Interstellar (2014) – English: பழைய திரைக்கதை

by Karundhel Rajesh November 10, 2014   English films

இண்டர்ஸ்டெல்லார் பற்றிய அனைத்துக் கட்டுரைகளையும் படிக்க

சென்ற கட்டுரையில் லீக் செய்யப்பட்ட இண்டர்ஸ்டெல்லார் திரைக்கதை பற்றிச் சொல்லியிருந்தேன். அது இப்போது வெளியாகியிருக்கும் படத்தைவிடவும் (கொஞ்சமாவது) சுவாரஸ்யமான திரைக்கதை. ஏனெனில் இதில் வசனங்கள் குறைவு. action அதிகம். எக்கச்சக்க இயற்பியல் விஷயங்களும் அதிகம். அதைப்பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இதன்பின் படத்தின் நிறை குறைகளைப் பார்த்தால் இன்னும் எவையெல்லாம் விடப்பட்டன – எவையெல்லாம் மாற்றப்பட்டன என்பது நன்றாகப் புரியும்.

திரைக்கதையின் ஆரம்பத்தில் ஒரு Neutron நட்சத்திரம் அண்டவெளியில் வருவதைக் காண்கிறோம். அது ஒரு கருந்துளைக்குள் இழுக்கப்படுகிறது. உள்ளே சென்று வெடிக்கிறது. கருந்துளைக்குள் இருந்து எதுவும் வெளியே வர இயலாது என்றாலும், அந்த வெடிப்பு மிகப் பிரம்மாண்டமாக இருப்பதால் அதன் அதிர்வு விண்வெளியெங்கும் பரவுகிறது. அதன் ஒரு பகுதி, அங்கிருக்கும் வார்ம்ஹோலுக்குள் சென்று, மறுபக்கம் வெளிவந்து பூமியை அடைகிறது. இதற்குள் அது மிகச்சிறிய அதிர்வாகியிருப்பதால் அமெரிக்காவின் ஒரு சிறிய கட்டிடத்தில் இருக்கும் சில கருவிகளை சற்றே அதிரவைப்பதோடு முடிந்துவிடுகிறது. இதனால் அங்கிருக்கும் ஒரு கருவி இயங்க ஆரம்பிக்க, அதைப் பார்க்கும் ஒரு மனிதன் அதிர்கிறான். சுருக்கமாக – அண்டவெளியின் மறுபக்கத்தில் இருந்து இந்த அதிர்வு வருவது அவனுக்குத் தெரிந்துவிட்டது. உடனடியாக இது நாஸாவுக்குத் தெரிவிக்கப்பட, அனைவரும் பரபரப்பாகின்றனர். நாஸாவின் விஞ்ஞானி ஆன்ஸென், இந்த அதிர்வின் மூலமாக வார்ம்ஹோலை உறுதி செய்கிறார். அடுத்த ஐம்பது வருடங்களில் பூமியின் எதிர்காலம் மாறப்போகிறது என்று சொல்கிறார்.

ஐம்பது வருடங்கள் கழித்து – கூப்பரையும் அவனது குடும்பத்தையும் சந்திக்கிறோம். தற்போது படத்தில் மர்ஃபி பெண். ஆனால் ஒரிஜினல் திரைக்கதையில் அவன் பத்து வயதுச் சிறுவன். பேஸ்பால் மேட்ச் பார்க்கிறார்கள். அப்போது வானில் ஒரு ஸாடலைட் நொறுங்குவதைக் கவனிக்கிறார்கள். ஒரு நாள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது தாழ்வாகப் பறக்கும் ஒரு சைனீஸ் விமானத்தைப் பார்க்கிறான் கூப்பர். அதைத் துரத்துகிறான். அதைப் பிடித்து, விவசாயத்துக்குப் பயன்படுத்தவேண்டும் என்பது அவன் திட்டம். தனது லேப்டாப்பில் விமானத்தைக் கட்டுப்படுத்திப் பிடிக்கிறான். இவன் ஒரு எஞ்சினியர் என்பதால் சில கருவிகளைச் சரிசெய்ய அப்போது இவனுக்குத் தொலைபேசி வருகிறது. அந்த இடத்தில் சென்று பார்த்தால், பேஸ்பால் மேட்ச்சின்போது ஸாடலைட்டுடன் மோதி அதனை நொறுங்கச் செய்த கருவி அங்கே விழுந்திருக்கிறது. அதிலிருந்து அடிக்கடி சத்தம் வருகிறது. அதைப் பரிசோதிக்கிறான் கூப்பர். அப்போது அதிலிருக்கும் ஒரு படம் இவனுக்கு மானிட்டரில் தெரிகிறது. பனியினால் சூழப்பட்ட ஒரு கிரகம் அது. அங்கு சென்று தகவல்களைச் சேகரித்துக்கொண்டு வந்திருக்கும் ஆளில்லாத விண்கலம் ஒன்றின் பகுதி அது என்று கூப்பர் புரிந்துகொள்கிறான்.அங்கிருந்து ஆளில்லாத தீவு ஒன்றுக்குச் சில இயந்திரங்களை எடுத்து விவசாயத்துக்குப் பயன்படுத்தக் கூப்பர் மர்ஃபியை அழைத்துக்கொண்டு செல்ல, அங்கே டார்ஸ் என்ற பழைய ரோபோ ஒன்றைப் பார்க்கிறார்கள். தன்னுடன் இருக்கும் அந்த ஆளில்லாக் கலத்தின் முக்கியமான பகுதியை உருக்கி அதிலிருந்து இரும்பு எடுக்கலாம் என்பது கூப்பரின் திட்டம். அப்போது அதன் சத்தத்தைக் கேட்டு டார்ஸ் அதை எடுத்து, டார்ஸின் எஜமானி அமேலியா என்ற பெண்ணிடம் கொடுக்கிறது. அவர்கள் கூப்பரையும் மர்ஃபியையும் சிறைப்படுத்தி அமேலியாவின் தந்தை டாக்டர் ப்ராண்டிடம் கொண்டுசெல்கிறார்கள். இந்தக் கலத்தில் இருக்கும் ஐஸ் கிரகத்தின் படத்தைக் கண்டு ப்ராண்ட் உணர்ச்சிவசப்படுகிறார். வார்ம்ஹோலினுள் சென்று திரும்பிய ஒரே கலம் அதுதான் என்று தெரிகிறது. அங்கே ஒரு பிரம்மாண்ட ராக்கெட்டை கூப்பர் பார்க்கிறான். அப்போது அந்த வார்ம்ஹோல் பற்றியும் அதற்குப்பின்னிருக்கும் சில கிரகங்கள் பற்றியும் ப்ராண்ட் கூப்பருக்கு எடுத்துச் சொல்கிறார். கூப்பரும் தங்களுடன் பங்கேற்கவேண்டும் என்பது ப்ராண்டின் ஆசை. கூப்பருடன் வந்த கலத்தில்தான் வார்ம்ஹோலுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று முதன்முதலில் ஐம்பது வருடங்கள் கழித்து இவர்களுக்குத் தெரிந்துள்ளது ஒரு காரணம். கூப்பர் ஒரு கைதேர்ந்த பைலட் என்பது இன்னொரு காரணம். கூப்பர் மறுக்கிறான். தனது இரண்டு மகன்களைப் பிரிய முடியாது என்பது அவனுடைய வாதம். இருந்தாலும் மனிதகுலத்தின் எதிர்காலத்துக்காக இந்தப் பயணம் செல்வதாகச் சொல்லிக் கூப்பரின் மனதைக் கரைத்துவிடுகிறார் ப்ராண்ட்.

வீட்டுக்குச் சென்று மர்ஃபியைக் கன்வின்ஸ் செய்ய முயல்கிறான் கூப்பர். ஆனால் மர்ஃபியும் இவனுடன் வருவதாகச் சொல்லி அழுகிறான். அனைவரிடமும் பிரியாவிடை பெற்று விண்வெளிப் பயணத்தில் பங்கேற்க வந்துசேருகிறான் கூப்பர்.

அங்கே, தன்னுடன் பயணிக்கப்போகும் டாயில், ரோத், அமேலியா ஆகியோரைச் சந்திக்கிறான். பயணம் பற்றிக் கூப்பருக்கு விளக்கப்படுகிறது. என்னவெனில், வார்ம்ஹோலுக்கு அப்பால் மிகப்பெரிய கருந்துளை ஒன்று உண்டு. அதன்பெயர் கார்கேஞ்ச்சுவா. அதை இன்னொரு சிறிய கருந்துளை சுற்றிக்கொண்டிருக்கிறது. அதன்பெயர் – பாண்டாக்ருயல் (Pantagruel). அந்தச் சிறிய கருந்துளைக்கு அருகேதான் ஐஸ் கிரகம் உள்ளது. ஆனால் அதற்குச் செல்ல, கருந்துளையைச் சுற்றிக்கொண்டுதான் செல்லவேண்டும். ஆனால் கருந்துளையைச் சுற்றினால் அங்கு ஒரு மணி நேரமென்றால் பூமியில் ஐந்து வருடங்கள் ஆகும். கூப்பர் யோசிக்க ஆரம்பிக்கிறான். கலம் கிளம்புகிறது. எண்ட்யூரன்ஸ் என்ற விண்வெளி ஸ்டேஷனை அடைந்து, அங்கிருக்கும் கலத்துடன் ஒட்டிக்கொண்டு வார்ம்ஹோலை நோக்கிக் கிளம்புகிறது. வார்ம்ஹோலை நெருங்குகிறது. வார்ம்ஹோல் மிகப்பெரியது அல்ல என்பதால், கலத்தின் கீழே உள்ள திறப்பில் வார்ம்ஹோலின் திறப்பை உள்ளிழுத்து மூடிக்கொள்கிறது கலம். அதாவது, ஒரு பெரிய நண்டு, ஒரு முத்தின்மேல் அமர்ந்துகொண்டால் எப்படி இருக்கும்? அந்த முத்து தான் வார்ம்ஹோல். அதை கலத்தின் கீழே இருக்கும் திறப்பைத் திறந்து, கலத்துக்குள்ளே வார்ம்ஹோலின் திறப்பு இருக்கும்படிச் செய்து கலத்தை மூடுகிறார்கள். மெல்ல மெல்லக் கலம் வார்ம்ஹோலின் உள்ளே செல்கிறது. மறுபக்கம் வருகிறது. அங்கே மிக அழகான ஒளிச்சிதறல்கள். பல நட்சத்திரங்கள். அங்கே நடுவில் கார்கான்ச்சுவா என்ற பிரம்மாண்டமான கருந்துளை.

திடீரென இவர்களின் கலம் இழுக்கப்படுகிறது. சிறிய கருந்துளையான பாண்டாக்ருயல் இந்த வார்ம்ஹோலுக்கு மிக அருகே இருப்பதால் அது தங்களை இழுப்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அதைச்சுற்றிக்கொண்டு ஐஸ் கிரகத்துக்குச் செல்ல இவர்கள் போட்டிருந்த வழியிலேயே எதேச்சையாக ஈர்ப்பு விசையால் இவர்களின் கலம் செல்கிறது. கருந்துளையைச் சுற்ற ஆரம்பிக்கிறது. நான்கு நொடிகளுக்கு ஒரு முழுச்சுற்று என்ற வேகத்தில். அங்கிருந்து வெளியேறவேண்டும் என்றால் ஒரே சமயத்தில் அனைத்து இஞ்சின்களையும் இயக்கவேண்டும். இப்போதைய படத்தில் க்ளைமேக்ஸுக்கு முன்னர் நடக்கிறதே அந்தக் காட்சி. அப்படியே செய்து சிறிய கருந்துளையின் ஈர்ப்பிலிருந்து வெளியேறி, அருகே இருக்கும் ஐஸ் கிரகத்தை அடைகிறார்கள். அங்கே, கடந்த ஐம்பது வருடங்களில் செலுத்தப்பட்ட அத்தனை ஆளில்லாக் கலங்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்கின்றன என்று தெரிகிறது. ஐஸ் கிரகத்தில் இறங்குகிறார்கள். கிரகத்தில் இறங்கியபின்னர், அங்கே ஐஸில் புதையுண்டு கிடக்கும் ஒரு சிகப்புக் கொடியைப் பார்த்தபின்னர்தான், அங்கே ஏற்கெனவே சைனாவைச் சேர்ந்த கலங்கள் வந்திருப்பது தெரிகிறது. அப்போதுதான் அந்தக் கிரகத்தின் மிகப்பெரிய ஆபத்து இவர்களுக்குப் புரிகிறது. என்னவென்றால், ஒரு பெரிய neutron நட்சத்திரமும் கருந்துளையைச் சுற்றிவந்துகொண்டிருக்கிறது. அதில் எக்கச்சக்கக் கதிர்வீச்சுகள் இருப்பதால், அந்த நட்சத்திரம் இவர்கள் இருக்கும் கிரகத்தைத் தாண்டும்போது கிரகத்தின் அந்தப் பகுதியில் இருக்கும் எல்லாமே எரிந்துவிடும். ஒவ்வொரு 20 மணி நேரத்துக்கும் ஒருமுறை அந்த நட்சத்திரம் இவர்களின் கிரகத்தைக் கடக்கிறது. இதனால்தான் சைனீஸ் விண்கப்பலில் வந்திருந்த அனைவரும் இறந்துவிட்டனர் என்று புரிகிறது. அடுத்த இருபது மணி நேரம் முடிய இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் உள்ளன (புதிய படத்தில் இதற்குப் பதில் வேறொரு கிரகத்தில் பிரம்மாண்ட அலைகள்). அப்போது இவர்களுக்குக் கீழே இருக்கும் பனி ஒளிர ஆரம்பிக்கிறது. அது பனி அல்ல – உண்மையில் அவை உயிரினங்கள். நட்சத்திரத்தில் இருந்து வரும் கதிர்வீச்சுகளை உள்வாங்கிக்கொண்டு பதிலுக்கு ஒளியை உமிழ்ந்து, அதனாலேயே உயிர்வாழும் ஏலியன்கள் அவை. அப்போது இவர்களுடன் வந்திருக்கும் Case என்ற ரோபோ அந்த ஐஸைத் தோண்டுவதால் கீழே பிரம்மாண்டமான பள்ளம் ஏற்பட்டு அதனுள் விழுகிறார்கள். மேலே நியூட்ரான் நட்சத்திரம் இவர்களைக் கடக்கிறது. கீழே இருக்கும் ஏராளமான தண்ணீரில் அனைவரும் விழுகிறார்கள். சுத்தமான தண்ணீர். சுற்றிலும் ஆக்ஸிஜன். மனிதர்கள் உயிர்வாழ ஏற்ற இடம் அது.

INTERSTELLAR

அங்கே பல செடிகளும் உள்ளன. அவையுமே ஏலியன்கள்தான். மேலே இருக்கும் ஏலியன்கள் கதிர்வீச்சை உள்வாங்கிக்கொண்டு ஒளியை உமிழ, கீழே இருக்கும் ஏலியன்கள் அந்த ஒளியை உள்வாங்கிக்கொண்டு ஆக்ஸிஜனை உமிழ்கின்றன. மெல்ல மெல்ல இரவில் ஒன்றுசேரும் இந்தச் செடிகள், தங்களுக்குள்ளேயே பலப்பல வடிவங்களை எடுத்துக்கொண்டு ஒன்றோடொன்று சண்டையிடுகின்றன. பல்லாயிரம் வருடங்களாக அவை இப்படியேதான் உயிர்வாழ்கின்றன என்று கூப்பரின் குழு கண்டுபிடிக்கிறது. இப்படி ஒன்றுசேர்ந்து தங்களுக்குள் இரவுதோறும் அவை மோதிக்கொள்கின்றன.

அங்கிருந்து சற்றுத்தொலைவில் பாழடைந்த சைனீஸ் காலனி உள்ளது. ஆயிரக்கணக்கான மனிதர்கள் வாழத் தகுதிவாய்ந்த இடம் அது. ஆனால் இதில் அவர்கள் குடியேறுவதற்குள் சைனாவின் அரசாங்கம் கவிழ்ந்து, அனைவரும் இறந்துவிட்டதால் இந்த இடம் பாழடைந்து கிடக்கிறது. அங்கு உள்ளே சென்றால், எதுவோ ஒரு பரிசோதனை நடந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உள்ளே ஒரு அறையில் ஒரு மிகப்பெரிய இரும்புப் பந்து உள்ளது. அங்கு ஒரு இடத்தில் அவர்களின் குறிப்புகள் உள்ளன. அதன்படி, இருபது வருடங்களுக்கு முன்னர் சைனாவைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்ததாகவும், முதல் நாளே கதிர்வீச்சில் அனைவரும் இறந்துவிட்டதாகவும், அவர்களுடன் வந்த ரோபோக்களுக்கு எதுவும் ஆகாமல், இந்த மிகப்பெரிய காலனியை அவை கட்டியதாகவும் தெரிகின்றன. இதன்பின் ஐந்து வருடங்கள் கழித்து சைனாவைச் சேந்தவர்கள் இங்கே மறுபடி வந்து சில பரிசோதனைகளை மேற்கொண்டு, பின்னர் ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டதைக் கூப்பரின் குழு கண்டுபிடிக்கிறது. அப்போதுதான், திடீரென அங்கிருக்கும் ஒரு சிறிய சாதனத்தை இவர்கள் தவறுதலாக இயக்கிவிட, அனைவரும் கீழிருந்து மேலே செலுத்தப்படுகிறார்கள். கூரையில் ஒட்டிக்கொள்கிறார்கள். அந்த சாதனத்தைத்தான் சைனாவைச் சேந்தவர்கள் கண்டுபிடித்திருப்பது தெரிகிறது. ஈர்ப்பு விசையை தலைகீழாக மாற்றும் கருவி அது. இது பூமியில் இருந்தால், இதை இயக்குவதன்மூலம் அனைவரும் புவியீர்ப்பு விசையை நேர் எதிராக மாற்றி, அதன்மூலம் பூமியில் இருந்து எளிதில் வெளியேறிவிடலாம். ஆனால் இதை சைனா ஏன் பயன்படுத்தவில்லை? அதற்குள் அங்கே அனைவரும் இறந்ததுதான் காரணம்.

அங்கிருந்து அந்தக் கருவியுடன் வெளியேறும்போது சைனாவைச் சேர்ந்த ரோபோக்கள் இவர்களைச் சிறைபிடிக்க, Case (ரோபோ) அவர்களுடன் மோதுகிறது. இவர்கள் தப்பிக்கிறார்கள். ஆனால் ரோபோக்களால் இவர்களின் கலம் செயலிழக்கிறது. சைனாவின் காலனியில் இருக்கும் மிஞ்சிய ஒரே கலம்தான் தப்பிக்க வழி. ஆனால் அங்கே செல்ல முடியாது. இதனால், இவர்களுடன் வந்த ரோத், தனது கையில் அந்த ஈர்ப்புவிசையைக் கட்டுப்படுத்தும் கருவியை எடுத்துக்கொண்டு ஒரு சிறிய விண்கலத்தில் அருகே இருக்கும் அந்த கிரகத்தின் சந்திரனுக்குச் சென்று, கருவியை இயக்குகிறான். ஒரே நொடியில் இவர்களின் கிரகத்தின் ஈர்ப்பு விசை தலைகீழாகிறது. இதனால் அனைத்தும் வானத்தை நோக்கிப் பறக்கின்றன. அப்பொது மேலே வரும் சைனா விண்கலத்தைக் கூப்பரும் அமேலியாவும் கைப்பற்றி, அங்கிருந்து கேஸுடன் தப்பிக்கிறார்கள்.

ஆனால் இந்தக் களேபரத்தில் கருந்துளைக்கு அருகே இவர்கள் ஆர்பிட் செய்வதால் 47 வருடங்கள் கடந்துவிடுகின்றன. கிரகத்தின் ஈர்ப்பு விசை மாற்றப்பட்டதால் அது கருந்துளையை நோக்கி இழுக்கப்படுகிறது. கருந்துளையின் எல்லைக்குள் சென்று வெடித்துச் சிதறுகிறது. அங்கிருந்த சிறிய செடிபோன்ற உயிரினங்களை அமேலியா எடுத்து வந்திருக்கிறாள். அவையே அந்தக் கிரகத்தின் ஒரே மிச்சமிருக்கும் உயிர்கள். இப்போது இவர்கள் வந்த வார்ம்ஹோலுமே கருந்துளையை நோக்கி இழுக்கப்பட ஆரம்பிக்கிறது. இது ஏனெனில், ஐஸ் கிரகத்தின் ஆர்பிட்டைப் பொறுத்துதான் வார்ம்ஹோலின் ஆர்பிட்டும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கிரகமே அழிந்தபின் வார்ம்ஹோலின் ஆர்பிட்டும் சிதைக்கப்பட்டு, அதனால் கருந்துளையை நோக்கி இழுக்கப்படுகிறது. அங்குள்ள அத்தனையுமே உள்ளிழுக்கப்படுகின்றன. சுற்றிலும் எல்லாமே படுவேகமாக கருந்துளைக்குள் சென்று மறைகின்றன. அப்போதுதான் கூப்பர் அங்கிருக்கும் ராடாரில் மிகச்சிறிய ஒளிப்புள்ளி ஒன்றைப் பார்க்கிறான். கருந்துளைக்குப் பின்னால் இருக்கும் அது, இன்னொரு வார்ம்ஹோல். பரபரப்படையும் இவர்கள், கருந்துளையின் சுழற்சியால் இழுக்கப்பட்டு அந்த வார்ம்ஹோல் இருக்கும் இடத்தை நெருங்கும்போது விண்கலத்தை இயக்க, அந்த வேகத்தால் உந்தப்பட்டு கலம் அந்த வார்ம்ஹோலுக்குள் நுழைகிறது. அதன்பின் பல நாட்கள் காரிருளில் மிதக்கிறார்கள். மறுபக்கம் என்ற ஒன்றே இல்லை என்று தோன்றுகிறது. அப்போதுதான் திடீரென்று இவர்களின் கலத்தின் மானிட்டர் உயிர்பெற்று, பூமியில் இருந்து இத்தனை வருடங்களில் வந்திருக்கும் அத்தனை வீடியோக்களும் ஒவ்வொன்றாகப் போடப்படுகின்றன. இப்போதைய படத்தில் கூப்பரின் மகன் அவருடன் பேசுகிறான் அல்லவா? அந்த முழு சீக்வென்ஸும் பழைய திரைக்கதையில் இங்குதான் வருகிறது. மர்பி முதன்முறையாகக் கூப்பருடன் Hello Dad… You Sonofabitch என்று பேசுவதும் இங்குதான்.

அப்போது திடீரென்று இவர்களின் கலத்தில் ஒரு ஒளிச்சிதறல் தோன்றுகிறது. அதனருகே இவர்கள் செல்ல, அந்த ஒளிச்சிதறல் இவர்களைச் சீண்டுகிறது. எதுவோ சொல்ல நினைப்பதுபோல. அமேலியா அங்கிருக்கும் சில பால் பேரிங்குகளை அதனை நோக்கி வீச, அந்த ஒளிச்சிதறல் அவைகளை ஒழுங்குபடுத்துகிறது. முதலில் பூமி இருக்கும் சோலார் சிஸ்டமாக அவை மாறுகின்றன. பின்னர் கார்கேஞ்ச்சுவா, ஐஸ் கிரகம் மற்றும் சிறிய கருந்துளையாக மாறுகின்றன. பின்னர் எல்லாமே சேர்ந்து தட்டையான ஒரு தளமாகவும், அதற்கு மேல் ஒரே ஒரு பால் பேரிங் மட்டும் சென்று நிற்கிறது (E.T படத்தில் அந்த ஜந்து அதன் கிரகத்தைக் காண்பிக்கும் காட்சி நினைவு வருகிறதா?)

அப்போதுதான் ஒரு மிகப்பெரிய உண்மை அமேலியாவுக்குப் புரிகிறது. யூனிவர்ஸ் என்பது ஒன்று மட்டும் அல்ல. பல்வேறு யூனிவர்ஸ்கள் அண்டவெளியில் உள்ளன. இத்தனை காலம் இவர்கள் இருந்தது ஒரு யூனிவர்ஸில். தற்போது இந்த வார்ம்ஹோலுக்குள் சென்றபின்னர் இவர்கள் வெளிவரப்போவது, பழைய பூமி இருந்த யூனிவர்ஸுக்கும் இன்னொரு புதிய யூனிவர்ஸுக்கும் இடையே இருக்கும் வெளியில். நான் சொல்வது புரிகிறதல்லவா? தட்டையான ஒரு பரப்பை எடுத்துக்கொள்ளலாம். அதுதான் ஒரு யூனிவர்ஸ். அதற்கு மேலே இன்னொரு தட்டையான பரப்பு. அது இன்னொரு யூனிவர்ஸ். இரண்டு தட்டைகளுக்கும் இடையே இருக்கும் வெறும் வெளியியில்தான் இவர்கள் வெளிவரப்போகிறார்கள். அதேபோல் வெளிவருகிறார்கள். இவர்களுக்கு மேலேயும் கீழேயும் வண்ணமயமான தட்டைப் பரப்புகள். இருவேறு யூனிவர்ஸ்கள். இந்த வெற்றிடத்துக்கு Bulk என்று பெயர். விண்கப்பலுக்குள் தோன்றிய ஒளிமயமான வஸ்துதான் வார்ம்ஹோல்களை உருவாக்கியது என்றும் புரிகிறது. அந்தப் பிரம்மாண்டமான இருளில், தொலைவில் ஒரு ஒளிப்புள்ளி தெரிகிறது. அங்கே இவர்களின் கலம் செல்கிறது. பார்த்தால், கதையில் முன்னால் ஒரு சந்தர்ப்பத்தில் கருந்துளைக்குள் எறியப்பட்ட டார்ஸ் என்ற ரோபோ, தன்னந்தனியாக அங்கே இருக்கிறது. அதன்முன்னர் ஒருபிரம்மாண்டமான விண்வெளித் தளம்.

எப்படியென்றால், அதுதான் சைனீஸ் விண்வெளி வீரர்கள் கட்டிய தளம். அதைத்தான் அவர்கள் பெரும் ரகசியமாக ஐஸ் கிரகத்தில் காத்து வந்திருக்கிறார்கள் என்பது டார்ஸ் சொல்லிப் புரிகிறது. ஆனால், கொஞ்ச காலத்திலேயே எப்படி அவர்கள் இத்தனை பெரிய அமைப்பைக் கட்டியிருக்க முடியும்? உண்மையில் அதனைக் கட்ட நான்காயிரம் வருடங்கள் ஆகியிருக்கின்றன. போலவே, அந்த இடத்துக்கு டார்ஸ் வந்தே முன்னூறு வருடங்கள் ஆகிவிட்டன. அந்த இடத்தில் காலம் மிக மிக மெதுவாகவே செல்கிறது.

எல்லா உண்மைகளும் புரிந்தபின்னர், அவர்களுக்கு நேர் மேலே இருக்கும் லட்சக்கணக்கான வார்ம்ஹோல்களில் ஒன்று மட்டும் மிகப்பிரகாசமாக எரிவதைக் கூப்பர் பார்க்கிறான். அதுதான் பூமிக்குச் செல்லக்கூடிய வார்ம்ஹோல். அதில் கூப்பரும் அவனுடன் இருக்கும் டாயில் என்பவனும் செல்ல முயல்கிறார்கள். கூப்பருக்கு அவனது மகங்களை இதற்கு மேல் பிரிய முடியாது என்பது காரணம். அமேலியா அப்போது, கூப்பர் சென்றபின்னர் அங்கிருக்கும் வார்ம்ஹோல்களில் எதாவது ஒன்றைப் பயன்படுத்தி மனிதர்கள் உயிர்வாழ ஏற்ற கிரகங்களைக் கண்டுபிடிக்கப்போவதாகச் சொல்கிறாள். இவர்கள் வந்த எண்ட்யூரன்ஸ் கலத்தை டார்ஸ் சரிசெய்து வைத்திருக்கிறது. அதில் ஏறிச் செல்கிறாள். ‘நீ போய் பூமியில் உன் மகன்களைப் பார்த்தபின்னர், என்னை வந்து தேடிக் கண்டுபிடி’ என்று சொல்லிவிட்டு மறைகிறாள். அப்போதுதான் அவர்களின் விண்கலத்தில், ஐஸ் கிரகத்தில் இருந்து எடுத்துவந்திருக்கும் ஒரு சிறிய பொருளைக் கூப்பர் பார்க்கிறான். அவனுக்கு மெல்லமெல்ல எல்லாமே புரிகின்றன. அந்தப் பொருள்தான் திரைக்கதையின் ஆரம்பத்தில் கூப்பர் கண்டெடுத்த விண்கலத்தின் பகுதி. அதுதான் அவனுக்கு ஐஸ் கிரகத்தைக் காட்டியது. அந்தப் பொருளால்தான் கூப்பர் இந்தப் பயணத்துக்கே தயாராகி இத்தனை தூரம் வந்திருக்கிறான்.

இது தெரிந்ததும், அந்த விண்கலம் மேலே இருக்கும் வார்ம்ஹோலுக்குள் நுழைந்தால் அவசியம் அனைத்தும் வெடித்து, அந்தச் சிறிய கலம் மட்டும்தான் பூமிக்குச் செல்லும் என்று கூப்பருக்குப் புரிகிறது. இதைக் கேட்காமல் டாயில் மட்டும் கிளம்புகிறான். அவன் கலம் வார்ம்ஹோலின் அருகே வெடிக்கிறது. மிச்சம் மீதி இருக்கும் பொருள்கள் மட்டும் வார்ம்ஹோலுக்குள் செல்கின்றன. பூமியைப் பார்க்கிறோம். அங்கே அந்தப் பொருட்கள் விழுகின்றன. அதைப் பூமியில் இருக்கும் கூப்பர் கண்டெடுக்கிறான். தன் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறான். அவனுடன் இருப்பது – பத்து வயதுச் சிறுவன் மர்ஃபி. கூப்பர் அதை இயக்க, ஐஸ் கிரகத்தின் உருவம் அவனுக்குத் தெரிகிறது. பினர் கூப்பர் கிளம்பி விண்வெளிக்குச் செல்கிறான். மர்ஃபுக்கு முப்பது வயதாகிறது. அந்த விண்கலத்தின் பகுதியை இயக்குகிறான். அவனுக்கும் ஐஸ் கிரகம் தெரிகிறது. இதற்குள் பூமியில் பெரும்பகுதி அழிகிறது. அந்தக் கருவியை வைத்துக்கொண்டு என்னன்னவோ செய்து பார்க்கிறான். மர்ஃபிக்கு இப்போது நாற்பது வயது. விடாமுயற்சியுடன் அதனுடன் போராடுகிறான். திடீரென்று அதிலிருந்து வெளிப்படும் பல்வேறு குறியீடுகளை மானிட்டரில் கவனிக்கிறான். அவைதான் ஈர்ப்பு விசையை எதிராக மாற்றும் இயந்திரத்துக்கான குறியீடுகள். அதன்படி ஒரு மிகப்பெரிய இயந்திரத்தை நிர்மாணிக்கிறான் மர்ஃபி. ஆனால் அது இயங்குவதில்லை. அவனது மகளுக்கு இப்போது பதினெட்டு வயது. அவன் இல்லாதபோது அவளும் அதை நோண்டிக்கொண்டிருக்கிறாள். திடீரென இயந்திரம் இயங்குகிறது. மிகவும் வேகமாகச் சுற்றிலும் இருக்கும் அனைத்தையும் தன்னை நோக்கி ஈர்க்கிறது. டிராக்டர்கள், இயந்திரங்கள் என்று எல்லாமே வேகமாக அங்கு செல்கின்றன. இறுதியில், ஏற்கெனவே நாம் பார்த்த இரும்புக் குண்டாக அனைத்தும் மாறிவிடுகின்றன.

பூமியின் ஈர்ப்பு விசையை எதிராக மாற்றும் கருவி இப்படியாக உருவாகிவிட்டது.

இருனூறு வருடங்களுக்குப் பிறகு:

பூமியில் ஒரு கலம் வந்து நிற்கிறது. கூப்பர் இறங்குகிறான். அவனைச் சுற்றிலும் எல்லாமே பாழ்வெளி. அவனது வீடு உருக்குலைந்து கிடக்கிறது. இத்தனை காலங்கள் கழித்துதான் கூப்பரால் அங்கு வரமுடிந்திருக்கிறது. அந்த இடத்தில் மட்டுமல்ல. பூமி முழுதும் யாருமே இல்லை என்பது கூப்பருக்குப் புரிகிறது. அப்போது ஒரு கொடூரமான பனிப்புயல் அடிக்க, கூப்பர் மயங்கி விழுகிறான். கண்விழிக்கையில் அவனைச் சுற்றிலும் மருத்துவர்கள். கூப்பர்ஸ் காலனி என்ற, அண்டவெளியில் இருக்கும் செயற்கைக் குடியிருப்பில் இருக்கிறான். அங்கே எல்லாக் கட்டிடங்களும் வளைவாக இருக்கின்றன. ஒரு பெரிய சிலிண்டர் வடிவான ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருப்பதை உணர்கிறான். அப்போது மருத்துவர் வந்து, இவன் ஒரு நபரைப் பார்க்கவேண்டும் என்று அழைத்துச்செல்கிறார். மரணப்படுக்கையில் இருக்கும் அந்த நபர்- கூப்பரின் great great grandson (இதைத் தமிழில் எப்படிச் சொல்வது?) . அந்த அறையெங்கும் கூப்பரின் பரம்பரையின் பல்வேறு வயதான புகைப்படங்கள். அதில் ஒரு படத்தில் எண்பது வயதான மர்ஃபி, தனது குடும்பத்தார் சூழ ஒரு மிகப்பெரிய விண்வெளி நிலையத்தின் முன்னர் நிற்கிறான். அவனது காலைப் பிடித்துக்கொண்டு நிற்கும் ஒரு சிறுவனை மருத்துவர் காட்டி, அவன் தான் இப்போது மரணப்படுக்கையில் இருப்பதாகச் சொல்கிறார். கூப்பரின் கையைப் பிடித்துக்கொண்டே அவனது great great grandson சாகிறான்.

இதன்பின் கூப்பரின் பழைய வீடு அந்த இடத்தில் அவனுக்குக் காட்டப்படுகிறது. அங்கே வாழத் துவங்குகிறான். திடீரென ஒரு முடிவுக்கு வந்தவனாக, அவனுடன் அங்கே இருக்கும் ஒரு ரோபோவை எடுத்துப் பிரித்து, நகைச்சுவை உணர்வையும், கூர்மையான மதிநுட்பத்தையும் மாற்றுகிறான் (Curiosity. New level setting. 100 percent. Sense of humor. New level setting. 100 percent. Wait.(thinks) 80 percent). அந்த இயந்திரத்தை அழைத்துக்கொண்டு, அங்கிருந்து ஒரு விண்கலத்தைத் திருடி, விண்வெளியில் அமேலியாவைத் தேடிப் பறக்க ஆரம்பிக்கிறான்.

திரைக்கதை முடிகிறது.

இதுதான் பழைய திரைக்கதை. இப்போது யோசித்துப் பாருங்கள். எத்தனை முறைகள் இதில் கருந்துளையைச் சுற்றும் பயணங்கள் வருகின்றன? இரண்டு பிரம்மாண்டமான யூனிவர்ஸ்கள் என்பது எத்தனை வித்தியாசமான விஷயம்? மனிதர்களே வருங்காலத்தில் இருந்து கூப்பரை இயக்குகிறார்கள் என்பது இல்லாமல், ஒளிவடிவான ஏலியன்கள் என்பது கொஞ்சமாவது நம்பும்படிதானே இருக்கிறது? கூடவே எத்தனை வேகமான காட்சிகள் இதில் இருக்கின்றன? இவை எல்லாமே இப்போது மாற்றப்பட்டுவிட்டதால், ஓரளவு படத்தின் வேகம் குறைந்ததாகவே தோன்றுகிறது.

இனி, படத்தின் நிறை குறைகளைப் பார்க்கலாம். அடுத்த கட்டுரை – திரைப்படத்தின் விமர்சனம் – இன்று இரவு வெளியாகும்.

தொடரலாம்.

  Comments

6 Comments

  1. படிக்கும்போது கற்பனையாக காட்சிகளை மனதில் ஓடும்போதே ஒரு வித மகிழ்ச்சியாகவும், பரபரப்பாகவும் இருந்தது. நீங்கள் சொன்னது போல வேகமான திரைக்கதைதான். ஒருவரின் தவறால் சில விடயங்களை நாம் இழந்துவிட்டோம். இது போன்ற திரைக்கதைகள் கொண்ட படங்கள் இந்தியாவில் வர பல வருடங்கள் ஆகும். தமிழில் சாத்தியமே இல்லை.
    திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை.

    Reply
  2. 21m arivu

    I think SOME ONE didn’t like China surpassing America in interstellar. “THEY” might have asked to change it. But Nolan simply can’t change this without a major reason. If this leaks Chinese might boycott the movie. So Nolan himself leaked it and changed the story as “THEY” like.

    ithu epdi irukku …?

    Reply
  3. Accust Here

    //வார்ம்ஹோல் மிகப்பெரியது அல்ல என்பதால், கலத்தின் கீழே உள்ள திறப்பில் வார்ம்ஹோலின் திறப்பை உள்ளிழுத்து மூடிக்கொள்கிறது கலம்.//
    இது புரியவில்லை Wormholeவிட கலம் பெரியதா?, Wormhole is a spherical hole(as explained in movie) இதில் திறப்பு என்பது தனியாக உள்ளதா?, முழுவதுமே திறப்புதானே.

    And the new look is nice (actually it changed when I update this comment)

    Reply
  4. senthil

    Excellent review, i am expecting the remainder and clear cut clarifications. plz post the review as soon as possible

    Reply
  5. Kannan J Dheeran

    பெயரன்
    கொள்ளுப்பேரன்
    எல்லுப்பேரன் is great great grandson…

    Reply

Join the conversation