In the mood for Love (2000) – Cantonese
காதல் என்னும் உணர்வு எப்படி எழுகிறது? அது நமது மனதில் எழுகையில், நம்மால் அனைத்து சமூக நிலைகளையும் உடைத்தெறிந்துவிட்டு வெளியே வர இயலுமா? காதல், திருமணமாகாத மனிதர்களுக்கு இடையே தான் எழ வேண்டுமா? அது, எவ்வாறு நம்மைப் பாதிக்கிறது? காதலைப் பற்றி எந்த வகையிலும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. அதற்கு எல்லைகள் இல்லை.
இரண்டு நபர்களைக் காதல் எவ்வாறு அலைக்கழிக்கிறது என்பதை மிக அருமையாக நமக்குக் காட்டும் படமே ‘இன் த மூட் ஃபார் லவ்’.
அதற்கு முன் ஒரு கேள்வி: Bridges of Madison County படம் உங்களுக்குப் பிடித்ததா? அல்லது, Kabhi Alvidha naa kehna படம் பிடித்ததா ? (எனக்கு இரண்டுமே மிகவும் பிடிக்கும்). அப்படியென்றால், இதுவும் உங்களுக்குப் பிடிக்கும்.
சௌ மோ வான் என்பவன், 1962வின் ஒரு வசந்த காலத்தில், ஹாங்காங்கின் மிக நெரிசலான, சிறியதொரு அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒரு அறையை வாடகைக்கு எடுக்க வருகிறான். அந்தக் குடியிருப்பின் உரிமையாளரான சூயன் என்ற பெண்மணி, அவன் கேட்கும் அறை, ஏற்கெனவே இன்னொருவருக்குத் தரப்பட்டுள்ளது எனவும், அவன் அதற்குப் பக்கத்து அறையை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றும் சொல்கிறாள். அந்த அறையும், சௌ மோ வானுக்குப் பிடித்துவிடுகிறது.
அவன் தனது உடைமைகளை எடுத்துவரும்போது, அவனுக்குப் பக்கத்து அறையிலும் உடைமைகள் வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இரண்டு அறைகளின் பொருட்களும் மாறிமாறி வைக்கப்பட்டு விடுகின்றன.
அப்பொழுதுதான், தனது பக்கத்து அறையில், ஸோ லாய் ஸென் என்ற ஒரு பெண் குடிவந்திருப்பதைப் பார்க்கிறான் சௌ மோ வான். இவனது அறையில் வைக்கப்பட்டிருக்கும் அவளது சில பொருட்களை வந்து வாங்கிச்செல்கிறாள் ஸோ லாய் ஸென். அவள், ஒரு அலுவலகத்தில் காரியதரிசியாக இருப்பதை அவன் அறிந்து கொள்கிறான். அவனுக்குப் பத்திரிக்கைத் தொழில்.
சௌ மோ வானின் மனைவி, மிகவும் பிஸியான வேலையில் இருக்கிறாள். அவள் வீடு வருவதற்கே தினமும் இரவு வெகுநேரம் ஆகிவிடுகிறது. மட்டுமல்லாமல், அவள் அடிக்கடி வெளியூர் வேறு சென்றுகொண்டே இருக்கிறாள். அதனால், எப்பொழுதுமே தனிமையிலேயே இருக்கிறான் சௌ மோ வான். அதேபோல், ஸோ லாய் ஸென்னின் கணவனும் மிகமிகப் பிஸியாக, அடிக்கடி வெளிநாடு செல்பவனாக இருக்கிறான். இதனால், அவளும் தனிமையில் விடப்படுகிறாள்.
தான் உணவு உண்ண, பக்கத்து உணவுவிடுதிக்குச் செல்கையில், அடிக்கடி ஸோ லாய் ஸென்னைப் பார்க்கிறான் சௌ மோ வான். அவளுமே அதே விடுதிக்கு வந்து உணவு வாங்கிச் செல்கிறாள். ஏதும் பேசாமல், மிக மௌனமாக, சிறிய தலையசைப்பில் ஒருவரின் இருப்பை மற்றொருவர் புரிந்துகொண்டு, கடந்து சென்றுவிடுகிறார்கள் இருவரும்.
ஸோ லாய் ஸென்னின் கணவன் அடிக்கடி வெளிநாடு செல்வதால், அவளிடம் சொல்லி, அடுத்தமுறை அவன் செல்லும்போது தனது மனைவிக்கு அழகிய கைப்பை ஒன்றை வாங்கிவரச்சொல்கிறான் சௌ மோ வான். அவளும், தனது கணவனிடம் சொல்வதாகச் சொல்கிறாள். அதே போல், அவன் அணிந்திருக்கும் டை, அவளுக்கு மிகப்பிடித்து விடுகிறது. தனது மனைவி, வெளிநாடு செல்கையில் அதனை வாங்கி வந்ததாகச் சொல்கிறான் அவன். தனது மனைவியிடம் சொல்லி, ஸோ லாய் ஸென்னின் கணவனுக்குப் புதிய டை ஒன்றை வாங்கி வரச்சொல்வதாகக் கூறுகிறான்.
நாட்கள் செல்கின்றன.
ஓர்நாள், இருவரும் வெளியே ஓரிடத்தில் எதேச்சையாக சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது, தனது கணவனிடம், சௌ மோ வானின் டையைப் போலவே ஒரு டையைப் பார்த்ததாக ஸோ லாய் ஸென் சொல்கிறாள். அப்போதுதான், இந்த இருவரின் துணைவர்களும், ஒரு ரகசிய உறவில் இருப்பதை இருவருமே தெரிந்துகொள்கிறார்கள்.
அந்த உறவு எப்படி நிகழ்ந்தது என்று இருவரும் பேசிக்கொள்ளத் துவங்குகிறார்கள். இதில் துவங்குகிறது இருவருக்குமான நட்பு. மெல்ல மெல்ல இருவரும் வெளியே சந்தித்துக் கொள்ளத் துவங்க, இருவருக்குமே உள்ளுக்குள் சந்தோஷம். ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொள்கின்றனர்.
தான் வேலை பார்க்கும் பத்திரிகையில், ஒரு தொடர் எழுத முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு ஸோ லாய் ஸென்னின் உதவி வேண்டுமென்றும் சௌ மோ வான் சொல்கிறான். அவளும் சம்மதிக்கிறாள். ஆனால், தங்களது வீடுகள் இருக்கும் நிலையில், அவர்களால் அங்கே சந்தித்துக்கொள்ள முடிவதில்லை. கதை நடக்கும் அறுபதுகளின் சமூகச் சூழ்நிலை அப்படி. எனவே, அக்கம்பக்கத்தினர் தங்களது நட்பைச் சந்தேகப்படாமல் இருக்க, வெளியே ஒரு அறை எடுக்கிறான் அவன்.
அங்கு அவ்வப்போது வந்து, தொடருக்கான கதையை விவாதிக்கிறாள் ஸோ லாய் ஸென். அவளுக்குமே அது நிரம்பப் பிடித்திருக்கிறது. அப்படிப் பேசுகையில், இருவருமே தங்களது மனதுக்குள் காதல் வளர்வதை உணர்கிறார்கள். ஆனால், அது தவறு என்றும் நினைக்கிறார்கள்; தங்களது வாழ்க்கைத் துணைகளை நினைத்து.
இப்படி இருக்கையில், சௌ மோ வானுக்கு சிங்கப்பூரில் ஒரு வேலை கிடைக்கிறது. அதற்குச் செல்ல முடிவு செய்யும் அவன், தன்னுடன் வந்துவிடுமாறு ஸோ லாய் ஸென்னிடம் இறைஞ்சுகிறான். அவளால் முடிவெடுக்க முடிவதில்லை. அவனது அறையில் வெகுநேரம் காத்திருக்கும் சௌ மோ வான், வேறு வழியின்றிக் கிளம்புகிறான். சற்று நேரம் கழித்து, தனது வீட்டிலிருந்து ஓடி வரும் ஸோ லாய் ஸென்னை நாம் பார்க்கிறோம். ஆனால், அவள் வருவதற்குள், அவன் கிளம்பிவிட்டிருக்கிறான்.
சிங்கப்பூரில், சௌ மோ வானின் வீடு. ஒருநாள், அலுவலகத்திலிருந்து வீடு வருகையில், யாரோ அங்கு வந்துவிட்டுப் போன அடையாளங்களைக் காண்கிறான் அவன். அங்குள்ள ஒரு சிகரெட்டில் ஒட்டியிருக்கும் லிப்ஸ்டிக், வந்தது யாரென்று அவனுக்குச் சொல்கிறது. அவனுக்கு அதன்பின் ஒரு தொலைபேசியும் வருகிறது. ஆனால், மறுமுனையில் அழுத்தமான மௌனம். அது ஸோ லாய் ஸென்.
ஒருநாள், சௌ மோ வான் தனது அலுவலக நண்பனிடம் பேசிக்கொண்டிருக்கையில், மனதினுள் தாளாத ரகசியம் எதாவது இருந்தால், ஒரு காட்டுக்குள் சென்று, ஒரு மரத்தின் பொந்துக்குள் அதனைச் சொல்லிவிட்டால், அந்த அழுத்தம் மனதை விட்டு அகன்றுவிடும் என்றும், அந்த பொந்தினை அதன்பின், அடைத்துவிடவேண்டும் என்றும், அப்படிச்செய்தால், அந்த ரகசியம் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்றும் அந்த நண்பன் சொல்கிறான்.
ஆண்டுகள் கழிகின்றன. ஓர்நாள், தனது பழைய வீட்டிற்கு, ஸோ லாய் ஸென், தனது குழந்தையுடன் வருகிறாள். தனது புதிய வீடு அவளுக்குப் பிடிக்கவில்லையென்றும், தான் முன்பு இருந்த இந்த வீடுதான் வேண்டுமென்றும் வீட்டு உரிமையாளரான பெண்மணியிடம் சொல்கிறாள். ஆனால், அந்தப் பெண்மணி, அமெரிக்கா செல்ல இருப்பதால், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டுச் சென்றுவிடுகிறாள். தனது பழைய வீட்டிற்கே குடி வருகிறாள் ஸோ லாய் ஸென்.
சிறிது காலம் சென்று, அதே குடியிருப்புக்கு சௌ மோ வானும் வருகிறான். தனது பழைய உரிமையாளரைப் பார்க்க வந்ததாகச் சொல்லும் அவன், தான் முன்பு வாழ்ந்த வீட்டைப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறான். அந்த வீட்டைப் பார்க்கவும் செய்கிறான் (ஹே ராம் நினைவு வருகிறதா?). அப்போது, புதிய உரிமையாளரிடம், பக்கத்து வீட்டில் யாராவது இருக்கிறார்களா என்று அவன் கேட்க, அங்கு யாரோ ஒரு பெண்மணி, தனது குழந்தையுடன் இருப்பதாகப் பதில் வருகிறது. அங்கிருந்து கனத்த இதயத்துடன் திரும்புகிறான் சௌ மோ வான். பக்கத்து வீட்டில் இருப்பது அவனது காதலி என்று அறியாமலே.
சில வருடங்கள் செல்கின்றன. கம்போடியா. அங்குள்ள அங்கார் வாட் சிதைந்த கோவில் (டூம்ப் ரைடர் படத்தில் வருமே). அங்கே, சௌ மோ வான் நின்றுகொண்டிருக்கிறான். அவனுக்கு முன்னே, ஒரு இடிந்த தூண். அதில் ஒரு பொந்து. அந்த பொந்தினுள், தனது மனதில் உள்ள ரகசியத்தை அவன் முணுமுணுக்கிறான். அதன்பின், அந்த பொந்தை அடைக்கவும் செய்கிறான். அவனது செய்கைகளை, அந்தப் பழைய கோவில் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாமும். மனதை அழுத்தும் உணர்வோடு, படம் முடிகிறது.
சிதைந்த காதலைப் பற்றி எத்தனையோ படங்கள் உண்டு. அவற்றில், சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்று தயங்காமல் சொல்லிவிடலாம். அவ்வளவு அருமையான படம் இது. படம் நெடுக, மௌனம் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. ஆரம்பம் முதல், இருவரும் சந்தித்துக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் கவிதை எனலாம். அந்தக் காட்சிகளில் பெருகும் பின்னணி இசை, நமது மனதைப் பிழிகிறது.
மௌனத்தைப் போலவே, தனிமையும் ஒரு முக்கியமான இடத்தை இப்படத்தில் வகிக்கிறது. இருவரின் தனிமையும், பிரம்மாண்டமாக மாறி அவர்களை அழுத்துவது, மிக நல்ல முறையில் இப்படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தனிமையின் காரணமாகவே, ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு சுரந்து, அது காதலாக மாறுகிறது.
அதேபோல், வசனங்களும் இப்படத்தில் மிகக்குறைவு.
திரைக்கதை உத்திகளில், ஒரு காட்சியில் நுழைவதும், அதில் இருந்து வெளியேறுவதும் மிக முக்கியம். அதை சரியாக நிர்ணயிப்பதில்தான் அந்த இயக்குநரின் முழுத்திறமையும் உள்ளது என்பது, திரைக்கதை பிதாமகர் Syd Field அடிக்கடி தனது பல புத்தகங்களில் சொல்லும் உண்மை. தமிழில் கூட, சுஜாதா எழுதிய ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ புத்தகத்திலும், சிட் ஃபீல்டின் இந்தக் கருத்தை அடியொற்றியே சுஜாதா எழுதியிருப்பார். இந்த உத்திக்கு, இந்தப் படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். ஒரு காட்சியில், மிகமிகத் தாமதமாக நுழைந்து, மிக விரைவில் வெளியேற வேண்டும் என்பதே அந்த உத்தி. சொல்ல வந்ததை சரியாகச் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு, ஹீரோ தம்மடிப்பதை ஒரு முழு நிமிடம் காட்டிவிட்டு, அதன்பின் ஹீரோவின் மொக்கை நண்பன் ஒரு ஜோக்கடித்து, அதன்பின் (முடிந்தால் ஒரு தத்துவப்பாட்டு), மெதுவாக ஒரு அரைப்பக்க வசனத்தின் மூலம் அந்தக் காட்சியின் சாராம்சத்தை விவரிக்கும் மொக்கையான முறை இன்னமும் தமிழ்ப்படங்களில் இருப்பதை நண்பர்கள் கவனித்திருக்கலாம்.
ஆனால் இப்படத்தில், எந்தக் காட்சியுமே நீளமாக இல்லை. சட் சட்டென்று வெட்டப்படும் காட்சிகள், அந்தக் குறிப்பிட்ட காட்சியின் சாராம்சத்தை நமக்கு மிகச்சரியாக உணர்த்திவிடுகின்றன. குறிப்பாக, இருவரும் உணவு விடுதிக்குச் செல்லும் காட்சிகளைக் கவனியுங்கள்.
இப்படத்தின் இயக்குநர் வோங் கார் வாய். சமகாலத்திய இயக்குநர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
In the mood for Love – உங்களது உள்ளங்களை மெதுவாக மென்சோகத்தில் ஆழ்த்தும். ஆனால், அந்த சோகத்திலும் ஒரு இனிமை இருப்பதை உணர்வீர்கள்.
In the Mood for Love படத்தின் ட்ரெய்லர் இங்கே.
இப்படத்தின் உள்ளத்தைக் கவ்வும் தீம் இசை, இங்கே கேட்கலாம்
தூங்கச்செல்வதால், பின்னூட்ட பதில், நாளை.. குட் நைட்.
மீ த ஃபர்ஸ்டு
உலக சினிமா???
ஹும்ம்.. குட் நைட்!!!!!!!!!!!!!!!!!!
இது என்ன என்னய மாதிரி பச்ச புள்ளைங்க பாக்க வேண்டிய படமா 🙂
மீ த FIFTH….:)
என்னையும் உங்க ஆட்டத்துக சேர்த்துகிங்க கருந்தேள்,
தலதான் கமெண்ட்ஸ்ச லாக் பண்ணிட்டாங்க,
SPARTACUS பார்த்துகிட்டு இருக்கேன் நாளைதான் வாசிக்கணும்,
குட் நைட் கருந்தேள்,
//தலதான் கமெண்ட்ஸ்ச லாக் பண்ணிட்டாங்க,//
இவரை என்னப் பண்ணலாம்??????????
மீ டீப் திங்கிங்!
நடு சாமத்தில பதிவா…என்ன கொடுமை சார்?
Kar Wai Wong,இயக்கிய படத்தை பற்றி நானும் ஒரு சமயம் எழுதியிருந்தேன்..
http://msk-cinema.blogspot.com/2010/05/chungking-express-1994-chinese-chung.html
Chungking Express [1994] – Chinese (Chung Hing sam lam) – காதல் நகரும் திசை..
thanks for this review..
நீங்களும் பாலா சார் மாதிரியே ஒரு erotic படத்துக்கு கூட விரசமே இல்லாம விமர்சனம் போடுறீங்க பாருங்க! அது ரொம்ப பிடிச்சிருக்கு
எஸ்.கே said…
நீங்களும் பாலா சார் மாதிரியே ஒரு erotic படத்துக்கு கூட விரசமே இல்லாம விமர்சனம் போடுறீங்க பாருங்க! அது ரொம்ப பிடிச்சிருக்கு
—
யாருங்க அது பாலா சாரு…
தங்கள் பதிவு சிறப்பாக இருந்தது. நல்ல கருத்துக்களை முன்வைப்பதற்கு நன்றி. தங்களின் எழுத்துப் பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் :))
//ஒரு erotic படத்துக்கு கூட விரசமே இல்லாம விமர்சனம் போடுறீங்க பாருங்க//
பயபுள்ள நானு la belle பத்தி எழுதினத படிக்கல போல.. 🙂
அது பிட்டுனா பிட்டு அப்படி ஒரு பிட்டுப் படம். 🙂
//தலதான் கமெண்ட்ஸ்ச லாக் பண்ணிட்டாங்க,//
இவரை என்னப் பண்ணலாம்??????????
மீ டீப் திங்கிங்!
தல வாரம் இரண்டு விமர்சனம் அது போதும்…,
கைகூடாத காதலுக்கு எப்பவுமே ஆயுளும் வலியும் அதிகம்,
ஆனா அதுவும் ஒரு சுகம்தான் கருந்தேள்,
நண்பா,மிக அருமையான படம்,மிக அழகாக காட்சிகளை விவரித்துள்ளீர்கள்.
அந்த ஹீரோயின் செம ப்யூட்டி,எனக்கும் ப்ரிட்ஜஸ் ஆஃப் மேடிசன் கண்ட்ரி நினைவுக்கு வந்தது,பொறுமையாக படம் சென்றாலும் காட்சியாக்கம் கவிதை,நீங்கள் குறிப்பிட்ட வளவளஎன் நீளாத எடிடிங்,நம்மில் திருமணம் என்னும் வேலிக்குள் நிறைய பேர் இப்படி கைதிகளாய் வாழ்கின்றனர் என்பதற்கு இப்படம் நல்ல சான்று.
இழந்த காதலின் வலியைச் சொல்லும் அற்புதமான திரைப்படம். மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே.
மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்கையா …………… :))
.
நண்பரே,
கைகூடாக் காதல் இதயத்தின் பைகளிலே முடங்கிப் போய் இருக்கிறது. அதனை அங்கிருந்து தூக்கி இலகுவாக எறிந்துவிட முடியாது. தனிமையின் துணை பிரிவைக் கொல்வதற்கு காதலை மீண்டும் மீண்டும் யாசிக்கிறது. வெற்றி பெறாமலே.
பின்னி எடுத்து விட்டீர்கள். இப்படி ஒரு எழுத்தை நான் இதுவரையில் படிக்கவில்லை. உங்கள் தமிழ் சேவை தொடர மாரியம்மன் கோவிலில் ஒரு பாக்கெட் கற்பூரம் கொளுத்தப் போகிறேன். எவ்வாறு உங்களால் இவ்வாறு எழுத முடிகிறது :))
laptop crashed unexpectedly . . So i’l b able to respond on monday nite. No blog post till then. . Enna koduma sir idhu !
விடுமுறை நாட்களீல் அம்மா கையால் செய்த மீன் குழம்பை நல்ல முக்கு பிடிக்க சாப்பிட்டு அந்த மந்தியான வேளையில் ஒர் அருமையான தூக்கம் வரும் பாருங்கள்,என்ன சுகம் !!!
அதை போன்ற ஒரு உணர்வு,ஒரு சுகம் உங்கள் விமர்சனம்.
வாழ்த்துக்கள்
அறிமுகத்துக்கு நன்றி தலைவரே… 🙂 🙂 விமர்சனமும் அருமை.. இன்னும் சில படங்கள் பார்க்க வேண்டியுள்ள்து.. பார்த்துவிட்டு இந்த படத்தை பார்க்க வேண்டும்.. 🙂
//மௌனத்தைப் போலவே, தனிமையும் ஒரு முக்கியமான இடத்தை இப்படத்தில் வகிக்கிறது. இருவரின் தனிமையும், பிரம்மாண்டமாக மாறி அவர்களை அழுத்துவது, மிக நல்ல முறையில் இப்படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தனிமையின் காரணமாகவே, ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு சுரந்து, அது காதலாக மாறுகிறது. //
அருமை.
விரிவாக அலசி இருக்கிறீர்கள்.குறிப்பாக,காட்சிகளைப் பற்றி.
நண்பா,மிக அருமையான படம்,மிக அழகாக காட்சிகளை விவரித்துள்ளீர்கள்.
அந்த ஹீரோயின் செம ப்யூட்டி,எனக்கும் ப்ரிட்ஜஸ் ஆஃப் மேடிசன் கண்ட்ரி நினைவுக்கு வந்தது,பொறுமையாக படம் சென்றாலும் காட்சியாக்கம் கவிதை,நீங்கள் குறிப்பிட்ட வளவளஎன் நீளாத எடிடிங்,நம்மில் திருமணம் என்னும் வேலிக்குள் நிறைய பேர் இப்படி கைதிகளாய் வாழ்கின்றனர் என்பதற்கு இப்படம் நல்ல சான்று
அப்பிடியே வரிக்கு வரி ரிப்பீட்டிக்கிறேன். நன்னி.
ஏதோ உங்க புண்ணியத்தால இந்த படங்களைப்பத்தி எல்லாம் தெரிஞ்சுக்க முடியுது…