாயமா நீங்க சொன்ன படத்தை பார்ப்பேன். மிக்க நன்றி

    @ ஷர்புதீன் – நூறு மார்க் வாங்கணும்னா என்ன பண்ணனும்னு சொல்லுங்க (அதுக்காக, பதிவையே இழுத்து மூடுனாத்தான் நூறு மார்க்க்னு சொல்லிராதீங்க) . .:-) இம்ளிமென்ட் பண்ணிரலாம். நன்றி

    @ பஷீர் – ஓ . .கேபிள் ஆல்ரெடி எழுதிபுட்டாரா? தெரியாது எனக்கு. உங்க கருத்துக்கு நன்றி.

    Reply
  14. Actually I didn’t like the way the screenplay went either. When MSK wrote about this movie, he also mentioned about how an animal hunt its prey and kill them slowly.

    If thats the concept they tried to adapt, then it may be acceptable but.. its bit annoying to see that he let the killer go for a cat-mouse game.

    Watch “A Serbian Film” thala.

    Reply
  15. @சனிப்பொணம் – தல.. எனக்கு கொஞ்ச காலமாவே பயங்கர மறதி 🙂 .. உங்க கமெண்டைப் பார்த்ததும், செர்பியன் படம் டௌன்லோட் போட்டாச்சி. இன்னும் கொஞ்ச நேரத்துல எறங்கிரும். உடனே பார்த்துர்ரேன் 🙂

    அப்புறம், முதல் தடவை அந்த ஹீரோ, விலனைத் தப்பவுட்டதும், ஒரு மாதிரி எரிச்சலாத்தான் இருந்திச்சி. ஆனா அப்புறம், அடுத்தடுத்த அட்டெம்ப்ட்களையும், அவன் அடி வாங்குறதையும் பார்க்கைல, மனசுக்கு நிம்மதியா இருந்திச்சி 🙂 ஹீஹ்ஹீ

    Reply
  16. Terrible movie. I never seen such a villain like him. Good one!

    Reply
  17. ராஜேஷ் நீ சொல்லுவது உணமைதான்.. கொரிய படங்களின் திரைக்கதைகள்…உடனடி தீர்வாய் இல்லாமல் வாழ்வோடு பயணிக்கும் கதைகள்… நிஜ வாழ்வில் எவ்வளவுதான் வன்மம் ஒருவர் மீது இருந்தாலும், எடுத்தவுடன் கொலையெல்லாம் செய்யமுடியாது…ஒருவன் கை வெட்டினாலே கேஸ் அது இதுன்னு அலைஞ்சிகிட்டே இருக்கனும்.. இதைதான் கொரிய படங்கள் அந்த கேரக்டர்கள் என்ன செய்யுமோ அதை செய்கின்றன….

    இந்த படத்தில் சீக்ரேட் ஏஜேன்ட் ரேப்பிஸ்ட்டை பார்த்து நான் உன்னை அன்டர் எஸ்டிமேட் செய்துட்டேன் என்று சொல்ல அவனுக்கு சாவையும் பயத்தையும் புரியவைத்து விட்டு, நடு ரோட்டில் அழும் போது, தனது காதலி இறந்து போனது தேவையில்லாமல் ஓவர் கண்பிடடென்ட்டில் இவனை தப்பிக்க விட்டதால் ஒரு மூன பேரை சாகடிக்க காரணமாயிட்டோமே என்று அந்த அழுகை எல்லாவற்றிக்கும்தான்…..

    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்

    Reply

Join the conversation