Immortals (2011) – English

by Karundhel Rajesh November 12, 2011   English films

(இன்று காலையில், இப்படத்தை 3Dயில் பார்த்தோம். கட்டுரையை எழுதியபின், இதோ TinTin 3D படத்துக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறோம்).

கிரேக்க இலக்கியத்தில், Titanomachy (டைடனோமேகி) என்பது பிரபலம். இருவிதமான கடவுளர்களின் படைகளுக்கு இடையே நடந்த பெரும் யுத்தம். இந்த யுத்தம், மனிதன் படைக்கப்படுவதற்கு வெகு காலம் முன்னரே நடந்தேறிவிட்டது. ஓத்ரிஸ் மலையைச் சேர்ந்த டைடன்களுக்கும், ஒலிம்பஸ் மலையைச் சேர்ந்த ஒலிம்பியன்களுக்கும் நடந்த யுத்தம் இது. இந்த யுத்தத்தைப் பற்றி விபரமாகப் பார்க்காமல் ‘Immortals‘ படத்தைப் பற்றி எழுத இயலாது. ஆகவே, இதோ Titanomanchy.

யுரேனஸ் (Uranus) என்பவர், அண்டவெளியின் பெரும் கடவுள். அவரது மனைவி, கையா (Gaia). இவர்களின் இளைய மகனின் பெயர், க்ரோனஸ் (Cronus). இந்த கையாவின் குழந்தைகள் இருவரை யுரேனஸ், கிரேக்க நரகமான டார்ட்டாரஸ் (Tartarus) என்ற இடத்தில் சிறை வைத்தான். இதனால் கோபமடைந்த கையா, ஒரு சக்திவாய்ந்த அரிவாள் ஒன்றினைச் செய்து, அவளது மகன் க்ரோனஸிடம் கொடுத்து, யுரேனஸின் ஆணுறுப்பை வெட்டிவிடச் சொல்கிறாள். அவ்வண்ணமே செய்கிறான் க்ரோனஸ். இறக்கும் தருவாயில், தன்னைக் கொன்ற க்ரோனஸை, அவனது மகன் கொல்வான் என்று சாபமிட்டுவிட்டு இறக்கிறார் யுரேனஸ். யுரேனஸின் உடலில் சிந்திய ரத்தத்திலிருந்து சில கடவுளர்கள் உருவாயினர்.

இதன்பின் கடவுளர்களின் தலைவனாக உருவானான் க்ரோனஸ். தன் பதவிக்கு ஆபத்து வராமல் இருப்பதற்காக, தனது சகோதர சகோதரிகள் அனைவரையும் டார்ட்டாரஸ் மலையில் சிறைவைத்தான். தனது குழந்தையால் இறப்பு என்பதால், அவனுக்கும் அவனது மனைவியான அவனது சகோதரி ரியாவுக்கும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் உயிரோடு விழுங்கியும் வந்தான். ஒரு முறை, ரியா, ஒரு கல்லைத் துணியில் சுற்றி அவனிடம் கொடுத்துவிட்டு, அப்போது பிறந்திருந்த ஸீயஸ் (Zeus) என்ற குழந்தையை க்ரோனஸிடமிருந்து ஒளித்துவைத்தாள். ரகசியமாக வளர்ந்தான் ஸீயஸ்.

இளைஞனானதும், க்ரோனஸ் வயிற்றில் இருக்கும் அவனது சகோதர சகோதரிகளை, ஒரு பலவீனமான தருணத்தில் க்ரோனஸ் வாந்தியெடுத்து வெளியேற்றிவிட, அவர்களைத் திரட்டிக்கொண்டு, க்ரோனஸுக்கு எதிராகப் போர் தொடுத்தான் ஸீயஸ். இந்தப் போரே Titanomanchy.

போரின் இறுதியில், ஸீயஸின் படை வென்றது. தோற்ற டைடன்கள், டார்ட்ட்டாரஸ் மலையில் சிறைவைக்கப்பட்டனர்.

இங்குதான் தொடங்குகிறது Immortals படத்தின் கதை.

டைட்டன்களின் வம்சத்தில் வந்த ஹைபீரியன் (Hyperion) என்ற மன்னன், கடவுளர்களை ஒழித்து, டார்ட்டாரஸ் மலையில் சிறைவைக்கப்பட்டுள்ள தனது வம்சத்தைச் சேர்ந்த டைட்டன்களை விடுவித்து, மனித குலத்தையே அடிமைப்படுத்தவேண்டும் என்ற எண்ணமுடையவன். பூமி கண்டிராத ஒரு பெரும் படையை இதற்கெனத் திரட்டுகிறான். இதனை, ஒலிம்பஸ் மலையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ஸீயஸும் அவரது சக கடவுட்களும். ஹைபீரியன், மனிதர்களை எதிர்ப்பதால், இது மனிதர்கள் போரிட்டுக்கொள்ளவேண்டிய யுத்தம் என்று சொல்லும் ஸீயஸ், இதில் கடவுள்கள் ஈடுபடக்கூடாது என்றும் சக கடவுளர்களை எச்சரிக்கிறார்.

ஹைபீரியனை எதிர்க்கத் தேவையான வலு, பூமியில் உள்ள தீஸியஸ் என்ற மனிதனிடம் இருப்பதை அறிகிறார் ஸீயஸ். தீஸியஸே, ஹைபீரியனை எதிர்க்கவேண்டும் என்ற முடிவை எடுக்கவேண்டும் என்பது ஸீயஸின் விருப்பம். கடவுளர்கள் அவன்முன் தோன்றி அவனை மனமாற்றம் செய்யக்கூடாது என்றும் விரும்புகிறார் அவர்.

தீஸியஸின் கிராமம், ஹைபீரியனால் சூறையாடப்படுகிறது. அவனது தாயை ஹைபீரியன் கொல்கிறான். தீஸியஸ் சிறைபிடிக்கப்படுகிறான். பிற அடிமைகளுடன் சேர்த்து அடைக்கப்படுகிறான்.

ஹைபீரியன், டார்ட்டாரஸ் மலையில் உள்ள டைடன்களை விடுவிக்கவேண்டி, அங்கே தனது பெரும்படையுடன் செல்கிறான். எதிர்வரும் ஹைபீரியனை எதிர்க்க, அங்கே ஒரு சிறுபடை காத்திருக்கிறது. அடைந்துகிடக்கும் டைட்டன்களை விடுவிக்கவேண்டும் என்றால், ’ஏரஸ்’ (Ares) என்ற கடவுளால் செய்யப்பட்ட வில் ஒன்றினை வைத்து, அம்பெய்து, அவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் கூண்டினை உடைக்கவேண்டும். வேறு வழியே இல்லை. ஆகவே, இந்த வில்லைத்தேடி, க்ரீஸ் எங்கும் அலைந்துவிட்டிருக்கிறான் ஹைபீரியன். ஆனால் அது எங்கோ மறைந்து கிடக்கிறது.

’ஆரக்கிள்’ (Oracle) என்ற, எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் கன்னி ஒருவள் – பெயர் ஃபாய்ட்ரா – தீஸியஸுக்கு உதவுகிறாள். அவனை விடுவித்து, அவனுடனே தப்பித்துச் செல்கிறாள். தனது கிராமத்துக்குத் திரும்பும் தீஸியஸ், அங்கு இறந்துகிடக்கும் தனது தாயை அடக்கம் செய்கிறான். அந்தச் சமயத்தில், ஒரு பெரும் பாறையைப் பார்க்கிறான். அந்தப் பாறையை உடைக்கிறான். அதனுள், இத்தனை காலம் ஹைபீரியன் தேடிய வில். அதனை எடுத்துக்கொள்கிறான் தீஸியஸ்.

தீஸியஸுக்கு ஹைபீரியனின் வீரர்களால் இடையூறு ஏற்படும்போது, ஒலிம்பஸில் இருந்து பூமிக்கு வந்து, அந்த வீரர்களைக் கொல்கிறார்கள் ஸீயஸின் சக கடவுட்களான ஏத்னாவும் ஹெராகிள்ஸும். ஏத்னா, ஸீயஸின் மகள். ஹெராகிள்ஸ், தான் ஏற்படுத்தியிருந்த விதியை மீறியதால், அவரைக் கொன்றுவிடுகிறார் ஸீயஸ். இனிமேல் தீஸியஸின் உதவிக்கு எந்தக் கடவுளும் வரமாட்டார்கள் என்று சொல்லிவிட்டு மறைகிறார்.

டார்ட்டாரஸ் மலைக்கு ஹைபீரியன் வரும் நேரத்தில், தீஸியஸிடமிருந்து களவாடப்பட்ட வில், ஹைபீரியனின் கைக்குக் கிடைக்கிறது. இதனைத்தொடர்ந்து, பெரும் யுத்தம் ஆரம்பிக்கிறது. டார்ட்டாரஸில் டைட்டன்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்துக்குச் செல்லும் ஹைபீரியன், அவர்கள் கூண்டை நோக்கி அம்பை எய்துவிடுகிறான். விடுவிக்கப்படுகிறார்கள் டைட்டன்கள்.

அதேநேரத்தில், ஸீயஸ், சக கடவுட்களான பொஸைடன், ஏத்னா, அப்போலோ மற்றும் ஏரஸுடன் அங்கே வந்துவிடும் ஸீயஸ், டைட்டன்களுடன் யுத்தத்தை ஆரம்பிக்கிறார். ஒருபுறம் மனிதர்கள் மோத, இன்னொருபுறம் கடவுட்கள்.

இறுதியில் என்ன ஆனது என்பதே படம்.

படம் நெடுக, டாலியின் ஓவியங்கள் போல, அற்புதமாக ஸிஜி செய்யப்பட்டிருக்கிறது. இயக்குநர் டார்செம் சிங் பற்றி ஏற்கெனவே படித்திருப்பீர்கள். அவரது ‘The Cell‘ படம், இன்றும் எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. படத்தில் வரும் டார்ட்டாரஸ் மலை, ஒலிம்பியா மலை, கடல், பூமி ஆகிய அனைத்துமே கவிதையைப் போல் காட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஸிஜிக்காகவே, படத்தை இன்னொருமுறை பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

படத்தின் பெரிய பிரச்னை – கதையைத் தெரிந்துகொள்ளாமல் படம் பார்த்தீர்கள் எனில், ஒரு நிமிடம் கூடப் புரியாத நிலை ஏற்பட்டுவிடும். ஆகவே, நான் மேலே கொடுத்திருக்கும் கதையைப் படித்துவிட்டுப் படத்தைப் பாருங்கள்.

படம், மிகவும் மெதுவாகவே நகர்கிறது. இறுதிவரை அப்படித்தான். ஆனால், எனக்குப் படம் பிடித்தது. காரணம், கிரேக்கக் கடவுட்கள் பற்றி முன்பே தெரியும். ஆகவே, எப்படி இந்தக் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனித்துக்கொண்டிருந்ததால், நேரம் போனது தெரியவில்லை. ஆனால், என்னுடன் வந்திருந்த அனைவரும், சீட்டில் நெளிவதைப் பார்க்க முடிந்தது. படத்தைத் தமிழில் பார்க்க நேர்ந்தால் நல்லது. கட்டாயம் கதை புரியும். ஆகவே, தமிழில் இப்படம் வந்திருந்தால், அதனைப் பார்த்துவிடுங்கள். ஆங்கிலத்தில் அந்த அளவு புரிய வாய்ப்பில்லை.

படத்தின் ஸிஜி, டார்செம்மின் making ஆகிய இரண்டே விஷயங்கள்தான் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. கூடவே, ஹைபீரியனாகப் பட்டையைக் கிளப்பியிருக்கும் மிக்கி ரூர்க். ஸீயஸாக நடித்த லூக் இவான்ஸையும் எனக்குப் பிடித்தது. படம் நெடுக, ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் அதிகம். அதேபோல், தீஸியஸ், மினாடார் என்னும் மாட்டுத்தலை மனிதனுடன் போர்புரியும் காட்சி, புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதை, கிரேக்க இலக்கியத்தில் பிரபலம். ஆனால், அதனை எப்படி எடுத்திருக்கிறார் டார்செம் என்பதைக் கவனியுங்கள்.

மொத்தத்தில், கிரேக்க வரலாறு தெரிந்திருப்பவர்களுக்குப் படம் பிடிக்க வாய்ப்புகள் உள்ளது. ஜாலியாகப் பார்க்கலாம் என்று சென்றீர்கள் எனில், ஏமாற்றமே மிஞ்சும்.

Immortals படத்தின் ட்ரெய்லர் இங்கே.

குறிப்பு – விகிபீடியாவில் கூட இப்படத்தின் விரிவான கதை இன்னும் பதிவேற்றப்படவில்லை. அதற்கு முன்பாகவே இங்கே வந்துவிட்டது (மீ ஆல்ஸோ டமாரம்).

  Comments

14 Comments

  1. நேற்று மதியம் இந்தப் படம் பார்த்தேன். ஏற்கனவே டிரைலர் தூண்டியிருந்த ஆர்வத்தினாலும் நேற்றைய தினகரன் வெள்ளி மலரில் இந்த படத்தை பற்றி கே.என்.சிவராமன் எழுதியிருந்தை படித்ததாலும் தியேட்டரில் போய் உட்கார்ந்தேன். “மணியா..வரலாறு தெரிஞ்சுக்கனும்!” அப்பிடிங்கறது இந்தபடம் பார்க்கும்போது தெரிஞ்சுது. மோசமில்லை கொடுத்த காசுக்கு நிறைவே!

    Reply
  2. ஃபர்ஸ்ட் டிண்டின் எதிர்பார்த்தேன். ஆமா, L.A Noire pc வெர்சன் வந்திருக்காமே? விளையாடுவீங்களா? assassin’s cree revelations வேற வருது.

    Reply
  3. Immortals இன்னும் பார்க்கல தல …….. ஆனா படம் கொஞ்சம் மொக்கைனு கேள்வி பட்டேன் , ஆனா CG காக கண்டிப்பாக பார்ப்பேன், நேற்று TINTIN பார்த்தேன் செம யா இருந்துச்சு , விரைவில் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்கிற்றேன்

    Reply
  4. டின்டின் இன்று மதியம் பார்த்தேன்.. பிடித்திருந்தது..

    இந்த படத்தை நாளைக்கு பார்ப்பேன் என்று நினைக்கிறேன்.. 🙂

    Reply
  5. நேற்று படம் பார்ப்பதற்கு முன்னால் தங்கள் பதிவை பார்த்துவிட்டு சென்றேன். அதனால் குழப்பம் இல்லை. தியேட்டரில் நிறைய பேர் கதை புரியாமல் அனத்தி கொண்டிருந்தனர். லோக்கேஷன்களை நிறைய காட்டி இருக்கலாம். அட்லீஸ்ட் கிராபிக்ஸில். ஒரே இடத்தில் கேரக்டர்களுடன் நாமும் அடைபட்ட பீலிங். தேங்க்ஸ் பார் தி ரிவியூ ராஜேஷ்.

    Reply
  6. @ ரவிகுமார் – உங்களுக்குப் பிடிச்சதைப் பற்றி சந்தோஷம். பொதுவா, படத்தைப் பற்றிய நெகட்டிவ் ரிவ்யூஸ் தான் நிறைய இருக்கு. பர்சனலா எனக்குப் புடிச்சது. இன்னொருவாட்டி பாக்கனும்னு இருக்கேன்.

    @ kolipaiyan – மிக்க நன்றி 🙂

    @ பப்பு – Assassin ‘s Creed காக வெயிட்டிங். வந்தவுடனே கவ்விருவேன். ப்ளே ஸ்டேஷன் வெர்ஷன் 🙂 . . L.A நாரே PS3 பார்த்தேன். விளையாடிப்பார்க்கனும். Revelations விமர்சனம் சீக்கிரம் எதிர்பார்க்கலாம் 🙂

    @ டெனிம் – படம், கொஞ்சம் ஸ்லோ. மத்தபடி, ஸிஜி டாப். அதுக்காகவே பாருங்க

    @ MSK – இது உங்களுக்குப் புடிக்கும்னு நினைக்கிறேன். பார்த்தாச்சா?

    @ சிவகுமார் – அடைபட்டு இருப்பது போன்ற effect எனக்கும் இருந்தது. உண்மை. கதை உங்களுக்குப் பயன்பட்டது குறித்து மகிழ்ச்சி. மிக்க நன்றி

    Reply
  7. ஒரு நாளைக்கு ரெண்டு படம்……கலக்குங்க..ஒழுங்கா படத்துகாவது போயிருப்பேன்……மெட்ராஸ்ல வெட்டியா 12 கடை ஏறி இறங்குனது தான் மிச்சம்……..கடைசில….தமிழ்நாட்டின் பெரிய கார்பரேசன் – வேலூர்ல டின்டின் ரிலீஸ் ஆகல………..என்னத்த செய்ய……..

    Reply
  8. நீங்க காமிக்ஸ், புராண கதைகளுக்கு எழுதும் பதிவுகள் – ஒவ்வொன்னும்..அட்டகாசம்….Cambridge Companion Series, Oxford – VSI(Very Short Introduction)க்கு இணையா இருக்கு…..நேத்து கூட நமக்கு தெரிஞ்ச பொது நண்பர் ஒருத்தர்ட ஷெர்லாக் ஹோம்ஸ், உங்க பதிவ படிச்சிட்டு அப்பறம் அந்த கதைகள படிக்க சொன்னேன்..இப்பதான் அவர் ஆரம்பிக்கிறார்……The Hound of Baskervilleல இருந்து….

    உங்கள் சேவை என்றென்றும் தொடர வேண்டும்….

    Reply
  9. Rajesh… If possible can you write “The Fall” review in your style since I’m a big fan of this director.

    Reply
  10. @ கொழந்த – டிண்டின் & இம்மார்டல்ஸ் – தியேட்டர்ல மட்டுமே பார்க்கவேண்டியவை. அப்பாலிக்கா, காமிக்ஸ் & புராண பதிவு பத்தி – நமக்குப் புடிச்சதை எழுதும்போது அது நல்லாத்தானே இருக்கும்? 🙂

    @ Raj – கட்டாயம் எழுதுவேன். சீக்கிரமே 🙂

    Reply
  11. PS vachrukeengala? adha modhala vanganum.. pc ya game producers madhikave matengranga!

    Reply
  12. @ டெனிம் – படம், கொஞ்சம் ஸ்லோ. மத்தபடி, ஸிஜி டாப். அதுக்காகவே பாருங்க–

    Aama ஸிஜி na enna thala.

    Reply

Join the conversation